Monday, July 6, 2020

அழுகிப்போன கல்வி


அழுகிப்போன கல்வி
புதியவன்

மூளையும் உடலும் ஒட்டிப் பிணைந்து
ஓடுகின்ற வேகத்தில் சூடேறிய பறைபோல்
சகமக்களின் மூச்சுக்காற்று அதிர்வதைக் கேளுங்கள்!

உங்கள் ஒவ்வொருவருக்கும்
உழைத்து உழைத்து களைத்துப் போனோம்...

எங்கள் பசிக்கு உணவு எங்கே?
எங்கள் புலன்களுக்கு சுவை எங்கே?
எங்கள் அறிவிற்கு இலக்கியம் எங்கே?
எங்கள் மனதிற்கு கலை எங்கே?

ஒரு மார்பில் பாலும்
மறு மார்பில் கல்வியும்
புசித்த எங்கள் செல்வங்களே!
எங்கள் நோய்க்கு மருந்து எங்கே?

இவர்கள் நமக்கு தாயல்லவா!
இவர்களின் கேள்விக்கு எதை பதிலாக்குவது?
அக்கறையின்மையும் கண்டும் காணாமையும்
எத்தனை காலம் பதிலாக நீடிக்கும்?
நமக்கு ஏன் சமூக அறிவு இருப்பதில்லை?

நான் மொழித்துறை மாணவன்
தமிழ் மட்டுந்தான்...?
நான் அறிவியல்துறை மாணவன்
இயற்பியல் மட்டுந்தான்...?
நான் தொழிற்துறை மாணவன்
பொறியியல் மட்டுந்தான்...?
நான் கலைத்துறை மாணவன்
பொருளியல் மட்டுந்தான்...?
இப்படி சொல்வதற்கு நாம்
தாயை மறக்கின்ற தருதலைகளா!

நெரிசல் இல்லாமல்
விபத்து நேராமல்
சமூகச் சாலையை எப்படி கடப்பது?

வாழ்வை கற்பித்தல் கல்வியின் கடமை!
சமூகத்தைக் கற்றல் அறிவின் கடமை!
கடமையைக் கல்வி சாதிப்பதுண்டா?

சக நண்பர்களை போட்டியாளர்களாக
முறைக்க வைக்கின்றது...
இயலாமைக்குள் மனித உணர்வுகளை
இறுக வைக்கின்றது...
போலி நட்பும் போலிச் சிரிப்பும்
மிளகும் உப்பும் பக்குவமாகத் தூவப்படுகின்றது...
சமூக உணர்வு அறுக்கப்படுகின்றது...

சமூக உண்மைகளைத் தலைகீழாக்கி
தனிமனிதனைத் தலைவனாக்கி
கண்டபடி சிரிக்கின்றது...

வகுப்பறையில் கல்வி நோக்கம்
அருவெறுப்பாய் நாறுகின்றது...
சாதிக்க வேண்டியது சமூகமாற்றமே!

எதை மட்டும் படித்தால் என்ன
தனிமை மட்டும் உடையட்டும்
மாணவர் ஒற்றுமை ஓங்கட்டும்!

அறியாமைக்கு முலாமிடும்
வகுப்பறைகளை இடிக்கலாம்...
வீதிகள் தோறும் கல்வி பெறலாம்...

நமக்கான சமூகக்கல்வி
பாடப் புத்தகங்களில் இல்லை
கல்லூரி வளாகங்களில் இல்லை
பரபரப்பான ஆடை அணிந்து
தெருக்களில்தான் திரிகின்றது...

தேடலாம் வாருங்கள்!
வெளிவந்த விபரம்

சாளரம், ஜுலை 2014.

No comments:

Post a Comment

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை