விதி-1.2 முரண்பாட்டின்
மோதல்களுக்குள் நிகழ்கின்ற அளவு மாற்றமும், பண்பு மாற்றமுமே இயங்குதலை நகர்த்துகின்றன. (சிறுகதை
4)
முரண்பாட்டில் அளவு மாற்றமும் பண்பு மாற்றமும் நிகழ்கிறது.
இத்தகைய மாற்றங்களுக்கே இயக்கத்தை நகர்த்துகின்ற ஆற்றல் இருக்கிறது. அதாவது, திருத்தப்படுகின்ற
விடைத்தாள் தேர்வு முடிவை அறிவிக்கின்ற தாளாக மாறுதல்.
வகுப்பறையைக் கவனியங்கள். படிப்பென்றால் பாகற்காய்தான்.
அதுவும் பத்தாம் வகுப்பென்றால் சொல்லவா வேண்டும். பக்கம் பக்கமாய் மனப்பாடம் செய்து, குடம் குடமாய்
வாந்தி எடுக்கணும். எல்லா வகுப்பிலும் அடிவாங்கியப் பெருமை எங்களுக்கு உண்டு. வகுப்பறையே
எங்களுக்கு மறத்துவிட்டது. மறைமுகமாய் விளையாடுவதே வகுப்பறையில் எஞ்சியது. இங்கிலீசு
வாத்தியார் வந்துவிட்டால் இன்னும் நாசுக்காக விளயாடுவோம். இயந்திர முறையில் படிக்க
எங்களால் முடிவதில்லை. உணர்வுகள் நிறைந்த மனிதருக்கு இது கடினமல்லவா. தேர்வின் நிர்பந்தத்தால்
சில நேரம் படிக்கும் துணிச்சலும் வந்துவிடும். அப்படித்தான் ஒரு முறை அரையாண்டுத் தேர்வும்
வந்தது. நாங்களும் இரவில் கண் விழித்துப் படித்தோம்.
தூக்கத்தை சமாளிக்க கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றுகிறோமோ
இல்லையோ, வாயில் காப்பி
ஊற்றிவிட வேண்டும். மறுநாள் ஆங்கிலத்தேர்வு. உங்களுக்கு எங்களது பரிதாப நிலை புரிந்திருக்க
வேண்டும். காப்பியின் உதவியோடு சில வினாக்களைக் காப்பி அடிக்கவும் தயார் செய்தோம்.
எங்கள் திட்டப்படி தேர்வும் முடிந்தாயிற்று. ஒரு நாள் திருத்தப்பட்ட விடைத்தாளைக் கையில்
கொடுத்தார்கள். எனக்கு அதிர்ச்சி. நான் ஃபெயிலாகிவிட்டேன். நூற்றுக்கு 29 மதிப்பெண்.
ஆனால், என்னோடு படித்தவர்கள்
பாஸாகிவிட்டார்கள். இவர்களும் ஃபெயிலாகியிருந்தால் எனக்கு அதிர்ச்சியே வந்திருக்காது.
பாஸாக வழியிருக்கா என்று துருவினேன். என்ன அநியாயம்! நான் கஷ்டப்பட்டு காப்பியடித்தப்
பக்கம் திருத்தப் படாமலேயே இருக்கிறது.
விடைத்தாளுடன் வாத்தியாரிடம் விரைந்தேன். அவர் எங்கள்
இருவரையும் முறைத்தார். குற்றம் தன்பக்கம் என்பதை உணர்ந்தவர் போல திருத்தினார். ஒரே
பக்கத்தில் ஆறு மார்க். மொத்த மதிப்பெண் 29 லிருந்து 35 சதவிகிதமாக மாறியது. நாங்கள்
காப்பியடித்த முயற்சி வீண்போகவில்லை. நானும் பாஸாகிவிட்டேன். முயற்சி திருவினையாக்கும்
என்று யாரோ சொல்லியிருக்கிறார்களே.
இப்போது மதிப்பெண்ணில் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனிப்போம்.
ஆசிரியர் விடைத்தாளைத் திருத்தத் தொடங்குகிறார். உடனே, மதிப்பெண் உயர்வதற்கும் வீழ்வதற்கும் இடையிலான போராட்டம்
தொடங்குகிறது. இந்த முரண்பாடே தேர்வு முடிவை வெளியிடுதல் என்ற இயக்கத்தை நகர்த்திச் செல்கிறது. மதிப்பெண்
அளவு 1லிருந்து 34 சதவிகிதமாக இருக்கின்றவரை ஃபெயில் என்பதே நிலை. அதாவது, தேர்ச்சி பெறவில்லை.
ஆனால், மதிப்பெண்களின்
அளவு 35 சதவிகிதத்தை எட்டிவிட்டால் பாஸ் என்று அறிவிக்கப்படுகிறது. அதாவது, இந்த விடைத்தாள்
தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்படுகிறது. இங்கு மதிப்பெண்ணில் ஏற்பட்டுள்ள
அளவு மாற்றம் பண்பு மாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறது.
தேர்ச்சி பெற்ற மகிழ்ச்சியுடன் சமூக நிகழ்வுகளை
கவனியுங்கள். சமூகத்தில் பல்வேறு விதமானப் போராட்டங்கள் நிகழ்வதைக் காண முடிகிறது.
அமைதியை நேசிக்கும் சமூகத்தில் இத்தகைய போராட்டங்கள் எதற்காக? சமூகவிஞ்ஞானிகளின்
பதிலைக் கவனியுங்கள்.
“மக்களின் பிரச்சனைகள் எண்ணிக்கையிலும் அடர்த்தியிலும்
அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் அமைதியை இழக்கிறார்கள். விளைவு, அமைதியை மீண்டும்
அடைவதற்காக அமைதியற்றப் போராட்டங்களை நிகழ்த்துகிறார்கள்.” அதாவது, பிரச்சனைகளின் அளவும் வேகமும் அதிகரிக்கின்றபோது
மக்களின் பண்பில் மாற்றம் ஏற்படுகிறது. அமைதியான மக்கள் போராட்டக்காரர்களாக உருவெடுக்கிறார்கள்.
சகமக்கள் வாழ்விற்குள் பிரச்சனைகள் இருப்பதற்கும் தீர்வதற்கும் இடையிலான முரண்பாட்டை
உணர முடிகிறது. பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதுவே இந்த முரண்பாட்டிற்குள்
நிகழ்கின்ற அளவுமாற்றம். இதன் விளைவாக மக்களின் வாழ்க்கை அமைதிப் பண்பிலிருந்துப் போராட்டப்
பண்பிற்கு மாறியிருக்கிறது. அளவு மாற்றம் பண்பு மாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறது.
இப்படித்தான் அளவு மாற்றம் பண்பு மாற்றத்தைச் சாதிக்கிறது.
ஒரு பொருளில் ஏற்படும் அளவு மாற்றம் அதன் பண்பையே
மாற்றிவிடும். இந்த உண்மையை உணர வேண்டியது அவசியம்.
சூடேறிக் கொண்டிருக்கும் நீர் 100 டிகிரி வெப்பத்தில்
நீராவியாக மாறுதல்.
குளிர்ந்துக் கொண்டிருக்கும் நீர் 0 டிகிரி வெப்பத்தில்
பனிக்கட்டியாக மாறுதல்.
இதுபோன்று ஏராளமான எடுத்துக்காட்டுகளை நம்மால் கண்டறிய
முடியும். இனி இயங்குதலின் மூன்றாம் தன்மை.
No comments:
Post a Comment