Saturday, May 23, 2020

காவல்கோட்டம் நாவலில் சமய அரசியல் 1


இயல் 3
காவல்கோட்டம் நாவலில் சமய அரசியல்

          மதுரையை மேய்ந்து கொண்டிருந்தது மாலிக்காப்பூர்படை. யா அல்லா என்ற பெயரில் அட்டூழியம். காலம் 1328. மக்களின் இரத்தத்தால் மதுரை நனைந்திருந்தது. பெண்கள் அம்மணமாக இழுக்கப்பட்டார்கள். தாடிக்காரனின் குதிரையில் திமிறிக் கொண்டிருந்தார்கள் பெண்பிள்ளைகள். மக்களைப் போல மக்களின் சொத்துக்களும் சூறையாடப்பட்டன. பலியாகும் மக்களுக்காக பாய்ந்து சண்டையிட்டான் கருப்பன்.

அட்டூழியக்காரர்கள் கர்ப்பினி என்ற காரணத்தால் சடச்சியை உசுரோடு விட்டார்கள். சடச்சியின் குரல் அவனது கொட்டும் இரத்தத்தில் கொந்தளித்தது. ‘உசுரு இருக்குற வரைக்கும் கருப்பு காவல்ல களவு போகக் கூடாது.’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-09). கருப்பன்சடச்சியின் துணைவன்மதுரையின் காவலன். இஸ்லாமிய  படையை எதிர்த்து போரிட்டான். இவனது சமயம் நாட்டுப்புறச் சமயம். இதற்கு நிறுவனங்கள் இல்லை என்பது அர்த்தம்.

இஸ்லாமியப் படையின் கண்களுக்குக் கருப்பனும் ஓர் இந்து. கருப்பன் போர் அறத்தை மீறவே இல்லை. எதிரியின் முன்னே பாய்ந்து வேல்கம்பை நெஞ்சில் பாய்ச்சினான். ஆனால்இஸ்லாமியப் படையின் வீரனோ முதுகில் இருந்து நெஞ்சுக்குழிக்கு ஈட்டியை இறக்கினான். சடச்சியின் வயிற்றில் மிச்சமிருந்தது கருப்பனின் உயிர். பகையை விதைத்து விட்டது முகம்மதியப்படை. ஆயிரமாயிரம் சடச்சிகளும் கருப்பன்களும் கிளைப்பரப்பி வளர்ந்தார்கள்.

பகையை வேரறுக்க படையெடுத்தான் குமாரகம்பணன். முகம்மதியர் மூட்டிய தீயைத் தம் குலத்தின் இரத்தம் ஊற்றி அணைக்கத் துணிந்தாள்கங்கா. போருக்குத் தலைமையேற்ற இவள் கம்பணனின் துணைவி. இருவரின் சமயமும் சைவம். காலம்; 1371.
          அழகிற்குக் குறைவில்லாத அமணமலை. சிதைந்த சிற்பங்களான தீர்த்தங்கரர்கள் மலைக்கும் வெயிலுக்கும் பாறையில் பதுங்கி இருந்தார்கள்சமண சிற்பங்களை வணங்கினார்கள் சைவ ஜோடிகள். மதியத்திலிருந்து மாலைக்கு நடந்து கொண்டிருந்தான் சூரியன். செந்தாமரைக் குளத்தில் குளிக்க இறங்கினாள்கங்கா. ஆலமர நிழலில் காத்திருந்தான் கம்பணன்.

 எத்தனையோ சமணர்கள் குளித்திருந்த குளமது. குளத்தில் குளிப்பவளுக்கு எழுந்திருந்த சிந்தனைகள் என்ன தெரியுமாஉலகையே ருசிக்க துடிக்கும் மனித ஆசையில் இருந்து சமணர்கள் விலகியது ஏன்அவர்களின் தேடல் என்னஅழிவின் முத்தம் அனைவரையும்  அரவணைக்கிறது. எவ்வழியில் போனவர்களுக்கும் அழிவே இறுதி. சிலைகளோகதைகளோஎழுத்தோ எதுவும் மிஞ்சப் போவது இல்லை. வைகையோடு போன ஏடுகளும்கழுவேற்றத்தில் கருகிப்போன எண்ணாயிரம் சிந்தனைகளும் இதற்கு சாட்சி.

