Sunday, July 5, 2020

ஆசிரிய தீபம்


ஆசிரிய தீபம்
புதியவன்

தாயின் கருப்பையில் ஓரிரு பிரசவம்தான்
ஆசிரியர் வகுப்பறையில் அறிவுப் பிரசவம்
ஆயிரம் ஆயிரம்…

பாட நூல்களை முடிப்பவர் அல்ல ஆசிரியர்
பாடம் வழியாக வாழ்வின் நூல்களைத் திறப்பவரே ஆசிரியர்…

உலக உண்மைகளை வகுப்பிற்குள் சுருட்டி
வகுப்பின் ஞானத்தை உலகிற்கு விரித்து
எங்கள் அறிவின் இதயமாய்த் துடிப்பவர் ஆசிரியர்…

சமுதாய வெளியின் பாசறை அனைத்தும்
சிந்தனையாளர்களுக்கு வகுப்பறைதான்!
ஒவ்வொரு வகுப்பறையும்
சிந்தனையாளர்களின் பாசறைதான்!
இந்த மெய்ஞானத்தை உணர்த்துபவர் ஆசிரியர்…

மாணவர்களைச் சிந்தனையாளர்களாகச் செதுக்குகின்ற
சிற்பிதான் ஆசிரியர்…
வகுப்பறை என்பது
சிந்திக்கக் கற்பதற்கான கலை கூடம்

எமது முயற்சிகளில் விழுதல்கள் அனைத்தும்
நாங்களாக இருப்பினும்
எழுதல்களாக இருப்பவர்தான் ஆசிரியர்…

எமது எழுத்துக்களுக்கு பின்னால் மறைந்திருக்கும்
ஓவியர்களைக் கண்டெடுப்பதும்…
எமது சலசலத்த பேச்சுக்களில் மறைந்திருக்கும்
கலைஞர்களைக் கண்டெடுப்பதும்…
எமது சலனமற்ற மௌனத்தில் மறைந்திருக்கும்
பேச்சாளர்களைக் கண்டெடுப்பதும்…
எமது குறும்புச் சேட்டைகளில் மறைந்திருக்கும்
படைப்பாளர்களைக் கண்டெடுப்பதும்…
எமது கேள்விச் சுனைகளில் மறைந்திருக்கும்
கருத்தாளர்களைக் கண்டெடுப்பதும்…
எமது நலமற்ற செயல்களால் மறைந்திருக்கும்
மனிதமாண்புகளை வெளிப்படுத்துவதும்…
எமது ஆசிரியப் பெருஞ்சுடரே!

எமது அறிவின் பெரும் பசிக்கு
தாயன்பு ஊட்டும் கருணையின் சிசு ஆசிரியர்!

எமது தடுமாற்றங்களில் ஊன்றுகோள் ஆவதும்…
எமது தயக்கங்களில் தூண்டுகோள் ஆவதும்…
ஆசிரியர் எனும் ஓர் அருமருந்தே!

நூல்களுள் எங்களைப் புதைக்காமல்
எங்களுள் நூல்களை விதைத்தவர் ஆசிரியர்!

நூல்களைப் புரட்டிச் சொல்பவராக அல்லாமல்
எமது வாழ்வின் வினாக்களுக்கு
பண்புமிக்க நடத்தைகளால்
பதில் உணர்த்தும் திறந்த நூலாகவே
வாழ்ந்துகொண்டிருப்பவர் ஆசரியர்!

வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இன்றி
எமது வருங்கால கனவிற்கு வழிகாட்ட…
நிகழ்கால வாழ்க்கைக்கு ஒளியூட்ட…
சுடராய் எழுந்த தீபங்களே
எமது ஆசிரியர்கள்!


No comments:

Post a Comment

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை