3.இயற்கை வர்ணனைகள்
இயற்கை என்பது செயற்கையின் அரண். செயற்கை என்பது மனித இயற்கை. இயற்கையின் அங்கமாகிய மனிதர்களின் அறிவுகள் செயற்கையின் ஆக்கங்களால் கட்டமைந்துள்ளன. எனினும் மனித உணர்வுகள் இயற்கையின் அடித்தளத்திலேயே கட்டமைந்துள்ளன.
திட்டமிட்ட செயல்களால் மனிதர்கள் தம் உலகைக் கட்டமைத்துக்
கொண்டுள்ளார்கள். எனினும் பிரமாண்டமான இயற்கையைச் சார்ந்தே தம் உணர்வுகளைப் புதுப்பித்துக்கொள்கிறார்கள்.
மனித உணர்வுகளின் வரலாறு இயற்கையை வணங்குவதிலிருந்தே தொடங்குகிறது.
மனித இனத்தின் தொன்மையான வழிபாடாக இயற்கை வழிபாடு அமைந்திருப்பதே இதன் சான்று. (கடவுள்
வரலாறு - https://puthiyavansiva.blogspot.com/2019/07/blog-post.html )
மனிதர்களின் எண்ண அலைகளும், கற்பனை வளமும், கருத்துச்
செறிவும் நேர்த்தியாக வெளிப்படுவதற்காக இயற்கையைத் தழுவிக்கொள்கின்றன. மனிதக் கருத்தியல்கள்
இயற்கை வர்ணனைகளுடன் வடிக்கப்படும்போது எத்தகைய கருத்தாக்கங்களுடன் வடிக்கப்படுகின்றன
என்பதைக் கவனிக்க வேண்டும்.
சமூகத் தேக்கக் கருத்தாக்கங்களுடன் வெளிப்படுவதை இலக்கிய
அறிவியல் எதிர்க்கின்றது. சமூக மேன்மைக் கருத்தாக்கங்களை இயற்கை வர்ணனைகளோடு வெளிப்படச்
செய்வதிலேயே, இலக்கிய அறிவியலின் ஆக்கம் அமைகின்றது.
4.மொழி நேர்த்தி
மொழி என்பது மனித சமூகத்தின் முழுதளாவிய கருத்துக்களின்
வெளிப்பாடாகும். மொழியின் தனித்துவம் இலக்கணத்தில் அமைந்துள்ளது. மொழியின் பொதுத்துவம்
மொழியியலில் அமைந்துள்ளது. மொழியின் வினைத்துவம் கருத்தியலில் அமைந்துள்ளது.
இலக்கணமும் மொழியியலும் கருத்தியலும் இணைந்த வடிவமே மொழியாகும். மொழியின் ஆளுமை அதன்
வெளிப்பாட்டு நேர்த்தியில் அமைகின்றது.
மொழி ஆளுமையுடன் வெளிப்படுவதற்கு ஐந்து இன்றியமையாத
காரணிகள் அமைகின்றன.
1.சொல் வங்கி
2.மையக்கருத்தின் சமூகத் தேவை
3.பேசும் வடிவம்
4.பிரதிபளிப்பின் கண்ணோட்டம்
5.விளைவை முன்நோக்குதல்
சொல்வங்கி என்பது மொழியில் இலக்கியவாதிக்கு
இருக்க வேண்டிய சொல்லறிவு. மொழியில் எத்தனை சொற்களை அறிந்துள்ளார். ஒவ்வொரு சொல்லுக்கான
பல்வேறு சூழல்களை எவ்வாறு உணர்ந்துள்ளார். மொழியின் சொல்லறிவை எவ்வாறு புதுப்பித்துக்கொள்கிறார்
ஆகியன சொல்வங்கியில் அடங்கும்.
மையக்கருத்தின் சமூகத்தேவை என்பது மொழியில்
வெளிப்படுத்தும் மையக்கருத்து சமூகத் தேக்கத்தை ஆதரிக்கின்றதா? அல்லது சமூக மேன்மையை
ஆதரிக்கின்றதா? என்பதை பற்றிய தெளிவாகும்.
பேசும் வடிவம் என்பது மொழியின் வெளிப்பாடானது
கலை இலக்கியமாக அமைகிறதா? அல்லது அறிவியல் இலக்கியமாக அமைகிறதா? கவிதை, சிறுகதை, புதினம்,
பாடல், கட்டுரை போன்றவற்றில் எந்த ஒன்றாக கருத்து வெளிப்படுகின்றது என்பது பற்றிய முடிவாகும்.
பிரதிபளிப்பு கண்ணோட்டம் என்பது இலக்கியத்தை
வாசகர் உணரும் தன்மையை மதிப்பிடுதல் ஆகும்.
விளைவை முன்நோக்குதல் என்பது சமூகளாவிய
நிலையிலும் வாசகர் உணர்நிலையிலும் எத்தகைய மாற்றத்தை உந்துவதற்கான திட்டத்துடன் இலக்கியம்
படைக்கப்படுகின்றது என்பது பற்றிய முடிவாகும்.
மொழி நேர்த்திக்குரிய ஐந்து காரணிகளிலும்
தம்மை புதுப்பித்துக்கொள்வது இலக்கியவாதியின் இன்றியமையாதக் கடமை. ஏனெனில், மொழி நேர்த்தி
என்பது பண்பாட்டு நேர்த்தியாகவும் அமைகின்றது. அதாவது, மொழியானது சமூகத்தின் பண்பாட்டு
நிலைமைகளை வெளிப்படுத்துவதாக மட்டும் அமைவதில்லை. மாறாக, சமூகப் பண்பாட்டில் நிகழ வேண்டிய
மாற்றங்களை வெளிப்படுத்துவதாகவும் அமைகின்றது. எனவே, மொழி நேர்த்திக்கு மட்டுமல்ல பண்பாட்டு
நேர்த்திக்கும் இலக்கியவாதிகள் பொறுப்புடையவர்கள் ஆவர். இத்தகைய பொறுப்புடைய இலக்கியவாதிகளால்
மட்டுமே தகுதியான சொற்களில் கருத்துக்களைக் கோர்த்து மனித உணர்வுகளில் சூடுதல்
முடியும். மனித உணர்வுகளை சமூக மேன்மை நோக்கி உந்துவதே இலக்கிய அறிவியலின் மொழி நேர்த்தியாக
அமைகின்றது.
5.சமூக ஏற்றத்தாழ்வுகள்
சமூகம் என்பது சகமனிதர்களின் சார்ந்து வாழும் ஒருமையாகும். இந்த ஒருமை, மனிதர்களின்
தனித்துவங்களுக்கு இடையிலான சமத்துவமாக கட்டமைவது சமூகத்தின் தேவையாகும். ஆனால், சமத்துவம்
என்பது இயற்கைக்கு பொருத்தமற்ற வெறும் கற்பனை என்று கருத இடமுண்டு. எனினும் இந்தக்
கற்பனை ஏற்றத்தாழ்வுகள் அற்றவை என்பதற்கான அர்த்தப்பாடாகும்.
இயற்கையில் எல்லா தனித்துவங்களுக்கும் இடையில் ஏராளமான
வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால், அவற்றுள் மனித மதிப்பீடுகளாகிய ஏற்றத்தாழ்வுகள் இருப்பதில்லை.
காட்டில் வாழும் புலிக்கு தான் வீரர் என்ற மமதை கிடையாது. மான் தனக்கு அடங்கி வாழ வேண்டும்
என்ற மடமையும் கிடையாது. தான் புலியினும் கீழான உயிரினம் என்ற சுய பரிதாபம் மானுக்கும்
கிடையாது. இயற்கை நிர்ணயித்துள்ள தனித்துவங்களுக்கு இடையிலான சமத்துவம் மட்டுமே இருக்கின்றது.
மானே, நீ முடிந்தால் தப்பிப்பிழை… புலியே, நீ முடிந்தால் விரட்டிப் பிடி… வாழ்வா சாவா
என்ற இயற்கையின் போரில் வலியவை வெல்லும் என்பதே விதி.
இந்த விதி தனித்துவங்கள் நிறைந்த எல்லா உயிரினங்களுக்கும்
சமத்துவமாகும். இத்தகைய சமத்துவமானது ஏற்றத்தாழ்வுகள் என்ற மதிப்பீடுகள் இயற்கைக்கு
இல்லை என்பதன் வெளிப்பாடாகும். இயற்கையின் இத்தகைய வெளிப்பாட்டை சமத்துவம் என்பதாக
கருத இடமுண்டு. ஆனால், இயற்கையின் ஓர் அங்கமாகிய மனிதர்களிடம்தான், இயற்கையின் சமத்துவத்திற்கு
முரணாக ஏற்றத்தாழ்வுகளை மதிப்பிடுகின்ற கண்ணோட்டம் அமைந்திருக்கின்றது.
மனித இனம் தமது தனித்துவங்களைப் புறக்கணிப்பதும், ஏற்றத்தாழ்வுகளைக்
கற்பிதம் செய்வதும், கட்டமைத்துக் கொள்வதும் சமூகத்தின் வேதனையாகும். சமூகம் ஏற்றத்தாழ்வுகளால்
திணறிக்கொண்டிருக்கிறது. சமூகப் பொருளுற்பத்தியைச் சார்ந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்
ஏராளம். சமூகப் பண்பாட்டைச் சார்ந்த பாலினம், சமயம், சாதியம், இனம், நிறம் என்பது போன்ற
பண்பாட்டு ஏற்றத்தாழ்வுகள் ஏராளம். இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் பிரபஞ்ச இயற்கைக்கும்
மனித சமூகத்திற்கும் பேரவலமாக அமைந்திருக்கின்றன.
சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்கும் சமத்துவ உலகை அடைவதற்கும்
சமூகளாவிய முயற்சிகள் அவசியப்படுகின்றன. மனித உணர்வுகளை சமூகளாவிய முயற்சிகள் நோக்கி
உந்துவதே இலக்கிய அறிவியலின் செல்நெறி ஆகும். இத்தகைய செல்நெறியானது இயற்கை நிர்ணயித்துள்ள
சமத்துவத்திலிருந்து பண்பாட்டுச் சமத்துவம் நோக்கிய பயணமாக அமைகின்றது. இலக்கிய அறிவியலின்
இத்தகைய பயணம் சமூக மேன்மைக்கு இன்றியமையாததாகும்.
6.பாலின ஏற்றத்தாழ்வுகள்
உயிரினத் தோற்றத்தில் ஆண்பாலுக்கு இடமில்லை. உயிரினங்கள்
அனைத்தும் பெண்ணினமாக மட்டுமே இருந்தன. பெண்ணினங்கள் தனித்திருந்தே இனப்பெருக்கத்தை
நிகழ்த்தின. இனவீழ்ச்சிப் போக்கில் இனநிலைப்பு சாத்தியமற்று திணறியது. இனநிலைப்பைச்
சாத்தியப்படுத்த படிமலர்ச்சி உந்துதல் பெற்றது. இனவீழ்ச்சிப் போக்கில் வீழாமல், புதிய
மரபணுக்களை உருவாக்கும் போக்கில் படிமலர்ச்சி முன்னேறியது. படிமலர்ச்சியின் முன்னேற்றத்தில்
ஆண் பாலினம் உருவெடுத்தது. ஆண்பாலினம் என்பது புதிய மரபணுவை உருவாக்கும் வழிமுறையாக
இயற்கையில் நிலைபெற்றது. (ஷாலினி.செப்.2018.)
பாலினம் பற்றிய இத்தகைய வரலாற்று அறிவின் கருத்தாக்கம்,
உயிரின இயக்கத்திற்கு அவசியப்படவில்லை. கருத்தாக்கங்கள் மனித சமூகத்திற்காகவே கட்டமைகின்றன.
மனித சமூகம் தோன்றிய காலத்தில் இத்தகைய கருத்தாக்கம் கட்டமையவில்லை. கருத்தாக்கமற்ற
காலத்தில் தாய்தலைமையே மனித சமூகத்தை வழிநடத்தியது. தாயின் தலைமைப் பண்பு இயற்கையின்
அங்கமாக இருந்ததால், பாலின ஏற்றத்தாழ்வு சாத்தியமற்றதாயிற்று.
கால்நடை மந்தை நாகரிகம் தோன்றியபோது தந்தையதிகாரச் சமூகம்
ஆக்கம் பெறத் தொடங்கியது. தந்தையதிகாரச் சமூகத்தின் விளைவாக பாலின ஏற்றத்தாழ்வுகள்
உருவெடுத்தன. தாய் தலைமையைத் தந்தையதிகாரம் வன்மமாக ஒடுக்கியது. சமூகம் முழுதும் ஆணின்
ஒருமையாகக் கட்டமைக்கப்பட்டது. பெண்மை ஆண்களின் துணைமையாக ஒடுக்கப்பட்டது. தாயின் குழந்தைகள்
தந்தையின் வாரிசுகளாக உரிமையாக்கப்பட்டார்கள். பெண்ணுலகம் முழுதும் ஆணதிகாரத்திற்கு
அடிமைப்படுவது இயல்பான பண்பாயிற்று.(எங்கெல்ஸ்.2011(2008):86)
ஆணுலகின் சொத்தாதிக்கத்திற்கு உட்பட்டு பெண்கள் பொருளாதார அடிமைகளாயினர். ஆணுலகின்
பாலிச்சைகளுக்குக் கீழ்பட்டு பெண்கள் பாலுறவு அடிமைகளாயினர். பண்பாட்டின் மீதான ஆணாதிக்க
விளைவு பெண்களைப் பண்பாட்டு அடிமைகளாகச் சிதையச் செய்தது. பாலின ஏற்றத்தாழ்வுகள் சமூக
எதார்த்தமாயிற்று.
இந்த எதார்த்தம் சமூக மேன்மைக்கு அவமானமாகும். மனித வள உழைப்பை சமூக மேன்மைக்குப் பயன்படுத்துவதற்கு
மிகப்பெரும் தடையாகும். தாய்தலைமையால் பெண்மைக்கு கட்டமைந்துள்ள மொழிவளப்புலம் ஆணினும்
பெரிதாக உருப்பெற்றுள்ளது எனினும் வரலாற்றில் முடங்கிக் கிடக்கின்றது என்பது ஆகப்பெரிய
உதாரணமாகும். இந்த அவலம் பெண்ணடிமைப் பண்பாட்டின் உருவம். ஆணாதிக்கப் பண்பாட்டால் மனித
வளத்திற்கு உருவாக்கப்பட்டிருக்கின்ற பேரவலம். இத்தகைய பேரவலம் களையப்பட்டாக வேண்டும்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்துவங்களின் வேறுபாடுகள் அளவிடற்கு அரியதாயினும்
சமத்துவம் இன்றியமையாத பண்பாடாக அமைதல் வேண்டும். சகமனிதர்கள் என்ற சமத்துவத்திலிருந்து
இருபாலினத்தாரின் உழைப்பும் சமூகமேன்மைக்கு பயன்பட்டாக வேண்டும். மாற்று பாலினத்தவருக்கும்
சமத்துவ பண்பாடே கட்டமைய வேண்டும். பொருளாதாரம், பண்பாடு, அரசியல் என சமூகத்தின் அனைத்து
புள்ளியிலும் பாலின ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து பாலினச் சமத்துவத்தை உருவாக்குவதே
சமூக மேன்மையின் அவசியமாகும். பாலினச் சமத்துவம் நோக்கி மனித உணர்வுகளை உந்தச் செய்வதே
இலக்கிய அறிவியலின் கடமையாகும். (புதியவன்.மே 2016:20-25)
7.சாதி மத பேதங்கள்
“இல்லாத ஊருக்கு வழி சொன்னால்…
ஊர் அழைக்கவா போகிறது?
பாதை அனுப்பவா போகிறது?” என்பது
புதுமொழி.
இல்லாத ஊருக்கு வழி சொல்வதும், ஊர் அழைப்பதுவும், பாதை அனுப்புவதுவும், ஊர்
இல்லையே என்று உணர்வதற்குள் சொந்த ஊரையே இழப்பதுவும் சாதி மத பேதங்களில் வேடிக்கையாகக்
காண முடிகின்ற அவலங்களாகும். சாதியும் மதமும் மனிதர்களின் புலனறிவுக்கு எட்டாத பேதங்களாகும்.
கற்பனைகளில் வடித்துக்கொண்டு நம்பப்படுகின்ற சூழ்ச்சிகளாகும். இந்தச் சூழ்ச்சிகளால்
பின்னப்பட்டுள்ள சமூக அதிகாரங்களும், அடிமைத்தனங்களும், சமூக மேன்மையின் முயற்சிகளுக்கு
இடப்பட்டுள்ள மின்வேலிகளாகும். இத்தகைய மின்வேலிகளால் சமூகம் கலவர பூமியாய் உழன்று
கொண்டிருக்கின்றது. மனிதர்களுக்கு இடையிலான உறவுகளில் புலனுக்கு எட்டாத பகைமுரண்கள்
கூர்மையடைந்துகொண்டே செல்கின்றன. இந்தப் பகைமுரண்களைப் பற்றிக்கொண்டுள்ள சமூகப் பொருளுற்பத்தியின்
இலாபவெறி, மனித வாழ்வியலின் இரத்தம் குடித்துப் பெருத்துகொண்டே இருக்கின்றது. இந்தியாவில்
சாதிகள்தான் இந்து மதத்தின் இரத்த நாளங்களாக இயங்குகின்றன. இந்து மதம்தான் சாதிகளைப்
பாதுகாக்கும் அரணாக இயங்குகின்றது. சமூகமேன்மையின் எழுச்சிகளால், இறுதி மூச்சுத் திணறி
மரணித்துக் கொண்டிருக்கிறது இலாபவெறிபிடித்த முதலாளித்துவம். எப்பேற்பட்ட பேரழிவை நிகழ்த்தியாவது
தன் மரணத்திலிருந்து தற்காத்துக்கொள்ள முடியுமா என்று முதலாளித்துவம் முயல்கிறது. இத்தகைய
முயற்சியைத்தான் வரலாறு பாசிசம் என்று வரையறுக்கின்றது. இலாபவெறிபிடித்த முதலாளித்துவம்
தனது பாசிச முயற்சியின் கருவியாக, இந்தியாவின் இந்து மத சாதி வெறியைக் கையாளத் தொடங்கியுள்ளது.
கார்ப்பரேட் பாசிசத்தைப் பாதுகாக்கும் அரணாக, இந்து மத சாதி வெறியானது காவி பாசிசமாக
உருவெடுத்துள்ளது. (மருதையன். மார்ச்.2019.)
சமூக மேன்மையின் அடிப்படையில் சமூகப் பொருளுற்பத்தியில்
இலாபவெறியை அழிப்பதற்கும், மக்கள் தலைமையை அடைவதற்கும், சாதிமத பேதங்களை ஒட்டுமொத்தமாகத்
துடைத்தெறிவது இன்றியமையாத நிபந்தனையாக இருக்கின்றது. சமூகத் தேவைக்கு அவசியமற்ற
பெருஞ்சுமையாக சாதி மத பேதங்கள் நிலவுகின்றன. அறிவியல் தத்துவ முயற்சிகளுடன் இத்தகைய
பேதங்களை எட்டித் தள்ளுவதே சமூக மேன்மையாக அமைகிறது. அறிவியல் தத்துவ வெளிப்பாட்டினால்,
மனித ஆழ்மனக் குழியிலிருந்து சாதி மத பேதங்களை அறுத்தெரியும் முயற்சிகளில், இலக்கிய
அறிவியலுக்குத்தான் பெரும் பொறுப்பு இருக்கின்றது.
8.பேதம் கடந்த உடன்பாடுகள்
பேதம் என்பது வெறும் வேற்றுமைகள் அல்ல. பகை முரண்களாக
ஆக்கம் பெற்றுள்ள வேற்றுமைகளே பேதங்களாக உணரப்படுகின்றன. மனிதர்களுக்கு இடையிலான பகை
முரண்களைப் பட்டியலிட்டால் பட்டியல் நீளும். பாலின பேதம், இன பேதம், நிற பேதம், அறிவு
பேதம், வயது பேதம், பணி பேதம், உறவு பேதம், ஊர் பேதம், உணவு பேதம், சாதி மத பேதங்கள்
என அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் இத்தனை பேதங்களையும் கடந்து பிழைப்பிற்கான உடன்பாடுகளுடன்
மனிதர்கள் ஒன்றியே வாழ்கிறார்கள். இத்தகைய உடன்பாடுகள் இலாபவெறிபிடித்த சமூகச் சூழ்ச்சிகளால்
எப்போது வேண்டுமானாலும் நொறுக்கப்படலாம். இத்தகைய ஆபத்துக்களை அங்கீகரித்துக்கொண்டுதான்,
பேதம் கடந்த உடன்பாடுகள் சமூகளாவிய நிலையில் நிலவுகின்றன. இலாப வெறி நலன்களுக்கு சாதகமாக
நிலவுகின்ற, பேதம் கடந்த உடன்பாடுகளை சமத்துவச் சமூக இலக்குகளுக்குச் சாதகமானதாக உருமாற்ற
வேண்டியது, சமூகமேன்மையின் அவசியமாக இருக்கின்றது. இத்தகைய அவசியத்தின் அடிப்படையில்,
சமத்துவச் சமூகத்தை எட்டுவதற்கான முயற்சிகளில், பேதம் கடந்த உடன்பாடுகளை மனித உணர்வில்
உந்துவதற்கு, இலக்கிய அறிவியல் கலங்கரையாகும்.
9.எதார்த்தம் மீதான இலட்சியம்
எதார்த்தம் என்பது நிகழ்காலத்தின் நிதர்சனம். கடந்தகால
வாழ்வியலை பரிசீலிக்கும் ஆய்வகம். எதிர்கால மாற்றங்களுக்கு வழியமைக்கும் நுழைவகம்.
ஒட்டுமொத்த சமூக நிலைமைகளுக்குமான சாராம்சம். மனித சமூகத்தின் பேராற்றல் என்பது சமூக
நிலைமைகளின் எதார்த்தங்களுடன் ஊடாடி முன்னேறுவதில் இருக்கின்றது. மனித முன்னேற்றம்
என்பது திட்டமிட்ட மாற்றங்களால் எதிர்நோக்கப்படும் இலட்சிங்களாகும். இலட்சியம் என்பது
சமத்துவச் சமூகத்தை எட்டுவதாகும். இலட்சியங்கள் நோக்கி முன்னேறும்போது, சமூக
நிலைமைகளில் நிலவும் உடன்பாடுகளும், முரண்பாடுகளும், வளர்ச்சிகளும், வீழ்ச்சிகளும்,
எத்தகைய சமூகத்தேவைகளுடன் இணைந்திருக்கின்றன என்பதை கண்டுணர்வது அவசியம். சமூகத்தேக்கத்தைச்
சார்ந்திருப்பவைகளைக் களைவதும், சமூகமேன்மையைச் சார்ந்திருப்பவைகளை உந்திச் செலுத்துவதும்,
சமூக எதார்த்தங்களின் இயக்கமாக கட்டமைய வேண்டும். இத்தகைய கட்டமைவுகளிலிருந்து சமூகமேன்மையின்
இலட்சியம் சாத்தியப்பட வேண்டும். இத்தகைய சாத்தியப்படுத்தலுக்கான களமாக இலக்கிய அறிவியல்
முடுக்கப்பட வேண்டும்.
10.முற்போக்கின் எழுச்சி
முற்போக்கு என்பது பிற்போக்கின் எதிர்மறை. பிற்போக்கான
சமூக முயற்சிகளுக்கு மாற்றாக முற்போக்கு அமைகிறது. பிற்போக்கு என்பது சமூகத் தேக்கத்தை
உணரச் செய்கிறது. முற்போக்கு என்பது சமூகமேன்மையை உணரச் செய்கிறது. பிற்போக்கு
என்பது வாழத் தகுதியற்ற, சுயநல வெறிபிடித்த, இலாப வெறிக்கான சமூகப் பொருளுற்பத்தியைப்
பாதுகாத்துத் தேங்கச் செய்கின்ற, முயற்சிகளாக அமைகின்றது. முற்போக்கு
என்பது சமூக அக்கறையுள்ள மக்கள் நல பொருளுற்பத்தியை ஊக்கப்படுத்தி, சமத்துவச்
சமூகம் நோக்கி முன்னேறுகின்ற, சமூக மேன்மை முயற்சிகளாக அமைகின்றது. சமூகளாவிய நிலைமைகளில்
பிற்போக்கின் முயற்சிகளை செயலிழக்கச் செய்து, முற்போக்கின் செயல்களை எழுச்சி பெறச்
செய்வதே, இலக்கிய அறிவியலின் எழுச்சியாக அமைகிறது.
இலக்கிய அறிவியல் 6
No comments:
Post a Comment