Friday, May 22, 2026

சாதிப்பித்து

 

சாதிப்பித்து

முனைவர் புதியவன்


 உங்களுக்கு எந்த வயதில் சாதியை பற்றி தெரிந்தது? 

எப்படி புரிந்து கொண்டீர்கள்? 

சாதியை நீங்கள் புரிந்து கொண்ட முறையை விளக்க முடியுமா?

          இப்படித்தான் உரையாடலைத் தொடங்கினேன். பல கதைகளை நினைவுகளில் இருந்து அவிழ்த்து விட்டார்கள். பல காட்சிகள் உதயமாகின. 

 

வண்ணார் வீட்டில்தான் குடியிருந்தோம். ஆனால் விறகு விற்பார்கள். ஆறு குடிகள் ஒருங்கிணைந்த வளாகம். வேறு வேறு சாதிதான். எங்களுக்கு சாதி தேவைப்படல. ஆறு குடியும் பொது காசு போட்டு குடம் வாங்குவோம். சமையலுக்கும் புழக்கத்துக்கும் ஒரே கிணத்துத்தண்ணிதான் ஆறு வீட்டுக்கும். நாடார் வீட்டுல சாம்பார் சோறு உருட்டி உருட்டி தருவாங்க. சோறு ருசிக்கும். அண்ணன் தங்கச்சிங்களா சேர்ந்து விளையாடுவோம்.

கிட்டி குண்டு பந்து எல்லாமே சேர்ந்து விளையாடிருக்கோம். சௌராஷ்ட்ரா  பள்ளியில் படித்தேன். வேறு வேறு சாதிகள்தான். யாரு எந்த சாதினு தெரியாமலே பழகுவோம். அஞ்சு பைசாவுக்கு பெருநேல்லிக்காய் வாங்கி ஆளாளுக்கு கடிப்போம். ஒரே நெல்லிக்காய் எல்லார் எச்சில் பட்டாலும் தண்ணி குடிச்சா இனிக்கும். எங்களுக்கு இனிப்புதான் தெரியும், சாதி தெரியாது.    தாவணில சுத்தி கடாப்பல்லில் கடிப்போம். உடைபடும் மிட்டாய்  எல்லாருக்கும் ருசிக்கும். சாதி எங்களுக்கு வெளியே இருந்துருக்கு. நான்கு கண்டுக்கிட்டதில்ல என்று சிரித்த சின்ன மாமியை எப்படி இயப்பது!

 

எங்களுக்கு சாதின்னா என்னன்னு இப்ப வரைக்கும் புரியல என்கிறார்கள் இளம் ஆசிரியர்கள். ஒற்றுமையாக வாழ்வதற்கு எதிரானது என்று மட்டும் புரியுது. அதனால எங்களுக்கு பிடிக்காது. அத தெரிஞ்சுக்கவே விரும்பல. எங்களுக்கு அது தேவைப்படல என்று முடித்துக் கொண்டார்கள்.

 

என் கூட படிச்சவனை பெயர் சொல்லி கூப்பிட கூடாதுன்னு சொன்னார்கள். அவன் எங்க ஐயாவை வாடா  போடான்னு கூப்பிடுறான். கோபத்துல அடிச்சேன். எங்க ஐயா எனக்காக ஊர்க்காரங்க காலில் விழுந்துச்சு. எனக்கு இப்படித்தான் அஞ்சாவது படிக்கும்போது சாதி புரிய வந்தது என்கிறார் செங்கோட்டை ரயில்வே துறை ஊழியர்.

 

நேத்து சாயங்காலம் திண்ணையில் பேசிட்டிருந்தோம். காதல் விவகாரம். இன்னைக்கு கல்லூரிக்கு வரல. சாயந்திரம் பார்க்க அவள் இல்ல. வீட்டிலேயே எரிச்சு கொன்னுட்டாங்கண்ணா. எல்லாருக்கும் தெரியும். யாரும் பேச மாட்டேங்கிறாங்கண்ணா.     எனக்கு கத்தி பேசணும்னு தோனுது என்கிறார் புதுச்சேரி கல்லூரியில் படிக்கும் ஆய்வு மாணவி.

 

பெரும்பாலான இளைஞர்கள் பள்ளி கல்லூரி படிக்கும் காலங்களில்தான் புரிந்ததாகச் சொல்கிறார்கள். பத்தாவது படிக்கும்போது கட்சிக்கொடி, சாதிக்கயிறு, இந்த சாதிக்காரன், அந்த சாதிக்காரன் என்று நண்பர்கள் பேசிக்கொள்ளும்போது புரிய வந்தது. வீட்லயும் சொல்லி சொல்லி பழக்கப் படுத்திட்டாங்க. அவங்க வேற ஆளுங்க, நம்ம உசந்த ஆளுங்க, இவங்க குறசாதிங்க இப்படி வீட்டுப் பெரியவர்கள் பேசுவதைக் கேட்டு கேட்டு புரிய வந்தது.

 

பள்ளிக்கூடத்துல சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு சலுகைகள் போன்ற நடைமுறைகளைப் பார்த்து தெரிந்தது. பல பள்ளிகளின் பெயர்களே சாதி பெயராக இருப்பதைப் பார்க்கும்போது புரியுது.

சாதி வெறியர்களால் காதலர்கள் கொலை செய்யப்பட்ட வீடியோக்களைப் பார்த்து இதுதான் சாதின்னு புரிஞ்சது. 

          எங்க வீட்டுக்குள்ள அவங்கள விட மாட்டாங்க. சாப்பாடு மட்டும் போட்டு அனுப்புவாங்க. நாங்க அவங்க வீட்டுக்குள்ள தாராளமாக போகலாம். ஆனால் சாப்பிட மாட்டோம். இப்படித்தான் கீழ் சாதி மேல் சாதி பிரிவுகள் இயல்பா புரிஞ்சது. 

          எங்க கிராமத்துல இந்தந்த சாதிங்க இந்தந்த வேலைகளைச் செய்வாங்கன்னு தாத்தா சொல்லுவாரு. வேலை பிரிவுகள்தான் சாதியானதுன்னு புரிஞ்சது.

உரையாடலில் ஈடுபட்ட பலரும் வேலை பிரிவுகளைச் சாதிகளாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். 

திருமணம், காதல், பழக்க வழக்கங்கள், உணவு,  மொழி, உடை போன்ற பிரிவுகளைத்தான் சாதிகள் என்பதாகப் புரிந்தவர்கள் சிலர். 

          பள்ளிப் பாடங்களின் வழியாக பெயரளவில் மட்டும் சாதியைப் புரிந்தவர்கள் சிலர். 

          நிறத்தின் அடிப்படையில் சாதியைப் புரிந்தவர்கள் மிகச் சொற்பம். 

சாதிக்கட்சி, சாதிச் சங்கம், குடும்பங்களில் சாதி பெயர் பயன்பாடுகள், சடங்கு சம்பிரதாயங்கள், ஆணவ படுகொலைகள், வன்முறைகள், ஒதுக்கப்படுதல், ஒடுக்குமுறைகள் போன்ற நடைமுறை நிகழ்வுகளில் உள்ள மக்களின் பிரிவு முறைகளும் வேறுபாடுகளும் முரண்பாடுகளும் சாதிகள் என்று உணர்ந்துள்ளவர்களே பெரும்பான்மையினர்.

 

நாம் சந்தித்து பேசிய மனிதர்கள் எல்லோரிடமும் இறுதியாகக் கேட்கப்பட்ட கேள்வி இதுதான். 

 நீங்களும் உங்கள் அடுத்த தலைமுறைகளும் உலகில் வாழ்வதற்கு சாதி தேவைப்பட வேண்டும் என்று கருதுகிறீர்களா?

          மிகப் பெரும்பான்மையானவர்கள் தேவைப்படக்கூடாது என்பதாகவே பதில் கூறினார்கள். 

          எல்லா மனிதர்களும் சமத்துவத்துடன் வாழ வேண்டும் என்பதையே விரும்புகிறார்கள்.

 

 என் கேள்வி. விரும்பினால் மட்டும் சமத்துவம் வந்துவிடுமா?

 சாதியே போ போ என்று மந்திரம் சொன்னால் சாதியை ஒழித்து விட முடியுமா? நோய் நாடி நோய்முதல் நாடி. சாதியின் வேர் எங்கே தொடங்கியது என்பதை அறிந்தால் மட்டுமே நம் தலைமுறைகளை சாதி என்று சமூக மனநோயிலிருந்து குணப்படுத்த முடியும் என்று முடித்துக் கொண்டேன்.

 

ஒரு மாணவர் மட்டும் சாதி எப்படி வந்தது என்று ஆர்வத்துடன் சாதியின் வேரைத்தேடி உரையாட முன்வந்தார். நான் அவருக்கு விளக்க முயன்றேன்.

 

சாதி உருவான வரலாறு பற்றி பல அறிஞர்கள் பலவிதமாக கூறியுள்ளார்கள். அண்ணல் அம்பேத்கர், ஆபேதுபே, சரத்பட்டில், கெயில்ஓம்வெத், மார்ட்டின் கிளாசு, லூயி தூ மாண்டின், தீபங்கர் குப்தா, அனலபாபாசு(PANS), தந்தை பெரியார், கே.சேதுராமன், கேட்ரக், அ. மார்க்ஸ், குணா,  கோ. கேசவன், எம். என். சீனிவாசன், ம. சோ. விக்டர், பக்தவத்சல பாரதி போன்ற அறிஞர்களின் விளக்கங்களை எல்லாம் நீங்கள் படித்து புரிந்து கொள்ள முயலலாம் என்றேன்.

 

          நீங்கள் படித்துப் புரிந்து கொண்டீர்களா என்று சட்டென்று கேட்டார் அந்த மாணவர். ஒரு மாணவர் தன் ஆசிரியரை நேரடியாக இப்படி கேட்டால் என்னாவது! வழக்கமாக நெஞ்சு வலி வரும். நான் தப்பித்துக் கொண்டேன். உண்மையிலேயே அவர்களின் கருத்துக்களைப் படித்து புரிந்து கொண்டிருந்தேன். எனது நம்பிக்கையான பதிலை தொடர்ந்து அந்த மாணவர் கேட்டார். நீங்களே சொல்லுங்கள் ஐயா, நான் பிறகு படித்துக் கொள்கிறேன். நான் சாதி உருவான கதையைச் சொல்லத் துவங்கினேன். அறிஞர்களின் விளக்கங்களை வியாக்கியானம் செய்யவில்லை. நேரடியாக இந்தியாவில் சாதிகளின் சதி என்ற கட்டுரையை விவரிக்க தொடங்கினேன்.

 

மனித வரலாற்றுப் பின்னணியிலிருந்து  சாதியின் கதையை அறிய முயல்வோம்.

தமிழ்ச் சான்றோர்களின் வாழ்க்கை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்திணைகளாக விளக்கம் பெறுகின்றன. இலக்கிய அறிவியல் விளக்கும் சமூகப் பொருளுற்பத்திக் கருவிகளின் வளர்ச்சிநிலை அடிப்படையில் மனித வரலாற்றுப் படிநிலை எட்டு நிலைகளாக விளக்கம் பெறுகின்றது.

1.காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)

2.வேட்டை நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)

3.கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)

4.விவசாய நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)

5.உற்பத்தியின் மீதான வணிக நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)

6.வணிக இலாபத்திற்காக உற்பத்தி செய்தல் (தந்தை அதிகார சமூகம்)

7.நிதி மூலதனப் பிரிவு தோன்றி சமூகஉற்பத்தி மீது ஆதிக்கம்  செய்தல் (தந்தை அதிகார சமூகம்)

8.மக்கள் தலைமையின் கீழ் சமூகஉற்பத்தியைக் கட்டமைத்தல் (ஏற்றத்தாழ்வு மதிப்பிழந்த சமூகம்)

 

        மனித வரலாற்று படிநிலையில் திணைகளை விளக்குவதெனில்,

 குறிஞ்சி – காடு சார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகம், வேட்டை நாகரிகம் (1,2, சமூகக் கட்டம்).

