காதலை
எப்படி புரிந்துகொள்வது? எதிர்பாலினக் கவர்ச்சியாளர்கள், இருபாலினக் கவர்ச்சியாளர்கள்,
ஒரு பாலினக் கவர்ச்சியாளர்கள், மாற்று பாலினக் கவர்ச்சியாளர்கள் அனைவரும் தங்களுக்குள்
காதலை நிகழ்த்துகிறார்கள். மனிதர்களுக்கு பாலுறவு உரிமை மீதான ஆர்வம் காதலின் அடிநாதம்.
உயிரின அறிவியல் அடிப்படையில் பாலுறவு ஆர்வம் என்பது இனப்பெருக்க உந்துதலாகவே அமைகிறது.
ஆனால், இனப்பெருக்கச் சக்தியை எதிர்பாலினக் கவர்ச்சியாளர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு
இயற்கை வழங்கவில்லை. நமது இலக்கியங்களும் சினிமாக்களும் எதிர்பாலினக் கவர்ச்சியாளர்களின்
காதலைக் கொண்டாடுவதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம். நமக்கு தெரிந்து சமூக எதார்த்தத்தில்
எதிர்பாலினக் கவர்ச்சியாளர்களே ஏராளம். எனவே எதிர்பாலினக் கவர்ச்சியாளர்களின் காதலையே
முதன்மைப்படுத்தி பேசப்போகிறோம்.
நாம் காதலை இப்படி வரையறுக்க முடியுமா? பாலுறவு உரிமையை அங்கீகரிக்கும் வாழ்வின் இணையாளரைத்
தேர்ந்தெடுக்கின்ற உரிமையே காதல். இன்னும் சற்று முயன்றால் இப்படி வரையறுக்கலாம்.
வாழ்வில் ஒத்துப் போகும் புரிதலுடைய நட்பின் ஆழத்தில்,
எதிர்பாலினக் கவர்ச்சி மிகுந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உதயமாகின்ற சமூக உணர்வே
காதல்.
இதையே சமூக விஞ்ஞானிகள் இப்படிச் சொல்கிறார்கள். நல்ல
நண்பர்களே காதலர்களாக மலர முடியும். எனவே காதலை உணர்வதற்கு நட்பை வரையறுப்பது அவசியம்.
மாறிக்கொண்டிருப்பதே உலகின் இயற்கை. மாற்றத்தை அங்கீகரிப்பதே மனித வாழ்க்கை. வாழ்வின்
வளர்ச்சி நண்பர்களால் வலிமை பெறுகிறது. ஆனால், போலி நண்பர்களுக்கிடையில் அக்கறையுள்ள
நண்பர்களை கண்டறிவது எப்படி? நாம் ஒவ்வொருவரும் நட்புறவு பற்றிக் கணக்கிடுவது அவசியம்.
ஒருவரது வாழ்வின் மாற்றங்களில் மற்றவரது பங்கு என்ன? இதன் விடைகளே சரியான நண்பர்களை
அடையாளப்படுத்துகின்றன. நட்பின் ஆழத்தைக் கண்டறிய இதுவே வழியாகும்.
நமது காதலர்கள் நட்பிலிருந்து முளைத்தவர்களா?
நல்ல காதலர்கள்
எப்படி இருப்பார்கள்?
கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்…
1.இருவருக்கும் ஆழமான எதிர்பாலினக் கவர்ச்சி இருக்கும்.
2.மிகமிக நெருங்கிய நண்பர்களாக இருப்பார்கள்.
3.இருவரும் மிக அதிகமாக தங்களுக்குள் விட்டுக்கொடுத்துக்கொண்டு
மகிழ்வார்கள்.
4.பகிர்ந்துகொள்ள விரும்பாத ரகசியங்களைக் கொண்டிருந்தால்கூட
அங்கீகரித்துக் கொள்கின்ற அளவிற்குப் பக்குவப்பட்டிருப்பார்கள்.
5.சமூக உணர்வோடு சரிசமமாகப் பழகுவார்கள்.
இப்படிப்பட்ட காதலர்கள் இணையாளர்களாகத் திருமணம் செய்துகொண்டால்!
நினைத்தாலே கொண்டாட்டமாக இருக்கிறதல்லவா.
இவர்களது
வாழ்வின் பெரும்பகுதி வசந்தகாலங்களால் அலங்கரிக்கப்படுகிறது. ஆனால், நமது காதலர்களின்
கதைகளைக் கேட்டால் பாலை நிலங்கள்தான் உவமைக்கு வருகின்றன. ஏன் நமது காதல்கள் வசந்த
காலங்களாக இருப்பதில்லை. கள்ளிக் காட்டின் கோர முட்களைப் போன்று ஏன் பயமுறுத்துகின்றன?
இங்கு காதலுக்கும்
காதலர்களுக்கும் பஞ்சமில்லை. காதல் என்ற பெயரில் எண்ணற்ற நிகழ்வுகள் ஏராளமாக நிகழ்கின்றன.
நினைத்தாலே வலிக்கிறது. நெஞ்சைப் பதறச் செய்கின்ற நிகழ்வுகள்…
*தன் உயிரினும்
மேலான காதலியைக் கொலை செய்ய
ஒரு காதலனால் எப்படி முடிகிறது?…
*தன்னைக்
காதலிக்கவில்லை என்பதற்காக
தான் நேசிக்கின்ற பெண் முகத்தில் ஆசிட் வீச எப்படி முடிகிறது?…
*மணிக்கணக்காக
பேசுகின்றபோதும்
காதலில் கொஞ்சி மகிழ்கின்றபோதும்
தேவைப்படாத சாதி மத பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்
திருமணத்தின்போது மட்டும் எப்படி தேவைப்படுகிறது?
*உயிரினும்
மேலான காதலரை
நேர்மையின்றி உதாசினப்படுத்த எப்படி முடிகிறது?
*காதலரோடு
உல்லாசமாக வாழத் தடை செய்கின்ற
தாயை, பிள்ளையை, கணவரை, மனைவியை
இன்னும் யார்யாரையோ
கொலை செய்துவிட எப்படி முடிகிறது?...
*காதலரோடு
வாழவிடாமல்
அச்சுறுத்துகின்ற சமூகத்திற்கு பயந்து
ஓடி ஒளிகின்ற கோழைகளுக்கும்கூட
தற்கொலை செய்துகொள்ளும் தைரியம்
எங்கிருந்து வருகிறது?...
*ஆண்டுதோறும்
குறைந்தது
ஆயிரம் சகக் காதலர்கள்
ஆணவப் படுகொலைகள் செய்யப்படுகிறார்கள்…
ஊர்களைச் சூறையாடுகின்ற கலவரங்கள் வெடிக்கின்றன…
இதயம் உருத்துகின்ற இந்த உண்மைகளைக்கூட
உணராமல்
எப்படி நம்மால் காதல் செய்ய முடிகிறது?...
நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். காதல் என்பது வாழ்க்கையை நேசிப்பதல்லவா! பிறகு எதற்காக
இத்தனைக் கொலைகளும் கலவரங்களும்? தற்கொலைகள் எப்பொழுது காதலுக்கு அடையாளமாக மாறியது?
ஒரு பெண் தன் கணவனை அறிந்துகொள்வதைப்போல ஏன் மற்ற ஆண்களை அறிந்துகொள்ளக் கூடாது? ஒரு
ஆண் தன் மனைவியை அறிந்துகொள்வதைப்போல ஏன் மற்ற பெண்களை அறிந்துகொள்ளக் கூடாது? வீடுகள்,
வகுப்பறைகள் இன்னும் இதுபோன்ற இடங்களில் இளைஞிகளும் இளைஞன்களும் ஏன் சுதந்திரமாகப்
பேசக் கூடாது? ஏனெனில் பாரம்பரியக் கட்டுப்பாடுகளை மீறி பாலுறவு உரிமை நிகழ்ந்துவிடக்
கூடாது.
இதனால் இளைஞிகளுக்கும் இளைஞன்களுக்கும் சமூக நிறுவனங்களின் கட்டுப்பாடுகள் ஏராளம்.
ஆனால் சமூக நிறுவனங்களுக்கு நன்றாகத் தெரியும். நமது இளைஞர்கள் எதையாவது செய்யத் துணிந்துவிட்டால்
எத்தகைய கட்டுப்பாடுகளையும் உடைத்துவிடுவார்கள். இவர்கள் செயல் வீரர்கள். இவர்களை அடக்குமுறைக்குள்
ஒடுக்கி வைத்திருப்பது சாத்தியமல்ல.
எதை செய்ய
வேண்டும் என்பதை முடிவெடுக்கின்ற ஆற்றலையும், சமூக அறிவையும், சகமனித உணர்வையும் வளர்ப்பதற்கான
வாய்ப்புகளை இளைஞர்களிடம் உருவாக்க வேண்டும். இது சமூகளாவிய நிறுவனங்களின் இன்றியமையாதக்
கடமை. ஆனால், இன்றுவரை கடமை மறந்தே செயலாற்றுகின்றன.
ஆண் பெண் அறிமுகம் எதிர்பாலினக் கவர்ச்சியின் துவக்கமாகவே அமைய முடியும். இது இயற்கையின்
எதார்த்தம். மனிதர்களுக்கு மட்டுமல்ல மிருகங்களுக்கும் பொருந்தும். எதிர்பாலினக் கவர்ச்சியின்
எல்லையைக் கடந்து சமூக அறிவும் சகமனித உணர்வும் வளர்ச்சி பெற வேண்டும். இது மனிதர்களுக்கே
நிகழ வேண்டிய தனித்துவம். இருபாலருக்கு இடையில் நிகழ்கின்ற உரையாடல்களும், வாழ்க்கைப்
புரிதல்களும், நட்பாற்றலும் இதனைச் சாத்தியப்படுத்தும். ஆனால் சமூகநிறுவனங்கள் சாத்தியப்படுத்த
விடுவதில்லை. இதன் விளைவுகள் மிகவும் ஆபத்தானவை. நமது இளைஞர்களிடம் சமூக அறிவற்ற உரையாடல்களையும்,
நேர்மையற்ற நட்புறவுகளையும் வளர்க்கின்றன. இவை பாலுறவு உரிமை மீதான ஏக்கங்களாகவே முடிந்துவிடுகின்றன.
மிருக உணர்வுகளிலேயே இளைஞர்களைச் சிறைபடுத்துகின்றன.
மனித உணர்ச்சிகள் உட்பட அனைத்தையும் உலகளாவிய வியாபார இலாபவெறி பெருநிறுவனங்கள் பணக்குவியல்களாக
மாற்றுகின்றன. பாராளுமன்ற அதிகாரத்தின் வழியாக ஒருபுறம் சிந்தனைத்திறனுக்கு அடிப்படையான
தாய்மொழிவழி கல்வியை ஒடுக்குகின்றன. மறுபுறம் போதை வஸ்துக்களையும் மிஞ்சுகின்ற கவர்ச்சிகரமான
காட்சிபோதை ஊடகங்களை மனித மூளைகளில் உலவவிட்டு செயல்திறனையும் முடக்குகின்றன.
இவற்றின்
வழியாக நமது இளைஞர்களைச் சிந்தனைத்திறனும் செயல்திறனும் இல்லாத பிராணிகளாக உருமாற்றுகின்றன.
ஆனால், நாம் பிராணிகளின் நிலைக்கு தாழ்த்தப்பட்டதை உணராமல் எல்லா திறனும் பெற்றவர்களாகத்
தங்களை கற்பனை செய்துகொள்கின்ற மனநோயாளிகளாக இளைஞர்கள் மாற்றப்பட்டுள்ளார்கள். இதனால்
இலாபவெறி நிறுவனங்களின் சொத்தாதிக்க வேட்டைகள் பெருமளவில் பாதுகாக்கப்படுகின்றன.
நம்மில்
பல இளைஞர்கள் தாய்மொழித்திறனில் விலகியவர்களாகவும், சிந்தனைத் திறனை இழந்தவர்களாகவும்,
காட்சி போதையில் மூழ்கியவர்களாகவும், செயல்திறனை இழந்து பேதலித்துள்ளவர்களாகவும் வளர்ந்திருக்கிறார்கள்.
இன்றைய உலகமயச்
சூழல்களிலும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளிலும் ஆண்களும் பெண்களும் சுதந்திரமாகச் சந்திக்கின்ற வாய்ப்புகள்
வளர்ந்திருக்கின்றன. ஆனால், அறிவும் நேசமும் நிறைந்த சகமனிதச் சந்திப்புகளாக வலிமை
பெறவில்லை. இவர்கள் எல்லை கடந்து பேசினாலும் தெளிவான உலகப் பார்வையையும் சமூக அறிவையும்
எட்ட முடிவதில்லை.
இவர்களது
நீளமான பேச்சுக்களின் லட்சியங்கள் பலவிதமான உடல்களிடம் பாலுறவு உரிமையைப் பெறுவதற்கான
ஆர்வங்களிலேயே முடிந்துவிடுகின்றன. காதல் செய்பவர்கள்கூட பல மணிநேரங்கள் கடலை போடுகிறார்கள்.
எவ்வளவு பேசினாலும் காதல் பற்றிய சமூக அறிவை சிறிதும் வளர்த்துக்கொள்வதில்லை. மனம்விட்டு
பேசுவதாக நினைத்து சமூக உணர்வுகளை அறுத்துவிட்டுப் பேசுகிறார்கள். இத்தகைய அவல நிலையை
மாற்ற வேண்டும். ஆண் பெண் அறிமுகம் புத்துயிர் பெற்று எழ வேண்டும்.
ஆண்கள் உலகமும் பெண்கள் உலகமும் வேறுவேறு உலகங்கள். இருவர் உலகத்தையும் ஒருவருக்கொருவர்
சரியாக புரிந்துகொள்ள வேண்டும். வெளிப்படையான உண்மையான நட்பு இருந்தால் மட்டுமே இது
சாத்தியம். அதனால் ஆண்களும் பெண்களும் அதிகமாகப் பேச வேண்டியது அவசியம். இது இவர்களை
அறிவார்ந்த நண்பர்களாகப் பக்குவப்படுத்த வேண்டும். சமூகத்தில் நிகழ வேண்டிய அழகான
விசயங்களில் இது மிகவும் தனித்துவமானது.
இயற்பியலின் தந்தையாகிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது கடலை போட்ட அனுபவத்திலிருந்து இப்படிச்
சொல்கிறார். “மனம் விரும்புகின்ற பையனும் பெண்ணும் ஒருவருக்கொருவர் பேசுகின்றபோது,
பலமணி நேரங்கூட ஒரு நொடியைப்போல கரைந்துவிடுகின்றது!” சமூகவிஞ்ஞானிகள் இன்னும் ஆழ்ந்து
சொல்கிறார்கள்…
“மலையைப் போன்ற கனமான விசயங்கள்கூட பனியைப் போன்று லேசாக
புரிந்துவிடுகின்றது!
வாழ்வின் கடினமான விசயங்களையும் ரசனையுடன் கற்றுக்கொள்ள
முடிகின்றது!
எத்தனைக் கொடூரமான பிரச்சனைகளையும் சுவாரசியமாக
எதிர்கொள்ள முடிகின்றது!” எனவே, நமது உலகப்பார்வையை சரிசெய்யவும், சமூக விஞ்ஞானியாக
வளர்ச்சி பெறவும் ஓர் எளிய வழி, நன்றாகக் கடலை போட வேண்டும்… ஆனால் ஒன்றை மறந்துவிடக்
கூடாது. சமூக அறிவற்ற பேச்சும், சமாதி அடைந்துள்ள உடலும் வாழ்க்கைக்குப் பயனற்றது!
இந்த எளிய உண்மையை மறுக்க முடியாது.
சமூகவிஞ்ஞானிகள் வளரும் சிறுவர்களிடம் என்ன சொல்கிறார்கள்? சமூக அறிவுடனும் சமூக அக்கறையுடனும்
செயல்படுங்கள். சமூகமாற்றக் களங்களைத் தேர்ந்தெடுங்கள். சமூக விஞ்ஞானியாக வலிமை பெறுங்கள்.
இதையே இளைஞர்களிடம் ஒரு வரியில் சுருக்கமாகச் சொல்கிறார்கள். “காதல் செய்ய விரும்புங்கள்!”.
சமூக அக்கறையுடைய
மனித உள்ளத்தில் மட்டுமே சரியானக் காதல் பிரகாசிக்க முடியும். காதலின் இலக்கு தன் இணையாளரோடு
இணைந்து வாழ்வதாகும்.
இணைந்து
வாழ்வதற்குத் தடையாக இருக்கின்ற சமூக அவலங்களை ஒரு கை பார்க்காமல் காதலிப்பவர்களால்
நிம்மதியாக வாழ முடியாது. எனவே, மனித ஏற்றத்தாழ்வுகளை உறுதி செய்கின்ற சாதியம், மதம்,
இனம், பாலினப் பாகுபாடு, பொருளாதார இழிவு போன்ற அவலங்களை எதிர்த்து வாழ்கின்ற காதலர்களே
சரியான காதலர்களாகச் சிறப்பு பெற முடியும். ஏனெனில் இன்றைய சமூக எதார்த்தத்தில் சரியானக்
காதல் இப்படித்தான் இருக்க முடியும்.
சமூக அக்கறையும்
சமூக அறிவும் இல்லாமல் சரியானக் காதலர்களாக வாழ முடியாது. நம்மை இந்த உண்மையோடு உரசிப்
பார்ப்போம். நாம் காதல் செய்பவர்களா? அறிவின் உள்ளுணர்வு என்ன சொல்கிறது? காதல் என்ற
பெயரில் வேறு எதையோ செய்கிறோமோ! பொய்கள் நிரம்பிய சினிமாத்தனங்களில் நமது காதலுணர்வை
மலடாக்கிவிட்டோமோ!
சரி வாருங்கள்! காதலைச் சரியாகச் செய்வதற்குப் பக்குவப்படுத்திக்கொள்வோம்.
காதல் திருமணம் செய்ய விரும்புபவர்களின் உலகப்பார்வை எப்படி
இருப்பது சரியாகும்?
சிந்தனையிலும் செயல்களிலும் எத்தகைய இலட்சியங்கள் பிரகாசிக்க
வேண்டும்?
*பெண்ணடிமையை வேரறுக்க காதலியின் போர்க்
கொடியும், ஆணாதிக்கத்தை வேரறுக்க காதலனின் போர்க் கொடியும், சிந்தனையின் உச்சியில்
சிறகடிக்க வேண்டும்!
*சக
மனித உணர்வோடும், சமூக அறிவோடும், சமூக அக்கறையோடும் வாழ்ந்து காட்ட வேண்டும்!
*சிந்தனையின்
உச்சியிலிருந்து செயலின் பள்ளத்திற்குள் பாய்ந்து நிரம்ப வேண்டும்!
இத்தகைய
இலட்சியக் கனவுகளை நனவுகளாக்கும் நாயகர்கள் சமூகவிஞ்ஞானிகள் மட்டுமே. இந்த உண்மையை
உணர்ந்தாக வேண்டியது அவசியம். சமூகத்தைத் திட்டமிட்டு மாற்றுகின்ற சமூக விஞ்ஞானக் களங்களில்
இணைந்து செயல்பட வேண்டும். காதலின் அழகால் சமூக விஞ்ஞானக் களங்களை அலங்காரம் செய்ய
வேண்டும். ஆதலினால் காதல் செய்யும் காதலர்களே… நாம் ஒவ்வொருவரும் சமூக விஞ்ஞானிகளாக
உருமாற வேண்டியது அவசியம்!
சமூக விஞ்ஞானக்களம் இரண்டு முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
சமூக அறிவைப்
பெறுவதிலிருந்து தன்னையும் சமூகத்தையும் சரி செய்வது ஒவ்வொரு சக மனிதரின் இன்றியமையாதக்
கடமை. இதற்கு இன்றியமையாதத் தேவையாகச் சமூகமாற்றக் களம் இருக்கிறது. எனவே சமூகவிஞ்ஞானக்
களம் முதலாம் முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
காதல் செய்யும்
பருவம் அடைந்த சகமனிதர்கள் சமூக மாற்றச் செயல்களில் நண்பர்களாக உறுதிப்படுகிறார்கள்.
அடுத்தத் தலைமுறையை உருவாக்கும் வலிமையுடைய காதலர்களாக ஒன்றிணைகிறார்கள். எனவே அடுத்தத்
தலைமுறையினரைத் தோற்றுவிக்கும் காதலர்களின் களமாகவும் சமூகவிஞ்ஞானக் களம் சிறப்பு பெறுகிறது.
காதலுக்கு
எதிரான பழைய கொலையுலகம் இன்றுவரை தொடர்கிறது. காதலர்களைக் கொலை செய்கின்ற பழைய கொலையுலகின்
புதிய ஆயுதங்களும் பலவிதமாக வளர்ந்திருக்கின்றன. இந்த அருவெறுப்பான கொடிய சக்தியின்
உயிர்நாடியை அறுத்தெறிவதும், சமூக அக்கறையுடையக் காதலர்களைப் பாதுகாப்பதும் இத்தகையக்
களங்களின் மாபெரும் கடமையாக இருக்கிறது. எனவே சமூகவிஞ்ஞானக் களம் இரண்டாம் முக்கியத்துவத்தைப்
பெறுகிறது.
சமூகவிஞ்ஞானக் களமின்றி காதலித்து திருமணம் செய்பவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.
எதிர்காலத்
தலைமுறைகளை உருவாக்கி கருவிலேயே கொன்றுவிடுகிறார்கள்.
தெருவிலேயே
அனாதைகளாக விட்டுவிடுகிறார்கள். தற்கொலை செய்கிறார்கள்.
நேர்மையற்றக்
காதலால் இதயம் வெடித்துச் சாகிறார்கள்.
ஆணவப் படுகொலைகளில்
பலியாகிறார்கள்.
சாதி மீறி
ஒன்று கலந்து குழந்தையைச் சாதகமான சாதியில் அடையாளப்படுத்துகிறார்கள்.
சுற்றங்களின்
பாதுகாப்பை இழந்து தனிமரமாக நிற்கிறார்கள்.
இத்தகைய
அனுபவங்கள் நமக்கு உணர்த்தும் உண்மை என்ன?
சமூகவிஞ்ஞானக் களமின்றி காதலித்துத் திருமணம் செய்ய விரும்புவது பேராபத்து. இது சமூக
அவலங்களை முடிவின்றித் தொடரச் செய்யும். இதற்குப் பதிலாக குல பாரம்பரிய திருமண முறைகளுக்குக்
கட்டுப்பட்டு, சகிப்புத்தனமாகவும் போலித்தனமாகவும் வாழ்வது எவ்வளவோ நல்லது என்று
எண்ணும்படியான ஆபத்தும் இருக்கின்றது.
ஒருவரைக்
காதலிப்பதும் வேறொருவரைத் திருமணம் செய்வதும் இன்றைய போலித்தனங்களின் பிரபலமான வடிவம்.
ஆனால், போலித்தனங்கள் உடைய வேண்டும். நேர்மை மட்டும் உறுதிப்பட வேண்டும்.
சகமக்கள்
அனைவரும் அறிவியல் உணர்வாளர்களாக வளர்ச்சி பெற்று வருகிறார்கள். எனவே, மாறும் சமூகத்தின்
புதிய தலைமுறைகளாகிய இளைஞிகளும் இளைஞன்களும் சகிப்புத்தனத்திற்கும் போலித்தனத்திற்கும்
எதிராக வெற்றி பெறுவார்கள். சமூக அறிவுடனும், சமூக அக்கறையுடனும் காதலிப்பார்கள். சமூகவிஞ்ஞானக்
களங்களை வலிமைப்படுத்துவார்கள். தனது காதல் வாழ்வை சமூகமாற்ற லட்சியத்தின் முன்மாதிரியாக
வடிவமைத்து பெருமை பெறுவார்கள். நாம் நமது இளைஞர்களை உறுதியாக நம்பலாம்.
சமூகவிஞ்ஞானக் களங்களில் நிகழ்கின்ற காதல் திருமணங்கள் சுவாரசியமானவை. பாரம்பரியத்
திருமணக் கொள்கைகளுக்கு எதிரானவை. பாரம்பரியத் திருமணங்கள் என்ன செய்கின்றன?
*இந்த ஆணுடன்
பாலுறவு உரிமையை விரும்புவாளா? இந்தக் கேள்விக்கே இடமின்றி, ஒத்த புரிதல் சிறிதும்
வலிமை பெறாத நிலையில் பெண்களை கணவர் வீட்டிற்குச் சொத்தாக மாற்றுகின்றன.
*குலம், கோத்திரம்,
சாதி, மதம், இனம், சொத்து, அந்தஸ்து, கௌரவம் போன்றவற்றால் இளைஞர்களைச் சிறைபடுத்தி
காதலுணர்வைக் கருச்சிதைவு செய்கின்றன.
*ஆணும் பெண்ணும்
சுதந்திரமாக ஒன்றிணைவதை மறுக்கின்றன.
*போதாக் குறைக்கு
விருப்பமில்லாதவர்களை வலுக்கட்டாயமாக இணைக்கின்றன.
இவைகளுக்கு
எதிராக வரலாற்றுக் காலங்களில் போராடி உயிர்விட்ட காதலர்களின் கதைகள் ஏராளம். இந்தக்
காதலர்களின் தியாகங்களைச் சமூகவிஞ்ஞானிகள் மதிக்கிறார்கள். இவர்களின் கனவுகளைச் சமூகவிஞ்ஞானக்
களங்களில் நனவாக்குகிறார்கள்.
சமூகவிஞ்ஞானிகள்
நிகழ்த்துகின்ற திருமணங்கள் காதலர்களை சரிநிகர் இணையாளர்களாக அங்கீகரிக்கிறது. திருமணச்
சடங்குகளைப் புறக்கணித்து இணை ஏற்பு விழாக்களாகப் புகழடைகின்றன.
“ஆணுக்கு
பெண் சொத்து, பெண்ணுக்கு ஆண் எஜமான்” என்ற கொடுமையை அகற்றுகிறது. ஆயிரம் பொய்களில்
நிகழ்வது விபச்சாரமாக இருக்கலாமே தவிர திருமணங்களாக இருக்க முடியாது.
சமூகவிஞ்ஞானிகளின்
திருமணங்கள் நேர்மையின் சிகரத்தில்தான் நிகழ்கின்றன. சமூக லட்சியங்களுடையக் குடும்பங்களாகக்
காதலர்கள் பக்குவப்படுகிறார்கள். சமூக அக்கறையுடைய தலைமுறைகள் உருவாக வழி செய்கிறார்கள்.
காதலர்களின் சமூகவிஞ்ஞானக் களங்கள் மிகுந்த போற்றுதலுக்கு உரியவை. சமூக அக்கறையிலும்
அறிவிலும் வளர்ந்து வருகின்ற சகமக்கள் இத்தகைய களங்களைப் போற்றுவார்கள். பெருந்திரள்களாகக்
கூடி அக்கறையுடன் உழைத்து அலங்கரிப்பார்கள். சமூக அக்கறையுடையக் காதலர்களைச் சகத் தோழர்களாகப்
பாதுகாப்பார்கள்.
இத்தகைய காலம் வந்ததும் பழைய சூரியன் புதிதாகச் சிவக்கும். போர்களற்ற உலகிற்காக புதிய
போர்கள் வெடிக்கும். சகமனிதர்களும் காதலர்களும் நட்சத்திரங்களாகப் பிரகாசிப்பர். அறிவும்,
நேசமும், வீரமும், விவேகமும் சமூகவிஞ்ஞான லட்சியப்படி பேரழகாய் செயல்படும். ஒரு புதிய
வெற்றி பூக்கும். மனிதகுலம் முழுவதும் சமூகவிஞ்ஞானிகளின் உலகமாக உருமாறியிருக்கும்.
கற்காலம், இரும்புக்காலம் போன்று கணினிக்காலமும் கடந்த காலமாக மாறியிருக்கும். சமூகவிஞ்ஞானக்
காலமே நிகழ்காலமாக நிலைபெற்றிருக்கும். எதிர்காலத்திலுள்ள இந்த நிகழ்காலத்தில் இன்றைய
மனிதகுலக் கனவுகள் நனவாகியிருக்கும்.
இயற்கையும்
சமூகமும் தனக்கு எதிரிகளல்லாத மனிதர்களின் பேரன்பால் வலிமை பெற்றிருக்கும்.
வன்முறையற்ற
பொன்னுலகமாக நிலைபெற்றிருக்கும்.
அந்தப் பொன்னுலகம்
நமது பிள்ளைகளின் உலகம்.
நாம் நமது
பிள்ளைகளின் வழியாக வாழப்போகும் புதிய உலகம்.
அந்தப்
புதிய உலகில் சில பழங்கால அருங்காட்சியகங்கள் இருக்கும். நம் காலத்தில் சகிக்க முடியாமலும்,
வெல்ல முடியாமலும் இருக்கின்ற பல கொடூரங்கள் அங்கே பிணங்களாகவும் ஆவணங்களாகவும் பாடம்
செய்யப்பட்டிருக்கும்!
பெண்ணையும்
ஆணையும் குலச் சொத்துக்களாக உருமாற்றுகின்ற பாரம்பரியத் திருமண வடிவங்கள், பாலுறவு
வன்முறைகள், விபச்சார முறை, கள்ளக்காதல் முறை, காதலர்கள் மீதான ஆணவப் படுகொலைகள், காதலர்களின்
தற்கொலைகள், காதலியை நண்பர்களுடன் புணர்ந்து கொலை செய்த காதலர்கள், காதலிக்காததால்
ஆசிட் வீசிய நிகழ்வுகள்…. உழைக்கின்ற சகமனிதர்களுக்கு எதிரியான உழைக்காத இலாபவெறி பேய்கள்,
சாதி வெறியர்கள், மத வெறியர்கள், இனவெறியர்கள், நுகர்வுப் பண்பாட்டு வெறியர்கள், அதிகாரப்
பித்து, அடிமைத்தனம், சமூக அறிவின்மை, சமூக அக்கறையின்மை, ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம்,
அனாதைக் குழந்தைமுறை, பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் முறை, ஆதரவற்ற முதியோர்
முறை, பராமரிப்பற்ற நோயாளிகள் முறை, குற்றவாளிகள் முறை, தண்டனைமுறை, வேலைவாய்ப்பின்மை…
இவை அனைத்தும் நம் பிள்ளைகளின் அருங்காட்சியக அலமாரிகளில் தூசிப் படிந்து முடங்கிக்
கிடக்கும்!
அந்தப் புதிய
உலகில் நம் பிள்ளைகள் சகமனிதர்களாகவும், சக நண்பர்களாகவும் வாழ்வார்கள்…
சகமனித உணர்விற்கு
எதிரான ஏற்றத்தாழ்வுகளும் பிரிவினைகளும் இல்லாமல் வாழ்வார்கள்…
எல்லாவற்றையும்
பெற்று இன்பமாக வாழ்வார்கள்…
சமூக நலன்
கருதி ஒன்றுகூடி உழைப்பார்கள்…
சகமனித உணர்வோடு
நண்பர்களாக விளையாடுவார்கள்…
சமூக அக்கறையுடன்
காதலித்து மகிழ்வார்கள்… அடக்குமுறையும்
அடிமைத்தனமும் இல்லாத ஓர் உலகில் காதல் செய்வது எத்தனை இன்பமானது!
நினைத்துப்பார்த்தாலே
நெஞ்சமெல்லாம் இனிக்கிறது!
அத்தனை அழகாகக்
காதல் செய்வார்கள்…
பாலுறவு
உரிமை காதலர்களுக்கு முதல் படியாக அமையலாம். ஆனால், முற்றுப் புள்ளியாக நிச்சயம் அமையாது!
பாலுறவு
உரிமை காதலுக்கு அளவுகோளாக அமையலாம். ஆனால், வரையறையாக நிச்சயம் அமையாது!
காதலர்களின்
விவாகரத்து உரிமை அத்தி பூத்தது போலவே பயன்படுத்தப்படும்.
அவர்கள்
குழந்தைகளைத் தூக்கி கொஞ்சு மொழியில் இசைப்பார்கள்…
சமூக அறிவை
உணவோடு ஊட்டுவார்கள்…
சமூக அக்கறையை
உழைப்போடு விதைப்பார்கள்…
எதிர்கால
நலனுக்காக ரசனையுடன் உழைப்பார்கள்…
திடீரென்று
சிலபொழுதில் இறுதி மூச்சை விட்டுவிடுவார்கள்!
மூச்சு நின்றாலும்
கண்களில் நம்பிக்கை ஒளி மின்னும்…
இறந்த நிலையிலும்
இதழில் புன்னகையே மிஞ்சும்!
இத்தகைய பொன்னுலகை நமது பிள்ளைகளின் கண்களால் காணப் போகின்றோம்.
அதற்காக
நமது உழைப்பைத் திட்டமிட்டு பதிக்க வேண்டும். இதற்காகவே சமூகவிஞ்ஞானிகள் பேரன்புடன்
காதலர்களை வரவேற்கிறார்கள்.
இரண்டு மனங்கள்
சங்கமிக்கின்ற காதலர்களின் வரலாற்று வெற்றியைச் சகமக்களின் சமூகவிஞ்ஞானக் களங்களே சாதிக்க
வேண்டியுள்ளது. நாம் அக்கறையுடன் உழைப்போம்! அழகாக காதல் செய்வோம்!
இனப்பெருக்க உந்துதலாகிய எதிர்பாலினக் கவர்ச்சியும்,
வாழ்வின் ஒத்துப் போகும் புரிதலுடைய நட்பின் ஆழமும், ஒன்றுகலக்கின்ற
உணர்வில் மட்டுமே காதல் முழுமையடைவதில்லை… வரலாற்று உணர்வும், எதிர்காலக் கனவும்
மனிதர்களுக்கு மட்டுமே உரியது.
வருங்காலத் தலைமுறைகளின் நல்லுலகக் கனவுகளைச் சுமந்து
அக்கறையுடன் உழைக்க வேண்டும்.
இதில்தான் காதல் முழுமையடைகிறது!
நமது பரிசுத்தமான காதல் நிகழ்கால விடுதலைப் போருக்குச்
சங்கீதமாகட்டும்!
வருங்காலப் பொன்னுலகிற்குச் செங்கற்களாகட்டும்!
(நீங்களும் சமூகவிஞ்ஞானி ஆகலாம் என்ற நூலிலிருந்து
புதியவன்)
துணை செய்த நூல்கள்
1.குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றுவாய்
– பிரடெரிக் எங்கெல்ஸ், தமிழாக்கம் – நா. தர்மராஜன், கருத்துரை – பக்தவத்சலபாரதி. கருத்துப்பட்டறை
வெளியீடு.
2.வால்காவிலிருந்து கங்கைவரை - ராகுல் சாங்கிருத்தியாயன்
- தமிழினி பதிப்பகம்.
3.காதல் (வர்க்கம், சாதி, மதம், ஆணாதிக்கம்) – கீழைக்காற்று
பதிப்பகம்.
4.சாதி மறுப்பில் காதல் – அருணன், ச.தமிழ்ச் செல்வன்,
ஆதவன் தீட்சண்யா. வெளியீடு - த.மு.எ.க.ச.
5.நமக்கான குடும்பம் – ச.தமிழ்ச் செல்வன் – பாரதி புத்தகாலயம்.
வெளிவந்த விபரம்
புதிய கோடாங்கி, மார்ச்
2014, (பக்கம் 17 - 21)
நீங்களும் சமூகவிஞ்ஞானி ஆகலாம் என்ற நூலில்
No comments:
Post a Comment