விதி-5 நடைமுறையையும்
தத்துவத்தையும் உணர்தல் (சிறுகதை 10)
நடைமுறை என்பது எதை செய்ய நினைக்கிறோமோ
அதை செய்துகாட்டுவது!
தத்துவம் என்பது செய்யப்போவதைப் பற்றி
நமக்கிருக்கும் அறிவு!
அதாவது, பால் காய்ச்சுவதிலிருந்து பெற்ற அறிவின் விளைவாகத்
தேர்ந்த முறையில் பாலைக் காய்ச்சுதலும், பால்கோவா கிண்டுதலும். உங்களுக்குச் சுகரென்றால்
இந்த எடுத்துக்காட்டைத் தவிர்த்துக்கொள்வோம். தோசை சுட்டதிலிருந்து பெறும் அறிவின்
விளைவாகத் தேர்ந்த முறையில் தோசை சுடுதலும், பொடிதோசை, முட்டை தோசை, நெய் தோசை, மசால்தோசை, வெங்காயதோசை என்று பலவிதங்களில் தோசை சுடுதலும்.
அதாவது, எப்படி தோசையைச் சுடப்போகிறோம் என்பதிலிருந்து, எப்படி இந்தச்
சமூகத்தைச் சகமக்களுக்கானச் சொர்க்கமாக மாற்றப் போகிறோம் என்பதுவரை, அனைத்து வகையான
அறிவிற்கும் தத்துவம் என்றே பெயர். இங்கு தத்துவவாதிகள் செயல்வீரர்களாக உதிப்பதும், செயல்வீரர்கள்
தத்துவாதிகளாக உதிப்பதும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதபடி பிணைந்திருக்க வேண்டும்.
இந்த அளவில் நமது தத்துவமும் நடைமுறையும் மிகமிக எளிமையானது.
நம் மூளைக்குத் தோசையைத் திருப்பிப் போடுதல் பற்றி
அறிய முடியுமென்றால், சமூகத்தைத் திருப்பிப்போடுதல் பற்றியும் அறிய முடியும். இதுவே
நம் தத்துவம்.
நம் உழைப்பின் வலிமைக்குத் தோசை சுட எளிமையாக முடிகிறதென்றால், சகமக்களின் உலகத்தைச்
சொர்க்கமாக மாற்றிக்காட்டுவதும் எளிமையாகவே முடியும். இதுவே நம் நடைமுறை.
இந்த உண்மைகளை நாம் உணர்ந்தாக வேண்டும். நீங்கள் பாட்டியிடம்
கதை கேட்டதுண்டா? கதை சொல்லும் பாட்டி இந்தக் காலத்தில் உண்டா என்று கேட்கிறீர்களா.
கற்பகம் பாட்டி அழகாகக் கதை சொல்வாள். நல்ல கருத்தான பாட்டி. அகண்ட கண்களும், கிளி போன்ற வளைந்த
மூக்கும், உதட்டிலிருந்து
எட்டிப்பார்க்கும் நீண்ட பற்களும் அவள் பாவனைகளுக்கு வசீகரம் செய்வன. சிறுவயதில் இருந்தே
கதைகளோடு வளர்ந்தவள்.
இராவணன் காவியம், செல்லியம்மன் கதை, அரிச்சந்திர புராணம், ஆயிமண்டபக்கதை, முத்துப்பட்டன் கதை, மதுரை வீரன் கதை, அபூர்வ சிகாமணி, ராஜாம்மாள் கதை, நல்லதங்காள் கதை, முட்டாள் மந்திரி கதை போன்ற பல கதைகளைக் கேட்டு
வளர்ந்தவள். அவளுக்கு கதை சொல்லும் உந்துதல் எப்பொழுதும் உண்டு. கதைகளோடு வாழ்வதிலுள்ள
இன்பங்களையும் பக்குவங்களையும் தலைமுறை கடந்து உணர்த்துபவள். எங்களிடம் பேச எவ்வளவோ
ஏங்குவாள். நாங்கள் ஓடித்தொலைவதிலேயே குறியாக இருந்தோம். பலரிடம் கதை கேட்டு, பலரிடம் கதை சொல்லி, எண்ணங்களையும்
கற்பனைகளையும் இளமையாக வைத்திருக்க எங்களால் முடியவில்லை. தொலைக்காட்சி, கணினி, அலைபேசி இவற்றின்
உதவாக்கரை நிகழ்ச்சிகளில் மனதைத் தேங்கவிட்டோம். எங்கள் உணர்வுகள் வறண்டுவிட்டன.
அவள் பேச்சில் எங்களை அறியாமல் மூழ்கிய நாட்களும்
உண்டு. அவளுக்கு வயது அறுபத்து எட்டு. ஆனால் அவள் வார்த்தைகளுக்கு மட்டும் என்றும்
பதினாறு. தலையை ஆட்டியும் கைகளை வீசியும் சுவாரசியமாகப் பேசுவாள். அவள் பேச்சே கதையாக
விரியும். வார்த்தைகளின் உணர்வுகளுக்கு ஏற்ப எடுப்பாக பேசுவதில் அவள் அளவிற்கு யாருமில்லை.
எங்கள் பகுதியில் தொடர் மின்வெட்டு நல்ல அனுபவத்தை உருவாக்கியிருக்கிறது.
இரவு எட்டு மணியிலிருந்து பதினொரு மணிவரை மொட்டைமாடி
நிரம்புகிறது. கற்பகம் பாட்டியிடம் ஆசையாகக் கதை கேட்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள்.
இரவு மின்வெட்டு கதையரங்கமாக பொலிவு பெற்றுள்ளது. செல்பேசியில் விளையாடும் சிறுவர்கள்கூட
கதையோடு கலந்துவிடுகிறார்கள். ஆளுக்கொரு கதைசொல்வது பழக்கமாகி வருகிறது. புதிய கதைகளைத்
தெரிந்து கொள்வதில் எல்லோருக்கும் ஆர்வம். அன்றாட நிகழ்விலிருந்தே ஒவ்வொருவரும் கதையைச்
சொல்லியும் கருத்தாக பேசியும் மகிழ்கிறார்கள். இதற்கு தூண்டுகோளாய் கற்பகம் பாட்டி
துலங்குகிறாள். கற்பகம் பாட்டி சொல்லும் கதையை கவனியுங்கள்.
“சமீபத்துல தசரத் மான்ஜி செத்துப் போயிட்டாரு. நல்ல
மனிதரை இந்த பூமி இழந்துருச்சு. உங்களுக்கு தசரத்மான்ஜியைத் தெரியுந்தானே? அடடா, அவரப்போன்ற துணிச்சலான
உழைப்பாளியை உலகம் கண்டதில்லை. அவரளவுக்கு மனவீரம் யாருக்கும் இருந்ததில்லை. அவரு ஊரு
ரொம்பவும் பழசு. அந்த ஊருல அறுபது கிராமம். கிராமத்து மக்கள் பல காரணங்களுக்காக நகரத்துக்குப்
போகவும் வரவும் இருந்தாங்க. பழைய ஊருக்கும் நகரத்துக்கும் இடையில பெரிய மலை இருந்துச்சு.
எல்லாரும் இந்த மலையைக் கடக்க பல மைல் தூரம் நடந்தாங்க. தண்ணி எடுக்கவும், ஆசுபத்திரி போகவும், பள்ளிக்கூடம் போகவும், கடத்தெருவுக்குப்
போகவும் நடையா நடந்து மலைக்குப் பின்னால போனாங்க. பழைய ஊர் வாழ்க்கை நகரத்துக்கு நடையா
நடந்தது. இந்த நடைக்கு என்ன வயசுன்னு மலைக்கு மட்டுந்தான் தெரியும்.
விவசாய வேலை நிகழ்ந்தால் கூலிக்குப் போவாங்க. அது
அறுவடை முடிந்த காலம். மான்ஜி ஒரு குழுவோடு பொந்தழிக்கப் போயிருந்தாரு. அதாவது பொந்துகளில்
வயல் எலிகள் தானியங்களை சேகரித்து வைத்திருக்கும். அந்நப் பொந்துகளை அழித்து தானியங்களை
எடுப்பாங்க. தானியங்கள் கிடைக்காவிட்டாலும் எலிகளைப் பிடிச்சுட்டு வருவாங்க. அவர்களோட
வாழ்க்கையில அன்றாட உணவாக இதுகளைச் சாப்பிடுறாங்க. சாதிக் கட்டுப்பாட்டுப்படி அவங்க
வாழ்க்கை இப்படித்தான் இருந்திருக்கு.
மான்ஜி எலிகளோடு குடிசைக்கு வந்தாரு. குடிதண்ணீர்
குடங்களைக் காணல. வழக்கமான அன்போடு மனைவியைக் கூப்பிட்டுவிட்டு அமைதியானாரு. மனைவி
தண்ணீக்குப் போயிருக்காள். வழக்கமான பாதை பராமரிக்கப்படாமல் இருந்தது. நிறைய மேடு பள்ளங்கள்.
தண்ணீருடன் வந்தவள் பள்ளத்தில் நழுவி விழுந்திட்டாள். தண்ணீரைச் சிதறிக்கொண்டு பானைகள்
பள்ளத்தில் உருண்டன. பானைகளோடு கிடந்தாள் பாகுனிதேவி. மான்ஜியின் மனைவிக்கு இதுதான்
பெயரு. பதறிப்போன கிராமத்துக்காரங்க பள்ளத்திலிருந்து தூக்கி வந்தாங்க. மூச்சு பேச்சு
இல்ல. எலும்பு முறிஞ்சு இரத்தமே உருவமாகக் கிடந்தவள ஆசுபத்திரிக்கு தூக்கிட்டு ஓடுனாங்க.
தசரத் மான்ஜியை நிதானப்படுத்த யாராலயும் முடியல. “அடியே... பாகுனி...” ன்னு அவர் அழுத சத்தம் வழியெல்லாம் கேட்டுச்சு.
ரொம்ப தூரத்துக்கு போயிட்டாங்க. ஆசுபத்திரி சில மணி நேரத்துல இருக்குது. பாகுனிதேவிக்கு
பொறுமை தாங்கல. செத்துப்போயிட்டாள். வழி நெடுக கண்ணீர் மழை. ஒப்பாரி வைத்துக்கொண்டு
ஊர் வந்து சேர்ந்தாங்க. இது நடந்தப்ப மான்ஜிக்கு இருபத்து நான்கு வயசு.
அவருக்கு இதயம் வேகமாகத் துடிச்சது. மனசாட்சி கேள்வி
கேட்டது. “எல்லாவற்றிற்கும் மலையைச் சுற்றித்தான் போகணுமா? மலையின் குறுக்கே
ஒரு பாதை இருந்திருந்தால்! விரைவில் மருத்துவமனை சென்றிருந்தால்! பாகுனி இறந்திருப்பாளா!” இனி நம்ம மக்களுக்கு
இப்படியொரு சம்சவம் நடந்திடக் கூடாது. உறுதியாக முடிவெடுத்தாரு மான்ஜி. அந்தப் பெரிய மலை
இவருக்கு பாதையாக கற்பனையாச்சு. எண்ணங்களால மலையைத் தகர்த்தாரு. மலையைப் பாதையாக மாற்றும்
திட்டம் இவருடைய சிந்தனையில் உருவெடுத்தது.
உளியையும் சுத்தியலையும் எடுத்துக்கிட்டு மலையின்
முன்னால நின்னாரு. மலை முகட்டில் சூரியன் உதயமானான். மலை இவரை ஒற்றைக் கண்ணால் முறைப்பதுபோல
இருந்தது. பாகுனி தேவியை நெனச்சாரு. உணர்ச்சிவசப்பட்டு அவருக்கு கண்கள் கலங்கியது.
ஒரு பைத்தியத்தைப் போல கத்தினாரு. “உன் சத்தியமாக இந்த மலையைப் பாதையாக்குவேன்!” உளியையும் சுத்தியலையும்
எடுத்து அரையத் தொடங்கினாரு. உளியின் நுனியில் பாறைகள் சிதறுச்சு. நெருப்புத் துகள்கள்
சீறுச்சு. இருட்டு படர்ந்துச்சு. நெருப்பொளி ஏற்றி இரவிலும் தொடர்ந்து உழைச்சாரு. உளியும்
சுத்தியும் மாறிமாறி பேசிட்டிருந்துச்சு. பல பகல்களையும் இரவுகளையும் கடந்து
உழைச்சாரு. பாதை கொஞ்சங் கொஞ்சமா உருவெடுத்துச்சு.
“உன் ஒருவனால் மலையை என்ன செய்ய முடியும்? வீண் முயற்சி, உழைப்பை வீணாக்காதே!
விட்டுவிடு...” என்று ஊர்க்காரங்க
அறிவுவை சொன்னாங்க.
“காதலியின் நெனப்பிற்குத் தாஜ்மகால் கட்டுவதாக நெனப்பு” என்று சிலர் கிண்டலா
பேசுனாங்க.
“மலையோடு இவர் மல்லுக் கட்டுவதைப் பார்த்தால், சுண்டெலியும் யானையும்
முட்டிட்டு இருப்பது போல இருக்கு” என்று சிலர் சிரிச்சாங்க.
மான்ஜி எதையும் பொருட்படுத்தல. சோர்வு கண்டுட்டா
பாகுனி தேவியை நினைச்சுக்குவாரு. அவள் நெனப்பு அவரது வலிமையை பல மடங்கு ஆக்குச்சு.
அயராது பல வருடங்கள் உழைச்சுட்டாரு. மலையில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை மக்கள் உணரத்
தொடங்குனாங்க. பாதை உருவாகுவது நடக்க முடியாத கனவு இல்ல. இது நடக்கப் போற நிஜம். இந்த
உண்மை மக்களுக்கு உற்சாகமாக இருந்துச்சு. மனைவியின் மீதான மான்ஜியின் காதலை ஊரே கொண்டாடுச்சு.
காதலின் புதிய சின்னம் என்று இளவயசுங்க பேசி மகிழுதுங்க. அந்த மலையைவிட மான்ஜியின்
மரியாதை உயரமாத் தெரிஞ்சுச்சு. மக்களும் உதவிக்கு வரத் தொடங்கிட்டாங்க. இருபத்திரண்டு
வருசம் ஓயாத அவரது முயற்சிக்கு வெற்றி கெடச்சாச்சு. அவர் சிந்தனையில் இருந்த மலைப்பாதை
நிஜத்தில் உருவாயிடுச்சு. கண்களை மறைத்த மலை இன்று வழிசேர்க்கும் பாதையாக பிறந்திருக்கு.
அறுபது மைல் நடந்தாங்க. இன்று பத்து மைலில் நகரம்.
சிறுசுங்க புத்தகப் பையோட பள்ளிக்கூடம் போகுதுங்க. இந்தப் புதிய வழி வாழ்க்கைய எவ்வளவோ
மாத்திடுச்சு. தனி ஒரு வீரனாக இருபத்திரண்டு ஆண்டுகள் செதுக்கி, பெரிய மலையை பாதையா
மாத்தியிருக்காரு தசரத் மான்ஜி. இந்த உழைப்பின் கதை வரலாற்றின் புதிய கதை. ஒரு மலை, ஒற்றை மனிதனின்
முயற்சிக்கு தலை வணங்கிருக்கு. பீகார் மாநிலத்துல நிகழ்ந்த இந்த அதிசயம் வேறு எங்கும்
நிகழல்ல. தசரத் மான்ஜியின் இந்த சாதனை நமக்கு முக்கியமானப் படிப்பு.
மக்கள் ஒற்றுமையா உழைத்திருந்தால் என்ன? ஒருத்தருக்கு கட்டுப்பட்ட
மலை மக்களின் ஒற்றுமைக்கு கட்டுப்படாமலா போயிடும்! மக்கள் ஒன்று சேர்ந்திருந்தா 22
வருசம் நகர்ந்திருக்காது. 22 நாட்களில் பாதை உருவெடுத்திருக்கும். நம்ம வாழ்க்கையில
உள்ள எல்லா பிரச்சனைகளும் இந்த மலை மாதிரி. மக்கள் எல்லாரும் ஒற்றுமையா மாறனும். பிரச்சனைகளுக்கு
எதிராகக் கருத்தாகச் செயல்படனும். இப்படிச் செயல்பட்டால் நல்லது நடக்கும். பிரச்சனைகள்
இல்லாத புதிய உலகை உருவாக்க முடியும். நாளைய தலைமுறைகளாவது நிம்மதியா வாழும்.”
சரி, கற்பகம் பாட்டி சொன்ன இந்தக் கதையை நினைத்துப் பாருங்கள்.
தசரத் மான்ஜி நமக்கு நடைமுறையையும் தத்துவத்தையும் கற்றுத் தருகிறார்.
மலையைக் குடைந்து பாதையை உருவாக்க வேண்டிய தேவை
இருக்கிறது. உளியையும் சுத்தியலையும் கொண்டு தொடர்ந்து உழைத்தால் பாதை உருவாகிவிடும்.
அந்தப் பாதை நமக்கு இத்தகைய பயனைத் தரும்... இது உருவாக்கப்பட வேண்டிய மலைப்பாதையைப்
பற்றி மான்ஜிக்கு இருந்த அறிவு. இதுதான் தத்துவம்.
மலையைக் குடைந்து பாதையை உருவாக்க வேண்டும். இந்த
விருப்பத்தை நடத்திக் காட்டுவதற்காக 22 ஆண்டுகள் தொடர்ச்சியாக உழைத்திருக்கிறார். மான்ஜியின்
அறிவு மலைப்பாதையை உருவாக்கியிருக்கிறது. இதுதான் நடைமுறை.
நீங்கள் நடைமுறையில் சமூகவிஞ்ஞானக் களங்களில் சமூகவிஞ்ஞானியாக
வாழப்போகிறீர்கள். தத்துவம் பற்றிய கூடுதலான செயலனுபவங்களைப் பெறப்போகிறீர்கள். அப்போது
உங்கள் பிள்ளைகளுக்குத் தத்துவம் பற்றி இன்னும் துல்லியமாக விளக்குவீர்கள். தத்துவம்
என்பது ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த விதிகள் அல்ல. எல்லாத் துறைகளுக்கும் பொதுவாகப்
பொருந்தக்கூடிய விதிகளாகும். இத்தகைய விதிகள் உலகத் தத்துவங்களை இரண்டாகப் பிரிக்கின்றன.
1.அறிவெதிர் தத்துவம் (Nescience philosophy), 2.அறிவியல் தத்துவம் (Science philosophy). அறிவெதிர்
தத்துவம் என்பது இயங்காவியல் கருத்துமுதல்வாதம் ஆகும். இது இயக்கத்தையும் பொருள்களையும்
வெறும் கற்பனைக் கருத்துக்களே என்பதாக விளக்குகிறது. அறிவியல் தத்துவம் என்பது
இயங்கியல் பொருள்முதல்வாதம் ஆகும். இது எல்லாக் கருத்துக்களும் இயக்கமே உருவாகிய பொருள்களையே
முதன்மையாகக் கொண்டிருக்கிறது என்பதாக விளக்குகிறது. நமக்கு சமூகவிஞ்ஞானமாக அறிமுகமாகியுள்ள
ஐந்து வழிமுறைகளே இயங்கியல் பொருள்முதல்வாதமாகும்.
அதாவது அறிவெதிர் தத்துவம் என்பது அஞ்ஞானங்களின்
அஞ்ஞானமாக இருக்கின்றது. அறிவியல் தத்துவம் என்பது விஞ்ஞானங்களின் விஞ்ஞானமாக இருக்கின்றது.
அறிவியல் தத்துவத்தை அச்சாணியாகக்கொண்டு சமூவிஞ்ஞானம் இயங்குகின்றது என்பதைத் துல்லியமாக விளக்குவீர்கள்.
No comments:
Post a Comment