நெய்தல் – வேட்டை நாகரிகத்திலிருந்து கடல் சார் பொருள் சேகரிப்பு நாகரிகமாகும்.(2 ம் சமூகக் கட்டம்)

முல்லை – கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம் (3 ம் சமூகக் கட்டம்)

மருதம் – விவசாய நாகரிகம் (4 ம் சமூகக் கட்டம்)

பாலை – குறிஞ்சி, முல்லை, மருதத் திணைகளின் வறட்சி நிலை

சங்க இலக்கியங்களில் வெளிப்படும் வணிக வாழ்வியலும், வள்ளுவர் உணர்த்தும் வாணிக வாழ்வியலும், காப்பியங்கள் காட்டும் வாணிக வாழ்வியலும், பிற நாட்டார் குறிப்புகளும், தொல்லியல் சான்றுகளும் தொல் தமிழர் வாழ்வியலானது உற்பத்தி மீதான வணிக நாகரிகத்தில் செழித்திருந்தது என்பதை மறுக்க முடியாதபடி பறைசாற்றுகின்றன. தொல் தமிழர்களின் கடல் வாணிகங்களும் துறைமுக நகரங்களும் இலக்கிய ஆவணங்களும் ஒப்பற்ற சான்றுகளாகவே திகழ்கின்றன.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனும் கணியன் பூங்குன்றனாரின் சிந்தனையும்

“காணாது ஈத்த இப்பொருட்கு யானோர்

வாணிகப் பரிசிலன் அல்லேன்” எனும் பெருஞ்சித்திரனாரின் விமர்சனமும்

 

“தமவும் பிறவும் ஒப்ப நாடிக்

கொள்வதூஉம் மிகை கொள்ளாது

கொடுப்பதூஉம் குறைபடாது” எனும் பட்டினப்பாலை வரிகளும்

“பொன்னொடு வந்து கறியொடு பெயரும்

வளம் கெழு முசிறி..” எனும் அகநானூறு 149ம் பாடல் வரிகளும்

“வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி

பிறவும் தம்போற் செயின்” எனும் 120ம் திருக்குறளும் வணிக சமூகத்தின் வளர்ச்சியை விளக்குகின்றன.

காப்பியக் கதைகளில் சிலப்பதிகாரம் வணிக வர்க்கத்தின் நீதியைப் பேசுகிறது. அரசனைவிட சொத்தாதிக்கம் உடைய வணிக பரம்பரையைச் சார்ந்த கோவலன் மாதவியை வாங்கிக்கொள்கின்ற செல்வந்தனாக திகழ்கிறான்.

”ஐயா மாதவியும் கோவலனும் காதலர்கள். ஒரு பொருளை வாங்குவதைப்போல எப்படி காதலை வாங்க முடியும்.”

அவர்கள் காதலர்களல்ல. மாதவியின் விலை அவள் கழுத்தில் அணிந்துள்ள மாலையின் விலை. கோவலன் ஆயிரத்தெட்டுக் கழஞ்சு பொன்னை விலையாகக் கொடுத்து மாதவியை உரிமையாக்கினான். விலை கொடுத்து வாங்கியவரை காதலர் என்பதா அடிமை என்பதா?

“விலை கொடுத்து வாங்குவது காதலாக இருக்க முடியாதுங்க ஐயா”

 அரசனால் வாங்க முடியாத மாதவியை கோவலன் வாங்கினான் என்பது மட்டுமல்ல, அரசியிடம் இல்லாத மாணிக்கப்பரல்களால் உருவான சிலம்பை கண்ணகி அணிந்திருக்கிறாள். அரசனைவிட செல்வாக்கு பெற்ற வர்க்கமாக வணிக வர்க்கம் சிலப்பதிகாரத்தில் அறியப்படுகின்றது.

கழுவேற்றி கொல்லப்படும் சூழலிலிருந்த கள்வனை செல்வந்தரான வணிகன் காப்பாற்றுகிறான். தன் மகளின் விருப்பத்திற்காக அரசனிடம் பேரம் பேசுகிறான்.

“ஐயா இது நீலகேசி காப்பியம்தானே.”

இல்லை இல்லை இது குண்டலகேசி.

கள்வனின் எடைக்கு சமமாக தங்க நகைகளையும் 81 யானைகளையும் கொடுத்து மீட்கிறான் அந்த வணிகன். இந்தத் தகவலை அறியும்போது சமகால நிதி மூலதன இலாபவெறி சூழலில் அதானியிடம் மோடி பணிவதைப் போன்ற ஓர் சூழலை உணர முடிகின்றது. அந்தளவிற்கு தொல் தமிழர் வரலாற்றில் வணிகர்களின் செல்வாக்கு செழித்திருந்ததை அறிய முடிகின்றது.

உற்பத்தி மீதான வணிக நாகரிகத்தின் இத்தகைய செல்வாக்கை அவதானித்தால் உலக வரலாற்றில் முதலாளித்துவத்தின் பிறப்பு தமிழகத்தில்தான் முதல்கட்டமாகத் தொடங்கியிருக்க வேண்டும். ஐரோப்பிய வணிகர்களின் இலாபவெறி பயணங்கள்வரை வரலாறு காத்திருந்திருக்க அவசியம் இருந்திருக்காது. அறிவியல் தொழில்நுட்ப உருவாக்கங்களுக்குத் தேவையான பிரமாண்டமான கற்பனைகளையெல்லாம் தமிழ் இலக்கியங்கள் கட்டமைத்திருந்தன.

நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் என்று தொல்காப்பியத்தின் அறிவியல் தத்துவப் பிரபஞ்சக் கண்ணோட்டம் முதல்  வானில் பறக்கும் விமானத்திற்கு அடித்தள கற்பனைகளை வழங்கிய சிலப்பதிகாரம்,  சீவக சிந்தாமணி போன்ற இலக்கியங்கள்வரை, வணிகர்களின் செல்வாக்கானது இலாபவெறி முதலாளித்துவமாகப் பரிணமித்திருக்க முடியும் என்பதையே உணர்த்துகின்றன.

“ஐயா சங்க இலக்கியமும் உலகத்தை ஐம்பூதத்து இயற்கை என்று பாடிருக்குங்கய்யா”

ஆமாம் புறநானூற்றில் முடிநாகராயர் பாடியுள்ளார்.

“அந்தப் பாடல் எதுங்க ஐயா?”

மண் திணிந்த நிலனும்

நிலன் ஏந்திய விசும்பும்

விசும்பு தைவரு வளியும்

வளித் தலைஇய தீயும்

தீ முரணிய நீரும் என்றாங்கு

ஐம்பெரும் பூதத்து இயற்கை”

“ஆமாங்க ஐயா, அற்புதமான வியக்கத்தக்க பாடல் ஐயா”

 தமிழர்களின் இத்தகைய அறிவியல் தத்துவக் கண்ணோட்டமும் தொழில்நுட்ப அறிவும் சமூகப் பொருளுற்பத்தியை முதலாளித்துவமாக உருமாற்றியிருக்க முடியும். இத்தகைய உருமாற்றத்தைத் தமிழ்ச் சமூகத்தில் தடுத்து உலக வரலாற்றில் முதலாளித்துவம் வளர ஐரோப்பியர்களின் வணிக பயணங்களுக்காக பல நூற்றாண்டுகள்வரை காத்திருக்கும் நிலையை ஏற்படுத்தியது அசாத்தியமான வரலாறாகும். தமிழர்களின் அறிவுத் திறன்களையும் கல்வி முதிர்ச்சியையும் தடுத்து இத்தகைய  அசாத்தியத்தைச் சாத்தியப்படுத்தியது இந்தியாவில் சாதிகளின் சதிதான்.

 

இக்காலங்களில் தமிழர்களின் கல்வி சான்றாண்மைக்கு தடை இருந்ததை அறியமுடிகின்றது. முதல் தடை பெண்கல்வியாகத்தான் விளக்கம் பெறுகின்றது. முல்லைத் திணையில் கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம் சொத்தாதிக்கமாக உயிர் பெற்று தந்தையதிகாரமாக நிலை பெற்றதும் தாய்தலைமை சமூகம் முடங்கியது. பெண்கள் சகமனித நிலையிலிருந்து ஆணின் சொத்தாக உருமாற்றப்படுகிறாள். பாலுறவு உரிமைகளைக் கைவிட்டு உரிமையுடைய ஆணின் வருகைக்காக காத்திருக்கின்ற உடைமை பொருளாகிறாள். காத்திருப்பதை கற்பதுதான் பெண்ணிற்கான கல்வியாகிறது. பெண் கற்பிற்கு உரியவளாகிறாள்.

“கற்பு எனப்படுவது கரணமொடு புணர

கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியை

கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே” (தொல்.கற்.1)

கொடுக்கப்படும் பொருளாகவும் பெற்றுக்கொள்ளும் பொருளாகவும் பெண் உடைமைப் பொருள் நிலைமைக்குத் தள்ளப்படுகிறாள். சகமனிதப் பண்பிலிருந்து படிப்படியாக இறக்கப்பட்ட அடிமைப் பொருளுக்குச் சிந்திக்கும் உரிமையும் கல்வி உரிமையும் மறுக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால்தான் சங்க இலக்கியத்திற்குப் பிறகு பெண்பால் புலவர்கள் படிப்படியாக காணாமல் போய்விட்டார்கள்.

காப்பியங்களில் பெண்கள் புலமையோடும் அறிவுத்திறமுடனும் வாழ்ந்ததாக கதைகள் இருக்கின்றன. ஆனால், அறிவுத்திறன் போற்றும் காப்பியங்களைப் பெண்கள் படைத்திருக்கவில்லை. சாதி சனாதன நான்கு வர்ண அடுக்கு இறுக்கம் பெறும்வரை பெண்களின் அறிவு மீது மீப்பெரும் வன்முறை நிகழ்ந்ததாக தெரியவில்லை. சாதி சனாதன நான்கு வர்ண அடுக்கு நிலை நம் பண்பாடாக நிலை பெற்ற காலத்தில்தான் தமிழச் சமூகத்தின் கல்வி மீது சாதியின் பெயரில் மீப்பெரும் வன்முறைகள் நிகழ்ந்துள்ளன.

“ஐயா நம்ம சாதியைப் பற்றி பேசிட்டிருக்கோம்னு புரியுது. ஆனால் சனாதன நான்கு வர்ண அடுக்கு நிலைன்னு சொல்றீங்களே அது என்ன?”

உங்க பெயரை கவின் என்று எல்லாரும் கூப்பிடுறாங்க. ஆனால் உங்களது முழுப்பெயர் கவிநிலவன்தானே. அதுபோல சாதி என்பதைச் சுருக்கப் பெயராகவும் உங்க கேள்வியை முழுப்பெயராகவும் தற்போது புரிந்துகொள்ளுங்கள். பின்னால் விளக்குகிறேன்.

“சரிங்க ஐயா”

உங்கள் வரலாற்றுப் பாடத்தில் ஆரியர்களைப் பற்றி படித்துள்ளதை நினைத்துப் பாருங்கள். கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் வந்த ஆரியர்கள்தான் சாதியை உருவாக்கித் தந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

“ஓரளவு கேள்விப்பட்ட தகவல்தான் ஐயா.”

சங்க இலக்கியங்களில் சாதிய அடுக்கு நிலைகள் இல்லை. தொல்காப்பியத்தின் மரபியல் உணர்த்தும் சாதி வர்ணப் அடுக்கு நிலைகள் இடைசெருகல் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. அம்பேத்கர் விளக்கப்படி ஆரியத் தொல்குடிகளிடமிருந்து சாதிப்படிநிலை பண்பாடாகக் கிளர்ந்தது என உணர முடிகின்றது. ஆனால் ஆரியர்கள் தொல்குடிகள் என்ற கூற்று மட்டும் முரணாக அமைகின்றது.

சிந்து வெளி நாகரிகம் முதல் பொருந்தல், கொடுமணல், கீழடி அகழாய்வு மற்றும் மரபணு ஆய்வுவரை அனைத்தும் இந்திய வாழ்வியலில் இடையில் நுழைந்தவர்களே ஆரியர்கள் என்பதை நிரூபித்திருக்கின்றன. ஆரியர்களின் சமஸ்கிருதம் இந்திய தாய்மொழிகளில் இடம்பெறாத அந்நிய மொழியென்பதும் மற்றொரு ஆதாரமாகும்.

ஆரியர்கள் கைபர் போலன் கணவாய் வழியாக கால்நடைகளை மேய்த்து வந்தபோது தமிழர்தம் தாய்மடியான இயற்கை வளங்களை அழித்து வேள்விகளை நிகழ்த்தினார்கள். காடுசார்ந்த பொருள் சேகரிப்பிலும் வேட்டையிலும் ஈடுபட்டு வாழ்ந்த குறிஞ்சித்திணை மக்கள் ஆரியர்களின் வேள்வியை எதிர்த்து போரிட்டார்கள். ஏராளமான பழங்குடி மன்னர்கள் ஆரியர்களின் பேரழிவு வன்முறைகளால் கொல்லப்பட்டார்கள்.

குறிஞ்சித்திணையின் எளிமையான பழங்குடிகளைப் போல் அல்லாமல் கால்நடை மந்தைகளைப் பராமரித்து சொத்தாதிக்கம் செழித்திருந்த முல்லைத்திணை மக்கள் ஆற்றலுடன் எதிர்த்தார்கள். ஓரிடம் நிலைத்து வாழ்கின்ற விவசாய நாகரிகத்தின் மருதநில மக்களும் எதிர்த்தார்கள். ஒட்டுமொத்தமாக தமிழ்ச் சமூகம் ஆரியர்களை எதிர்த்து போரிட்டு விரட்டியுள்ளது.

“ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்

பலர் உடன் கழித்த வாள் மலையனது

ஒரு வேற்கு ஓடியாங்கு” நற்.170

தலைவி மட்டுமல்ல எந்தப் பெண்ணும் ஆடல் மங்கை விறலிக்கு ஈடுகொடுக்க முடியாது. மலையன் என்ற அரசனின் ஒரு வேலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆரியர்கள் சிதறி ஓடியதைப்போல விறலியின் பேரழகு முன்பு அனைத்துப் பெண்களும் ஓடும் நிலையாகிவிடும். இப்பாடலில் விரட்டப்பட்ட ஆரியர்கள் உவமையாக இடம்பெறுகிறார்கள்.

“ஆரியர் கயிறு ஆடு பறையின்

கால் பொறக் கலங்கி..” – குறு.7

ஆரியர்கள் தம் பிழைப்பிற்காக கயிற்றில் ஏறி ஆடிப் பயில்கின்ற காட்டின் வழியே தலைவியும் தலைவனும்  உடன்போகிறார்களே என்று கண்டவர் வருந்துகிறார்கள். இப்பாடலில் அரசர்களால் விரட்டப்பட்ட ஆரியர்கள் பிழைப்பிற்காக காடுகளில்  வித்தை பயில்கின்ற நிலையை அறிய முடிகின்றது.

“தாரும் தானையும் பற்றி ஆரியர்

பிடி பயின்று தரூஉம் பெருங்களிறு போல”-அ.நா.336

அரசர்களிடம் தோல்வி கண்ட ஆரியர்கள் பிழைக்க வழியின்றி யானைகளைப் புகழ்பட வளர்த்த தமிழ் மக்களிடம் யானை பராமரிப்பாளர்களாக பிழைத்த வரலாறை அறிய முடிகின்றது. இப்படியாக ஏராளமான பதிவுகள் சங்க இலக்கியங்களில் கிடைக்கின்றன.

சக்தியற்ற ஆரியர்கள் புத்தியைத் தீட்டிக்கொள்ள கடமைப்பட்டார்கள். மோதல்களைத் தவிர்த்துக்கொண்டு தனியாக ஒதுங்கி வாழ்ந்தார்கள். தமிழ்ச் சமூகத்தில் நிலவிய சந்தைகளில் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு தமிழ் இனத்திற்கு அடிப்படையான திராவிடப் பண்பாட்டைக் கற்றார்கள்.

ஆரியர்களிடம் பரிதாபப்பட்ட திராவிடர்கள் அவர்களின் சடங்கு சம்பிரதாயங்களைப் பயன்படுத்துவது, நட்பு பாராட்டுவது போன்ற அணுகுமுறைகளால் திராவிட மண்ணில் ஆரியர்களின் வாழ்வை இயல்பாக்கினார்கள். திராவிடர்கள் கீழ்நிலையிலிருந்த ஆரியர்களைத் தங்கள் தோழர்களாக ஏற்றுக்கொண்ட நிலைக்கு மாறியிருந்தார்கள் என்பதற்கும் சங்க இலக்கிம் சான்று தருகின்றது.

“பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே! என்ற குறுந்தொகை 156வது பாடலில் தண்டு கமண்டலம் ஆகியவற்றைக் கையில் வைத்துக்கொண்டு நோன்பு இயற்றும் பார்ப்பன மகனே எழுதப்படாத உன் வேத கல்வியில் பிரிந்த காதலரை சேர்த்துவைக்க மருந்துள்ளதா என்று தலைவன் ஆரியத் தோழனிடனம் கேட்கிறான்.

திராவிடச் சமூகத்தின் தோழமைப் பண்பை ஆரியர்கள் படிப்படியாகப் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

ஆரியர்களின் பொருள், உலகம், ஞானம் பற்றிய தேடல்களுக்கு சவாலாக இருந்த திராவிட சமூகத்தை ஆரியர்கள் கற்றார்கள். அவர்கள் கற்றுணர்ந்தவரை நிலத்தை ஆள்பவனே அரசனாக இருந்தான். நிலப்பிரபுக்களது அதிகாரத்தில் அரசு இருந்தது. அதிகாரத்தில் பங்கேற்க செல்வாக்கு மிகுந்த வணிகர்கள் முயற்சி செய்துகொண்டு இருந்தார்கள். இருவருக்கும் இடையில் அரசு திணறிக்கொண்டு இருந்தது. இந்த அரச திணறல் என்ற பிரச்சனைகளுக்கு இடையில்தான் திராவிட சமூக மக்களின் வாழ்க்கை மூழ்கிக் கிடந்தது.

இழுபறிக்கு இடையில் திணறிக்கொண்டிருக்கும் அரசர்களுக்கு ஆட்சியை எப்படி நிலைபடுத்துவது என்பதே பிரச்சனையாக இருந்தது. இந்தப் பிரச்சனைகளின் வழியாக திராவிட சமூகத்தில் நீந்துவதற்கு ஆரியர்கள் துணிந்துவிட்டார்கள். இழுபறியில் இருந்த அரச அதிகாரத்தை தமக்கு பணியவைக்க ஒரு கோட்பாட்டை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.

புரியாத சமஸ்கிருத மந்திரங்களால் நெருப்பை வணங்கும் ஆரியர்களின் பண்பாட்டை திராவிடர்களும் விநோதமாகவே கவனித்து வந்தார்கள். ஆரியர்களைப் பற்றிய மந்திரவாதிக் கதைகளை நாளெல்லாம் பேசிக்கொண்டு வந்தார்கள். பல தலைமுறைகளாக திராவிட ஆரிய சமரசம் நிகழ்ந்துகொண்டு இருந்தது. ஆரியர்களின் புதிரான சடங்கு சம்பிரதாயங்களை விருப்பப்பட்ட திராவிடர்களில் சிலர் நடைமுறையில் பயன்படுத்திக்கொள்ளப் பழகியிருந்தார்கள். ஆரியர்களின் வெற்றிக்காலம் நெருங்கத் தொடங்கியது. அவர்கள் திராவிட சமூகப் பாதையில் தங்களுக்கான  வழியை ஏற்படுத்தும் வித்தையைக் கண்டறிந்தார்கள். அதுதான் வர்ணாசிரமப் அடுக்குநிலை என்கின்ற நான்கு வர்ணக் கோட்பாடு.

அவர்கள் கணக்குப்படி திராவிட மக்களை நான்காகப் பிரித்தார்கள். வேடிக்கை என்னவென்றால் அந்த நான்கில் அவர்களும் இருக்கிறார்கள். பல தலைமுறைகளாக திராவிடப் பண்பாட்டைக் கற்ற சிந்தனை உழைப்பினால் இந்த உரிமையை எடுத்துக்கொண்டார்கள். 1.அரசன், 2.வணிகன், 3.நிலஅடிமைகள் உள்ளடங்கிய பிற மக்கள். இந்த மூன்று பிரிவிற்கும் தலைமையாக ஆரியர்கள் இருப்பதாகக் கோட்பாட்டை உருவாக்கினார்கள். தலைமை என்றால் அரசனின் ஆட்சிக்கு தலைமை என்ற பொருளில் உணர முடியாதவாறு விளக்கினார்கள். உழைக்காமல் செல்வங்களை அனுபவிக்க வேண்டும் என்ற கொள்கையில் தெளிவாக இருந்தார்கள். ஏனெனில், அவர்கள் அடைய வேண்டிய பொருளாதார முன்னேற்றங்களை திராவிட சமூகம் கண்டு கரை தேர்ந்திருக்கிறது. இவற்றை நோகாமல் அனுபவிப்பதற்கான முயற்சி மட்டுமே அவர்களுக்கு சவாலாக இருந்தது.

திராவிடன் கத்தியைத் தீட்டியபோது ஆரியன் புத்தியைத் தீட்டினான்! என்ற பழமொழி இத்தகைய சவாலை இன்றும் நினைவுகொள்கின்றது. அவர்கள் பல்வேறு கூட்டு முயற்சியால் இந்தக் கோட்பாட்டை மெருகேற்றினார்கள். அரசர்கள் ஏற்கும்படி இந்தக் கோட்பாட்டை உறுதிபடுத்தினார்கள்.

அவர்கள் நான்கு வர்ணக் கோட்பாட்டை கடவுளின் பெயரால் விளக்கத் தொடங்கினார்கள். இக்கோட்பாடு பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வைச் சமூகத்தகுதியாகத் தீர்மானிக்கிறது. பிறப்பின் தகுதிக்கு ஏற்ப ஒருவரின் சமூக உழைப்பைத் தீர்மானிக்கிறது.

அவர்களின் விளக்கப்படி ஆரியர்கள் தங்களை பிரம்மமாகிய கடவுளுக்கு உரியவர்கள் என்பதாக விளக்குகிறார்கள். பிரம்மம் என்றால் கடவுள். கடவுள் உலகைப் படைத்துக் காக்கின்றார். உலகப் பொருட்கள் அனைத்தும் கடவுள் தீர்மானித்தபடி இயங்குகின்றன. உலகை இயக்குகின்ற  கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்படுகிறார். மந்திரங்கள் சமஸ்கிருத வேதங்களுக்கு கட்டுப்படுகின்றன. சமஸ்கிருத வேதங்கள் சமஸ்கிருத மொழி பேசும் எங்களுக்குக் கட்டுப்படுபவை. எனவே நாங்கள் கடவுளின் மொழியால் கடவுளர்களுடன் உறவு கொண்டிருப்பவர்கள்.

கடவுளர்களை பிரம்மம் என்பதால் பிரம்மத்திற்கு உரிய தங்களை பிராமணர்கள் என்று விளக்குகிறார்கள். இதனை ரிக்வேத வசனத்தின்மூலம் அறியலாம்.

_தெய்வாதீனம் ஜகத் சர்வம்

மந்த்ராதீனம் துதெய்வதம்

தன்மந்த்ரம் பிரம்மணாதீனம்

தஸ்மத் பிரம்மணம் பிரபு ஜெயத்.

இந்த சமஸ்கிருத சுலோகத்தின் அர்த்தம்:

"இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை எனவே பிராமணனே கடவுள்! அவனைத் தொழவேண்டும்." (ரிக் வேதம்.62:20)

 

வேள்வி செய்வதும், குலச் சடங்குகள் செய்வதும், ஆகம விதிப்படி கோயில் அமைப்பதும், தவம் செய்வதும், தானம் பெறுவதும், தர்மங்களைக் கற்றுக்கொடுப்பதும் பிராமணர்களின் கடமைகளாக கடவுளால் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று விளக்குகிறார்கள். பிராமணர்கள் தங்களது நான்கு வர்ண அடுக்குநிலையில் உச்சத்திலுள்ள முதல் அடுக்கில் பாதுகாப்பாக அமர்ந்துகொள்கிறார்கள். பிராமணர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக தங்களைப் பற்றி எத்தகைய கருத்தாக்கங்களையெல்லாம் செய்திருக்கிறார்கள் தெரியுமா?

_அறிவாளியாக இருந்தாலும் மூடனாக இருந்தாலும் பிராமணனே மேலான தெய்வம் (மனுநூல் 9:317)._

 

_ஒளியுள்ள தீ மயானத்தில் பிணத்தை எரித்தாலும், நிந்தனை இல்லாமல் எப்படி வேள்வியில் வளர்க்கப்படுகிறதோ அப்படியே பிராமணன் கெட்ட செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் வணங்கத்தக்கவன்; மேலானவன் (மனுநூல் 9:318)._

 

_பிறப்பினால் உயர்ந்த இடத்திலிருந்து தோன்றியதாலும், உயர்ந்த குலத்தாலும், வேதங்களை பிழையறக் கற்றுணர்ந்த அறிவினாலும், பூணூல் அணிந்துள்ள சிறப்பினாலும் பிராமணன் அனைத்து வருணத்தாருக்கும் தலைவனாக உள்ளான் (மனுநூல் 10:3)._

_பிராமணன் தன் குலத்தொழிலை செய்யமுடியாவிட்டால் க்ஷத்திரியனுக்குரிய தொழிலை செய்து பிழைத்துக்கொள்ளலாம். இதுதான் அவனுக்குரிய அடுத்த குலத்தொழில் ஆகும். பிராமணன் தன் குலத்தொழில், க்ஷத்திரியருக்குரிய தொழில், ஆகியவற்றைச் செய்ய முடியாவிட்டால், வைஷ்யனுக்குரிய வாணிபம் செய்தும், உழுது பயிரிட்டும், கால்நடைகளை மேய்த்தும் வாழ்க்கையை நடத்தலாம். (மனுநூல் 10:81,82)_

 

பிராமணர்கள்* மட்டும்தான் ஆன்மீக பணிசெய்யவேண்டும். அவர்கள் மட்டும்தான் கல்வி கற்பிக்கும் வேலை செய்யமுடியும். பிறருக்கு அந்த தகுதி இருந்தாலும் அந்த வேலையை செய்யமுடியாது. வேதங்கள், மனுநூல், உபநிடதங்கள், பகவத்கீதை, இதிகாசங்கள் என்று எல்லா புத்தகங்களையும் *சத்திரியர்களுக்கும், வைஷ்யர்களுக்கும்* பிராமணர்களிடம் மனப்பாடமாக கற்றாலும் அதை பிறருக்கு கற்பிக்க அவர்களுக்கு உரிமை இல்லை.

_வேதம் கற்றலும், கற்றுத்தரலும் கடவுளால் பிராமணர்களுக்காக ஒதுக்கப்பட்டவையாகும் (மனுநூல் 1:88)._

 

_க்ஷத்திரியர்களை வேதம் படிக்கும்படி கடவுள் பரிந்துரைத்துள்ளார். (மனுநூல் 1:89)_

_வைஷ்யர்களும் வேதம் படிக்க கடவுள் பரிந்துரைத்துள்ளார். (மனுநூல் 1:90)_

ஆனால், பிராமணர்களுக்கு வருவாய் கொடுத்து படிக்க வேண்டும். தானாக வேதத்தைக் கற்பவர் நரகத்துக்கு போவாராம்.

_குருவின்றி வேதம் கற்பவர் வேதத்தைத் திருடிய தண்டனைக்கு உள்ளாகி, நரகத்தில் உழல்வர். (மனுநூல் 2:116)_

 

பிராமணர்களுக்கு அடுத்த இரண்டாம் அடுக்கில் அரசர்களை அமர்த்துகிறார்கள்.  அதிகாரத்திற்கும் பாதுகாப்பிற்கும் அரச படைகள் பிராமணர்களுக்கு தேவைப்படுகின்றன. அரசன் என்பவன் நிலப்பிரபுக்களின் அதிகாரத்திற்கு உட்பட்டவன். எனவே பிராமணர்களுக்கு நில வருவாய்கள் கைகூடும் நிலை இருக்கின்றன. பிரம்மத்தின் கட்டளைப்படி வர்ணாசிரமக் கடமைகளை சமூகத்தில் பாதுகாப்பதும் நிலங்களை ஆள்வதுமே அரசரின் கடமைகள் என்று விளக்குகிறார்கள். மனுதர்மம், மகாபாரதம், பகவத்கீதை, ராமாயணம் ஆகியன இக்கடமைகளை உணர்த்த எழுந்த இலக்கியங்களே. அரசர்களை சத்திரியர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். அரசர்களை தங்களுக்குப் பாதுகாப்பாக நிலைப்படுத்துவதற்காக எப்படிப்பட்ட கருத்தாக்கங்களை தங்களுக்குச் சாதகமாக உருவாக்கியிருக்கிறார்கள் தெரியுமா?

 

*சத்திரியர்கள்* மக்களை பாதுகாக்கும் வேலையை செய்யவேண்டும். *வைஷ்யர்களுக்கும், சூத்திரர்களுக்கும், பஞ்சமர்களுக்கும்* அதை செய்ய உரிமை இல்லை. (மனுநூல் 10:18)._

 

இந்துக்களின் 'புனித புத்தகமாக' போற்றப்படும் பகவத்கீதையில் கிருஷ்ணன் *_"சதுர் வர்ணம் மயா சிருஸ்டம்"_ (பகவத்கீதை 4:13)* என்று கூறுகிறார். அதன் அர்த்தம், *'மக்களை நானே நான்கு வர்ணங்களாக பிரித்தே படைத்தேன்'* என்பதாகும்.

சாதி தர்மம் குல தர்மம் (பகவத் கீதை 1.42)

_பிராமணனைக் காப்பாற்றும்பொருட்டு பிராமணன் அல்லாதவரை கொல்வது பாவம் அல்ல (மனுநூல் 8:143)._

 

பிராமணனைக் கொல்வதைவிட உலகத்தில் பெரிய ஒரு பாவம் இல்லை. எனவே, பிராமணனைக் கொல்வதுபற்றி அரசு நினைக்கவேகூடாது (மனுநூல் 8:381)._

 

_திருடிய பிராமணனை தண்டிக்கக்கூடாது (மனுநூல் 11:20)._

_பெண்களையும் சூத்திரரையும் கொல்வது மிகவும் சிறிய பாவமாகும் (மனுநூல் 11:66)._

 

_சூத்திரனுக்கு பிராமணப் பணிவிடை ஒன்றே பயன் தருவதாகும். அவன் பிராமணன் இல்லாத இடத்தில் க்ஷத்திரியனுக்கோ, க்ஷத்திரியன் இல்லாவிட்டால் வைஷ்யனுக்கோ தொண்டு செய்யவேண்டும். அதிகமான பசுக்களையும், செல்வங்களையும் வைத்திருக்கிறவன் பிராமணன் கேட்டு கொடுக்காவிட்டால் களவு செய்தாவது அல்லது பலாத்காரம் செய்தாவது பிராமணன் எடுத்துக்கொள்ளலாம் (மனுநூல் 11:12)._

 

அரசனுக்கு அடுத்த மூன்றாம் அடுக்கில் வணிகர்களை அமர்த்துகிறார்கள். பலவிதமான பொருள்களைப் பெற்றுக்கொள்வதற்கு வணிகர்கள் பிராமணர்களுக்குத் தேவைப்படுகிறார்கள். அவர்கள் எல்லைக் கடந்து பயணித்து பொருள்களைக் குவித்துக்கொண்டு வருபவர்களாக இருக்கிறார்கள். எனினும் நிலப்பிரபுக்களின் அளவிற்கு அரச செல்வாக்கு எட்டாதவர்களாக இருக்கிறார்கள். எனவே பிராமணர்கள் தம்மிலிருந்து மூன்றாம் அடுக்கில் வணிகர்களை வசதியாக அமர்த்திக்கொள்கிறார்கள். நிலப்பிரபுத்துவ அரசுடன் முரண்பட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான எண்ணங்கள் எழக்கூடாதவாறு பிரம்மத்தின் பெயரால் கட்டளையிடுகிறார்கள்.  வணிகத்தில் ஈடுபடுதலே வணிகர்களின் கடமையாக இருக்கின்றது. இவர்களை வைசியர்கள் என்பதாக குறிப்பிடுகிறார்கள். வைசியர்களாகிய வணிகர்களை அரச போட்டிக்கு செல்லாமலும் தனது மதக்கட்டுப்பாடுகளை மீறாமலும் இருப்பதற்கு போதுமான கருத்தாக்கங்களை எப்படி உருவாக்கியுள்ளார்கள் தெரியுமா?

*வைஷ்யர்கள்* வாணிபம் செய்தல், கால்நடைகளை மேய்த்தல், கொடையளித்தல், வட்டிக்கு கடன் கொடுத்தல், நிலத்தில் பயிரிடுதல் என்னும் வேலைகளை செய்யவேண்டும். *சூத்திரர்களுக்கும், பஞ்சமர்களுக்கும்* அதை செய்ய உரிமை இல்லை. (மனுநூல் 10:18)._

 

பிராமணர்கள் தங்களது அதிகாரத்திற்கும் சொத்தாதிக்கத்திற்கும் தேவைப்படாத, முக்கியமில்லாத நில அடிமைகள் கைவினைஞர்கள் மற்றுமுள்ள பெரும் திரளான மக்களை நான்காம் அடுக்கிலேயே நிறுத்திக்கொள்கிறார்கள். இவர்களை சூத்திரர்கள் என்கிறார்கள். சூத்திரர்கள் எந்தப் பலன்களையும் எதிர்பார்க்காமல் தங்களது குலத்தொழிலில் ஈடுபட வேண்டும். இதுவே பிரம்மத்தின் கட்டளை என்று விளக்குகிறார்கள். சனாதன சூழ்ச்சியின் பாதுகாப்பிற்காக சூத்திரர்கள் கிளர்ச்சியில் ஈடுபடாதவாறு எச்சரிக்கையுடன் அடிமைத்தனத்தில் ஆழ்த்த எத்தகைய கருத்தாக்கங்களை உருவாக்கியிருக்கிறார்கள் தெரியுமா?

சூத்திரனுக்கு கடவுள் கூறும் கடமை, அவன் மற்ற மூன்று வருணங்களுக்கும் தொண்டு செய்யவேண்டும் என்பதே (மனுநூல் 1:91)._

 

இவர்கள் எவ்வளவு அறிவாளிகளானாலும் தலைமுறை தலைமுறையாக தன் சேவகத்தொழிலையே செய்யவேண்டுமேதவிர *பிராமணர்கள், சத்திரியர்கள், வைஷ்யர்கள்* செய்யும் வேலையை செய்யும் உரிமை சூத்திரர்களுக்கு இல்லை. அப்படி செய்தால் தண்டிக்கப்படுவர் என்றும் வர்ணாசிரமம் தெளிவாக பதிவு செய்கிறது.

_சூத்திரன் தன் தொழிலைவிட்டு உயர்குலத்தோனுடைய தொழிலைச் செய்தால் அவன் பொருள் முழுவதையும் பறித்துக் கொண்டு அரசன் அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும் (மனுநூல் 9:96)._

 

_சூத்திரர்கள் முன்னிலையில் பிராமணர் வேதத்தைப் படித்துக் காட்டக்கூடாது (மனுநூல் 4:99)._

 

_சூத்திரன் மனப்பாடம் செய்யும் நோக்கத்துடன் வேதம் படிப்பதைக் கேட்டால், அவனது காதுகளில் காய்ச்சிய ஈயத்தையும், அரக்கையும் ஊற்றவேண்டும். அவன் வேதம் ஓதினால் ஓதிய நாக்கு துண்டிக்கப்படவேண்டும். வேதத்தில் முழு தேர்ச்சி அடைந்தால், அவனது உடல் துண்டு துண்டாக வெட்டி சிதைக்கப்படவேண்டும் (மனுநூல் 12:4)._

 

_பன்றி முகர்தலாலும், கோழிச் சிறகின் காற்றினாலும், நாயின் பார்வையினாலும், *சூத்திரன் தொடுதலினாலும்* உணவு அசுத்தமாகின்றது (மனுநூல் 3:241)._

 

_சூத்திரன், பிராமணர்களைத் திட்டினால் *அவன் நாக்கை அறுக்கவேண்டும்* (மனுநூல் 8:270)._

 

_சூத்திரன் பிராமணன் பெயர், சாதி இவைகளைச் சொல்லித் திட்டினால் அவன் வாயில் பத்து அங்குல நீளமுள்ள பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியை நுழைக்க வேண்டும் (மனுநூல் 8:271)._

 

_சூத்திரன் பிராமணனைப் பார்த்து “நீர் இதைச் செய்ய வேண்டும்” என்று உபதேசம் செய்தால் அவன் வாயிலும், காதிலும் எண்ணெய்யைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் (மனுநூல் 8:272)._

_சூத்திரன் பிராமணனுடன் சம ஆசனத்தில் உட்கார்ந்தால், சூத்திரனுடைய *இடுப்பில் சூடுபோட வேண்டும்; அல்லது அவனை *ஊரைவிட்டுத் துரத்தவேண்டும்;* அல்லது அவனது *ஆசனத்தில் ஒரு வெட்டுப்புண்* ஏற்படுத்தவேண்டும் (மனுநூல் 8:281

 

_ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்யவேண்டிய பிராயச்சித்தம் எதுவோ அதைத்தான் சூத்திரனைக் கொன்றால் செய்யவேண்டும் (மனுநூல் 11:131)._

 

எல்லா வர்ணங்களிலும் ஆண்களுக்கு பெண்கள் அடிமைகளாக இருக்கக் கடமைப்பட்டவர்கள் என்று பெண்களை இழிவான நிலையில் வைக்கிறார்கள். பெண்கள் உயர்வர்ண ஆண்களுக்கு மனைவியாகவோ வைப்பாட்டியாகவோ விலை மாதுவாகவோ வாழலாம். ஆனால் தன் வர்ணத்திலிருந்து கீழுள்ள ஆண்களுடன் பாலுறவு உரிமையில் ஈடுபடுதல் கூடாது. ஏனெனில் பெண்கள் தங்களது வர்ண ஆணுக்கும் மேல்வர்ண ஆணுக்கும் அடிமையாக வாழக் கடமைப்பட்டவர்கள். ஆணுக்கு சொத்தாக மாறும் பெண்கள் அந்த ஆணிற்கு நேர்மையானவர்களாக வாழ்ந்தால் மட்டுமே பிறக்கும் குழந்தைகளின் வர்ணம் காக்கப்படும். எனவே சொத்துரிமை நிலையிலும் பாலுரிமை நிலையிலும் பெண்கள் அடிமைகளாக வாழக் கடமைப்பட்டவர்கள் என்பதாக உணர்த்தப்படுகிறார்கள். நான்கு வர்ணக் கோட்பாட்டு நிலையில் பெண்ணடிமைப் பண்பு இன்றியமையாததாகவே விளக்கப்படுகின்றது.

சூத்திரர்களாகிய பெருந்திரளான உழைக்கும் மக்களும், எல்லா வர்ணங்களிலும் சூத்திரர்களாகவே அடிமைப்பட்டுள்ள பெண்களும் சனாதன சூழ்ச்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபடாதபடி ஆழ்த்த அவர்களின் அறிவுத்திறன்களை அபகரிப்பதையே அடிப்படைக் கருத்தியலாக உருவாக்கியிருக்கிறார்கள் தெரியுமா?

_வேதபாடத்துக்கும் பெண்களுக்கும் தொடர்பேதும் இல்லை (மனுநூல் 10:18)._

மேலும் சூத்திரர்களுக்குரிய அனைத்துக் கருத்தாக்கங்களும் பெண்களுக்கும் பொருந்தும்.

ஒவ்வொரு வர்ணத்தாரும் தனக்கு மேலுள்ள வர்ணத்தாரை பணிபவர்களாகவும் கீழுள்ள வர்ணத்தாரை கட்டுப்படுத்துபவர்களாகவும் செயல்படுவது கடமையாக இருக்கின்றது. இதுதான் நான்கு வர்ண சனாதன  அமைப்பின் இயக்க வடிவமாகும். பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு தீர்மானிக்கப்பட்டு சமூக உழைப்பு வரையறுக்கப்படுகின்றது.

சாதி பிறப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது என்பதை கீழ்க்காணும் சுலோகத்தின் மூலம் தெளிவாக அறியலாம்.

_பிராமணனுடைய தொழிலைச் சூத்திரன் செய்தாலும், சூத்திரன், பிராமண சாதியாக மாறமாட்டான். ஏன் என்றால் அவனுக்குப் பிராமண சாதித் தொழிலில் அதிகாரம் இல்லை அல்லவா? சூத்திரன் தொழிலைப் பிராமணன் செய்தாலும் பிராமணன் சூத்திர சாதியாக மாட்டான். ஏனென்றால், அவன் ஈனத்தொழில் செய்தாலும் அவன் சாதி உயர்ந்ததல்லவா? (மனுநூல் 10:73)_

 

பிரம்மமாகிய கடவுளால் உலகம் படைக்கப்பட்ட காலத்திலிருந்தே இந்த நான்கு வர்ணப் அடுக்கு நிலைகளும் அவற்றின் கடமைகளும் படைக்கப்பட்டுவிட்டன என்பதாக விளக்குகிறார்கள். மனிதர்கள் பிரம்மத்தின் கட்டளைப்படி பிறப்பால் தீர்மானிக்கப்பட்ட கட்டளைகளைச் செய்வதையே தர்மமாகக் கருதி பிழைக்க வேண்டும். அத்தகைய பிழைப்பினால் மட்டுமே மரணமற்ற பெருவாழ்வை அல்லது பிறவியற்ற பெருவாழ்வை அடைய முடியும் என்று விளக்குகிறார்கள். வர்ணக் கடமைகளைக் கடைபிடிக்கத் தவறினால் உலக வாழ்வில் துன்பங்களே நிலைக்கும் என்பதை வழியுறுத்துகிறார்கள். இத்தகைய சாரங்களை உள்ளடக்கியதாக வர்ணாசிரமக் கோட்பாடாகிய நான்கு வர்ணக் கோட்பாட்டை ஆரியர்கள் படைத்திருக்கிறார்கள். 

இந்த நான்கு வர்ணமே பின்னாளில் அடுக்குநிலையற்ற ஐந்நாம் நிலையை உருவாக்குகின்றது. இந்த நிலையிலுள்ள மக்களைத்தான் பஞ்சமர்கள் என்று அழைக்கிறார்கள். இவர்கள் நான்கு வர்ண மக்களால் ஒதுக்கப்பட்டு மிகவும் இழிவான வாழ்வில் உழல்பவர்கள். குறிப்பாக வர்ணம் கடந்த பாலுறவின் விளைவாகப் பிறந்தவர்கள் என்று விளக்கப்படுகிறார்கள்.

இந்தக் கோட்பாட்டால் ஆரியர்கள் புது நம்பிக்கையைப் பெற்றார்கள். திராவிடர்களிடம் தாங்கள் இழந்த சொத்துக்களை மட்டுமல்ல. ஒட்டுமொத்த திராவிட சமூகத்தின் பொருளுற்பத்தி வளங்களையும் உழைக்காமல் அபகரித்து தலைமுறை கடந்து நிலைத்து வாழும் சாத்தியத்தைக் கண்டுணர்ந்தார்கள்.

நான்கு வர்ண சனாதனத்தை மதக்கோட்பாடாக அரசை ஏற்றுக்கொள்ளும்படி செய்ய வேண்டும்.

அரச மதமாக ஏற்றுக்கொள்ளச் செய்வதன் விளைவாக அரச திணறலிலிருந்து அரசரைப் வணிக வர்க்கச் செல்வாக்கிலிருந்து பாதுகாக்க வேண்டும்.

வணிக வர்க்கச் செல்வாக்கிலிருந்து அரசரைப் பாதுகாப்பதன் வழியாக அரசை தமது மதக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்.

அரசை தமது மதக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருதல் வழியாக செல்வாக்கு மிகுந்த வணிகர்களை தமது மதக்கட்டுக்குள் நிறுத்தி பகைமையில்லாத இணக்கமான உறவை மேற்கொள்வது.

அரச அதிகாரத்தையும் வணிக செல்வாக்கையும் சனாதன மதக் கட்டுப்பாட்டில் நிறுத்துவதன் வழியாக பெருந்திரளான மக்களை தம் மதக்கட்டுப்பாட்டிற்குள் நிலைப்படுத்த வேண்டும்.

பெருந்திரளான திராவிட மக்கள் இயல்பாகவே அறிவுத்திறன் மிக்கவர்கள். சனாதனக் கோட்பாட்டை மதமாகக் கட்டமைக்கின்ற சூழ்ச்சியை மக்கள் அறிந்துகொண்டால்  திராவிட சமூகத்தின் பொருளுற்பத்தி வளங்களை உழைக்காமல் செறிப்பதற்கான பெருங்கனவு பறிபோகும் என்பது மட்டுமல்ல. தோழமையாக ஏற்றுக்கொண்ட திராவிடச் சமூகத்திற்கு செய்துள்ள பெருந்துரோகத்திற்கு மறுவினையாக வந்து முடியும். அது ஆரியம் தலைமுறை காணாதபடி பேரழிவாக  வந்து நிற்கும். இந்தப் பெரும் பயத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக பெருந்திரளான நான்காம் அடுக்கு மக்களை என்ன செய்யலாம? கல்வித்திறன்கள் பறிக்கப்பட்டும் அறிவுத்திறன்கள் அழிக்கப்பட்டும் வெறும் மந்தைகளாக மாற்ற வேண்டும். உரிமைகள் மறுக்கப்பட்டும் உலக வாழ்க்கை சுருக்கப்பட்டும் அடிமைகளாக சாக வேண்டும். இதற்குத்தான் நான்கு வர்ண அடுக்கு நிலையான சனாதனக் கோட்பாடு. இந்தக் கோட்பாடுதான் ஜாதி. ஜா என்பத பிறப்பை குறிக்கிறது. ஜாதி என்பது பிறப்பின் அப்படையில் தீர்மானிக்கப்பட்ட சமூகத்தகுதியாகும். இந்தக்கோட்பாட்டை அரசர்களிடம் எப்படி ஏற்றுக்கொள்ளச் செய்வது? பிற்காலத்தில் இத்தாலிய அரசியல் மேதை மாக்கியவல்லி சொன்னதை ஆரியர்கள் அன்றே செய்யத் தொடங்கினார்கள்.

அந்த மாணவர் ஆர்வத்துடன் கேட்டார். மாக்கியவல்லி என்ன சொன்னார் ஐயா?

 “எந்தக் கருத்தை மக்களிடம் திணிக்க வேண்டுமோ அதனை மக்களிடம் நேரடியாக கூறாதீர்கள். அவைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சமயத்தின் பெயரால் கடவுளின் பெயரால் அதனை கூறுங்கள். அப்போது உங்கள் கூற்று ஏற்றுக்கொள்ளப்படும்.

சமூகக் கட்டமைப்பை பிளவுபடுத்துங்கள். பிளவுபடுத்தப்பட்ட சமூகத்தில் செல்வம் படைத்த பணக்காரர்களை உங்கள் பக்கம் ஈர்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்கள் காலப்போக்கில் உங்கள் சொற்கள் படி நடக்க முன்வருவார்கள்.” (ம. சோ. விக்டர்,

தொழில் தமிழர் வரலாறு, தொகுதி 4,  யாத்திசைப் பதிப்பகம். அரியலூர்.2012.  பக்கம் 84)

 

மாக்கியவல்லியின் பிற்காலக்கூற்றுப்படி இந்தக் கோட்பாட்டை ஒவ்வொரு அரசனிடமும் சென்று கடவுளின் பெயரால் விளக்கினார்கள். அதாவது, பிரம்மமாகிய கடவுள் தனது உடலிலிருந்து மனிதர்களைப் பிறப்பித்ததாக ஒரு கதையைக் கட்டினார்கள். பிரம்மத்தின் தலையில் பிறந்தவர்கள் பிராமனர்கள். தோள்களில் பிறந்தவர்கள் அரசர்களாகிய சத்திரியர்கள். தொடைகளில் பிறந்தவர்கள் வணிகர்களாகிய வைசியர்கள். கால்களில் பிறந்தவர்கள் உழைக்கும் மக்களாகிய சூத்திரர்கள். பிரம்மத்தின் வேசிகளுக்கு பிறந்தவர்கள் பஞ்சமர்கள். இந்தக் கதையைக் கேட்டு பல அரசர்கள் தாங்காது சிரித்தார்கள்.   சில அரசர்கள் ஆரியர்களை விரட்டியடித்தார்கள்.

இப்படியாக கடவுளின் பெயரால் சனாதனத்தை ஆரியர்கள் விளக்க முயன்றுள்ளதை மனுநூல், பகவத்கீதை போன்றவற்றில் அறிய முடிகின்றது.

*பிரம்மாவின்* முகத்திலிருந்து தோன்றியவர்கள் *'பிராமணர்கள்',* அவனுடைய தோள்பட்டையிலிருந்து தோன்றியவர்கள் *'க்ஷத்ரியர்கள்',* அவனுடைய தொடையிலிருந்து தோன்றியவர்கள் *'வைஷ்யர்கள்',* அவனுடைய பாதத்திலிருந்து தோன்றியவர்கள் *'சூத்திரர்கள்'* (மனுநூல் 1:87)

 

இக்கோட்பாட்டை எதிர்த்த அரசர்களிடமிருந்து அடிவாங்குவதில் இருந்து தப்பிப்பதற்காகவே சில தருணங்களில் தந்திரமாக நடித்தார்கள். அரசர்களே தலைமையானவர்கள் பிராமணர்கள் அரசர்களுக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதுபோல பாசாங்கு செய்தார்கள். ஆரிய சூழ்ச்சி வெற்றியடைந்த பின்னாட்களில் தங்களை அவமதித்த இத்தகைய அரசர்களை பழிவாங்க முயற்சித்து புராணக்கதைகளில் இழிவாக சித்தரித்தார்கள். திரிசங்கு, அரிச்சந்திரன் போன்றோர் இவர்களால் சித்தரிக்கப்பட்ட அரசர்களே. ஆனால் கிருஷ்ணன், ராமனைப் போன்ற பெரும்பாலான அரசர்கள் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டார்கள்.

திணறிக்கொண்டிருந்த அரசர்களுக்கு பிராமணர்கள் விளக்கிய பிரம்மத்தின் கட்டளைகள் மிக வசதியாக இருந்தன. வர்ண அடுக்குநிலைக் கோட்பாட்டின் அடிப்படையில் அரசர்கள் பிறப்பால் அரசாள்வதையே கடமையாகப் பெற்றிருக்கிறார்கள். மக்கள் பிறப்பால் அடிமைகளாக வாழ்வதையே கடமையாகப் பெற்றிருக்கிறார்கள். வணிகர்களுக்கு வணிகமே கடமை என்ற அடுக்குநிலைக் கோட்பாட்டின் அதிகாரச் சூழ்ச்சிகளை உணர்ந்து அரசர்கள் செயல்படுத்தினார்கள்.

கடவுளின் பெயரால் பிராமணர்களை அரசர்கள் பணிந்து ஏற்றுக்கொள்வதால் இரண்டுவிதமான நன்மைகள் தென்பட்டன. ஒன்று, பிராமணர்களுக்கு அரசன் பணிவதைப்போல அரசனுக்கு மக்களும், மேல்வர்ணத்தாருக்கு கீழ்வர்ணத்தாரும் பணிவது இயல்பாகிவிடுகின்றது. இரண்டு, நிலப்பிரபுக்களின் சத்திரிய வர்ணம் வணிகர்களை அதிகாரத்திற்கு எழாதவாறு கட்டுப்படுத்துவதைப்போல கீழ்வர்ணத்தார் எழுச்சி பெறாதவாறு மேல்வர்ணத்தார் கட்டுப்படுத்துவதும் இயல்பாகிவிடுகின்றது. இத்தகைய இயல்புகள் அரசாட்சியைக் கொந்தளிப்பான சூழல்கள் ஏற்படாதவாறு பாதுகாக்கின்றன என்பதையும் உணர்ந்தார்கள்.

திணறிக்கொண்டிருந்த அரசர்களுக்கு ஆரியர்களின் சனாதன வர்ணாசிரமக் கோட்பாடு என்பது ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்தது.

அரசர்களின் முதுகுக்குப் பின்னால் ஆரியர்களின் ராஜ்ஜியம் தொடங்கியது. சமஸ்கிருத மொழிக்குரிய ஆரியர்களைத்தவிர வேறு யாரையும் வர்ணாசிரமக் கோட்பாட்டை நிறுவுவதற்கு அரசர்கள் பயன்படுத்தவே முடியாது. இதற்காகத்தான் ஆரியர்கள் அன்றாட உரையாடல் மொழியிலிருந்து சமஸ்கிருதத்தைத் தவிர்த்தார்கள்.

திராவிட சமுதாயம் முழுமைக்கும் தொழில் இரகசிய ஒருமை மொழியாக ஆரியர்கள் சமஸ்கிருதத்தைக் கட்டமைத்தார்கள். இதில் ஆரிய பிராமணர்களின் ஒற்றுமை என்றும் வியப்பிற்குரியதே.

ஆரியக் கோட்பாட்டை  அரச மதமாக ஏற்றுக்கொண்ட அரசர்கள் பிராமணர்களுக்கு கோயில்களையும்  குடியிருப்புகளையும் உருவாக்கிக் கொடுத்தார்கள். அனைத்து சலுகைகளையும் வழங்கினார்கள். நாடெங்கும்  வேள்விகள்  செய்து   பிராமணியத்தைப்   பரப்புவதற்குத் தகுந்த பாதுகாப்பை வழங்கினார்கள். பிரம்மதானம்,    தேவதானம்,     சதுர்வேதிமங்கலம், மங்கலப்பட்டு    போன்ற     முறையில்   நிலங்களும் செல்வங்களும் பிராமணர்களுக்கு சொத்துக்களாகப்   பெருகின.

பிராமணர்கள் எந்த உழைப்பிலும் ஈடுபடாமல் செல்வங்களை அனுபவிக்கக் கற்றுக்கொண்டார்கள். கடவுளின் பெயரால் எண்ணற்ற யாகங்களை நடத்தினார்கள். வர்ணாசிரமக் கோட்பாட்டை நாடெங்கும் பரப்பினார்கள். ஒவ்வொரு வர்ணத்திலும் உள்ள பல்வேறு மக்கள் பிரிவினரும் தொழில் பிரிவினரும் பல்வேறு சாதிப் படிநிலைகளாக விரிவு பெற்றார்கள்.

 நாடெங்கும் படிநிலை சாதிகள் பிறப்பால் தீர்மானிக்கப்பட்ட  தொழிலை மேற்கொள்வதற்காகவே பிறந்தன. சாதிகள் நான்கு வர்ண அடுக்கின் மடங்குகளாக விரிவடைந்தன. நான்கு வர்ண சாதிய அடுக்குகள் நிலை பெற்ற காலத்தில் வேதங்களே பெருங்கல்வியாக அறியப்படுகின்றது. திராவிட மக்களின் அறிவுத்திறன்களும் கல்வி உரிமைகளும் ஒழித்துக்கட்டப்பட்டன.

“ஒரு சூத்திரன் வேத மந்தரங்களை காதால் கேட்க நேர்ந்திடின் அவன் காதுகளில் உருக்கிய உலோகத்தினை ஊற்ற வேண்டும்.

அவன் வேத மந்திரங்களை ஓதினால் அவன் நாக்குகளை வெட்ட வேண்டும்.

அவன் சில வேதங்களை மனப்பாடம் செய்திருந்தானேயானால் அவனை கோடாரியால் வெட்ட வேண்டும்”

– (கவுதம தர்ம சூத்திரம் 2/3/4)

அறிவிற்கு தகுதியில்லாத சமஸ்கிருத வேத மந்திரங்களை பெருந்திரளான திராவிட சூத்திரர்களாகிய தமிழர்கள் படிக்க முயன்றிருக்கிறார்கள். புரியாத தவளை மொழியில் மந்திரம் சொல்லியே நம் மக்களை அடிமையாக்கிட்டானே. இந்த மந்திரத்தில் என்னதான் சொல்லி வைத்திருக்கிறான் என்று அறிய முயன்ற திராவிட மக்களை என்னென்ன செய்திருக்கிறார்கள். அறிய முயன்றதற்காகவே மீப்பெரும் வன்முறைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பதற்கு மேற்கண்ட வேத சட்டமே சான்று.

அறிவியல் தமிழ்ச் சான்றோர்களின் பெயரன் பெயர்த்திகளாகிய முந்தைய தலைமுறைகள் பேரறிவின் தாகத்தை எப்படி வெளிப்படுத்தியிருப்பார்கள்!

இலக்கியம் கலை அறிவியல் தத்துவம் அனைத்திலும் தங்களது ஆற்றலை எவ்வாறெல்லாம் வெளிப்படுத்தியிருப்பார்கள்! நம் முன்னோர்களின் ஆற்றல் சார்ந்த இத்தகைய வெளிப்பாடுகளை நான்கு வர்ண சனாதனவாதிகள் எத்தனைக் கொடிய வன்முறைகளால் ஒழித்துக் கட்டியிருப்பார்கள் என்பதை மேற்கண்ட சூத்திரம் காட்சிபடுத்துகின்றது!

பெண்களை உயிருடன் உடன்கட்டை ஏற்றி ரசிக்கின்ற சனாதனவாதிகளுக்கு வன்முறைகள் மிக எளிதாகவே திகழ்கின்றன.

சாதி என்பது வணிக வர்க்க வளர்ச்சியைத் தடுத்து நிலப்பிரபுத்துவ அரசு நீடிப்பதற்காக ஆரிய ஒட்டுண்ணிகளால் உருவாக்கப்பட்ட நான்கு வர்ண சனாதனக் கோட்பாட்டை அரச மதமாக நடைமுறைப்படுத்திய சூழ்ச்சிகளின் விளைவே சாதி.

ஆர்வம் குறையாமல் உரையாடலில் கலந்திருந்த அந்த மாணவர் ஆச்சரியத்துடன் கேட்டார்.

“இன்றுதான் ஐயா எனக்கு சாதியின் கதை புரிகிறது. இந்தியாவில் சாதி என்ற நூலில் அம்பேத்கர் இந்த வரலாறைதான் கூறுகிறாரா ஐயா?”

இந்த வரலாறை அம்பேத்கர் சொல்லவில்லை. அவர் புறமணமுறையைத் தடுத்து அகமணமுறையைப் பின்பற்றி தன்னை தனிச்சமூகமாக நிலைப்படுத்தத் தொடங்கிய தொல்குடியின் நடைமுறையால் சாதி உருவானதாகச் சொல்கிறார். என்னைப் பொறுத்தவரை அது சாதி என்ற நோயின் தோற்றுவாய் அல்ல, நோயின் அறிகுறி மட்டுமே.

அம்பேத்கர் மட்டுமல்ல சாதி குறித்து அறிஞர்களின் பல்வேறு கருத்துக்களை இந்த வரலாறுடன் தொடர்புபடுத்தி சிந்தித்துப்பார்க்க வேண்டும். நீங்கள் எதை சிந்தித்தாலும் செயல்படுத்தினாலும் மனிதகுலத்தைப் பாதுகாப்பதற்காகவோ அல்லது படுகொலை செய்வதற்காகவோ வந்து முடியப்போகின்றது. இந்த இரண்டில் எதை செய்யப் போகிறீர்கள்?

சாதியிலிருந்து மனிதகுலத்தை பாதுகாத்து நல்லுலகை உருவாக்க விரும்புகிறீர்கள்தானே. அப்படியென்றால் இளந்தலைமுறையாகிய நீங்கள்தான் சிந்தித்துப்பார்க்க வேண்டும். தேவையான கருத்தியல்களைத் தேடிப் படிக்கவும் உரையாடவும் வேண்டும். மூத்த தலைமுறைகளால் இதை செயல்படுத்துவது அரிது. படிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ள நீங்கள்தான் படித்து சிந்தித்துத் தலைமுறைகளை மாற்ற வேண்டும். நல்லுலகை படைக்கும் சிற்பி நீங்கள்தான். எனவே, எல்லா அறிஞர்களின் கருத்துக்களையும் அறிந்து சிந்திக்க முன்வாருங்கள்.

உடனே முன்வந்து கேட்டார். “ஐயா நீங்கள் அந்த அறிஞர்களின் கருத்துக்களையும் எனக்கு சுருக்கமா சொல்லுங்கய்யா”

படிக்கச் சோம்பேறித்தனப்படுகிறார் என்பதைவிட அறிய முன்வருகிறார் என்பதே எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. ஏற்கனவே அவரிடம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசிக்கொண்டிருக்கிறேன். அவரே சோர்வடையாமல் கேட்கிறார். எனக்கெதற்கு சோர்வு. நான் சாதி   குறித்த அறிஞர்களின் கருத்துக்களைப் பட்டியலிடத் தொடங்கினேன்.

 

அம்பேத்கர்

 

இந்துக்களின் வரலாற்றில் ஏதோ ஒரு காலக்கட்டத்தில் புரோகித வர்க்கத்தினர் பிறரிடமிருந்து தங்களைத் தனியாகப் பிரித்துக் கொண்டு பிறருடன் கலவாமல் இருக்கும் கொள்கைப்படி (Closed Door Policy) தனியொரு சாதியினராக ஆனார்கள். இவர்களைப் போலவே பிற வர்க்த்தினரும் சமுதாய உழைப்புப் பங்கீட்டு விதியின்படிப் பெரிதும் சிறிதுமாகச் சிதறிப் போயினர்.

சாதிகளின் படைப்பு என்பது புறமணத்தைவிட அகமணத்திற்கு உயர்வான இடம் அளிக்கப்பட்டதன் விளைவு என்பது புலப்படும். எனினும், வழக்கமாகப் புறமணம் செய்து வந்த கூட்டத்தார் மீது தன் இனத்திற்குள்ளேயே மணம் புரியும் அகமண வழக்கத்தைப் புகுத்தியது. சாதியைப் படைப்பதற்கு இணையான செயலாக அமைந்து விட்டது.

அடிமை முறையை விட தீண்டாமை முறை மிகவும் மோசமானது.

தீண்டாமையின் வேர் சாதியத்தில் உள்ளது சாதியத்தின் மேல் வர்ணாசிரம நெறியுடன் இணைக்கப்பட்ட சமயத்தில் உள்ளது வர்ணாசிரம சமய நெறியின் வேர் பார்ப்பனிய சமயத்தில் உள்ளது பார்ப்பனிய சமயத்தின் வேர் எதேச்சதிகாரத்தில் அல்லது அரசியல் அதிகாரத்தில் உள்ளது

          அண்ணல் அம்பேத்கரின் சாதியின் நடைமுறை குறித்த கருத்து சரியானதே. ஆனால், பிராமணத் தொல்குடிகளின் அகமணமுறையின் சமூகப் போலச்செய்தலின் பரவலால் சாதி உருவானதாக கருதுவது உண்மையல்ல. அது சாதியின் வெளிப்பாட்டு வடிவம் மட்டுமே.

 

ஆபேதுபே

பறையராக பிறந்து ஒருவர் இங்கு வாழ்வதைவிட ஏதேனும் ஒரு காலணியை நாட்டின் அடிமையாக இருப்பது எவ்வளவோ மேலானது -

இவர் பிரெஞ்சு நாட்டிலிருந்து இருந்து தமிழகம் வந்த கிறிஸ்தவ பாதிரியார் ஆவார்.

சாதியின் நடைமுறை பற்றிய இந்த அறிஞரின் கருத்து மிகச்சரியான மதிப்பீடாகும்.

 

டாக்டர் கேட்ரக்

ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் சாதி அமைவதற்கு நிறம் பெரும்பங்கு வகிக்கிறது என்று கருதுகிறார்கள். தங்கள் வரலாற்றில் நிற வேற்றுமைக்கு ஆளானவர்கள் என்பதால் சாதியச் சிக்கலுக்குத் தலையாய காரணம் தோலின் நிறமே என எளிதாகக் கற்பனை செய்துகொண்டனர்.

இந்த அறிஞரின் கருத்துப்படி நிறத்தின் அடிப்படையில் சாதி உருவாகவில்லை என்பது மிகச்சரியானது. மரபணு ஆதாரங்களின்படி நம் முன்னோர்கள் நிறம் இனம் போன்ற வேறுபாடுகளுக்கு இடமின்றி பாலுறவு உரிமைகளில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும், சமகால நடைமுறைகளில் வெள்ளை நிறத்தோலில் பேரழகாய் திகழ்கின்ற மனிதர்களை அருந்ததியர், நரிக்குறவர்கள் இனத்தில் காண முடிகின்றது. உழைக்காமல் உண்டு பெருத்துள்ள பிராமணர்களை கரிய நிறத்திலும் பார்க்க முடிகின்றது.

 

சரத் பட்டில்

 ஐரோப்பிய நில உடமை முறையில் தீர்மானகரமான அம்சமாக வர்க்கம் அமைந்தது எனில் இந்திய நில உடமை முறையில் ஜாதி அமைந்தது. இந்த அறிஞர் சாதியை வர்க்கமாக மதிப்பிடுகிறார். இது தவறு. சாதி என்பது வர்க்க மேலாதிக்கத்திற்கான அரசியல் கோட்பாடு.

ஒரு குறிப்பிட்ட காலத்தில் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அடித்தள அம்சத்தை நிர்ணயிக்கக் கூடிய ஆற்றல் கொண்டதாக மேல் தள அம்சமும் விளங்கும் என்று மாசேதுங் குறிப்பிடுகிறார். இது சமூக இயங்கியல் குறித்த சமூகவிஞ்ஞான விளக்கம். சமூகத்தின் அடித்தளம் என்பது சமூகப் பொருளுற்பத்தியைக் குறிக்கின்றது. சமூகத்தின் மேல்தளம் என்பது பண்பாட்டைக் குறிக்கின்றது. வர்க்கம் என்பது அடித்தளமாகிய உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியிலான மனித முரண்பாடுகளாகும். சாதி என்பது நிலப்பிரபுத்துவ வர்க்கம் மற்றும் வணிக வர்க்கம் ஆகிய இரண்டு வர்க்கங்களின் முரண்பாட்டு முதிர்ச்சியின் விளைவாக உதித்த அரசியல் கோட்பாடாகும். நிலப்பிரபுத்துவ அரசின் நலனுக்கான தத்துவமாக உருப்பெற்ற சனாதன சாதிக்கோட்பாட்டை வணிக வர்க்கத்துடனான முரண்பாட்டின் குறிப்பிட்ட காலத்தில் பிராமண சனாதன நிபந்தனைகளுக்கு உட்பட்டு வணிகவர்க்கத்தின் உற்பத்தித் திறனை தேங்கச் செய்து உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை நூற்றாண்டுகளாக தாமதப்படுத்தியது சாதி. எனவே, சாதி என்பது வர்க்கம் அல்ல, அது பண்பாடு என்ற மேல்கட்டுமானத்திலுள்ள அரசின் மேலாதிக்கத் தத்துவக் கோட்பாடாகும்.

 

 

 

கெயில் ஓம்வெத் 

 முதலாளிய சமூகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் வர்க்க வேறுபாடுகள் தோன்றியது முதல் சோசியலிசம் சமூகம் வரை சாதியும் இருக்கும். இந்த அறிஞரின் கருத்து தவறாகும். இந்தியாவில் சாதி தோன்றியிருக்காத காலங்களில் வர்க்கச் சமூகங்கள் இருந்ததற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களிலேயே இருக்கின்றன.  மேலும், சாதி என்ற சாபக்கேட்டை தீர்க்கின்றவரை சோசலிசம் என்ற மக்கள் தலைமை சமூகத்தை நோக்கி முன்னேறுவதற்கு வாய்ப்பே இல்லை.

 

மார்ட்டின் கிளாசு 

 இனக்குழு சமூகத்தின் வளர்ச்சி நிலையில் ஏற்றத்தாழ்வுகளை சமப்படுத்தவும் உபரி உற்பத்தியை உறிஞ்சும் வடிவமாகவும் சாதி தோன்றியிருக்கும். இந்த அறிஞரின் கருத்துப்படி ஆரிய இனம் திராவிட சமூகத்தின் உபரியை உறிஞ்சுவதற்காக சாதியை உருவாக்கியுள்ளது. ஆனால், ஏற்றத்தாழ்வுகளை சமப்படுத்துவதற்கு அல்ல. சமூகப் பொருளுற்பத்தியின் வளர்ச்சியைத் தடுத்து, உபரியை உழைக்காமல் சொகுசாக உண்டு செறித்து மனிதகுல வளர்ச்சியைப் பள்ளத்தாக்கில் தள்ளுவதற்காகவே சாதியைத் தோற்றுவித்திருக்கிறது. நிலப்பிரபுத்துவ வர்க்கத்திற்கும் வணிகவர்க்கத்திற்கும் இடையிலான வரலாற்று முரண்களுடன் திராவிட  சமூகத்தில் ஆரிய தோல்விகளின் வரலாற்றுச் சூழல்களும் பொருத்தப்பாடுகளுடன் இணைந்திருக்காவிட்டால் சாதி தோன்றியிருக்க வாய்ப்பே இல்லை.

 

பக்தவத்சலபாரதி

சாதி என்பது இந்திய துணைக்கண்டத்தில் வேத காலம் தொடங்கி வளர்ந்து விட்ட ஒரு தனித்துவமான சமூக வடிவம். சாதி அமைப்பின் எளிமையான வடிவம் ஆப்பிரிக்கா பிஜி ஜப்பான் தொங்கா சமோவா தென் பசிபிக் தீவுகள் முதலான பகுதிகளில் உள்ளது. இலங்கையில் சற்று அடர்த்தியான வடிவமாக உள்ளது . அதன் சிக்கலான வடிவம் இந்தியாவில் மட்டுமே உள்ளது. அனைத்திந்திய அளவிலும் தமிழ்ச் சூழலிலும் சாதியத்தின் படிமலர்ச்சியை மேலும் நுண்ணாய்வு செய்ய வேண்டும். அதன் தோற்றுவாய் ஆராயப்பட வேண்டும்.(பக்.9,10)

சாதி என்பது மரபார்ந்த பழமைச் சமூகத்தில் தோன்றிய ஒன்று. (பக்.66)

சாதியமைப்பு அடிப்படையில் தொழில் புரட்சிக்கு முந்தையது. சந்தைப் பொருளாதார முறை தோன்றுவதற்கு முந்தையது. பணப்பொருளாதாரம் தோன்றுவதற்கு முந்தையது. குடிகள் தங்கள் ஊழியர்களையும் பொருட்களையும் பரிமாறிக்கொண்ட குடிஊழியமுறை பணம் தோன்றுவதற்கு முன்னர் இருந்தது. தொழில்துறை தோன்றுவதற்கு முந்தைய, பணப்பொருளாதாரம் தோன்றுவதற்கு முந்தைய நிலையில் சமூகத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருந்த சமூகவடிவமாகக் குடிஊழியமுறை இருந்தது. இதன் சமூக வடிவமே சாதிமுறை. (பக்.68)

சாதியற்ற தமிழர் சாதியத் தமிழர் என்ற நூலில் எனது பேரன்பிற்குரிய என் ஆசான் அவர்களின் கருத்துக்கள் உள்ளீடான முரண்பாடுகளைக் கொண்டுள்ளது. முதலில் இந்திய வரலாற்றில் வேதகாலம் என்பது ஒற்றைக்காலம் அல்ல. அது ஆசியர்கள் ஆடு மாடுகளை மேய்த்துத்திரிந்த காலம். திராவிடர்கள் வணிக வர்க்கமாக செல்வாக்குப் பெற்றிருந்த காலம். ஒரே தருணத்தில் இரண்டு காலங்களும் சந்தித்துக்கொண்டதைத்தான் சாதியின் வரலாறு உணர்த்துகின்றது. மேலும்,  சாதியின் அடிநாதம் என்பது பிறப்பினால் தீர்மானிக்கப்படும் வர்ணத் தகுதியில் இருக்கிறதே அல்லாமல் குடி ஊழியமுறை என்ற வேலைப்பிரிவினையில் அல்ல.

மரபார்ந்த பழைமைச் சமூகத்தில் சாதி தோன்றியிருக்க வாய்ப்பில்லை. தொன்மையான சங்க அக இலக்கியங்களில் ஆரியர்களைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. ஆனால் அவர்கள் தோற்றுவித்த நான்கு வர்ண சாதிய அடுக்குநிலையைப் பற்றிய குறிப்புகள் கிடையாது. மேலும், சாதியமைப்பு அடிப்படையில் தொழில் புரட்சிக்கு முந்தையது என்பது சரிதான். ஆனால், வணிக சமூகம் செல்வாக்கு பெற்றிருந்த காலத்திற்கு பிறகுதான் சாதியமைப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் நான்கு வர்ண அடுக்கில் மூன்றாவது அடுக்காக வைசியர்கள் என்ற வணிக வர்க்கம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

பிற நாடுகளில் சாதி இருந்ததாக பேராசிரியர் குறிப்பிடுகிறாரே அது வேலைப்பிரிவினையைக் குறிப்பதாக அமையாமல் நான்கு வர்ண அடுக்கு நிலையில் பிறப்பு அடிப்படையிலான சாதிய அடுக்கினைக் குறிப்பதாக அமைந்திருக்க வேண்டும். அப்படி அமைந்திருந்தால் மட்டுமே பிற நாடுகளில் சாதி இருந்திருப்பதாக உறுதி செய்ய முடியும்.

 

அனலபா பாசு

தேசிய உயிர் மருத்துவ மரபியல் நிறுவனம் (NIBMG) & இந்தியப் புள்ளியல் கழகத்தில் மனித மரபியல் பிரிவு . PNAS அமெரிக்க ஆய்விதழின்  தலைமையாளர் :

சமீபத்திய ஆய்வின் மூலம் இந்தியா முழுவதும் 1575 ஆண்டுகளுக்கு முன்பு வரை அதாவது 4200 ஆண்டுகளுக்கு முன்பிருந்து 1575 ஆண்டுகள் முன்பு வரையிலான இடைப்பட்ட காலங்களில் நமது அனைத்து மூதாதையர்களும் தங்கள் இனத்திற்கு வெளியே இருப்பவர்களுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளனர், கலந்துள்ளனர். அதாவது புறமணமுறையானது (Exogamy) இருந்துள்ளது. ஆனால் அதற்குப் பிறகு தங்கள் கணம் அல்லது சாதி/குழுக்களைத் தாண்டி திருமணம் செய்வது தடைசெய்யப்பட்டது. இதற்கான காரணத்தை அவர்கள் ஆராய்ந்த பொழுதுதான் அக்கால மக்களின் சமூக வாழ்நிலை அப்போதைய ஆட்சியாளர்களால் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டதைக் கண்டனர். இந்தியாவின் பொற்காலம் குப்தர் காலத்தில்தான் சாதிய அகமணமுறை கட்டாயமாக்கப்பட்டது. இந்த அறிஞரின் ஆய்வு சாதியின் வரலாற்றை வெளிச்சத்தில் பார்க்க உதவுகிறது.

கே. சேதுராமன்

கண்ணூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஆவார்.

இவர் கருத்துப்படி சாதி மரபணுவை விட அரசியல் சார்ந்தது," https://timesofindia.indiatimes.com/blogs/tracking-indian-communities/caste-is-not-in-our-gene/

இந்த அறிஞரின் கருத்து சாதி என்பது வர்க்கம் அல்ல, அரசியல் மேலாதிக்கத் தத்துவம் என்பதை வழிமொழிவதற்கு உதவுகிறது.

கோ. கேசவன்

*சாதியத்தின் பாரம்பரியமாக தொழில்கள் கையளிக்கப்படுதல் என்ற அம்சத்தை முதலாளி உற்பத்தி முறை வரம்புக்குள் கொண்டு வர இயலாது. எனினும் அகமன முறை படிநிலை வரிசை, தூய்மை தீட்டு கருத்தாக்கம், தீண்டாமை ஆகிய செல்வாக்கு செலுத்துவதற்கு ஏற்ப சாதிய உற்பத்தி உறவுகள் முதலாளிய முறையில் இல்லாததால் அவை கருத்தமைவுகளாக தொடர்ந்து நீடிக்கும்.

 

 *காரல் மார்க்ஸ் செறிவாக குறிப்பிட்டதை போல மூலதன உருவாக்கம் சுதந்திர கூலி உழைப்பு உருவாக்கம் என்பனவற்றின் வரலாற்று போக்கை ஆய்வதே முதலாளிய உற்பத்தி முறையை ஆய்வதாகும் ஆக இத்தகைய கட்டமைப்புக்குள் சாதியும் உற்பத்தி உறவின் வடிவமாக இருக்க இயலாது.

 

*சாதியம் உற்பத்தி உறவின் வடிவம் என்ற விதத்தில் அடித்தளம்சமாகவும் பல்வேறு கருத்து அமைவுகள் மற்றும் நிகழ்வு போக்குகள் என்ற விதத்தில் மேலமைப்பாகவும் அமைந்துள்ளது

 

 *நில உடமைக்கு முந்தைய சமூகத்தில் சாதியத்தின் முன் வடிவங்கள் காணப்பட்டாலும் நில உடமை உற்பத்தி முறையில் உபரி உற்பத்தியை உறிஞ்சக்கூடிய தனி வடிவமாக சாதியம் செழுமை பெற்றது.

 

 *நில உடமைக்காலத்தில் வர்க்கத்தின் பதிலாக சாதியம் அமைந்தது என்பதோடு சாதியத்தின் பிற பரிமாணங்கள் வர்க்கத்தின் விளக்கங்களையும் தாண்டி செயல்பட்டன

 

*  ஆணாதிக்கம் தனி உடைமை சமூகத்தின் நீடித்த இடையராத உடன் நிகழ்வு ஆனால் சாதியம் என்பது தனி உடமையின் உடன் நிகழ்வு அல்ல குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் உருவானதாகும்.

இந்த அறிஞரின் கருத்துக்கள் சாதியத்தை விளங்கிக்கொள்ள துணை செய்கின்றன. ஆனால், உள் முரண்களுடன் அமைகின்றன. காரல்மார்க்ஸை மேற்கோளிட்டு சாதி உற்பத்தி உறவின் வடிவமாக இருக்க இயலாது என்கிறார். இதற்குள்ளாகவே முரண்படும்படி சாதியம் உற்பத்தி உறவின் வடிவம் என்ற விதத்தில் அடித்தள அம்சமாகவும் பல்வேறு கருத்து அமைவுகள் என்ற விதத்தில் மேலமைப்பாகவும் அமைந்துள்ளதாகவும் விளக்குகிறார். நிலபிரபுத்துவச் சமூகத்தின் உபரியின் விளைவாக சாதியைக் கருதுகிறார். ஆனால், வணிக வர்க்க செல்வாக்குடன் நிலப்பிரபுத்துவ முரண்பாட்டின் விளைவாகக் கருதத் தவறுகிறார்.

 

ம. சோ. விக்டர்,

 கிபி எட்டாம் நூற்றாண்டிற்கும் பிறகு இந்திய நாடு வெளிநாட்டினர் ஆளுகையின் கீழ் வந்த பிறகு மக்களுடைய உரிமைகள் மறுக்கப்பட்டன. ஏறக்குறைய அடிமைகள் போல மக்கள் வாழ்ந்தனர். வெளிநாட்டினர் வருகை ஆரியர்களுக்கு மேலும் அதிகாரங்களையும் உயர்வுகளையும் ஏற்படுத்திக் கொடுத்தன. இந்திய நாட்டில் எந்த இனத்தோடும் உறவில்லாத ஆரியர்கள் அந்த இனங்கள் அழிந்து படுவது பற்றியும் அடிமைகளாக இருப்பது பற்றியும் மகிழ்ந்தனரை அன்றி கவலைப்படவில்லை.

 ஆரியர்கள் அரசு சார்புடையவர்களாக இருந்தனர். பாரசீகர், இஸ்லாமியர், போர்த்துக்கீசியர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் என்ற வரிசைப்படி இந்தியாவை ஆண்ட அனைத்து தரப்பினருக்கும் அறிவுரையாளர்களாக ஆரியர்களே இருந்தனர்.

 இவர்களின் ஆதரவோடு இந்தியாவின் தொன்மக்குடிகள் ஆரியர்களே என்ற கருத்தை மக்களிடையே நிலை நிறுத்தினர்.  (ம. சோ. விக்டர்,

தொல் தமிழர் வரலாறு, தொகுதி 4,  யாத்திசைப் பதிப்பகம். அரியலூர்.2012.  பக்கம் 85, 86)

            இந்த அறிஞரின் கருத்துக்கள் சாதியைத் தோற்றுவித்த ஆரியர்கள் அரச அதிகாரததின் ஒட்டுண்ணிகளாகவே எப்பொழுதும் வாழ்ந்து பழகியவர்கள் என்பதை வழியுறுத்துவதாக அமைந்துள்ளது.

தந்தை பெரியார்

 சாதி வகை என்பது பிறவியில் வருவது கிடையாது. யாருக்கு பிறக்கிறதோ அவர்களின் சாதியைச் சொல்கிறார்களே ஒழிய பிறக்கும்போது சாதி முத்திரையோடு எந்த குழந்தையும் பிறப்பது கிடையாது. ( விடுதலை 12.5.1970)

 மனிதன் மடையனாக அடிமையாக ஆக்கப்பட்ட பின்புதான் சாதி புகுத்தப்பட்டதாகும். சுதந்திர உணர்ச்சியும் அறிவும் ஏற்படாமல் சாதியை ஒழிக்க முடியாது ( விடுதலை 18.8.1973) சாதி உருவான வரலாறை பொதுவான முறையில் சரியாக உணர்ந்து சாதி ஒழிப்பை இலக்காகக் கொண்டு கருத்தியலாக களமாடியுள்ளார் தந்தை பெரியார் என்பது மறுக்க முடியாத உண்மை.

          அந்த மாணவரின் கண்கள் சற்று சோர்வாகிவிட்டன. கதை போல தோனும் இது கதையும் அல்ல. ஆம் சாதி தோன்றிய வரலாறு என்று உணர்ந்து உரையாடிய மாணவருக்கு அறிஞர்களின் கோட்பாடுகளும் வரையறைகளும் விளக்க முறை உரையாடல்களும் சற்று சோர்வை தந்திருக்கலாம். ஆனால், சனாதன சாதிய அடுக்கு நிலையின் வெள்ளைக்கயிறை தூக்குக்கயிறாக மாற்றி சோழியை முடிக்கப் போகிறவர்கள் இவரைப்போன்ற இளந்தலைமுறைகள்தான் என்ற நம்பிக்கையோடு அவரைப் பார்த்து சிரித்தேன்.

          என்ன சோர்வாகிவிட்டதா?

          ஆமாம் ஐயா, தலை சுற்றுகிறது என்றார் சிரித்துக்கொண்டே.

          சாதியை ஒழிப்பது சாத்தியமா ஐயா? சாதியைப் பற்றி முடிவாக உங்கள் கருத்து என்னங்க ஐயா?

          அரசியல் விஞ்ஞானத்தில் மக்கள் அதிகாரத்தை செயல்படுத்தும் தகுதியைப் பெற்றால்  சாதி ஒழிவது சாத்தியந்தான். அரசியல் என்பது சமூகப் பொருளுற்பத்தியில் உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நிறுவுகின்ற போராட்டம் ஆகும். சுரண்டும் வர்க்கங்களின் அதிகாரத்தை ஒழிப்பதாகும். சாதி என்பது வர்க்கம் அல்ல. சுரண்டும் வர்க்கங்களால் பெயர் சூட்டப்பட்ட அடையாளப் பண்பாடு. இந்தப் பண்பாடு உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்பட்ட வரலாற்று புண்பாடு.

          சமூகப் பொருளுற்பத்தியில் நிலப்பிரபுத்துவ வர்க்கத்திடமிருந்து அதிகாரத்தை வணிக வர்க்கம் கைப்பற்ற முயற்சி செய்தது. நிலப்பிரபுத்துவ வர்க்கம் ஆரிய பிராமண ஒட்டுண்ணிகளால் உருவாக்கப்பட்ட சனாதன வர்ண சாதி முறைகளைக் கருவியாகப் பயன்படுத்தி தனது அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொண்டது. வணிக வர்க்கத்தின் அதிகார எழுச்சியைத் தடுத்து சமூகத் தேக்கத்துக்கு ஆட்படுத்தியதே சாதியின் வரலாறு.

நிலப்பிரபுத்துவ வர்க்கத்திற்கு சூட்டப்பட்ட பெயர் சத்திரியர்

வணிக வர்க்கத்திற்கு சூட்டப்பட்ட பெயர் வைசியர்

அரச அதிகாரத்தின் ஒட்டுண்ணிகளாக கிளர்ந்த ஆரிய சனாதன வர்ணக் கோட்பாட்டாளர்களுக்குச் சூட்டப்பட்ட பெயர் பிராமணர்

இவர்கள் அல்லாத  அனைத்து மக்களுக்கும் சூட்டப்பட்ட பெயர் சூத்திரர்கள்.

இன்றைய சமூகச் சூழலில் சூத்திரர்கள் யார்? சமூகப் பொருளுற்பத்தியில் இலாபவெறி அதிகாரத்தை நிறுவியுள்ள அதானி, அம்பானி போன்ற வணிகப் பெருநிறுவனங்கள், இவர்களின் அதிகாரத்தைச் சார்ந்துள்ள  பெரும் நிலச்சுவான்தார்கள் மற்றும் அதிகார ஒட்டுண்ணிகளாகச் சார்ந்திருக்கும் வர்க்கத்தினரைத் தவிர அனைத்துப் பெருந்திரள் மக்களும் சூத்திரர்களே. விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுதொழில் முனைவோர், சுயதொழில் முனைவோர், மாணவர்கள், பெண்கள், ஏதுமற்ற பாட்டாளிகள் அனைவரும் சமூகப் பொருளுற்பத்தி மீதான அதிகாரத்திலிருந்து புறக்கணிக்கப்பட்ட சூத்திரர்களே. எனவே, சாதியை ஒழிக்க வேண்டுமெனில் சமூகப் பொருளுற்பத்தியில் இத்தகைய பாட்டாளி வர்க்கமாகிய சூத்திரர்களின் அதிகாரத்தை நிறுவ வேண்டும்.

          நடைமுறை உண்மைகளிலிருந்து தீர்வுகளை வழங்குகின்ற கம்யூனிஸ்டுகளின் வளர்ச்சியில் மட்டுமே சாதியின் கல்லறை சாத்தியம்.

 

 

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. பேராசிரியர் முனைவர் திருநாகலிங்கம்
    முன்னாள் புலமுதன்மையர், தமிழியற்புலம்,
    பாண்டிச்சேரி
    [23/5, முற்பகல் 11:34] Prf Thirunagalingam Pu: தாங்கள் சொல்வது சரிதான் ஆனால் இந்தியச் சூழலில் கம்யூனிசமும் உயர் வகுப்பு ஜாதி அடிப்படையிலேயே வளர்ந்து விட்டது கம்யூனிஸ்டுகள் தோல்வியைச் சந்திக்கும் போது மட்டுமே தமிழகம் உள்ளிட்ட இந்தியாவில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைத் தலைவர்களாக ஆக்குகின்றனர் இதை இந்தியாவில் உள்ள மற்ற ஜனநாயக கட்சிகள் அனைத்திலும் காணலாம் ஜாதியை எதிர்த்த காரணத்தினால் புத்தமதம் இந்தியாவில் நிலை பெற முடியவில்லை
    [23/5, பிற்பகல் 12:39] Prf Thirunagalingam Pu: தங்களுடைய உறுதியான சித்தாந்த நிலைப்பாடு பாராட்டிற்குரியது
    [23/5, பிற்பகல் 4:43] Prf Thirunagalingam Pu: மகிழ்ச்சி தொடர்ந்து எழுதுங்கள் இது போன்றெல்லாம் இதுவரை யாரும் எழுதியது இல்லை

    ReplyDelete

சாதிப்பித்து

  சாதிப்பித்து முனைவர் புதியவன்   உங்களுக்கு எந்த வயதில் சாதியை பற்றி தெரிந்தது?  எப்படி புரிந்து கொண்டீர்கள்?  சாதியை நீங்கள் புரி...

அதிகம் பார்க்கப்பட்டவை