விதி-1.1 முரண்பாடுகளே இயங்குதலை நிகழ்த்துகின்றன
இயங்குதலின் முதல் தன்மைக்கு வருகிறோம். இயங்குதல் நிகழ்வதற்கு முரண்பாடுகளே அடிப்படை. முரண்பாடு என்பது எதிர்நிலைகளின் ஒற்றுமை. ஒன்றுபட்டு வாழும் இரண்டு எதிரிகள், எதிரெதிர் நிலையிலுள்ள இரண்டு தன்மைகள். சண்டையிடும் இரண்டு கூறுகள்.
‘பகல் x இரவு’ – அதாவது, இரவை ஒழித்துப் பகல் எழுவதும்: பகலை ஒழித்து இரவு சூழ்வதும்.
நிரம்பியிருக்கும் பொருள்களால் ஆதியந்தம் அறிய முடியாத பிரபஞ்சத்திலிருந்து மனித மூளைகளின் கருத்துக்கள்வரை, அனைத்தும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதற்கு அடிப்படைக் காரணம் முரண்பாடுகளே. இங்கு சர்வமும் முரண்பாடுகளால் நிரம்பியுள்ளன. இந்த முரண்பாட்டிற்கு மூன்று தன்மை உண்டு. அதாவது மூன்று கண் நுங்கைப் போன்றது.
முழு நுங்கை நோண்டிச் சாப்பிட்டதுண்டா? கிடைத்த நுங்கிற்கு இரண்டு கண்ணோ, மூன்று கண்ணோ. நோண்டிச் சாப்பிடுவதில் எத்தனை பிரியம் இருக்கும்! ஐப்பசி மழை சித்திரையில் கொட்டுவது போன்ற உணர்வு ஏற்படுமல்லவா. முரண்பாட்டின் மூன்று தன்மைகளும் இத்தகைய உணர்வை ஏற்படுத்தும்.
விதி-1.1.1 முதன்மை முரண்பாடும் x முதன்மையற்ற முரண்பாடும்
விதி-1.1.2 உள் முரண்பாடும் x வெளி முரண்பாடும்
விதி-1.1.3 நட்பு முரண்பாடும் x பகை முரண்பாடும்
இவற்றை ஒவ்வொன்றாக கவனிக்கப் போகிறோம். இப்பொழுது முதன்மை முரண்பாட்டிற்குச் செல்வோம்.
No comments:
Post a Comment