1.1.காடுசார்ந்த
பொருள் சேகரிப்பு நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)
காடுகளில் வாழ்ந்த மனித மூதாதையர்களிடமிருந்து
மனிதர்கள் பரிணமித்தார்கள். மனிதர்களின் தாய் கூட்டத்தை வழநடத்தினாள். ஆண்கள் பெண்கள்
அனைவரும் பாகுபாடின்றி உழைத்தார்கள். உழைப்பு என்பது பெரும்பாலும் பொருள்களைப் புதிதாக
உற்பத்தி செய்கின்ற நடவடிக்கைகளாக அமையவில்லை. காடுகளில் கிடைக்கின்ற காய், கனி, கொட்டை,
கிழங்கு, இலை, தேன், இறைச்சி போன்ற பொருட்களை சேகரிக்கின்ற நடவடிக்கைகளாகவே அக்கால உழைப்பு திகழ்ந்தது.
வேட்டைக் கருவிகளைக் கண்டடையாதக் காரணத்தால் பெரும்பாலும் வேட்டையாடுவதில் ஈடுபடவில்லை.
சிறிய ஆயுதங்களைப் பயன்படுத்தி மிக எளிய உயிரினங்களைக் கொன்று சேகரிப்பு செய்திருக்கலாம்.
ஆனால் இத்தகைய வேட்டைத் தொழில் துணை தொழிலாக மட்டுமே இருந்திருக்கின்றது. ஏனெனில் கூட்டத்தில்
அனைவரின் தேவைகளையும் நிறைவு செய்கின்ற ஆற்றலாக வேட்டைத் தொழில் தொடங்கியிருக்கவில்லை.
ஆற்றலுள்ள வேட்டைக் கருவிகளைக் கண்டடைய பல தலைமுறை காலங்கள் பரிணமிக்க வேண்டியிருந்தன.
அதுவரை காடு சார்ந்த பொருட்களைச் சேகரிப்பதே தாய்தலைமை சமூகத்தின் சாத்தியமான நடவடிக்கையாக
அமைந்தது. இலை தழைகள், நார்கள், மரப்பட்டைகள் போன்ற பொருட்களால் உருவாக்கப்பட்ட சேகரிப்புக்
கருவிகளே மனிதர்கள் பயன்படுத்திய ஆரம்பகாலக் கருவிகளாக இருந்திருக்க முடியும். இதற்கான
ஆதாரங்களை தொல்லியல் துறையில் பெற முடியாதது வரலாற்றின் பலவீனமாகவே உணர முடிகின்றது.
ஏனெனில் கற்கருவிகளைப்போல காலத்தால் நீடித்திருக்கும் ஆற்றலை இத்தகைய சேகரிப்புக் கருவிகள்
பெற்றிருக்கவில்லை.
மறுஉற்பத்தியைச் சுட்டும் கருத்தாக்கம்
பெண்பால் தொழிற் பாகுபாட்டில் காணப்படுவதை புரோவர் இனங்காண்கிறார். பெண்கள் செய்யும்
புழங்கு பொருட்கள் பாய், கூடை, முறம், ஓலைப்பெட்டி போன்றவை நீண்ட காலம் உழைக்காதவை.
(பக்தவத்சலபாரதி.2005:347)
நவீன காலத்திலும்கூட பெரும்பாலும் பெண்கள்
உற்பத்தி செய்கின்ற மூங்கில் கூடை, நார் பை, முறம் போன்ற பொருட்கள் காலத்தால் நீடிக்காமல்
விரைந்து அழிந்துவிடுகின்றன. அவை மீண்டும் மீண்டும் மறுஉற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களாகவே
இருந்திருக்கின்றன. எனவேதான் வரலாற்று அறிஞர்களுக்கு தாய்தலைமை சமூகத்தின் காடுசார்ந்த
பொருட்சேகரிப்புக் கருவிகள் கிடைப்பதில்லை. அதனால்தான் மனித வரலாறை கற்கருவிகளின்
வேட்டை நாகரிகத்திலிருந்து தொடங்குகிறார்கள். இவர்களின் இவ்விளக்கங்களை வரலாற்று விடுபடுதலாகவே
கருத வேண்டியுள்ளது. ஏனெனில் மனித இனம் தோன்றும்போது வேட்டை உயிரினமாக தோன்றியிருக்கவில்லை.
ஆற்றலுள்ள வேட்டைக் கருவிகளைக் கண்டடையும்வரை மனிதர்கள் தாயின் அரவணைப்பில் காடுசார்ந்த
பொருட்சேகரிப்பில் ஈடுபட்டு வாழ்ந்துள்ளார்கள். தாய் தலைமையின் இயற்கையால் மனித வாழ்க்கை
வழிநடத்தப்பட்டுள்ளது. வேட்டை நாகரிகம் தோன்றி கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகமாக வளர்ந்து
தந்தையதிகாரச் சமூகமாக கட்டமையும்வரை தாய்தலைமை சமூகமே மனித வரலாற்றுக் காலத்தில் பெரும்பகுதியாக
இருந்துள்ளது. தாய்தலைமை சமூகம் பற்றி இரண்டு வசன இலக்கியங்களில் விவரித்துள்ளோம்.
1.காதல் வரலாறு (புதியவன்.மே 2016:20-25)
2.காதலிலிருந்து கடவுள் வரை. (புதியவன்.டிசம்பர்2016:29-37)
தாய்தலைமை சமூகத்தின் வாழ்வியலையும்
தந்தை அதிகாரச் சமூகம் தோன்றியக் காரணிகளையும் இக்கட்டுரைகளில் உணரலாம்.
மேலும், நரிக்குறவர்களின் தெய்வ வழிபாடு பற்றிய கதைகள் என்ற எமது வசன இலக்கியத்தில்
காளி வழிபாடு குறித்த கதையையும் அக்கதை குறித்த கருத்தாடலையும் பரிசீலிக்கவும். கருத்தாடலை
மட்டும் இங்கு பதிவு செய்கிறேன்.
