Monday, July 6, 2020

உன்னைக் காதலிக்க காத்திருக்கேன்


உன்னைக் காதலிக்க காத்திருக்கேன்
புதியவன்

ஏதேதோ ஆசைகள்
இருக்குதடி எனக்கு
நீ சிரிக்கின்ற இசை கேட்டால்
சிறகடிக்குது மனசு!

தேனைச் சேகரிக்கும்
தேனியைத் தெரிந்திருப்பாய்;...
பூவைச் சேகரிக்கும்
தேனியை அறிவாயா?

நிமிடத்திற்கு நிமிடம்
நீ அதிசய பூதான்!

உன் புன்னகை மின்னலை
பட்டப்பகலிலும் அழகாய் வெட்டுவாய்
பூமழை தூவுவாய்

நான் அணை மூழ்கி வடிந்தாலும்
உன் மழை மட்டும் ஓயாது!

மனது வலிக்கும்போது
உன் புன்னகை வந்து
மருத்துவம் செய்வதால்
உனது புன்னகையை
நினைத்து நினைத்தே
ஊட்டச் சத்துகளால் நிரம்புகிறேன்...

உன்னோடு காதல் பேச
ஆயிரத்தெட்டு ஆசைகள்
அதை இன்னதென்று தெரிவிக்க
இதோ ஒருசில வார்த்தைகள்...

சிறுவர்களின் பூங்காவில்
பூஞ்செடிகளுக்கு நடுவில்
நீயும் நானும் ஊஞ்சலாடி
சிறுவர்களோடு விளையாடி
மனிதன் வந்த வரலாறை
கதைகதையாகப் பேசனும்...

சித்திரை மாதத் திருநாளில்
சாமிபார்க்கும் கூட்டத்தில்
சவ்வுமிட்டாய் மூனுவாங்கி
நீயும்நானும் திண்ணனும்...
கடவுள் பற்றிய நம்பிக்கையை
அறிவியலாகப் பேசனும்!

ரோட்டோர டீ கடையில்
இரு கிளாசில் டீ வாங்கி
பருகும் சில நேரத்திற்குள்
பத்திரிகை செய்திகளை
மற்றவரும் சிலிர்க்கும்படி
கண்டபடி பேசனும்...

ஆளில்லாத நாள் பார்த்து
உன்வீட்டில் நாம் சேர்ந்து
கத்திரிக்காய் சாம்பாருடன்
வெண்சோறு கிளறி
விலைவாசி பிரச்சனையை
விரிவாக பேசனும்...
ஒருவர் உதட்டில் ஒருவர் ஊட்டி
ருசி பார்க்கனும்!

கொட்டுகிற மழையில்
நனைந்து ஒதுங்கிய இடத்தில்
என் நெஞ்சில் நீ சாய்ந்தும்
உன் மடியில் நான் சாய்ந்தும்
காதலின் வரலாறை கவிதையாகப் பாடனும்...

பஸ் ஸ்டாப்பில் சந்தித்து
வீடு நோக்கியப் பிரிவிற்குள்
வரலாற்றுக் கதைகளை
வழிநெடுக பேசனும்...
திருமணமும் காதலும்
தோன்றியவிதம் எவ்வாறு?
ஆதாரக் கதைகளை ஆராய்ந்துபேசனும்!

பத்து இதழ் பூ மொட்டை
வீசி நடக்கும் ஒன்றாக
உள்ளங்கையை நாம் கோர்த்து
வேடிக்கையாய் நடக்கனும்...
காதல் மொழி பேசி வெட்கப்படனும்...
அவலமான மக்கள் வாழ்வை
அக்கறையுடன் பேசனும்!

ஆளுக்கொரு பக்கமாக
பிரியும் சில பொழுதிலும்
சகமனிதச் சமூகத்தைச் சரிபடுத்தனும்...
அனுபவத்தின் வெளிச்சத்தை
கவிதையாகச் சமைத்து
இணையும் சில சந்தர்ப்பத்தில்
சுவைபார்க்கனும்...

இன்னும் இன்னும் ஆசைகள்
ஏதேதோ உதிக்குது
நீ சிரிக்கின்ற இசை கேட்டு
உள் மனசு மயங்குது

உன் புன்னகையால்
உணர்வுகளைப் புதுப்பிக்கிறேன்
என்னைக் காதலிக்க
உனக்காகக் காத்திருக்கிறேன்

உன் உதட்டோர சிரிப்பு
என் உயிருக்கு மருந்து
உன் புன்னகைப் பூக்களை
உதிர்த்துக்கொண்டே இரு...



No comments:

Post a Comment

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை