Monday, November 21, 2022

யாதும் போரே யாவரும் தீர்ப்பீர்

பசித்தழும் குழந்தைகளுக்கு
பால்நிலவை உருட்டி வருகையில்
என் காலுடைத்தாள் மனைவி

உழைத்தும் பசி நீங்கா கோடியர்களுக்கு
அட்சய பாத்திரம் ஏந்தி வருகையில்
என் கையை கொய்தனர் உறவோர்

இலக்கிய வானில்
விண்மீன்களை நடுகையில்
மானுட மனம் உயர பாடுகையில்
பணத்தில் தலை புதைந்த
ஒழுக்கம் இல்லா வணிக மாக்கள்
சொத்தில் சமாதியிட்டு
என்னை உயிரோடு புதைத்தனர்

சீழ்பிடித்த பாழுலகம் அழுகி நாறுகையில்
புத்துலகை அடிவயிற்றில் பிரசவிக்க உந்துகையில்
என் புடைத்த வயிற்றை கிழித்து கொன்றனர் மதவெறியர்கள்

எரிக்கும் வெயில் தாங்கா உயிர் வெளியை
வாயு மண்டலமாக அரண் செய்கையில்
என்னை அணுகுண்டால் சிதற கொலுத்தினர் இலாப வெறியர்கள்

பேரொலி அருவியாய்

பயம் தரும் சூழ்ச்சிகள் இரைந்தன

என் இசைக்க முடியா வாழ்க்கை
ஆயிரம் ஆயிரம் இறந்தன
நீர்படு குமிழ்களாய் உடைந்தன

நான் இறந்தேன் என்பதே திண்ணம்
எரிக்கவோ புதைக்கவோ ஆண்டுகள் ஆகலாம்
ஆயினும் ஆயினும்
மின்னல்படு ஒளிபோல்
திடுதீம் என்று உயிர்க்கின்றேன்

மானுடத்தின் உயிராய்
நான் குரலிடும்போதும்

இயற்கையின் இதயமாய்

நான் இசைத்திடும்போதும்

வீரத்தின் தோழராய்

நான் களம்சேரும்போதும்

பிரபஞ்சத்தின் ஆன்மாவாய்
மக்கள் அதிகாரம் நிலைபெறும்போதும்

மரணமில்லா பெரும் வாழ்வில்
சிலாகித்து நனைகின்றேன்

யாதும் போரே
யாவரும் தீர்ப்பீர்

 https://makkalathikaram.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b0/25-11-2022-yathum-pore-yavarum-theerpeer/

Monday, September 26, 2022

பெரு நரை பிசிராந்தையார்

ஆண்டு சிலவாக முப்பதே வயதில்

முடியெல்லாம் நரைத்திருக்க காரணம் கேட்கிறீர்

 

வாழ்க்கைக்கு என்மீது காதல் இல்லை

கானல் நீர் அளவேனும் மோகம் இல்லை

 

விருப்போடு அணைக்க யாருமில்லை

மலைபாம்பாய் அணைக்கத்தான் வாழ்க்கை பாதை

 

மண் கூடாய் கட்டிய விருப்பக் கோட்டை

வெறுங் கனவுகள் உரசவே இடிந்த யாக்கை

 

மானுட வரலாற்றில் எம் இலட்சியக் கப்பல்

பந்த உறவுகள் பாறைகளால் சிதைந்த கப்பல்

 

செடிவிட்டு பிரிந்த மலரின் உயிர்போல்

என் தனித்துவம் கொன்றனர் விருப்ப மாக்கள்

 

கடல் நீந்தும் ஆமைபோல் தகுதி ஆற்றல்

வெறும் பிழைப்பிற்கு பண மலையில் தவளை தாவல்

 

மனம் ஒத்த காதலுடன் வானவில் பயணம்

சுயநலவெறி மனையாளுடன் சரிந்தேன் சடலம்

 

எல்லோர்க்கும் ஒளி செய்யும் சூரியன் நீதான்

உன்னை சான்றோராய் உயர்த்துவேன் செல்லப் பிள்ளை

 

பொருந்தாத மனையாள் வார்த்த வெறுப்பில்

தந்தையா நீ ச்ச்சீ என ஒதுக்கும் தாயின் பிள்ளை

 

நதிகளுக்கு ஆதாரம் வான் வியர்க்கும் அருவி

எம் அத்தனைக்கும் ஆதாரம் இலாபவெறி குருடி

 

உணவுக்கும் உயிருக்கும்

உழைப்புக்கும் மதிப்புக்கும்

மண்ணுக்கும் நீருக்கும்

மருந்துக்கும் கருத்துக்கும்

இருப்புக்கும் இறப்புக்கும்

பிழைப்புக்கும் வாழ்க்கைக்கும்

அரண் செய்யாத அரசு

 

நெற்றி விளக்கில்

இருட்டு முயலை

கண் கூசி வீழ்த்தும்

வேட்டுவ அரசு

 

வக்கின்றி பல நாடு பறக்கும் கேடி

ஆண் பெண் பேதத்தில் பீப்பீ ஊதி

மதம் சாதி வெறிகளில் பலூன்கள் ஊதி

அறியாமை வேள்வியில் மக்கள் பீதி

 

வீண் வார்த்தைகளில் வார்த்த லட்டு

வங்கி கணக்கில் பல இலட்சம்

 

இருட்டோடு உயர்ந்த வரி

கொலை செய்ய உயர்ந்த வலி

பொருள்கள் விலை உயர்ந்த கதி

அய்யோ! வாழ்க்கை முழுதும் லாப சதி

 

வாழ்வின் முழுமை

விசம் தோய்ந்த சூனியமெனில்

முப்பதே வயதில் தலை நரைக்க

வேறேது காரணம்

 

இலக்கியம் கலை அறிவியல்

எம் வனத்தில் வண்ணமிட்ட மலர்கள்

நம் வானில் விளக்கிடும் சுடர்கள்

வருங்காலம் உயர்ந்திட படிகள்

படி தாண்ட பலருண்டு

படிப்பார் யாருண்டு

 

ச்ச்சீ..

என்ன வாழ்க்கை செத்த வாழ்க்கை

இதிலும் உயிர்த்திருக்க காரணம் யாதெனில்?

உயிரெல்லாம் போற்றும் இயற்கை மீதும்

என்னை எட்டி உதைக்கும் உலகம் மீதும்

வருங்கால உலகின் நலன்கள் மீதும்

எம்மில் கோலமிடும் எண்ணங்களும்

எம்மால் தாளமிடும் செயல்களும்

தாய்மை உணர்வால் அவதியுறுவதால்

இன்னும் உயிர்த்திருக்கிறேன்

 

 

 https://makkalathikaram.com/arasiyal/peru-narai-bisirantiyar-newbie/

 

 

Saturday, June 4, 2022

சார்லி சாப்லினின் இரு உரைகளின் புத்தாக்கம்

சார்லி சாப்லினின் இரு உரைகளின் புத்தாக்கம்

(The Great Dictators - தி கிரேட் டிக்டேடர்ஸ்) 

புதியவன் முனைவர் கே.சிவக்குமார்

 

உரை – 1 (ஆதிக்க வெறியுடன் பேசும் உரை)


 


ஏகாதிபத்திய நண்பர்களுக்கும்

தீண்டாமை போற்றும் பார்ப்பனர்களுக்கும்

கௌரவ அடிமை சேவை செய்யும் தொண்டர்களே

 

ஏய் நீங்கள் வழக்கம் போல சிந்திக்காமலேயே உழைக்கனும்

அப்பதான் இந்த நாடு வளரும்

அப்பாவி இந்துக்கள் எல்லோரும் நல்லா இருப்பாங்க

 

இந்த நாட்டின் பிரச்சனைகளுக்கு யார் காரணம்!

முஸ்லீம்கள்தான் காரணம்

அப்புரம் இந்துக்கள் 

 (….லொக்….)

கிறித்தவர்கள் சரிதானே

இந்தியா இந்துக்களின் நாடு

முஸ்லிம்களின் நாடு அல்ல

கிறித்தவர்களின் நாடு அல்ல

திராவிடர்களின் நாடு அல்ல

கம்யூனிஸ்டுகளின் நாடு அல்ல

காவிகளின் நாடு

காவிகளின் நாடு

காவிகளின் நாடு

 

ஜனநாயகம் மோசமானது

சுதந்திரம் ஆபத்தானது

பேச்சுரிமை வெறுக்கத்தக்கது

காவி பரிவாரங்கள்தான் நாட்டின் மிகப்பெரிய இராணுவம்

வேறு எந்த நாடுகளிலும் இல்லாத வலிமையான அமைப்பு

இந்துக்களை பாதுகாப்பது நம் கடமை

இந்துக்களே நாம் பூணூல்களை இருக்கக் கட்டிக்கொள்ள வேண்டும்

 

இந்துக்களின் புனித விலங்கு பசு

புனிதமான கோமியத்தையும் சாணத்தையும் தரும் பிராணி

அந்தப் பிராணியை விற்பதையும் உண்பதையும் நினைத்தால்

என் இதயம் கீழே விழுந்து நொறுங்குகிறது

காப்பாற்ற வேண்டும்

நாட்டில் பசுக்களை பாதுகாப்போம்

வாங்குபவர்களையும் விற்பவர்களையும் அழித்துவிட்டு

நாட்டில் சுதந்திரமாக திரிய விடுவோம்

பசுமாடுகள் இங்கிட்டும் அங்கிட்டும்

சுதந்திரமாக மேய்ந்து திரிவதை பார்த்து பூரிக்க வேண்டும்

 

எச்சரிக்கிறேன்

நமது இலட்சியங்களுக்கு எதிராக மக்கள் அறிவியல் கண்ணோட்டத்திற்கு மாறுகிறார்கள்

மக்களின் விருப்பத்திற்கு உரியவர்களாக

பெரியாரிஸ்டுகள் வளர்ந்துவிட்டார்கள்

அம்பேத்கரிஸ்டுகள் வளர்ந்துவிட்டார்கள்

கம்யூனிஸ்டுகள் வளர்ந்துவிட்டார்கள்

பகத்சிங்குகள் (…லொக்…)

 

ஆகட்டும்

நாங்கள் விட்டுவிடுவோமா

காவி பரிவாரங்கள்

கார்ப்பரேட் எடுபிடிகள்

இந்துக்களின் பாதுகாவலர்கள்

நாங்கள் விட்டுவிடுவோமா

 

எங்கள் முகத்தைப் பார்த்தால் லூசுபோலத் தெரிகிறதா

மூளையை கூந்தலில் கட்டி தொங்க விட்டதபோல இருக்கிறதா

முழு வீரர்கள்

முஸ்டிகள் உறுதியானவை

நாங்கள் இன்று பிறந்த கைக்குழந்தைகள் அல்ல

சாவர்க்கரின் பேரன்கள்

படிப்படியாக சூழ்ச்சிகளால் முளைத்து வெடித்துக் கிளம்பியவர்கள்

ஏய் சங்கிகள்டா

நாட்டின் சிங்கங்கள்

 

சங்கிகளைப் பார்த்து சிவப்பு சட்டை பயப்படாதோ

பயப்பட வைக்கிறேன்

..கொர்….

இங்க பார்

காவி பரிவாரங்களை வேதத்தில் பார்

நெருப்பிலே உயிரோடு கொன்று தின்றவர்கள்

எங்களைப் பார்த்து பயப்படாமல் எதிர்க்கிறாய்

 

கடவுளின் பெயரால் மத வெறியை வளர்த்தால்

பெரியாரின் தடியை எடுத்து எங்களை அடிக்கிறாய்

 

..ஏய் சாதி வெறியை கிளப்பி மடக்கினால்

அம்பேத்கரின் அறிவால் ஜல்லிக்கட்டு போல முட்டுகிறாய்

 

இப்போது மார்க்ஸையும் பற்றிக்கொண்டு

செஞ்சட்டை பேரணி என்றும்

மக்கள் அதிகாரம் என்றும் திமிராக நடக்கிறாய்

 

நான் உங்களை எப்படி கொல்வேன் என்று பார்க்கத்தான் போகின்றாய்

 

வா ஒண்டிக்கு ஒண்டி பாத்துடலாம்

காவியா செஞ்சட்டையா பாத்துடலாம்

 

இது காவிகளின் பூமியடா

மக்கள் மங்கூனிகள்

உன் கூர்மையான அறிவை சுவைக்கத் தெரியாதவர்கள்

 

நாங்கள் ஏதாவது மசூதியையோ தேவாலயத்தையோ காட்டி

சிவன் ஆடிய இடம்

இராமன் முக்கிய இடம்

என்று எதையாவது கொளுத்திப் போட்டால்

மக்கள் சரம் சரமாய் வெடிப்பார்கள்

இந்துக்களின் காவி வெறி புழுதிபோல பரவும

 

ஏய்ஏய்ஏய்.

சிவப்பு நிறம் நீடா

கருப்பு நிறம் நீடா

நீல நிறம் நீடா

ஆனால்

நான் காவிடா

காவி பரிவாரம்டா

 

கார்ப்பரேட் இலாபவெறிக்கு சேவை செய்வோம்டா

இயற்கையை நாசமாக்குவோம்

மக்களை மந்தையாக்குவோம்

மதவெறியை வளர்ப்போம்

மக்களை காவிகளாக்கி முஸ்லீம்களை அழிப்போம்

கிறித்தவர்களை அழிப்போம்

தலித்துகளை அழிப்போம்

திராவிடர்களை அழிப்போம்

பெரியாரிஸ்டுகள் அம்பேத்கரிஸ்டுகள் கம்யூனிஸ்டுகள்

அப்பாவி இளைஞர்கள் முதியோர்கள்

பெண்கள் குழந்தைகள்

அனைவரையும் ஒழித்துக்கட்டுவோம்

 

ஏய் இந்த நாடு சங்கிகளின் காடுடா!

 

சார்லி சாப்ளின் உரை புத்தாக்கம் -1 சர்வாதிகாரம் & மனிதநேயம்

Video link

 

உரை – 2 (மனித நேயத்திற்காக பேசும் உரை)

 





மன்னிக்கவும்

ஆனால், நான் ஒரு பேரரசராக இருக்க விரும்பவில்லை

அது எனது தொழில் அல்ல

நான் யாரையும் ஆட்சி செய்யவோ வெல்லவோ விரும்பவில்லை

 

அனைவருக்கும் உதவ வேண்டும் என விரும்புகிறேன்

முடிந்த வரை உழைக்கின்ற கோடான கோடி மக்கள்

ஆண்கள் பெண்கள் இளைஞர்கள்

பரிதாபத்திற்குரிய முதியவர்கள் குழந்தைகள்

 

நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவ விரும்புகிறோம்

மனிதர்கள் அப்படி உதவுவதன் மூலமாக

மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறோம்

துயரத்தோடு வாழ்வதற்கு அல்ல

 

நாம் ஒருவரையொருவர் வெறுப்பதற்கு அவசியம் இல்லை

இந்த உலகில் அனைவருக்கும் இடமுண்டு

நல்ல பூமி

வளமானது மற்றும் அனைவருக்கும் வழங்கும் தன்மை உடையது

வாழ்க்கை முறை சுதந்திரமாகவும் நலமாகவும் இருக்கலாம்

ஆனால், நாம் அதற்கான வழியைத் தொலைத்துவிட்டோம்

 

பேராசை படைத்த ஆண்கள் மனித குலத்தின் ஆன்மாவிற்கு

விஷம் கொடுத்துவிட்டார்கள்

இலாப வெறிபிடித்த உலகப் பெரும் பணக்காரர்களும்

அவர்களுக்கு எடுபிடி வேலை செய்யும் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும்

மனிதகுலத்தைப் புதைத்துக் கொண்டு இருக்கிறார்கள்

 

நாம் செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களைப் படைத்துவிட்டோம்

கணினி பிம்பங்களுடன் உறவாடுகிறோம்

கண் கூசும் வெளிச்சத்தில் அதிவேகமாக ஓடுகிறது வாழ்க்கை

ஆனால் வேகத்தில் நம்மையே புதைத்துக் கொண்டு இருக்கிறோம்

 

நமது அறிவு  நம்மை இழிந்தவர்களாக ஆக்குகிறது

நமது புத்திசாலித்தனம் கடினமானதாகவும் இரக்கமற்றதாகவும் இருக்கிறது

நாம் அதிகமாக சிந்திக்கிறோம் மிகக் குறைவாகவே உணர்கிறோம்

 

இயந்திரங்களைவிட நமக்கு மனித நேயம் தேவைப்படுகின்றது

புத்திசாலித்தனத்தைவிட நமக்கு இரக்கமும் மென்மையும் தேவைப்படுகின்றது

 

இந்த குணங்கள் இல்லாவிட்டால் வாழ்க்கை வன்முறையாகவே இருக்கும்

நம்மால் அனைத்தும் இழக்கப்பட்டுவிடும்

 

விமானமும் வானொலியும் இணையமும் செயற்கை கோள்களும்

நம்மை ஒன்றிணைத்துள்ளன

 

இந்தக் கண்டுபிடிப்புகளின் தன்மை மனிதகுலத்தின் நலன்களுக்காக அழுகிறது

உலகளாவிய சகோதரத்துவத்திற்காக அழுகிறது

நம் அனைவரின் ஒற்றுமைக்காக அழுகிறது

 

இப்போதுகூட என் குரல் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களைச் சென்றடைகிறது

மில்லியன் கணக்கான விரக்தியடைந்த ஆண்கள், பெண்கள், சிறுகுழந்தைகள், முதியவர்கள், உழைக்கின்ற பெருந்திரளான மக்கள்

 

அப்பாவிகளை சித்திரவதை செய்து சிறையில் அடைக்கின்ற

ஒரு வன்முறை அமைப்பால் பாதிக்கப்படுகின்ற

ஒடுக்கப்படுகின்ற ஏழை எளிய மக்கள்

 

என்னை கேட்கக்கூடியவர்களுக்கு நான் சொல்கிறேன்

விரக்தியடைய வேண்டாம்

 

இப்போது நம்மீது இருக்கும் துன்பம்

பேராசைகாரர்களின் சூழ்ச்சிகளை எப்படி கடப்பது என்பதுதான்

மனிதகுல முன்னேற்றத்தை வெறுக்கும்

இலாபவெறிபிடித்த கயவர்களை எப்படி வீழ்த்தப்போகிறோம் என்பதுதான்.

 

மனிதகுலம் நிச்சயம் வெற்றி பெறும்

மனிதர்களிடம் வெறுப்பு நீங்கும்

சர்வாதிகாரிகள் வீழ்த்தப்படுவார்கள்

மக்களிடமிருந்து அவர்கள் எடுத்த சக்தி மக்களிடமே பேராற்றலாக திரும்பும்

நல்ல உலகை படைக்க விரும்பும் மனிதர்கள் இருக்கும்வரை

சுதந்திரம் ஒருபோதும் அழியாது

 

வீரர்களே

உங்களை மனிதத்தன்மை அற்றவர்களாக கெடுத்துக்கொள்ளாதீர்கள்

அதிகாரிகளும் ஆட்சியாளர்களும்

உங்களை இழிவுபடுத்துகிறார்கள்

உங்களை அடிமைபடுத்துகிறார்கள்

உங்கள் வாழ்க்கையை இலாபவெறியின் நலன்களுக்காக பலியிடுகிறார்கள்

 

நீங்களே சொல்லுங்கள்

நாம் என்ன செய்ய வேண்டும்

என்ன சிந்திக்க வேண்டும்

என்ன உணர வேண்டும்

நீங்களே சொல்லுங்கள்

 

உங்களை யார் கட்டளையிடுகிறார்கள்

நீங்கள் யாருக்காக யாரை கொலை செய்கிறீர்கள்

உங்களை மனிதர்களாகவா நடத்துகிறார்கள்!

உங்களை கால்நடைகளைப்போல நடத்துகிறார்கள்

உங்களை பீரங்கிக்கு தீவனமாக ஆக்குகிறார்கள்

நம்மை இயற்கைக்கு முரணாக நடத்துகிறார்கள்

 

இயற்கைக்கு எதிரான

இந்த இலாப வெறிபிடித்த அதிகாரத்திடமிருந்து

உங்களை விடுவித்துக்கொள்ளுங்கள்

 

உங்கள் மனது இயந்திரமா

உங்கள் இதயம் இயந்திரமா

நீங்கள் மனிதர்களா இயந்திரங்களா?

 

நீங்கள் இயற்கையின் பரிபூரணமான மனிதர்கள்

உங்கள் இதயங்களில் மனிதநேயமும் அன்பும் இருக்கின்றது

நீங்கள் வெறுக்க வேண்டாம்

 

வீரர்களே

அடிமைத்தனத்திற்காக போராட வேண்டாம்

இலாப வெறியர்களின் சூழ்ச்சிக்காக போராட வேண்டாம்

சுதந்திரத்திற்காக போராடு

 

தான்தோன்றித்தனத்திற்கு எதிராகவும்

சுயநல வெறியை ஒழிப்பதற்காகவும் போராடு

 

இலாப வெறியர்களின் கடைசி மூச்சை முடிப்பதற்காக போராடு

 

வருங்காலத் தலைமுறைகளின் நல்லுலகத்திற்காக

அன்பானவர்களின் உலகை படைப்பதற்காக போராடு

 

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்கிறது திருக்குறள்

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிறது சங்கத் தமிழ்

செயின்ட் லூக்காவின் 17வது அத்தியாயம் சொல்கிறது

தேவனுடைய ராஜ்யம் மனிதனுக்குள் இருக்கிறது

அது ஒரு மனிதனோ அல்லது ஒரு குழுவோ அல்ல

உலகை உழைப்பால் உயிர் பெறச் செய்த நம் எல்லோரிடமும் இருக்கிறது

 

நமது சக்தி மகத்தானது

இயந்திரங்களை உருவாக்கும் சக்தி மட்டும் அல்ல,

மகிழ்ச்சியை உருவாக்கும் சக்தி

இந்த வாழ்க்கையை இலவசமாகவும் அழகாகவும் சாகசமாகவும் மாற்றும் சக்தி

இலாப வெறியின் கோரப்பிடியிலிருந்து உலகை மீட்டெடுக்கும் சக்தி

இயற்கையின் அரணாக மனிதகுலத்தை உருமாற்றும் சக்தி

 

இன்னும் ஏன் நாம் அறியாமை போதையில் நெளிந்துகொண்டிருக்க வேண்டும்

நமது மகத்தான சக்தியை புதிய ஜனநாயகம் என்ற பெயரில் பயன்படுத்துவோம்

நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்

ஒரு புதிய உலகத்திற்காகப் போராடுவோம்

 

அந்த உலகம்

மனிதர்களுக்கு மகிழ்ச்சியாக வேலை செய்ய வாய்ப்பளிக்கும் ஒரு ஒழுக்கமான உலகம்

இளைஞர்களுக்கு எதிர்காலத்தையும் முதுமையையும்

பாதுகாப்பாக வழங்கும் உலகம்

 

ஆனால், இந்த விஷயங்களை வெறும் கனவாகவும்

வாக்குறுதிகளை முரட்டுத்தனமாகவும்

முன்வைத்த அரசியல்வாதிகள் பலர்

அதிகாரத்தில் உயர்ந்திருக்கிறார்கள்

 

ஆனால் அவர்கள் பொய் சொல்கிறார்கள்

அவர்கள் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதில்லை

நிறைவேற்றவும் மாட்டார்கள்

பிப்ரவரி 31 வந்தாலும் நிறைவேற்றப் போவதில்லை

 

சர்வாதிகாரிகள் தங்களை விடுவித்துக்கொள்கிறார்கள்

ஆனால், மக்களை அடிமைப்படுத்துகிறார்கள்

 

இப்போது நாம் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராடுவோம்

மனிதகுலத்தை விடுவிப்பதற்காக

இயற்கையைப் பாதுகாப்பதற்காக

 

தேசியம், இனம், நிறம், சாதி, மதம், பாலினம், பணம் என்று

மனிதர்களுக்கு இடையிலுள்ள அத்தனை தடைகளையும்

நீக்குவதற்காக போராடுவோம்

 

நம் தலைமுறைகள் நல்லுலகை அடைவதற்காக

பேராசையுடனும் மகிழ்ச்சியுடனும் போராடுவோம்

 

விஞ்ஞானமும் முன்னேற்றமும்

எல்லா மக்களின் மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கும்

அந்த வருங்கால பொன்னுலகிற்காக

ஒன்றுபட்டு போராடுவோம்

 

வீரர்களே

புதிய ஜனநாயகத்தின் பெயரில்

மக்கள் அதிகாரமாய் ஒன்றிணைந்து

இந்த நியாயமான போராட்டத்திற்காக

ஒன்றுபட்டு வெற்றி பெறுவோம்

வெற்றி நமதே!

 


 

சார்லி சாப்ளின் உரை புத்தாக்கம் -2 மனிதநேயம் & சர்வாதிகாரம்

Video link

 

சார்லி சாப்ளின் உரை புத்தாக்கம் காணொளி | புதியவன்

இந்து மதவெறியை சார்ளிசாப்ளின் உடல் மொழியில் கூறியுள்ளார் புதியவன். அவரின் புதிய முயற்சியை வரவேற்போம்.

https://makkalathikaram.com/video-2/09-06-2022-charlie-chaplin-text-innovation-video-new/

 


ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை