சமூகவிஞ்ஞானக் களங்களில் சிந்தனைப் பயிற்சி
நாம் பேசிப்பேசி களைத்துவிட்டோமா? நாம் அதிகம் பேசுவது அவசியந்தான். ஏனெனில், பேசுதல் மிகச்சிறந்த
கலை, மிகப்பெரிய ஆற்றல்.
நம்மில் பலருக்கும் மிக அழகான, நேர்த்தியான குரல் வலிமை இருக்கிறது. இதை நாம் பேசப்
பயன்படுத்தாமல் இருக்கலாமா! மிகச்சிறந்த பேச்சாளர்களாக நாமும் உருவெடுக்க வேண்டும். சிந்தனைப் பயிற்சியில்
பேசும் ஆற்றலுக்கே முதன்மைப் பொறுப்பு இருக்கிறது. ஏனெனில் பல்வேறு ஆற்றல்களை ஒரே நேரத்தில்
உயிர்பெறச் செய்வது பேச்சுக்கலையே.
ஒரு நிகழ்வை நினைவுபடுத்திப் பார்ப்போம். அறுபது
ஆட்கள் அமர்ந்திருந்த கூட்டம். இந்தக் கூட்டத்தில் ஒரு மாபெரும் பேச்சாளர் “சிட்டுக்குருவியின் உலகம்” என்ற தலைப்பில் பேசினார்.
அதிகபட்சம் இவரைத் தெரிந்தவர்கள் அறுபது பேர் இருக்கலாம். பலரும் நேசிக்கக்கூடிய எளிய
மொழியில் அலங்காரமாகப் பேசினார். இவரது பேச்சில் வேகமும், விறுவிறுப்பும் நிறைந்திருந்தன. மிக முக்கியமாகச்
சொல்வதென்றால், சகமக்கள் வாழ்வியலை
அறிவியல் முறையில் உணர்ந்து பேசினார். இவரது வார்த்தைகளில் சிலவற்றைக் கவனிப்போம்.
“சகமக்களது வாழ்வின் வளர்ச்சிக்கு பயன்பட வேண்டிய
அறிவியல் வளர்ச்சிகளை முறைப்படுத்தத் தவறிவிட்டோம். சிலரது இலாபவெறிக்கு அறிவியல் வளர்ச்சிகள்
அடிமையாக்கப்பட்டதை அனுமதித்துவிட்டோம். சகமக்களின் மௌனத்தையும் அக்கறையின்மையையும்
இவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். இந்த அளவில் மனித சமூகத்திற்கும் சூழலியலுக்கும்
எதிராக அறிவியல் வளர்ச்சி செயல்படுகிறது. இதில் மிகப்பெரிய பங்கு நமக்கும் இருக்கிறது.
எனவே, சிறிதாவது நமக்கு
குற்றவுணர்வு வேண்டும். உதாரணத்திற்கு ஒன்றைச் சுட்டிக்காட்டுகின்றேன். அலைபேசி நிறுவனங்களின்
வியாபாரப் போட்டிகளால் எங்கு பார்த்தாலும் நிரம்பி நிற்கிறது அலைவரிசைக் கம்பங்கள்.
இந்தக் கம்பங்களே சிட்டுக்குருவிகளுக்கு தூக்குமேடைகளாக இருக்கின்றன. சிட்டுக்குருவி
முதல் மனிதசமூகம் வரை எந்த உயிரினமும் வாழ முடியாத பூமியை வேகமாக உருவாக்குகிறது, இந்த முறையற்ற
அறிவியல் போக்கு. அறிவியல் வளர்ச்சி சகமக்களுக்கு நாகரீகத் தொட்டிலாக அமையாமல் நாகரீகக்
கல்லறைகளாக அமைகின்றன. இந்த அசிங்கத்தை மாற்றியாக வேண்டும். இது பேச்சோடு முடிவதல்ல.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது!
வெறும் பேச்சு வேலையை முடிக்காது!
எனவே, நாம் பேசிப்பேசியே முறிந்துவிட வேண்டாம். நமது பங்கிற்கு
செயல்படுவோம். செயல்பாட்டுக் களங்களில் இணைந்து நிற்போம். களங்களைப் பொறுத்தவரை சமூகவிஞ்ஞானிகளின்
கருத்தை நினைவில் கொள்வது நல்லது. அறுபது ஆண்டிற்கு மேற்பட்ட பாராளுமன்ற அனுபவத்தை
நினைத்துப் பார்ப்ப வேண்டும். சகமக்களுக்கான அவசிய மாற்றங்கள் எதுவும் இதுவரை நிகழ்த்தப்படவில்லை.
சில விதிவிலக்குகள் இருந்திருக்கலாம். ஆனாலும் பாராளுமன்றங்களிலிருந்து போலித்தனங்களையே
உணர முடிந்திருக்கிறது. எனவே, பாராளுமன்றக் களங்களை நம்பியிருப்பதில் பயனில்லை.
ஏனெனில் அது இலாபவெறிபிடித்த வியாபார நிறுவனங்களின் வசதிக்கேற்ப செயல்படுத்தப்படுகிறது.
பாராளுமன்றத்தை விமர்சித்து கேள்வி எழுப்புகின்ற, மாற்று மன்றங்களை முன்வைக்கின்ற, சமூகவிஞ்ஞானக்
களங்கள் இருக்கின்றன.
பாராளுமன்றத்தைப் பலவீனப்படுத்தி இத்தகையக் களங்களை
வலிமைப்படுத்த வேண்டும். வரலாற்றின் இன்றையக் கட்டத்தில் இது இன்றியமையாதக் கடமை. சகமக்கள் தங்களது செயல்களையும்
சிந்தனைகளையும் இத்தகைய களங்களில் நிகழ்த்துவதே சரியானதாகும். சகமக்கள் தங்களை சரித்திர
நாயகர்கள் என்பதை உணர்வுப்பூர்வமாக உறுதிபடுத்த வேண்டும். சமூக அக்கறையைச் செயல்படுத்துவதற்காக
நாம் தேர்ந்தெடுக்கும் களமானது, சமூகவிஞ்ஞானக் களங்களுக்கு உட்பட்டதாக அமைவது அவசியம்.
நாம் இக்கருத்தைச் சோதித்துச் செயல்படுவதில் விரைவு காட்டுவது அவசியம் என்று உணர்கின்றேன்.
அதுவும் மிக விரைவில்.
இந்தப் பேச்சு அறுபது ஆட்களிடம் பல்வேறு ஆற்றல்களை
உயிர் பெறச் செய்தது. சிலரிடம் கவிதை ஆற்றலாக உருவெடுத்தது. சிலரிடம் ஓவிய ஆற்றலாகப்
பிரகாசித்தது. சிலரிடம் திரையிசையின் டப்பிங் பாடலாகப் பரவத் தொடங்கியது. பலர் சமூகக்
களங்களில் செயல்படக் கிளம்பிவிட்டார்கள். சிலர் குடும்பத்தோடு வந்து இணைந்தார்கள். சிலர்
சகமக்களிடம் இது பற்றி உற்சாகமாகப் பேசினார்கள். சிலர் வெவ்வேறு மேடைகளில் பேசினார்கள்.
நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். பல்வேறு மேடைகளிலிருந்தப் பலநூறு ஆட்களிடம்
எத்தகையப் புத்துயிர்ப்புகள் நிகழ்ந்திருக்கும்! இந்தக் கூட்டத்தில் கவிஞர்களோ, ஓவியர்களோ, நடிகர்களோ, பாடகர்களோ, பேச்சாளர்களோ இருந்திருப்பார்கள்.
செயல்வீரர்களிடம் நிகழ்கின்ற புத்துயிர்ப்புகளின் எண்ணிக்கையைக் கணக்கிட முடிவதில்லை.
சொட்டு நீலம் மொத்த நீரில் கலப்பதைப் போன்ற ஓர் உணர்வு. நல்ல அடர்த்தியான மாற்றங்கள்
நிகழ்ந்து வருவதை உணர முடிகிறது. சில புத்துயிர்ப்புகளை மட்டும் தேர்ந்தெடுத்துச் சொல்கிறேன்.
புத்துயிர் பெற்ற கவிதை…
ஓட்டுரிமை
பறவையைப்பார்த்து
அதிகாரமாய்சொன்னது
அடைமழை
சிறகுடையபறவையே
பறப்பதுநம்உரிமை
பறக்காமலிருக்காதே
பற! பற! என்றது
அடைமழைஅலற
பதிலுரைத்ததுபறவை
அடேய்மழையே!
சிறகுகொண்டுபறப்பதா
காலைப்பரப்பிநடப்பதா
முடிவெடுப்பதுநாங்கள்டா!
உரிமைஎன்றால்இரண்டுந்தான்
பறப்பதும்+பறக்காதிருப்பதும்
இந்தப்பாராளுமன்றவவ்வாள்
பல்லைமறைத்து
பறவைபோல்நடிக்கும்
பிறகுபல்லைக்காட்டி
மிருகம்போல்நடக்கும்
வவ்வாள்களின்அகராதியில்
நிற்றல்என்பதற்கு
தலைகீழாய்தொங்குவதேஅர்த்தம்
பாராளுமன்றவவ்வாள்களை
நேர்படுத்தல்என்பது
பிப்ரவரிமுப்பத்தொன்றிலும்நிகழாது
மான்களின்தேசத்தில்
மலைப்பாம்பின்செல்வாக்கில்
ஓநாய்தலைமையில்ஒருகூட்டணி
நரியின்தலைமையில்ஒருகூட்டணி
தண்ணீர்முதலைகள்தனியணி
மான்கள்தம்வாழ்வை
யாருக்குபலியிடும்?
இதுக்கொருதேர்தலா!
புத்துயிர் பெற்ற ஓவியம்…
காட்சியில் இருந்தவற்றை விவரிக்கின்றேன். ஒரு நீளமான
தெரு. தெருவின் இருபுறங்களில் வீடுகளும், தோட்டங்களும். அண்ணாந்துப் பார்த்தால் வானம். சில
நிறமற்ற வண்ணத்துப் பூச்சிகள். வானத்திற்கு இடைக் கோடுகளாக மின்சாரக் கம்பிகள். மின்கம்பிகளுக்கும்
மேலே கைப்பேசி நிறுவனங்களின் அலைவரிசைகள். இந்த அலைவரிசைக் கோடுகளில் சிட்டுக்குருவிகளின்
உருவங்கள் மிதக்கின்றன. அலைவரிசைக் கோட்டிற்கும் சிட்டுக்குருவிகளின் கழுத்திற்கும்
இடையில் ஏதோ கோடுகள் வரையப்பட்டுள்ளன. இவை என்ன கோடுகள்? அய்யோ! தூக்கு கயிறுகள்!
புத்துயிர் பெற்ற திரையிசை
டப்பிங் பாடல்…
ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் மிகவும் பிரபலமடைந்தப்
பாடல். யம்மா யம்மா காதல் பொண்ணம்மா... இப்பாடல் டப்பிங் செய்யப்பட்டு மிகுந்த வரவேற்பைப்
பெற்றது. அப்பகுதி மக்களால் பலமுறை உற்சாகமாகப் பாடப்படுகின்றது. அப்பகுதியில் சினிமாப்
பாடல்களை வாழ்க்கைப் பாடல்களாக டப்பிங் செய்வதற்கு இளைஞர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.
இப்பொழுது “யம்மா யம்மா” டப்பிங் பாடலை நாம் வாய்விட்டுப் பாடலாம்.
யம்மா யம்மா கரண்ட்டே இல்லம்மா
எம் மின்மினிப்பூச்சிக்கு காய்ச்சல் ஏனம்மா
நட்சத்திரங்கள் அழுகுது பாரம்மா
எம் தொழிலும் இருட்டில் செத்துப் போச்சம்மா
மக்கள் கண்ணீரப் பாரு குளமாச்சு ரோடு
மேகத்தில் பாரு இடி மின்னல் நூறு
தூக்கம் எங்கோ தூங்கிப் போச்சம்மா
இரவில் தூங்கி நாட்கள் ஆச்சம்மா
மக்கள் கோபம் பெருகிப் போச்சம்மா
சிரிப்பும் இங்கே செத்துப் போச்சம்மா
நெஞ்சுக்குள்ளே வீரம்
நெருப்பாக எரியும்
அட வீரம் சொல்லும் பாடம்
நம் மனசுக்குள் ஈரம்
ஒற்றுமையா நாமும்
ஈசல் போல பறப்போம்
நம் விடுதலை விளைய
நாம் மொத்தமாக விதைவோம்
அரசின் விசப் பல்லு பட்டுருச்சு
மக்கள் மனசெல்லாம் நெருப்பாச்சு
உணர்வும் உரிமையும் ஜெயிக்கலனா
வாழ்க்கையும் செத்துப் போச்சு!
நம்பிக்கை மட்டும் வாழ்க்கை இல்லடா - ஆனால்
வாழ்க்கை உள்ளே நம்பிக்கை ஆடுதடா
கனவு எல்லாம் உண்மை இல்லடா – ஆனால்
கனவில் தெரிய உண்மை உள்ளதடா
யம்மா யம்மா கரண்ட்டே இல்லம்மா
எம் மின்மினிப்பூச்சிக்கு காய்ச்சல் ஏனம்மா
நட்சத்திரங்கள் அழுகுது பாரம்மா
எம் தொழிலும் இருட்டில் செத்துப் போச்சம்மா
எங்களோட உழைப்பு
முன்ன சூரியன உசுப்பும்
பின்ன சூரியனும் முழிக்கும்
அட உங்களுக்கும் விடியும்
மரக்கிளைகளப் பாரு
அங்க பறவைகள் கூடு
எங்கக் கூரைகளப் பாரு
அட நீங்க வச்ச நெருப்பு
வாழ்க்கை ஒளியை நீ அணைக்கிறியே
எம் மக்கள் உயிரை நீ பறிக்கிறியே
எங்கள் எரிமலை வெடித்து விடும்
நீ மோதாதே மோதாதே
வர்க்கக் கடலாய் வாழ்க்கை உள்ளதடா
வலியில் நொந்து வாழ்வது ஏனடா?
வறுமை இல்லா உலகம் எங்கடா?
வழியை நாமே செய்வோம் வாங்கடா!
யம்மா யம்மா கரண்ட்டே இல்லம்மா
எம் மின்மினிப்பூச்சிக்கு காய்ச்சல் ஏனம்மா
நட்சத்திரங்கள் அழுகுது பாரம்மா
எம் தொழிலும் இருட்டில் செத்துப் போச்சம்மா
மக்கள் கண்ணீரப் பாரு குளமாச்சு ரோடு
மேகத்தில் பாரு இடி மின்னல் நூறு
தூக்கம் எங்கோ தூங்கிப் போச்சம்மா
இரவில் தூங்கி நாட்கள் ஆச்சம்மா
மக்கள் கோபம் பெருகிப் போச்சம்மா
சிரிப்பும் இங்கே செத்துப் போச்சம்மா
இது போன்று எத்தனையோ புத்துயிர்ப்புகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன.
சில பத்து ஆட்களிடம் பேசப்பட்ட பேச்சுக்கு இத்தனை உயிர்ப்பாற்றலா என்று அதிசயிக்கத்
தோன்றுகிறது அல்லவா! அதனால்தான் இத்தகைய பேச்சாளர்களை மாபெரும் பேச்சாளர்கள் என்கிறோம்.
அறுபது ஆட்களால் அறியப்பட்ட பேச்சாளரை மாபெரும் பேச்சாளர் என்றால், கோடிக்கணக்கான
மக்களால் அறியப்பட்ட பேச்சாளரை என்னவென்பது என்கிறீர்களா? எது பெரும்பான்மை என்பதை எதார்த்தமாக நினைத்துப்
பாருங்கள். பல கோடி மக்களால் அறியப்பட்ட பேச்சாளர்களின் எண்ணிக்கை மிக சொற்பமே. ஆனால், சில பத்து நபர்பளால்
அறியப்பட்ட பேச்சாளர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். எனவே, இந்தப் பெரும்பான்மைப்
பேச்சாளர்களையே முதன்மையான பேச்சாளர்களாக உணர வேண்டியிருக்கிறது. நாமும் இத்தகைய முதன்மைப்
பேச்சாளர்களாக மலர முயல்வோம்.
நமக்கு
நாமே உறுதி ஏற்போம். “அறிந்த ஒன்றைப் பத்து பேருக்காவது சொல்லுவோம்.” அதாவது
ஒரு கருத்தை பத்து நபர்களிடமாவது பேசிவிட வேண்டும். அப்படியென்றால், பத்து கருத்துக்களையாவது
அறிந்திருக்க வேண்டும்.
பேசுவதிலிருந்து ஒரு கருத்திற்கு வருவதும், ஒரு கருத்தைப்
பலரிடம் பேசுவதும், மிக அவசியம். இது தொடர்ந்து நிகழ வேண்டிய நிகழ்வு. நமது சிந்தனையில்
புதியக் கருத்தை உருவாக்குவதும், பழைய கருத்தை மறுஉறுதி செய்வதும் பேச்சின் வழியே
நிகழ்கிறது. எனவே, நமது உலகப்பார்வையை முறைப்படுத்த, பேசுவதும் கேட்பதும் மிகமிக அவசியம்.
சமூகவிஞ்ஞானக் களத்தில் நமது உறவு வலிமை பெற வேண்டும்.
இதற்கு இரண்டு விசயங்களை முழுமையாக அழிப்பதில் கவனம் தேவை.
1.வளர முயல்பவர்களைக் கேலிப் பொருளாக்கி, நையாண்டி செய்து, மட்டந்தட்டி, ஓட்டி ஓட்டியே
ஒடுங்க வைத்தல்.
2.பேசுபவர்களுக்கு அறுவை, ரம்பம், பிளேடு போன்ற பட்டங்களை வழங்கி புறக்கணித்தல்.
நம்மிடம் தாராளமாக இருக்கின்ற இந்த இரண்டு கலாச்சாரமும் வேரோடு
அழிக்கப்பட வேண்டும். இவை எப்பொழுதெல்லாம் நம்மிடம் எட்டிப்பார்க்கின்றதோ அப்பொழுதெல்லாம்
இதன் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட வேண்டும். இதை செய்ய நாம் உறுதி ஏற்காவிட்டால் இவ்விரண்டு
இனமும் மிச்சமின்றி ஒழியாது. இவற்றை ஒழிப்பதில் நாம் முசோலினியாகவோ, ஹிட்லராகவோ, ராஜபட்சேவாகவோ
இருக்க முயற்சிப்போம். இது பெருமைக்குரிய முயற்சியே.
சகமனிதரை மட்டந்தட்டி, கேலி செய்து, ஓட்டுதல் என்பது விளையாட்டல்ல. இது சகமனித ஒற்றுமைக்கு
எதிரான விஷ உணர்வின் வெளிப்பாடு. இது சகநண்பரின் சுயமரியாதையை அணுஅணுவாய்க் கொன்றுவிடும்.
இது சக நண்பரின் வளர்ச்சியை மொத்தமாக வெட்டிவிடும். நமது சிந்தனைப் பயிற்சிக் களத்தையே
செல்லரிக்கச் செய்துவிடும். கருத்துரிமையை ரம்பம் வைத்துக் கழுத்தறுத்துவிடும். மிகமிக
ஆபத்தானப் பண்பு. நாம் ஓட்டுகின்ற பண்பாளரை ஓரங்கட்டுவோம். ஓட்டுகின்ற கலாச்சாரத்தை
வேரறுப்போம்.
நமது அறுவைகளைப் பெருமையாக வரவேற்போம். இவர்கள்
தவறானக் கருத்துக்களை அறுக்க முயல்கிறார்கள். எது சரி என்ற தேடலில் பேசுகிறார்கள்.
இவர்களை அங்கீகரிப்பது நமது கடமை. பொறுமையின் பெருமையை இங்குதான் உணர முடியும். அவர்கள்
சரியை உணர்வதற்கு நாம் உதவி செய்ய வேண்டும். நம்மை சரிசெய்ய அவர்களை அனுமதிக்க வேண்டும்.
இவ்விரண்டு அணுகுமுறைகளும் நமக்கு அடிப்படைத் தேவை. தவறானக் கருத்துக்களை அறுக்க முயல்கின்ற
அறுவையாளர்களை அங்கீகரிப்போம்.
நமது தோல்வியையும் பலவீனத்தையும் அங்கீகரித்தலின்
வழியாகவே இயலாமை, தாழ்வுமனப்பான்மை, தன்னகங்காரம் ஆகியவற்றிற்கு எதிராக வெற்றி பெற முடியும்.
இந்த உண்மைக்குப் பொறுத்தமான வடிவில் நமது களத்தைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நம்மை நாமே முன்மாதிரிகளாக வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவரையொருவர் தட்டிக் கொடுப்பதற்கும்
ஊக்கப்படுத்துவதற்கும் கஞ்சத்தனம் தேவையில்லை.
சகமனித உறவை அடிக்கடி புதுப்பித்துக்கொள்வது இன்றியமையாதது.
கண்கணைப் பார்ப்பதும், முகம் மலர்வதும், புன்னகை செய்வதும், வார்த்தைகளை உதிர்ப்பதும், கரங்களை அசைப்பதும், கைகளைப் பற்றுவதும், தோள்களை அணைப்பதும், உணவைப் பகிர்வதும், நினைவுகளுடன் உண்பதும்
புதுப்பித்தலுக்கான வழிமுறைகள். நம்மிடையே உருவாகும் பிரிவுகளையும் இடைவெளிகளையும்
இத்தகைய வழிமுறைகளே இட்டு நிரப்புகின்றன. தன்னகங்காரம், தாழ்வு மனப்பான்மை இரண்டையும் தவிடு பொடியாக்குகின்றன.
இதனால் சகமனித உணர்வு வலிமை பெறுகிறது. குறிப்பிட்டக் கால இடைவெளியில் தோழர்களுடன்
சுற்றுலா சென்று மகிழ்வது இன்றியமையாதது.
நமது வளர்ச்சி, முன்மாதிரியாக வலிமை பெறுவது அவசியம். அதாவது, தனக்கு முன்மாதிரிகளாக
பத்து நபர்களையாவது கண்டெடுக்க வேண்டும்! பத்து நபர்களுக்காவது தன்னை முன்மாதிரியாக
உணர்த்த வேண்டும்!
பேசுவதற்கான விசயங்களை அறிந்துணர வேண்டும். இதற்கு
முதன்மையான வழி புத்தகங்களைப் படிப்பதாகும். முன்னோர் முதல் இன்னோர் வரை புத்தகங்களில்
வாழ்கிறார்கள். இவர்கள் நம்மோடு வாழ்ந்தவர்கள், நமக்காக வாழ்ந்தவர்கள், நமது வரலாற்றின் சாரங்களைப் பிழிந்து வைத்திருப்பவர்கள். இவர்கள் நம்மோடு
பேச விரும்பியவற்றைப் புத்தகங்களின் வழியாக உணர முடியும். இதற்கு தாய்மொழி நேசமும்
விருப்பமொழி விரிவும் அவசியம்.
நமக்காகப் பேசப்பட்டவைகளை நாம் அறிய வேண்டும் அல்லவா!
நமக்காக எழுதப்பட்டவைகளை நாம் உணர வேண்டும் அல்லவா!
இதற்கான மறுவினைகளை நாம் செய்யாவிட்டால், வேறு யார் செய்வார்கள்?
உலகின் பல்வேறு கால நிகழ்வுகளில் நமது பங்கு என்னவாக
இருந்தது? எப்படியெல்லாம்
வளர்ந்தது? இதை நாம் அறிய
வேண்டாமா? நம்மையும் உலகையும்
சரி செய்வது எப்படியென்று உணர வேண்டாமா? நம்மை பற்றிய உண்மைகள் நமக்கே தெரியாவிட்டால், இலட்சியங்கள் என்ன
ஆவது? நமது சுயமரியாதையை
எந்த வழியிலும் இழக்கக்கூடாது. சகமக்கள் அனைவருக்கும் நம்மைப் பற்றிய அறிவை ஊட்ட வேண்டும்.
ஒவ்வொரு சகமனிதரும் இத்தகைய அறிவைத் தேடிப் பெற வேண்டும். சமூகவிஞ்ஞானத்திற்கு இது
மிகமிக அவசியம். ஏனெனில், சமூகத்தின் பிரச்சனைகளுக்கு மருத்துவம் செய்வதே
சமூகவிஞ்ஞானத்தின் முக்கியப்பணி. எனவே, முன்னோர் முதல் இன்னோர் வரை அனைவரின் பேச்சையும்
கவனிப்போம். அதற்குச் சரியான மறுவினைகளை நிகழ்த்துவோம். இது சமூகவிஞ்ஞானியாக உருமாறுபவர்க்கு
சிறந்ததொரு வழி, அதிமுக்கிய கடமை.
இந்த உண்மையை உணர்ந்து செயலில் இறங்குவோம். நம்மிடமுள்ள
அனைத்து அறிவியல் கலை இலக்கிய நூல்களையும் அறிய முயல்வோம். இது நமது இன்றியமையாதக்
கடமை. இந்தக் கடமைக்குத் தடையாக நமது பலவீனம் இருப்பதை மறுக்க முடியாது. எனவே, சகமக்களின் கலை
இலக்கிய அறிவியல் உணர்வை வலிமைப்படுத்த முயற்சிப்போம். உண்மைகளிலிருந்து தற்காலிகத்
திட்டங்களை வரையறுப்போம்.
கோடிக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில்
படித்தவர்கள் மிகக்குறைவு. புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இன்னும் குறைவு.
நூற்றில் பத்து நபர்களே புத்தகம் படிக்கும் பண்புடையவர்கள். எனவே, சமூகவிஞ்ஞானிகளின்
களத்தில் முதன்மைத் திட்டமாக ஒன்றைச் செயல்படுத்துவோம்.
பத்து பேர் படிப்போம்! நூறு
பேருக்குச் சொல்வோம்!
நூறு பேர் கேட்போம்! ஆயிரம் பேருக்குச் சொல்வோம்!
நமது பேச்சின் வழியாகப் புத்தகக் கருத்துக்கள் விடுதலை
பெறட்டும். விடுதலைப் பெற்ற கருத்துக்களின் உண்மைகளும் உணர்வுகளும் பலவிதமாகப் பரவட்டும்.
ஒரு பாடலாக, ஒரு நாடகமாக, ஒரு திரைப்படமாக, ஒரு ஓவியமாக, ஒரு கவிதையாக, ஒரு கதையாக, ஒரு கட்டுரையாக...
எத்தனை வடிவங்கள் உள்ளனவோ அத்தனை வடிவங்களிலும் பரவட்டும்.
அத்தனைக் கோடி மக்களும் அறிவியல் கலை இலக்கிய உணர்வாளர்களாக
மலர்ந்து, சமூகவிஞ்ஞானிகளாகப்
பொலிவு பெற வேண்டும். சமகால மக்களின் வாழ்நிலை எத்தகைய பழைய வரலாற்று உண்மைகளை அடித்தளமாகக்
கொண்டிருக்கிறது. இந்த உண்மைகளை அறிந்து கொண்டிருப்பதன் வழியாக உருவாக்கப்படுகின்ற
கருத்தியல் மருந்துகளால் சமகால வாழ்வின் ஆறாத காயங்களையும், வலிகளையும், வீக்கங்களையும், எதிர்காலத்திலாவது
போக்கியாக வேண்டும். இந்த மாபெரும் இலட்சியங்களை முதன்மையாகக் கொண்டே சமூக அக்கறையுடைய அறிவியல் கலை
இலக்கியப் படைப்புகள் யாவும் செயல்பட்டு வருகின்றன. ஏராளமான சமகால இலக்கியங்கள் வெளி
வருகின்றன. இந்நிலையில் சமகால இலக்கியங்கள் முதல் பழங்கால இலக்கியங்கள்வரை நாம் ஏன்
பயில வேண்டும்?
இந்தக் கேள்விக்கு விடையை உணராமல் ஆரோக்கியமான ஆராய்ச்சிகளும், கலந்துரையாடல்களும், விவாதங்களும், எதிர்கால மாற்றங்களும்
நிகழவே முடியாது. நமது முன்னோர்களின் உழைப்பு, உற்பத்தி, சகமனித உறவு, சிந்தனைமுறை, பொருளாதார சூழல், பண்பாட்டுச் சூழல், சமூக வாழ்வியல் நிலை, சமூக உள்ளத்தியல் நிலை, சமூக உடன்பாடுகள், சமூக முரண்பாடுகள் ஆகியவற்றை அறிவதிலிருந்தே நமது வரலாற்றின்
உண்மைகளை அறிய முடிகின்றது. நமது வரலாற்று உணர்வையும், அறிவியல் உணர்வையும், கலை இலக்கிய உணர்வையும் வலிமைப்படுத்துவதற்காகவும், சமகாலம் பற்றிய
உலகப்பார்வையைத் தெளிவுபடுத்துவதற்காகவும் இலக்கியங்கள் முக்கிய ஆற்றல்களாக விளங்குகின்றன.
எனவே நாம் சமகால இலக்கியங்கள் முதல் பழங்கால இலக்கியங்கள்வரை பயிற்சி பெறுவது இன்றியமையாத
கடமையாக இருக்கிறது.
கூடி வாசித்து உரையாடுகின்ற வாசிப்பு முகாம்கள்
உருவெடுப்பது அவசியம். அனைத்துப் புத்தகங்களையும் படிக்க வாழ்நாள் போதாது. எனவே, விருப்பத்தின்
அடிப்படையில் புத்தகங்களைப் பிரித்துக் கொள்வோம். சமூகவிஞ்ஞானப் பயிற்சியின் கள அனுபவங்களிலிருந்து
அதற்கானப் புத்தகங்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்வோம். ஆனால், சமூகவிஞ்ஞானத்தில்
வலிமை பெற சில புத்தகங்களையும் கட்டுரைகளையும் அனைவரும் படிப்பது அவசியம். அவற்றில்
சிலவற்றை மட்டும் இங்கு பரிந்துரை செய்கிறோம்.
நூல்கள்
1.செ.கணேசலிங்கன். குந்தவிக்குக் கடிதங்கள் மான்விழிக்குக் கடிதங்கள். குமரன் பதிப்பகம்.
2.செ.கணேசலிங்கன். குமரனுக்குக் கடிதங்கள், அறிவுக்
கடிதங்கள். குமரன் பதிப்பகம்.
(இயற்கை விஞ்ஞானத்தையும், சமூகவிஞ்ஞானத்தையும்
எளிய முறையில் விளங்க வைப்பதில் தேர்ச்சி பெற்றவையாக இந்த இரண்டு நூல்களும் இருக்கின்றன.)
3.எம்.இலியீன், யா.ஸெகால். மனிதன் எங்கனம் பேராற்றல் மிக்கவன் ஆனான். தமிழாக்கம் – நா.முகம்மது செரிபு. எம். ஏ. ராதுகா பதிப்பகம், மாஸ்கொ, யு.எஸ்.எஸ்.ஆர்.
மறுபதிப்பு – NCBH. (இயற்கையின் அங்கமாகிய மனிதன் இயற்கையைவிட ஆற்றல்
மிகுந்தவனாக மாறி வளர்ந்த கதையை, பல வண்ணச் சித்திரங்களின் உதவியுடன் சுவையான முறையில்
விளங்க வைப்பதில் இந்நூலின் வலிமை தனித்துவமானது.)
4.ஜார்ஜ் பொலிட்சர் – மார்க்சிய மெய்ஞானம். தமிழாக்கம் – ஆர்.கே.கண்ணன்., NCBH.
5.மாசேதுங் – முரண்பாடுகள் பற்றி (நடைமுறையைப் பற்றி) சரவணபாலு பதிப்பகம்.
(இந்த இரண்டு நூல்களும் சமூகவிஞ்ஞானத்தின் அடிப்படை விதிகளை ஆடமாகவும், அகலமாகவும் மிகமிக
நேர்த்தியாகவும் விளக்குகின்றன.
6.மார்க்சியம் அ...ஆ.. – தியாகு (மார்க்சியத்தின்
விதிமுறைகளை மிக சுருக்கமாகவும் எளிமையாகவும் விளங்க வைப்பதில் இந்நூலுக்கு மிகுந்த
தனித்துவமுண்டு.)
7.குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றுவாய் – பிரெடரிக்
எங்கெல்ஸ். தமிழாக்கம் – நா.தர்மராஜன். கருத்துரை – பக்தவத்சலபாரதி.
கருத்துப்பட்டறை வெளியீடு. (குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகிய மூன்றும் மனித வரலாற்றில் தோன்றி வளர்ந்த
கதையே இந்நூல். சமூகவிஞ்ஞானத்தை உலகப் பார்வையாகக் கொண்டவ்கள் எந்த ஒன்றைப் பற்றிய
உண்மைகளையும் எப்படி அறிகிறார்கள் என்பதை உணர்வதற்கு இந்நூல் நல்ல முன்மாதிரியாக விளங்குகிறது.)
8.மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில்
உழைப்பின் பாத்திரம் – பிரடெரிக் எங்கெல்ஸ். – பாரதி வெளியீடு.
( உழைப்பு மனிதனைப் பெற்றெடுத்த தாய். உழைக்கின்ற பண்பே மனிதனை விலங்குகளிலிருந்து
தனித்துவமாக அடையாளப்படுத்தியது. மனித வளர்ச்சிக்கு உழைப்பே முதன்மைப் பங்காற்றியுள்ளது.
இதனை வரலாற்று ஆதாரங்களை முன் வைத்து விளக்கும் சிறிய புத்தகம் இது. கடுகு சிறுத்தாலும்
காரம் குறையாது என்ற பழமொழி இந்நூலுக்கு முற்றிலுமாகப் பொருந்தும்.)
9.ராகுல் சாங்கிருத்யாயன் – வால்காவிலிருந்து கங்கை வரை. NCBH. (கதை
படிக்கும் வேகத்தில் மனித வரலாறை நம்மால் படிக்க முடியும். இதற்கு இந்நூலே உதாரணம்.
சிறுகதை வடிவில் மனித வரலாற்றை இருபது கதைகளில் விவரித்து முடிக்கிறது.)
10.ராகுல் சாங்கிருத்யாயன் – பொதுவுடைமைதான் என்ன (உலகளாவிய பொதுவுடைமை
சமூகச் சிந்தனையின் உண்மைத் தன்மையை இந்தியச் சூழலில் உணர்வுப்பூர்வமாக விளக்குகின்றது.)
கட்டுரைகள் (வசன இலக்கியம் என்ற பகுதியை முழுமையாகப்
படிக்கவும் – puthiyavansiva.blogspot.in )
·
புராதனம் முதல் பொதுவுடைமைவரை
இந்நேரம்வரை நம் வாழ்வில் முடிந்தது முடிந்ததாகவே போகட்டும்.
மரணத்தின் தூரத்தை எட்டிப் பாருங்கள். வாழ்வின் இறுதிநாளை இன்றிலிருந்து அனுமானித்துக்
கொள்ளுங்கள். வாழ்நாள் பாதி முடிவதற்குள் சமூகவிஞ்ஞானத்தில் தேர்ச்சி பெற உறுதி செய்யுங்கள்.
சக மக்களுக்காக செய்யும் கடின உழைப்புகள் எளிமையாகவும் சுவையாகவும் மாறிவிடும். வாழ்நாளின்
மறுபாதியை மகிழ்ச்சியாகக் கொண்டாடலாம். நாம் கொண்டாடுவதற்கு மற்றொரு காரணமும் உறுதியாக
இருக்கும். அதாவது, நாம் தேர்ச்சி பெற்ற சமூகவிஞ்ஞானியாக மலர்ந்திருப்போம்.
சரி, வாருங்கள். புத்துணர்ச்சியோடு செல்வோம். சமூகவிஞ்ஞானிகள்
அழைக்கிறார்கள்... செயல்பாட்டுக் களங்கள் தயாராக இருக்கின்றன... சிந்தனைப் பயிற்சியைத்
தொடங்குவோம்... சமூகவிஞ்ஞானிகளுக்கு வலிமை சேர்ப்போம்... சமூக அக்கறையுடன் ஒன்றிணைவோம்.
அக்கறையின்றி தொடரும் வாழ்வில்
மக்களின் துயரங்கள் மடியாது!
சமூக அக்கறை பூக்கும் வரையில்
மக்களின் விருப்பங்கள் பலிக்காது!
No comments:
Post a Comment