எண்ணாயிரம் சமணர்களா! இருக்க முடியாது என்கிறீர்களா? ‘எண்பது பேரே ஆனாலும் அது கடவுளின் பேரால் நடந்தது. ஆட்சி அதிகாரத்தின் மமதையால் நடந்தது.’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-18) கங்காவிடம் வெளிப்படும் இத்தகைய எண்ணங்கள் சமணர்களிடம் அக்கறையைசைவர்களிடம் ஆதங்கத்தைச் சுமக்கிறது.

          போரில் வெற்றி. மதுரை சுல்தானின் கதையை முடித்தாள்  கங்கா. கம்பணனைச் சந்திக்க கோவில் பட்டர்கள் வந்தார்கள். ‘சனாதன தர்மத்தைக் காக்க வித்யாரண்யர் ஸ்தாபித்ததுவிஜயநகரம். அவர் சொற்படிதான் ஹரிஹர புக்கர்கள் அதை உருவாக்கினார்கள்.’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-31) என்று கூறி மிகையாக வாழ்த்தி சென்றுள்ளார்கள். ஹரிஹரரும்கம்பணனின் தந்தையாகிய புக்கரும் சைவர்கள். (உயிர் பிழைக்க மதம் மாறி இருந்தார்கள் என்பது வேறு கதை). ஒரு வைஷ்ணவனான வித்யாரண்யரின் சொற்படிதான் ஹரிஹரபுக்கர் விஜயநகரை உருவாக்கினர் என்று எப்படிச் சொல்லலாம். இதைக் கேட்டு கோபம் முட்டிய கம்பணன் பிறகு வேடிக்கையாக நினைத்துப்பார்த்தான். வெற்றிக்களிப்பில் கொஞ்சி குழைந்திருந்த போது கங்காவிடம் சொன்னான். 

கெட்டிக்காரர்கள்தான் இந்த வைதீகர்கள்வித்யாரண்யரைப் போல. அவர்கள் இன்று நிற்பதற்கு ஒரு தளம் இல்லைவிஜயநகரத்தைத்தவிர’(சு.வெங்கடேசன்: 2008,பக்-31) என்றாள் கங்கா. கங்காவின் சிரிப்பு கம்பணனுக்கு ஒத்தூதுவதாக அமைந்தது.

மீனாட்சி அம்மனின் கோவிலுக்குள் நுழைய விரும்பினாள்கங்கா. மீனாட்சியின் சிலை கோவிலுக்குள் இல்லை. முகம்மதிப் படைக்குப் பயந்து எங்கோ ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்ற செய்தியைக் கம்பணன் சொன்னான். திருவிழா எடுத்து மீனாட்சியைக் கோவிலுக்குள் அரங்கேற்ற ஆணையிட்டாள் கங்கா. ‘நல்ல வேளையாக முகம்மதியர்கள் கோவிலைப்பூட்டியதோடு விட்டுவிட்டார்கள். சமணக் கோவிலுக்குள் சைவர்கள் செய்ததைப் போல உள்நுழைந்து எதையும் சிதைக்கவில்லை’(சு.வெங்கடேசன்: 2008,பக்-30) இது நாவலாசிரியரின் பதிவு.

தேடிக் கண்டுபிடித்த சிலையைக் கோவிலுள் அரங்கேற்றும் பெருநாள். மக்கள் பெருங்கடல் அலைமோதியது. மீனாட்சி தோணி போல மிதந்து வந்தாள். ‘கோவிந்தன் காலெடுத்து வைக்க மீனாட்சி தன் குடிலுக்குள் புகுந்தாள்’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-35) அதோடு நாவலிலிருந்து விடைபெறுகிறார்கள் சைவ ஜோடிகள்.
          தஞ்சை மூன்று ஆண்டுகளாக மழையின்றி வாடியது. பஞ்ச சகதியில் காலெடுக்க முடியாமல் திணறினர் மக்கள். மழை வேண்டி யாகம் செய்தார்அரசர் விஜயராகவ நாயக்கர். இவர் ஸ்ரீவை~;ணவர். ஒரு நாளுக்கு இத்தனை முறை என்று கணக்கில்லை. ஆனால்உண்மையிலேயே ஸ்ரீரங்கனின் காதில் விழுந்திருக்கும் அளவிற்கு வாய்திறந்து கூப்பிடுவார் ஸ்ரீரங்கனை. யாகத்திற்கு நின்ற தங்கப்பசுவின் முன் மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்களுக்குள் புதைந்து நின்றான் மதுரைசொக்கன்.

சொக்கநாதன் மதுரையின் அரசன். இவன் சமயம் சைவம்.  மக்களின் பட்டினியை நான்கு மாதத்திற்கு விரட்டியடிக்கும் செல்வத்தை இப்படியா கரியாக்குவது என்று வருந்தினான். இந்தக் கேலியை நேரில் பார்க்க வணிக நண்பனோடு மாறுவேடத்தில் வந்துள்ளான். வந்தவனின் கண்களைக் கொத்திக் கொண்டாள் மோகனாங்கி என்ற மங்கம்மாள். இவள் தஞ்சைக்கு இளவரசிஅரசனுக்குச் செல்ல மகள். மங்கம்மாளின் நினைவுகளோடு மதுரை திரும்பினான்.

சொக்கனுக்குத் திருமண ஆசை வந்து விட்ட மகிழ்ச்சியில் வேங்கடர் தயாரானார். பெண் கேட்கும் தோரணையில் தஞ்சைக்கு விரைந்தார். குதிரைப்படை தளபதியும் சொக்கனின் மெய்க்காப்பாளருமான இவர்வைஷ்ணவர். இவரது முழுப் பெயர் வேங்கடகிருஷ்ணப்பர். தஞ்சை அரசரிடம் வந்த நோக்கத்தை விளக்கினார். விஜயராகவர் பண்பாளர்பலரிடமும் கருத்துக் கேட்டார். தபோநிதி சோமசுந்தர சுவாமிகளைத்தவிர மற்ற அனைவரும் எதிரான கருத்தையே சொன்னார்கள். ‘சைவ மதாபிமானியான ராஜனோடு ஒரு ஸ்ரீவைஷ்ணவ ஸ்திரி எப்படி வாழ முடியும்?’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-166) 

மோகனாங்கி அதற்குள் விரும்ப ஆரம்பித்துவிட்டாள் சொக்கனை முழுவதுமாக. இவர்கள் திருமணம் மூலம் தஞ்சைக்கும் மதுரைக்கும் இடையிலான பகை முழுதாக உதிர்ந்து விடும். ஒற்றுமை மலரும். இரு அரசுகளின் பலத்தால் சுல்தான்களின் தொல்லையை முற்றிலும் ஒழித்து விடலாம். வேங்கடரின் இத்தகைய வார்த்தைகளுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை. விஜயராகவநாயக்கர் உறுதியாக சொல்லியிருந்தார் அவையின் முன்பு. ‘தஞ்சாவூர்மதுரை ராஜ்யங்கள் உருவான பின் சென்ற நூற்றைம்பது வருடங்களாக இருவருக்கும் இடையில் நல்லுறவு இல்லை. தொடர்ந்து போர்தான் எனவே பகையரசனுக்கு பெண் கொடுப்பதற்குச் சம்மதிக்க மாட்டேன்’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-167)  தொடர்ந்து முயற்சித்த வேங்கடரை தளவாய் ரங்கப்ப நாயக்கன் இழிவுபடுத்தி அனுப்பினான்.

சொக்கனிடமிருந்து தஞ்சைக்கு விரைந்தது அரச ஓலை. ‘திருமண வேண்டுகோளை ஏற்பதும் மறுப்பதும் தஞ்சாவூர் அரசரின் விருப்பம். ஆனால் மதுரை தூதுவர்களை அவமதித்தது ராஜதர்மமல்ல. தஞ்சாவூர் மீது மதுரைக்கு எந்த பகையும் இல்லை. நல்லுறவு தொடர வேண்டுமானால் அரசர் தன் அவையில் நடந்த அவமதிப்புக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-168). அரங்கனைத்தவிர யாருக்கும் தலைவணங்காத என்னை மன்னிப்புக் கேட்கச் சொல்வதா! என்ன தைரியமென்று சீறினார் விஜயராகவர். இதற்கிடையில் மோகனாங்கியின் விருப்பத்தைச் சொக்கன் அறிந்தான். தஞ்சையை வென்று ராஜ மரியாதையோடு மதுரையின் அரசியை அழைத்து வர உத்தரவிட்டான்.

தஞ்சை செய்த அவமானத்தை இரத்தத்தில் கழுவும் விருப்பத்துடன் படையுடன் விரைந்தார் வேங்கடர். அரண்மனைக்குள் பொதிந்திருக்கும்மோகனாங்கியைப் பக்குவமாய்க் கைப்பற்ற தஞ்சையை முட்டிக்கொண்டிருந்தது மதுரை. நடுங்கிக் கொண்டிருந்த அரண்மனையில் ஸ்ரீரங்கனைக் கூப்பிட்டார் அரசர்இடையில் வேங்கடரையும் கூப்பிட்டுவிட்டார். தூதுவர்கள் வேங்கடகிருஷ்ணரை அழைத்து வந்தனர். மரியாதை நிறைந்த  கண்களோடுப் பார்த்தார் வேங்கடர். தஞ்சை அரசர் உரிமையோடு பேசினார். ‘வந்துவிட்டாயாவா! என் வேளை வந்து விட்டது அப்பனே. ஸ்ரீரங்கன் கூப்பிடுகிறான். என்னை வைகுந்தத்திற்கு அனுப்பிவை. ஒரு வீரனோடுதான் போரிட்டு சாவான் விஜயராகவன். அறியாமையால் ஏதேதோ செய்துவிட்டேன். எல்லாம் எம்பிரான் சித்தம். என்னைக்கொன்று விட்டு மங்கம்மாவை அழைத்துக் கொண்டு போ’(சு.வெங்கடேசன்: 2008,பக்-187) அவ்வளவுதான் அடுத்த சில பொழுதுகளில் தஞ்சை தானாகவே சரிந்தது.

          மதுரையின் கோட்டைச் சுவருக்குள் ஏராளமான நடுகற்கள். சாரை சாரையாக வருகின்ற மக்கள் கோட்டையிலிருக்கும் முன்னோர்களின் சின்னங்களை எடுத்துச் செல்கிறார்கள். இதற்குக் காரணமான கலெக்டர் பிளாக்பெர்னால் இவர்களது செயலை முழுதாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஐரோப்பாவில் நடுகற்களை நினைவுச்சின்னங்களாக பாதுகாக்கும் நாம் மதுரையின் கோட்டைச் சுவரை இடிக்கச் சொன்னது சரிதானாமதுரையின் கலெக்டருக்கு மனது உறுத்தியது. குல வரலாற்றுப்பாடகனின் தலைமையில் நடுகற்களைத் தூக்கிச் செல்லும் மக்களைப்பற்றி முழுதாக அறிய விரும்பினார். கலெக்டரின் முடிவுப்படி இம்மிடி செட்டியார் இதற்கு சரியான ஆள்.
இம்மிடி செட்டியைத் தெரிகிறதாகோட்டைச்சுவரைப் பாதுகாக்க மதராஸ் சென்று கவர்னரைச் சந்தித்து பிளாக்பெர்ன் மீது புகார் கொடுத்த குழுவின் தலைவர். தமிழ்தெலுங்கில் புலமை பெற்ற கல்வியாளர். இன்னும் இவருக்குக் கோபம் அடங்கவில்லை. கலெக்டரின் அழைப்பை உறுதியாக நிராகரித்தார். வேறுவழியில்லாமல் கலெக்டரே இறங்கி வந்தார். துபாஷி செட்டியாரின் உதவியுடன் இம்மிடியைச் சந்திக்க புது மண்டபத்திற்கு கிளம்பினார்.

மாலை நேரம்மக்கள் மயங்கிக் கேட்டுக் கொண்டிருந்தனர். விஷ்வநாதராஜாவின் வீரகதைப்பாடலை ராகமிட்டு பாடிக் கொண்டிருந்தார்இம்மிடி.
கலெக்டரை திரும்பி பார்க்கும் மக்களின் கழுத்து கேள்விக்குறியைப் போல நெளிந்திருந்தது. கலெக்டரை கவனித்தார் இம்மிடி. இம்மிடியின் பார்வை கல்லெறிந்தவனை முறைத்துப்பார்க்கும் நாயைப் போல இருந்தது. கூட்டத்தை உடனே முடித்துக்கொண்டார் இம்மிடி. கோவிலுக்குள் சென்று பேசலாமென்ற கலெக்டரின் விருப்பத்தை துபாஷி தெரிவித்ததும் இம்மிடி கிழக்குக் கோபுரம் நோக்கி நடந்தார்.

நந்தி சிலைக்குப்பின் நின்று கைகூப்பி வணங்கிய பிளாக்பெர்னை ஆச்சரியத்துடன் பார்த்தார் இம்மிடி. இரண்டாம் பிரகாரத்திற்குள் நுழைந்ததோடு நின்று கொள்ள வேண்டும்அதைத்தாண்டி உள்ளே அன்னியர்கள் நுழைய முடியாது என்பதை கலெக்டரின் கண்ணைப்பார்த்துச் சொன்னார்இம்மிடி.
பொற்றாமரைக் குளத்தின் ஒரு மூலையில் அமர்ந்து பேசத்துவங்கினர். நகரின்விரிவாக்க நலனைக் கருதிதான் கோட்டைச் சுவரை இடிக்க முன்வந்துள்ளேன். வேறு எந்த நோக்கமும் இல்லை. நம்புங்கள்உங்கள் பண்பாட்டுச் சின்னங்களை நாங்கள் மதிக்கிறோம். நடுகற்கள் கோட்டைச்சுவருக்குள் இருப்பதும்வழிபடப்படுவதும் எனக்கு உண்மையாகவே தெரியாது. இப்பொழுதுதான் எனக்குத் தெரிய வந்தது. மேலும் தெரிந்து கொள்ளவே உங்களைச் சந்திக்க விரும்பினேன் என்றார் கலெக்டர்.

இம்மிடி செட்டியார் நம்புகிறாரோ இல்லையோ கலெக்டரின் பேச்சில் துளியளவும் பொய்யில்லை என்பதையே நாவலாசிரியரின் எழுத்து உணர்த்துகிறது. 
நீங்கள் இடித்தாலும் நாங்கள் எங்கள் முன்னோர்களைக் கைவிட மாட்டோம்’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-339) என்றார் இம்மிடி. இருவரின் பேச்சும் ஐந்து பக்க நீளத்திற்கு நீண்டு கொண்டிருந்தது.

விஷ்வநாதரின் புகழ்பாடிக் கொண்டிருந்த இம்மிடியிடம் கலெக்டர் இவ்வாறு சொன்னார். ‘தக்காண வரலாற்றில் முகமதியர்கள்தான் அதிக வெற்றிகளை அடைந்திருக்கிறார்கள்’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-341)  உடனே பாய்ந்தது இம்மிடியின் பதில். ‘இருக்கலாம். ஆனால் நாங்கள் அழிந்து விடவில்லை. ஐநூறு வருசமாக யுத்தத்தில் இருந்திருக்கிறோம். அவ்வளவு பலி கொடுத்த பின்னும் ஒவ்வொரு வீடும் தலைமுறைதோறும் சந்ததிகளைப் போர்க்களத்திற்கு அனுப்பிக் கொண்டேதான் இருந்தது. கடைசி வரை எங்களை அடக்கி ஆள முடியவில்லை. பெண்தெய்வங்கள் தம் மக்களை ஏவிக் கொண்டே இருந்தன. விடாது பழி தீர்த்துக்கொண்டே இருந்தன. அதனால்தான் அந்த யுத்தம் ஓயவே இல்லை.’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-341)ஒரு கிறிஸ்தவ அதிகாரியிடம் இம்மிடி செட்டியின் இஸ்லாமிய வெறுப்பு கக்க வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை