2.பண்பாட்டு உறவுகள்
பண்பாடு என்பது பண்படுத்துதல் ஆகும். மனித மூதாதையர்களிடமிருந்துத் தோன்றிய மனிதர்கள் இயற்கையைத் திட்டமிட்டு மாற்றத் தொடங்கினார்கள். இத்தகைய முயற்சியிலிருந்து மனித வரலாறு தொடங்குகிறது. மனித இனம் தன்னையும் தன் சமூகத்தையும் பண்படுத்துகின்ற முயற்சியே மனிதப் பண்பாடாகும். இத்தகையப் பண்படுத்துதல்கள் சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.
நிதி மூலதனப் பிரிவு தோன்றி சமூக உற்பத்தியை ஆதிக்கம் செய்தல் என்ற வரலாற்றுக் கட்டத்தில் வாழும் மனிதர்கள் உற்பத்திமுறையை தங்களது விருப்பம்போல் மாற்ற விரும்பினால் என்ன நிகழும்?
அவர்கள் பழைமையான காடு சார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிக வாழ்க்கையை உருவாக்க முயலலாம். அல்லது, மக்கள் தலைமை சமூகத்தையோ அல்லது பொதுவுடைமை சமூகத்தையோ உருவாக்க முயலலாம். ஆனால், இத்தகைய உருவாக்கங்கள் அனைத்தும் நாடகம், திரைப்படம், கலை இலக்கியம், அறிவியல் ஆய்விலக்கியம், பழைமை பற்றிய நினைவுகளையும் கற்பனைகளையும் பதிதல், வருங்காலம் பற்றிய விருப்பங்களையும் கோரிக்கைகளையும் தெரிவித்தல், உரையாடுதல் என்பதாகவே அமையும்.
இவை அனைத்தும் தமது பண்படுத்தலுக்கான பண்பாட்டு முயற்சிகளாக மட்டுமே அமையும். மாறாக, தமது வாழ்க்கையை நடைமுறையில் ஒரு காடு சார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிக வாழ்வில் செலுத்துதலோ அல்லது மக்கள் தலைமை சமூகத்தில் அல்லது பொதுவுடைமை சமூகத்தில் நிறுவுதலோ சாத்தியமில்லை. ஏனெனில், சமூகத்தின் நடைமுறை என்பது மனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டுள்ள சமூக உற்பத்தி முறையினால் தீர்மானிக்கப்படுகின்றது. எனவேதான் சமூக விஞ்ஞானத்தின் விளக்கம் இவ்வாறு அமைகின்றது.
சமூகப் பண்பாடு என்பது சமூக உற்பத்தி முறைகளை அடித்தளமாகக் கொண்டு தீர்மானிக்கப்பட்ட மேற்கட்டுமானம் ஆகும். சமூகப் பண்பாடுகள் உற்பத்தி முறைகளை மேம்படுத்தவோ அல்லது தேங்கச் செய்யவோ தொடர்ந்து முயல்கின்றன. புரட்சிகரமான அரசியல் சூழலைத் தவிற மற்றெந்தச் சூழலிலும் பண்பாடானது உற்பத்தி முறையைத் தீர்மானிப்பதில்லை. மாறாக, எப்பொழுதும் உற்பத்தி முறைகளால்தான் பண்பாடு தீர்மானிக்கப்படுகின்றது. அதனால்தான் உற்பத்தி முறைகள் அடித்தளமாக விளக்கம் பெறுகின்றது. சமூக உற்பத்திமுறையியலை அடித்தளமாகக் கொண்டு பண்பாடு ஏழு தளங்களாகக் கட்டமைந்திருக்கின்றது. (சிவக்குமார்,கே.2016:8)
1.சமூக வாழ்வியல்
2.சமூக உள்ளத்தியல்
3.தனிமனித உள்ளத்தியல்
4.சமூகக் கருத்தியல்
5.தனிமனிதக் கருத்து நிலைப்பாடு
6.தனிமனித உலகப்பார்வை
7.தத்துவ அடிப்படை
இவற்றைச் சமூகத்தின் மேல்கட்டுமானம் என்பதாக சமூகவிஞ்ஞானம் விளக்குகின்றது.
2.1.சமூக
வாழ்வியல்
சமூக
வாழ்வியல் என்பது மனிதர்கள் இணைந்து வாழ்கின்ற செயலமைப்புகள் ஆகும். மனிதர்கள்
இணைந்து வாழ்வதற்கு மூளையே முக்கியக் காரணம் என்கிறார்கள். இயற்கையுடன் இணைந்து
எல்லா உயிரினங்களும் பாதுகாப்பாக வாழ முயன்றிருக்கின்றன. உயிரினங்களின்
உடலமைப்பில் ஏதேனும் சிறப்புநிலை ஆற்றல் முக்கிய ஆயுதமாகச் செயல்பட்டுள்ளது.
இத்தகைய ஆற்றல் இல்லாதவை உயிரின வரலாற்றில் மறைந்து போயுள்ளன. ஆற்றலுள்ளவை மட்டுமே
தலைமுறை தொடர்ந்து வாழ்ந்து வந்துள்ளன. கூரிய நகங்கள், பற்கள், கொம்புகள், ஓட்டத்தில் வேகம், பாய்ச்சலில் வீரம் என்பதாகச் சிறப்பு நிலை ஆற்றல்களைப் பட்டியலிட முடியும்.
ஆனால் மனித இனத்தின் சிறப்பாற்றலாக எதைக் குறிப்பிடுவது?
மனித மூளையே மனித இனத்திற்குச் சிறப்பாற்றலாக உருவெடுத்தது. வாழ்க்கைச் சூழல்களை
ஆராய்ந்து, அவற்றைப் பற்றியக் கருத்துக்களை உருவாக்கிக்கொண்டு, கருத்துக்களின் அடிப்படையில் செயல்படும் ஆற்றல் மனித
இனத்திற்கு மட்டுமே பொருந்தியது. ஆயினும் மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதச்
சூழ்நிலைகளே நீடித்தன. இவற்றை எதிர்கொண்டு மனித இனம் சமாளிப்பதற்கு ஒற்றை மூளை
போதவில்லை. மனிதக் கூட்டத்தின் மூளைகள் ஒன்றுபட்ட ஆயுதமாகச் செயல்பட வேண்டியத்
தேவை இருந்தது. இந்தத் தேவையை வரலாறு நிறைவேற்றத் தொடங்கியது. மனிதர்கள் சகமனிதக்
கூட்டங்களாக வாழத் தொடங்கினார்கள். இவற்றைச் சமூக விஞ்ஞானிகள் விவரித்து
விளக்குகிறார்கள். இத்தகைய சமூக வாழ்க்கை பலவிதமான வளர்ச்சிகளைக் கண்டுள்ளது.
வாழ்க்கை முறையில் பல்வேறு அமைப்புகளும் வடிவங்களும்
உருவாகியுள்ளன.பாலுறவுஉரிமையின்வரையறை, குடும்பம், திருமணம், சடங்கு, சாதியக்கட்டுப்பாடுகள், சமயம், கல்வி, அரசு, இராணுவம், சட்டம், நீதி, காவல், சிறை, சுற்றுச்சூழல், இலக்கியம், கலை, அறிவியல்,
தொல்லியல், மொழியியல், வரலாற்றியல், விளையாட்டு, வர்க்கப்பிரிவு, இயற்கை
விஞ்ஞானம், சமூகவிஞ்ஞானம் என்பதாகப் பட்டியல் நீண்டு செல்கிறது. இவற்றைப்
பற்றிய அறிவே சமூக வாழ்வியல் ஆகும். இவற்றில் அரசு என்பதற்கு ஒரு
தனிச்சிறப்பு உண்டு. ஒரு சமூகம் புரட்சி நிலை மாற்றம் அடைகின்ற தருணத்தில் மட்டும்
அரசு தன் வரையறையை மீறுகிறது. அதாவது சமூக உற்பத்திமுறையில் அழுத்தம் செலுத்தும் பண்பிலிருந்து
மாறி தீர்மானிக்கும் பண்புடன் இயங்குகிறது. (புதியவன்.ஜுன்
2015:34)
2.2சமூக
உள்ளத்தியல்
சமூக
உள்ளத்தியல் பற்றிய புரிதலுக்கு அடிப்படையாக மனித மூளையைப் பற்றிய புரிதலை
உருவாக்கிக் கொள்வோம். மனித மூளைக்கு இரண்டு பண்புண்டு. 1. எண்ணங்களின்
உருவாக்கங்களைப் பாதுகாத்தல். இது ஆழ்மனதில் அளவிட முடியாதக் கருங்குழியாகச்
செயல்படுகின்றது. இதனை உள்ளம், மனது
போன்ற வார்த்தைகளால் குறிப்பிடுகிறோம், 2. சிந்தித்துக் கருத்துக்களை உருவாக்குதல். இதனை அறிவு என்ற வார்த்தையால்
குறிப்பிடுகிறோம். மனிதர்கள் சிந்தித்து உருவாக்கியக் கருத்துக்களைவிட, சிந்திக்கப்படாமல் ஆழ்மனக்குழியில் தொகுத்திருக்கின்ற எண்ணங்கள்
அதிகம். மனித மூளையில் கவனித்துச் செய்கின்ற பதிவுகளைவிட கவனிக்காமல் செய்கின்ற
பதிவுகள் ஏராளம்.
ஒரு
எழுத்தை எழுதுகின்ற நேரத்தில் கடந்து செல்கின்ற வாகனச் சத்தம், மின்னல் வேகத்தில் பறக்கின்ற ஈ, மின்விசிறியின் சுழல் சத்தம், காற்றில் பறக்கும் நாள்காட்டிச் சத்தம், நாற்காலியின் அதிர்வு, கண்ணாடிக் கதவின் அசைவு ஆகிய அனைத்தும் மூளையின் ஆழ்மனக்குழியில் எண்ணங்களாகப்
பதிவாகின்றன. ஆர்ப்பரிக்கின்ற பெருங்கடலாக எண்ணங்கள் இருக்கின்றன. சிந்தனைக்
கப்பலில் நிதானமாகப் பயணிக்கின்றன கருத்துக்கள். ஆனால், மூளையில் பதிவாகும் எண்ணங்களுக்கும் சிந்தனையின்
கருத்துக்களுக்கும் அடிப்படைக் காரணங்கள் எவை? வாழ்வியல் சூழலும் உலகளாவிய நிகழ்வுகளுமே காரணங்களாக அமைகின்றன.
எனவே, உலகம் முழுதும் வாழக்கூடிய மனிதர்கள் தங்களது வாழ்க்கைச்
சூழலில் எத்தகைய எண்ணங்களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்? உலகளாவிய நிகழ்வுகளும் மனிதர்களது பங்கேற்பும் எத்தகைய
எண்ணங்களை உருவாக்குகின்றன? இவற்றால் சமூக நிகழ்வுகளில் ஏற்படுகின்ற விளைவுகள் என்ன? சமூகத்தின் வாழ்க்கைத் தேவைக்கும், மனித எண்ணங்களுக்கும் இடையிலான உடன்பாடுகளும்
முரண்பாடுகளும் எத்தகையவை? இவற்றைப் பற்றிய அறிவே சமூக உள்ளத்தியல் ஆகும். (புதியவன்.ஜுன் 2015:35)
2.3.தனிமனித உள்ளத்தியல்
ஒரு
தனிப்பட்ட மனிதரின் உள்ளத்து இயல்பை அறிய முயல்வதற்கான அறிவியலாகும். சமூக உள்ளத்தியலின்
அடிப்படையில் ஒவ்வொரு தனிமனிதரின் தனித்துவமான உள்ளத்தியலையும் விளங்கிக்கொள்ள முடியும்.
தனிமனிதரின் புலனுணர்வுகளின் தொடக்கம், பிறப்பு, வளர்ந்து வந்த வரலாற்று நிலைமைகள்,
வாழ்வியல் சூழல்கள், மாற்றங்களுக்கு உட்பட்ட பல்வேறு சந்தர்ப்பங்கள், நடத்தை மற்றும்
கனவுகள் உட்பட்ட எண்ணங்களின் பன்முக வெளிப்பாடுகள் எனப் பன்முகப் படிநிலையில் தனிமனித
உள்ளத்தியல் கட்டமைகின்றது. ஒரு தனிப்பட்ட மனிதர் தனது பல்வேறு வாழ்க்கைச் சூழல்களால்
எத்தகைய எண்ணங்களுக்கு ஆளாகியுள்ளார். அவரது எண்ணங்களுக்கு காரணங்களாக உலகளாவிய நிகழ்வுகளும்
மனித உறவாடல்களும் எவ்வாறு அமைந்துள்ளன. சமூகத்தின் வாழ்க்கைத் தேவைக்கும் அவரது தனிமனித
உள்ளத்தியலுக்கும் இடைப்பட்ட உடன்பாடுகளும் முரண்பாடுகளும் எத்தகையவை? இவற்றைப் பற்றிய
அறிவே தனிமனித உள்ளத்தியல் ஆகும்.
2.4.சமூகக்
கருத்தியல்
சமூகக் கருத்தியல் என்பது மனிதர்களின் அறிவாக்க இயக்கங்களின்
தொகுப்புகளாகும். மனிதர்களின் ஒவ்வொரு செயலும் அறிவைத் தூண்டுகின்றன. எல்லா
அறிவும் செயலைச் செதுக்குகின்றன. இத்தகைய அறிவும் செயலும் மனிதர்களின்
கருத்துக்களால் கட்டமைகின்றன. உலகம் முழுவதும் வாழக்கூடிய மனிதர்கள் தங்களது
செயல்களிலிருந்தும், பல்வேறு நிகழ்வுகளிலிருந்தும் எத்தகையக் கருத்துக்களை
உருவாக்கிக் கொள்கிறார்கள்? எத்தகையக் கருத்துக்களுடன் தொடர்ந்து
செயல்படுகிறார்கள்? சமூகத்தில் உருவாகிக்கொண்டே இருக்கின்ற பல்வேறு
கருத்துக்களால் சமூக நிகழ்வுகளில் ஏற்படுகின்ற விளைவுகள் என்ன? சமூகத்தின்
வாழ்க்கைத் தேவைக்கும் உலகளாவியக் கருத்துக்களுக்கும் இடையிலுள்ள உடன்பாடுகளும்
முரண்பாடுகளும் எத்தகையவை? இவற்றைப் பற்றிய அறிவே சமூகக் கருத்தியல்
ஆகும். (Social Ideology) (புதியவன்.ஜுன் 2015:35)
2.5.தனிமனிதக்
கருத்து நிலைப்பாடு
தனிமனிதக்
கருத்துநிலைப்பாடு என்பது சமூகளாவிய நிலையில் ஒரு தனிமனிதரை மதிப்பீடு செய்கின்ற
அறிவாகும். அதாவது தன்னையோ அல்லது ஒரு சகமனிதரையோ மதிப்பீடு செய்கின்ற அறிவாகும்.
ஒரு மனிதர் தனது செயலை எத்தகையக் கருத்துக்களைப் பற்றிக்கொண்டுச் செய்கிறார்? சமூகத்தின் பல்வேறு கருத்துக்களில் அவர் எத்தகையக்
கருத்துக்களைச் சார்ந்தவராக இருக்கின்றார்? இவற்றைப் பற்றிய அறிவே தனிமனிதக் கருத்து நிலைப்பாடு ஆகும் (Individual
Concept Stage). ஒரு நபர் நேர்மையாகப் பேசுபவரைப்போலத் தோன்றலாம்.
தான் இத்தகையக் கருத்து நிலைப்பாடு கொண்டிருப்பதாகச் சொல்லலாம். ஆனால், அவரது உணர்வுப் பூர்வமானச் செயல்பாடுகளைக் கவனிக்க
வேண்டும். அவரது செயலுக்கும் சொல்லுக்கும் இடையிலுள்ள உடன்பாடுகளையும்
முரண்பாடுகளையும் மதிப்பிடுவதன் மூலமாகவே அவரது கருத்து நிலைப்பாட்டை உறுதி செய்ய
முடியும். (புதியவன்.ஜுன் 2015:35)
2.6.தனிமனித
உலகப்பார்வை
தனிமனித உலகப்பார்வை என்பது கருத்துக்களை உருவாக்குகின்ற மனித
நடவடிக்கைகளாகும். எல்லா உயிரினங்களும் உலகைப் பார்க்கின்றன. ஆனால் எல்லா
உயிரினங்களுக்கும் கருத்துக்கள் உதிப்பதில்லை. மனிதர்களுக்கு மட்டுமே கருத்துக்கள்
உருவாகின்றன. மனித உலகப்பார்வைக்கு தத்துவம் அடிப்படையாக இருப்பதால் மட்டுமே
கருத்துக்கள் உருவெடுக்கின்றன. எனவே எல்லா உயிரினங்களின் உலகப்பார்வையிலிருந்தும்
மனித உலகப்பார்வைக்கு தனிச்சிறப்பு இருக்கின்றது. தான் அல்லது ஒரு சகமனிதர்
தன்னையும் இந்த உலகத்தையும் எத்தகையப் பார்வையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்? சிறிய நடவடிக்கை முதல் பிரபஞ்ச மாற்றங்கள் வரையிலான அவரது
பார்வையின் புரிதல்கள் எவ்வாறு அமைந்திருக்கின்றன? உள்ளூர் பிரச்சனை முதல் உலகளாவிய நிகழ்வுகள் வரை எப்படிப்
புரிந்துகொண்டிருக்கிறார்? இவற்றைப் பற்றிய அறிவே தனிமனித உலகப் பார்வையாகும். (Individual
outlook). (புதியவன்.ஜுன்
2015:36)
2.7.தத்துவ
அடிப்படை
பொதுவாக மனித அறிவு மூன்று நிலையில் அமைந்திருக்கின்றது. 1.தகவல் அறிவு, 2.துறை
சார்ந்த அறிவு , 3.சமூக அறிவு. முதல் இரண்டும் சமூக அறிவில் அடங்கிவிடும். சமூக அறிவு
முதல் இரண்டிற்குள் அடங்குவதில்லை. சமூக அறிவு என்பது சமூக வரலாற்று பொருளாதார பண்பாட்டு
அரசியல் அறிவாக அமைந்திருக்கின்றது. இத்தகைய மனித அறிவின் எதார்த்தமானது மனித உலகப்பார்வையிலிருந்து
தொடங்குகிறது. மனித உலகப்பார்வைக்கு அடிப்படையாக தத்துவப் புரிதலே இயங்குகிறது. அதாவது மனித உலகப்பார்வையின் புரிதல்கள் தத்துவ அறிவிலிருந்தே
தொடங்குகின்றன. இதனையேத் தத்துவ அடிப்படை என்கிறோம். (Philosophical
Basis). தத்துவம் என்பது ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த
விதிகள் அல்ல. எல்லாத் துறைகளுக்கும் பொதுவாகப் பொருந்தக்கூடிய விதிகளாகும்.
இத்தகைய விதிகளை இரு உலகத் தத்துவங்களாகப் பிரிக்க முடிகின்றது.
1.
அறிவெதிர் தத்துவம் (Nescience philosophy),
2.
அறிவியல் தத்துவம் (Science
philosophy). (சிவக்குமார்,கே.2016:11)
அறிவெதிர் தத்துவம் என்பது
அஞ்ஞானங்களின் அஞ்ஞானமாக இருக்கின்றது. இதனை ஆன்மீகத் தத்துவம் என்றும் கூறலாம். ஆன்மீகத் தத்துவம் என்பது மனித ஆழ்மனக்குழியின்
உணர்வுகளை ஆராய்ச்சி உணர்வாகிய அறிவுநிலைக்கு உயர்த்தாமல் மன உணர்வுகளின் மட்டத்திலேயே
தேங்கச் செய்கிறது. மனித உடல்களுக்கும் புறநிலை பொருட்களுக்கும் இடையிலான செயலாக்க
அனுபவங்களை புறக்கணிக்கிறது. உழைப்பால் உருப்பெற்ற உலக வாழ்விலிருந்து துண்டித்துக்கொண்டு
சொர்க்கம், நரகம், மறுபிறப்பு, மரணமில்லா பெருவாழ்வு, கடவுளின் அவதாரங்கள், சுயம்புவான
கடவுள், கடவுள்களின் பிரபஞ்சம், பாவம், புண்ணியம், மாயை போன்ற உலகம் குறித்த வெற்றுக்
கற்பனைகள் மட்டுமே நிறைந்த எண்ணங்களை மனித மனங்களில் பற்றிக்கொள்ளச் செய்து அறிவின்
தலைமையைத் துண்டித்துக் கொள்வதாக ஆன்மீகத் தத்துவமாகிய அறிவெதிர் தத்துவம் இயங்குகிறது.
அறிவியல்
தத்துவம் என்பது விஞ்ஞானங்களின் விஞ்ஞானமாக இருக்கின்றது. மனிதர்களின் ஆழ்மனக் குழியாகிய ஆன்மீகப்
பண்பை ஆராய்ச்சி உணர்வாகிய அறிவு நிலைக்கு உயர்த்துகிறது. மனிதர்களின் அற்புதமான கற்பனை
வளத்தை புறநிலை உலகின் அற்புதமான மாற்றங்களுடன் இணைக்கின்றது. மனித உடல்களுக்கும் புறநிலை
பொருட்களுக்கும் இடையிலான உணர்வுப்பூர்வமான அறிவியல் உறவு, உலகின் இயக்கத்தைத் உயிரின
வாழ்வு நீடிப்பதற்கு ஏற்ற திட்டமிட்ட நல்லுலகாக உருமாற்றும் என்பதை உணர்த்துகின்றது.
அறிவியல்
தத்துவத்தை அச்சாணியாகக்கொண்டு சமூவிஞ்ஞானம் இயங்குகின்றது என்பதை உணர கடமைப்பட்டுள்ளோம்.
ஒரு மனிதரின் பல்வேறு கருத்துக்கள் இரு வகை தத்துவத்தில் ஏதேனும் ஒரு
தத்துவத்தைப் பற்றிக்கொண்டு அமைந்திருக்கின்றன. அல்லது, இரண்டும் கலந்ததாகக் குழம்பியிருக்கின்றன. அறிவெதிர்
தத்துவம் என்பது இயங்காவியலும் கருத்து முதல் வாதமும். அறிவியல் தத்துவம் என்பது
இயங்கியலும் பொருள் முதல் வாதமும். இவற்றைப் பற்றிய அறிவே தத்துவ அடிப்படை ஆகும்.
தம் வாழ்வின் சமூக வசதிகளுக்காக மனிதர்கள் அறிவியல் தொழில்நுட்பங்களைச் சார்ந்து
வாழ்கிறார்கள். அறிவெதிர் நுட்பங்களைப் புறக்கணிக்கிறார்கள். அதுபோல வாழ்வின் சமூக
உணர்வுகளில் மேன்மையடைவதற்காக அறிவியல் தத்துவத்தைச் சார்ந்து வாழப் பழகுதல்
வேண்டும். அறிவெதிர் தத்துவ உணர்வுகளை ஆழ்மனக்குழியில் எட்டும் தூரம்வரை அறுத்தெறிய
வேண்டும். இதற்காக ஆரம்பநிலை முயற்சியாளர்களுக்கு அறிவியல் தத்துவத்தை அறிமுகம்
செய்ய முயன்றுள்ளோம். கதை முதல் வாதம் என்ற நூலில் சமூகவிஞ்ஞானத் தத்துவம் என்ற பெயரில் ஐந்து
வழிமுறைகளாக அறிமுகம் செய்துள்ளோம்.
1.இயங்குதலின் நான்கு
தன்மைகளை உணர்தல், 2.பொருளையும் கருத்தையும் உணர்தல்,
3.வரலாற்றை உணர்தல்,
4.பொதுத்தன்மையையும் தனித்தன்மையையும் உணர்தல், 5.நடைமுறையையும் தத்துவத்தையும்
உணர்தல் ஆகிய ஐந்தும் அறிவியல் தத்துவ விதிகள் ஆகும். இத்தகைய அறிமுகத்தை சமூக அறிவாக மாற்றிக்கொள்வது அவரவரது
சமூகவிஞ்ஞான முயற்சியால் மட்டுமே சாத்தியப்படுத்த முடியும். (சிவக்குமார்,கே.2016:7)
சமூக வாழ்வியல் முதலான ஏழு தளங்களுக்கும் இடையிலான முழுதளாவிய உறவுகளே பண்பாட்டு உறவுகளாகும்.
இதனை அறிவெனும் பெரும்பசி என்ற கட்டுரையில் சமூகப் பண்பாட்டியல் என்பதாக
விளக்கியுள்ளோம். இக்கட்டுரையின் விவரிப்புகளையே இலக்கிய அறிவியலின் அவசியம் கருதி
முழுமையாகக் கையாண்டிருக்கிறோம். (புதியவன்.ஜுன்
2015:36)
இலக்கியங்களில் சமூகப் பண்பாடுகளை அணுகும்போது,
பண்பாட்டு உறவுகள் குறித்த இத்தகைய சமூக அறிவைப் பெற்றிருப்பது இலக்கிய அறிவியலின்
இன்றியமையாத கடமையாகும். சமூகத் தேக்கத்திற்கான பண்பாடுகளை உடைத்து, சமூக மேன்மைக்கான
பண்பாடுகளை மனித உணர்வுகளில் எழுச்சி பெறச் செய்வது இலக்கிய அறிவியலின் பண்பாடாகும்.
குறிப்பாக, சமகாலத்தில் நிலவுகின்ற நிதிமூலதனப் பிரிவின் இலாப வெறி பண்பாட்டை
மனித உணர்வுகளில் உடைத்து, சமூகத் தேக்கத்திற்கு எதிராக செயலாற்ற வேண்டியது இலக்கிய
அறிவியலின் பொறுப்பாகும். இத்தகைய பொறுப்பே மனித உணர்வுகளில் சமூக மேன்மை பண்பாட்டைச்
சாத்தியப்படுத்தும்.
No comments:
Post a Comment