விதி-4 பொதுத்தன்மையையும்
தனித்தன்மையையும் உணர்தல் (சிறுகதை 9)
பிரபஞ்சம் என்பது இயற்கையின் மொத்தம். செயற்கை என்பது
நம் மூளையின் விளைவு. நம் மூளை என்பது இயற்கைப் பொருள்களுள் ஒன்று. நம் மூளைக்கு எட்டுகின்ற
எல்லாப் பொருள்களையும் கவனிப்போம். இயன்றவரை பட்டியலிடுவோம். நட்சத்திரங்கள் – வானம் – சூரியன் – நிலா – பூமி – கடல் – நெருப்பு – காற்று – காடு – மரம் – விலங்கு – பறவை – மீன் – பல்லி – மலை – மனிதன் – கப்பல் – வீடு... இப்படி
பட்டியலை விரித்துக் கொண்டே போகலாம். ஆனால், பட்டியலில் அடங்கினாலும் அடங்காவிட்டாலும் அனைத்தும்
பொருட்களே.
எந்த பொருளும் மற்ற பொருள்களிலிருந்து தன்னைப் பிரித்துக்காட்டும்
தனித்தன்மைகளைப் பெற்றிருக்கிறது. ஆனாலும் மற்ற எல்லாப் பொருள்களுடனும் இணைந்தே செயல்படுகிறது.
இதுவே பிரபஞ்சத்தின் பொதுத்தன்மையாகும். இதிலிருந்து தனித்தன்மையைக் கணக்கிட முயற்சிப்போம்.
எல்லாப் பொருள்களிலிருந்தும் கடல் எப்படி வேறுபட்டுள்ளது?
மலை மற்ற பொருள்களிலிருந்து எப்படி வேறுபட்டுள்ளது?
எல்லா உயிரினங்களிலிருந்தும் மனிதன் எப்படி வேறுபட்டு
இருக்கிறான்?
இப்படி கணக்கிடும் முறையே பொருளின் தனித்தன்மையாகும்.
உணவைப் பொதுத்தன்மையாக வைத்துக்கொள்வோம். உணவிலிருந்து பொருளின் தனித்தன்மைக்குச் செல்வோம்.
பூரி, வடை, புரோட்டா இவை எண்ணெய் உணவுகள்.
இட்லி, இடியாப்பம், புட்டு இவை வேகவைத்த உணவுகள்.
இரசம், குழம்பு, சாம்பார் இவை நீர் உணவுகள்.
புளியோதரை, பொங்கல், பிரியாணி இவை அரிசி உணவுகள்.
பட்டியலை இப்படியே தொடர முடியும். ஒரு புரிதலுக்காகப்
பிரியாணி என்ற உணவுப்பொருளை பொதுத்தன்மையாக எடுத்துக்கொள்வோம். இப்பொழுது பிரியாணியில்
இருக்கின்ற தனித்தன்மைகளைக் கணக்கிடுவோம்.
ஒட்டக பிரியர்களுக்கு ஒட்டகக்கறி பிரியாணி
குதிரை பிரியர்களுக்குக் குதிரைக்கறி பிரியாணி
மாடு பிரியர்களுக்கு மாட்டுக்கறி பிரியாணி
கோழி பிரியர்களுக்கு கோழிக்கறி பிரியாணி
மீன் பிரியர்களுக்கு மீன் பிரியாணி
இறால் பிரியர்களுக்கு இறால் பிரியாணி
இறைச்சியே பிடிக்காதவர்களுக்கும் பிரியாணி பிடிக்கிறது
இவர்களுக்காகவே சிறப்பாக
காய்கறி பிரியாணி, காளான் பிரியாணி, காலிஃப்ளவர் பிரியாணி...
இப்படி பிரியாணிக்குள் பல தனித்தன்மைகள். மாடாவது, குதிரையாவது எல்லாமே
பிரியாணிதான். இப்படி எந்தப் பிரியாணிக்கும் ஒப்புதல் தெரிவித்து மூச்சுமுட்ட சாப்பிடுபவர்கள்
தனிரகம். பிரியாணி என்றாலே ஒட்டகப் பிரியாணிதான். ஒட்டகப் பிரியாணியைத் தவிர வேறு பிரியாணியைத்
தொடவே மாட்டேன். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாதென்று மீசையைத் தடவுபவர்களும், கூந்தலை முடிபவர்களும்
இருக்கலாம். இவர்களெல்லாம் வேறுகதை. பிரியாணி தனக்குள் இத்தனைத் தனித்தன்மைகளைக் கொண்டிருக்கிறது.
இதுவே நாம் கவனிக்க வேண்டிய அம்சம்.
ஒரு கதையைக் கவனியுங்கள். திக்குவாய் செல்வம். இவன்
அல்லியூர் கிராமத்துக்காரன். பல்பலைக் கழகத்தில் முதுகலை வரலாறு படித்துக்கொண்டு இருந்தான்.
சுருட்டை முடி, உருண்டைக் கண், மெலிந்த உருவம், சிவந்த தேகம், சிரிப்பிற்கு அழகன்.
அவன் பேசினால் வேடிக்கையாக இருக்கும். முதல் வார்த்தை தடுமாறும். ஒரு எழுத்து வாய்
நுனியில் குதித்துக்கொண்டே இருக்கும். எட்டித் தள்ள நாக்கு எவ்வளவோ முயற்சிக்கும்.
திடீரென்று எழுந்து குதித்துவிடும். அதன் பின்னாலேயே வார்த்தைகளும் மொத்தமாக்க் கொட்டும்.
முற்றுப் புள்ளியாக ஒரு மௌனம் இடைவெளி விடும். அடுத்த வாக்கியம் தொடரும். நாக்கு
துடிக்கும். எழுத்து குதிக்கும். இதனாலேயே இவனது நண்பர்கள் திக்குவாயா என்று அழைப்பார்கள்.
மாதங்கி மட்டும் வித்தியாசமானவள். அன்பென்றால் “டேய் மாமா” என்பாள். வம்பென்றால் “டேய் திக்குவாயா” என்பாள்.
“டேய் திக்குவாயா! என்கிட்டப் பேசாத... ரொம்ப கோவமா
இருக்கேன்... எல்லோரும் பட்டப் பேருல கூப்பிட்டா... திட்ட மாட்டயா! சிரிச்சுக்கிட்டே
இருக்க.” மாதங்கி உரிமையோடு
கண்டிப்பாள்.
காதலியைச் சமாதானம் செய்ய அதிகம் பேச மாட்டான்.
உருண்டை கண்ணைச் சுருக்கி, கன்னங்கள் பூரித்து, உதடுகளை விரித்து, சிரித்துக்கொண்டே இரண்டு எழுத்துக்களை உச்சரித்து, அம்மா என்று முடிப்பான். “விடும்மா”. வகுப்பறையின் உற்சாகத்தில் இவர்கள் தனித்துவமானவர்கள்.
இவர்கள் இல்லாத வகுப்பு, நெருப்பு இல்லாத அடுப்பைப்போல உற்சாகமின்றிக் கிடக்கும்.
ஒரு திங்களன்று வகுப்பறையின் உற்சாகம் இறந்துவிட்டது. இது ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த
விபரீதம்.
தாழ்வான ஓட்டு வீடு. வீட்டுக்குப் பின்னால் வயல்வெளி.
இரண்டிற்கும் இடையில் சின்ன மைதானம். காளை மாடு கட்டியிருக்கும். வைக்கோல்போற் மலை
போன்று குவிக்கப்பட்டிருக்கும். நல்ல பாம்பு ஒன்று நடமாடுவதாகப் பேச்சு இருந்தது. திக்குவாய்
செல்வம் மாட்டிற்கு வைக்கோல் எடுத்துப்போடச் சென்றான். வைக்கோலில் நல்லது சுருண்டிருந்தது.
இவனை அதுவோ, அதுவை இவனோ கவனிக்கவில்லை.
வைக்கோலைப் பிடுங்கியவன் பாம்பைச் சீண்டிவிட்டான். அதிர்ச்சியடைந்த பாம்பு செல்வத்தைக்
கடித்தது. கடிபட்ட செல்வம் துடித்துப் புரண்டான். வார்த்தை இல்லாத அலறல். விசயத்தைக்
கணித்த ஊர்க்காரர்கள் விரைந்தார்கள். கை வைத்தியங்களுக்கு இடையில் கிராம மருத்துவமனையை
அடைந்தார்கள்.
மருத்துவமனை கையை விரித்தது. “பாம்புக் கடிக்கு இங்கு மருந்து இல்லை. பெரியாசுபத்திரிக்கு
எடுத்துட்டுப் போங்க”. பத்து கிலோமீட்டர் கடந்து பறந்தார்கள். ஆசுபத்திரி பெருசு, ஆனால் மனசாட்சி
ரொம்பரொம்ப சிறுசு. அடி கையில் காசு வாங்காமல் அலுவலர்களின் வேலை நடக்காது. பல தாமதங்களுக்கு
இடையில் அனுமதிக்கப் படாமலேயே செல்வம் இறந்தான். ஊர்க்காரர்களின் ஒப்பாரிகளுக்கு இடையில்
கல்லூரி நண்பர்களின் கோபம் கொந்தளித்தது. மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்தனர். சமூக
இயக்க ஆதரவுடன் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டம் காவல்துறை நிகழ்த்திய தடியடியில்
முடிந்தது.
அல்லியூர் கிராமமே ஒப்பாரியில் நனைந்தது. நெஞ்சில்
அடித்துக்கொண்டும், மூக்கைச் சிந்திக்கொண்டும், மண்ணில் புரண்டுகொண்டும் அழுதவர்கள் ஏராளம். செல்வத்தின்
பேரைச் சொல்லி, உறவைச் சொல்லி, உரிமையைச் சொல்லி, நினைவைச் சொல்லி, கதையைச் சொல்லி
அழுது புலம்பியவர்கள் ஏராளம். மாதங்கி உட்பட வகுப்பறை நண்பர்களும் அல்லியூரில் தேங்கியிருந்தார்கள்.
அவர்களது இருப்பு அல்லியூர் புலம்பல்களோடு கலந்திருந்தது. மாதங்கி தலையில் அடித்துக்கொண்டு
அழுதாள். பக்கத்து ஊர்க்காரர்கள் இவளை அல்லியூர்க்காரி என்றே நம்பி விட்டார்கள். அவள்
கண்ணீர் காதலாய்க் கதறிக் கொண்டிருந்தது.
அண்ணன்களும் அக்காக்களும் “தம்பி” என்று அழுதார்கள். அப்பனும் அம்மாளும் “எம் பிள்ள” என்று அழுதார்கள். தம்பியும் தங்கையும் “அண்ணா” என்று அழுதார்கள். அக்காளின் பிள்ளையோ “மாமா” என்று அழுதது. இறுதிச்சடங்கு நிகழ்ந்தது. ஊர் இடுகாட்டில்
செல்வம் சாம்பலானான். இனி அவன் உண்மையல்ல, வெறும் நினைவே.
சரி, இறந்தவனுக்கு நமது அனுதாபங்கள் சேரட்டும். இறந்தவனிடமிருந்து
பொதுத் தன்மைகளையும் தனித் தன்மைகளையும் உணர முயல்வோம்.
வகுப்பறையில் மாணவன், பாலினத்தில் ஆடவன், அல்லியூரில் சொந்ந ஊரன், சமூகத்தில் ஒரு
சகமனிதன், உயிரினத்தில் ஒரு
சமூகவிலங்கு, பிரபஞ்சப் பொருள்களில்
இவனும் ஒன்று, ஆகியன இறந்தவனின்
பொதுத்தன்மைகள் ஆகும்.
“செல்வன்” என்று எல்லோரும் அறிந்திருந்ததும், “மகன், அண்ணன், தம்பி, மாமா” என்று உறவினர்களால் சுட்டப்பட்டதும், “திக்குவாயா” என்று நண்பர்களால் அழைக்கப்பட்டதும், “டேய் மாமா” என்று மாதங்கியால் அணைக்கப்பட்டதும், எரியூட்டியவர்களால் “பிணம்” என்று கருதப்பட்டதும் இறந்தவனின் தனித்தன்மைகள்
ஆகும்.
இவ்வாறு எந்தப் பொருளும் மற்ற பொருள்களுடன் கொண்டுள்ள
தொடர்புகளையும் ஒற்றுமைகளயும் கணக்கிடுவது பொதுத் தன்மையைக் கணக்கிடுதல் ஆகும். முரண்பாடுகளையும்
வேற்றுமைகளையும் கணக்கிடுவது தனித்தன்மையைக் கணக்கிடுதல் ஆகும். இப்படிக் கணக்கிடுவதிலிருந்து
ஐந்தாம் வழிமுறைக்குச் செல்வோம்.
No comments:
Post a Comment