வாசிப்பு தியானம்
முனைவர்
புதியவன்
சின்ன கண்களுக்குப்
பொருத்தமான சின்ன கண்ணாடி. சிவப்பு நிறம்
சூழ்ந்த
கண்ணாடியை
இனியன் அணிவதே இல்லை. கழுத்தில் தொங்க விடுகிறான். அம்மா கண்டித்தால் கண்களுக்கு மிக
நெருக்கமாக ஏந்திக்கொள்கிறான் மூக்கில். ஆரம்பக் கல்வியில் இருந்து ஒன்றாம் வகுப்பிற்கு
செல்லவிருக்கிறான்.
இவனது அக்கா
மகிழினி மூன்றாம் வகுப்பு முடித்தவள். அழகிய பெரிய கண்கள். கண்களுக்கு பொருத்தமாகக்
கண்ணாடியை நேருக்குநேர் அணிந்திருப்பாள்.
இந்தக் குழந்தைகளுக்கு
இந்த வயதில் நான்கு கண்கள். எல்லாம் திறன்பேசி செய்த பாவம். ஆனால், பெயருக்கேற்ற சகோதர
பொருத்தம். இருவரும் இனிமையும் மகிழ்ச்சியுமாக விளையாடுவார்கள்.
ஓசைக்கு
பாட்டு பாடுவது ஒரு விளையாட்டு...
வார்த்தைக்கு
எழுத்துகள் சொல்வது ஒரு விளையாட்டு...
சூழல்களை
விடுகதையாக்கி விடை போடுவது ஒரு விளையாட்டு...
தெரிந்த
கதையை நாடகமாக நடித்து விளையாடுவது ஒரு விளையாட்டு...
இப்படி
பல விளையாட்டுகள்...
நண்பர்கள்
பலர் கூடிவிட்டால் ஆளுக்கு ஒரு விளையாட்டு. அவரவர் விளையாட்டுக்கு அவரவர் தலைவர். ஒவ்வொரு
தலைவரும் நண்பர்களுக்கு விளையாட்டு விதிமுறைகளைச் சொல்வர். எல்லோரும் தலைவர் சொல்லும்
விளையாட்டு விதிகளுக்குக் கட்டுப்பட்டு விளையாடுவார்கள். ஒவ்வொரு விளையாட்டையும் எல்லோரும்
சுவைத்து மகிழ்வார்கள். தலைவர்களாகவும் நண்பர்களாகவும் கொண்டாடி இசைவார்கள்.
யார்
முதல்?.. யார் கடைசி?..
சில பாடல்களை
முடிவெடுக்கப் பயன்படுத்துவார்கள்.
ஒரு பாடல்
சொல்லட்டுமா?
“முட்ட முட்ட
தலைவலி
மோதிப்பாரு
காவடி
கா..
வ..
டி..
காவடி”
(நீ போய்ட்ட... )
முதலில்
போனவரிலிருந்து கடைசி போனவர்வரை. முதல் கடைசி என்று வரிசைப்படி விளையாடுவார்கள்.
சகோதரர் இருவரும்
அடிக்கடி விளையாடும் விளையாட்டு ஓசைக்குப் பாட்டு பாடுவது.
“சேட்டை
பண்ணாத பாப்பா” என்று பேசும்போது. பேச்சிற்குள் ஒரு ஓசையை விளையாடுவார்கள்.
‘சேட்டை’ என்ற சொல்லில் ‘டை’ ஓசையை மட்டும் குறிப்பிட்டு
பாடச் சொல்வாள் மகிழினி.
இனியன்
பாடத் தொடங்குவான்.
“ட..டா..டி..டீ..டு..டூ..டெ..டே..டை..டொ..டோ..டௌ” என்று ராகத்துடன் பாடி முடிப்பான்.
இனியன்
கேட்டால் மகிழினி பாடுவாள்.
இனியனுக்கு
ஓசைகேற்றபடி பாடத் தெரியும். ஆனால், எழுத்து தெரியாது.
