11.அரசியல்
நோக்கு
அரசியல் நோக்கு
என்பது அரசின் இயக்கம் பற்றிய முழுதளாவிய புரிதலாகும். மனித குல வரலாற்றில் காடுசார்ந்த
பொருள் சேகரிப்பு நாகரிகத்திலும் வேட்டை நாகரிகத்திலும் அரசு என்ற சமூக நிறுவனம் தோன்றியிருக்கவில்லை.
சமூகத்தின் அனைத்து நிலைமைகளும் பாரபட்சமின்றி அனைவருக்கும் பொதுவானதாகவே இருந்தது.
தந்தையதிகாரமும் சொத்தாதிக்கமும் உருப்பெற்ற கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்திலேயே,
அரசு என்ற சமூக நிறுவனம் உருவெடுத்தது. உழைக்காமல் உண்டு கொழுப்பவர்களின் தனிச்சொத்தின்
ஆதிக்கத்தைப் பாதுகாக்கவே அரசு தோன்றியது. தனிச்சொத்தின் ஆதிக்க நலனைப் பாதுகாப்பதே
அரசின் ஆதிமுதல் கொள்கையாக அமைந்திருக்கிறது.
“அரசு
எந்திரமானது எல்லோருடைய நலன்களையும் பாதுகாப்பது, அதற்காக ஏற்பட்டது எனும் முதலாளித்துவ
பொய்யை உணர்வுப்பூர்வமான நயவஞ்சகரும் அறிவியல்வாதிகளும் மதகுருமார்களும் மட்டும்தான்
ஆதரிக்கிறார்கள் என்றில்லை, பழைய தப்பெண்ணங்களில் உண்மையிலேயே ஒட்டிக்கொண்டு பழையை
முதலாளித்துவ சமுதாயத்திலிருந்து சோசலிசத்திற்கு நிகழும் மாறுதலை புரிந்துகொள்ளாமல்
இருக்கும் பெருந்திரளான மக்களும் அவ்வாறே செய்கிறார்கள்…“ என்று மக்களிடம் ஏற்படுத்தப்பட
வேண்டிய அரசியல் கடமைகளையும் சேர்த்தே முன்னிறுத்துகிறார் லெனின்.” (துரைசண்முகம்.
2016)
அரசு தோன்றிய காலம் முதல் சமூக அமைப்பின்
மாற்றங்களுக்கு ஏற்ப அரசின் வடிவங்கள் பலவாறாக மாறியிருக்கின்றன. ஆனால் ஆதிமுதல் கொள்கை மாறியதில்லை. இதை நடைமுறையில் மாற்றுவதுதான் ஒரு சமூகத்தின் அரசியல் புரட்சியாகும். அதாவது, உழைக்காமல் உண்டு கொழுப்பவர்களுக்கு எதிராக, உழைக்கும் மக்களுக்கு அரணாக, தனிச்சொத்தாதிக்கத்திற்கு பகையாக, பொதுவுடைமை பண்பாட்டிற்கு வழியாக ஓர் அரசு அதிகாரப்பூர்வமான நடைமுறையில் பயணிப்பதாகும்.
அரசின் இன்றைய நிலைமைகளோ இலாப வெறிபிடித்த நிறுவனங்களுக்குச்
சேவை செய்வதாகவே அமைந்திருக்கின்றன. சமத்துவச் சமூகத்தை நோக்கி மக்கள் தலைமை அரசை தோற்றுவிப்பதற்கு
தடையாகச் செயலாற்றுகின்றன. இதன் செயல்பாடுகளை எதிர்கொண்டு சமூகமேன்மைக்கு வசதியாக மக்கள்
தலைமை அரசை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு உந்துதல் அளிப்பதே இலக்கிய அறிவியலின்
அரசியல் நோக்காகும்.
12.தன்னிச்சை வெளிப்பாடு
இத்தலைப்பு
இலக்கியத்தின் கொள்கை நிலையின் வகையில் அடங்குவதாகும். அதாவது, இலக்கிய அறிவியலின்
20 சுற்றி வளைக்கும் பார்வைகளுள் ஏனைய 19 தலைப்புகளும் சமூகளாவிய இலக்கியத்தின் தன்மையை
விளக்க முயல்கிறது எனில், இந்த ஒரு தலைப்பு தன்னிச்சை இலக்கியத்தின் தன்மையை விளக்க
முயல்கின்றது. தன்னிச்சை வெளிப்பாடு என்பது சமூகளாவிய வெளிப்பாட்டின் எதிர்மறையாகும்.
சுயநல வெறிபிடித்த பண்பாட்டில் உழன்று கொண்டிருக்கும் சமூகத்தில், சமூகஅக்கறை மறத்துப்போன
மனிதர்களின் வெளிப்பாடாக, தன்னிச்சை வெளிப்பாடு அமைகிறது. இலக்கிய முயற்சியில் ஆரம்பநிலையாளர்களின்
வளர்ச்சியில் ஓர் அங்கமாக தன்னிச்சை வெளிப்பாடு அமைகிறது என்பதல்ல பிரச்சனை. மாறாக
தான்தோன்றித்தனத்தையே ஒரு கொள்கையாகக் கொண்டு இயங்குபவர்களின் இலக்கிய வெளிப்பாடாக
அமைவதுதான் பிரச்சனை.
சமூகத்தேக்கக் கொள்கைகளுடன் படைக்கப்படுகின்ற
படைப்புகளைவிட இவர்களின் வெளிப்பாடுகள் ஆபத்தானவை. ஏனெனில், இவர்களின் வெளிப்பாடுகள்
வெளிப்படையாக அல்லாமல் மறைமுகமாக, சமூகத்தேக்க முயற்சிகளுக்கு ஊக்கமளித்து, இலாபவெறிப்
பண்பாட்டைப் பாதுகாக்கின்றன.
சமூகமேன்மையின் தேவையோ தான்தோன்றித்தனம்
அல்ல, திட்டமி்டப்படாத இயக்க முறைகளுக்கு இடையில் திட்டமிட்ட செயல்முறைகளைச் சாதிப்பதற்கான
முயற்சிகளாகும். சமத்துவச் சமூகம் நோக்கிய இத்தகைய முயற்சிகளுக்கு சமூகளாவிய வெளிப்பாடே
அவசியப்படுகின்றது. தன்னிச்சை வெளிப்பாட்டிற்கு முரணாக அமைவதே இலக்கிய அறிவியலின் வெளிப்பாடாகும்.
13.கொச்சை பாலுறவு குறியீடு
பாலுறவு என்பது
இனப்பெருக்க உந்துதலான உயிரியல் நடவடிக்கையாகும். ஒவ்வொரு மனிதரும் குழந்தையாக பிறந்ததற்கு
காரணமாக அமைந்த அழகுணர்ச்சி மிகுந்த நடத்தையாகும். இத்தகைய நடத்தைகளின் இலக்கிய வெளிப்பாடானது,
பெண்ணடிமைச் சமூகத்தில் பெண்களைப் பாலுறவுப் பிண்டங்களாகக் கொச்சைப்படுத்துகின்றன.
ஆண்களின் பாலியல் இச்சைகளை ஊதிப்பெருக்குகின்றன. பெண் சமூக விடுதலை பற்றிய தெளிவற்ற
பெண்களிடத்தில், பாலியலின் கொச்சை வார்த்தைகளே பெண்ணியமாக வெளிப்படுகின்றன.
“சங்ககால ஆண் புலவர்களுக்கு நிகரான பெண்பாற்
புலவர்களையும் சமகால பெண் கவிஞர்களையும் ஒப்பிட்டு சில முடிவுகளை இந்நூலாசிரியர் தருகிறார்.
சமகால வாழ்நிலையில் பெண்களின் பாலுணர்வை வெளிப்படுத்தும் கவிதைகளில் உணர்வுக்கு முதன்மை
இல்லை. வெறும் வார்த்தைகள் மட்டுமே கவிதையாகிவிட முடியாது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்”
(சிவக்குமார்,கே.மார்ச்.2014:36-37)
பெண் பாலினச் சீண்டுதல்களும் வன்புணர்ச்சிப்
படுகொலைகளும் ஆணாதிக்கச் சமூக வெளியில் தவிர்க்க முடியாதபடி நிலைபெற்றுவிட்டன. இத்தகையச்
சமூக நிலைமைகளில், பாலுறவுச் சொல்லாடல்களைப் பயன்படுத்துவதில் அதிக கவனம் தேவை. சமூக மேன்மை முயற்சிகளுடனும், பாலினச் சமத்துவம் மற்றும் பாலுறவு வன்முறை எதிர்ப்புகளுடனும் இணையாத பாலுறவுச்
சொல்லாடல்களைக் கொச்சைப் பாலுறவு குறியீடுகளாக மட்டுமே கவனப்படுத்த முடியும். கொச்சைப்
பாலுறவுக் குறியீடுகளை இலக்கிய அறிவியல் அங்கீகரிப்பதில்லை.
14.பொருளாதார ஒடுக்குமுறை
மனிதர்களுக்கு நிறைவேற்ற வேண்டிய பொருளாதாரத் தேவைகளை ஒரு சமூகம் நிறைவேற்றத் தவறினால் அது பொருளாதார ஒடுக்குமுறையாகக் கருதப்படும். மனித வாழ்வானது சமூகப் பொருளுற்பத்தியால் இயங்குகின்றது. சமூகப்
பொருளுற்பத்தி இயற்கை ஆதாரங்களைச் சார்ந்துள்ளது. இயற்கை ஆதாரங்கள் அனைத்தும் இயற்கையின்
அங்கமாகிய மனிதர்களுக்கும் உரியது. சமூகப் பொருளுற்பத்தி என்பது செயற்கைக்கு ஆக்கமாகிய
மனித இனத்திற்கு மட்டுமே உரியது. எனவே இயற்கையும் செயற்கையும் மனித வாழ்வியலுக்கு தவிர்க்கக்
கூடாத வாழ்வுரிமைகளை நிர்ணயித்துள்ளன.
தாகத்திற்கு நீரருந்தும் உரிமை, தூய்மையான
காற்றை சுவாசிப்பதற்கான உரிமை, சுகாதாரமான சூழ்நிலைகளில் வாழ்வதற்கான உரிமை,
உணவு உண்பதற்கான உரிமை, வேலைவாய்ப்புரிமை, பொருளீட்டுவதற்கான உரிமை போன்ற எண்ணற்ற உரிமைகள்
சமூக வாழ்வியலின் பொருளாதாரப் பாதுகாப்பிற்காக நிர்ணயம் பெற்றுள்ளன. ஆனால், அத்தகைய
உரிமைகள் இலாபவெறிபிடித்த சமூகப் பொருளுற்பத்தியின் அதிகாரத்தால், எளிதாக மறுக்கப்பட்டு
வருகின்றன.
இத்தகைய மறுப்புகள் மனித சமூகத்தின்
மீதான பொருளாதார ஒடுக்குமுறைகளாக நிலவுகின்றன. இத்தகையப் பொருளாதார ஒடுக்குமுறைகளை
களைந்து, வாழ்வுரிமைகளை எட்டுதல் நோக்கி, மனித உணர்வுகளை முன்னேற்றுவதற்கே இலக்கிய
அறிவியல் அவசியப்படுகின்றது.
15.கருத்தாக்கக் கட்டமைப்பு
மனிதர்களின்
உலகம் கருத்துக்களின் உருவாக்கங்களால் கட்டமைந்துள்ளது. கருத்துக்களைப் பற்றிக் கொண்டே
மனித செயல்கள் ஒழுங்கமைகின்றன. மனிதர்கள் எத்தகையக் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறார்களோ
அவற்றையே செயல்களாக உருமாற்றுகிறார்கள். மனித செயல்கள் கருத்துக்களால் வழிநடத்தப்படுகின்றன.
இத்தகைய கருத்துக்களின் கட்டமைப்பானது சமூகப்பொருளுற்பத்தியைப் பாதுகாப்பதற்கும் மாற்றுவதற்கும்
இடையிலான முரண்பாடுகளின் வெளிப்பாடுகளாக இருக்கின்றன. காலந்தோறும் இத்தகைய முரண்பாடுகளின்
வெளிப்பாடுகள்தான் பண்பாட்டின் கருத்தாக்கங்களாகக் கட்டமைந்திருக்கின்றன. சமூகப் பொருளுற்பத்தியில்
முன்னேற்றத்தை புறக்கணிக்கின்ற கருத்தாக்கங்களனைத்தும் சமூகத்தேக்கக் கருத்தாக்கங்கள்
ஆகும். சமூகப் பொருளுற்பத்தியில் முன்னேற்றத்தை நிகழ்த்த முயல்கின்ற கருத்துக்களனைத்தும்
சமூகமேன்மை கருத்தாக்கங்கள் ஆகும். மனித செயல்களை வழிநடத்த சமூக மேன்மை கருத்தாக்கங்களைக்
கட்டமைக்க வேண்டும். சமூக மேன்மையின் இலக்காகிய சமத்துவச் சமூகத்தை அடைவதற்கான முயற்சிகள்,
கருத்தாக்கங்களின் கட்டமைப்பிலிருந்தே தொடங்குகின்றன. மனித செயலாக்கங்களில் சமூக மேன்மைக்
கருத்தாக்கங்களைக் கட்டமைப்பதே, இலக்கிய அறிவியலின் செயலாக்கம் ஆகும்.
16.ஆழ்மனப் பிரதிபலிப்பு
ஆழ்மனம் என்பது
மனித மூளையின் பெரும்பகுதியாகும். மனித மூளையை மூன்று பகுதியாக விளங்கலாம். 1.அறிவு
நிலை, 2.உணர்வு நிலை, 3.ஆழ்மனக்குழி. அறிவு நிலை என்பது புலன்களால் அறியப்படும் நிலையாகும்.
உணர்வு நிலை என்பது ஆழ்மன வெளிப்பாட்டுடன் அறிவு ஒன்றும் இடைநிலையாகிய மனதாகும். அறிவு நிலைக்கும்
ஆழ்மனக்குழிக்கும் இடைப்பட்ட உறவாக மனஉணர்வு நிலை அமைகின்றது. ஆழ்மனக்குழி என்பது எட்ட
முடியாத எண்ண ஓட்டங்களின் கருங்குழியாகும். எல்லாவற்றையும் உள்வாங்கிச் செரித்துவிடும்
கருங்குழியைப்போல ஆழ்மனக்குழியும் மூளையின் ஒட்டுமொத்த பதிவுகளையும் உள்வாங்கிச் செரிக்கிறது.
மனித செயல்களை உயிரோட்டமாக அமைப்பது
அறிவுநிலை அல்ல, மாறாக ஆழ்மனக்குழியின் உணர்வு நிலையே ஆகும். எனவேதான், சமூகமேன்மைக்
கருத்துக்களை மனித சமூகத்தின் ஆழ்மனக்குழிவரை பற்றும்படிச் செய்துவிட்டால் ஆரம்பமாகிவிடும்
சமூக விடுதலை என்கிறோம். சமூக விடுதலைக்கான முயற்சிகளனைத்தும் அறிவுநிலையின் வெளிப்பாடாக
அமைவதல்லாமல், ஆழ்மன உணர்வின் உயிரோட்டமான பிரதிபலிப்பாக அமைய வேண்டும். சமூக மேன்மைக்கான
இத்தகைய பிரதிபலிப்புகளை இலக்கிய அறிவியல் முன்னெடுக்க வேண்டும். (புதியவன்.ஜுன் 2015:35)
17.சமூகளாவிய விமர்சனங்கள்
விமர்சனம் என்பது
சகமனிதர்களைச் செதுக்கும்போது கருவியாக அமையும். சமூக மேன்மையின் துரோகிகளுக்கு ஆயுதமாகக்
குடையும். சமூக மேன்மையைச் செதுக்கும் கலையில் விமர்சனத்தைக் கருவியாகக் கையாள வேண்டும்.
சமூகத் தேக்கத்தை எதிர்க்கும் போரில் விமர்சனத்தை ஆயுதமாகக் கையாள வேண்டும். விமர்சனங்களால்
மட்டுமே மனித வாழ்வியலின் அற உணர்வைப் புதுப்பித்துக்கொள்ள முடியும். அறம் என்பது மனிதர்கள்
இணைந்து வாழ்வதற்குத் தேவையான சமூக ஒழுக்கங்களின் முழுமையாகும். அகத்திலிருந்து புறம்
நோக்கியும், புறத்திலிருந்து அகம் நோக்கியும் சமூகளாவிய விமர்சனங்கள் அமைகின்றன. அகத்திலிருந்து
புறம் நோக்கிய விமர்சனம் என்பது சமூகம் நோக்கிய விமர்சனம் ஆகும். புறத்திலிருந்து அகம்
நோக்கிய விமர்சனம் என்பது சுய விமர்சனம் ஆகும். இவை இரண்டின் முழுமையே சமூகளாவிய
விமர்சனங்கள் ஆகும். இத்தகைய விமர்சனங்களை அடிப்படை உரிமையாக அங்கீகரிக்காத சமூகம் ஒழுக்கக்கேடான சமூகமாகவே
தேங்கிக்கிடக்கும். மாறாக, அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கின்ற சமூகமே மனிதகுலத்திற்கான
ஒழுக்கங்களில் முன்மாதிரியாகத் திகழும். சமூக மேன்மையை நோக்கி வேகமாக முன்னேறும். விமர்சிக்கப்படாத
வாழ்வியல்கள் விளைவிக்கப்படாத விளைநிலங்களுக்குச் சமமாகும்.
செய்
விமர்சனம் செய்
வாயால்
விளைவது வெற்று வார்த்தைகள் அல்ல
கருத்துக்
கருவிகளும் கருத்தாயுதங்களும்
சமூக
மேன்மைக்கு உரியவர்களை
மெல்ல
மெல்ல உயர்த்த
கருவியாகட்டும்
விமர்சனம்...
சமூகத்
தேக்கத்தில் உழல்பவர்களை
ஒரேயடியாக
வீழ்த்த
ஆயுதமாகட்டும்
விமர்சனம்...
உயர்த்த
வேண்டியவர்களை வீழ்த்தாதீர்கள்
வீழ்த்த
வேண்டியவர்களை உயர்த்தாதீர்கள்
அது
விமர்சன அறம் ஆகாது
வாயால்
விளைவது வெற்று வார்த்தைகள் அல்ல
செய்
விமர்சனம் செய்!
உணவை விளைவித்தல் உலகின் பசி நீக்கும்
உழுவோரின் கடமை. உணர்வை புதுப்பித்தல் சமூகப்பிணி நீக்கும் சமூகவிஞ்ஞானிகளின் கடமை.
இலக்கிய அறிவியல் சமூகவிஞ்ஞானத்தின் இன்றியமையாதக் களமாகும். விமர்சனக் கலையின் வழியாக
சமூக மேன்மையை எட்டிப்பிடிப்பதற்கு வினையாற்றும்.
18.தாய்தலைமை சமூகம்
தாய்தலைமைச்
சமூகம் என்பது தந்தையதிகாரச் சமூகத்திற்கு முந்தைய சமூக எதார்த்தமாகும். காடுசார்ந்த
பொருள் சேகரிப்பும் வேட்டை நாகரிகமும், தாய்தலைமையின் நாகரிகமாக அமைந்துள்ளன. ஆனால்,
தந்தையதிகாரச் சமூகம் மனித வரலாற்றில் தாய்தலைமை நிலவிய உண்மையை மூடி மறைக்க முயல்கிறது.
பெண்ணடிமைத்தனத்தை நியாயப்படுத்துவதற்கும், தந்தையதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கும்
இத்தகைய முயற்சியை விடாப்பிடியாக நிகழ்த்துகிறது. ஆனால், பெண் விடுதலையே சமூக மேன்மைக்கு
முன் நிபந்தனையாக இருக்கின்றது. ஏனெனில், பெண் விடுதலையின்றி சமூக விடுதலை சாத்தியமில்லை.
தாய்தலைமை சமூகம் நிலவிய வரலாற்றுண்மையை
அங்கீகரிப்பது, பெண்ணின் சமூக மரியாதைக்கு ஊக்கமளிக்கும் நடவடிக்கையாகும். சமூகளாவிய
நிலையில் ஆணாதிக்கத்தை உடைப்பதற்கும், பாலினச் சமத்துவத்தை நிறுவுவதற்கும், தாய்தலைமையைக்
கொண்டாடுதல் அவசியமாகின்றது. தாய் தலைமை என்பது இயற்கையின் அங்கமாகவே அமைந்திருந்தது.
செயற்கையின் ஆக்கமாக அமையவில்லை.
தாய் அதிகாரச் சமூகம், தாய் ஆதிக்கச்
சமூகம், பெண்ணதிகாரச் சமூகம், பெண்ணாதிக்கச் சமூகம் போன்ற தவறான சொல்லாடல்களைப் பயன்படுத்தக் கூடாது. ஆதிக்கம், அதிகாரம் போன்ற திட்டமிட்டச் சமூக நடவடிக்கைகள்
தோன்றாத காலத்தில் நிலவிய தாயின் சமூக முதன்மையைத் தாய்தலைமை என்று சுட்டுவதே வரலாற்றுண்மைக்கு
பொருத்தமானதாக அமையும். தாய்தலைமைச் சமூகத்தின் வாழ்வியல் உண்மைகளை விவரிக்க முயல்வது
இலக்கிய அறிவியலுக்குச் சவாலாக அமைகின்றது. (புதியவன்.மே 2016:24-26)
19.தந்தையதிகாரச் சமூகம்
தந்தையதிகாரம்
மனித வரலாற்றுப் படிநிலையில் மூன்றாம் கட்டத்திலேயே தொடங்கியுள்ளது. சரியாகக் கால்நடை
மந்தை வளர்ப்பு நாகரிகத்தில் தொடங்கியது. இயற்கையின் அங்கமாகத் திகழ்ந்த தாய் தலைமையை
ஒழித்துவிட்டு, செயற்கையின் ஆக்கமாகத் தொடங்கியது. சமூகளாவியச் சொத்துக்களின் மீதும்,
பண்பாட்டின் மீதும், குழந்தைகள் மீதும் ஆண்களின் அதிகாரத்தை நிறுவுவதற்காக தந்தையதிகாரம்
தொடங்கியது.
செயற்கையான சொத்தாதிக்க நலன்களால் ஆக்கம்
பெற்ற ஆண்களின் சமூக அதிகாரத்தை தந்தை தலைமை, ஆண் தலைமை போன்ற தவறான சொற்களால் சுட்டுவது
வரலாற்று முரணாகும். மாறாக தந்தையதிகாரம், தந்தையாதிக்கம், ஆணதிகாரம், ஆணாதிக்கம்
போன்றச் சொல்லாடல்களே வரலாற்றுண்மைகளுக்குப் பொருந்தும்.
தந்தையதிகாரத்தின் தொடக்கம் சமூக அநாகரிகத்தின்
தொடக்கமாகவே அமைந்துள்ளது. சமூகமேன்மையில் சமத்துவ உலகை எட்டுவதற்கும், பாலினச் சமத்துவத்தை
அடைவதற்கும், தந்தையதிகார அநாகரிகத்தை ஒழித்துக்கட்டுவது அவசியமாகின்றது. தந்தையதிகார
அநாகரிகத்தை ஒழித்துக்கட்டுவதே இலக்கிய அறிவியலின் நாகரிகமாகும். (புதியவன்.மே
2016:24-26)
20.குழந்தைகளின் சமூக ஆக்கம்
சமூக மேன்மையின்
வளர்ச்சி குழந்தைகளின் வளர்ச்சியோடு இணைந்திருக்கின்றது. குழந்தைகளின் வளர்ச்சியோ,
மனித வாழ்வியலின் முதிர்ச்சியோடு இணைந்திருக்கின்றது. பழைய மனிதர்களின் புதிய குழந்தைகளிடமிருந்தே
சமூக ஆக்கம் மேன்மையடைகின்றது. சமூகளாவிய இலக்குகளுடையவர்களாக குழந்தைகள் ஆக்கம் பெற
வேண்டும். குழந்தைகளின் தனித்துவங்களை ஊக்கப்படுத்துவதிலிருந்து கற்றல் திறனையும் வெளிப்பாட்டுத்
திறனையும், மேம்படுத்த வேண்டும். குழுந்தைகளின் தனித்துவங்களை குழந்தைகளுக்கே உணர்த்துவதன்
மூலம் உருவாகின்ற அவர்களது தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்த வேண்டும்.
எல்லா தனித்துவங்களையும் கடந்து
சமூக மேன்மைக்காகப் பாடுபடுகின்ற நல்ல மனிதர்களாகவும் சமூக ஆளுமைகளாகவும் குழந்தைகளை உருவாக்க வேண்டும்.
இதற்கு பெற்றோர்களை மட்டும் பொறுப்பாக்கிவிட்டு சமூகம் ஒதுங்கிவிட இயலாது. ஏனெனில்,
குழந்தைகள் பெற்றோர்களின் வழியாக வந்தவர்களே அல்லாமல் அவர்களின் சொத்துக்களாக வந்தவர்கள்
அல்ல. அவர்கள் சமூகத்தின் நிலைமைகளைச் செதுக்குகின்ற வருங்காலச் சிற்பிகள். மேலும், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உணவைவிட அரவணைத்து பாதுகாக்கப்படுகின்ற உணர்வே முதன்மையானது என்பதை ஹாரி ஹார்லோவின் ஆய்வு நிரூபித்திருக்கின்றது. அத்தகைய அரவணைப்பை குழந்தைகளுக்கு வழங்குவது ஒரு சமூகத்தின் இன்றியமையாதக் கடமையாகும். எனவே, குழந்தைகளை
நல்ல மனிதர்களாக உயர்த்துவதில் பெற்றோர்களைவிட சமூகத்திற்கே முதன்மை பொறுப்பு இருக்கின்றது.
குழந்தைகளின் கல்வி முறைகள் மதிப்பெண்களில்
சுருங்குதல் கூடாது. ஏனெனில் மதிப்பெண்களின் மதிப்பென்பது பயணங்களில் வாங்கப்படும்
டிக்கட்டின் மதிப்புதான். பயணங்கள் டிக்கட் வாங்குவதற்காக நிகழ்பவை அல்ல. அனுபவங்களை
வளர்ப்பதற்காகவே பயணங்கள். அறிவுலக பயணங்களுக்கு மதிப்பெண்கள் வெறும் டிக்கட்டுகள் மட்டுமே.
இலக்கியக் கல்வியால் மட்டுமே குழந்தைகளை இலக்குடைய மனிதர்களாக உருவாக்க முடியும். எல்லா வகுப்பறைகளும் இலக்கியங்களால் வார்க்கப்படுபவைகள்தான். நல்ல வகுப்பறை குழந்தைகளின் தனித்துவங்களையும்
சமூக ஆற்றல்களையும் கண்டறிந்து குழந்தைகளுக்கே உணர்த்துவதாக அமைய வேண்டும். குழந்தைகளைச்
சிந்திப்பதற்கும், கேள்வி கே்ட்பதற்கும், தமது கருத்துக்களைத் துணிச்சலாகப் பேசுவதற்கும்,
கலந்துரையாடுவதற்கும், விவாதிப்பதற்கும், எது சரி என்பதை நோக்கி முடிவெடுக்கப் பழகுவதற்கும்
வாய்ப்புகளாக வகுப்பறை கல்வி அமைதல் வேண்டும். குழந்தைகள் தங்கள் தனித்துவங்களை சமூக
மேன்மை இலட்சியங்களுடன் இணைத்து படைப்பாளர்களாக வெளிப்படுவதற்கான வாய்ப்புகளை கல்விமுறை
வழங்க வேண்டும்.
குழந்தைகளின் கல்வி அவர்களின் தாய்மொழியில்
அமைவது அவசியம். அறிவியல்பூர்வமான கல்வியாக உலகில் நடைமுறையிலுள்ள தாய்மொழி வழி கல்வியால் மட்டுமே அறிவியல் கலை இலக்கிய உலகின் வருங்கால ஆளுமைகளாக குழந்தைகளை உருவாக்க முடியும். சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக சமத்துவ இலக்குகளுடன் குழந்தைகளை
வளர்க்க வேண்டும். பெண், ஆண் குழந்தைகள் சமூகளாவிய நிலையில் வளர்க்கப்படும்போதே பாலின
பாகுபாடு கற்பிக்கப்படாமல் வளர்க்கப்பட வேண்டும். பெண்களை ஆண்களும் ஆண்களைப் பெண்களும்
சமத்துவமாக மதித்து வாழ பழக்கப்படுத்த வேண்டும்.
வளர் பருவங்களின் உடல் மாற்றங்களையும்
மன மாற்றங்களையும் கையாளும் சூழலைக் கற்பிக்க வேண்டும். சமூக உழைப்பில் பங்கேற்பதே
சுயமரியாதை என்றுணர்த்த வேண்டும். உழைக்காமல் உண்பது அவமானம் என்ற கருத்தை விதைக்க
வேண்டும். உணவின் வழியாக சமூக உணர்வுகள் மேன்மைப்படுத்தப்பட வேண்டும்.
குழந்தைகள் கூடி பகுத்துண்டு மகிழும்
வாய்ப்புகளைச் சமூகத் திட்டமாகவே செயல்படுத்த வேண்டும். நான், எனக்கு, என்னுடையது என்ற
சுயநலவெறி பண்பாட்டிற்கு ஆளாகாமல் சக மனிதர்களாக வளர்வதற்கு கூடி பகுத்துண்ணும் பண்பாடு
அவசியமாகிறது. நாம், நமக்கு, நமக்காக என்ற பொதுவுடைமை உணர்வும், சகமனிதப் பற்றும் பகுத்துண்ணும்
பண்பாட்டிலிருந்து குழந்தைகளிடம் சாத்தியப்பட முடியும். கற்றுக்கொள்வதற்கும் கற்றுக்கொடுப்பதற்கும்
தலைசிறந்த கல்வி பகுத்துண்டு பழகுதலே ஆகும். இக்கருத்தை நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம்
தலை என்று 322 வது குறளில் வள்ளுவரும் கூறியிருக்கிறார்.
குழந்தைகளை சமூகளாவிய விளையாட்டுகளில்
பங்கேற்கச் செய்ய வேண்டும். விளையாட்டு என்பது வினையாற்று என பொருள்படும். வினையாற்றுதல் என்பது செயல்படுதல் அல்லது உழைத்தல் எனப் பொருள்படும். மனிதர்கள் செயல்படுவதற்குத் தேவையான உடல், மன, அறிவு ஆகியவற்றை ஆற்றல்படுத்தும் வழிமுறையாக விளையாட்டு வினையாற்றுகிறது. எனவே, மனிதர்கள்
வினையாற்றுவதற்கான முன்நிகழ்வே விளையாட்டாகின்றது. குழந்தைகள் விளையாட்டுகளில் ஈடுபடுதல் என்பது சமூக உழைப்பில்
ஈடுபடுவதற்கு தயாராகின்ற மிக முக்கிய நிகழ்வாகும்.
உடல் மேன்மைக்கு ஓடுதல், குதித்தல்,
பிடித்தல் போன்ற விளையாட்டுகளோடு முடித்துவிடக் கூடாது. உள்ளம் மற்றும் அறிவு மேன்மைக்கான விளையாட்டுக்களில்
ஈடுபடுத்த வேண்டும். படைப்பாற்றல் சிந்தனைகளை ஊக்கப்படுத்துகின்ற கலை அறிவியல் கொண்டாட்டங்களில்
பங்கேற்கத் தூண்ட வேண்டும். பாடல், ஆடல், நாடகம் நடித்தல், ஓவியம் படைத்தல், கவிதை
படித்தல், கதை பேசுதல் என்பதாக பங்கேற்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் விரிவுபடுத்த
வேண்டும்.
குழந்தைகளோடு கதைபேசுவது மிக முக்கியமான
சமூக நிகழ்வாகும். ஏனெனில், குழந்தைகளின்
மேன்மைக்கு கதையே விதை. நேசமிக்க மனிதர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையில் மிகப்பெரிய பள்ளத்தாக்குகள் உருப்பெற்றமைக்கு
கதை பேசும் பண்பாட்டை கைவிட்டதும் ஓர் காரணமாகும்.
கதை
பேசுதல் என்பது குழந்தைகளின் சமூக உணர்வை அவர்களது அறிவிலிருந்து ஆழ்மன
உணர்வுவரை, கற்பனை வளத்துடனும் கருத்து செறிவுடனும் பற்றும்படி செய்து,
சக மனிதராக உயர்த்துவதாகும்! குழந்தைகளோடு கதை பேசுதலை
நிகழ்த்தாவிட்டால்... அது மனித வளர்ச்சியை கொலை செய்தலுக்கு இணையாக்கும்!
குழந்தைகள்
நம்மிலிருந்து வந்தவர்கள்தான். ஆனால்,
நம்
சொத்துக்களாக வரவில்லை...
அடுப்பில்
பிறந்த உணவை அடுப்பே திண்பது இல்லை
அடு்ப்பால்
பெற்ற அமுதை அடுப்பிற்கே இட்டால் அது மடமை
அவர்களது
உணர்வுகள் எண்ணங்கள் மிகவும் தனித்துவமானவை.
அவர்களது
கற்பனைகளுக்கும் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க நாம் கடமைபட்டிருக்கின்றோம்.
அவர்களது
தனித்துவங்கள் சமூக மேன்மை இலட்சியங்களுடன் இணைவதற்கு வாய்ப்புகளாக நாம் அமைவோம்.
நமது தனிப்பட்ட ஆசைகளை இலட்சியங்களை
அவர்களிடம் திணிப்பது, வருங்காலச் சிற்பிகளாகிய குழந்தைகளை அவமதிப்பதற்கு ஒப்பாகும்.
நாம் அவர்களுக்குச் செய்ய வேண்டியதெல்லாம்
சமூக மேன்மை இலட்சியங்களை உணரச் செய்வது மட்டுமே!
நம்மிலிருந்து வந்துள்ள குழந்தைகளை நாம்
வளர்க்க வேண்டாம்...
உயர்த்துவோம், கொண்டாடுவோம்!
சமூகளாவியத்
திட்டங்களின் முழுதளாவிய பங்கேற்புகளுடன் குழந்தை வளர்ப்பு ஆக்கம் பெற்றால் மட்டுமே
சமூக மேன்மையின் இலக்கு நோக்கி சமூக வளர்ப்பு வெற்றி பெறும். சமூக வளர்ப்பை
உந்திச் செலுத்த இலக்கிய அறிவியல் துணை செய்யும்.
இலக்கிய அறிவியலின் சுற்றி வளைக்கும்
இத்தகையப் பார்வைகளை முழுதளாவிய நிலையில் நோக்கும்போது நமக்கு மொழி குறித்த ஓர்
உண்மை புலப்படும்.
மொழி என்பது
சமூகத்தின் தனித்த உறுப்பு அல்ல.
மாறாக, நமது
உடலில் ஓடுகின்ற ரத்தம் போன்றது.
உடலின் சகல உறுப்புக்களுக்கும் பாயாவிட்டால்
ரத்தத்திற்கு ஏது பெருமை? சகல துறைகளுக்கும் அறிவைப் பாய்ச்சாவிட்டால் மொழிக்கும் இல்லை
பெருமை! உடலின் அனைத்து உறுப்புக்களையும் உயிர்த்திருக்கச் செய்வது ரத்தத்தின் கடமை.
சமூகத்தின் அனைத்து துறைகளையும் உயிர்த்திருக்கச் செய்வது மொழியின் கடமை. ஏனெனில் மக்களின்
மொழியே அவர்களது சமூக உணர்வைக் கட்டமைக்கின்றது.
கற்பனை வளங்களிலிருந்து கருத்துச் செறிவுவரை
மக்களின் உணர்வுகள் மொழியால் கட்டமைகின்றன. எனவே சகல துறைகளுக்கும் மொழி செயலாற்ற வேண்டும்.
அறிவியலும் கலையும் சகல துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. அறிவியலுக்கும் கலைக்கும்
மொழியே உருவம் தருகின்றது.
அறிவியல் இலக்கிய அறிஞர்கள் கலை இலக்கியப்
படைப்புகளை உணர வேண்டும். கலை இலக்கிய அறிஞர்கள் அறிவியல் இலக்கியப் படைப்புகளை உணர
வேண்டும். இரு அறிஞர்களும் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் பரஸ்பரமாக வினையாற்றிக்கொள்வது,
மொழியின் சமூக மேன்மைக்கு இன்றியமையாதத் தேவையாகும்.
கலையை வழிநடத்துதல் அறிவியலின் கடமை!
அறிவியலுக்குச் சேவை செய்தல் கலையின்
கடமை!
“அறிவை ஒழுக்கத்தை வளர்க்கும் இலக்கியமே
தேவை. ஆகவே, இனிமேல்தான் நமக்கான இலக்கியம் தோன்ற வேண்டும்” (பெரியார்.2017:532)
மொழியின் கடமையைச் செயல்படுத்துகின்ற
ஆற்றல் இலக்கிய அறிவியலுக்கே இருக்கின்றது. செயல்படுத்துகின்ற கடமை அம்மொழிக்கு உரிமையுள்ள
மக்களுக்கும், படைப்பாளர்களுக்கும், படிப்பாளர்களுக்கும், கருத்தாளர்களுக்கும், கடனாக
அமைகின்றது. நாம் சமூகத் தேக்கத்தில் உழல்கின்ற புத்தகப் புழுக்களோ கருத்துக் கரையான்களோ
அல்ல. மாறாக, இலக்கிய அறிவியலின் வாயிலாக சமூக மேன்மையைச் சாதிப்பதற்காகப் பயணிப்பவர்கள். நம்
கடன் பணி செய்து சிறப்பதே!
தாமரையின் அழகு நீர்மட்டத்தின் உயரம் எனில்
மனிதகுலத்தின் அழகு இலக்கிய மட்டத்தின் உயரம்
No comments:
Post a Comment