Monday, July 6, 2020

அழகாய் அணையும் மூச்சு

அழகாய் அணையும் மூச்சு
புதியவன்

அழுந்திச் செய்த சமூகவிஞ்ஞான முயற்சிகள்
எட்ட முடியாத தூரத்தில்
மானிட வெற்றியாய் உதிக்கும்!

எழவே முடியாது
என்னும்படி வீழ்ந்தோமென
மனித குல விரோதிகள்
எண்ணிச் சாகுவர்!

புதியதோர் உலகம் செய்தோமென
புரட்சியின் மெல்லிசை ஒலிக்கும்

விளையாட்டும் எழுத்தும்
படிப்பும் உழைப்பும்
சிறார்களது வாழ்வியல் பாடமாய் அமையும்

புத்துலக மனிதர்கள்
மகிழ்ச்சியாக வாழ்வர்!

எல்லாக் காந்தங்களையும்
தோற்கச் செய்கின்ற
காதல் கண்ணுடைய இளைஞர்கள்
சகமனித உணர்வாலும்
சமூக அறிவாலும்
எதிர்கால இலக்குகளாலும்
இணையாளர்களாக இணைந்து
கவர்ச்சி மிக்கப் பொன்னுலகை
மென்மேலும் அழகு செய்வர்…

மடிந்த விரேதிகள் ஆண்ட
பழைய கொலையுலகை
அருங்காட்சியகங்களில் கண்டுவிட்டு
நையாண்டியாகப் பேசி சிரிப்பர்
அவர்கள் வீட்டுக் குழந்தைகள்…

அந்தச் சமூக விஞ்ஞான உலகில்
முறைசெய்யப்பட்ட வடிவில்
விவசாயமும் தொழிற்சாலைகளும்
தொழில் நுட்ப முதிர்ச்சிகளும்
வாழ்வில்
எளிமையும் இனிமையும்
ஏறிடச் செய்யும்…

நமது பிள்ளைகளின்
நாளையப் பொன்னுலகில்
நானும் வாழ்வதாக நினைத்துப் பார்த்தால்
சுவாரசியம் எழுச்சி கொள்கிறது…

கீரைத் தோட்டத்தில் பணி செய்யும் நானும்
பல்கலைக்கழகத்தில் பணி செய்யும் என் இணையாளும்
மலைவாசிப் பழங்குடிகளிடம்
தேன் சேகரிக்கும் தொழிற்பேட்டைக்கு
சுற்றுலா செல்வோம் பணி விடுப்பில்!

அன்னாந்திருக்கும் குள்ள மூக்கின்
அழகிய மனிதர்கள்
கண்களும் இதழ்களும் புன்னகைக்க
எங்களை வரவேற்பர்…

அந்தப் புதிய மனிதர்களின்
பழையக் காடுகளில்
நட்பு பாராட்டி நிழற்படங்கள் பதிவோம்!

சிரிப்பிசை வற்றாமல்
சேகரித்தக் கதைகளை
எழுத்துக்களில் வரைவோம்!
இணையத்திலும் பதிவோம்….

விடுமுறை கடந்து
பணிநாள் நெருங்கும்!

இணையாளும் நானும்
அவர்களின் உள்ளங்கைகளைப் பற்றிக்கொள்வோம்!
ஓய்வு நேரத்தில் வீடியோ இணையத்தில்
பேசுவதாக உறுதி செய்வோம்!

அவர்களது விடுப்பில்
எங்களது ஊருக்கு
நிச்சயம் வருவார்கள் என்பதாக நம்புவோம்!

எனது பணியிடத் தோழன்
ஓய்வு நேரத்தில் அகம்நகப் பேசுவான்…
இணையத்தில் ரசித்த
எங்கள் பிரயாணப் படங்களை
ஆசையுடன் விசாரிப்பான்…


உழைப்பில் சொட்டும் நெற்றி வியர்வையை
விரலில் சுண்டிவிட்டு
பிரயாணம் தந்த புதிய நண்பர்களின்
வாழ்விட அனுபவங்களை
உள்ளம் சுரந்து பேசுவேன்..

எண்ணம் படர்ந்தவரை
ஒவ்வொரு நொடியும்
மகிழ்ச்சியைச் சேகரிக்கும்
தருணங்களாகவே உணர முடிகிறது!

மகிழ்ச்சி வற்றாத வாழ்வில்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்ற மனநிறைவில்
எனக்கே தெரியாமல்
என் மூச்சு நின்றுவிடுதல் இனிது!

வெளிவந்த விபரம்

புதிய கோடாங்கி, ஜனவரி 2016, (பக். 44 - 45)




No comments:

Post a Comment

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை