காவல் கோட்டம் நாவலில் சாதிய அரசியல் 2
வயதுக்கு வந்து விட்டாள்
மருத்துவச்சியின் மகள். கண்டமனூர் ஜமீன் மோப்பம் பிடித்து வந்தான். இவன் கொல்லவாரு
குலத்தைச் சேர்ந்தவன். சின்னப்புள்ள, நாளாகட்டும் என்று கெஞ்சிப் பார்த்தாள் அம்மாக்காரி. மருத்துவச்சியின் சொல்
எடுபடவில்லை. ஜமீன் வாலை ஆட்டி ஆட்டி குழைந்தான். பல்லைக்காட்டி மிரட்டினான். ஐந்து
பவுன் கைமாறியது. மகளின் திருமண செலவுக்கும் உத்திரவாதம் கிடைத்தது. இரவு நேரம், குடிசையே கதறியது. அதைவிடக் கதறியது தாயின் உள்ளம். ஜமீன்
மேய்வதைத் தாங்க முடியாமல் திமிறிக் கொண்டு ஓடி வந்தாள் பிஞ்சு மகள்.
விட்டுவிடும்படிக் கெஞ்சினாள். காலில் விழுந்து அழுதாள் மருத்துவச்சி. வெறி
பிடித்த ஜமீன் விடுவதாக இல்லை. மருத்துவச்சியின் குலத்தையே கேவலப்படுத்துகிற
பழமொழிகளில் வைதான்.
தாய் கோபம் சும்மா விடுமா! ‘நீதாண்டா ஈனச்சாதிப்பய. உன் ஊர்ப் பொம்பளைக எல்லாம் ஒழுங்கா? எத்தனை பேரு பத்தினினு குச்சி வெக்கிற எனக்குத் தெரியாதா?’ அவ்வளவுதான், மருத்துவச்சியின் நாக்கிலிருந்து பிடுங்கினான் ரேணுகாவின் கருவை. இனி, ரேணுகாவின் முடிவு ஜமீன் கையில்.
ரேணுகாவின் மீதான
கிரக்கத்தை அவ்வாவுக்குப் பயந்துதான் இதுவரைக் காட்டாமலிருந்தான் ஜமீன். விஷயம்
தெரிந்தவன் இனி என்ன செய்வான்? விடியுமுன்னே
பஞ்சாயத்துக் கூடியது. படியேறியவன் அல்லிப்பட்டிக்கார ராமானுஜம் என்பது
உறுதியானது. அதுவும் காப்புபலிஜன் என்றால் சொல்லவா வேண்டும்! தான்
அனுபவிக்காதவளை அசலூர்க்காரன் அனுபவித்துவிட்டானென்ற பொறாமையில் பயல்
வெறிபிடித்துத் துள்ளினான்.
லட்சுமிபட்டியில் ஒரு சடங்கு
வீட்டிற்கு போயிருந்தவனை இழுத்துக்கொண்டு வந்தார்கள் கண்டமனூர் இளைஞர்கள்.
லட்சுமிபட்டியிலிருந்து ராமானுஜத்துக்காகப் பஞ்சாயத்துக்கு வந்தார்கள், ஊர்க்காரர்கள்.மன்னித்து விடனும் என்று மன்றாடினார்கள்.
பெரியகுளம் ஜமீன் வரும்வரை ஆறப்போடச் சொன்னார்கள். ‘காப்புகள்லாம் ஒண்ணு சேந்துக்கிட்டு வாறீங்களாடா? பலிஜனுக்கு பாளையம் கொடுத்ததே தப்பு. போயி கவரைப்
பொண்ணப்பிடிக்க வேண்டியதுதானே கம்மாளப் பொண்ணுதான் வேணுமாக்கும்!’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-309) என்று கொதித்தான் ஜமீன். நல்லாண்டு என்ற
லட்சுமிப்பட்டிக்காரன் நறுக்கென்று சொன்னான். ‘அந்தப் பொண்ண வேணா நாங்க கூட்டிட்டுப்போறோம். நம்ம பயலுக்கு நாலு அடியப்
போட்டு அனுப்பி விடுங்க’(சு.வெங்கடேசன்: 2008,பக்-309) என்றான்.
லட்சுமிப்பட்டிக்காரர்களுக்கே
அடிவயிறு விக் என்றது. ஜமீனை சொல்லவா வேண்டும். ‘ஏண்டா கலப்பை பிடிக்கிற பயகளுக்கு கொல்லவாரு பொண்ணு
கேட்குதோ! உங்களை உக்கார வச்சுப் பேசுன என்னைச் செருப்பால அடிக்கணும்’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-309) என்று வசைமாரிப் பொழிந்தான்.
கண்டமனூர் மந்தையில்
தீவனப்படைப்பாய் எரிந்தாள், ரேணுகா. ராமுபகடைதான் ராமானுஜத்தைத் தண்டித்தான். வைகை
நீரில் தலையை முக்கியதில் மூச்சு முட்டி இறந்தான்.
பகடாலுவாரு என்பது
தமிழ்நாட்டில் பகடை என்று மறுவியது. தீர்ப்பு வழங்கும் உரிமையும், தண்டிக்கும் உரிமையும் உடையவர்கள். ஆதியில் குலதெய்வத்தையே
கொன்று தின்றதால் தீர்ப்பு வழங்கும் உரிமை மட்டும் பறிபோனது. செம்மணி அந்தஸ்து உடையவர்கள்.
மற்ற கொல்லவாருகளைப் போல கருகமணி அணிவதில்லை.
சாதியம்
நிலப்பிரபுத்துவத்தில் வேரூன்றிய பண்பாடு. நிலவுடைமைச் சமூகத்தில் பெண் என்பவள்
சொத்து. பெண்ணின் பாலுணர்வு வெளிப்பாடு என்பது உடைமைச் சமூகத்தின் மானம், அந்தஸ்துடன் தொடர்பு கொண்டதாக இருக்கிறது. அதனால்தான், சமூகத்தில் பாலினங்களின் இயல்புத் தேவையாக கருதப்படுகின்ற
பாலுறவு, காதல் போன்றவை மதம், சாதி இவற்றின் கௌரவப் பிரச்சனையாகி விடுகின்றன. மாபெரும்
கலவரங்கள் வெடிக்கின்றன.
ரேணுகாவின் பாலியல்
தேவையும், ராமானுஜம் மீதான ஜமீனின் பொறாமையும் சாதிய மோதலாக வெளிப்பட்டிருக்கிறது.
காப்புபலிஜத்தின் மீதான கோபமும், கொல்லவாருகளின்
கௌரவமும் வெளிப்படுவதற்கு ரேணுகா எப்படி விதையாக முடியும்? கொல்லவாருகளைப் பொருத்தவரை ரேணுகா கலங்கப்பட்ட சொத்து.
கலங்கம் ஏற்படுத்தியவன் களையெடுக்கப்பட்டான். கொளுந்து விட்டு எரியும்
சொத்தில்(ள்) கொல்லவாரு குலம் பிரகாசிக்கிறது. சமூகம் அழுகிப் போய் நாறுகிறது.
ச்சீ…சாதியத்தின் ஒரே வீச்சம்!
ஏகாதிபத்தியத்திற்குச்
சேவை செய்யும் உள்;ர் ஆதிக்கக்காரர்களின் உதவியுடன் எடுத்த முடிவு. விஷ்வநாதன்
காலத்தில் எழுப்பப்பட்ட மதுரை கோட்டைச்சுவரை இடிப்பதற்கான முடிவு. பிரிட்டிஷ்
ஏகாதிபத்திய நலனுக்காக, கிழக்கிந்திய கம்பெனியின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு.
மதுரை கலெக்டர் பிளாக்பெர்னின் முடிவு. மக்கள் மனதில் கோட்டை கல்லால் ஆனது அல்ல, முன்னோர்களின் ரத்தம். 21 காவல்தெய்வங்களின் வீடு. இடிக்க நினைத்தவர்கள் அரசத்துப்
போவார்கள். காவல் தெய்வங்களின் கோபம் சும்மா விடாது. மக்கள் எதிர்ப்பை
மழுங்கடிக்கும் வேலையும் சிறப்பாய் நடந்தது.
காவல் தெய்வங்களுக்குப்
பரிகார பூஜை. காவல் தெய்வம் இருபத்தியொன்றையும் இழுத்து வந்தார்கள் மந்திரவாதிகள்.
கோட்டைச் சுவரிலிருந்து வந்தவர்களைச் செல்லத்தம்மன் ஏற்றுக்கொண்டாள். மக்களின்
மூதாதையர்களும், நடுகற்களும் கோட்டைச் சுவரினுள் இருக்கிறது. மக்கள் என்ன
செய்வார்கள்? ஆறுபேர் கொண்ட குழு இம்மிடி செட்டியார் தலைமையில் மதராஸ் சென்று கவர்னரை சந்தித்து மனு கொடுத்தது. பிளாக்பெர்னும்
சந்தித்தான், கவர்னருக்கு விளக்கம் கொடுத்து அனுமதியுடன் திரும்பினான்.
மக்களுக்கு வேறு
வழியில்லை. ஒவ்வொரு கொத்தளமாக வந்தார்கள். மூதாதையர்களது சின்னங்களை எடுத்துப்
போகும் சடங்கு நிகழ்ந்து கொண்டே இருந்தது. உருமியின் ஒலியும் குலப்பாடகனின்
பாடலும் கேட்டுக் கொண்டே இருந்தது. மக்களின் இத்தகைய செயல்கள் கலெக்டரை ஏதோ
செய்தது. மேலும் விளங்கிக் கொள்ள இம்மிடிச் செட்டியை சந்தித்தார், பிளாக்பெர்ன். இம்மிடியின் கோபம் மாறவில்லை. பிளாக்பெர்ன் தணிந்து, தணிந்து
பேசினான். அவர்கள் பேச்சு நீண்டு கொண்டே போனது.
கிழக்குகோபுர வாசலுக்கு
வந்ததும் ஓரமாக வைக்கப்பட்டிருந்த கருப்பசாமி, மதுரைவீரன் சிலைகளைச் சுட்டிக்காட்டினார் கலெக்டர். இரண்டு சிலைகளும்
கோட்டைச்சுவரிலிருந்திருந்தது. இப்பொழுது அதை வழிபடுபவர்கள் கோபுர வாசலில்
வைத்துவிட்டார்கள்.
கலெக்டர் சொன்னார் ‘மதுரை வீரன் சிலையை அகற்ற வேண்டும் என்று
உயர்சாதிக்காரர்கள் மனு கொடுத்திருக்கிறார்கள். இரண்டு சிலைகளையும் அகற்ற
வேண்டுமென்று கோவில் பட்டர்களும்; பிராமணர்களும்
மனு கொடுத்திருக்கிறார்கள்’
(சு.வெங்கடேசன்: 2008,பக்-343). சாமிகள்தானே! இருந்து விட்டுப்போகட்டும் என்று இம்மிடி
தொடர்ந்து பேசினார்.
‘ஒரே குலத்தில் ஒரு பிரிவினர் ராஜாக்கள்! இன்னொரு பிரிவினர்
தோட்டிகள்! வடுகர்களின் அத்தனை போர்களிலும் சக்கிலியர்கள் இரத்தம்
சிந்தியிருக்கிறார்கள். வெக்கிலியர் இந்த மண்ணெல்லாம் பிரம்மாண்டமான கோவில்களை
எழுப்பினார்கள். இன்று சக்கிலியர் தமது சாமிக்கு நிற்க ஒருபிடி மண் தேடுகிறார்கள்! நீங்கள் துப்புறவு வேலைக்கு நியமித்தபின் தோட்டிகளாகவும் ஆகிப் போனார்கள்.’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-343) இம்மிடி செட்டியின் வருத்தம் நிறைந்த இவ்வார்த்தைகள்
கொல்லவாரு குலத்தின் நிலையையே விளக்கி வரைகிறது.
வெள்ளைக்காரன்
எதிர்பார்ப்பதை விட மதுரை வேகமாக வளர்ந்தது. கோட்டைச் சுவர் இடிக்கப்பட்டு
கட்டிடங்கள் பெருகின. மக்கள் கூட்டம் நகரத்திற்குள் குவிந்தது. குடியேற்றம், கடைகள், போக்குவரத்து
எல்லாம் பெருகின. கிராமத்திலிருந்து வந்தவர்கள் வீடுகட்டிக் குடியேறிக்
கொண்டேயிருந்தார்கள். நிலப்பிரபுத்துவ சாதியம் அவ்வப்பொழுது கழுத்தை நீட்டும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆளுமை. நகரின் வேகமான சுழற்சிக்குள் சாதியம் என்ன செய்யும்? நிதானம் கிடைக்காமல் ஆமை ஓட்டுக்குள் ஒடுங்குவது போல நடிக்கும். சிம்மக்கல்
பகுதியில் இதுதான் நடந்தது.
தாழ்த்தப்பட்ட மக்கள்
வீடுகட்டினார்கள். ஆதிக்கச் சாதியினர் எதிர்த்தார்கள். நகருக்குள் யார்? யார்? இருக்க
வேண்டுமென்று காலங்காலமாய் இருக்கும் நடைமுறையை மீறக்கூடாது என்று
கத்திப்பார்த்தார்கள். நிலப்பிரபுத்துவத்தின் சிந்தனையை நகரம் கண்டுகொள்ளவில்லை.
சக்தி இல்லாமல் அப்பொழுது மட்டும் அமைதியானது, சாதியம்.
மக்களை இருள் சூழ்ந்தது.
பஞ்சத்தில் வாடியவர்கள் பசியால் செத்தார்கள். ஊர் ஊராய் மக்கள் கொள்ளை போனார்கள்.
பஞ்சம் பிழைக்க வந்தவர்களுக்கு வேலை இல்லை. கொத்துக் கொத்தாய் பிணங்கள். இரண்டும்
இருந்தவர்கள் கஞ்சி ஊற்றினார்கள். உதிர்ந்த பருக்கைக்கு எறும்புக்கூட்டம் போல, கோப்பைக்குள் இடந்தேடும் பெருங்கடல் போல, காவயித்துக் கஞ்சிக்காக அலைமோதியது மக்கள் கூட்டம்.
அமெரிக்க மிஷனரிமார்களில் மனசாட்சியுள்ளவர்கள் கர்த்தரின் பேரைச் சொல்லி
அழுதார்கள். மக்களை மீட்க மாற்றுவழி தேடினர். மிஷினரிமார்களின் கடிதங்களிலிருந்து
சில…
கஞ்சிக்கு நின்ற வரிசையிலும்
சாதி. பசியில் எறியும் இரண்டு பிஞ்சு வயிற்றுக்காகக் கையேந்தி நின்றாள் தாய்.
பறைச்சி வரிசையில் நின்றால் என்னவாகும் என்பது நன்றாகத் தெரியும். இருந்தாலும்
வேறுவழியில்லை. கையை நீட்டியவளை கட்டையால் அடித்தார்கள்;. விரட்டி விரட்டி மிதித்தார்கள். ஆதிக்க சாதி வெறிக்குப்
பலியாவது பெண்ணென்றால் வன்புணர்ச்சியில்தான் முடியும். நிலப்பிரபுத்துவத்தில் இது
ஒரு வழக்கம். நேரமில்லை போல, இல்லையென்றால்
அதையும் செய்திருப்பார்கள். அருகில் இரண்டு குழந்தைகளுடன் இரத்தப்பிசுக்கேறிக்
கிடந்தாள். ரெவ்.லாரன்ஸ் காப்பாற்ற முயற்சித்தார். இரண்டு குழந்தைகளுக்கும் வாழ்வு
கொடுக்குமாறு வேண்டிக்கொண்டு உயிரை விட்டார், அந்தத்தாய். இது ரெவ்.லாரன்ஸ் கடிதத்தில் பதிவு பெற்றுள்ள செய்தி.
ராயப்பன், மிஷனரிமார்கள் நடத்தும் பள்ளியின் ஆசிரியர். பள்ளியின் முன்பு
சிறு கும்பல், ஆனால் மாணவர்கள் அல்ல. அந்தப் பெரிய மனிதர்கள் யார்? அவர்கள் ஆதிக்கச்சாதி மாணவர்களின் பெற்றோர்கள். மிஷனரிமார்களிடம்
ஆவேசமாகப் பேசினார்கள். கிறிஸ்துவில் சேர்ந்தவர்க்கு சாதி கிடையாதென்று எவ்வளவோ
எடுத்துச் சொல்லியது அமெரிக்க மிஷனரி. மக்கள்
ஏற்றுக்கொள்வதாக இல்லை. தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ராயப்பன் உயர்சாதிப்
பிள்ளைகளுக்கு பாடம் நடத்துவதா? எப்படி
அனுமதிக்க முடியும் என்கிறார்கள். இது போன்ற பிரச்சனைகளை மிஷினரிமார்களது கல்வி
நிறுவனம் தொடர்ந்து எதிர்கொள்கிறது. இது ரெவ். லாரன்ஸ் கடிதத்தில் பதிவு பெற்றுள்ள
செய்தி.
சென்னையில் அமெரிக்க
மிஷினரிமார்கள் நடத்திய மாநாடு. காலம் 1850. எண்பத்தியிரண்டு பாதிரிமார்கள் கலந்து கொண்டனர்.
சாதிபாராட்டும் ஒழுக்கம் கூடாது. சபைகள் இத்தகைய ஒழுக்கங்களைக் கைவிட வேண்டும்.
இதை ஒரு விதியாக செய்தது அம்மாநாடு. சாதிபாராட்டுவது கிறிஸ்துவுக்கு எதிரானது என்ற
அர்த்தத்தில், அனைத்துச் சபைகளும் கடைபிடிக்கவேண்டும். ஆனால் 26 ஆண்டுகளாகியும் நடைமுறையில் வலிமை பெறவில்லை.
திருவிதாங்கூர் மிஷினரி சாதிபாராட்டுவதை அனுசரித்தே செயல்படுகிறது. தஞ்சாவூர்
சபையில் பலி பெறும் பொழுது சாதிபாராட்டுதல் அடிப்படையில் தனித்தனி இருக்கைகள் இருக்கிறது. இதனை அறிந்த உண்மையான
கிறிஸ்துவால் மனம் வருந்தாமல் எப்படி இருக்க முடியும்? இது அருட்தந்தை ஜேம்ஸ் கடிதத்தில் பதிவு பெற்றுள்ள செய்தி.
ஆரோக்கியமேரி, சிறுபிள்ளைகளுக்குப்பாடம் நடத்தும் பெண். இவரது பணியிடம்
ரெவ். மார்ஸ்டன் தலைமையிலான கலாசாலை. ஆதிக்க சாதிக்காரர்கள் பிரச்சனை செய்தார்கள். ‘தாழ்த்தப்பட்ட குலத்திலேயே பிறந்த ஒருத்தி பாடம்
நடத்துவதையே நாங்கள் ஏற்கமாட்டோம். அதுவும் அவள் ஜாக்கெட் வேறு அணிந்து வருகிறாள்’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-717) என்று முட்டிப்பார்த்தார்கள். ‘ஆரோக்கிய மேரி என்கிற கிறிஸ்தவப் பெண் ஜாக்கெட் அணிந்து
பாடம் நடத்துவதை எதிர்க்க யாருக்கும் எந்த உரிமையும் இல்லை’(சு.வெங்கடேசன்: 2008,பக்-718) என்று கலெக்டர் நிர்வாகம் தீர்ப்பளித்தது. வேறு
வழியில்லாமல் வாலைச்சுருட்டிக் கொண்டு போயுள்ளார்கள்.
பிரிட்டிஷ்
ஏகாதிபத்தியமும், அமெரிக்க மிஷினரியும் சாதிய அநீதியை எதிர்த்தார்கள். சாதிய
ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். இத்தகைய முடிவுகள் நாவலில் வலிமை
பெற்றுள்ளன. ஆனால் எத்தகைய நோக்கத்தின் அடிப்படையில் இதை செய்தார்கள்? இந்த நுண் அரசியலை நாவலாசிரியர் வெளிப்படுத்தவில்லை.
அதற்கான முயற்சியும் தென்படவில்லை.
குஞ்சரத்தம்மாள், தாசி குலத்து மனிதர். இவளது அழகு செல்வந்தர்களின்
சொத்துக்களை காந்தம் போல கவர்ந்தது. இவள் அளவிற்கு எந்த தாசியும் சொத்து
சேர்க்கவில்லை. பஞ்ச பராரிகளாய் திரிந்து, பசியில் எரிந்து, தாது பஞ்சத்திற்கு மிரண்டு போயுள்ள மக்கள் எல்லாம் இவள்
ஊற்றும் கஞ்சிக்காக குவிந்திருக்கிறார்கள். மற்ற செல்வந்தர்களின் மூட்டையெல்லாம்
மக்களைக் காணாதது போலத் தூங்கின. குஞ்சரத்தம்மாள் வீட்டில் மட்டும் எந்த நேரமும்
அடுப்பு எரிந்தது. பணக்காரர்கள் அவள் மீது வயிறெரிந்தார்கள். ‘நாங்களும் கஞ்சி ஊத்துவோம்’ என்று சில சமயமாவது காட்டிக் கொண்டார்கள். ஆனால்
குஞ்சரத்தம்மாள் அத்தனை செல்வங்களையும் மக்களுக்காக செலவிட்டாள். இறுதியில் எந்த
சொத்தும் இல்லாமலேயே இறந்து போனாள். அவளுக்கு நிலைத்த ஒரே சொத்து மக்கள்
மட்டுந்தான்.
மக்கள் அவளைத்
தெய்வமாக்கினார்கள். ராஜம்மாவைப் போல் சலங்கை வைத்து வழிபட்டார்கள். யார் இந்த
ராஜம்மாள்? கூத்தியார் குண்டு தெரியுமா? குருவிநத்தம் என்ற ஊரைக் கூத்தியார் குண்டு என்கிறார்கள்.
ராஜம்மாள், இந்த ஊரின் வரலாற்று நாயகி. இவளும் தாசி குலம். இவள் அழகில்
திருமலை நாயக்கன் சிக்கித்தவித்தான். இவளை அந்தப்புர நாயகியாக்க அடம் பிடித்தான் அரசன்.
காதலன் இசைவாணனையும், தன் மக்களையும், ஊரையும், மண்ணையும் விட்டுப்பிரிகின்ற சக்தி ராஜம்மாளுக்கு இல்லை.
அடம் பிடிக்கும் அரசனின்; அதிகாரம் பாய்ந்து விடும் என்று எச்சரித்தார்கள் செவிலிகள்.
தீர யோசித்து முடிவுக்கு வந்தாள். சிக்கிக் கிடந்தவனின் விருப்பத்திற்குச் சம்மதம்
தெரிவித்தாள். சொக்கிப்போனவன் துள்ளிக்குதித்தான். பரிசு கொடுக்க விரும்பினான்.
அவள் உலகைக் கேட்டிருந்தாலும் பரித்துக்கொடுத்திருப்பான். ஆனால் அவள் கேட்ட பரிசு
எளிமையானது. அவள் ஊரில் வைகை நீர் பாய்ந்து வருவதற்கு ஒரு கால்வாய். மறுப்பே
சொல்லாமல் மன்னன் சம்மதித்தான். வேலையை வேகப்படுத்தினான் மன்னன். பல மாதங்கள்
ஓடின. அதை விட வேகமாய் பாயத்துவங்கியது கால்வாய் நீர். குருவிநத்தம், விவசாய பூமியானது.
குருவிநத்தம் ஒரு எளிய
கிராமம். அக்ரஹாரம் இல்லாத கிராமத்திற்கு முதன்முதலாக தண்ணீர் பாய்வதை பிராமணர்கள்
எப்படி ஏற்றுக்கொள்வார்கள். பிராமணர்களின் பார்ப்பான் குளத்தை விட
கூத்தியார்குண்டு கண்மாய் பெரிதாகவும் இருக்கின்றது. கொதித்துப்போன பிராமணர்கள்
மன்னனிடம் பிரச்சனை செய்தார்கள். சாஸ்திரத்திற்கு எதிராக நடந்துள்ளதாகக்
கொக்கரித்தார்கள். ராஜம்மாள், உலக
அறிவால் பிராமணர்களின் குரல்வளையை நெறித்தாள்.
பார்ப்பான் குளத்திற்கு
முன்பை விட அதிக நீர் கிடைக்குமென்ற சந்தோசம். ராஜம்மாவின் முடிவை பிராமணர்கள்
ஏற்றுக்கொண்டார்கள். ஒருநாள், மூன்று
பொழுதாக பகுக்கப்பட்டது. இரண்டு பொழுது பார்ப்பான் குளக்கண்மாய்க்கு நீர் திறந்து விடப்பட்டது. கண்மாய் நிறைந்தாலும் தொடர்ந்து
பாய்ந்தது நீர். மற்ற ஏழு கண்மாய்க்கும் ஒரு பொழுது மட்டுமே நீர் பாய்கிறது.
ராஜம்மாள் மட்டும் அறிந்த உண்மையை பார்ப்பான் குளம் உணர்ந்தது. பார்ப்பான்
குளத்தின் கண்மாய் நிறைந்ததும் தண்ணீர் கூத்தியார்குண்டு கண்மாய்க்கு
ஓடியது. அதற்கு ஏற்றவாறு நிலவாகு அமைந்திருந்தது. பிராமணர்கள் வேறுவழியில்லாமல்
சகித்துக்கொண்டார்கள். ஆனால், குஞ்சரத்தம்மாளோடு
ராஜம்மாவையும் புதைத்து விடும் சதி நடந்தது. முன்னின்று நடத்தியவர் வக்கீல்
சிவானந்தய்யர். இவர் ஒரு வில்லங்கமான மனிதர். ஆகம வேத சாஸ்திரங்களை நிலைநாட்ட
கடவுள் எடுத்த அவதாரம் போல தன்னைக் காட்டிக் கொள்பவர்.
குஞ்சரத்தம்மாள் இறந்து
மூன்று ஆண்டுகள் ஆயின. தாதுப் பஞ்சத்தால் நாதியற்ற மக்களுக்கு தெய்வமானாள். அவளை
நினைக்காத மக்கள் இல்லை. விழாக்களில் நல்லதங்காள் கதைப்பாடலும், குஞ்சரத்தம்மாள் கதைப்பாடலும் பாடப்பட்டது. ராஜம்மாளின் கதையைச் சொல்லுவது
நல்லதங்காள் கதைப்பாடல். அல்லி அரசாணி, கோவலன் கதைப்பாடல்களைப் பாடுவதை விட நாதியற்றோர் தெய்வங்களின் பாடல்களையே
மக்கள் விரும்பினார்கள். பாட்டுப்பாடும் பெண்களைச் சுற்றி உருகி உருகி அழுதார்கள், மக்கள். பாடகிகள் ஏராளமான தானியங்களைப் பெற்று சென்றார்கள்.
நகர செல்வந்தர்கள் பொருமிக்கொண்டு இருந்தார்கள்.
நகரின் கிழக்குப்பகுதியில்
சிறு கோவில் கட்டப்பட்டது. கிழக்கில் நல்லதங்காளுக்கும், வடமேற்கில் குஞ்சரத்தம்மாளுக்கும் சிலை அமைக்கும் முடிவு.
சிவானந்தய்யர் களத்தில் குதித்தார். தாசிக்குலத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கோயில் எடுப்பதை சாஸ்திரம் அனுமதிக்காது.
நகருக்கே அழிவு ஏற்படுமென்று பூச்சாண்டி காட்டினார். யாரும் கண்டுகொள்வதாக இல்லை.
நாதியற்றோர் தெய்வங்களுக்குக் கோயில் கட்ட முன்னின்ற ஒருவர் இறந்தார். அவரது
இறப்பு சிவானந்தய்யரின் மிரட்டலுக்கு வலு சேர்த்தது. கோயில் எழுப்பும் பணியில்
இருந்து மக்கள் பின்வாங்கினார்கள். சிவானந்தய்யரோடு சேர்ந்துள்ள செல்வர்களின் பலம்
கூடியது.
சிற்பிகளுக்கு முன்பணம்
கிடைத்தது. சிலை வடிப்பதற்கல்ல, நாதியற்றோர்
தெய்வங்களைப் படைக்காமல் இருக்க. ஆண்டு தோறும் கதைப்பாடகிகள் ஏராளமான
தானியங்களுடனும், பணத்துடனும் செல்கிறார்கள். பாடலில் மக்களை
மகிழ்வித்ததற்காக அல்ல, நாதியற்றோர் தெய்வங்களைப் பாடாமல் இருப்பதற்காக. பிராமணியத்
தத்துவ வெறி கொண்ட பார்ப்பனியர்களும், செல்வந்தர்களும் வெற்றிக் களிப்பை கொண்டாடினார்கள். நாதியற்றோர் தெய்வங்களைப்
புதைத்து விட்டார்களாம். அவர்களுக்குத் தெரியாது, மக்களுக்காக வாழ்ந்தவர்கள் புதைவதில்லை, விதைகின்றார்கள்.
தெற்கு வெளி வீதியில்
மிகப்பெரிய வண்டிப்பேட்டையை நாடார்கள் கட்டுகிறார்கள். வண்டிப்பேட்டையின்
உள்ளீடாகக் கட்டப்படுகின்றது, நாடார்கள்
மீதான மற்ற வணிகர்களின் பகை. பிராமணர்களின் பகையை ஏற்கனவே கட்டிக்கொண்டவர்கள்
நாடார்கள் என்பதை மறக்க முடியாது. மீனாட்சியம்மன் கோவிலுக்குள் நுழைந்ததற்காக
மூப்பநாடார் மீது வழக்கு தொடரப்பட்டது. சாஸ்திர சம்பிரதாயங்களை நிலைநாட்டும்
கொள்கை உடைய சிவானந்தய்யர் ஒரு வழக்கறிஞர். மூப்பநாடாருக்கு எதிராக வாதாடி தண்டணை
பெற்றுத்தந்தார். கிணற்றில் இருந்து நீர் எடுக்கும் நாடார் பெண்கள்
சம்பிரதாயங்களுக்கு எதிராக நடக்கிறார்களாம். குடத்தை தலையில் தூக்கிச்செல்லாமல்
மேல் சாதிப் பெண்களுக்குச் சமமாக இடுப்பில் தூக்கிச் செல்வது ஆதிக்கச்
சாதிக்காரர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறதாம். இந்த நிலையில், வண்டிப்பேட்டை கட்டிமுடிக்கப்பட்டால் வணிகத்தைத்
தீர்மானிக்கும் அதிகாரம் உடையவர்களாகவும் வந்து விடுவார்கள், நாடார்கள். ஆகவே, கோபம் கொண்டுள்ள ஆதிக்க சாதி வணிகர்கள் நாடார்கள் மீதான பிராமணர்களின் பகையைப்
பயன்படுத்திக் கொள்ள முயற்சித்துள்ளனர்.
நடுநிலையான படைப்பு என்று
சொல்லப்படுவதில் விதவிதமாக முகம் காட்டியுள்ளது, சாதியம். குறிப்பிட்ட சாதியை உயர்த்திவிட்டு மற்றவற்றை
ஒடுக்கும் சிந்தனை நாவலில் வெளிப்படவில்லை. அத்தகைய நோக்கமும் நாவலாசிரியருக்கு
இல்லை. கதைநிகழும் காலக்கட்டத்தின் பல்வேறு நிகழ்வுகளை விவரித்துச்
சொல்லியிருக்கிறார். இந்த விவரிப்புகளில் சாதியம் பற்றிய பதிவுகள் இயல்பாக
வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நாவலாசிரியரின் எழுத்துகளில் பிராமணிய எதிர்ப்பு
மட்டுமே பிரகாசிக்கிறது.
உண்மையை சொல்லியுள்ளீர்கள். இதற்கு மாறாக தேவர் சாதி பெருமை பேசும் நாவல் என்ற விமர்சனம் இந்நாவலுக்கு உண்டு. எழுத்து வடிவில் படித்ததில்லை. சொல்லிக் கேட்டதுண்டு. ஆனால் எனக்கு இதில் உடன்பாடில்லை. உங்களின் ஆய்வின் இறுதியில் உள்ள விமர்சனம் சரியானதே!
ReplyDeleteநல்லது தோழர்
ReplyDelete