மகிழினிக்கு
பாட்டும் தெரியும், எழுத்தும் தெரியும். அவள் படிக்கும் ஆங்கிலவழிக் கல்வியில் யாருக்கும்
தாய்மொழியை ஓசையுடன் எழுதி பழக்கமில்லை. தாய்மொழியை இவ்வளவு அழகாக படிக்கிறாளே என்று
பள்ளி ஆசிரியர்களே வியக்கிறார்கள். தாய்மொழி விளையாட்டும் எழுத்தும் அவளுக்கு
வாசிப்பு தியானத்திலிருந்து வளர்ந்தது.
வாசிப்பு தியானமா?
அப்படியென்றால் கடவுள் வழிபாடா? தியானம் என்றால் கடவுள் முன்பு அமைதியாக அமர்ந்திருப்பதுதானே.
வெறுமையில்
கடவுளை நினைத்துக் கொண்டு அமர்ந்திருப்பார்களே..
மனதை
ஒருமுகப்படுத்தி மூச்சின் காற்றோட்டத்தில் கவனம் செலுத்துவார்களே..
இரு புருவங்களுக்கு
நடுவில் ஒரு ஜோதியை நெற்றி பொட்டில் நிறுத்தி கற்பனையில் அமர்ந்திருப்பார்களே..
ஏழு சக்கரங்களில்
குண்டலிங்க சக்தியை மேலே ஏற்றுவார்களே..
என்ன
என்னவோ புரியாதபடி கற்பனை செய்யச் சொல்வார்களே...
குழப்பம் வேண்டாம்.
இவைகள் எல்லாம் ஆன்மீகத் தத்துவங்களின் தியானம். மகிழினி பயிற்சி செய்வதோ அறிவியல்
தத்துவங்களின் தியானம்.
கடவுளின் முன்னால்
அமைதியாக அமர்ந்து ஒருமுகப்படுவது அல்ல. புத்தகங்களின் முன்னால் அமர்ந்து ஒருமுகப்படுவது. மகிழினியும்
இனியனும் கடவுளின் முன்னால்கூட அமைதியாக தியானம் செய்பவர்கள் அல்ல என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.
அன்று மாலை
சித்திரை விழாவின் வீதி உலா. சாமி பார்க்க கிளம்பினார்கள். வீட்டில் சாமியை அழைத்து
தெருவில் இறங்க வேண்டும். மகிழினியும் இனியனும் பெரியோர்களைப் போன்ற மிடுக்குடன் சாமி
கும்பிடத் தொடங்கினார்கள். பாடுதலையும் வேண்டுதலையும் அதிரும் குரலில் தந்தையைப்போல
தொடங்கினார்கள்.
“பாலும் தெளித்தேனும்” என்ற பாடல் சங்கத்தமிழை
வேண்டி முடித்தது. பாடலைத் தொடர்ந்து அதிரும் குரலில் கடவுளிடம் சத்தம் குறையாது வேண்டினாள்.
மகிழினியின் வேண்டுதலுக்கு ஏற்றபடி..பின்பாட்டு.. பாடினான் இனியன். அவர்களின் வேண்டுதல்
தந்தையிடமிருந்து பழகிய பழக்கமாம். குறைந்தது 15 நிமிடமாவது தொடர்ந்திருக்கும்.
" நதிகளாக
ஓடுகின்ற மதங்களுக்கு
கடலாக ஆடிவரும்
கடவுளே..
இந்த மக்களின்
கோரிக்கை எல்லாம் நல்லபடியாக நிறைவேற வேண்டும் கடவுளே..
நானும் என்
இணையரும்.. என் அம்மாவும் அப்பாவும்.. என் குழந்தைகளும்.. அக்கா, தங்கை...
அண்ணன் தம்பி.. உற்றார் உறவினர்கள்.. நண்பர்கள்.. அண்டை வீட்டுக்காரர்கள்.. உள்ளூர்
காரர்கள் வெளியூர் காரர்கள்.. உள்நாட்டுக்காரர்கள் வெளிநாட்டுக்காரர்கள்..
சர்வதேச
உலகில் வாழும்.. சிந்தித்துக் கூடி உழைக்கக்கூடிய மக்கள் அனைவரும்..
மகிழ்ச்சியாக..
மன நிம்மதியாக.. தம் தேவைகளை எல்லாம்.. வாங்கி மகிழ கூடிய.. ஆற்றல் மிக்கவர்களாக..
சீரும் சிறப்பும் பெற்று வாழ.. உங்கள் அருள்.. என்றென்றும் வேண்டும் கடவுளே..
மனிதர்கள்
ஒற்றுமையாக.. கூடி சிந்தித்து.. உழைத்து வாழக்கூடிய.. ஆற்றல்மிக்க உயிரினங்களாக.. இயற்கையும்
சமூகமும்.. பகை இல்லாத நண்பர்களாக.. நீடித்து வாழ.. அருள் காட்டுங்கள் கடவுளே..
பிறக்கும்போதே..
உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்றும்.. நம்ம ஆளுக வேற ஆளுக என்றும்.. சகமனிதர்களிடம் பாகுபாடு
பார்க்கும்.. மன நோயை தருகின்ற.. சாதி வெறியை... பிறக்கும்போதே பெண்கள் கீழானவர்களாகவும்..
இழிவானவர்களாகவும்.. ஒழுக்கக்கேடானவர்களாகவும்.. இருக்கிறார்கள் என்றும்.. ஆண்கள் மட்டும்..
உயர்வானவர்கள் என்றும்.. மூடத்தனமாகச் சொல்கின்ற..
சாதிவெறி மதவெறியை.. ஒழித்துக் காட்டுங்கள் கடவுளே..
சாதிவெறி
இல்லாமல்.. மதவெறி இல்லாமல்.. பண வெறி இல்லாமல்.. லாப வெறி இல்லாமல்.. போர்வெறி இல்லாமல்..
போதை வெறி இல்லாமல்.. அதிகாரவெறி இல்லாமல்.. அடிமைத்தனம் இல்லாமல்.. ஏழை பணக்காரர்
என்ற பாகுபாடு இல்லாமல்.. ஆண்களும் பெண்களும் ஏற்றத்தாழ்வு இல்லாமல்.. மனம் ஒத்து வாழ்கின்ற
காதலர்களை.. ஆணவப் படுகொலைகள் செய்யாமல்..
சொத்தாதிக்க வன்முறைகளும்.. படுகொலைகளும் நிகழாமல்.. மக்கள் எல்லோரும்.. சகோதரர்களாகவும்..
சமத்துவமாகவும்.. மனிதகுலத்தின் அறம் போற்றி.. சமூகநீதி காத்து.. ஒற்றுமையாகவும்..
இயற்கையின் பேரன்பாகவும்.. இயற்கையின் அங்கமாகவும் அரணாகவும்.. வாழச் செய்யுங்கள் கடவுளே..
இந்த உலகத்தை
பாதுகாத்து.. நாங்களும்.. எங்கள் அடுத்த தலைமுறைகளும்.. நிம்மதியாக வாழ்கின்ற.. ஒரு
நல்ல உலகத்தை.. உருவாக்கி பெறுவதற்கு.. ஆற்றலும் வளமும்.. கொடுத்து உதவுங்கள் கடவுளே..
போதைப் பொருள் ஆசையிலும்.. காட்சி போதை வன்முறைகளிலும்.. பிம்ப நோய்களிலும்.. சீரழிந்து
வாழ்வை இழக்கின்ற.. மனதாலும் அறிவாலும்.. செத்துப் போகின்ற.. இன்றைய இளம் தலைமுறைகளை..
குணப்படுத்துங்கள் கடவுளே.. நல்ல சிந்தனை திறனும்.. தாய்மொழித் திறனும்.. செயல் திறனும்..
உள்ளவர்களாக உருவாக்குங்கள் கடவுளே..
இந்த
உலகத்தை.. படைத்தவர் நீங்கள்.. பாதுகாக்க வேண்டியது.. உங்கள் பொறுப்பு.. பொறுப்பைக்
காப்பாற்றி.. உங்களை எப்போதும்.. நிரூபித்துக் கொண்டே இருங்கள் கடவுளே..
மனிதர்களின்
எல்லா மூடத்தனங்களும்.. மூடநம்பிக்கைகளும் ஒழிந்து..
அறிவில் மேன்மை அடைய.. வழிகாட்டுங்கள் கடவுளே..
எல்லாம் வல்ல
கடவுளே.. எங்களுக்கு வெளிச்சம் காட்டுங்கள்.."
இந்த வேண்டுதலை
அவர்கள் முடித்தபோது எனக்கு சிலிர்த்தது. அவள் தந்தை என்ன செய்திருக்கிறார் என்பதை
வியக்கின்றேன். குடும்பத்தால் களைய முடியாத ஒரு பண்பாட்டைக் கச்சிதமான கருவியாகப் பயன்படுத்திய
விதம் புரிந்தது. அப்பா கடவுளிடம் வேண்டுவதாகக் குழந்தைகள் நினைத்துக் கொண்டிருக்கின்றன.
ஆனால், கடவுள் முன்னே அமர்ந்து குழந்தைகளிடமல்லவா வேண்டியிருக்கிறார். சமூக உணர்வுகளைத்
தேவைகளாகவும் பொறுப்புகளாகவும் பிஞ்சு உள்ளங்களில் பசுமையாக விதைத்திருக்கிறார். அவளது
சத்தமான வேண்டுதல்களைப் போலவே வாசிப்பு தியானமும் சத்தங்களால் நிறைந்திருந்தது.
இன்றைய வீதி
உலாவில் இருவருக்கும் வேசம். மீனாட்சியாக மகிழினியும் கருப்பசாமியாக இனியனும் ஆரவாரத்துடன்
அவதரித்து இருந்தார்கள். ஆயிரம் ஆயிரம் மீனாட்சிகளும் கருப்பணசாமிகளும் இன்னும்
பல கடவுளர்களும் வலம் வருகின்ற வீதி உலா. வடக்கு மாசி வீதி இராமாயணச்சாவடியில் இருந்து
உலாவில் பங்கேற்றார்கள். அம்மன் சன்னதி வரை சென்று முடிப்பதாகத் திட்டம். கீழமாசி வீதியை
நெருங்கியவுடன் மகிழினி நெறிப்படுத்தத் தொடங்கினாள். "வாசிப்பு தியானத்திற்கு
நேரமாச்சு. வாங்க போயிரலாம்". அதிக கூட்டத்திலிருந்து தப்பிப்பதற்கோ என்னவோ. இனியனும்
சொல்கிறான் " வாங்க போயிரலாம் ".
பக்த தலைகளுக்கு
இடையில் நீந்தியபடி வீடு சேர்ந்தார்கள். வேசம் களைத்து குளித்தார்கள். வாசிப்பு தியானம்
தொடங்கியது. வீட்டு நூலகத்திலிருந்து சில புத்தகங்களை நடுவில் வைத்து வட்டமாக
அமர்ந்தார்கள்.
அம்மாவின் கையில்
'தமிழகத்தில் தொல்குடிகளும் காடுகளும்'. இது வண்ணமயமான புகைப்படங்கள் நிறைந்த அழகான
ஆவணப் புத்தகம்.
அப்பாவின் கையில்
' தொல்காப்பியம்'. இது கலை இலக்கியமாகவும் அறிவியல் இலக்கியமாகவும் தமிழர்களுக்குக்
கிடைத்த மூத்த இலக்கண நூல்.
இனியனின் கையில்
'சிங்க ராஜா'. இது வண்ண ஓவியங்களுடன் அமைந்த சிறுவர் இலக்கியம்.
மகிழினியின்
கையில் 'மார்க்சியம் அவசியம்'. இது வண்ணங்கள் இல்லாத கருப்பு வெள்ளை நிறத்தில்
சிறுவர்களை ஈர்க்கும் தன்மையற்ற மார்சிய அறிவியல் தத்துவம் குறித்த குறுகிய
நூல்.
எனக்கு ஆச்சரியம்.
இந்த நூலை எப்படி தேர்ந்தெடுத்தாள். ஆர்வமாக படிக்கத் தொடங்கி விட்டாளே! எப்படி?
“ஔவை பாட்டி,
தொல்காப்பியர் தாத்தா, திருவள்ளுவர் தாத்தா, மார்க்ஸ் தாத்தா, அம்பேத்கர் தாத்தா, பெரியார்
தாத்தா, பகத்சிங் மாமா, சார்லி சாப்ளின் மாமா....” இப்படியாக அறிமுகத்தை உறவு
முறையில் பழக்கப்படுத்திய தந்தையின் விளைவோ என்று அதிசயித்தேன். நிச்சயமாக இருக்கலாம்.
கவர்ச்சியும்
பொலிவும் அற்ற காரல் மார்க்ஸின் படத்தையும், மார்க்சியம் என்ற பெயரையும் அடையாளம் கண்டு,
நிறைந்த ஆர்வத்துடன் படிக்க தொடங்கிவிட்டாளே!
அன்றைய வாசிப்பு
தியானத்திற்கு தலைவர் மகிழினிதான். மணியைப் பார்த்து திட்டத்தைச் சொல்கிறாள்.
“பெரிய முள்ளு
1ல் இருக்கு. 4க்கு வரும்வரை தியானம் செய்யணும். அப்புறம் பேசணும்.”
15 நிமிடமாக
எல்லோரும் வாசிப்பு தியானத்தில் மூழ்கிக் கிடந்தார்கள்.
படங்களைப் பார்த்து
இனியன் கற்பனையிலேயே கதைகளை உருவாக்கி புத்தகத்துடன் உரையாடிக் கொண்டிருந்தான்.
ஊராளி பழங்குடிகளின்
திருமணச்சடங்கு பற்றி சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தார் அம்மா.
சந்தேகத்திற்கு
பதில் கூறிவிட்டு அதிர வசிக்கும் மகிழினியை வியந்து கவனித்துக் கொண்டிருந்தார் அப்பா.
" மார்க்சியம்,
தத்துவம், இலக்கியம், அரசியல், புரட்சி, லெனின், உழைப்பு, சுரண்டல், வர்க்கம், முதலாளி,
பாட்டாளி... "
அவளது பிஞ்சு
உதடுகள் உலகைப் புரட்டும் வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டிருந்தன. பெரிய முள் 5ல் நிற்பதை
அப்பா சுட்டி காட்டினார். அவளால் வாசிப்பை நிறுத்த முடியவில்லை. கவனம் சிதறாமல் அந்தப்
பக்கத்தில் எஞ்சி இருந்த நான்கு வாக்கியங்களை உச்சரித்து முடித்தாள். வாசிப்பு தியானத்தின்
நிறைவு பகுதிக்கு வந்திருந்தார்கள். வாசிப்பு அனுபவங்களை உரையாடுகின்ற தருணம்.
ஊராளி பழங்குடிகள்
பற்றிய கதையைச் சொன்னாள் அம்மா.
படங்களைப் பார்த்து
புரிந்து கொண்ட சிங்கராஜா கதையை அழகாக சொல்லி நன்றி கூறினான் இனியன்.
ஒன்றறிவதுவே
என்ற தொல்காப்பியப் பாடலைப் பாடி விளக்கினார் அப்பா.
மகிழினியோ பேச
இயலாமல் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் இயலாமையின் வருத்தம் தொற்றிக் கொண்டிருந்தது.
அவள் எளிதாகப் பேசுவதையா வாசித்தாள். அவளது ஆசிரியர்களே படித்து விளக்க இயலாத மார்க்சிய
அறிவியல் தத்துவத்தை அல்லவா வாசித்திருக்கிறாள்.
மகிழினியின்
இயலாமையை உடைக்க முன்வந்தார் அப்பா.
அட! என் செல்லப்
பிள்ளையே! நீங்க வாசிச்சது மார்சிய அறிவியல் தத்துவம். அதை உச்சரித்து வாசித்ததே
பெரிய திறமை. அதை எளிமையாக பேசிவிட முடியாது. ஆனால், தொடர்ந்து வாழ்க்கையோடு இணைத்து
படித்தால் எளிமையாகவும் இனிமையாகவும் மார்க்சியம் வசப்பட்டுவிடும். உன் சிந்தனைகளும்
செயல்களும் உலகத்தையே பண்படுத்தத் தொடங்கிவிடும். உன்னால் மக்களுக்கு நல்லுலகம் எட்டிவிடும்.
இனியனுக்கும்
அம்மாவுக்கும் மார்சியம் பற்றி ஒன்றும் தெரியாது. நீ படித்ததால் உனக்குத் தெரியும்.
நான் கேள்வி
கேட்கிறேன்.. நீங்க விடை கண்டுபிடிங்க பார்ப்போம்...
அறிவியல் தத்துவத்தின்
தந்தை யார்?
ஜேம்சா / மார்க்ஸா
மார்க்ஸ் என்று
பாடினாள் மகிழினி
மார்க்சியத்தை
நடைமுறையில் நிரூபித்தவர் யார்?
லெனினா / டார்வினா
லெனின் என்று
பாடினாள் மகிழினி
சமூகத்தையே
மாற்றுவதை குறிக்கும் சொல் எது?
முயற்சியா
/ புரட்சியா
புரட்சி என்று
பாடினாள் மகிழினி
முதலாளிகள்
பாட்டாளிகள் என்பது என்ன?
வர்க்கமா /
சொர்க்கமா
வர்க்கம் என்று
பாடினாள் மகிழினி
இந்தப் பதில்கள்
மார்க்சியத் தகவலறிவின் தொடக்கமாயினும் மகிழ்ச்சியின் உச்சமே. ஒவ்வொரு பதிலுக்கும்
அவளைக் கைதட்டி கொண்டாடினார்கள். நாம் வாசிப்பு தியானத்தால் அதிகம் கற்றுக் கொண்டிருக்கிறோம்
என்பதை மகிழ்ச்சியாக உணர்ந்தாள் மகிழினி. அவளது வாசிப்பும் சிரிப்பும் தலைமுறைகளுக்குப்
பாடம் ஆகின்றன.
மகிழினியிடம்
கற்ற வாசிப்பு தியானத்தைத்தான் எங்கள் கல்லூரிக்கும் பயன்படுத்துகிறோம்.
சிந்தனைத் திறனும்
கருத்தியல் திறனும் இல்லாத மாணவர்களின் நிலையை மாற்றுவதற்கான முன்னெடுப்பாக இந்த வாசிப்பு
தியானத்தைப் பயன்படுத்துகிறோம்...
காட்சி போதை
வன்முறை விளையாட்டுகளால் பிம்ப நோய்க்கு பலியான மாணவர்களுக்கு அருமருந்தாக இந்த வாசிப்பு
தியானத்தைப் பயன்படுத்துகிறோம்...
வாசிப்பு தியானத்தில்
பாடப்புத்தகங்களை பயன்படுத்தக் கூடாது.
பல்வேறு துறை
சார்ந்த புத்தகங்களை பயன்படுத்த வேண்டும்.
மனித குலத்தை
மேன்மை படுத்துகின்ற கலை மற்றும் அறிவியல் இலக்கியங்களைப் பயன்படுத்த வேண்டும்.
வாசிப்பு
தியானத்தில் தொடர்ந்து 15 நிமிடமாவது ஈடுபட வேண்டும். நாளொன்றுக்கு மூன்று முறையாவது
வாசிப்பு தியானத்தில் பங்கேற்க வேண்டும்.
வாசித்த
அனுபவங்களை உறுப்பினர் குழுவில் உரையாட வேண்டும்.
வாசித்து
உரையாடும் அனுபவங்களால் மாணவர்கள் பிம்பநோயிலிருந்து தப்பித்து குணமாகி வருகிறார்கள்.
வாசிப்பு
தியானம் படிப்படியாக வளர்ந்து எழுத்து தியானமாகவும், வாசிப்பு மற்றும் எழுத்து விளையாட்டாகவும்
பரிணமித்துள்ளது.
இத்தகைய
பரிணமிப்புகள் நல்லுலகை பிரசவிப்பதற்கான புதிய பண்பாடுகளாக மலர்ச்சியடையத் தொடங்கியுள்ளன.
எமது நாட்டுநலப்
பணித்திட்ட மாணவர்களுக்கு மட்டுமல்ல. உங்களுக்கும் இந்த வாசிப்பு தியானம் வாழ்க்கை
கவசமாகும். புகழ்மிக்க அறிவு நாணயத்தை நிச்சயம் வழங்கும். அந்த நாணயத்தின் இரு பக்கங்களாகக்
கருத்தியல் திறனும் கற்பனை வளமும் சுழன்றுகொண்டே இருக்கும்.
வாசிப்பு தியானம்
என்பது அறிவின் சுழற்சி...
அறிவின் சுழற்சியே
செயலின் புரட்சி!
No comments:
Post a Comment