Thursday, June 4, 2026

இசை விழாவில் தமிழ்மொழி தீட்டா?

இசை விழாவில் தமிழ்மொழி தீட்டா?

முனைவர் புதியவன்

 

 தமிழ் மக்கள் இசை விழா என்ற பண்பாட்டு நிகழ்ச்சியை மக்கள் கலை இலக்கிய கழகம் 1994ல் தஞ்சையில் தொடங்கியது. கர்நாடக இசை மரபின் தனித்துவமாகத் திகழ்ந்த ஸ்ரீ சத்குரு தியாகராசர் நினைவாக 1904 இல் தொடங்கிய திருவையாறு ஆராதனை இசை விழாவிற்கு எதிராகத் தொடங்கப்பட்டதுதான் தமிழ் மக்கள் இசை விழா.

 இதன் நோக்கம் தமிழ் மக்களின் இசை கலையை எடுத்துக்காட்டுவது மட்டுமல்ல. மாறாக, தமிழிசையிலிருந்து களவாடப்பட்டதே கர்நாடக இசை என்பதையும் உணர்த்தத்தான். 

 மூளையை வளர்க்காமல் குடுமி வளர்க்கும் பார்ப்பன வன்முறையாளர்கள் தமிழை நீச பாசை என்று அவமதிப்பதை எதிர்த்து கர்ஜிப்பதற்காக மட்டுமல்ல. மாறாக, சமஸ்கிருதம் தேவ பாசை அல்ல என்பதை நிறுவுவதற்காகவும்தான்.

 

 இசை நிகழ்ச்சிகள் உட்பட்ட பண்பாட்டு விழா என்பதன் பொருள் என்ன? சக மனிதர்களின் உணர்வுகளையும் உறவுகளையும் பழைமையின் புண்படுத்தல்களில் இருந்து மீட்டு புதுமையின் பண்படுத்தல்களுக்கு உயர்த்துவதுதான் பண்பாட்டு விழா. 

 வெகுஜன மக்களின் ஆழ்மன உணர்வுகளில் ஆற்றல் மிக்க கருத்துகளை விதைப்பதுதான் கலையின் மகத்துவம். விதைக்கப்பட்ட

 நச்சுக் கருத்துக்கள் நச்சு செயல்களாகவும், நல்ல கருத்துக்கள் நல்ல செயல்களாகவும் விளைகின்றன. அறிவு நிலையில் இருந்து ஆழ்மன உணர்வுவரை பற்றிக்கொள்ளப்பட்ட கருத்துக்களே சமூகச் செயல்பாடுகளாக உருவெடுக்கின்றன.

 அறிவியல் தத்துவமாகிய மார்க்சிய சமூக விஞ்ஞானத்தை இதயமாகத் துடித்துக் கொண்டிருக்கின்ற ம.க.இ.க. மனிதகுல மேன்மையின் கருவியாகக் கலையை இசைத்துக் கொண்டே இருக்கிறது.

 மனித குல தேக்கத்தை இசைக்கின்ற ஆன்மீக பக்தி இசையிலிருந்தும், ஆபாச சீரழிவு கருத்துக்களில் இருந்தும் கலையை மீட்டு புதிய சிந்தனைகளையும் புரட்சிகர கருத்துகளையும் தமிழ் மக்கள் இசை விழாவாக அரங்கேற்றி வருகிறது.

 

 கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்ற முழக்கத்துடன் இயங்குகின்ற மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தமிழ் மக்கள் இசை என்பது கர்நாடக இசையிலும், தெலுங்கு பஞ்சரத்தின கீர்த்தனையிலும், சமஸ்கிருத மந்திரத்திலும் வெளிப்படும் பக்தியின் உள்ளீடு அல்ல. மாறாக, புரட்சிகர கலை உணர்ச்சிகளின் இசை ஜாலங்கள்...

 பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு, நாடு மறுகாலனியாக்கத்தின் மறுப்பு, கார்ப்பரேட் காவி பாசிச எதிர்ப்பு, சாதி வெறி, மதவெறி, ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம், கார்ப்பரேட் லாபவெறி ஆகியவற்றின் இறுதி சடங்கிற்காக ஏற்றப்படும் கொள்ளி நெருப்பு...

 அரச வன்முறைகள், போலீஸ் குண்டாந்தடிகள், கைதுகள், சிறைகள், வழக்குகள் போன்ற இடர்பாடுகளைக் கடந்து நெருப்பாகப் பற்றி படர்ந்த தமிழ் மக்கள் இசை விழாவின் சிந்தனைகள் கிளர்ச்சிகரமானவை!

 

 தமிழே தீட்டு என்றால் தமிழர் கொடுக்கும் பணம் மட்டும் இனிப்பா!

 

 தெய்வங்களுக்கு சமஸ்கிருதமாம் பாடுவதற்கு தெலுங்காம் ஆனால் பேசுவதற்கு மட்டும் தமிழா!

 

 தமிழிசையே தீட்டு என்று ஒதுக்குவது தமிழ் மண்ணிற்கு செய்யும் துரோகம்!

 

கிளர்ச்சிகர சிந்தனைகள் மக்களைப் பற்றிப்படர்வது சவாலாகவே தொடர்கிறது...

 

 பொது உணர்வும், சுய உணர்வும் சாதியாகவும் மதமாகவும் பாலினமாகவும் பிளவுபட்டுள்ள சமூக மனநிலையில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

 

நாம் தமிழ் பேசும் ஒரே இனம்.

 நாம் தமிழினம் என்ற ஒருங்கிணைந்த உணர்ச்சி இல்லாதவர்களாகவும், சர்வதேச நிலையில் உழைக்கும் மக்கள் என்ற வர்க்க உணர்ச்சி இல்லாதவர்களாகவும் கட்டமைந்திருக்கிறார்கள். 

 பிளவுகள் நிறைந்த மக்களை உழைக்கும் வர்க்கமாக ஒன்றிணைக்கும் கருவியாக தமிழ் மக்கள் இசை விழா அமைந்திருக்கின்றது. 

 புரட்சிகர ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மையம் வீதி நாடகங்கள் நிகழ்ந்தன. புரட்சிகர கருத்துகளுடன் ஒயிலாட்டங்களும் நாட்டார் கலைகளும் அரங்கேறின. தோழர் மருதையன் போன்ற அறிஞர்கள் பண்பட்ட வார்த்தைகளால் தீட்டப்பட்ட ஓவியங்களாக பேருரை வழங்கினார்கள். ஆனாலும், புரட்சிகர பாடல்களை வழங்கும் கோவன் குழுவினரின் பாடல்கள் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் ஒலிப்பேழைகளாகவும், பட்டிதொட்டியெங்கும் இசைத்து பறக்கும் புரட்சி குயில்களாகவும் பற்றிப் படர்ந்தன. பாடல்களைப் போர் கருவிகளாக பயன்படுத்தும் மரபிற்குரியவர்கள் என்பதாலும், மக்கள் படும் பாட்டையே நாடெங்கும் புரட்சிகர பாடல்களாக இசைப்பவர்கள் என்பதாலும் மக்கள் பாட்டு இலக்கிய கழகம் என்று பெயர் சூட்டி பாராட்டினாலும் பொருந்தும்.

 

 தமிழ் மக்கள் இசை விழாவின் ஒன்பதாம் ஆண்டு உரையில் தோழர் மருதையன் இவ்வாறு கூறுகிறார்.

' நம் அமைப்பு பிரபலமாகி இருக்கலாம். முன்பை விட புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடியிருக்கலாம். ஆனாலும் நாம் தோற்றுப் போய் உள்ளோம். நம்மால் மகிழ்ச்சி அடைய முடியாது. ஏனெனில், பாசிச பாஜக ஆட்சியைப் பிடித்திருக்கிறது..'

 

 தோழரின் அன்றைய உரை இன்றும் பொருந்துகிறது.

 நாம் கீழடியில் இருந்து இந்திய வரலாற்றை திருத்தி எழுத சொல்கிறோம்..

 தமிழகம் இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது என்கிறோம்..

 பெரியார் பிறந்த மண் என்று இறுமாப்பு கொள்கிறோம்..

 2026 ஜூன் 6 தமிழ் மக்கள் இசை விழாவை கொண்டாடப் போகிறோம்..

 ஆனால் பாசிச பாஜக இன்றும் ஆட்சியில் இருக்கிறது. நாம் மகிழ்ச்சி அடைய ஒன்றும் இல்லை. நாம் தோற்றுப் போய் நிற்கிறோம்.

 

 நமது புரட்சிகர கருத்துகளால் கவரப்பட வேண்டிய இளம் தலைமுறைகள் காவி கார்ப்பரேட் பாசிசப் பேயை எதிர்த்து களமாட வேண்டிய கடமைக்குரியவர்கள். ஆனால் நிலைமை என்ன? அவர்கள் ரசிக மாயையிலும், காட்சி போதையிலும் கஞ்சா மது போதைகளிலும் முடமாகிக் கிடக்கிறார்கள்.

 கருத்தாளுமை மரத்துப்போய் பிம்ப நோய்களில் செத்து கிடக்கிறார்கள்.

 முன்னோர்கள் விட்டுச் சென்ற விடுதலைப் போரின் வீர மரபை தொட்டுத் தொடர வேண்டிய நம் தலைமுறைகள் கார்ப்பரேட் காவி பாசிச அபாயத்தை உணராதத் தலைகளாக இருக்கிறார்கள். அவர்கள் தலைகளில் பிம்பங்கள் வண்ணக் குமிழ்களாகத் திரண்டெழுந்து வெடித்துச் சிதறுகின்றன. இன்ப நோயின் பெருந்திரையில் உண்மை உலகின் சவால்களைக் காணத் தவறுகிறார்கள். செயல்களாக விஸ்வரூபம் எடுக்கும் எந்த கருத்துக்களும் அவர்கள் தலைகளில் உதயமாவதே இல்லை. 

 

 தலைமுறைகள் எழா விட்டால் நடைமுறை உலகம் பிழைக்காது.

 நடைபிணமாகியுள்ளது நாடு. சமூகப் பொருளுற்பத்தி முதல் வாழ்வியல் பண்பாட்டு அரசியல் முழுமையிலும் கார்ப்பரேட் காவி பாசிச நஞ்சு பரவியிருக்கிறது. எல்லா முனைகளிலும் நஞ்சை முறிக்கும் புரட்சிகர மருத்துவம் அவசியப்படுகின்றது. ஆனால், வாழ்வா சாவா போரில் துயருற்றுள்ள மக்களை இவர்கள் எண்ணத் துணியவில்லை.

 மறுகாலனியாக்கத்திற்கும் கார்பரேட் காவி பாசகத்திற்கும் எதிரான விடுதலைப் போரில் களமாட வேண்டிய இவர்கள் காட்சி போதை வன்முறைகளில் விளையாடிச் சாகிறார்கள். 

 மாவீரர்களாக எழுந்து வராமல் உடை உடுத்திய மந்தைகளாகத் திரிகிறார்கள். 

 கார்ப்பரேட் லாப வெறியையும் அதன் பாசிச பாஜகவையும் வீழ்த்துகின்ற பெருவிழாவாகத் தமிழ் மக்கள் இசை விழாவை நடத்திக் காட்டுவதும், இளம் தலைமுறைகளையும் உழைக்கும் மக்களையும் உசுப்பேற்றி புரட்சிகர உணர்வூட்டி எழுப்பி காட்டுவதும் புரட்சிகர அமைப்புகளுக்குக் காலம் முன்வைத்துள்ள சவால். 

 மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இசை பாடலுக்குக் காலமே காலனாக எழுந்து விடுதலை கூத்து ஆடும். காலத்தில் வினையாற்றும் புரட்சிகர கலைஞர்கள் நிச்சயம் சாதிப்பார்கள். மக்கள் கலை இலக்கியக் கழகம் நிகழ்த்தவிருக்கும் 2026 ஜூன் 6 தமிழ் மக்கள் இசை விழாவில் விடுதலை கூத்து விஸ்வரூபம் காட்டும்.

 

வெளிவந்த விவரம்

யாவரும் கேளீர்

மே 2026 பக் 41-43









No comments:

Post a Comment

தத்துவ அறிவியல்

  தத்துவ அறிவியல்    முனைவர் பட்டம் என்பதே கல்வியில் மிக உயர்ந்த பட்டமாக திகழ்கிறது. எந்தத் துறை சார்ந்த ஆராய்ச்சி கல்வியில் ஈடுபட்டாலும...

அதிகம் பார்க்கப்பட்டவை