Wednesday, December 8, 2021

இலக்கிய தாகம்

 

இலக்கியத் தாகம் இல்லாதவர்களும்

இலக்கியம் அனாவசியம் என்பவர்களும்

இலக்கியம் போதையென ருசிப்பவர்களும்


வெளியிலுள்ள ஆபத்துக்களை அறியாமல்

கண்ணாடி உலகில்

சுதந்திரமாக நீந்தும்

முட்டாள் மீன்கள்

வந்த வழியை மறந்தவர்கள்

செல்லும் பாதை புரியாதவர்கள்

பொருளியல் போக்கை உணராதவர்கள்

பண்பாட்டை உயர்த்த முயலாதவர்கள்

அரசியல் தெளிவு இல்லாதவர்கள்

மனித மாண்புகளைப் புதைத்தவர்கள்

 

மொத்தத்தில் இவர்கள்தான்

மன வளர்ச்சியற்ற முடவர்கள்

தம்மை முழு மனிதரென

தாமே நம்பிக்கொள்ளும் கோமாளிகள்

 

உண்மையில்

இலக்கிய உணர்வற்ற இத்தகைய நோயாளிகள்

பாசிசப் பாம்பும்

இலாபவெறி கழுகும்

சூழ்ந்திருக்கும் வாழ்வில்

குஞ்சுகளை மறந்து இரைபொறுக்கி பிழைக்கும்

பொறுப்பற்ற மனிதர்கள்

 

அறிவு முதல் ஆழ்மன உணர்வுவரை

மனிதகுலத்திலிருந்து அறுபட்டவர்கள்

இயற்கையின் அரவணைப்பை மதிக்காதவர்கள்

எதார்த்தத்தின் இதயத்துடிப்பை உணராதவர்கள்

சுயநல வெறி புழுவாய் நெளிபவர்கள்

நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படும் சருகுகள்

மனிதகுல இலக்குகளில் துளியும் எண்ணமில்லாதவர்கள்

குப்பைத்தனமான இலக்குகளை மூச்சில் சுமப்பவர்கள்

மனிதர்களால் பிழைப்பவர்கள்

ஆனால்

மனிதர்களாக இல்லாதவர்கள்

 

நாளைய தலைமுறைகளின் இன்றைய கல்லறைகள்

 

மனித செயல்களில்

உயர்ந்த இலக்கிய வெளிப்பாடு

இல்லாத சமூகம்

சமூகமல்ல

வெறும் நடைபிணம்

 

 

 

 

Wednesday, November 24, 2021

சவக்குழி

 

சவக்குழி 

புதியவன்


இலாப வெறி தன் தூரிகையில் வரைந்த ஓவியம்

நாம்  சுயநலப் புழுவாய் நெளிகின்றோம்

 

எத்தனை விதமான வண்ணங்கள்

எண்ண முடியாத ஜாலங்கள்

கண்கள் கூசும் வெளிச்சங்கள்

எச்சில் ஊறும் விருப்பங்கள்

மூக்கைத் துளைக்கும் வாசங்கள்

முடிவே இல்லாத் தொடக்கங்கள்

பொய்யாய் பந்த பாசங்கள்

தொலைந்தன மனித உறவுகள்

கண்ணியமற்ற வாழ்க்கைக்கும்

கவர்ச்சிமிக்க ஆடைகள்

 

இலாப வெறி தன் தூரிகையில் வரைந்த ஓவியம்

அதில் சுயநலப் புழுவாய் நெளிந்து சாவதே

ஒவ்வொரு மனிதரின் பாத்திரம்

 

இயற்கை சமூகம் இரண்டுடனும்

மனிதருக்கு இருக்கின்ற

இடைப்பட்ட உறவென்பது

பிழைப்பு நுகர்வு மரணம்

என்ற மும்முனை உறவுதான் என்பது

நவீன முதலாளியத்தின் இலாபவெறி

நமக்கு நிர்பந்தித்திருக்கும் நிலைப்பாடு

இது மனிதகுலம் கண்டுள்ள

ஆகப்பெரிய அறியாமை

இலாபவெறியால் நாம்  சுமந்த

ஆகப்பெரிய இழிநிலை

 

பிழைப்பிற்கான முயற்சிகளில்

நாம் வாழ்வதற்கே மறந்துபோனோம்

 

பிழைப்பு நுகர்வு மரணம்

என்ற மும்முனை சுழற்சியில்

வாழ்ந்தோமோ இல்லையோ!

இழந்ததும் தொலைத்ததும் ஏராளம்…

 

நாம் நாங்கள் என்ற ஒற்றுமையைத் தொலைத்து

நான் எனக்கு என்ற அகந்தையில் விழுந்தோம்

எல்லோருக்குமான அறிவைத் தொலைத்தோம்

மேன்மையான உழைப்பைத் தொலைத்தோம்

உயர்வதற்கானப் பண்பாட்டைத் தொலைத்தோம்

அரசதிகாரத்திற்கு குனிந்து குனிந்தே

தலைமைத்துவத்தைத் தொலைத்தோம்

நம் தலைமுறைகளின் நல்லுலகம் பற்றிய கனவுகளைத் தொலைத்தோம்

 

இலாப வெறியின் வேகத்தில்

சுயநல வெறியின் மயக்கத்தில்

நாம் பிழைத்தது துளிதான்

தொலைத்தவை கடல்தான்

 

Tuesday, September 28, 2021

புதியவன் எழுத்துக்கள் மீதான விமர்சனப் பதிவுகள்...

 


புதியவன் எழுத்துக்கள் மீதான விமர்சனப் பதிவுகள்...


விமர்சனப் பதிவுகளுக்கு முன்பாகச் சில வார்த்தைகள்... “அறிவெனும் பெரும் பசி” (ஊடாட்டம் ஆய்விதழில் இக்கட்டுரையின் இறுதிப்படுத்தப்படாத வடிவம் வெளிவந்திருக்கிறது.) என்றக் கட்டுரையிலிருந்து  “நீங்களும் சமூக விஞ்ஞானி ஆகலாம்” என்ற நூலை திரும்பிப் பார்க்கிறேன்.
      குறைந்தபட்சம் எனது சக்தியால் சேகரிக்கப்பட்ட நேர்மையான விமர்சனங்களிலிருந்து மட்டுமே திரும்பிப் பார்க்க விரும்புகிறேன். இவற்றில் நேர்மறையான விமர்சனங்கள் நிறைய விடுபட்டுள்ளன.. ஆனால் எதிர்மறையான விமர்சனங்களை முழுக்கவும் பதிவு செய்துள்ளேன்.
       சமூகவிஞ்ஞானக் களங்களிலிருந்து இந்தச் சமூகத்திற்கு எவை தேவையென நான் உணர்ந்திருக்கிறேனோ அவற்றையேச் செய்ய முயன்றிருக்கிறேன். இத்தகைய அடிப்படையிலிருந்து மட்டுமே எனது எழுத்து முயற்சி தொடர்கின்றது.
      இந்த முயற்சி சமூகளாவிய நிலையில் பல்வேறு பரிமாணங்களில் விரிந்து பரவ வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த விருப்பமும் சமூகத் தேவையின் அடிப்படையிலேயே தோன்றியிருப்பதாக உணர்கிறேன். இதற்கானப் புரிதலை உருவாக்கிப் படிப்பினை பெறுவதற்காகவே கிடைத்த விமர்சனங்களை நேர்மையாகத் தொகுத்திருக்கிறேன்.
      நான் எத்தகையவர்களை வாசகர்களாகக் கருதி எழுத்து முயற்சியில் ஈடுபடுகிறேனோ அவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட விமர்சனங்களே பெரும்பகுதி. சமூகவிஞ்ஞானக் களங்களில் புதிதாக அறிமுகமாகிறவர்களுக்காக... சமூக விஞ்ஞானிகள் அமைப்பாக்க விரும்புகின்ற வெகுமக்களுக்காக... எழுத்துக்களைப் படிப்பதன் மூலமாக சிந்தனையையும் செயலையும் உணர்வுகளையும் சமூகளாவிய நிலையில்  பக்குவப்படுத்த முடியுமா என்றக் கேள்வியுடன் படிக்க முயல்கின்ற படிக்கத் தெரிந்த மக்களுக்காக... படிக்கத் தெரியாத மக்களுக்குப் பேச்சிலும் செயலிலும் சமூக அறிவை ஊட்ட முயல்கின்ற சமூக அக்கறையுடையத் தோழர்களுக்காக... சமூக அக்கறை, சமூக அறிவு, சமூகப் பாதுகாப்பு இவை மூன்றும் சங்கமித்திருக்கின்ற சமூக விஞ்ஞானிகளின் புத்துலகை நோக்கி கவனம் பெறுகின்ற சகமனிதர்களுக்காக... என இவர்களுக்காகவே நான் எழுத முயல்கிறேன்.
      நான் எழுத்து வடிவில் பேசுவது உரியவர்களின் உணர்வுகளுக்குச் சரியாகப் பயணப்படுகிறது என்பதை இவர்களின் விமர்சனங்களிலிருந்து உணரமுடிகிறது. இந்த அங்கீகாரங்கள் எனக்கு உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் தருகின்றன.
      நான் எத்தகையவர்களுக்காக எழுதியிருக்கிறேனோ அவர்களிடமிருந்து விலகியிருக்கக்கூடியவர்களுக்கும், எழுத்துக்களை பரிந்துரைப்பதன் மூலமாக சமூகஅறிவை சகமக்களிடம் விரிவுபடுத்துவதில் தெளிவான வேலைத்திட்டம் இல்லாதவர்களுக்கும் எமது எழுத்தை வாசிப்பது மிகவும் சிரமமான வேலையாகவே அமையும். அவர்களுக்கு இந்த எழுத்துக்கள் கூரிய கற்களாகவும், சகிக்க முடியாதவையாகவும், புரிந்துகொள்ள இயலாததாகவும், சிறுபிள்ளைத்தனமாகவும், முகம்திருப்பிச்செல்ல வைப்பவையாகவும் இருக்கின்றன. இவற்றையும் கடந்து எனக்குரிய வாசகர்களென நான் கருதாத இத்தகையவர்களிலும் எமது நோக்கத்தை அங்கீகரித்து எழுத்துக்களை ஏற்றுக்கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
      சமூக மாற்றம் என்பது தன்னையும் சக மனிதர்களையும் மாற்ற முயல்வதிலிருந்துத் தொடங்குகிறது.
சமூக நெருக்கடிகளில்
மன அழுத்தங்கள் தற்கொலைகளைத் தூண்டுகின்றன...
சமூக அழுத்தங்கள் தியாகங்களைத் தூண்டுகின்றன...

      நாம் ஒவ்வொருவரும் தியாக வாழ்க்கை வாழ்கிறோமோ இல்லையோ சமூகமாற்றத்தில் அவரவர் சக்திக்கு உட்பட்ட அளவிலேனும் பங்கேற்க முயல்கிறோம் என்பதாக நம்புகிறோம். இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே நான் படிப்பினைக்காகச் செய்த விமர்சனத் தொகுப்பின் சிறிய முயற்சியை உங்களோடு பகிர்ந்துகொள்ள முயல்கிறேன்.
      இத்தகையப் பகிர்வை சுயவிளம்பர ஆர்வத்தில் செய்யவில்லை. ஒரு வேளை இதனைச் சுயவிளம்பர முயற்சியாக கருத விரும்பினால் நான் தலையிட விரும்பவில்லை. அது உங்கள் கருத்துரிமை. பகிர்வுக்கான எமது விருப்பம் ஒன்று மட்டுமே. என் புரிதலுக்கு எட்டிய சமூகத்தேவையின் அடிப்படையில் இதனைச் செய்வது எனது சமூகக்கடமையாக உணர்கிறேன்....
அறிவன்புடன்
 
*
“அறிவெனும் பெரும் பசி” என்றக் கட்டுரையின் விமர்சனங்களிலிருந்து தொடங்கி “நீங்களும் சமூக விஞ்ஞானி ஆகலாம்” என்ற நூலுக்கான விமர்சனங்களுக்குச் செல்வோம்..
*
“அறிவெனும் பெரும் பசி” விமர்சனப் பதிவுகள்...
1.திரு. ------ ( பெயர் சொல்ல விரும்பவில்லை. இவர் மிகச்சிறந்த இலக்கிய ரசனையாளர், படைப்பாளி, புதுச்சேரியில் மக்களுக்கான இலக்கிய மையத்தை உருவாக்குகின்ற முயற்சியில் இருப்பவர். பெரும் பெரும் இலக்கிய ஜாம்பவான்கள் பலரிடமும் நட்பு கொண்டிருப்பவர். இலக்கியச் சுவைஞர் என்று அறிமுகம் செய்தால் மிகவும் பொருந்தும்.. திருத்தப்பட்ட பழைய வடிவிலிருந்து விமர்சித்தார்.)
      கட்டுரை சுத்தமாகப் புரியல. கேடி சிதம்பரம்னு எப்படி ஒரு சகமனிதரைத் திட்டலாம். தன்னுடைய பாத்திரம் பற்றிய விமர்சனத்தை வாசகர்களிடம் விட்டுவிடுவதுதான் நல்ல படைப்பாளருக்கான நாகரீகம். நீங்களே கேடி என்று விமர்சிக்கக் கூடாது. இந்தக் கட்டுரையில முன்னுக்குப் பின்னான முரண்பாடு நிறைய இருக்குது. மேனி அழகைச் சோகக் கண்கள் முழுங்கிவிட்டன. இந்த வரியே முரணாக இருக்கு. இந்தப் பெண்ணை அறிமுகத்திலேயே கருத்த மேனி, பாத்திரம் தேய்த்துக் காய்த்துப்போன கைகள் என்றெல்லாம் அழகில்லாதவளாகச் சித்தரித்துவிட்டு இந்த வரியை எழுதியிருப்பது பொருத்தமற்றது. கட்டுரை முழுதும் விரக்தியே வெளிப்படுகிறது. இது 1980களில் உருவான எழுத்து வடிவம். நீங்களும் சமூக விஞ்ஞானி ஆகலாம் என்ற  புத்தகத்தைப் படிச்சேன். சிறுபிள்ளைத்தனமானப் புத்தகம். கதைகள் பலவும் உடன்பாடில்லாதவை. கோட்பாடுகளைத் திணிக்கிறது, கோட்பாடுகளை விளக்குறது, இதுன்னா எதுக்கு? எடுத்துக்காட்டுக் கதைகளைச் சொல்வதற்கு என்னத் தேவை இருக்கு? அதுவும் ஒரு மட்டமானக் கதை. கொஞ்சங்கூட பொறுத்தமில்லாதக் கதை. சமூகவிஞ்ஞானிகள்னா யாரு? தனிமனிதக் கருத்துநிலைப்பாட்டை நான் ஏன் தெரிஞ்சுக்கணும்? நான் ஏன் சமூகத்தை மாற்றனும்? யாரோ உங்க மூளையில் திணிச்சதையெல்லாம் பேசிட்டிருக்கீங்க. தனி அறையில் கண்ணை மூடிட்டுப் பேசிட்டிருக்கீங்க. இந்தக் கட்டரைய யாராவதுப் படிச்சா தலை சுத்திக் கீழே விழுந்திடுவாங்க.. தயவு செய்து கொடுத்துறாதீங்க, உங்க பெயர் கெட்டுவிடும்.. ஏன் எழுதுறீ்ங்க? யாருக்காக எழுதுறீங்க? வெறும் தலைப்புக்காக எழுதாதீங்க. நல்ல தலைப்புக் கிடைச்சுட்டா நாலு நாளு உட்கார்ந்து மடமடன்னு கட்டுரை எழுதுறத நிறுத்துங்க. நல்ல தலைப்பு ஆனால் கட்டுரை பெரிய ஏமாற்றத்தைத் தருது. உங்க கட்டுரை என் வேலையைக் கெடுத்துருச்சு. காலைல நான் ஒரு வேலையத் திட்டமிட்டு வந்தேன். ஆனால் உங்களிடம் ஒரு மணி நேரமா பேசிட்டிருக்கேன். உங்கள்ட்ட துணிச்சல், உணர்வு, சிந்தனை இருக்குது, ஆனால் வடிவம் இல்லை. நீங்க நிறைய வாசிக்கனும். வாசிப்பு போதாது. நீங்க நல்லா எழுத முடியும் புதியவன். ஆனால் இதுமாதிரி எழுதுவதை தயவு செய்து நிறுத்திருங்க.. நம்ம நல்ல இலக்கியங்களை உருவாக்குவோம்.
2இணையாளர்கள் செல்லப்பன் & கலைமணி (திருத்தப்படாத பழைய வடிவிலிருந்து விமர்சித்தார்கள்)
      காமுகன் காமுகி சொற்களைப் பயன்படுத்தியிருப்பதை வன்னையாகக் கண்டிக்கிறோம். கயவர்கள் என்ற சொல்லை மாற்ற வேண்டும். சமூக அறிவுக் கேள்விகளைச் சுருக்கலாமே... சமூகவிஞ்ஞானிகள் யார்? மற்றபடி நல்லாருக்குது. விசயமுள்ளக் கட்டுரை. பார்த்ததும் ஆர்வத்தோடு படிக்கிற கட்டுரை இல்லை. விசயம் தேடி படிக்க விரும்புறவங்களுக்கான கட்டுரை. எனக்குப் படிக்கையில் முன்பக்கம் படிச்சது பின்பக்கம் மறந்துபோயிடுது.  குமாரு படிச்சாருண்ணா புரியாமல் தலைசுத்திரும், அப்பறம் பேருக்குன்னு நல்லாருக்குண்ணு சொல்லிக் கொடுத்திருவாரு. அறிவியல் கண்ணோட்டம் என்ற வார்த்தை திடீர்னு வருது.
3.தோழர் சத்யபாலன்
      நல்லா வந்துருக்கு தோழர். வாழ்த்துக்கள். உணரும் விதமாக அமைந்திருக்கு. உங்க முயற்சி எனக்கு செ. கணேசலிங்கனுடைய குந்தவிக்குக் கடிதங்களை நினைவுபடுத்துது.
4.தோழர் சுரேஷ்
      நல்லா வந்துருக்குத் தோழர். பயன்படக்கூடியக் கட்டுரை. குழந்தைக்குச் சொல்வது போல வாசகர் எல்லோரையும் கருதிச் சொல்வது சரியாக முடியுமானு யோசிங்க.. தத்தவம் குழந்தைக்கு உரியதா? அறிவெதிர் தத்துவம் என்ற சொல் சரியானதா?
5.ஹரி கிருஷ்ணன் ME1st
      சமூகத்திற்குத் தேவையானது. படிக்கப் புரியுது. சோர்வு இல்லை. குற்ற உணர்வு ஏற்படுது. மாற்றிக்கணும்னு தோணுது. மாற்றிக்க நினைச்சாலும் மாற்றிக்க முடியாதுங்கிறமாதிரியும் தோணுது. கதைக்கு முன் அறிமுகம் தேவையில்லை. நீங்க சொல்லவருவதை உணர்வதற்குப் இது பொருத்தமானக் கதை.
6.சு. குமார் – முனைவர் பட்ட ஆய்வாளர்
      நல்ல கட்டுரை. அவசியம் தேவையானது. கதையில் 2 இடத்தில் வரியை மாற்றலாம்னு தோணுது. இந்த விசயம் கண்டிப்பாகத் தேவைனு புரியது. வழிகாட்டுறவங்க யாருண்ணு தெரிஞ்சிக்க முடியல. அவங்களைத் தெரிஞ்சுக்கனும்னு ஆர்வம் இருக்குது. இது எல்லோருக்கும் போய் சேரனும். சோர்வில்லாத மொழிநடை. 8 கேள்விகளுக்கும் விடை தெரிஞ்சுக்கனும்னு ஆர்வம் வருது. விடைகளை விளக்காமல் போயிருப்பதுதான் பலவீனம்..
7.ராஜகுமாரி – முனைவர் பட்ட ஆய்வாளர்
      ரொம்ப நல்லா எழுதுறீங்க. நல்ல எதிர் காலம் உங்களுக்கு உறுதி. வார்த்தைகள் புதுசாக இருக்கு. தேவையான எழுத்துமுறை. சமூக விஞ்ஞானிகளைப்பற்றியும் உலகப்பார்வை போன்றவை பற்றியும் விளக்கி எழுதிருக்கலாம்னு தோணுது. கேள்விகள் அதிகமாகத் தெரியுது. முதல் பக்கம் மாற்றக் கூடாது. 2ம் பக்கக் கேள்விகளைச் சாராம்சமாகச் சுருக்கி அமைக்கலாம். மடையர்கள்னு திட்டும்போது நானும் ஒரு சக மனிதர் என்பதால் எனக்குக் கஷ்டமாக இருந்துச்சு. அதை மாற்றிக்கனும்னு தோணுது.
8.ரீகன் (page டிசைனர்)
      ரொம்பச் சரியா இருக்கு. நல்லா போகுது. கேள்வி நெறயா கேக்குறீங்க. பதில் விளக்கினால் எங்களுக்கும் பயனுடையதாக இருக்கும். தேவையை உணர்த்துற எழுத்து..
9. தோழர் ராம்குமார்
      வாழ்த்துக்கள் தோழர். நேரில் விவாதிப்போம்..
10.தோழர் காமராசர்
      கட்டுரை நல்லா வந்துருக்கு. கதை ரொம்ப மொக்கையா இருக்குது. மோசமான கதை என்று உணர்கிறேன். ஒரு போர்னோகிராப்பி கதையை எடுத்துப் பயன்படுத்தியுள்ளீர்கள். இதற்குப் பதிலாக ஒரு நாட்டுப்புறக் கதையையோ அல்லது எழுத்தாளளர்களின் கதையையோ பயன்படுத்தியிருக்கலாம்.
11. அமுரா ராஜவேலு (B.A.english)
      1st ரொம்ப அருமையாக இருக்குண்ணா. 3 இடத்தில் தடையாகுது. சரிபடுத்துங்கண்ணா. மனிதன் இயற்கையைப் பகைத்துத் தோன்றியுள்ளான், நீங்கள் எப்படி இல்லைனு சொல்லலாம். பல இடங்களில் அருமையானதாக தேர்ந்த மொழிநடை அமைந்திருக்கு. இந்தக் கட்டுரையைப் படிக்கயில எனக்கு “கடவுள் என்பது என்ன” அஷ்வகோஸ் புத்தகம் படிச்சது நினைவுக்கு வருது.
      2nd அண்ணா இந்தக் கட்டுரைய 2வது தடவ படிக்கயில ரொம்ப சந்தோசமாக இருக்குண்ணா. நீங்க எழுதுனதிலேயே ரொம்ப எஸ்ட்ரீமா வந்துருக்குண்ணா. ரொம்ப முக்கியமானக் கட்டுரை. எல்லாருக்கும் பரப்பனும். 1st படிச்சப்ப இந்த அளவு நான் நினைக்கல்ல. நல்லாருக்குதுண்ணா. மொழிநடையை மட்டுமே கவனிச்சிட்டுப் போயிட்டேன். விசயம் புரிஞ்சது, ஆனால் முக்கியத்துவத்தை இப்பதான் உணருகிறேன். நான் டீவி பார்க்கும் போது கிரிக்கெட் படம் எதுப்பார்த்தாலும் உங்க கட்டுரை நினைவுக்கு வந்து டிஸ்டர்ப் பண்ணுதுண்ணா. நான் முடிஞ்சவரை ஜெராக்ஸ் போட்டு பரப்புவேன். ஒருசில வார்த்தைகளை இன்னும் சரி செய்ய முடியும்னு தோணுது. அதாவது, சமூக அறிவுன்னா இந்த எட்டு மட்டுந்தான் என்பதுபோல ஏன் சொல்லனும். இதத்தாண்டி அடுத்து கண்டுபிடிக்கிறதுக்கு வழிவிடுவதுபோல வார்த்தைகளை அமைக்கலாமேன்னு தோணுது.. ரொம்ப எஸ்ட்ரீம்மான கட்டுரைண்ணா.. எனக்கு எப்படிச் சொல்லி புரிய வைக்கிறதுன்னே தெரியல...
      3rd பல வரிகள் மிக அழகாக அமைந்திருக்கு. திரும்பவும் படித்துப் பார்க்கத் தூண்டுகிறது. திரும்பத்திரும்பப் படிச்சப் பிறகே அடுத்துப் படிக்கிறேன். தொடர்ந்து படிச்சு முடிக்கணும்னு நினைக்கிற மாதிரி வரிகள் உற்சாகமாக அமைந்திருக்கு. கதையைப் பிறகுச் சொல்வேன் என்ற அணுகுமுறையே நல்லாருக்குண்ணா.. கொல்லிக்கட்டைகளா வாழ்க்கை... இருட்டு மடிந்து பேரொளி பெருகிற்று...இந்தப் பத்திகள் என்னை திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டின. நமது சமூகஅறிவின் தேடல்கள் தகவலறிவுக் களஞ்சியங்களைத் தாண்டுவதே இல்லை... காலங்காலமாக அறிவெதிர் தத்துவத்தின் ஆதிக்கத்திலேயே வாழ்ந்து பழகியவர்கள் நாம்... நாம் எவற்றெயெல்லாம் பார்க்க வேண்டும்... சமூகம் ஒரு வீட்டின் அமைப்பு போல என்று எடுத்துக்காட்டி விளக்கிட்டுப்போற விதம்... இன்று மணலும் இல்லை நீரும் இல்லை... நம் கண்களுக்கு வீடுகள் தெரிகின்றன வீட்டின் அடித்தளங்கள் தெரிவதில்லை... உற்பத்திமுறை பற்றி விளக்கும்போது இந்தியச் சூழலில் சாதியக் குலத்தொழில் பற்றிய அறிவும் இவற்றில் அடங்கும்னு குறிப்பிட்டுப்போறது... எல்லாமே அருமையாக இருக்குண்ணா. பூவைப்போலன்னு சொல்லாம வெறும் குழந்தையாகவே சொல்றது சரியாக இருக்கும்னு தோணுது. கீழ்வீடு என்ற வார்த்தைக்குப் பதிலாக வேறு வார்த்தை பயன்படுத்த முடியுமான்னு பாருங்கண்ணா..  “AIM என்ற சமூகவிஞ்ஞான அமைப்பில்..” என்ற பத்தியை “நம் கவனங்கள் சமூக விஞ்ஞானிகளை நோக்கி அமையட்டும்..” என்ற பத்திக்கு முன்னதாகச் சேர்த்தால் ரொம்பப் பொருத்தமாக இருக்கும்ண்ணா. புகழ்றதா நினைக்காதீங்கண்ணா.. நான் உங்களுக்காகச் சொல்லல்ல. உங்க எழுத்தைப்பற்றிப் பேசும்போது உண்மையைச் சொல்லியாகனும். உங்க எழுத்தைப்பற்றி சொல்றேண்ணா.. மிகப் பெரிய விசயங்களை மிகச் சாதாரணமாக அழகாகச் சொல்றது அனுபவம் முத்திய பெரிய எழுத்தாளர்களுக்குத்தான் வரும். அவர்களுக்கே ஒரு 70 சதவிகிதம்தான் சாத்தியம். ஆனால் உங்களுக்கு இப்பவே 20சதவிகிதம் வந்துருச்சுண்ணா. எனக்குத் தெரிஞ்சு நான் வாசிச்சதிலேயே உங்கள்ட்டதான் அதிகம் உணர்ந்திருக்கிறேன். உள்ளம் சுடும் கட்டுரையிலும், உன்னைக் காதலிக்கக் காத்திருக்கிறேன் போன்றக் கவிதையிலும் ரொம்பவும் உணர முடிஞ்சது. புதுமையாகச் சொல்லிட்டிருக்கீங்கண்ணா. கடவுள் என்பது என்ன? என்ற புத்தகம் ரொம்பப் பிடிச்சதுக்குக் காரணம் அவர் சொல்லிட்டுப்போற முறைதான். ஆனால் அதுலகூட புதுமையாகச் சொல்றதா எனக்கு எதுவும் படல. ஏற்கனவே சொல்லிட்டிருக்கிறத அவரும் சொல்றாரு. சோர்வு தட்டாத நடையில் எளிமையாகச் சொல்லிருக்காரு. ஆனால் உங்க எழுத்துல புதுமைன்னு சொல்றதுக்கும் நிறைய இருக்குதுண்ணா....
12. தேவி – முனைவர் பட்ட ஆய்வாளர்
      கட்டுரைய முதல் பகுதி 2ம் பகுதின்னு பிரிச்சு பேசலாம் சிவா. முதல் பகுதில கதை பல விசயங்களுக்குப் பொருந்தக் கூடியதாக இருக்குது. ரொம்ப சரியாகச் சொல்லிருக்கீங்க. 2ம் பகுதிய நான் இன்னும் சரியாக புரிஞ்சுக்க வேண்டியதிருக்கு. பொருளுற்பத்தி அல்லாதது எல்லாம் எப்படி மேல்கட்டுமானம்னு சொல்ல முடியும்? மேல் கட்டுமானத்துலயும் பொருள் உற்ப்பத்தி இருக்குதே.  நான் இந்தக் கட்டுரையை இரண்டு தடவை படிச்சுட்டேன். நேரில் பேசும்போது 2ம் பகுதி பற்றிக் கூடுதலாகவும் விளக்கமாகவும் எனக்குச் சொல்லுங்க சிவா...
13. திரு. இலக்கியன் ஆறுமுகம்  
      இந்த மாதிரிக் கட்டுரையைப் படிச்ச அனுபவம் இல்லாததால பாண்டியன் பேசிருப்பாரு. இந்தக் கட்டுரை நல்லா வந்திருக்கு. முன் பக்கம் கொஞ்சம் குறைச்சுருக்கலாம். திரைப்படம், மஞ்சள் பத்திரிக்கை படித்தல் பற்றியதாகப் பேச்சை நீட்டிருக்க வேண்டாம். பார்வையைப் பலமடங்கு இழந்துவிட்டோம் என்பது ரொம்பச்சரி. உள்ளத்தியல் என்ற வார்த்தையே எனக்குப் புதுசா இருக்குது. நல்லா வந்திருக்கு..
14. புதிய விடியல் (சிற்றிதழ்)
      Thanks for sending an essay. but It Too Long. So Please Summarize It with in 300 words. that is very useful to read and print.
15. எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் (சூரியதீபன் என்ற பெயரில் நன்கு அறியப்பட்டவர்)
      ஊடாட்டத்தில் உங்க கட்டுரை ரொம்பவே நல்லா வந்திருக்குது. தத்துவார்த்த விசயங்கள் கோட்பாடுகள் பற்றி பலகாலமாகவே நான் படிக்கிறதே இல்ல. கலை இலக்கியத்துலதான ஆர்வமாக செயல்படுகிறேன்.  இந்தக் கட்டுரையை ரொம்ப ஆர்வமாகப் படிக்க முடிஞ்சது. மேல்கட்டுமானம் அடிக்கட்டுமானம் பற்றி ரொம்ப எளிமையாகவும் நல்லாவும் சொல்லிருக்கீங்க. தத்தவத்தை எப்படி மண்ணுக்கேற்றபடி புதிய சொற்களைப் பயன்படுத்தி புதிய முறையில் சொல்றதுண்ணு இத படிக்கயில உணர முடிஞ்சது. இந்தமாதிரி இதற்கு முன்பு யாரும் விளக்க முயற்சிக்கலன்னு தோணுது. எனக்கு தெரிஞ்சு நீங்கதான் செய்திருக்கீங்க. இது ரொம்பவும் புதிய முயற்சி. ஊடகங்கள் எல்லாம் எப்படி மூளையில் தகவல்களைத் திணிக்கின்றன. எதைப்பற்றியும் யோசிக் விடாமல் செய்கின்றன. அறிவை கூர்மைபடுத்துவதற்குப் பதிலாக மழுங்கச் செய்கின்றன. இந்த உண்மைகளை ரொம்பவே நல்லா உணர்த்திருக்கீங்க. நாளைய தலைமுறைகளுக்காக இன்றே முளைத்திருக்கின்ற அத்தனை அநீதிகளும் வென்றுவிடும் என்பது மிக சரியான வரி. 10 பக்கம் இருக்குது. கொஞ்சம் சுருக்க முடியுமான்னு பார்க்கலாம். பெரிய புத்தகங்கள் வெளிவருவதைவிட சிறு வெளியீடுகள்தான் இன்று தேவை. சிறுவெளியீடாகக் கொண்டு வர முயற்சி செய்ங்க தோழர்...
16. தோழர் மனுவேல்
      அறிவெனும் பெரும் பசி படிச்சேன்டா. பண்பாடு பற்றி தவறான புரிதலிலிருந்து எழுதிருக்க. பண்பாடு மேல்கட்டுமானத்தில் மட்டும்தான் வரும். அடிக்கட்டுமானத்தில் தாக்கம் செலுத்துகிறது என்பதற்காக அதை அடிக்கட்டுமானமாகப் புரிந்துகொள்ள முடியாது.
17.ஐ.ரவிச்சந்திரன் (திண்டிவனம் விவசாயி, புதுச்சேரி பல்கலைக்கழக காவலாளி)
      தலைப்பே  ரொம்ப அழகா இருக்குது. சமூகஅறிவு வீட்டைக் கற்பனை செய்யும்போது இப்ப கட்டிட்டிருக்காங்களே ஹாஸ்டல் கட்டிடம் அதுதான் நினைவுக்கு வந்தது. வாங்க அந்தக் கட்டிடத்தப் பார்வையிட்டுக்கிட்டு பேசலாம். என் சந்தோசத்த எப்படி சொல்றதுன்னு தெரியல. இதை இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடனும். எல்லோரும் படிச்சுட்டாங்கன்னா போதும். தெரிஞ்சுருச்சுன்னா உண்மையிலேயே பெரிய விளைவுகள் உருவாகும்.

“நீங்களும் சமூக விஞ்ஞானி ஆகலாம்” விமர்சனப் பதிவுகள்...
1.இணையாளர்கள் செல்லப்பன் & கலைமணி
      படிக்கயில பல இடங்களில் நம்ம சிவாவால இப்படியும் எழுத முடியுமான்னு தோணுச்சு. கதையாகப் படிக்கிறதால எல்லோருக்கும் புரியும். கடைசியில அம்மாவுக்குக் கடிதம் ரொம்ப சூப்பர். இன்னைக்கு உள்ள நிலமையில எல்லோரும் படிக்க வேண்டியது. படிச்சா உணராம இருக்கவே முடியாது. ஒவ்வொரு கட்டுரையும் முக்கியமானது. 5ரூ, 10ரூ புத்தகம் மாதிரி வெளியிடலாமே.

2.தோழர் அழகுதேவி
      நான் அமைப்புக்குள் வந்ததும் குடும்பத்த சமாளிக்க ரொம்பக் கஷ்டப்பட்டேன். நான்  எங்க அம்மாகிட்ட எதையெல்லாம் பேச விரும்பினேனோ அத்தனையும் இந்தப் புத்தகத்துல இருக்குது. நம்ம சரியா யோசிக்கிறோம்னு புரிஞ்சுக்க முடிஞ்சது. எழுத்துமுறை, சொல்றவிதம், கதை சொல்றது மூலமாகப் புரிய வைக்கிறது எல்லாம் அருமையா இருந்துச்சுய்யா...கவிதை கட்டுரை எல்லாம் மொத்தமா சேந்திருக்கிறதுதான் புத்தகத்துடைய பலமே. ஒவ்வொரு கட்டுரையும் ரொம்ப முக்கியமானது. புத்தகம் முழுதையும் எல்லோரையும் படிக்க வைக்கணும். நாங்க எங்க தோழர்களோட கண்டிப்பா கலந்துரையாடுவோம்யா..
3.தோழர் சிவராம்
      நல்லா வந்துருக்குது. சொல்ல வந்தத சரியா சொல்லி முடிக்கிறீங்க. எழுத்து உங்களுக்கு நல்ல விதமாக கைவந்துருக்கு. சிறப்பு. தொடர்ந்து எழுதுங்க. உங்க எழுத்து ஆளுமையை விட்டுறாதீங்க. மதுரை வட்டாரத்தன்மை உங்களுக்கு ஏன் வரலன்னு புரியல. அது வந்திருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும். எல்லாத்தையும் ஒரே புத்தகத்துல சொல்லி முடிச்சுறனும்னு வேகம் காட்டிருக்கீங்க. அது தேவையில்ல. தனியா ஒரு கவிதை புத்தகம் வெளியிடுங்க. பேசப்பட வேண்டிய பல புத்தகங்கள் நிறைய கவனப்படுத்தப்படாமலும் பேசப்படாமலும் மறக்கடிக்கப்பட்டிருக்கு. அதுல இந்தப் புத்தகமும் சேர்ந்திடக் கூடாது. புத்தகத்தைப்பற்றி உடனடியாக அறிமுகக்கூட்டம் வாசகர் வட்டம்னு ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லுங்க தோழர்...
4.தோழர் காமராசர்
      புத்தகம் நல்லாதான் வந்திருக்குது. கவிதைகளைத் தேவையில்லாமல் சேர்த்திருக்கீங்க...


5. எழுத்தாளர் போப்பு
      நேர்மையான விமர்சனம்தான் சொல்வேன். மொழிநடை பிரச்சனையாக இருக்குது. முதல்முறை படிச்சப்ப ரொம்ப அதிருப்தியுடன் பாண்டிக்கிட்ட பேசினேன். மதிப்புரை எழுதுறதுக்காக 2வது முறை படிச்சேன். அப்ப எந்த அதிருப்தியும் எனக்குக் கொஞ்சங்கூட வரல. ஏன்னு எனக்கே புரியல. ஊன்றிப் படிச்சதால உணர முடிஞ்சது. ஆனால் சாதாரணமாகப் படிச்சா யாரலையும் படிக்க முடியாது. ஆர்வத்துடன் கவர்ந்து செல்லும் தன்மை இல்லை. சமூகவிஞ்ஞானம் ரொம்ப முக்கியமானத் துறை. அதுபற்றி எழுதிட உங்களுக்கு வயதும் அனுபவமும் போதாது. அதுக்காக எழுத வேண்டாம்னு சொல்லல. தொடர்ந்து எழுதுங்க. எழுத எழுதத்தான் வரும். பின்னாலிருந்தக் கட்டுரைகள் வாழ்வியல் அனுபவங்களுடன் பொருந்தி வருவதற்கான முயற்சியுடன் அமைந்திருக்கு. நல்ல முயற்சி. போதாமையை உணர்த்துகின்ற முயற்சிதான். நல்ல துணிச்சலான விசயம். தொடர்ந்து எழுதுங்க. முதல்ல நீங்க அதிகமாக வாசிக்கனும். உங்க இந்த எழுத்து யாருக்கும் ஆர்வமான முறையில் போகாது. தேவையில்லாமல் புதிய சொற்களைப் பயன்படுத்தக் கூடாது. புள்ளி, கமா, வார்த்தை பயன்பாடுபற்றி இறுதித் திருத்தத்திற்காக இன்னும் இன்னும் சரியாக்கணும் என்ற முயற்சி வேண்டும். சொல்றதுக்கு விசயம் இருந்தாலும் சொல்லும் முறை மிகவும் முக்கியமானது. அதிகம் படிச்சால் இது நமக்குப் படிந்துவிடும். அதனால் படிங்க. வாசிப்பு போதாது. உங்க புக் விற்பனையாகுறது சிரமம். பதிப்பகத்திடம் விசாரிச்சுப் பாருங்க. நான் புத்தக மதிப்புரையை நேர்மையாகத்தான் எழுதிருக்கேன். ஆனால் நம்ம பேசியவற்றைக் குறிப்பிடாமல் நேர்மறையானவற்றை மட்டுமே எழுதியுள்ளேன். 

புதியவன் எடுத்துரைக்கும் சமூகவிஞ்ஞானம் - எழுத்தாளர் போப்பு –


6. சு. குமார் – முனைவர் பட்ட ஆய்வாளர்
      புத்தகம் ரொம்ப நல்லா வந்திருக்கு சிவா. புதிய முயற்சி. இது மாதிரியான வேற எந்தப் புத்தகமும் எனக்குத் தெரியல. ஒவ்வொரு விசயமும் எல்லாருக்கிட்டயும் போய் சேரும். ஆர்வமாகப் போகுது. தனித்தனிக் கட்டுரைய சின்ன புத்தகமாக வெளியிட்டா எல்லாரிடமும் எளிமையா சேரும். கண்டிப்பாப் படிச்சுப்பார்த்து யோசிப்பாங்க...
 7.ஆ.தே. செந்தில்குமார் (ஆசிரியர்)
      சிவா உன் புத்தகத்தை இரண்டு சாருக்குப் படிக்கக் கொடுத்தேன். ஒருத்தரு பொதுவாகப் புத்தகம் படிக்கிறவரு. இன்னொருத்தரு பொழுதுபோக்குக்காகப் புத்தகம் படிப்பாரு. 2வது சார் படிக்க அரம்பிச்சுட்டுப் படிக்கவே முடியலன்னு கொடுத்திட்டாரு. 1வது சார் முழுசாப் படிச்சிட்டு ரொம்பப் பாராட்டினாரு. பொழுதுபோக்குக்காகப் படிக்கிற சாதாரணப் புத்தகம் இல்ல. உண்மையிலேயே அக்கறையோடு படிக்கிறவங்களை இந்தப் புத்தகம் ரொம்பவும் கவர்ந்திடும். சமூக உணர்வோடப் படிக்கிறவங்களுக்கு இது ரொம்பவும் முக்கியமானப் புத்தகம்.
8.பன்னீர் (விகடன் பிரசுரத்தின் பணியாளர்)
      இந்தப் புத்தகத்தைக் கீழே வைக்கவே முடியல சிவா. புதிய நடை. இப்படியொரு நடையில் நான் படிச்சதே இல்ல. புதியவன் என்ற பெயர் ரொம்ப ரொம்பப் பொருத்தமா அமைந்திருக்கு. கடவுள் பற்றி உங்க கதையைப் படிச்சேன். உடனே உங்கள்ட்ட பேசனும்னு போன் செய்தேன். நானும் கடவுளைக் கும்பிட மாட்டேன். ஆனால் இந்து மதத்துல்ல உள்ள அறிவியலைப்பற்றி பேசனும்னு நினைக்கிறேன். இந்தப் புத்தகத்தை என் நண்பர் எதார்த்தமாகப் பார்த்தார்.  காரணமானவர்களைப் படிச்சதிலேயே உங்க மேலே பெரிய மதிப்பு ஏற்பட்டுருச்சு. உங்களை ரொம்பவும் பாராட்டுரார். நீங்க என் நண்பர்னு சொன்னேன். வாழ்த்துக்களைத் தெரிவிக்கச் சொன்னார். புத்தகத்தை எடுத்திட்டுப்போயி படிக்க ஆர்வமாக இருக்கார். நான் 60 பக்கம் முடிச்சிருக்கேன். முழுசாக முடிச்சிட்டு நேரில் வந்து சந்திப்பேன்...
9.கந்தசாமி ஐம்புலம் - முனைவர் பட்ட ஆய்வாளர்
      இந்தப் புத்தகம் சாதாரணமானதாகத் தெரியல. ஏதோ விருதுக்குத் தேர்வாகக் கூடிய புத்தகம் இது. நல்ல ஆற்றொழுக்கான நடை. எல்லாவற்றையும் நாம் இப்படியொரு நடையில் பேசினால்தான் சரியாக இருக்கும்னு தோணுது. இந்தமுறை ரெண்டு புத்தகங்கள் வெளிவந்திருக்கு. ரெண்டையும் முழுசாகப் படிச்சுட்டேன். 1வது தமிழ்ஒளியைப் பற்றிய ஒரு புத்தகம். ரொம்பவும் சோர்வையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கு. 2வது உங்கப் புத்தகம். ரொம்பவும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கு. உற்சாகத்தையும் மனநிறைவையும் தந்திருக்கு. இந்தப் புத்தகத்தைப் பற்றி நான் அவசியம் எழுதனும்னு நினைக்கிறேன்...
10. உதயா – இளமுனைவர் பட்ட ஆய்வாளர்
      எனக்கு ஆச்சரியமாக இருக்குது. ரொம்ப நல்ல புத்தகம் எழுதிருக்கீங்க. கவிதை எல்லாமே ரொம்ப அருமையா இருக்குது. உன்னைக் காதலிக்கக் காத்திருக்கிறேன் கவிதை படிக்க படிக்க அருமையாக இருக்குது. இப்படியொரு கவிதையைப் படிச்சதே இல்ல. அறிவியலை கதை சொல்லி புரிய வைக்கிறீங்க. இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரிஞ்சது. நான் இந்தப் புத்தகத்தை வாங்கிக்கிறேன். எப்படி இப்படியெல்லாம் முடிஞ்சது!
11.தோழர் ராம்குமார்
      ரொம்ப நல்லா வந்திருக்குத் தோழர். தனிச் சிறப்பு என்னதுன்னா சமூக விஞ்ஞானங்கிறது முழுக்க ஒரு இலக்கியப் புத்தகமாகவே வடிவமைந்திருக்கிறது.. நீங்க தொடர்ந்து நிறையா எழுதணும் தோழர்...
12.சந்தனக்குமார் (axis bank staff)
      புத்தகம் ரொம்ப நல்லாருக்குது சிவா. 1st  மூன்று பக்கம்தான் கொஞ்சம் புரியாதமாதிரி  இருந்தது. ஆனால் அடுத்து எந்தப் பக்கமும் சோர்வே இல்லாமல் நல்லா போகுது சிவா.  வீட்டுக்காரியின் வீக்கங்களில் தேங்கியிருந்தது அந்த வேதனை... அந்த வரியை திரும்பத் திரும்பப் படிச்சேன் சிவா. ரொம்ப அருமையான வரி. இது மாதிரி கவரக்கூடிய வரிகள் நிறைய இருக்கு சிவா...
13.திரு.மு.இளங்கோ (பேராசிரியர்)
      புத்தகம் முழுசாகப் படிச்சேன். ரொம்ப நல்லா வந்திருக்கு. ஆழமான விசயங்கள் எல்லாம் பேசிருக்கீங்க. இயக்க அனுபவங்கள் இல்லாமல் எழுதியிருக்கவே முடியாது. இணையதளங்களிலும் பார்த்தேன். சரளமாகக் கவிதைகள் வாசிக்கிறீங்க. வாழ்த்துக்கள்...
14. குணாண்ணா (காவல்துறை பணியாளர்)
      உன்னை மாதிரி எழுதனும்னு அண்ணனுக்கு ஆசைடா. நான் தொடர்ந்து முயற்சி செய்வேன். நீதான் எனக்குக் கத்துக்கொடுக்கனும். உன் புத்தகத்த எல்லா விசேசங்களுக்கும் அன்பளிப்பாகக் கொடுக்கிறேன். படிச்ச நண்பர்கள் எல்லோரும் உன்னை ரொம்பவும் பாராட்டுறாங்க. புதியவன் இன்னும் நிறையா எழுதனும் Okva? உன் கவிதைகள் எல்லாம் ரொம்ப அருமையாக இருந்தது. திரும்பத் திரும்பப் படிச்சேன். எல்லோரும் காதல் கவிதை எழுதுவாங்க. உன்ன மாதிரி எழுதுனதா யாரையும் பார்த்ததில்லை. காதலையும் சமூகஉணர்வோடு எனக்குத் தெரிஞ்சு நீதான் எழுதியிருக்க. வேற யாராவது எழுதியிருந்தாலும் உன்னளவுக்கு எழுதியிருக்கமாட்டாங்கன்னுதான் தோணுது. காதல் கவிதை ரொம்ப சூப்பர். காதலியோட நீ பழகுறதா செஞ்சக் கற்பனைகள் ரொம்ப அழகா இருக்கு. உண்மையாவதற்கு அண்ணன் வாழ்த்துறேன். கல்வியைக் கிண்டல் பண்ணிருக்கிற கவிதை, பறவைக்கு பறக்கவும் பறக்காமலிருக்கவும் உரிமையிருக்குது அதுமாதிரிதான் ஓட்டுரிமையும்னு எழுதிருக்கிற கவிதை எல்லாமே சூப்பர்டா.. நானும் தொடர்ச்சியா எழுதுறேன். உன் அளவுக்கு நானும் சீக்கிரம் எழுதணும்டா தம்பி....
15. திரு.ஜெனார்த்தன் (PILC காசாளர்)
      புத்தகம் ரொம்ப அருமையாக வந்திருக்கு சிவா. வீட்லயும் படிச்சாங்க. நான் முடிச்சிட்டு  நண்பருடைய நூலகத்துக்குக் கொடுத்தேன்.  அவரும் படிச்சுட்டு ரொம்பவும் பாராட்டுனாரு. புத்தகம் பற்றி எழுதித் தருவதாகச் சொன்னாரு. நல்ல சிந்தனை. இது தொடர்பாக எந்த உதவினாலும் கேளுங்க சிவா. செய்திருவேன்.
16.தோழர் சேகர்
      நல்ல முயற்சி. அளவு மாற்றத்துக்கு மதிப்பெண் என்பது பொருத்தம் இல்லாத எடுத்துக்காட்டாக இருக்கிறது.

17.பிரவின் 9th (மதுரை மீனாட்சி மெட்சிக்குலேசன் பள்ளி)
      அண்ணா உங்கப் புத்தகத்தை எங்க சாரும் மேடமும் படிச்சுப் பாத்துட்டு ரொம்பவும் பாராட்டுனாங்க. உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லச் சொன்னாங்க. எங்க பிரேயர்ல 2 நாள் உங்க கவிதைய வாசிச்சாங்க.  (1.ஆங்கில சோறு போட்டு... 2.பறவையைப் பார்த்து அதிகாரமாகச் சொன்னது அடைமழை...)
18.தீனா 12th
      உங்க ஜெராக்ஸ் எல்லாம் படிச்சேண்ணா. ரொம்ப நல்லாருந்துச்சு. முழுக்க முழுக்க சமூக விழிப்புணர்வோட இருக்குது. இளைஞர்கள் எல்லாரும் அவசியம் படிக்க வேண்டியதாக உங்கள் எழுத்து இருக்குண்ணா. நல்லா எழுதுறீங்கண்ணா.
19.வினோத் (JDS பால்டெக்னிக் ஸ்கூல்)
      அண்ணா உங்க புக் ரொம்ப நல்லாருக்குண்ணு சொல்றாங்கண்ணா. எங்க ஸ்கூல்ல பிரதாப் சார் படிச்சுட்டு ரொம்பவும் புகழ்றாரு.  2 நாளா உங்க புக்க வச்சுதான் class fullaa ஓட்டிக்கிட்டு இருக்காராம். நான் class போகாம லீவு போட்டதால மிஸ் பண்ணிட்டேன். பசங்க எல்லாரும் சொன்னாங்க. என்னடா புத்தகம் கொடுத்து சார ஐஸ் வக்கிரியாடானு கேக்குறானுங்கண்ணா...
20.புவணாக்கா (புரொபொசனல் கொரியர் - லாஸ்பேட்டை)
      உங்க எழுத்து ரொம்ப புதுசா இருக்கு. ரொம்ப நல்லாருந்தது. சுதாகர் சார்க்கு தமிழ்ப் படிக்கத் தெரியாது. காதல் செய்ய விரும்பு... கட்டுரையப் படிச்சிட்டிருந்தேன். சத்தமாப் படிக்கச் சொல்லி அவரும் கேட்டாரு. படிச்சதும் உங்கள ரொம்பவும் பாராட்டினாரு. உண்மைய அப்படியே எழுதிருக்காருல.! நல்லா எழுதிருக்காரு! உங்க புக் வந்ததும் 10 copies வாங்கி எல்லோருக்கும் gift கொடுக்கணும்னு சொன்னாரு. உங்க புக் வந்ததும் எனக்குக் கொடுங்க. நான் வாங்கனும். உங்க புக் எப்படி வரும்னு எனக்கு இப்பவே தெரியுது. கவிதை கட்டுரை (ஜெராக்ஸ் வடிவில்) எல்லாமே சூப்பர்...
21.சாதிக் (WPTC மாணவி)
      உங்க writing style (ஜெராக்ஸ் வடிவில்) ரொம்பவும் நல்லாருக்குதுண்ணா..
22.ராஜேந்திரன் என்ற முதியவர் (புத்தகப் பூங்கா என்ற புத்தகக்கடையில் மேலோட்டமாகத் திருப்பிப் பார்த்துவிட்டுப் பேசியவை)
      இந்தப் புத்தகத்துல ஆசிரியர் தன்னோட ஆதங்கத்தையெல்லாம் கொட்டி வச்சிருக்காரு சார். முதல்ல இப்படி எழுதுறதுனால எதுவும் சரியாகிவிடாது. அரசு சரியாகச் சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தனும். அதுக்குச் சரியானத் தலைவரு உருவாகனும். நம்ம இந்து மதம் ரொம்பச் சரியானது. சாதிகள் எல்லாம் ஒழியனும். சாதிச்சான்று முறையே இருக்கக் கூடாது. பசங்களுக்குக் கல்யாணம் நடத்த முடியல. இன்னும் 20, 50 வருசத்துல சாதிகள் அழிஞ்சிடும். வாழ்க்கை ரொம்ப மோசமாகப் போகுது. நாங்கன்னா நொந்து போயிருக்கோம்...
23.ராம்சந்திரன் (ஊடாட்டம் ஆய்வுக்குழு)
      தோழர் ஒரு தகவல் சொல்லனும். உங்க புத்தகத்தைப் பிரதீப்னு ஒரு தம்பிக்கு படிக்கக் கொடுத்தேன். முழுசாகப் படிச்சிட்டு ரொம்பவும் சந்தோசப்படுறான். உங்க புத்தகம் அவனை ரொம்பவும் இம்பிரஸ் பண்ணிடுச்சு. என்கிட்ட சொல்லிட்டிருக்கிறான். “நீங்களும் பொருளாதார வல்லுனர் ஆகலாம்..” அப்படின்னு புத்தகம் எழுதலாம்னு சொல்லிட்டிருக்கான். உங்க போன் நம்பர் வாங்கிருக்கிறான். உங்கள்ட்ட பேச சொல்றேன் தோழர்.
24.எழுத்தாளர் எஸ்.வி.இராஜதுரை
      உங்கப் புத்தகத்துல பிரதிபலிப்புக் கோட்பாடு பற்றித் தவறாக இருக்கு. அத சரிபடுத்தனும். நல்லா எழுதியிருக்கீங்க. எளிமையா இருக்குது. உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு இருக்குது. படிக்கும்போது பல இடங்களில் நான் ரசிச்சு ரசிச்சு சிரிச்சேன். cpi, cpm யாரையும் திட்டாமல் நாசுக்காப் பேசிட்டுப்போறப் பண்பு ரொம்ப நல்லாருக்குது. நான் ரொம்பவும் ரசிச்சேன்.
25. அமுரா ராஜவேலு (B.A.english)
      கதை சொல்றதாலேயே நினைவில் நிக்குதுங்கண்ணா. ரொம்பச் சரியாகவும் நல்லாகவும் இருக்குது. கடைசில உங்க அம்மாவுக்குக் கடிதம்ன்னா Chanceசே இல்லண்ணா! கண்டிப்பாக படிக்கிறவங்கள மாத்தும். கவிதைகள் எல்லாம் ரொம்ப அருமையாக இருக்குதுண்ணா. கவிதை கட்டுரை கதை எல்லாம் ஒரே புத்தகமா இருக்கிறது புதுமையா இருக்குண்ணா. நல்லாயிருக்குது. என் நண்பர் சொன்னாரு கவிதைகளைத் தனிப் புத்தகமாகவே போட்டிருக்கலாமேன்னார். எனக்கும் சரிதான்னு பட்டுச்சு. இதுவரையும் புத்தக வடிவங்கள் அப்படித்தான் வந்திருக்குது. ஆனால் நீங்க புதுசா ஒரு முறையைச் செய்து பார்த்திருக்கீங்க. இதுவும் நல்லாத்தானே இருக்குது. உள்ளம் சுடும் கட்டுரையை யாரு படிச்சாலும் நிச்சயம் சுடும். காதல் செய்ய விரும்பு படிக்கயில் உள்ளம் சுடும் அளவுக்கு வரலையோன்னு தோணுது. ஒவ்வொரு கட்டுரையும் தனித்தனியான சின்னப் புத்தகமாக வந்தால் (10ரூ, 20ரூ வடிவில்) ரொம்ப பயனுள்ளதாக இருக்கும். எல்லாரும் எடுத்துப் படிப்பாங்க. எல்லாரிடமும் சேர்க்க முடியும். அவசியம் வெளிவரணும்ண்ணா..
26. சரண்யா (பொறியியல் பட்டம் பெற்றுவிட்டு குடும்பத்திற்குள் முடங்கியுள்ள பெண்)
      உங்க புத்தகத்தைப் படிச்சுட்டு கொடுத்திட்டேன். ரெண்டே நாளில் முடிஞ்சது. செமயா இருக்குது. முழுசும் நீங்களே எழுதியதா! என்னால் நம்பவே முடியல. சோர்வு கொஞ்சங்கூட இல்ல. ரொம்பவும் இன்ட்டரஸ்ட்டா போகுது. சின்னச்சின்ன கதை சொல்றதால அருமையா புரிஞ்சுக்க முடியுது. படிச்சதும் நமக்கே நெறயா சொல்லத் தோணுது. சொந்தமா வாங்கிறனும்னு நெனச்சுருக்கேன். அந்தஸ்த்து, அதிகாரம்னு இருக்கிறவங்க இத உடனே ஏத்துக்க மாட்டாங்க. நீங்க நெறயா எதிர்ப்ப சந்திச்சிருப்பீங்கன்னு தோணுது. நீங்க தொடர்ந்து நெறயா புத்தகம் எழுதணும்...
27.ராஜாராம் (செந்தனல் கலைக்குழு பொறுப்பாளர்)
      இந்தப் புத்தகம் ரொம்ப மொக்கையா இருக்குது.
28.ஐ.ரவிச்சந்திரன் (திண்டிவனம் விவசாயி, புதுச்சேரி பல்கலைக்கழக காவலாளி) ph- 9159606441
      நீங்களும் சமூக விஞ்ஞானி ஆகலாம் புதியவனுக்கு வாழ்த்துக்கள். நான் படித்த புத்தகங்களில் என் மனதைக் கவர்ந்த புத்தகம் இது. உழைப்பின் நேர்மை, வாழ்வின் உண்மை, எதிர்கால நடைமுறை இவற்றை எளிய மக்களுக்கும் அழகாக உணர்த்துகிறது. எல்லோரும் அவசியம் படியுங்கள். படிக்க முடியாதவர்கள் மற்றவர்களை படிக்கச் சொல்லிக் கேளுங்கள். இது கதை கவிதை அழகு மட்டும் அல்ல. வாழ்க்கையின் உண்மை. இதை படித்து செயல்பட்டால் வருங்காலம் நலம் பெறுவது உறுதி.

Monday, July 26, 2021

மனித வரலாற்றுப் படிநிலையும் பண்பாட்டு உறவுகளும்

 

மனித வரலாற்றுப் படிநிலையும்

பண்பாட்டு உறவுகளும்

(இலக்கிய அறிவியலின் விவரிப்பு)

-புதியவன்-

 

மனிதவரலாற்று படிநிலை

மனித வரலாறானது சமூக உற்பத்தி முறையியலின் அடிப்படையில் எட்டு படிநிலைகளாக அமைகிறது. சமூக உற்பத்தி முறையியல் என்பது சமூக பண்பாட்டை முழுமையாகச் சுமந்திருக்கின்ற அடித்தளமாகும். சமூகப் பண்பாடு என்பது  சமூகளாவிய நிறுவனங்களின் முழுமையாகும். (சிவக்குமார்,கே.2016:8) இம்முழுமை பற்றி பண்பாட்டு உறவுகள் என்ற தலைப்பில் அறியப்போகிறோம். சமூக உற்பத்தி முறையியலும் சமூகப் பண்பாட்டியலும் இணைந்ததே சமூக அறிவு ஆகும். இலக்கியம் படைப்பவருக்கும் படிப்பவருக்கும் சமூக அறிவு இன்றியமையாததாகும். சமூக அறிவின் முழுமை பற்றி அறிவெனும் பெரும் பசி என்ற வசன இலக்கியத்தில் வரைபடத்துடன் விவரித்துள்ளோம். இலக்கிய அறிவியல் குறித்த நமது சிந்தனைக்காக அவ்வரைபடம் இணைக்கப்படுகிறது. மேலும் சமூக உற்பத்தி முறையியல், சமூகப் பண்பாட்டியல் குறித்து அறிவெனும் பெரும் பசி என்ற கட்டுரையின் விவரிப்புகளை இலக்கிய அறிவியலின் அவசியம் கருதி புதுப்பித்தலுடன் முழுமையாகக் கையாள்கிறோம். (புதியவன் 2015:45-49)                                             

 

சமூக உற்பத்தி முறையியல் என்பது சமூகத்தில் நிகழும் சமூகப் பொருளுற்பத்தி பற்றிய அறிவாகும். அதாவது உழைப்பில் இருந்து மனிதன் தோன்றினான். உற்பத்தியில் இருந்து சமூகம் தோன்றியது. பொருளாதார உற்பத்தியே சமூகத்தின் இதயத்துடிப்பு. சமூகம் உயிர் வாழ உற்பத்தி தொடர்ந்து நிகழ வேண்டும். உற்பத்தி நின்றுவிட்டால் சமூகம் இறந்துவிடும். எனவேசமூகப் பொருளாதார உற்பத்தி எப்படி நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றதுஒரு சமூகம் எத்தகைய மனிதக் கூட்டத்தால் உற்பத்தியை நிகழ்த்திக் கொண்டிருக்கிறதுஎத்தகைய அறிவும்ஆற்றலும்அனுபவமும் நிறைந்த மனிதர்களால் உற்பத்தி நிகழ்கிறதுஎத்தகைய இயற்கை வளங்களைக் கொண்டு உற்பத்தி நிகழ்த்தப்படுகிறதுஎத்தகையக் கருவிகளும் அறிவியல் தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படுகின்றனஉழைப்பாளர்கள் உற்பத்திப் பொருட்களை எத்தகைய முறையில் பகிர்ந்துகொள்கிறார்கள்உற்பத்திச் சாதனங்கள் மீதும்உற்பத்திப் பொருட்கள் மீதும் உழைப்பவர்களுக்கு எத்தகைய உரிமை நிலவுகிறதுசமூக உற்பத்தியில் நிகழ்கின்ற உடன்பாடுகளும் முரண்பாடுகளும் எத்தகைய விளைவுகளை உருவாக்கப் போகின்றனஇவற்றைப் பற்றிய அறிவே சமூக உற்பத்தி முறையியல் ஆகும். 

இந்தியச் சூழலில் சாதியக் குலத்தொழில் பற்றிய அறிவும் சமூக உற்பத்தி முறையில் இன்றியமையாததாக அமைந்துள்ளது என்பதாக நான் வரைபடத்தில் விளக்கியிருப்பது தவறாகும். இந்தியச் சூழலில்   சமூக உற்பத்தி முறையைத் தாமதப்படுத்தியதில் சாதியப் பண்பாட்டிற்கு தனித்துவம் இருக்கின்றது. எனினும், சாதி என்பது  பண்பாடே அல்லாமல் உற்பத்திமுறையாகாது. (Social Production Methodology) 

மேற்கண்டவைகள் அனைத்தும் மனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவை. மனித சிந்தனையின் திட்டமிடலுக்கு உட்படாதவை. அதனால் மனிதர்களால் இந்த உற்பத்தி முறைகளைப் பண்படுத்த முடியாது. மனிதப் பண்பாட்டு முயற்சிகள் அனைத்தும் உற்பத்தி முறைகளின் இயக்கத்தை தாமதிக்கவோ விரைவிக்கவோ செய்கின்றன. ஆனால், தீர்மானிப்பதில்லை. மாறாக, உற்பத்தி முறைகளை அடிப்படையாகக் கொண்டே மனிதர்களின் பண்பாடு தீர்மானிக்கப்படுகின்றது. ஏனெனில், மனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட புறநிலை உண்மைகளாக இவை இயங்கிக்கொண்டு இருக்கின்றன. எனவேதான் உற்பத்திமுறை என்பது சமூகத்தின் பண்பாடல்ல என்று சமூகவிஞ்ஞானம் விளக்குகின்றது. மேலும், உற்பத்தி முறையையே சமூகத்தின் அடிக்கட்டுமானம் என்பதை உறுதிபடுத்துகின்றது. (சிவக்குமார்,கே.2016:8)

 

இவற்றின் அடிப்படையிலேயே மனித சமூகத்தின் முழுமையான வரலாறு கட்டமைந்துள்ளது. சமூக உற்பத்தி முறையியலின் வளர்ச்சி மனிதகுல வரலாற்றை எட்டு நிலைகளாகக் கட்டமைத்துள்ளது. முனைவர் கே. சிவக்குமார் அவர்களது ஆய்வேட்டில் குறிப்பிடப்படுகின்ற சமூகப் பொருளாதார படிமலர்ச்சியின் ஆறு கட்டங்களும் மேலும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு இக்கட்டுரையில் மனிதகுல வரலாற்றின் எட்டு நிலைகளாக விளக்கம் பெறுகின்றது (சிவக்குமார்,கே.2016:223)

சமூக உற்பத்திமுறையியலின் வளர்ச்சி பற்றிய துல்லியமானக் குறிப்புகளை அறிவதற்கு 

புராதனம் முதல் பொதுவுடைமை வரை – புதியவன்.2019 என்ற வசன இலக்கியத்தை அணுகவும். https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5473:2019-11-03-14-08-15&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82 

1.காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகம்

2.வேட்டை நாகரிகம் 

3.கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம்

4.விவசாய நாகரிகம் 

5.உற்பத்தியின் மீதான வணிக நாகரிகம் 

6.வணிக இலாபத்திற்காக உற்பத்தி செய்தல் 

7.நிதி மூலதனப் பிரிவு தோன்றி சமூகஉற்பத்தி மீது ஆதிக்கம்  செய்தல் 

8.மக்கள் தலைமையின் கீழ் சமூகஉற்பத்தியைக் கட்டமைத்தல்



மனித வரலாற்றுப் படிநிலையின் சமூக வடிவம் குறித்த அட்டவணை படம்

 

 

மனித வரலாற்றுப் படிநிலை (8)

 

 

சமூக வடிவம்

 

தாய்தலைமை / தந்தையதிகாரம்

1.காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகம்

ஆதிப் பொதுவுடைமை சமூகம்

தாய் தலைமை சமூகம்

2.வேட்டை நாகரிகம்

ஆதிப் பொதுவுடைமை சமூகம்

தாய் தலைமை சமூகம்

3.கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம்

ஆண்டான் அடிமை சமூகம்

தந்தை அதிகார சமூகம்

4.விவசாய நாகரிகம்

நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை சமூகம்

தந்தை அதிகார சமூகம்

5.உற்பத்தி மீதான வணிக நாகரிகம்

நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை சமூகம்

தந்தை அதிகார சமூகம்

6.வணிக இலாபத்திற்காக உற்பத்தி செய்தல்

முதலாளித்துவ சமூகம்

தந்தை அதிகார சமூகம்

7.நிதி மூலதன பிரிவு தோன்றி சமூக உற்பத்தி மீது ஆதிக்கம் செய்தல்

முதலாளித்துவ சமூகம்

தந்தை அதிகார சமூகம்

8. மக்கள் தலைமையின் கீழ் சமூக உற்பத்தியைக் கட்டமைத்தல்

சோசலிச சமூகம்

(பொதுவுடைமை சமூகம் உருவாகுவதற்கு முன்நிபந்தனையான சமூக வடிவம்)

ஏற்றத்தாழ்வுகள் மதிப்பிழந்த சமூகம்

 

1.1.காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)

காடுகளில் வாழ்ந்த மனித மூதாதையர்களிடமிருந்து மனிதர்கள் பரிணமித்தார்கள். மனிதர்களின் தாய் கூட்டத்தை வழநடத்தினாள். ஆண்கள் பெண்கள் அனைவரும் பாகுபாடின்றி உழைத்தார்கள். உழைப்பு என்பது பெரும்பாலும் பொருள்களைப் புதிதாக உற்பத்தி செய்கின்ற நடவடிக்கைகளாக அமையவில்லை. காடுகளில் கிடைக்கின்ற காய், கனி, கொட்டை, கிழங்கு, இலை, தேன், இறைச்சி போன்ற பொருட்களை சேகரிக்கின்ற நடவடிக்கைகளாகவே அமைந்தன. வேட்டைக் கருவிகளைக் கண்டடையாதக் காரணத்தால் பெரும்பாலும் வேட்டையாடுவதில் ஈடுபடவில்லை. சிறிய ஆயுதங்களைப் பயன்படுத்தி மிக எளிய உயிரினங்களைக் கொன்று சேகரித்திருக்கலாம். ஆனால் இத்தகைய வேட்டை துணை தொழிலாக மட்டுமே இருந்திருக்கின்றது. ஏனெனில் கூட்டத்தில் அனைவரின் தேவைகளையும் நிறைவு செய்கின்ற ஆற்றலாக வேட்டைத் தொழில் தொடங்கியிருக்கவில்லை. ஆற்றலுள்ள வேட்டைக் கருவிகளைக் கண்டடைய பல தலைமுறை காலங்கள் பரிணமிக்க வேண்டியிருந்தன. அதுவரை காடு சார்ந்த பொருட்களைச் சேகரிப்பதே தாய்தலைமை சமூகத்தின் சாத்தியமான நடவடிக்கையாக அமைந்தது. இலை தழைகள், நார்கள், மரப்பட்டைகள் போன்ற பொருட்களால் உருவாக்கப்பட்ட சேகரிப்புக் கருவிகளே மனிதர்கள் பயன்படுத்திய ஆரம்பகாலக் கருவிகளாக இருந்திருக்க முடியும். இதற்கான ஆதாரங்களை தொல்லியல் துறையில் பெற முடியாதது வரலாற்றின் பலவீனமாகவே உணர முடிகின்றது. ஏனெனில் கற்கருவிகளைப்போல காலத்தால் நீடித்திருக்கும் ஆற்றலை இத்தகைய சேகரிப்புக் கருவிகள் பெற்றிருக்கவில்லை.

மறுஉற்பத்தியைச் சுட்டும் கருத்தாக்கம் பெண்பால் தொழிற் பாகுபாட்டில் காணப்படுவதை புரோவர் இனங்காண்கிறார். பெண்கள் செய்யும் புழங்கு பொருட்கள் பாய், கூடை, முறம், ஓலைப்பெட்டி போன்றவை நீண்ட காலம் உழைக்காதவை. (பக்தவத்சலபாரதி.2005:347)

நவீன காலத்திலும்கூட பெரும்பாலும் பெண்கள் உற்பத்தி செய்கின்ற மூங்கில் கூடை, நார் பை, முறம் போன்ற பொருட்கள் காலத்தால் நீடிக்காமல் விரைந்து அழிந்துவிடுகின்றன. அவை மீண்டும் மீண்டும் மறுஉற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களாகவே இருந்திருக்கின்றன. எனவே வரலாற்று அறிஞர்களுக்கு தாய்தலைமை சமூகத்தின் காடுசார்ந்த பொருட்சேகரிப்புக் கருவிகள்  கிடைக்காத காரணத்தினால், மனித வரலாறை கற்கருவிகளின் வேட்டை நாகரிகத்திலிருந்து தொடங்குகிறார்கள். இவர்களின் இவ்விளக்கங்களை வரலாற்று விடுபடுதலாகவே கருத வேண்டியுள்ளது. ஏனெனில் மனித இனம் தோன்றும்போது வேட்டை உயிரினமாக தோன்றியிருக்கவில்லை.

ஆற்றலுள்ள வேட்டைக் கருவிகளைக் கண்டடையும்வரை மனிதர்கள் தாயின் அரவணைப்பில் காடுசார்ந்த பொருட்சேகரிப்பில் ஈடுபட்டு வாழ்ந்துள்ளார்கள். தாய் தலைமையின் இயற்கையால் மனித வாழ்க்கை வழிநடத்தப்பட்டுள்ளது. வேட்டை நாகரிகம் தோன்றி கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகமாக வளர்ந்து தந்தையதிகாரச் சமூகமாக கட்டமையும்வரை தாய்தலைமை சமூகமே மனித வரலாற்றுக் காலத்தில் பெரும்பகுதியாக இருந்துள்ளது. தாய்தலைமை சமூகம் பற்றி இரண்டு வசன இலக்கியங்களில் விவரித்துள்ளோம். 

1.காதல் வரலாறு (புதியவன்.மே 2016:20-25)

2.காதலிலிருந்து கடவுள் வரை. (புதியவன்.டிசம்பர்2016:29-37)

 

தாய்தலைமை சமூகத்தின் வாழ்வியலையும் தந்தை அதிகாரச் சமூகம் தோன்றியக் காரணிகளையும் இக்கட்டுரைகளில்  உணரலாம். மேலும், நரிக்குறவர்களின் தெய்வ வழிபாடு பற்றிய கதைகள் என்ற எமது வசன இலக்கியத்தில் காளி வழிபாடு குறித்த கதையையும் அக்கதை குறித்த கருத்தாடலையும் பரிசீலிக்கவும். கருத்தாடலை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன். 

     இந்த கதையை எருமை பலியிடும் சடங்கிற்கு ஒரு வரலாறாக சொல்கிறார்கள். ஆனால், காளி கதையோ எருமை பலியிடும் சடங்கின் வரலாறை உணர்த்தவில்லை. மாறாக, இந்தக் கதை நரிக்குறவர்களின் வரலாற்றுத் தொன்மையை உணர்த்துகின்றது. வாய்மொழி இலக்கியங்களை வரலாற்று ஆவணங்களாகக் கொண்டு வரலாறை கண்டறிதல் என்ற கோட்பாட்டின்படி இக்கதையில் வெளிப்படுகின்ற நரிக்குறவர்களது வரலாற்றுத் தொன்மையை அறியலாம்.

 

         கூட்டத்தின் அனைவரின் பெயரும் காளி என்ற பெண் பால் பெயரால் சுட்டப்படுகின்றது. ஆண், பெண் என்ற பாலின வேறுபாடு பற்றிய கருத்தாக்கங்கள் தோன்றாத தாய் தலைமையின் காலத்தைப் பிரதிபலிக்கின்றது. காளி என்ற தாயின் பெயரால் மட்டுமே கூட்டம் அடையாளப்படுகின்றது. எனவே, இக்கதை தாய்தலைமை சமூகத்தின் தொன்மையைப் பிரதிபலிக்கின்றது. 

 

      எருமைகள் மேய்ந்துகொண்டிருக்கும் தோப்பிலிருந்து பழங்களை மூட்டை கட்டி சேகரிக்கிறார்கள். மூட்டையாகப் பயன்படுத்தப்பட்ட பொருள் எது என்பது விளக்கம் பெறவில்லை. ஆனால், அது காடு சார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகத்தின் தொன்மையான சேகரிப்பு கருவிகளில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். காளி கூட்டத்தார் பழங்களைச் சேகரித்த நடவடிக்கையானது தாய் தலைமை சமூகத்தின் தொன்மையாகிய காடு சார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகத்தையே பிரதிபலிக்கின்றது.

 

        தற்காப்பிற்காகவும் பதில் தாக்குதலுக்காகவும் திரிசூலத்தால் எருமையைக் கொல்கிறார்கள். இதனைத் திட்டமிட்ட வேட்டை நடவடிக்கையாகக் கருத இயலாது. மேலும், திரிசூலம் என்பது வேட்டை கருவியும் அல்ல. மானிடவியலார் விளக்கப்படி திரிசூலம் என்பது கிழங்குகளைத் தோண்டி எடுப்பதற்கான கருவியாகும். எனவே, திரிசூலம் என்ற இக்கருவி காளி கூட்டத்தாரை வேட்டை நாகரிகத்திற்கு உரியவர்களாக உணர்த்தவில்லை. ஏனெனில், வேட்டை முதன்மை தொழிலாக அல்லாமல் துணைமை தொழிலாக மட்டுமே அறிய முடிகின்றது. காளி கூட்டத்தாரின் நாகரிகமானது விவசாயமும் கால்நடை வளர்ப்பும் ஆரம்ப நிலையிலிருந்த தாய்தலைமை சமூகத்தின் நாகரிகமாகும். காடு சார்ந்த பொருள் சேகரிப்பே காளி கூட்டத்தாரின் முதன்மை பொருளாதாரமாக அறிய முடிகின்றது.  தாய்தலைமை சமூகத்தின் பிரதிநிதிகளாகவும், காடு சார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகத்தின் பிரதிநிதிகளாகவும் காளி கூட்டத்தார் திகழ்கின்றனர் என்பது நிரூபனமாகின்றது. 

          காளி கூட்டத்தாரின் சந்ததிகளாகிய நரிக்குறவர்களின் தொன்மையானது மனித வரலாற்றின் தொடக்கத்தோடு தொடர்புறுகின்றது. அதாவது, காடு சார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகத்தின் தாய்தலைமையைப் போற்றும் பழங்குடிகளாக நரிக்குறவர்கள் சமகாலத்தில் வாழ்வதே அத்தகைய வரலாற்றுத் தொடர்பாகும்.”

(https://pazhaiyavan.blogspot.com/2020/05/blog-post_93.html

நரிக்குறவர்களது தெய்வ வழிபாடு பற்றிய கதைகள்)

 

காடு சார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகம் என்பது சமூகவிஞ்ஞானம் விளக்கும் சமூக வரலாற்றில் ஆதிப்பொதுவுடைமை சமூகமாக விளக்கம் பெறுகின்றது. (புதியவன்.நவ 3,2019)

 

1.2.வேட்டை நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)

 

        காடுசார்ந்த பொருள் சேகரிப்பில் வாழ்ந்த மனிதர்கள் படிப்படியாக இயற்கையில் கிடைத்த கற்களை தற்காப்பிற்கான கருவிகளாகவும் வேட்டையாடுவதற்கான ஆயுதங்களாகவும் பயன்படுத்தும் அறிவைக் கண்டடைந்தனர்.  கருவிகளைப் பற்றிய அறிவு மனிதர்களின் செயல்களைத் தொடர்ந்து செதுக்கியதால் கருவிகள் படிப்படியாக நவீனமடைந்தன.  வேல், வில், அம்பு போன்ற நவீன வேட்டைக் கருவிகளால் வேட்டையாடுதல் முதன்மையானத் தொழிலாக உருமாறத் தொடங்கியது. மனிதர்கள் ஒன்றுபட்டு திட்டமிட்டு வேட்டையாடும் பக்குவத்தை அடைந்தார்கள். மனிதர்களின் தாய் இயல்பாக வழிநடத்தினாள். வேட்டையில் கிடைத்தப் பொருட்களைத் தாயின் அரவணைப்புடன் பரிமாறிக்கொண்டார்கள். வேட்டை முதன்மைத் தொழிலானதால் காடுசார்ந்த பொருள் சேகரிப்பு துணைத் தொழிலாக உருமாறியிருந்தது. (புதியவன் 2017:31-32) 

வேட்டை நாகரிகம் என்பது சமூகவிஞ்ஞானம் விளக்கும் சமூக வரலாற்றில் ஆதிப்பொதுவுடைமை சமூகமாக விளக்கம் பெறுகின்றது.(புதியவன்.நவ 3,2019)

 

1.3.கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)

        வேட்டை நாகரிகத்தின் விளைவாக கால்நடை வளர்ப்பு முறை தோன்றியது. காடுசார்ந்த பொருள் சேகரிப்பிலும் வேட்டையாடுதலிலும் மனிதர்கள்  தங்களது  சமூகத்தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில்  மேன்மையடைந்தனர். ஆனால், சமூகச் சொத்துக்கள் உருவாக்கம் பெறவில்லை. அதாவது, தேவைக்கு அதிகமானப் பொருட்களைச் சேகரித்துக் குவிக்கின்ற நிலைமை உருவாகவில்லை. கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்தில் இத்தகைய நிலைமை மாறத்தொடங்கியது.

வேட்டையாடப்பட்ட மிருகங்களின் குட்டிகள் மனிதர்களின் கால்களைச் சுற்றிவந்த அனுபவங்களில் மந்தை தொழில் உருவெடுக்கத் தொடங்கியது. குட்டிகளை வளர்த்து மந்தையாக பராமரிக்கும் அறிவை படிப்படியாக கண்டடைந்தார்கள். கால்நடை வளர்ப்பு முதன்மைத் தொழிலாக உருவெடுத்ததால் வேட்டையாடுதலும் காடுசார்ந்த பொருள் சேகரிப்பும் துணை தொழில்களாயின. உணவிற்காகவும் வேட்டைக்காகவும் மனிதர்கள் காடுகளில் ஓடித்திரிய வேண்டிய அவசியம் குறைந்து போயிற்று. தேவைக்கு அதிகமான இறைச்சிகள் கால்நடை மந்தைகளாகக் குவியத் தொடங்கின. கால்நடை மந்தைகள் சமூகச் சொத்துக்களாக உருவெடுத்தன.

 சமூகச் சொத்துக்களைத் தாயின் தலைமைப் பண்பே இயல்பாக வழிநடத்தியது. கால்நடைகளைப் பராமரிப்பதற்கு மேய்ச்சல் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார்கள். மனிதர்கள் தங்கள் கால்நடைகளுடன் காடுகளை வலம் வரத் தொடங்கினார்கள். சமூகச் சொத்துக்கள் உழைப்பை எளிமைபடுத்தியதால் ஓய்வுக்கால உணர்வு உரமேறியிருந்தது. ஓய்வுக்காலம் மனிதர்களின் புதிய தேடல்களுக்கு வழியமைத்தது.

தேடல்களுடன் மேய்ச்சலில் ஈடுபட்ட மனிதர்களுக்கு துல்லியமான சிந்தனைகளும் அடர்த்தியானக் கற்பனைகளும் விரிவடைந்தன. பயணங்களால் மனித எண்ணங்களும் உணர்வுகளும் உரமேறிக்கொண்டிருந்தன.  இரத்தப் போக்கு காலங்களிலும், கற்பக் காலங்களிலும் மேய்ச்சல் பயணங்களில் தொடர்ந்து ஈடுபட இயலாத பெண்கள் மேய்ச்சலுக்கு மையமாக குடியமர்ந்து வாழத் தொடங்கினார்கள். இத்தகைய குடியமர்வு பெண்களின் மேய்ச்சல் உழைப்பிற்கு தற்காலிக ஓய்வாக திகழ்ந்தது. குடியமர்தலின் விளைவும் ஓய்வும் சுற்றுச் சூழலில் நிகழ்கின்ற அன்றாட மாற்றங்களை உணர வாய்ப்பாக அமைந்தது. மண்ணில் தலைகாட்டி வளர்கின்ற இளம் பயிர்களைக் கண்டுணர்ந்தனர். தாவரங்களின் வளர்ச்சி பற்றிய துல்லியமான அறிவைக் கண்டடைந்தனர். கால்நடைகளுக்குத் தேவையானப் பயிர்களை விதைத்து பயிரிடும் அறிவைக் கண்டடைந்தனர். தாய்தலைமை சமூகத்தின் மக்களால் மேய்ச்சலுக்கு பயன்படும் வகையிலான தொடக்கநிலை வேளாண்மை மேற்கொள்ளப்பட்டது. கால்நடை மேய்ச்சலின் வளர்ச்சியும், தொடக்கநிலை வேளாண்மையும் தாய்தலைமை சமூகத்தின் வெளிப்பாடாகத் திகழ்ந்தன. 

மேய்ச்சலுக்கு மையமான இடத்தில் குடியேறி நிலைத்து வாழ்வது வழக்கமாகியது. குடியமர்ந்த இடத்தை மையமாகக் கொண்டு மேய்ச்சலுக்கான பயிர் தொழிலிலும், மேய்ச்சல் தொழிலிலும், மந்தை  பராமரிப்பிலும் ஈடுபட்டனர். காடுசார்ந்த பொருள் சேகரிப்பும் வேட்டையும் முக்கியமற்றுப் போயின. கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம் நிலைபெறத் தொடங்கியது.  இந்த நாகரிக காலத்தில் ஏற்பட்டுள்ள சமூகச் சொத்துக்களின் அதிகரிப்பும் பாலுறவு உரிமைகளில் நிகழ்ந்துள்ள மாற்றங்களும் தந்தையதிகாரச் சமூகம் உருவெடுக்க வழியமைத்தன. (புதியவன்.மே2016:22)

வரைமுறையற்ற பாலுறவு உரிமையைக் கடந்து தாய் பிள்ளை மீதான பாலுறவு உரிமை தடை, உடன் பிறந்தவர் முதல் தூரத்து சகோதர சகோதரிகள் வரையிலான பாலுறவு உரிமை தடை போன்ற தடைகளைக் கடந்து, இருவேறு கூட்டத்து மனிதர்கள் பாலுறவு உரிமைகளில் ஈடுபடத் தொடங்கினர்.இதற்கான வரலாற்றுக் காரணங்களை காதல் வரலாறு  என்ற வசன இலக்கியத்தில் விவரித்துள்ளோம். (புதியவன்.மே 2016:20-25)

 இரு வேறு கூட்டத்து மனிதர்களுடனான பாலுறவு உரிமையால் ஒரு சமூகத்தின் சொத்துக்களை மறு சமூகத்தின் மனிதர்கள் உரிமை கொண்டாடுவதற்கான வாய்ப்பினைப் பெற்றார்கள். தாயின் தலைமைப்பண்பு இரு கூட்டத்தாரையும் ஒரே சமூகமாக அரவணைத்தது. ஆனால் சமூகச் சொத்துக்கள் மீதான புதிய மனிதர்களின் உரிமையை ஆண்கள் வெறுத்தார்கள். தாய்தலைமையின் பராமரிப்பிலிருந்து சமூகச் சொத்துக்களைப் பறிக்க முயன்றார்கள். அவர்களின் முயற்சிக்கு இரண்டு கண்டுபிடிப்புகளை ஆதரவாக்கினார்கள்.

1.சமூகச் சொத்துக்கள் ஆண்களின் அதிகபட்ச உழைப்பால் உருவாகின்றன. பெண்களின் சமூக உழைப்பு குறைந்தபட்சமாக உள்ளது. ஏனெனில் ரத்தப் போக்கு காலத்திலும் கற்பக் காலத்திலும் உழைப்பில் ஈடுபட முடிவதில்லை. ஆகவே ஆண்களே சமூகச் சொத்துக்களுக்குத் தலைமையேற்க வேண்டும். (சிவக்குமார்,கே.2016:84)

2.மனிதர்களைப் பெற்றெடுக்கும் பெண்கள் இனப்பெருக்க தெய்வத்தின் அருளால் குழந்தைகளைப் பெறுவது இல்லை. மாறாக ஆணுடனான பாலுறவு உரிமையால் மட்டுமே குழந்தைகளைப் பெறுகிறார்கள். விதை இல்லாமல் பயிர் இல்லை என்பதுபோல ஆண்கள் விதைக்காமல் பெண்களுக்கு குழந்தைகள் இல்லை. எனவே சமூக வாரிசுகளாகக் குழ்ந்தைகளைப் பெற்றுத்தந்த பெண்கள் கொண்டாட்டத்திற்கு உரியவர்கள் அல்ல என்பதாக வாதிடுகிறார்கள். (புதியவன்.டிசம்பர்2016:35)

 

    தாய் தலைமையின் மீது ஆண்கள்  வெறுப்பை தொடர்ந்து உமிழ்ந்தார்கள். உமிழ்தலிலிருந்து ஆணதிகாரச் சமூகம் உருவெடுக்கத்   தொடங்கியது. தாய்க்கு மறுப்பாக தந்தை அடையாளத்தை ஏற்றுக்கொண்டது. தாய்தலைமையின் சமூகச் சொத்துக்கள் தந்தையதிகாரத்தின் தனிச்சொத்துக்களாக அங்கிகாரம் பெற்றன. சொத்தாதிக்கமுள்ள ஆண்களுக்கு சொத்தாதிக்கமற்ற அனைவரும் அடிமைகளாகப் பணிந்தனர். பெண்களே முதன்மை அடிமைகளாகப் பணிந்தார்கள். தாய்தலைமைப் பண்பிலிருந்து படிப்படியாக பாலுறவு அடிமையாகவும் பொருளாதார அடிமையாகவும் முடங்கிப்போயினர். தாய்தலைமையின் வீழ்ச்சியும் தந்தையதிகாரத்தின் நீட்சியும் கால்நடை மந்தைவளர்ப்பு நாகரிகத்தில் தவிர்க்க முடியாத அநாகரிகங்களாக அடையாளம் பெற்றன. கால்நடை மேய்ப்பாளர்களின் அரசராகிய செங்கோல் அரசர்கள் சமூகத்தை ஆட்சி செய்தனர். வரலாற்றின் புதிய கட்டங்களுக்கும் தந்தை அதிகாரமே முகமாக நிலைக்கத் தொடங்கியது. 

கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம் என்பது சமூகவிஞ்ஞானம் விளக்கும் சமூக வரலாற்றில் ஆண்டான் அடிமை சமூகமாக விளக்கம் பெறுகின்றது.(புதியவன்.நவ 3,2019)

 

1.4.விவசாய நாகரிகம்

        மந்தை வளர்ப்பில் தோன்றிய தந்தையதிகாரச் சமூகம், தனது ஆணாதிக்கப் பண்புகளால் ஒட்டுமொத்தப் பெண் சமூகத்தையும் நிலைத்த அடிமைகளாக உருமாற்றியிருந்தது. பெண்மையின் சகமனிதத்துவம் மூவகை உரிமை இழப்புக்களால் கருவறுக்கப்பட்டிருந்தது. ஆணின் சொத்தாக முடங்கியதில் சுயப் பொருளாதார உரிமையை பறிகொடுத்தனர். ஆணின் பாலிச்சைப் பொருளாக ஒடுங்கியதில் பாலுறவிற்கான சுய தேர்வு உரிமையை இழந்தனர். ஆணாதிக்கக் கருத்தாக்கங்களால்  சுயசிந்தனை உரிமைகள் அடக்கம் செய்யப்பட்டன.

பெண் சமூகத்தின் உடலுக்கும் மூளைக்கும் உடைக்க முடியாதப் பெரும் பூட்டை தந்தையதிகாரம் பூட்டிற்று. தந்தையதிகாரத்தின் வேர்களில் முறிக்கப்பட்ட தாய்தலைமை மட்கிப்போனது. ஆணதிகாரச் சமூகத்தின் அடிமைச் சொத்துக்களாக பெண்கள் நிலைத்துவிட்டார்கள். பெண்களின் சமூகச்சிந்தனை தந்தையதிகார எல்லைகளுக்குள் வட்டமிடப் பழகியது. ஆணின் இச்சைக்கு மசிகின்ற அலங்கார பொம்மையாகவும், வாரிசை பெற்றுத்தருபவளாகவும், ஆணின் குடும்பத்திற்காக ஓய்வின்றி உழைப்பவளாகவும் பெண்கள் வாழ வேண்டும். இத்தகைய வாழ்க்கை முறையே பெண்ணிற்கான சமூக மரியாதையாக அங்கீகாரம் பெற்றன. 

 சமூகத்தின் சரிபாதிப் பெண்களின் உணர்வும் அறிவும் செயலும் முடக்கப்பட்டன. மறுபாதி ஆண்களுக்கோ பிரபஞ்சம் தழுவிய அளவில் உந்தப்பட்டன.

இயற்கை, சமூகம், பண்பாடு, தத்துவம், சொத்தாதிக்கம், போர், புதிய கருவிகள், புதிய ஆயுதங்கள், கண்டுபிடித்தல், கண்டு படைத்தல், முக்காலச் சிந்தனை என ஆண்களின் வாழ்க்கை வட்டம் விரிவடையத் தொடங்கின. பெண்ணடிமைத்தனம் என்ற அநாகரிகத்தைப் பற்றிக்கொண்டு தந்தையதிகாரச் சமூகம் முன்னேறிக்கொண்டே சென்றது. கால்நடைகளின் மேய்ச்சலுக்கான விவசாயத் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்தன. புதிய உலோகங்கள், இரும்புக் கருவிகள், புதிய கைவினைத் தொழில்கள் போன்ற கண்டுபிடிப்புகள் மேய்ச்சலுக்கான விவசாய தொழில்நுட்பத்தை படிப்படியாக பரிணமிக்கச் செய்தன.

மேய்ச்சலுக்கான விவசாய தொழில்நுட்பங்களின் பரிணமிப்பு மனித உணவுத் தேவைகளுக்கான விவசாயத் தொழில்நுட்பங்களாக நிலைபெற தொடங்கின. விவசாய நிலங்களே முதன்மைச் சொத்துக்களாகக் கருதப்பட்டன. செங்கோல் அரசர்களிடமிருந்த அரசு படிப்படியாக வேளாண் விவசாயத்தை ஆட்சி செய்கின்ற  நில வேந்தர்களின் அரசாக நிலைபெறத் தொடங்கியது.(புதியவன்.2017:31) 

விவசாய நாகரிகம் என்பது சமூகவிஞ்ஞானம் விளக்கும் சமூக வரலாற்றில் நிலப்பிரபுத்துவ பண்ணையடிமை சமூகமாக விளக்கம் பெறுகின்றது.(புதியவன்.நவ 3,2019)

 

 

1.5.உற்பத்தியின் மீதாக வணிக நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)

 

        தந்தையதிகாரச் சமூகத்தில் சொத்தாதிக்க ஆண்களின் சொத்துக்கள் பெருகியிருந்தன. விவசாய கைவினைப் பொருட்கள் சொத்துக்களாகக் குவியத் தொடங்கின. பயண அனுபவங்களில் முதிர்ச்சி பெற்ற சொத்தாதிக்க ஆண்கள்,  வணிக நடவடிக்கையைக் கண்டடைந்தனர். பொருள்களின் துணை மதிப்பாக பணத்தைக் கண்டறிந்தனர். காடுசார்ந்த பொருட்களும், கால்நடை மந்தைகளும், விவசாயப் பொருட்களும், கைவினைப் பொருட்களும் பணத்தின் துணையுடன் பரிமாற்றம் பெற்றன. பொருள் பரிமாற்றத்தை தொழிலாக வளர்த்தவர்கள் வணிகர்களாயினர். உற்பத்தியானப் பொருட்களை வணிகர்கள், வணிகத்திற்காகப் பெற்று வணிகத்திற்காக விற்றார்கள். சமூகத் தேவையின் அடிப்படையில் உற்பத்தியான பொருட்களைப் பரிமாறுவதற்கு வணிக நடவடிக்கைகள் இன்றியமையாததாக அமைந்தன. மேலும், நிலப்பிரபுக்களின் சொத்தாதிக்கத்திற்கு போட்டியாக வணிகக் குழுக்களின் சொத்தாதிக்கம் வளர்ச்சியடைந்தன. சமூகளாவிய நிலையில் வணிக நாகரிகம் விரிவடைந்தது.(புதியவன்.2017:31) 

உற்பத்தி மீதான வணிக நாகரிகம் என்பது சமூகவிஞ்ஞானம் விளக்கும் சமூக வரலாற்றில் நிலப்பிரபுத்துவ பண்ணையடிமை சமூகமாக விளக்கம் பெறுகின்றது.(புதியவன்.நவ 3,2019)

 

1.6.வணிக இலாபத்திற்காக உற்பத்தி செய்தல்

        விவசாய நாகரிகத்தின் சொத்திக்கத்தைவிட வணிக நாகரிகத்தின் சொத்தாதிக்கம் வலிமை பெற்றிருந்தது. விவசாய நிலங்களை சொத்தாக வைத்திருப்பதைவிட அவற்றில் உற்பத்தியாகின்ற பொருட்களை வாங்கி விற்பதில் கிடைக்கும் இலாபங்கள் வலிமையான சொத்தாதிக்கமாக உருமாறியிருந்தன. சமூகத் தேவையிலான பொருட்கள் வணிக இலாபத்திற்காகவே திட்டமிட்டு உற்பத்தி செய்யப்பட்டன. வணிகக் குழுக்கள் நேரடியாக பொருளுற்பத்தியில் ஈடுபடத் தொடங்கின. சமூகத் தேவையிலான பொருட்கள் சரக்குகளாக உற்பத்தி செய்யப்பட்டு பொருட்களாக விற்கப்பட்டன. பொருட்களை இலாபத்திற்காகவே உற்பத்தி செய்தார்கள். இலாபத்திற்காகவே வாங்கவும் விற்கவும் செய்தார்கள். நேரடி பயன்பாட்டிற்காக அல்லாமல் இலாபத்திற்காக உற்பத்தியாவதும் வாங்கப்படுவதுவும் சரக்குகளே ஆகும். நேரடி பயன்பாட்டிற்கு உட்படும்போதே சரக்குகள் பொருள்களின் தன்மையை அடைகின்றன. பொருள்களின் துணை மதிப்பாக உருப்பெற்ற பணம் சரக்குகளின் முதல் மதிப்பாக நிலைப்பெற்றுவிட்டது. பொருளுக்காகப் பணம் என்ற நிலை மாறி பணத்திற்காகப் பொருள் என்ற நிலை உருவெடுத்திருந்தது. வணிக இலாபத்திற்காகவே சமூகத்திற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் உற்பத்தியாகின. சமூகப் பொருளுற்பத்தியைக் குவிப்பதற்காக அறிவியல் கண்டுபிடிப்புகளும், நவீன இயந்திரத் தொழில்நுட்பங்களும் முடுக்கிவிடப்பட்டன. ஏராளமான வணிகக் குழுக்கள் போட்டிபோட்டுக்கொண்டு இலாப வேட்டையில் ஈடுபட்டன. மனிதர்களின் சமூகத் தேவையை புறக்கணித்துவிட்டு, இலாபத்திற்காக சமூகப் பொருளுற்பத்தியைத் தொடங்கிய கொடும் நாகரிக காலம் இக்காலக்கட்டத்தில்தான் நிலைபெறத் தொடங்கியது. .(புதியவன்.2017:31-32)

இந்திய சமூகத்தில் இக்காலக்கட்டம் உருவெடுக்காமல் தடுக்கப்பட்டது. வணிக நாகரிகத்தின் எழுச்சியை முடக்கி, விவசாய நாகரிகத்தின் நில வேந்தர்களே சமூக அதிகாரத்தில் நீடித்திருந்தார்கள். நில வேந்தர்களுக்கு ஆதரவாக ஆரியர்கள் உருவாக்கிய அநாகரிகமான வர்ணாசிரமக் கோட்பாடே இதனை சாதித்தது. வர்ண சாதிப் படிநிலைகளே இந்திய சமூகத்தின் வணிக எழுச்சியைத் தடுத்து முடக்கியது. இந்த வரலாறை இரண்டு வசன இலக்கியங்களில் விவரித்துள்ளோம். 

 

1. இந்தியாவில் சாதிகளின் சதி (புதியவன்.2019.) 

https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5435:2019-10-19-12-03-36&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82

 

வணிக இலாபத்திற்காகவே உற்பத்தி செய்தல் என்பது சமூகவிஞ்ஞானம் விளக்கும் சமூக வரலாற்றில் முதலாளித்துவ சமூகமாக விளக்கம் பெறுகின்றது. (புதியவன்.நவ 3,2019)

 

1.7.நிதி மூலதனப் பிரிவு தோன்றி சமூகஉற்பத்தி மீது ஆதிக்கம்  செய்தல்

          நிதி மூலதனப் பிரிவு என்பது வணிக உற்பத்தியின் முதிர்ந்த பருவம் ஆகும். இந்தப் பருவத்தில் வணிகமானது ஒட்டுமொத்த சமூகத்தையும் அதிகாரம் செய்கின்ற இலாப வெறிபிடித்த நிறுவனங்களின் இயக்கமாகக் கட்டமைகின்றது. இத்தகைய இயக்கமானது சமூக அதிகாரத்தின் மூன்று மையங்களின் ஒன்றிணைவாகும். 1.தொழிலுக்கான மூலதனம் 2.வங்கி 3.அரசு. இந்த மூன்றும் ஒன்றிணைந்த வடிவமே இலாபவெறி பிடித்த நிறுவனங்களின் இயக்கமாகும். தனது இலாப வெறிக்காக எத்தகைய அழிவையும் முன்னின்று நிகழ்த்துகின்றன. சமூகத்தேவைகளைப் புறக்கணித்து இலாப வெறியின் அடிப்படையில் மட்டுமே சமூக பொருளுற்பத்தியை நிகழ்த்துகின்றன.

       “மூலதனம் இலாபமின்மையை அல்லது குறைந்த இலாபம் என்ற நிலையை ஒதுக்குகிறது. போதுமான இலாபம் கிடைத்தால் மூலதனம் மிகவும் துணிவு பெறுகிறது. 10 சதவீதம் உறுதியான இலாபம் அது எங்கு வேண்டுமென்றாலும் முதலீடு செய்யப்படுவதை உறுதி செய்யும். 20 சதவீதம் உறுதியான இலாபம் ஆர்வத்தை தூண்டும். 50 சதவீதம் கிடைக்குமென்றால் அது திமிராய் நடந்துகொள்ளும். 100 சதவீதம் கிடைக்குமென்றால் எல்லா மனித நியதிகளையும் காலில் போட்டு மிதிக்கத் தயாராகிவிடும். 300 சதவீதம் கிடைக்குமென்றால் குறுகுறுப்பே இல்லாமல் எந்தக் குற்றமும் செய்யத் தயாராகிவிடும். மூலதனத்தின் உடைமையாளர் தூக்கிலிடப்படும் அபாயம் இருந்தாலும்கூட எந்த நச்சுப் பரிட்சையிலும் துணிந்து இறங்கும்” (அப்துல்.நவ.2017:11)

 தமது நிறுவனங்களின் சரக்குகளை நுகர்பவர்களாக மட்டுமே மனிதர்களை மதிக்கின்றன. மாறாக, மனிதர்களின் சமூக உற்பத்திக்கான உழைப்பை அவமதிக்கின்றன.

இலாப வெறியின் நலன்களுக்காக வேலையில்லா திண்டாட்டத்தைக் கூர்மைப்படுத்துகின்றன. மக்களை உழைப்பூதியப் போதாமைக்கு ஆட்படுத்தி, வாங்கும் சக்தியற்றவர்களாக உருமாற்றுகின்றன. வாங்கும் சக்தியற்ற மக்களின் முடக்கத்தால் உற்பத்தியான சரக்குகளைத் தேக்குகின்றன. சரக்குகளின் தேக்கத்தால் சமூக பொருளுற்பத்தியை நிறுத்தி சமூகு வேலையிழப்புகளைப் பெருக்குகின்றன.

தேக்கத்தை சமாளிப்பதற்காக சமூகத்தில் செயற்கைத் தேவைகளை உருவாக்குகின்றன. தேவையற்றப் பொருட்களாயினும் பொய்யானத் தகவல்களின் கவர்ச்சிகர விளம்பரங்களால்,  ஆழ்மன தூண்டுதலுக்கு ஆளாக்கி, வாங்கும் நிலமையை நிர்பந்திக்கின்றன. வாங்கும் சக்தியற்றவர்களுக்காக கடன் முறையில் கொடுத்து, சுயமரியாதையுள்ள மனிதர்களை கடனாளியாக உருமாற்றுகின்றன.

செயற்கைத் தேவைகளைக் கூர்மைப்படுத்துவதற்காக திட்டமிட்ட அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. உலகப் போர்களை நிகழ்த்துகின்றன. மறுவாழ்வுத் திட்டங்கள் என்ற பெயரில் இலாப வேட்டையில் ஈடுபடுகின்றன. ஒப்பந்தங்களின் வழியாக இலாப வெறியைப் புதுப்பித்துக்கொள்கின்றன. இலாப வெறியின் நனனுக்காகவே மனிதப் பண்பாட்டில் நுகர்வு வெறியைத் திணிக்கின்றன. தமது சரக்குகளை நுகர முடியாமல் இலாபவெறிக்குப் பயன்படாத மனிதர்களைப் பிணம் போன்று நடத்துகின்றன.

நுகர்வென்றால் தாய்போன்றும், சமூக நலனென்றால் பேய்போன்றும், ஒரே காலத்தில் இரு வேடமிட்டு கூத்திடுகின்றன. இலாப வெறியை எதிர்த்து சமூக நல மேன்மையை நோக்கியும், மக்களை முன்னேற்றுகின்ற சமூகவிஞ்ஞானச் சக்திகளை ஒழிக்க முடியாமல் திணறுகின்றன. சமூகநல சக்திகளைக் கண்டறிந்து ஒழிப்பதற்காக, பொய்யான சமூகநல அமைப்புகளுக்கு நிதி வழங்கி வளர்க்கின்றன. சமூகவிஞ்ஞானச் சக்திகளுக்கும் இலாப வெறிபிடித்த நிறுவனங்களுக்கும் இடையிலான சமூகப்போர் இறுதியை நோக்கி விரைகின்றன.

மக்கள் தலைமை முயற்சிகளும் உற்பத்தி சக்திகளும்  தகுதியான வளர்ச்சியை எட்டாவிட்டால், இலாப வெறி விம்மி விம்மி எழும். இலாப வெறியின் விம்மல்கள் பேரழிவு நடவடிக்கைகளின் ஆற்ற முடியாதச் சமூகத் தழும்புகளாகக் காய்த்துவிடுகின்றன. தேசிய இனவெறி, மதவெறி, நிறவெறி போன்ற வழிமுறைகளில் பேரழிவை நிகழ்த்துகின்றன. முசோலினியின் பாசிசம், ஹிட்லரின் நாசிசம், சமகால மோடியின் இந்துத்துவம் ஆகியன இலாபவெறியின் உயிர் பிழைப்பு நடவடிக்கைகளாக உருப்பெற்ற பேரழிவு நடவடிக்கைகளே ஆகும்.

உற்பத்தி சக்திகளின் தகுந்த வளர்ச்சிகளும், மக்கள் தலைமைக்கான முயற்சிகளும், இலாபவெறியின் இதயத்துடிப்பை வெடித்துக் கொன்றாக வேண்டும். சமூகவிஞ்ஞானிகளால் உருப்பெற்றுவரும் மக்கள் தலைமை முயற்சிகளால் இதயம் வெடித்து சாவதா? அல்லது வெறும் மந்தைகளாகவே மக்களைப் பராமரித்து, இயற்கை அனுமதிக்கும் எல்லைவரை நீடித்து அழிவதா? இவற்றைத் தீர்மானித்துக் கொண்டிருக்கின்ற சமூகப் பொருளுற்பத்தியில்  தனது பாதுகாப்பிற்கான இலாப வெறியை நீடித்திருக்க முயன்று வருகிறது நிதி மூலதனப் பிரிவு.(புதியவன்.மே2019)

நிதி மூலதனப் பிரிவு தோன்றி சமூக உற்பத்தி மீது ஆதிக்கம் செய்தல் என்பது சமூகவிஞ்ஞானம் விளக்கும் சமூக வரலாற்றில் முதலாளித்துவ சமூகமாக விளக்கம் பெறுகின்றது. (புதியவன்.நவ 3,2019)

 

 

1.8.மக்கள் தலைமையின் கீழ் சமூக உற்பத்தியைக் கட்டமைத்தல் 

          இலாப வெறிபிடித்த நிறுவனங்களின் சமூக அதிகாரத்திற்கு எதிராக நிகழ்கின்ற சமூகவிஞ்ஞானப் போர்களால், மக்கள் தலைமை அரசுகள் உலகம் முழுதும் உருவாகத் தொடங்குகின்றன. மக்கள் தலைமை அரசு சமூக அதிகாரத்தை அடையத் தொடங்கியுள்ளதால், வணிக நடவடிக்கைகளில் இலாப வெறியை அடக்கத் தொடங்கியிருக்கின்றன. சமூகத்தேவையின் அடிப்படையில் மட்டுமே சமூகப் பொருளுற்பத்தியையும் பரிமாற்றத்தையும் திட்டமிட்டு நிகழ்த்தியிருக்கின்றன. மனிதர்களின் சமூக உழைப்பிற்கும் படைப்பாற்றலுக்கும் சமூகளாவிய மரியாதைகளை வழங்கியிருக்கின்றன. மனிதர்களின் அனைத்து சமூக உரிமைகளுக்கும் உத்திரவாதம் அளித்திருக்கின்றன.

அறிவியல் கண்டுபிடிப்புகளையும் நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களையும், மனித வள மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தியிருக்கின்றன. மனிதர்களின் சமூக வேலை நேரத்தைக் சராசரியாகக் குறைத்து, சமத்துவ உலகம் நோக்கி முன்னேறுவதற்கான பண்பாட்டு முயற்சிகளை ஊக்கப்படுத்தியிருக்கின்றன.  உலகளாவிய இலாபவெறி நிறுவனங்களுக்கு எதிராக, உலகளாவிய மக்கள் தலைமை அரசுகளின் ஒன்றியம் உருவாகத் தொடங்கியிருக்கின்றன. போர்களற்ற உலகை அடைவதற்காகத் தவிர்க்க முடியாதப் போர்களைத் தொடங்கியிருக்கின்றன. சமத்துவ உலகை அடைவதற்காக, மக்கள் தலைமை அரசுகளின் சமூகவிஞ்ஞானப் போர்கள் வீரியமடைந்திருக்கின்றன.

விடாமுயற்சியுடனும் படைப்பாற்றலுடனும் அர்ப்பணிப்புடனும் நிகழ்வுறும் இப்போர்களில், மக்கள் தலைமை அரசு வெற்றி காண வேண்டும். சமூகப் பொருளுற்பத்தியிலிருந்து இலாப வெறியை ஒழித்துக்கட்ட வேண்டும். ஏற்றத்தாழ்விற்கு மதிப்பே இல்லாத, சமத்துவச் சமூகம் நோக்கி முன்னேறுவதற்கு வசதியாக, சமூகத் தேவையின் அடிப்படையில் சமூகப் பொருளுற்பத்தியைக் கட்டியமைக்க வேண்டும். (புதியவன். 2017:32-33)

இது நிகழ்ந்தால் மட்டுமே மனித இனம் இயற்கையின் அங்கமாக நீடித்து தழைக்கும். சமூக விஞ்ஞானம் விளக்குகின்ற பொதுவுடைமை பொன்னுலகை எட்ட இயலும். இல்லாவிட்டால் நிதிமூலதனப் பிரிவின் இலாப வெறியால் இயற்கையின் நலன்கள் சூரையாடப்படும். உயிரினங்களின் சூழல் மண்டலம் பேரழிவிற்கு ஆட்படும். இயற்கையின் உயிரினப் பட்டியல்களிலிருந்து பெரும்பான்மை உயிரினங்கள் உதிர்ந்துவிடும். பேரழிவை ஊக்கப்படுத்திய மனித இனம் வரலாறு இல்லாமல் ஒட்டுமொத்தமாகப் புதைந்துவிடும். நிதிமூலதன அரசா? மக்கள் தலைமை அரசா? என்பது மனிதகுலத்திற்கு வாழ்வா? சாவா? பிரச்சனையாகும். இரண்டில் எந்தவொன்றும் சாத்தியப்படுவதற்கு வசதியாக இருக்கின்றது. சமத்துவ உலகை எட்டுதல் நோக்கி மக்கள் தலைமையை உந்துதலே,  சமூகமேன்மையின் வரலாற்றுத் தேவையாக அமைந்துள்ளது. வரலாற்றுத் தேவையை நிறைவேற்றுதல் நோக்கி இலக்கிய அறிவியல் உந்தப்பட வேண்டும். (புதியவன். 2017:32-33)

மக்கள் தலைமையின் கீழ் சமூக உற்பத்தியைக் கட்டமைத்தல்  என்பது சமூகவிஞ்ஞானம் விளக்கும் சமூக வரலாற்றில் சோசலிச சமூகமாக விளக்கம் பெறுகின்றது. பொதுவுடைமைச் சமூகம் உருவாகுவதற்கு முன் நிபந்தனையாகத் திகழ்கின்றது. (புதியவன்.நவ 3,2019)

 

இலக்கியங்களில் வரலாற்றை அணுகும்போதும் படைக்கும்போதும், மனித வரலாற்றுப் படிநிலைகளில் தெளிவுற்றிருப்பது இலக்கிய அறிவியலின் இன்றியமையாத கடமையாகும். மேலும், சமகாலத்தில் நிலவுகின்ற நிதிமூலதனப் பிரிவின் வரலாற்றுக் கட்டத்தை உடைத்து, சமூகத் தேக்கத்திற்கு எதிராக செயலாற்ற வேண்டியது இலக்கிய அறிவியலின் பொறுப்பாகும். ஏனெனில், மக்கள் தலைமை சமூகம் நோக்கி முன்னேறுவதற்கான வரலாற்று உந்துதலை மனித உணர்வுகளில் உந்தச் செய்து, சமூக மேன்மையைச் சாத்தியப்படுத்துவதே இலக்கிய அறிவியலின் வரலாற்றுக் கடமை.

 

 

2.பண்பாட்டு உறவுகள்

பண்பாடு என்பது பண்படுத்துதல் ஆகும். மனித  மூதாதையர்களிடமிருந்துத் தோன்றிய மனிதர்கள் இயற்கையைத்  திட்டமிட்டு மாற்றத் தொடங்கினார்கள். இத்தகைய முயற்சியிலிருந்து  மனித வரலாறு தொடங்குகிறது. மனித இனம் தன்னையும் தன்  சமூகத்தையும் பண்படுத்துகின்ற முயற்சியே மனிதப் பண்பாடாகும்.  இத்தகையப் பண்படுத்துதல்கள் சமூகத்தின் எல்லாத் தளங்களிலும்  தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.

நிதி மூலதனப் பிரிவு தோன்றி சமூக உற்பத்தியை ஆதிக்கம் செய்தல்  என்ற வரலாற்றுக் கட்டத்தில் வாழும் மனிதர்கள் உற்பத்திமுறையை  தங்களது விருப்பம்போல் மாற்ற விரும்பினால் என்ன நிகழும்?

அவர்கள் பழைமையான காடு சார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிக  வாழ்க்கையை உருவாக்க முயலலாம். அல்லது, மக்கள் தலைமை  சமூகத்தையோ அல்லது பொதுவுடைமை சமூகத்தையோ உருவாக்க  முயலலாம். ஆனால், இத்தகைய உருவாக்கங்கள் அனைத்தும் நாடகம்,  திரைப்படம், கலை இலக்கியம், அறிவியல் ஆய்விலக்கியம், பழைமை  பற்றிய நினைவுகளையும் கற்பனைகளையும் பதிதல், வருங்காலம் பற்றிய  விருப்பங்களையும் கோரிக்கைகளையும் தெரிவித்தல், உரையாடுதல்  என்பதாகவே அமையும்.

இவை அனைத்தும் தமது பண்படுத்தலுக்கான பண்பாட்டு முயற்சிகளாக மட்டுமே அமையும். மாறாக, தமது வாழ்க்கையை நடைமுறையில் ஒரு  காடு சார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிக வாழ்வில் செலுத்துதலோ அல்லது மக்கள் தலைமை சமூகத்தில் அல்லது பொதுவுடைமை சமூகத்தில்  நிறுவுதலோ சாத்தியமில்லை. ஏனெனில், சமூகத்தின் நடைமுறை என்பது மனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டுள்ள சமூக உற்பத்தி முறையினால் தீர்மானிக்கப்படுகின்றது. எனவேதான் சமூக விஞ்ஞானத்தின்  விளக்கம் இவ்வாறு அமைகின்றது.

சமூகப் பண்பாடு என்பது சமூக உற்பத்தி முறைகளை அடித்தளமாகக்  கொண்டு தீர்மானிக்கப்பட்ட மேற்கட்டுமானம் ஆகும். சமூகப்  பண்பாடுகள் உற்பத்தி முறைகளை மேம்படுத்தவோ அல்லது தேங்கச்  செய்யவோ தொடர்ந்து முயல்கின்றன. புரட்சிகரமான அரசியல் சூழலைத் தவிற மற்றெந்தச் சூழலிலும் பண்பாடானது உற்பத்தி முறையைத்  தீர்மானிப்பதில்லை. மாறாக, எப்பொழுதும் உற்பத்தி முறைகளால்தான்  பண்பாடு தீர்மானிக்கப்படுகின்றது. அதனால்தான் உற்பத்தி முறைகள்  அடித்தளமாக விளக்கம் பெறுகின்றது. சமூக உற்பத்திமுறையியலை  அடித்தளமாகக் கொண்டு பண்பாடு ஏழு தளங்களாகக்  கட்டமைந்திருக்கின்றது. (சிவக்குமார்,கே.2016:8)

1.சமூக வாழ்வியல்

2.சமூக உள்ளத்தியல்

3.தனிமனித உள்ளத்தியல்

4.சமூகக் கருத்தியல்

5.தனிமனிதக் கருத்து நிலைப்பாடு

6.தனிமனித உலகப்பார்வை

7.தத்துவ அடிப்படை

 இவற்றைச் சமூகத்தின்   மேல்கட்டுமானம் என்பதாக சமூகவிஞ்ஞானம் விளக்குகின்றது.





2.1.சமூக வாழ்வியல்

         சமூக வாழ்வியல் என்பது மனிதர்கள் இணைந்து வாழ்கின்ற செயலமைப்புகள் ஆகும். மனிதர்கள் இணைந்து வாழ்வதற்கு மூளையே முக்கியக் காரணம் என்கிறார்கள். இயற்கையுடன் இணைந்து எல்லா உயிரினங்களும் பாதுகாப்பாக வாழ முயன்றிருக்கின்றன. உயிரினங்களின் உடலமைப்பில் ஏதேனும் சிறப்புநிலை ஆற்றல் முக்கிய ஆயுதமாகச் செயல்பட்டுள்ளது. இத்தகைய ஆற்றல் இல்லாதவை உயிரின வரலாற்றில் மறைந்து போயுள்ளன. ஆற்றலுள்ளவை மட்டுமே தலைமுறை தொடர்ந்து வாழ்ந்து வந்துள்ளன. கூரிய நகங்கள்பற்கள்கொம்புகள்ஓட்டத்தில் வேகம்பாய்ச்சலில் வீரம் என்பதாகச் சிறப்பு நிலை ஆற்றல்களைப் பட்டியலிட முடியும். ஆனால் மனித இனத்தின் சிறப்பாற்றலாக எதைக் குறிப்பிடுவது?

 

          மனித மூளையே மனித இனத்திற்குச் சிறப்பாற்றலாக உருவெடுத்தது. வாழ்க்கைச் சூழல்களை ஆராய்ந்துஅவற்றைப் பற்றியக் கருத்துக்களை உருவாக்கிக்கொண்டுகருத்துக்களின் அடிப்படையில் செயல்படும் ஆற்றல் மனித இனத்திற்கு மட்டுமே பொருந்தியது. ஆயினும் மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதச் சூழ்நிலைகளே நீடித்தன. இவற்றை எதிர்கொண்டு மனித இனம் சமாளிப்பதற்கு ஒற்றை மூளை போதவில்லை. மனிதக் கூட்டத்தின் மூளைகள் ஒன்றுபட்ட ஆயுதமாகச் செயல்பட வேண்டியத் தேவை இருந்தது. இந்தத் தேவையை வரலாறு நிறைவேற்றத் தொடங்கியது. மனிதர்கள் சகமனிதக் கூட்டங்களாக வாழத் தொடங்கினார்கள். இவற்றைச் சமூக விஞ்ஞானிகள் விவரித்து விளக்குகிறார்கள். இத்தகைய சமூக வாழ்க்கை பலவிதமான வளர்ச்சிகளைக் கண்டுள்ளது. வாழ்க்கை முறையில் பல்வேறு அமைப்புகளும் வடிவங்களும் உருவாகியுள்ளன.பாலுறவுஉரிமையின்வரையறைகுடும்பம்திருமணம்,  சடங்குசாதியக்கட்டுப்பாடுகள்சமயம்கல்விஅரசுஇராணுவம்சட்டம்நீதிகாவல்சிறைசுற்றுச்சூழல்இலக்கியம்கலைஅறிவியல்,  தொல்லியல், மொழியியல், வரலாற்றியல், விளையாட்டு, வர்க்கப்பிரிவு, இயற்கை விஞ்ஞானம், சமூகவிஞ்ஞானம் என்பதாகப் பட்டியல் நீண்டு செல்கிறது. இவற்றைப் பற்றிய அறிவே சமூக வாழ்வியல் ஆகும். இவற்றில் அரசு என்பதற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஒரு சமூகம் புரட்சி நிலை மாற்றம் அடைகின்ற தருணத்தில் மட்டும் அரசு தன் வரையறையை மீறுகிறது. அதாவது சமூக உற்பத்திமுறையில் அழுத்தம் செலுத்தும் பண்பிலிருந்து மாறி தீர்மானிக்கும் பண்புடன் இயங்குகிறது. (புதியவன்.ஜுன் 2015:34)

 

2.2சமூக உள்ளத்தியல்

         சமூக உள்ளத்தியல் பற்றிய புரிதலுக்கு அடிப்படையாக மனித மூளையைப் பற்றிய புரிதலை உருவாக்கிக் கொள்வோம். மனித மூளைக்கு இரண்டு பண்புண்டு. 1. எண்ணங்களின் உருவாக்கங்களைப் பாதுகாத்தல். இது ஆழ்மனதில் அளவிட முடியாதக் கருங்குழியாகச் செயல்படுகின்றது. இதனை உள்ளம்மனது போன்ற வார்த்தைகளால் குறிப்பிடுகிறோம்2. சிந்தித்துக் கருத்துக்களை உருவாக்குதல். இதனை அறிவு என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறோம். மனிதர்கள் சிந்தித்து உருவாக்கியக் கருத்துக்களைவிடசிந்திக்கப்படாமல் ஆழ்மனக்குழியில் தொகுத்திருக்கின்ற எண்ணங்கள் அதிகம். மனித மூளையில் கவனித்துச் செய்கின்ற பதிவுகளைவிட கவனிக்காமல் செய்கின்ற பதிவுகள் ஏராளம்.

ஒரு எழுத்தை எழுதுகின்ற நேரத்தில் கடந்து செல்கின்ற வாகனச் சத்தம்மின்னல் வேகத்தில் பறக்கின்ற ஈமின்விசிறியின் சுழல் சத்தம்காற்றில் பறக்கும் நாள்காட்டிச் சத்தம்நாற்காலியின் அதிர்வுகண்ணாடிக் கதவின் அசைவு ஆகிய அனைத்தும் மூளையின் ஆழ்மனக்குழியில் எண்ணங்களாகப் பதிவாகின்றன. ஆர்ப்பரிக்கின்ற பெருங்கடலாக எண்ணங்கள் இருக்கின்றன. சிந்தனைக் கப்பலில் நிதானமாகப் பயணிக்கின்றன கருத்துக்கள். ஆனால்மூளையில் பதிவாகும் எண்ணங்களுக்கும் சிந்தனையின் கருத்துக்களுக்கும் அடிப்படைக் காரணங்கள் எவைவாழ்வியல் சூழலும் உலகளாவிய நிகழ்வுகளுமே காரணங்களாக அமைகின்றன.

எனவேஉலகம் முழுதும் வாழக்கூடிய மனிதர்கள் தங்களது வாழ்க்கைச் சூழலில் எத்தகைய எண்ணங்களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்உலகளாவிய நிகழ்வுகளும் மனிதர்களது பங்கேற்பும் எத்தகைய எண்ணங்களை உருவாக்குகின்றனஇவற்றால் சமூக நிகழ்வுகளில் ஏற்படுகின்ற விளைவுகள் என்னசமூகத்தின் வாழ்க்கைத் தேவைக்கும்மனித எண்ணங்களுக்கும் இடையிலான உடன்பாடுகளும் முரண்பாடுகளும் எத்தகையவைஇவற்றைப் பற்றிய அறிவே சமூக உள்ளத்தியல் ஆகும். (புதியவன்.ஜுன் 2015:35)

 

2.3.தனிமனித உள்ளத்தியல்

ஒரு தனிப்பட்ட மனிதரின் உள்ளத்து இயல்பை அறிய முயல்வதற்கான அறிவியலாகும். சமூக உள்ளத்தியலின் அடிப்படையில் ஒவ்வொரு தனிமனிதரின் தனித்துவமான உள்ளத்தியலையும் விளங்கிக்கொள்ள முடியும். தனிமனிதரின் புலனுணர்வுகளின் தொடக்கம், பிறப்பு, வளர்ந்து வந்த வரலாற்று நிலைமைகள், வாழ்வியல் சூழல்கள், மாற்றங்களுக்கு உட்பட்ட பல்வேறு சந்தர்ப்பங்கள், நடத்தை மற்றும் கனவுகள் உட்பட்ட எண்ணங்களின் பன்முக வெளிப்பாடுகள் எனப் பன்முகப் படிநிலையில் தனிமனித உள்ளத்தியல் கட்டமைகின்றது. ஒரு தனிப்பட்ட மனிதர் தனது பல்வேறு வாழ்க்கைச் சூழல்களால் எத்தகைய எண்ணங்களுக்கு ஆளாகியுள்ளார். அவரது எண்ணங்களுக்கு காரணங்களாக உலகளாவிய நிகழ்வுகளும் மனித உறவாடல்களும் எவ்வாறு அமைந்துள்ளன. சமூகத்தின் வாழ்க்கைத் தேவைக்கும் அவரது தனிமனித உள்ளத்தியலுக்கும் இடைப்பட்ட உடன்பாடுகளும் முரண்பாடுகளும் எத்தகையவை? இவற்றைப் பற்றிய அறிவே தனிமனித உள்ளத்தியல் ஆகும்.

 

2.4.சமூகக் கருத்தியல்

 

         சமூகக் கருத்தியல் என்பது மனிதர்களின் அறிவாக்க இயக்கங்களின் தொகுப்புகளாகும். மனிதர்களின் ஒவ்வொரு செயலும் அறிவைத் தூண்டுகின்றன. எல்லா அறிவும் செயலைச் செதுக்குகின்றன. இத்தகைய  அறிவும் செயலும் மனிதர்களின் கருத்துக்களால் கட்டமைகின்றன. உலகம் முழுவதும் வாழக்கூடிய மனிதர்கள் தங்களது செயல்களிலிருந்தும், பல்வேறு நிகழ்வுகளிலிருந்தும் எத்தகையக் கருத்துக்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்? எத்தகையக் கருத்துக்களுடன் தொடர்ந்து செயல்படுகிறார்கள்? சமூகத்தில் உருவாகிக்கொண்டே இருக்கின்ற பல்வேறு கருத்துக்களால் சமூக நிகழ்வுகளில் ஏற்படுகின்ற விளைவுகள் என்ன? சமூகத்தின் வாழ்க்கைத் தேவைக்கும் உலகளாவியக் கருத்துக்களுக்கும் இடையிலுள்ள உடன்பாடுகளும் முரண்பாடுகளும் எத்தகையவை? இவற்றைப் பற்றிய அறிவே சமூகக் கருத்தியல் ஆகும். (Social Ideology)  (புதியவன்.ஜுன் 2015:35)

 

2.5.தனிமனிதக் கருத்து நிலைப்பாடு

 

         தனிமனிதக் கருத்துநிலைப்பாடு என்பது சமூகளாவிய நிலையில் ஒரு தனிமனிதரை மதிப்பீடு செய்கின்ற அறிவாகும். அதாவது தன்னையோ அல்லது ஒரு சகமனிதரையோ மதிப்பீடு செய்கின்ற அறிவாகும். ஒரு மனிதர் தனது செயலை எத்தகையக் கருத்துக்களைப் பற்றிக்கொண்டுச் செய்கிறார்?  சமூகத்தின் பல்வேறு கருத்துக்களில் அவர் எத்தகையக் கருத்துக்களைச் சார்ந்தவராக இருக்கின்றார்இவற்றைப் பற்றிய அறிவே தனிமனிதக் கருத்து நிலைப்பாடு ஆகும் (Individual Concept Stage). ஒரு நபர் நேர்மையாகப் பேசுபவரைப்போலத் தோன்றலாம். தான் இத்தகையக் கருத்து நிலைப்பாடு கொண்டிருப்பதாகச் சொல்லலாம். ஆனால்அவரது உணர்வுப் பூர்வமானச் செயல்பாடுகளைக் கவனிக்க வேண்டும். அவரது செயலுக்கும் சொல்லுக்கும் இடையிலுள்ள உடன்பாடுகளையும் முரண்பாடுகளையும் மதிப்பிடுவதன் மூலமாகவே அவரது கருத்து நிலைப்பாட்டை உறுதி செய்ய முடியும். (புதியவன்.ஜுன் 2015:35)

 

2.6.தனிமனித உலகப்பார்வை

          தனிமனித உலகப்பார்வை என்பது கருத்துக்களை உருவாக்குகின்ற மனித நடவடிக்கைகளாகும். எல்லா உயிரினங்களும் உலகைப் பார்க்கின்றன. ஆனால் எல்லா உயிரினங்களுக்கும் கருத்துக்கள் உதிப்பதில்லை. மனிதர்களுக்கு மட்டுமே கருத்துக்கள் உருவாகின்றன. மனித உலகப்பார்வைக்கு தத்துவம் அடிப்படையாக இருப்பதால் மட்டுமே கருத்துக்கள் உருவெடுக்கின்றன. எனவே எல்லா உயிரினங்களின் உலகப்பார்வையிலிருந்தும் மனித உலகப்பார்வைக்கு தனிச்சிறப்பு இருக்கின்றது. தான் அல்லது ஒரு சகமனிதர் தன்னையும் இந்த உலகத்தையும் எத்தகையப் பார்வையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்சிறிய நடவடிக்கை முதல் பிரபஞ்ச மாற்றங்கள் வரையிலான அவரது பார்வையின் புரிதல்கள் எவ்வாறு அமைந்திருக்கின்றனஉள்ளூர் பிரச்சனை முதல் உலகளாவிய நிகழ்வுகள் வரை எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறார்இவற்றைப் பற்றிய அறிவே தனிமனித உலகப் பார்வையாகும்.  (Individual outlook).  (புதியவன்.ஜுன் 2015:36)

 

2.7.தத்துவ அடிப்படை

         தத்துவ அடிப்படை என்பதற்கு மனித உலகப்பார்வையின் அடிப்படை என்பது பொருள். ஏனெனில் மனிதர்களது உலகப்பார்வைக்கு தத்துவங்களே அடிப்படையாக இருக்கின்றன. அதாவது மனித உலகப்பார்வையின் புரிதல்கள் தத்துவத்திலிருந்தே தொடங்குகின்றன. இதனையேத் தத்துவ அடிப்படை என்கிறோம். (Philosophical Basis). உலகளாவியத் தத்துவங்களை இரண்டு வகையாகப் பிரிக்க முடிகின்றன. 1. அறிவெதிர் தத்துவம் (Nescience philosophy)2. அறிவியல் தத்துவம் (Science philosophy)(சிவக்குமார்,கே.2016:11)

 ஒரு மனிதரின் பல்வேறு கருத்துக்கள் ஏதேனும் ஒரு தத்துவத்தின் அடிப்படையில் அமைந்திருக்கின்றன. அல்லதுஇரண்டும் கலந்ததாகக் குழம்பியிருக்கின்றன. அறிவெதிர் தத்துவம் என்பது இயங்காவியலும் கருத்து முதல் வாதமும். அறிவியல் தத்துவம் என்பது இயங்கியலும் பொருள் முதல் வாதமும். இவற்றைப் பற்றிய அறிவே தத்துவ அடிப்படை ஆகும். தம் வாழ்வின் சமூக வசதிகளுக்காக மனிதர்கள் அறிவியல் தொழில்நுட்பங்களைச் சார்ந்து வாழ்கிறார்கள். அறிவெதிர் நுட்பங்களைப் புறக்கணிக்கிறார்கள். அதுபோல வாழ்வின் சமூக உணர்வுகளில் மேன்மையடைவதற்காக அறிவியல் தத்துவத்தைச் சார்ந்து வாழப் பழகுதல் வேண்டும். அறிவெதிர் தத்துவ உணர்வுகளை ஆழ்மனக்குழியில் எட்டும் தூரம்வரை அறுத்தெறிய வேண்டும். இதற்காக ஆரம்பநிலை முயற்சியாளர்களுக்கு அறிவியல் தத்துவத்தை அறிமுகம் செய்ய முயன்றுள்ளோம்.  நீங்களும் சமூகவிஞ்ஞானி ஆகலாம் (புதியவன்.2014) என்ற நூலில் சமூகவிஞ்ஞானத் தத்துவம் என்ற பெயரில் ஐந்து வழிமுறைகளாக அறிமுகம் செய்துள்ளோம்.

1.இயங்குதலின் நான்கு தன்மைகளை உணர்தல், 2.பொருளையும் கருத்தையும் உணர்தல், 3.வரலாற்றை உணர்தல், 4.பொதுத்தன்மையையும் தனித்தன்மையையும் உணர்தல், 5.நடைமுறையையும் தத்துவத்தையும் உணர்தல் ஆகியனவாகும். இத்தகைய அறிமுகத்தை சமூக அறிவாக மாற்றிக்கொள்வது அவரவரது சமூகவிஞ்ஞான முயற்சியால் மட்டுமே சாத்தியப்பட முடியும். (சிவக்குமார்,கே.2016:7)

இத்தகைய ஆறு தளங்களுக்கும் இடையிலான முழுதளாவிய உறவுகளே பண்பாட்டு உறவுகளாகும். இதனை அறிவெனும் பெரும்பசி  என்ற கட்டுரையில் சமூகப் பண்பாட்டியல் என்பதாக விளக்கியுள்ளோம். இக்கட்டுரையின் விவரிப்புகளையே இலக்கிய அறிவியலின் அவசியம் கருதி முழுமையாகக் கையாண்டிருக்கிறோம். (புதியவன்.ஜுன் 2015:36) 

இலக்கியங்களில் சமூகப் பண்பாடுகளை அணுகும்போது, பண்பாட்டு உறவுகள் குறித்த இத்தகைய சமூக அறிவைப் பெற்றிருப்பது இலக்கிய அறிவியலின் இன்றியமையாத கடமையாகும். சமூகத் தேக்கத்திற்கான பண்பாடுகளை உடைத்து, சமூக மேன்மைக்கான பண்பாடுகளை மனித உணர்வுகளில் எழுச்சி பெறச் செய்வது இலக்கிய அறிவியலின் பண்பாடாகும். குறிப்பாக, சமகாலத்தில் நிலவுகின்ற நிதிமூலதனப் பிரிவின் இலாப வெறி பண்பாட்டை மனித உணர்வுகளில் உடைத்து, சமூகத் தேக்கத்திற்கு எதிராக செயலாற்ற வேண்டியது இலக்கிய அறிவியலின் பொறுப்பாகும். இத்தகைய பொறுப்பே மனித உணர்வுகளில் சமூக மேன்மை பண்பாட்டைச் சாத்தியப்படுத்தும்.

         

இலக்கியத்தை அணுகுதல் என்பது சமூகப் பொருளாதாரப் பண்பாட்டு அரசியல் கருத்தாக்கங்களை அணுகுவதாக அமைகின்றது. இதன் அடிப்படையில் இலக்கிய அறிவியல் உணர்த்தும் மனித வரலாற்றுப் படிநிலைகளும் பண்பாட்டு உறவுகளும் சமூக மேன்மை நோக்கிய இலக்கிய ஆக்கங்களுக்கு அரணாகும்.

      துணை செய்தவை

1.  புதியவன். நவ.3,2019. புராதனம் முதல் பொதுவுடைமைவரை. 'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5473:2019-11-03-14-08-15&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82

     2. புதியவன். அக்.24, 2019. இலக்கிய அறிவியல்.  'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5444:2019-10-24-12-39-00&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82

https://puthiyavansiva.blogspot.com/2016/06/all.html

 

 

 

 

 

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை