விதி-3 வரலாற்றை உணர்தல் (சிறுகதை
8)
வரலாறு என்பது பொருள்கள் வளர்ந்து வந்த முறை, கடந்து வந்த கதை.
இடத்திற்கும் காலத்திற்கும் முதன்மையாகப் பொருட்கள் இருக்கின்றன. கருத்திற்கும் செயலுக்கும்
முதன்மையாக மனிதர்கள் இருக்கின்றனர். பொருள்களிலிருந்து மனிதர்கள்வரை, புள்ளியிலிருந்து
பிரபஞ்சம்வரை, அனைத்தையும் கவனியுங்கள்.
இவை அனைத்தும் கடந்த காலத்தில் பல மாற்றங்களைச் சந்தித்திருக்கின்றன. எதிர்கால மாற்றங்களை
நோக்கியே நிகழ்காலத்தில் இயங்குகின்றன. இந்த இயங்குதலைக் கடந்து எதுவுமே இல்லை. எனவே
எல்லாவற்றிற்கும் இயங்கி வளர்ந்த கடந்த காலங்கள் இருக்கின்றன. இந்தக் கடந்த காலங்கள்
பற்றிய அறிவே வரலாறு. எனவே எல்லா பொருள்களுக்கும் வரலாறு இருக்கின்றது. வரலாற்றை வரையறை
செய்ய முடியாது. வரையறுக்க முயற்சித்தால் இப்படித்தான் சொல்ல வேண்டும். நிகழ்காலத்திலிருந்து
இறந்த காலத்தின் முடிவற்ற எல்லைவரை முழுமையும் வரலாறே. அதாவது,
முதல் மனிதன் எழுந்ததிலிருந்து இந்த நொடியில் பிறக்கும்
குழந்தைகள்வரை.
காலம் தோன்றிய ஒரு யுகத்திலிருந்து இந்த வினாடி
பிரபஞ்சம்வரை.
வளர்ந்து வந்துள்ள முறையும், கடந்து வந்துள்ள
பாதையும்.
பின்னோக்கி நீண்டுள்ள காலமும், முன்னோக்கி வளர்ந்துள்ள
வேகமும்.
இப்படி கடந்த காலம் பற்றிய அனைத்துக் கதைகளும் வரலாறே. ஏனெனில், வரலாறு என்பது
தொடர்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளின் முடிந்து போன கதைகளாகத்தான் இருக்கின்றது. அதற்காக
அனைத்துக் கதைகளும் வரலாறுதான் என்று உத்திரவாதம் தர முடியாது. ஏனெனில் இத்தகைய உத்திரவாதங்கள்
நமக்கு பயன்படாது.
ஒரு கதையைக் கவனிப்போம். பூனைகள் வாழ்கின்ற பூர்வீகக்
காடு. இந்தக் காட்டை வெள்ளைக் குதிரை ஆட்சி செய்தது. காட்டின் அநீதிகளும் நியாயங்களும்
இதன் கணைப்பிற்குள் அடங்கியது. காலம் நாயைப் போல படுத்து உருண்டது. சூழ்நிலை மாற்றம்
குதிரைக்கு ஏற்கவில்லை. குதிரை தந்திரமானது. தன் நலனுக்கு பிரச்சனை இல்லாத ஒரு விசுவாசியிடம்
காட்டை ஒப்படைக்க நினைத்தது. அதன் கணக்குப்படி குதிரை போல கழுத்து முடியுள்ள மிருகமே
நல்ல விசுவாசி. காடெல்லாம் தேடியது. விசுவாசியாக ஒரு கழுதையும் கிடைக்கவில்லை. சிங்கம்
மட்டுமே சிக்கியது. குதிரை முடிவை மாற்றிக்கொண்டது. கழுத்தாவது, வாலாவது, கவர்ச்சியாக முடியிருந்தால்
போதும்! இப்படியொரு முடிவிற்கு வந்துவிட்டது. பூனைகளின் பூர்வீகக் காட்டில் சிங்கத்திற்கு
பட்டாபிசேகம். காட்டின் நிலை அதோகதிதான். பூனைகளைப் படாதபாடு படுத்தின.
பூனைகளின் பூர்வீகக் காட்டில் சிங்கம் புதிய சட்டங்களை
இயற்றியது. இது காட்டின் மிருகநாயக முறைக்கு எதிராக அமைந்தது. பூனைகள் மியாவ் என்ற
தாய்மொழியை மறந்துவிட வேண்டும். பூனைகள் கர்ஜிப்பதைத் தாய்மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பூனைகள் நகம் வளர்க்கக் கூடாது. பூனைகளின் ஆயுதத் தடுப்புச் சட்டம் இதை அனுமதிக்காது.
நகம் இல்லாத பூனைகளுக்கே வேட்டையாடும் உரிமை. பூனைகள் சிங்கத்தைப்போல பிடரி முடி வளர்க்க
வேண்டும். பிடரி முடி இல்லாவிட்டால் பூர்வீகக் குடியுரிமை மறுக்கப்படும். அனைத்து மிருக
நியாயங்களும் பூனைகளுக்கு புறக்கணிக்கப்படும்.
அதாவது, பூனைகள் தானாக முன்வந்து மிருக உரிமைகளிலிருந்து
விலகிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் சிங்கத்தின் கொடிய சட்டங்கள் பாயும். அரசு இப்படி
மிரட்டுகிறது. சிங்கத்தின் அசிங்கமான ஆட்சியை பூனைகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
உணர்ச்சிவசப்பட்டும் முடிவெடுக்கவில்லை.
சிங்கத்திடம் சட்டங்களிலுள்ள சிக்கல்களை விளக்க
முயற்சித்தன. பூனையை அவமதிக்கும் நோக்கில் பிடரியைப் பலமுறை ஆட்டியிருக்கிறது, சிங்கம். பூனைகள்
பொறுமையை இழந்தன. இந்த அசிங்கத்தை வேரறுக்க பூனைகள் முடிவெடுத்தன. இனி சிங்கங்களுடன்
வாழவே முடியாது. சிங்கம் அதன் பகுதியிலேயே வாழ்ந்துகொள்ளட்டும். பூனைகளின் வாழ்வில்
தலையிடக் கூடாது. சிங்கம் அத்துமீறினால் அதன் பிடரியை இல்லாமல் செய்வதே முடிவு. சிங்கத்தைச்
சரிபடுத்த இதுவே வழி.
பூனைகள் தனிக்காட்டை உருவாக்கிக்கொண்டன. சிங்கம்
பல வழியில் சீர்குலைத்தது. பூனைகளின் மாநாடு நிகழ்ந்தது. மாநாட்டின் தலைமைப் பூனை பேசியது. “குழந்தை போல பேசினால்தான் குழந்தைக்குப் புரியும்.
எருமை போல பேசினால்தான் எருமை மாட்டுக்குப் புரியும். பூனை போலவே பேசினால் சிங்கத்திற்கு
புரியாது. சிங்கத்திற்கு அது மொழியில் புரிய வைப்போம்.” மாநாட்டின் தலைமைப் பேச்சு பூனைகளை உற்சாகப்படுத்தியது.
மாநாட்டில் சில முடிவுகள் உறுதி செய்யப்பட்டன. பூனைகளின் காட்டை மற்றக் காடுகளும் அங்கீகரிக்க
வேண்டும். இதுவே பூனைகளின் இலட்சியம். எதிரியின் மொழியிலேயே பதில் பேச வேண்டும். இந்த
வழிமுறையே இலட்சியப் பயணத்திற்கு பயன்படும். எனவே, பூனைகள் புலிகளாயின.
புலிகளின் வேகத்தில் சிங்கம் தன் பிடரியைப் பலமுறை
இழந்திருக்கிறது. கழுகின் சிபாரிசில் ஒரு முறை உயிர் தப்பிப் பிழைத்தது. ஆனாலும் தலைக்கனம்
அடங்கவில்லை. கழுகுகின் ஆயுத உதவிகளுடனும் நான்முக சிங்கத்தின் அரசியல் உதவிகளுடனும்
புலிகளை வன்மமாக வேட்டையாடியது. புலிகளும் ஓயவில்லை. பூனைகளின் மிருக நியாயங்களுக்காகப்
புலிகள் தமது இன்னுயிரைத் தியாகம் செய்தன. காடு இருட்டானது. புலியாக மாறியப் பூனைகளும்
உறக்கத்தை மறந்தன. ஓயாத அலைகள் ஓய்ந்து போயின!
சரி, இப்பொழுது வரலாறுக்கு வருவோம். பூனை புலியானக் கதையை
ஆராய்ந்துப் பாருங்கள். ஈழ இலங்கை அரசுகளின் வரலாற்றுக் கதையை உணர முடியும்.
நடந்ததாகச் சொல்லப்படுபவை முழுதும் உண்மையாக இருக்க
அவசியமில்லை. உண்மை என்பது ஆராய்ந்து அறிவதில் இருக்கிறது. நடந்தக் கதையை, நடந்த உண்மையை, நாம் ஆராய்ந்துப்
பார்க்க வேண்டும். அதுவே வரலாற்றை அறிவதற்கான வழி. கதைக்கும் வாழ்க்கைக்கும் இடையிலுள்ள
உண்மைகளைப் பட்டியலிட வேண்டும். உண்மைகளின் முறையான வரிசையை வரலாறாகக் கணக்கிடலாம்.
பொய்கள் நிறைந்த போலி வரலாறு வரலாறாகாது. ஏனெனில், நடந்த உண்மைகளின் தொகுப்பையே வரலாறு என்கிறோம்.
இந்த வரலாறிலிருந்து நான்காம் வழிமுறைக்குச் செல்வோம்.
No comments:
Post a Comment