“இந்த கதையை எருமை பலியிடும் சடங்கிற்கு
ஒரு வரலாறாக சொல்கிறார்கள். ஆனால், காளி கதையோ எருமை பலியிடும் சடங்கின் வரலாறை உணர்த்தவில்லை.
மாறாக, இந்தக் கதை நரிக்குறவர்களின் வரலாற்றுத் தொன்மையை உணர்த்துகின்றது. வாய்மொழி
இலக்கியங்களை வரலாற்று ஆவணங்களாகக் கொண்டு வரலாறை கண்டறிதல் என்ற கோட்பாட்டின்படி இக்கதையில்
வெளிப்படுகின்ற நரிக்குறவர்களது வரலாற்றுத் தொன்மையை அறியலாம்.
கூட்டத்தின் அனைவரின் பெயரும் காளி என்ற பெண் பால் பெயரால் சுட்டப்படுகின்றது.
ஆண், பெண் என்ற பாலின வேறுபாடு பற்றிய கருத்தாக்கங்கள் தோன்றாத தாய் தலைமையின் காலத்தைப்
பிரதிபலிக்கின்றது. காளி என்ற தாயின் பெயரால் மட்டுமே கூட்டம் அடையாளப்படுகின்றது.
எனவே, இக்கதை தாய்தலைமை சமூகத்தின் தொன்மையைப் பிரதிபலிக்கின்றது.
எருமைகள் மேய்ந்துகொண்டிருக்கும்
தோப்பிலிருந்து பழங்களை மூட்டை கட்டி சேகரிக்கிறார்கள். மூட்டையாகப் பயன்படுத்தப்பட்ட
பொருள் எது என்பது விளக்கம் பெறவில்லை. ஆனால், அது காடு சார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகத்தின்
தொன்மையான சேகரிப்பு கருவிகளில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். காளி கூட்டத்தார் பழங்களைச்
சேகரித்த நடவடிக்கையானது தாய் தலைமை சமூகத்தின் தொன்மையாகிய காடு சார்ந்த பொருள் சேகரிப்பு
நாகரிகத்தையே பிரதிபலிக்கின்றது.
தற்காப்பிற்காகவும்
பதில் தாக்குதலுக்காகவும் திரிசூலத்தால் எருமையைக் கொல்கிறார்கள். இதனைத் திட்டமிட்ட
வேட்டை நடவடிக்கையாகக் கருத இயலாது. மேலும், திரிசூலம் என்பது வேட்டை கருவியும் அல்ல.
மானிடவியலார் விளக்கப்படி திரிசூலம் என்பது கிழங்குகளைத் தோண்டி எடுப்பதற்கான கருவியாகும்.
எனவே, திரிசூலம் என்ற இக்கருவி காளி கூட்டத்தாரை வேட்டை நாகரிகத்திற்கு உரியவர்களாக
உணர்த்தவில்லை. ஏனெனில், வேட்டை முதன்மை தொழிலாக அல்லாமல் துணைமை தொழிலாக மட்டுமே அறிய
முடிகின்றது. காளி கூட்டத்தாரின் நாகரிகமானது விவசாயமும் கால்நடை வளர்ப்பும் ஆரம்ப
நிலையிலிருந்த தாய்தலைமை சமூகத்தின் நாகரிகமாகும். காடு சார்ந்த பொருள் சேகரிப்பே காளி
கூட்டத்தாரின் முதன்மை பொருளாதாரமாக அறிய முடிகின்றது. தாய்தலைமை சமூகத்தின்
பிரதிநிதிகளாகவும், காடு சார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகத்தின் பிரதிநிதிகளாகவும்
காளி கூட்டத்தார் திகழ்கின்றனர் என்பது நிரூபனமாகின்றது.
காளி கூட்டத்தாரின் சந்ததிகளாகிய நரிக்குறவர்களின் தொன்மையானது
மனித வரலாற்றின் தொடக்கத்தோடு தொடர்புறுகின்றது. அதாவது, காடு சார்ந்த பொருள் சேகரிப்பு
நாகரிகத்தின் தாய்தலைமையைப் போற்றும் பழங்குடிகளாக நரிக்குறவர்கள் சமகாலத்தில் வாழ்வதே
அத்தகைய வரலாற்றுத் தொடர்பாகும்.”
(நரிக்குறவர்கள் இடத்திற்கு நான்குதின பயணம் https://puthiyavansiva.blogspot.com/2016/06/blog-post_78.html )
காடு சார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகம் என்பது சமூகவிஞ்ஞானம் விளக்கும் சமூக வரலாற்றில் ஆதிப்பொதுவுடைமை சமூகமாக விளக்கம் பெறுகின்றது. (புதியவன்.நவ 3,2019)
1.2.வேட்டை
நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)
காடுசார்ந்த
பொருள் சேகரிப்பில் வாழ்ந்த மனிதர்கள் படிப்படியாக இயற்கையில் கிடைத்த கற்களை தற்காப்பிற்கான
கருவிகளாகவும் வேட்டையாடுவதற்கான ஆயுதங்களாகவும் பயன்படுத்தும் அறிவைக் கண்டடைந்தார்கள். கருவிகளைப்
பற்றிய அறிவு மனிதர்களின் செயல்களைத் தொடர்ந்து செதுக்கியதால் கருவிகள் படிப்படியாக
நவீனமடைந்தன. வேல், வில், அம்பு போன்ற நவீன வேட்டைக் கருவிகளால் வேட்டையாடுதல்
முதன்மையானத் தொழிலாக உருமாறத் தொடங்கியது. மனிதர்கள் ஒன்றுபட்டு திட்டமிட்டு வேட்டையாடும்
பக்குவத்தை அடைந்தார்கள். மனிதர்களின் தாய் இயல்பாக வழிநடத்தினாள். வேட்டையில் கிடைத்தப்
பொருட்களைத் தாயின் அரவணைப்புடன் பரிமாறிக்கொண்டார்கள். வேட்டை முதன்மைத் தொழிலானதால்
காடுசார்ந்த பொருள் சேகரிப்பு துணைத் தொழிலாக உருமாறியிருந்தது. (புதியவன்
2017:31-32)
வேட்டை நாகரிகம் என்பது சமூகவிஞ்ஞானம்
விளக்கும் சமூக வரலாற்றில் ஆதிப்பொதுவுடைமை சமூகமாக விளக்கம் பெறுகின்றது.(புதியவன்.நவ 3,2019)
1.3.கால்நடை
மந்தை வளர்ப்பு நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
வேட்டை நாகரிகத்தின்
விளைவாக கால்நடை வளர்ப்பு முறை தோன்றியது. காடுசார்ந்த பொருள் சேகரிப்பிலும் வேட்டையாடுதலிலும்
மனிதர்கள் தங்களது சமூகத்தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் மேன்மையடைந்தார்கள்.
ஆனால், சமூகச் சொத்துக்கள் உருவாக்கம் பெறவில்லை. அதாவது, தேவைக்கு அதிகமானப் பொருட்களைச்
சேகரித்துக் குவிக்கின்ற நிலைமை உருவாகவில்லை. கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்தில்
இத்தகைய நிலைமை மாறத்தொடங்கியது.
வேட்டையாடப்பட்ட மிருகங்களின் குட்டிகள்
மனிதர்களின் கால்களைச் சுற்றிவந்த அனுபவங்களில் மந்தை தொழில் உருவெடுக்கத் தொடங்கியது.
குட்டிகளை வளர்த்து மந்தையாக பராமரிக்கும் அறிவை படிப்படியாக கண்டடைந்தார்கள். கால்நடை
வளர்ப்பு முதன்மைத் தொழிலாக உருவெடுத்ததால் வேட்டையாடுதலும் காடுசார்ந்த பொருள் சேகரிப்பும்
துணை தொழில்களாயின. உணவிற்காகவும் வேட்டைக்காகவும் மனிதர்கள் காடுகளில் ஓடித்திரிய
வேண்டிய அவசியம் குறைந்து போனது. தேவைக்கு அதிகமான இறைச்சிகள் கால்நடை மந்தைகளாகக்
குவியத் தொடங்கின. கால்நடை மந்தைகள் சமூகச் சொத்துக்களாக உருவெடுத்தன.
சமூகச் சொத்துக்களைத் தாயின் தலைமைப்
பண்பே இயல்பாக வழிநடத்தியது. கால்நடைகளைப் பராமரிப்பதற்கு மேய்ச்சல் தொழிலில் ஈடுபடத்
தொடங்கினார்கள். மனிதர்கள் தங்கள் கால்நடைகளுடன் காடுகளை வலம் வரத் தொடங்கினார்கள்.
சமூகச் சொத்துக்கள் உழைப்பை எளிமைபடுத்தியதால் ஓய்வுக்கால உணர்வு உரமேறியிருந்தது.
ஓய்வுக்காலம் மனிதர்களின் புதிய தேடல்களுக்கு வழியமைத்தது.
தேடல்களுடன் மேய்ச்சலில் ஈடுபட்ட மனிதர்களுக்கு
துல்லியமான சிந்தனைகளும் அடர்த்தியானக் கற்பனைகளும் விரிவடைந்தன. பயணங்களால் மனித எண்ணங்களும்
உணர்வுகளும் உரமேறிக்கொண்டிருந்தன. இரத்தப் போக்கு காலங்களிலும், கர்ப்பக்
காலங்களிலும் மேய்ச்சல் பயணங்களில் தொடர்ந்து ஈடுபட இயலாத பெண்கள் மேய்ச்சலுக்கு
மையமாக குடியமர்ந்து வாழத் தொடங்கினார்கள். இத்தகைய குடியமர்வு பெண்களின் மேய்ச்சல்
உழைப்பிற்கு தற்காலிக ஓய்வாக திகழ்ந்தது. குடியமர்தலின் விளைவும் ஓய்வும் சுற்றுச்
சூழலில் நிகழ்கின்ற அன்றாட மாற்றங்களை உணர வாய்ப்பாக அமைந்தது. மண்ணில் தலைகாட்டி வளர்கின்ற
இளம் பயிர்களைக் கண்டுணர்ந்தனர். தாவரங்களின் வளர்ச்சி பற்றிய துல்லியமான அறிவைக் கண்டடைந்தனர்.
கால்நடைகளுக்குத் தேவையானப் பயிர்களை விதைத்து பயிரிடும் அறிவைக் கண்டடைந்தனர். தாய்தலைமை
சமூகத்தின் மக்களால் மேய்ச்சலுக்கு பயன்படும் வகையிலான தொடக்கநிலை வேளாண்மை மேற்கொள்ளப்பட்டது.
கால்நடை மேய்ச்சலின் வளர்ச்சியும், தொடக்கநிலை வேளாண்மையும் தாய்தலைமை சமூகத்தின் வெளிப்பாடாகத்
திகழ்ந்தன.
மேய்ச்சலுக்கு மையமான இடத்தில் குடியேறி
நிலைத்து வாழ்வது வழக்கமாகியது. குடியமர்ந்த இடத்தை மையமாகக் கொண்டு மேய்ச்சலுக்கான
பயிர் தொழிலிலும், மேய்ச்சல் தொழிலிலும், மந்தை பராமரிப்பிலும் ஈடுபட்டனர்.
காடுசார்ந்த பொருள் சேகரிப்பும் வேட்டையும் முக்கியமற்றுப் போயின. கால்நடை மந்தை வளர்ப்பு
நாகரிகம் நிலைபெறத் தொடங்கியது. இந்த நாகரிக காலத்தில் ஏற்பட்டுள்ள சமூகச்
சொத்துக்களின் அதிகரிப்பும் பாலுறவு உரிமைகளில் நிகழ்ந்துள்ள மாற்றங்களும் தந்தையதிகாரச்
சமூகம் உருவெடுக்க வழியமைத்தன. (புதியவன்.மே2016:22)
வரைமுறையற்ற பாலுறவு உரிமையைக் கடந்து
தாய் பிள்ளை மீதான பாலுறவு உரிமை தடை, உடன் பிறந்தவர் முதல் தூரத்து சகோதர சகோதரிகள்
வரையிலான பாலுறவு உரிமை தடை போன்ற தடைகளைக் கடந்து, இருவேறு கூட்டத்து மனிதர்கள் பாலுறவு
உரிமைகளில் ஈடுபடத் தொடங்கினர். இதற்கான வரலாற்றுக் காரணங்களை காதல் வரலாறு என்ற
வசன இலக்கியத்தில் விவரித்துள்ளோம். (புதியவன்.மே 2016:20-25)
இரு வேறு கூட்டத்து மனிதர்களுடனான
பாலுறவு உரிமையால் ஒரு சமூகத்தின் சொத்துக்களை மறு சமூகத்தின் மனிதர்கள் உரிமை கொண்டாடுவதற்கான
வாய்ப்பினைப் பெற்றார்கள். தாயின் தலைமைப்பண்பு இரு கூட்டத்தாரையும் ஒரே சமூகமாக அரவணைத்தது.
ஆனால் சமூகச் சொத்துக்கள் மீதான புதிய மனிதர்களின் உரிமையை ஆண்கள் வெறுத்தார்கள். தாய்தலைமையின்
பராமரிப்பிலிருந்து சமூகச் சொத்துக்களைப் பறிக்க முயன்றார்கள். அவர்களின் முயற்சிக்கு
இரண்டு கண்டுபிடிப்புகளை ஆதரவாக்கினார்கள்.
1.சமூகச்
சொத்துக்கள் ஆண்களின் அதிகபட்ச உழைப்பால் உருவாகின்றன. பெண்களின் சமூக உழைப்பு குறைந்தபட்சமாக
உள்ளது. ஏனெனில் ரத்தப் போக்கு காலத்திலும் கர்ப்பக் காலத்திலும் உழைப்பில் ஈடுபட முடிவதில்லை.
ஆகவே ஆண்களே சமூகச் சொத்துக்களுக்குத் தலைமையேற்க வேண்டும். (சிவக்குமார்,கே.2016:84)
2.மனிதர்களைப்
பெற்றெடுக்கும் பெண்கள் இனப்பெருக்க தெய்வத்தின் அருளால் குழந்தைகளைப் பெறுவது இல்லை.
மாறாக ஆணுடனான பாலுறவு உரிமையால் மட்டுமே குழந்தைகளைப் பெறுகிறார்கள். விதை இல்லாமல்
பயிர் இல்லை என்பதுபோல ஆண்கள் விதைக்காமல் பெண்களுக்கு குழந்தைகள் இல்லை. எனவே சமூக
வாரிசுகளாகக் குழந்தைகளைப் பெற்றுத்தந்த பெண்கள் கொண்டாட்டத்திற்கு உரியவர்கள் அல்ல
என்பதாக வாதிடுகிறார்கள். (புதியவன்.டிசம்பர்2016:35)
தாய் தலைமையின் மீது ஆண்கள் வெறுப்பை தொடர்ந்து உமிழ்ந்தார்கள்.
உமிழ்தலிலிருந்து ஆணதிகாரச் சமூகம் உருவெடுக்கத் தொடங்கியது. தாய்க்கு
மறுப்பாக தந்தை அடையாளத்தை ஏற்றுக்கொண்டது. தாய்தலைமையின் சமூகச் சொத்துக்கள் தந்தையதிகாரத்தின்
தனிச்சொத்துக்களாக அங்கிகாரம் பெற்றன. சொத்தாதிக்கமுள்ள ஆண்களுக்கு சொத்தாதிக்கமற்ற
அனைவரும் அடிமைகளாகப் பணிந்தனர். பெண்களே முதன்மை அடிமைகளாகப் பணிந்தார்கள். தாய்தலைமைப்
பண்பிலிருந்து படிப்படியாக பாலுறவு அடிமையாகவும் பொருளாதார அடிமையாகவும் முடங்கிப்போயினர்.
தாய்தலைமையின் வீழ்ச்சியும் தந்தையதிகாரத்தின் நீட்சியும் கால்நடை மந்தைவளர்ப்பு நாகரிகத்தில்
தவிர்க்க முடியாத அநாகரிகங்களாக அடையாளம் பெற்றன. கால்நடை மேய்ப்பாளர்களின் அரசராகிய
செங்கோல் அரசர்கள் சமூகத்தை ஆட்சி செய்தனர். வரலாற்றின் புதிய கட்டங்களுக்கும் தந்தை
அதிகாரமே முகமாக நிலைக்கத் தொடங்கியது.
கால்நடை
மந்தை வளர்ப்பு நாகரிகம் என்பது சமூகவிஞ்ஞானம் விளக்கும் சமூக வரலாற்றில் ஆண்டான் அடிமை
சமூகமாக விளக்கம் பெறுகின்றது.(புதியவன்.நவ
3,2019)
1.4.விவசாய
நாகரிகம்
மந்தை வளர்ப்பில்
தோன்றிய தந்தையதிகாரச் சமூகம், தனது ஆணாதிக்கப் பண்புகளால் ஒட்டுமொத்தப் பெண் சமூகத்தையும்
நிலைத்த அடிமைகளாக உருமாற்றியிருந்தது. பெண்மையின் சகமனிதத்துவம் மூவகை உரிமை இழப்புக்களால்
கருவறுக்கப்பட்டிருந்தது. ஆணின் சொத்தாக முடங்கியதில் சுயப் பொருளாதார உரிமையை பறிகொடுத்தனர்.
ஆணின் பாலிச்சைப் பொருளாக ஒடுங்கியதில் பாலுறவிற்கான சுய தேர்வு உரிமையை இழந்தனர்.
ஆணாதிக்கக் கருத்தாக்கங்களால் சுயசிந்தனை உரிமைகள் அடக்கம் செய்யப்பட்டன.
பெண் சமூகத்தின் உடலுக்கும் மூளைக்கும்
உடைக்க முடியாதப் பெரும் பூட்டை தந்தையதிகாரம் பூட்டிற்று. தந்தையதிகாரத்தின் வேர்களில்
முறிக்கப்பட்ட தாய்தலைமை மட்கிப்போனது. ஆணதிகாரச் சமூகத்தின் அடிமைச் சொத்துக்களாக
பெண்கள் நிலைத்துவிட்டார்கள். பெண்களின் சமூகச்சிந்தனை தந்தையதிகார எல்லைகளுக்குள்
வட்டமிடப் பழகியது. ஆணின் இச்சைக்கு மசிகின்ற அலங்கார பொம்மையாகவும், வாரிசை பெற்றுத்தருபவளாகவும்,
ஆணின் குடும்பத்திற்காக ஓய்வின்றி உழைப்பவளாகவும் பெண்கள் வாழ வேண்டும். இத்தகைய வாழ்க்கை
முறையே பெண்ணிற்கான சமூக மரியாதையாக அங்கீகாரம் பெற்றன.
சமூகத்தின்
சரிபாதிப் பெண்களின் உணர்வும் அறிவும் செயலும் முடக்கப்பட்டன. மறுபாதி ஆண்களுக்கோ
பிரபஞ்சம் தழுவிய அளவில் உந்தப்பட்டன.
இயற்கை, சமூகம், பண்பாடு, தத்துவம்,
சொத்தாதிக்கம், போர், புதிய கருவிகள், புதிய ஆயுதங்கள், கண்டுபிடித்தல், கண்டு படைத்தல்,
முக்காலச் சிந்தனை என ஆண்களின் வாழ்க்கை வட்டம் விரிவடையத் தொடங்கின. பெண்ணடிமைத்தனம்
என்ற அநாகரிகத்தைப் பற்றிக்கொண்டு தந்தையதிகாரச் சமூகம் முன்னேறிக்கொண்டே சென்றது.
கால்நடைகளின் மேய்ச்சலுக்கான விவசாயத் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்தன. புதிய உலோகங்கள்,
இரும்புக் கருவிகள், புதிய கைவினைத் தொழில்கள் போன்ற கண்டுபிடிப்புகள் மேய்ச்சலுக்கான
விவசாய தொழில்நுட்பத்தை படிப்படியாக பரிணமிக்கச் செய்தன.
மேய்ச்சலுக்கான விவசாய தொழில்நுட்பங்களின்
பரிணமிப்பு மனித உணவுத் தேவைகளுக்கான விவசாயத் தொழில்நுட்பங்களாக நிலைபெற தொடங்கின.
விவசாய நிலங்களே முதன்மைச் சொத்துக்களாகக் கருதப்பட்டன. செங்கோல் அரசர்களிடமிருந்த
அரசு படிப்படியாக வேளாண் விவசாயத்தை ஆட்சி செய்கின்ற நில வேந்தர்களின் அரசாக
நிலைபெறத் தொடங்கியது.(புதியவன்.2017:31)
விவசாய
நாகரிகம் என்பது சமூகவிஞ்ஞானம் விளக்கும் சமூக வரலாற்றில் நிலப்பிரபுத்துவ பண்ணையடிமை
சமூகமாக விளக்கம் பெறுகின்றது.(புதியவன்.நவ
3,2019)
1.5.உற்பத்தியின்
மீதாக வணிக நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
தந்தையதிகாரச்
சமூகத்தில் சொத்தாதிக்க ஆண்களின் சொத்துக்கள் பெருகியிருந்தன. விவசாய கைவினைப் பொருட்கள்
சொத்துக்களாகக் குவியத் தொடங்கின. பயண அனுபவங்களில் முதிர்ச்சி பெற்ற சொத்தாதிக்க ஆண்கள்,
வணிக நடவடிக்கையைக் கண்டடைந்தனர். பொருள்களின் துணை மதிப்பாக பணத்தைக் கண்டறிந்தனர்.
காடுசார்ந்த பொருட்களும், கால்நடை மந்தைகளும், விவசாயப் பொருட்களும், கைவினைப் பொருட்களும்
பணத்தின் துணையுடன் பரிமாற்றம் பெற்றன. பொருள் பரிமாற்றத்தை தொழிலாக வளர்த்தவர்கள்
வணிகர்களாயினர். உற்பத்தியானப் பொருட்களை வணிகர்கள், வணிகத்திற்காகப் பெற்று வணிகத்திற்காக
விற்றார்கள். சமூகத் தேவையின் அடிப்படையில் உற்பத்தியான பொருட்களைப் பரிமாறுவதற்கு
வணிக நடவடிக்கைகள் இன்றியமையாததாக அமைந்தன. மேலும், நிலப்பிரபுக்களின் சொத்தாதிக்கத்திற்கு
போட்டியாக வணிகக் குழுக்களின் சொத்தாதிக்கம் வளர்ச்சியடைந்தன. சமூகளாவிய நிலையில் வணிக
நாகரிகம் விரிவடைந்தது.(புதியவன்.2017:31)
உற்பத்தி
மீதான வணிக நாகரிகம் என்பது சமூகவிஞ்ஞானம் விளக்கும் சமூக வரலாற்றில் நிலப்பிரபுத்துவ
பண்ணையடிமை சமூகமாக விளக்கம் பெறுகின்றது.(புதியவன்.நவ 3,2019)
1.6.வணிக
இலாபத்திற்காக உற்பத்தி செய்தல்
விவசாய நாகரிகத்தின்
சொத்திக்கத்தைவிட வணிக நாகரிகத்தின் சொத்தாதிக்கம் வலிமை பெற்றிருந்தது. விவசாய நிலங்களை
சொத்தாக வைத்திருப்பதைவிட அவற்றில் உற்பத்தியாகின்ற பொருட்களை வாங்கி விற்பதில் கிடைக்கும்
இலாபங்கள் வலிமையான சொத்தாதிக்கமாக உருமாறியிருந்தன. சமூகத் தேவையிலான பொருட்கள் வணிக
இலாபத்திற்காகவே திட்டமிட்டு உற்பத்தி செய்யப்பட்டன. வணிகக் குழுக்கள் நேரடியாக பொருளுற்பத்தியில்
ஈடுபடத் தொடங்கின. சமூகத் தேவையிலான பொருட்கள் சரக்குகளாக உற்பத்தி செய்யப்பட்டு பொருட்களாக
விற்கப்பட்டன. பொருட்களை இலாபத்திற்காகவே உற்பத்தி செய்தார்கள். இலாபத்திற்காகவே வாங்கவும்
விற்கவும் செய்தார்கள். நேரடி பயன்பாட்டிற்காக அல்லாமல் இலாபத்திற்காக உற்பத்தியாவதும்
வாங்கப்படுவதுவும் சரக்குகளே ஆகும். நேரடி பயன்பாட்டிற்கு உட்படும்போதே சரக்குகள் பொருள்களின்
தன்மையை அடைகின்றன. பொருள்களின் துணை மதிப்பாக உருப்பெற்ற பணம் சரக்குகளின் முதல் மதிப்பாக
நிலைப்பெற்றுவிட்டது. பொருளுக்காகப் பணம் என்ற நிலை மாறி பணத்திற்காகப் பொருள் என்ற
நிலை உருவெடுத்திருந்தது. வணிக இலாபத்திற்காகவே சமூகத்திற்கு தேவையான அனைத்துப் பொருட்களும்
உற்பத்தியாகின. சமூகப் பொருளுற்பத்தியைக் குவிப்பதற்காக அறிவியல் கண்டுபிடிப்புகளும்,
நவீன இயந்திரத் தொழில்நுட்பங்களும் முடுக்கிவிடப்பட்டன. ஏராளமான வணிகக் குழுக்கள் போட்டிபோட்டுக்கொண்டு
இலாப வேட்டையில் ஈடுபட்டன. மனிதர்களின் சமூகத் தேவையை புறக்கணித்துவிட்டு, இலாபத்திற்காக
சமூகப் பொருளுற்பத்தியைத் தொடங்கிய கொடும் நாகரிக காலம் இக்காலக்கட்டத்தில்தான் நிலைபெறத்
தொடங்கியது. .(புதியவன்.2017:31-32)
இந்திய சமூகத்தில் இக்காலக்கட்டம் உருவெடுக்காமல்
தடுக்கப்பட்டது. வணிக நாகரிகத்தின் எழுச்சியை முடக்கி, விவசாய நாகரிகத்தின் நில வேந்தர்களே
சமூக அதிகாரத்தில் நீடித்திருந்தார்கள். நில வேந்தர்களுக்கு ஆதரவாக ஆரியர்கள் உருவாக்கிய
அநாகரிகமான வர்ணாசிரமக் கோட்பாடே இதனை சாதித்தது. வர்ண சாதிப் படிநிலைகளே இந்திய சமூகத்தின்
வணிக எழுச்சியைத் தடுத்து முடக்கியது. இந்த வரலாறை இரண்டு வசன இலக்கியங்களில் விவரித்துள்ளோம்.
1.சாதி ஸ்வாக (புதியவன்.2018.)
2.இந்தியாவில் சாதிகளின் சதி
(புதியவன்.2019.)
வணிக இலாபத்திற்காகவே உற்பத்தி செய்தல் என்பது சமூகவிஞ்ஞானம்
விளக்கும் சமூக வரலாற்றில் முதலாளித்துவ சமூகமாக விளக்கம் பெறுகின்றது. (புதியவன்.நவ 3,2019)
1.7.நிதி
மூலதனப் பிரிவு தோன்றி சமூகஉற்பத்தி மீது ஆதிக்கம் செய்தல்
நிதி மூலதனப் பிரிவு என்பது வணிக உற்பத்தியின்
முதிர்ந்த பருவம் ஆகும். இந்தப் பருவத்தில் வணிகமானது ஒட்டுமொத்த சமூகத்தையும் அதிகாரம்
செய்கின்ற இலாப வெறிபிடித்த நிறுவனங்களின் இயக்கமாகக் கட்டமைகின்றது. இத்தகைய இயக்கமானது
சமூக அதிகாரத்தின் மூன்று மையங்களின் ஒன்றிணைவாகும். 1.தொழிலுக்கான மூலதனம் 2.வங்கி
3.அரசு. இந்த மூன்றும் ஒன்றிணைந்த வடிவமே இலாபவெறி பிடித்த நிறுவனங்களின் இயக்கமாகும்.
தனது இலாப வெறிக்காக எத்தகைய அழிவையும் முன்னின்று நிகழ்த்துகின்றன. சமூகத்தேவைகளைப்
புறக்கணித்து இலாப வெறியின் அடிப்படையில் மட்டுமே சமூக பொருளுற்பத்தியை நிகழ்த்துகின்றன.
“மூலதனம்
இலாபமின்மையை அல்லது குறைந்த இலாபம் என்ற நிலையை ஒதுக்குகிறது. போதுமான இலாபம் கிடைத்தால்
மூலதனம் மிகவும் துணிவு பெறுகிறது. 10 சதவீதம் உறுதியான இலாபம் அது எங்கு வேண்டுமென்றாலும்
முதலீடு செய்யப்படுவதை உறுதி செய்யும். 20 சதவீதம் உறுதியான இலாபம் ஆர்வத்தை தூண்டும்.
50 சதவீதம் கிடைக்குமென்றால் அது திமிராய் நடந்துகொள்ளும். 100 சதவீதம் கிடைக்குமென்றால்
எல்லா மனித நியதிகளையும் காலில் போட்டு மிதிக்கத் தயாராகிவிடும். 300 சதவீதம் கிடைக்குமென்றால்
குறுகுறுப்பே இல்லாமல் எந்தக் குற்றமும் செய்யத் தயாராகிவிடும். மூலதனத்தின் உடைமையாளர்
தூக்கிலிடப்படும் அபாயம் இருந்தாலும்கூட எந்த நச்சுப் பரிட்சையிலும் துணிந்து இறங்கும்”
(அப்துல்.நவ.2017:11)
தமது
நிறுவனங்களின் சரக்குகளை நுகர்பவர்களாக மட்டுமே மனிதர்களை மதிக்கின்றன. மாறாக, மனிதர்களின்
சமூக உற்பத்திக்கான உழைப்பை அவமதிக்கின்றன.
இலாப வெறியின் நலன்களுக்காக வேலையில்லா
திண்டாட்டத்தைக் கூர்மைப்படுத்துகின்றன. மக்களை உழைப்பூதியப் போதாமைக்கு ஆட்படுத்தி,
வாங்கும் சக்தியற்றவர்களாக உருமாற்றுகின்றன. வாங்கும் சக்தியற்ற மக்களின் முடக்கத்தால்
உற்பத்தியான சரக்குகளைத் தேக்குகின்றன. சரக்குகளின் தேக்கத்தால் சமூக பொருளுற்பத்தியை
நிறுத்தி சமூகு வேலையிழப்புகளைப் பெருக்குகின்றன.
தேக்கத்தை சமாளிப்பதற்காக சமூகத்தில்
செயற்கைத் தேவைகளை உருவாக்குகின்றன. தேவையற்றப் பொருட்களாயினும் பொய்யானத் தகவல்களின் கவர்ச்சிகர
விளம்பரங்களால், ஆழ்மன தூண்டுதலுக்கு ஆளாக்கி, வாங்கும் நிலமையை நிர்பந்திக்கின்றன.
வாங்கும் சக்தியற்றவர்களுக்காக கடன் முறையில் கொடுத்து, சுயமரியாதையுள்ள மனிதர்களை
கடனாளியாக உருமாற்றுகின்றன.
செயற்கைத் தேவைகளைக் கூர்மைப்படுத்துவதற்காக
திட்டமிட்ட அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. உலகப் போர்களை நிகழ்த்துகின்றன. மறுவாழ்வுத்
திட்டங்கள் என்ற பெயரில் இலாப வேட்டையில் ஈடுபடுகின்றன. ஒப்பந்தங்களின் வழியாக இலாப
வெறியைப் புதுப்பித்துக்கொள்கின்றன. இலாப வெறியின் நலனுக்காகவே மனிதப் பண்பாட்டில்
நுகர்வு வெறியைத் திணிக்கின்றன. தமது சரக்குகளை நுகர முடியாமல் இலாபவெறிக்குப் பயன்படாத
மனிதர்களைப் பிணம் போன்று நடத்துகின்றன.
நுகர்வென்றால் தாய்போன்றும், சமூக நலனென்றால்
பேய்போன்றும், ஒரே காலத்தில் இரு வேடமிட்டு கூத்திடுகின்றன. இலாப வெறியை எதிர்த்தும் சமூக நல மேன்மையை நோக்கி மக்களை முன்னேற்றியும் வருகின்ற சமூகவிஞ்ஞானச் சக்திகளை ஒழிக்க
முடியாமல் திணறுகின்றன. சமூகநல சக்திகளைக் கண்டறிந்து ஒழிப்பதற்காக, பொய்யான சமூகநல
அமைப்புகளுக்கு நிதி வழங்கி வளர்க்கின்றன. சமூகவிஞ்ஞானச் சக்திகளுக்கும் இலாப வெறிபிடித்த
நிறுவனங்களுக்கும் இடையிலான சமூகப்போர் இறுதியை நோக்கி விரைகின்றன.
மக்கள் தலைமை முயற்சிகளும் உற்பத்தி
சக்திகளும் தகுதியான வளர்ச்சியை எட்டாவிட்டால், இலாப வெறி விம்மி விம்மி எழும்.
இலாப வெறியின் விம்மல்கள் பேரழிவு நடவடிக்கைகளின் ஆற்ற முடியாதச் சமூகத் தழும்புகளாகக்
காய்த்துவிடுகின்றன. தேசிய இனவெறி, நிறவெறி, மதவெறி, சாதிவெறி போன்ற வழிமுறைகளில் பேரழிவை நிகழ்த்துகின்றன.
முசோலினியின் பாசிசம், ஹிட்லரின் நாசிசம், சமகால மோடியின் இந்துத்துவம் ஆகியன இலாபவெறியின்
உயிர் பிழைப்பு நடவடிக்கைகளாக உருப்பெற்ற பேரழிவு நடவடிக்கைகளே ஆகும்.
உற்பத்தி சக்திகளின் தகுந்த வளர்ச்சிகளும்,
மக்கள் தலைமைக்கான முயற்சிகளும், இலாபவெறியின் இதயத்துடிப்பை வெடித்துக் கொன்றாக வேண்டும்.
சமூகவிஞ்ஞானிகளால் உருப்பெற்றுவரும் மக்கள் தலைமை முயற்சிகளால் இதயம் வெடித்து சாவதா?
அல்லது வெறும் மந்தைகளாகவே மக்களைப் பராமரித்து, இயற்கை அனுமதிக்கும் எல்லைவரை நீடித்து
அழிவதா? இவற்றைத் தீர்மானித்துக் கொண்டிருக்கின்ற சமூகப் பொருளுற்பத்தியில் தனது
பாதுகாப்பிற்கான இலாப வெறியை நீடித்திருக்க முயன்று வருகிறது நிதி மூலதனப் பிரிவு.(புதியவன்.மே2019)
நிதி மூலதனப் பிரிவு
தோன்றி சமூக உற்பத்தி மீது ஆதிக்கம் செய்தல் என்பது சமூகவிஞ்ஞானம் விளக்கும் சமூக வரலாற்றில்
முதலாளித்துவ சமூகமாக விளக்கம் பெறுகின்றது. (புதியவன்.நவ 3,2019)
1.8.மக்கள்
தலைமையின் கீழ் சமூக உற்பத்தியைக் கட்டமைத்தல்
இரஷ்யாவும் சீனாவும் மனிதகுல வரலாற்றிற்கு முன்னுதாரணமாக அமைந்திருந்ததன் விளைவாக, இலாப
வெறிபிடித்த நிறுவனங்களின் சமூக அதிகாரத்திற்கு எதிராக நிகழ்கின்ற சமூகவிஞ்ஞானப் போர்களில் மக்கள் தலைமை அரசுகள் உலகம் முழுதும் உருவாக வாய்ப்பு இருக்கின்றன என்பது அறிவியல் பூர்வமாக நிரூபணமாகிறது. மக்கள் தலைமை அரசுகள் சமூக
அதிகாரத்தை அடைவது சாத்தியம் என்பதனால் வணிக நடவடிக்கைகளின் இலாப வெறிக்கு பாடை கட்டும். சமூகத்தேவையின் அடிப்படையில் மட்டுமே சமூகப் பொருளுற்பத்தியையும் பரிமாற்றத்தையும்
திட்டமிட்டு நிகழ்த்தும். மனிதர்களின் சமூக உழைப்பிற்கும் படைப்பாற்றலுக்கும்
சமூகளாவிய மரியாதைகளை சாத்தியப்படுத்தும். மனிதர்களின் அனைத்து சமூக உரிமைகளுக்கும்
உத்திரவாதம் அளிக்கும்.
அறிவியல் கண்டுபிடிப்புகளையும் நவீன
தொழில்நுட்ப முன்னேற்றங்களையும், மனித வள மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தும். சமகாலத்தில் முன்னேறி வருகின்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் போன்றவற்றின் வாயிலாக மனிதர்களின் சமூக வேலை நேரத்தைக் சராசரியாகக் குறைக்கும். சமத்துவ உலகம் நோக்கி மனிதகுலத்தை முன்னேற்றுவதற்கான
பண்பாட்டு முயற்சிகளை ஊக்கப்படுத்தும். உலகளாவிய இலாபவெறி நிறுவனங்களுக்கு
எதிராக, உலகளாவிய மக்கள் தலைமை அரசுகளின் ஒன்றியம் உருவாகும். போர்களற்ற
உலகை அடைவதற்காகத் தவிர்க்க முடியாதப் போர்களை எதிர்கொள்ளும். சமத்துவ உலகை
அடைவதற்காக, மக்கள் தலைமை அரசுகளின் சமூகவிஞ்ஞானப் போர்கள் வீரியமடைந்து வெற்றிபெறும்.
விடாமுயற்சியுடனும்
படைப்பாற்றலுடனும் அர்ப்பணிப்புடனும் நிகழ்வுறும் இப்போர்களில், மக்கள் தலைமை அரசுகள் வெற்றி கண்ட பிறகு சமூகப் பொருளுற்பத்தியிலிருந்து இலாப வெறி முற்றிலும் ஒழித்துக்கட்டப்படும். ஏற்றத்தாழ்விற்கு மதிப்பே இல்லாத, சமத்துவச் சமூகம் நோக்கி முன்னேறுவதற்கு வசதியாக,
சமூகத் தேவையின் அடிப்படையில் சமூகப் பொருளுற்பத்தி சாத்தியப்படும் என்பது வருங்கால நடைமுறை குறித்த சமூகவிஞ்ஞானத்தின் கருதுகோளாகும்.
இது
நிகழ்ந்தால் மட்டுமே மனித இனம் இயற்கையின் அங்கமாக நீடித்து தழைக்கும். சமூக விஞ்ஞானம்
விளக்குகின்ற பொதுவுடைமை பொன்னுலகை எட்ட இயலும். இல்லாவிட்டால் நிதிமூலதனப் பிரிவின்
இலாப வெறியால் இயற்கையின் நலன்கள் சூரையாடப்படும். உயிரினங்களின் சூழல் மண்டலம் பேரழிவிற்கு
ஆட்படும். இயற்கையின் உயிரினப் பட்டியல்களிலிருந்து பெரும்பான்மை உயிரினங்கள் உதிர்ந்துவிடும்.
பேரழிவை ஊக்கப்படுத்திய மனித இனம் வரலாறு இல்லாமல் ஒட்டுமொத்தமாகப் புதைந்துவிடும்.
நிதிமூலதன அரசா? மக்கள் தலைமை அரசா? என்பது மனிதகுலத்திற்கு வாழ்வா? சாவா? பிரச்சனையாகும்.
இரண்டில் எந்தவொன்றும் சாத்தியப்படுவதற்கு வசதியாக இருக்கின்றது. சமத்துவ உலகை எட்டுதல்
நோக்கி மக்கள் தலைமையை உந்துதலே, சமூகமேன்மையின் வரலாற்றுத் தேவையாக அமைந்துள்ளது.
வரலாற்றுத் தேவையை நிறைவேற்றுதல் நோக்கி இலக்கிய அறிவியல் உந்தப்பட வேண்டும். (புதியவன்.
2017:32-33)
மக்கள் தலைமையின் கீழ் சமூக உற்பத்தியைக் கட்டமைத்தல் என்பது
சமூகவிஞ்ஞானம் விளக்கும் சமூக வரலாற்றில் சோசலிச சமூகமாக விளக்கம் பெறுகின்றது. (புதியவன்.நவ 3,2019)
இலக்கியங்களில்
வரலாற்றை அணுகும்போதும் படைக்கும்போதும், மனித வரலாற்றுப் படிநிலைகளில் தெளிவுற்றிருப்பது
இலக்கிய அறிவியலின் இன்றியமையாத கடமையாகும். மேலும், சமகாலத்தில் நிலவுகின்ற நிதிமூலதனப்
பிரிவின் வரலாற்றுக் கட்டத்தை உடைத்து, சமூகத் தேக்கத்திற்கு எதிராக செயலாற்ற வேண்டியது
இலக்கிய அறிவியலின் பொறுப்பாகும். ஏனெனில், மக்கள் தலைமை சமூகம் நோக்கி முன்னேறுவதற்கான
வரலாற்று உந்துதலை மனித உணர்வுகளில் உந்தச் செய்து, சமூக மேன்மையைச் சாத்தியப்படுத்துவதே
இலக்கிய அறிவியலின் வரலாற்றுக் கடமை.
No comments:
Post a Comment