Saturday, May 23, 2020

இலக்கிய அறிவியல் 1


இலக்கிய அறிவியல்
(இலக்கியத்தின் சமூக விஞ்ஞான வரைவியல்)

புதியவன்

இலக்குகள் உடைய மனிதர்களுக்கெல்லாம் இலக்கியம் சொந்தமே. ஆனால், எது இலக்கியம்?

    இலக்கியம் என்பது ஒரு மொழியின் வெளிப்பாடாகும். மொழி என்பது ஒரு சமூகத்தின் முழுமையான வெளிப்பாடாகும். சமூகம் என்பது சகமனிதர்களின் வாழ்வியல் திரட்சி ஆகும். மனித வாழ்வியல் என்பது சமூகப் பொருளுற்பத்தியையும் சமூகப் பண்பாட்டு நிறுவனங்களையும் சார்ந்து இயங்குதல் ஆகும். சார்ந்து இயங்குதலை சமூகக் கருத்தியல்கள் நெறிப்படுத்துகின்றன. சமூகக் கருத்தியல்களின் இயக்கத்திற்கு மொழி கருவியாக அமைகின்றது. மனித சமூகப் பண்படுத்தல்கள் அனைத்தும் மொழியில் வெளிப்படுகின்றன. மொழியின் வெளிப்பாட்டில் பண்பட்ட கருத்தியல் களமாக இலக்கியம் திகழ்கின்றது. எனவே, கருத்தியல்களின் ஆகச்சிறந்த களமாக இலக்கியத்தை உணரலாம். 
    இலக்கியம் என்பது சமூக வாழ்வியலின் அதி முக்கியக் களமாகச் செயலாற்றுகின்றது. இலக்கியங்களை அணுகுதல் என்பது சமூகப் பண்பாட்டு நிறுவனங்களை அணுகுதல் என்பதன் அங்கமாகும். இதனால் மனித குலத்தின் சமூக வாழ்வியலை மதிப்பிடுவதற்கு ஒரு பொருத்தமானக் களமாக இலக்கிய அறிவியலை உணரலாம்.
          இலக்கிய அறிவியல் என்ற தலைப்பிற்குள் இரண்டு சிந்தனைகளை முதன்மைப்படுத்துகிறோம்.
       1.  இலக்கியத்தை வரையறுத்து விளக்குதல்.
       2.  இலக்கியங்களை அணுகுகின்ற சுற்றிவளைக்கும் பார்வைகள்
இலக்கியத்திற்கு வரையறை கொடுப்பதென்பது மொழித் துறையில் சமூகவிஞ்ஞானம் ஆற்ற வேண்டிய அதிமுக்கியக் கடமையாகும். எனவே இங்கு இலக்கியத்தை விளங்கிக்கொள்ள வரையறை செய்துகொள்வோம்.

இலக்கியத்தை வரையறுத்து விளக்குதல்
எது இலக்கியம்?
இலக்கியம் என்பது இலக்கினை இயம்புதல் ஆகும். இலக்கு என்பது கருத்தியல் வெளிப்பாடாகும். இயம்புதல் என்பது பேசுதல் ஆகும். எனவே கருத்துக்களைப் பேசக்கூடிய களமாக இலக்கியம் இயங்குகிறது. இலக்கியத்தைத் துல்லியமாக வரையறுக்க முயலலாம்.


இலக்கியம் என்பது
மனிதர்களது வாழ்வியல் கருத்தாக்கங்கள் குறித்த
ஒரு மொழியின் பண்பட்ட வெளிப்பாடாகும்
(சிவக்குமார்,கே.2016:25)

இலக்கியம் மூன்று நிலைப்படும்.
1.வரலாற்று நிலை
2.செயல் நிலை
3.கொள்கை நிலை

மூன்று நிலைப்படுதலும் இரண்டு வகைப்படும்.



1.வாய்மொழி இலக்கியம்
2.எழுத்திலக்கியம்
இவை இரண்டும் வரலாற்று நிலைப்பாடாகும்.

1.கலை இலக்கியம்
2.அறிவியல் இலக்கியம்
இவை இரண்டும் செயல் நிலைப்பாடாகும்

1.தன்னிச்சை இலக்கியம்
2.சமூகளாவியஇலக்கியம்
இவை இரண்டும் கொள்கை நிலைப்பாடாகும்
 (சிவக்குமார்,கே.2016:25-28)

வாய்மொழி இலக்கியம்
        எழுத்து உருப்பெறாத காலத்திலிருந்து சகமனிதர்கள் தங்களது கற்பனைகளையும் கருத்துக்களையும் வாய்மொழி வாயிலாக பரிமாறிக்கொண்டிருந்தார்கள். அதன் பண்பட்ட வடிவமே வாய்மொழி இலக்கியமானது. கதை சொல்லுதல், பழமொழி, கதைப்பாடல், உழைப்பாளர்களின் களப்பாடல், விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி போன்றன வாய்மொழி இலக்கிய வகையில் அடங்கும். பிறகுதான் மனிதர்கள்  எழுத்துக்களை உருவாக்கினார்கள்.
   
எழுத்திலக்கியம்
        எழுத்து உருப்பெற்ற காலத்திலிருந்து மனிதர்கள் தங்களது கற்பனைகளையும் கருத்துக்களையும் எழுத்துமொழி வாயிலாக பரிமாறிக்கொண்டார்கள். எழுத்துக்களில் பண்பட்ட வடிவமே எழுத்திலக்கியம் ஆனது. ஓலைச்சுவடிப் பதிவுகள், மரபுக்கவிதைகள், நவீனக் கவிதைகள், சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், இலக்கண இலக்கியச் செய்யுட்கள், மருத்துவச் செய்யுட்கள் போன்றன எழுத்திலக்கியங்களில் அடங்கும்.

கலை இலக்கியம்
        கலை இலக்கியம் என்பது சகமனிதர்களது வாழ்வியல் மேம்பாட்டிற்காக அவர்களது உணர்வுநிலையில் உந்துதல் ஏற்படுத்துகின்ற ஒரு மொழியின் பண்பட்ட வாழ்வியல் படைப்பாகும். கலை என்பது மனிதர்களது புலனறிவுடன் பேசுவது அல்ல. மாறாக, மனிதர்களது ஆழ்மனக் கருங்குழியோடு உரையாடுவது. அவர்களது கற்பனைகளிலும் எண்ணங்களிலும் கருத்துக்களை விதைப்பது. 

அறிவியல் இலக்கியம்
        அறிவியல் இலக்கியம் என்பது சகமனிதர்களது வாழ்வியல் மேம்பாட்டிற்காக அவர்களது புலனறிவு நிலையில் உண்மைகளை உணர்த்துகின்ற ஒரு துறை சார்ந்த மொழியின் பண்பட்ட விளக்கங்களாகும். அறிவியல் என்பது புலனறிவுடன் உரையாடுவது. ஒவ்வொரு துறை சார்ந்த உண்மைகளை அந்தந்த துறை சார்ந்த மொழிகளில் மனிதர்களது புலனறிவுக்கு பண்பட்ட வடிவில் துள்ளியமாக விளக்குவது. 


தன்னிச்சை இலக்கியம்
        சமூகளாவிய இலக்குகள் இல்லாமல் படைக்கப்படும் இலக்கியங்கள் மற்றும் சமூகளாவிய இலக்குகளுக்கு பயன்படாத இலக்கியங்கள் தன்னிச்சை இலக்கிய வகையில் அடங்கும். தான்தோன்றித்தனமான வெறும் கற்பனைகளையும் எண்ணங்களையுமே இலக்கில்லாமல் புனைவது இவ்வகை இலக்கியம்.

சமூகளாவிய இலக்கியம்
                கற்பனைகளையும் எண்ணங்களையுமே சமூகளாவிய இலக்கினை திட்டமாகக் கொண்டு புனைவது இவ்வகை இலக்கியம். மனிதகுலத்தை உயர்த்துவதற்கோ அல்லது உயரவிடாமல் சீரழிப்பதற்கோ பயன்படும்படி புனைவது. சமூகளாவிய  இலக்குடைய படைப்பாளர், சமூகத்தேவையின் அவசியம் குறித்த தனது புரிதல்களை உணர்த்துவதற்காகப் படைக்கப்படுகின்ற இலக்கியமாகும். சமூகத் தேக்கத்திற்கும் சமூக மேன்மைக்கும் இடைப்பட்ட சமூகளாவிய போரில் எந்த ஒன்றின் சமூகத் தேவையையும் சமூகளாவிய இலக்கியம் வெளிப்படுத்தும். இலக்கியப் படைப்பாளரின் நோக்கம் சமூகத் தேக்கமா அல்லது சமூக மேன்மையா என்பதை பொறுத்து சமூகளாவிய இலக்கியம் கட்டமைகின்றது.                                               (சிவக்குமார்,கே.2016:25-28)
               

இலக்கிய அறிவியலாகிய இந்த வசன இலக்கியம் வரலாற்று நிலையில் எழுத்திலக்கியமாகும். செயல் நிலையில் அறிவியல் கலை இலக்கியமாகும். கொள்கை நிலையில் சமூக மேன்மையை நோக்கமாகக் கொண்ட சமூகளாவிய இலக்கியமாகும்.
இத்தகைய வரையறை மற்றும் விளக்கங்கள் நமக்கு இலக்கியத்தைப் பற்றிய துல்லியமான அறிமுகமாக அமையலாம். ஆனால் இலக்கியத்தை முழுமையாக உணர இத்தகைய முகவரி போதாது. இலக்கியத்துடன் ஒன்றி வாழ்வதற்கான வாய்ப்பைப் பெற வேண்டும். இத்தகைய வாய்ப்பே சகமனிதரை அவரது சமூக அறிவிலும் உணர்விலும் உரமுடையவராக உருமாற்றும். கற்பனை வளத்திலும் கருத்துச் செறிவிலும் ஆற்றலுள்ளவராக நிலைப்படுத்தும். இத்தகைய நிலையினை அடைவதற்கு இலக்கியத்தைப் புரிந்துகொள்வது இன்றியமையாத சமூகக் கடமையாகும். அதாவது இலக்கியத்தைப் படைப்பவரும் படிப்பவரும் ஒருவருக்கொருவர் சமூகளாவிய நிலையில் புரிந்துகொள்ள முயல வேண்டும். இத்தகைய புரிதலுக்கு சுற்றி வளைக்கும் பார்வைகள் அவசியப்படுகின்றன. படைப்பாளரும் படிப்பாளரும் சுற்றி வளைக்கும் பார்வைகளுடன் இலக்கியத்தை அணுகுவது அவசியம். இலக்கிய அறிவியலின் இப்பார்வைகள் அறிவியல் கலை படைப்புகளுக்கும் முழுமையாகப் பொருந்தும். மேலும், இப்பார்வைகள் சொந்த வாழ்க்கை குறித்த மதிப்பீடுகளுக்கும் வழியமைக்கின்றன.

இலக்கியங்களை அணுகுகின்ற சுற்றிவளைக்கும் பார்வைகள்
    இலக்கிய அறிவியலின் சமூகளாவிய அணுகுமுறைகளுக்கு 20 சுற்றி வளைக்கும் பார்வைகள் இடம்பெறுகின்றன. அதாவது, இலக்கியம் படைப்பவர்களும், அனுபவிப்பவர்களும், விமர்சிப்பவர்களும் இலக்கியங்களை அணுகுவதற்குத் தேவையான கண்ணோட்டங்களாக இவை அமைகின்றன.
1. மனிதவரலாற்றுப் படிநிலை
2.பண்பாட்டு உறவுகள்
3.இயற்கை வர்ணனைகள்
4.மொழி நேர்த்தி
5.சமூக ஏற்றத்தாழ்வுகள்
6.பாலின ஏற்றத்தாழ்வுகள்
7.சாதி மத பேதங்கள்
8.பேதமை கடந்த உடன்பாடுகள்
9.எதார்த்தம் மீதான இலட்சியம்
10.முற்போக்கின் எழுச்சி
11.அரசியல் நோக்கு
12.தன்னிச்சை வெளிப்பாடு
13.கொச்சை பாலுறவு குறியீடு
14.பொருளாதார ஒடுக்குமுறை
15.கருத்தாக்கக் கட்டமைப்பு
16.ஆழ்மனப் பிரதிபலிப்பு
17.சமூகளாவிய விமர்சனங்கள்
18.தாய்தலைமை சமூகம்
19.தந்தையதிகாரச் சமூகம்
20.குழந்தைகளின் சமூக ஆக்கம்

                இத்தகைய சுற்றி வளைக்கும் பார்வைகள் எத்தகைய சமூக இலக்குகளை முதன்மைப் படுத்துகின்றன? சமத்துவ சமூகத்தைக் கட்டியமைப்பதற்காக மனித வாழ்வியலைப் பக்குவப்படுத்துகின்ற இலக்குகளை முதன்மைப்படுத்துகின்றன. ஏனெனில் மனித சமூகத்தில் மனிதர்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த பகையுறவுகளை களைந்து, தனித்துவங்கள் நிறைந்த நட்புறவுகளை படைத்து, இயற்கை முரண்களோடு சமத்துவமாய் சங்கமிப்பதே சமூகத்தின் தேவைகளாக இருக்கின்றன. இந்தத் தேவையை அடைவதற்கு மாறாக ஆபத்தாக அமைவது எது? பகையுறவுகளைக் கூர்மைப்படுத்தி, செயற்கைகளின் ஆக்கிரமிப்பால் இயற்கைக்கு சமாதி கட்டி, இயற்கையோடு அடக்கமாகும் தான்தோன்றித்தன முயற்சிகளே சமூகத்திற்கு ஆபத்தாக இருக்கின்றன. சமூகத்தின் தேவைக்கும் சமூக ஆபத்திற்கும் இடைப்பட்ட உறவானது சமூகப் பொருளுற்பத்தியின் இயக்கங்களால் தீர்மானிக்கப்படுகின்றன.  சமூகத் தேவையை நிறைவேற்றுவது நோக்கி சமூகப் பொருளுற்பத்தியை முன்னேற்றுவதா? சமூக ஆபத்தில் மூழ்குவது நோக்கி விட்டுவிடுவதா? இவைகள்தான் நம் முன்னுள்ள கேள்விகள். இந்தக் கேள்விகளிலிருந்து மனித வாழ்வியல் இயங்குகின்றது. சமூகத்தின் தனித்துவங்களைச் சமத்துவம் நோக்கி முன்னேற்றி, இயற்கையின் அங்கமாகப் பாதுகாக்கின்ற முயற்சிகளும் நிகழ்கின்றன. சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளைப் பாதுகாத்து, ஆபத்துகளில் மூழ்கி, இயற்கையைவிட்டு அழிவதற்கான வாய்ப்புகளும் தொடர்கின்றன. பாதுகாப்பிற்கும் அழிவிற்கும் இடையிலான போர்கள் சமூகப் பண்பாட்டு வாழ்வியலில் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
” பொருளாதார அடித்தளம் மாறுதல் அடைகிற பொழுது, அதன் மீது எழுப்பப்பட்டிருந்த பிரம்மாண்டமான மேற்கட்டுமானம் முழுவதும் வேகமாக மாற்றப்படுகிறது. இந்த மாறுதல்களைக் கவனிக்கும் காலத்தில் இரண்டையும் அதாவது, ஒரு புறத்தில் இயற்கை அறிவியலை எவ்வளவு கணக்காக வரையறுக்க முடிகிறதோ, அவ்வளவு கணக்காக வரையறுக்கப்படக் கூடிய உற்பத்தியின் பொருளாதார நிலைமைகளில் ஏற்படும் பௌதீக மாறுதலையும் – இன்னொரு புறத்தில் சட்டம், அரசியல், மதம், அழகியல், தத்துவம் முதலான – சுருக்கமாகச் சொன்னால் சித்தாந்த ரீதியான வடிவங்களையும் – எப்பொழுதும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். இந்தச் சித்தாந்த வடிவங்களுக்குள்ளேதான் இந்த மோதல் பற்றிய உணர்வு மனிதர்களுக்கு ஏற்பட்டு ஒரு முடிவைக் காணும்வரை போராடுகிறார்கள்.” (ஸ்டாலின்,ஜே.வி.2013(2001):55)

இந்தப் போர்களின் உயிரோட்டமான இயக்கம் இலக்கியம். இலக்கியப் போர்க்களத்தில் படிப்பாளர்களும் படைப்பாளர்களும் விருப்பு வெறுப்புகளைக் கடந்த பொறுப்பாளர்களாவர். ஏனெனில் இலக்கியம் வெறும் திரைச்சித்திரம் அல்ல, மனித வாழ்வியலின் இதயத்துடிப்பு. உயிரோட்டமான போர்க்களத்தில் நாம் பொறுப்பாளர்களாக இல்லாவிட்டால் பலியாகிப்போதல் எளிதாகிவிடும். எனவே இலக்கியத்தை வெறும் பார்வையாளர்களாகக் கடந்து செல்லுவது கூடாத காரியமாகும். சமூக அக்கறையுள்ள படைப்பாளர்களும் படிப்பாளர்களும் இலக்கியத்தை வாழ்வியல் சார்ந்த பொறுப்புணர்வுடன் அணுக வேண்டும். இலக்கிய அறிவியலின் பொறுப்பாவது சமூக அழிவிற்கு பாடம் புகட்டி  மேன்மையடைவதும், சமத்துவம் நோக்கி வெற்றியடைந்து சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதும் ஆகும். (சிவக்குமார்,கே.2016:75)
நாட்டில் இலக்கியங்கள் இருந்தால் அது நாகரிகத்திற்கு, அறிவு வளர்ச்சிக்கு, புரட்சிக்கு, முற்போக்கு மாறுதலுக்கு உதவிட வேண்டும். (பெரியார்.2017:531)


இத்தகைய பொறுப்பை சாதிப்பதற்கு சுற்றி வளைக்கும் பார்வைகள் அவசியப்படுகின்றன. இத்தகையப் பார்வைகள் இலக்கியம் பற்றிய நமது சமூக அறிவையும் உணர்வையும் வளப்படுத்தும். வாழ்வை நெறிப்படுத்தும்.


No comments:

Post a Comment

கற்றல் கற்பித்தல் நடைமுறையில் காலத்தின் திசைவழி எது?

    கற்றல் கற்பித்தல் நடைமுறையில் காலத்தின் திசைவழி எது?   புதியவன் முனைவர் கே.சிவக்குமார் SSM கலை மற்றும் அறிவியல்கல்லூரி, திண்டுக்...

அதிகம் பார்க்கப்பட்டவை