Monday, June 8, 2026

கற்றதனால் ஆய பயன்

 கற்றதனால் ஆய பயன்

 முனைவர் புதியவன்

 

 அப்பாவிடம் எங்க அம்மா சொல்வாங்க. ஏங்க இவனுக்கு பரோட்டா கடைக்காரர் மகளைப் பார்த்து கட்டிக் கொடுக்கணும். மூணு நேரமும் புரோட்டாவா தின்பான்.

 விளையாட்டுக்குச் சொன்னாலும் நடந்தா நல்லாருக்குமே என்று ஆசைப்பட்டதுண்டு. அந்தச் சிறுவயதில் பெண்ணை விட புரோட்டாவை விரும்பி இருக்கிறேன்.

 

 சிறுவயதில் பெண்ணின் மீது விருப்பம் வருமா என்று நினைக்கிறீர்களா. நான் இரண்டாம் வகுப்பிலேயே மூன்றாம் வகுப்பு சுதாவை காதலித்தவன். நாலாம் வகுப்பில் ஜீவா. ஐந்தாம் வகுப்பில் சரண்யா, கீர்த்தனா, தீபிகா. காதலுக்கு வயது எட்டும்  முன்பே எல்லோரையும் காதல் செய்த பருவம்.

 

 நவகிரக தெய்வங்களின் சுற்றுச் சுவரில் திரிஎண்ணெயால் அந்தப் பெண்களின் பெயர்களையும் எழுதி இருக்கிறோம். அந்தக் குழந்தைகளெல்லாம் நான் குழந்தையாக இருந்தபோது பெண்களாகத்தான் தெரிந்தார்கள். அதாவது என் நண்பர்களுடன் சேர்ந்து எழுதி இருக்கிறோம். கடவுள் அருளால் யாருக்கு யார் கிடைப்பார்களோ. யார் கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ளும் ஒப்பந்தத்துடன் நண்பர்களுடன் போட்டிப்போட்டு  காதலித்திருக்கிறோம்.

 

இன்று நினைத்துப்பார்த்தால் அசிங்கமாக உணர்கிறேன். எப்படி இப்படி கீழ்த்தரமான உணர்வுநிலைக்கு ஆட்பட்டேன். இதில் நான்காம் வகுப்பு காதல் கடிதத்தில் ஆபாச சொற்களை நிறைத்து எழுதியதை நினைத்துப் பார்க்கிறேன். இன்று நினைத்தால் என்மேல் எனக்கே அருவெறுப்பாய் இருக்கிறது. என் கடிதம் சிக்காததால் நான் தப்பித்தேன். என் நண்பர்கள் ஆசிரியரிடம் வாங்கிய இடிகளை இன்று நினைத்தாலும் புல்லரிக்கிறது. ஆசிரியரின் மகளுக்கல்லவா எழுதியிருந்தார்கள். ஆனால், இயல்பாக ஆழ்மன விருப்பத்திலிருந்து எழுதப்பட்ட கடிதம். எப்படி ஆபாச வார்த்தைகளால் நிறைந்திருந்தன. ஆபாச ஊடகங்களைத்தான் சொல்ல வேண்டும்.

 

குழந்தைகளின் பிஞ்சு உள்ளத்தில் பெண்களை ஆபாசப் பொருட்களாக உணர வைத்தது யார் குற்றம்? ஆபாச உணர்ச்சிகளை சினிமாத்தனங்களில் இயல்பாகப் பரப்பியது யார் குற்றம்? சீரழிவான குற்ற நடத்தைகளை ஊடகங்களால் ஊடுருவி இயல்பாக விதைத்தது யார் குற்றம்? பலகோடி மனங்களில் ஆபாச உணர்ச்சிகளையும் கருத்துக்களையும் ஆழமாக விதைத்துச் செல்லும் பொது ஊடகங்களைக் கண்டிக்காதது யார் குற்றம்? மக்களின் ஆழ்மன விதைப்புகளுக்கு ஆட்படும் எல்லா உணர்ச்சிகளும் கருத்துகளும் இயல்பான செயல்களாகவே விளைகின்றன. நல்லுலகக் கனவுகளை விதைத்திருந்தால் பிஞ்சு விரல்களால் நல்லுலகையே செதுக்கத் தொடங்கியிருப்போம். பிஞ்சு உள்ளங்களில் நச்சு விளைச்சல்களுக்கு நாங்கள் எப்படி பொறுப்பாவது. சமூகத்தில் வேர் பிடித்துள்ள எல்லா ஒழுங்கீனமும் பிஞ்சுகளிடமிருந்தே வெளிப்படத் தொடங்குகின்றன.

 

 சினிமா படக்காட்சியில் உருகும் நாயகனைப்போல அன்று எனக்கும் காதல் பித்து ஏராளம். எனக்கு நினைவு சரியென்றால் இரண்டாம் வகுப்பில் இருந்தே காதல் பித்து வந்துவிட்டது. ஆனால் புரோட்டா பித்து எப்போது வந்தது? என் நினைவுக்கு எட்டாத காலம் தொட்டு வந்திருக்கிறது. 

 

என் பெரியப்பா சித்த வைத்தியர். புரோட்டா சாப்பிட்டால் மலக்குழாய் பாதிக்கப்படும். புரோட்டா சாப்பிட்டால் பலவிதமான நோய்களுக்கு ஆளாக நேரும். எங்க அப்பாவுக்குப் பலவிதமாக வகுப்பெடுப்பார். எப்போதாவது சாப்பிட வேண்டிய நிர்பந்தம் இருந்தால் இரண்டு மடங்கு சால்னா குழம்பில் ஊற வைத்து சாப்பிட வேண்டும் என்று பரிகாரமும் சொல்லியிருக்கிறார்.

 

என் அப்பாதான் புரோட்டா பிரியராயிற்றே. பரிகாரத்தைப் பற்றிக்கொண்டே அடிக்கடி சாப்பிடுவார். நான் அவருக்குப் போட்டியாக வளர்ந்த பிறகு செலவைக் கட்டுப்படுத்த புரோட்டாவைக் குறைத்துக் கொண்டார். மற்றபடி தவறு என்பதற்காக அல்ல. ஏனெனில் பெரியப்பா கூறும் அறிவுரை எங்கள் அறிவு நிலையிலேயே தேங்கிவிடும். ஆழ்மனதில் பற்றிக்கொள்ளப்படாத எந்த அறிவும் செயலாக விளைவதில்லையே.

 

அப்பா வாங்கி வரும் புரோட்டாவிற்காக வாசல் கதவில் காத்திருப்பேன். புரோட்டா சாப்பிடும் கனவுடனேயே படிக்கட்டில் தூங்கி இருப்பேன். காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் அழுவேன். நேற்று புரோட்டா வாங்கித் தருவதாக ஏமாற்றி விட்டீர்கள் என்பது என்பாடு. அம்மா சிரித்துக் கொண்டே சொல்வார். நீ தூங்கிட்டே. எழுப்பி ஊட்டி விட்டேனே. தூங்கிக்கிட்டே அம்புட்டையும் முழுங்கிட்டே! 

 

எனக்கு பேரதிர்ச்சி ஆகிவிடும். எவ்வளவு எட்டினாலும் புரோட்டா சாப்பிட்ட நினைவு எட்டவே எட்டாது. தூக்கத்தில் ஊட்டிவிட்டு என்னை ஏமாற்றி விட்டீர்கள். எனக்கு சாப்பிட்டதே தெரியவில்லை. இன்னைக்கு புரோட்டா வேணும். வூம்.. ம்.. என்று அழுவேன். அதெல்லாம் கிடையாது. மாசம் ரெண்டாவது தடவை சாப்பிட்டாச்சு. இனி அடுத்த மாசம் வாங்கி தருவேன். அடிக்கடி புரோட்டா வாங்க காசு மரத்துலயா காய்க்குது என்று திட்டி வீசுவார் அம்மா. 

 

 அம்மா கணக்குப்படி மாசம் ரெண்டுதடவதான் புரோட்டா செலவு. அப்பா வாங்க அம்மா ஊட்டி விடுவார். சாமி உண்டியலில் குறைந்தது மூன்று தடவையாவது அஞ்சு ரூபா திருடிடுவேன். பக்தியோடு மன்னிப்பு கேட்டு திருடுவதால் சாமியும் கோபிப்பதில்லை. மாதம் அஞ்சு தடவையாவது புரோட்டா சாப்பிடலனா மனசு தாங்காது.

 

 ஒருமுறை அப்பா புரோட்டா கடைக்கு அழைத்துச் சென்றார். அவரிடம் காசு இல்லாததால் எனக்கு மட்டும்தான் புரோட்டா. உதயம் ஹோட்டலில் வாழை இலையில் புரோட்டா. ஆறாத சூடுடன் பஞ்சு போல் குவிந்து இருந்தது. கொழுப்பு மிதக்கும் சால்னாவை ஊற்றி பிரட்டினேன். அருகில் குளிர்ச்சியான தயிர் வெங்காயம்.   

 

முதலாளியின் வீட்டுக்கு புரோட்டா வாங்குவதற்காக ஒரு சிறுவன் நிற்கிறான். என் வயது இருக்கலாம். அவன் பார்வை என் இலையின் மீது ஏக்கத்துடன் மிதந்தது. அவன் எச்சில் ஊற சப்புக்கொட்டிக் கொண்டிருந்தான். எனக்கு பாவமாக தெரிந்தது. நான் அவனது உணர்ச்சிகளைக் கடந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். சரியாகச் சொல்வதென்றால் அவனுக்கும் சேர்த்தே சாப்பிடத் தொடங்கினேன்.

 

 என் அப்பாவிற்கும் புரோட்டா பிடிக்கும்தானே. சுவையை எனக்காகச் சிறைபடுத்தியிருந்தார். ஆனால், அந்தச் சிறுவனைப் பார்க்க வைத்து புரோட்டாவை விலாசினேனே. என்னை எப்படி பொறுத்திருப்பார்? என்னை அவரால் ஒப்புக் கொள்ளவே முடியவில்லை.

 

 டேய்! அந்த தம்பி பார்க்கிறான் பாரு. அவனையும் சாப்பிடச் சொல்லு என்றார். நானும் என் குற்றத்தை உணர்ந்தேன். அவனிடம் வா சாப்பிடலாம் என்றேன். அவன் வேண்டாம் என்று வார்த்தையை உதிர்த்தான். ஆனால் மனதையும் சுவையையும் என் இலையின் மீதே வைத்திருந்தான்.

 

 என் அப்பா அவனை மடியில் அமர்த்தினார். ரெண்டு புரோட்டா தாங்கண்ணே. புரோட்டாவும் வந்தது. ஒரு வாய் ஊட்டி விட்டார். மறுவாய் அவனே எடுத்துச் சாப்பிடத் தொடங்கியிருந்தான். அப்பா அவனுக்கும் சேர்த்து கடைக்காரரிடம் 12 ரூபாய் காசு கொடுத்தார். நாங்கள் வேலையை முடித்து வெளியே வந்திருந்தோம்.

 

 பகிர்ந்து சாப்பிடுவதுதான் உயர்ந்த அறிவுடா தம்பி என்றார் அப்பா.

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை” என்ற திருக்குறளைப் பாட்டாகவும் பாடினார். இன்று நம் பிள்ளைகளுக்குப் பகிர்ந்து உண்ணும் வாழ்க்கை இருக்கிறதா?

 

 யாருக்கும் கொடுக்காமல் பார்க்க வைத்து சாப்பிடுகிறார்கள்.

ஒளித்துவைத்தும் மறைத்துவைத்தும் சாப்பிடுகிறார்கள்.

சமூக அக்கறையின் மரணமும்.. சுயநல வெறியின் பிரசவமும்..

இங்கிருந்துதான் தொடங்குகிறது. 

நாளை இந்த வித்தைகளைப் பெற்றோர்களிடமே காட்டத் தொடங்குவார்கள்.

தட்டைத் திருப்பிப்போட்டுத் தட்டுகின்ற வலியைத் தாங்கமுடியாத வேதனையைப் பெற்றோர்கள் உணர்வார்கள்...

பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்குக் கற்றுத் தருகின்ற சுயநல வெறி வாழ்க்கையின் விளைவு மிகவும் அநாகரிகமானது.

பெற்றோர்கள் முதியோர் இல்லத்திற்கு தூக்கி வீசப்படுவார்கள்.

குற்ற உணர்ச்சி துளியும் இன்றி குழந்தைகள் இதைச் செய்வார்கள்.

தம் நுகர்வு போதை வெறிக்காக எத்தகைய படுகொலைகளையும் துணிச்சலாக செய்வார்கள். 

தலைமுறைகள் தலை எடுக்கத் தொடங்கினால் உலகம் தப்பாது.

விபரீதம் உணர்ந்து குழந்தைகளை மனிதர்களாக உயர்த்தப் பழகுங்கள்.

குழந்தைகள் பெற்றோர்களின் சொத்துக்கள் அல்ல.

பழமையை உரமாக்கிக் கொண்டு புதுமையை எட்டும் மனிதகுலத்தின் தொடர்ச்சி. பெற்றோர்களின் வழியாக வெளிப்படும் மனிதகுலத்தின் புதுமைகள்.

நாளைய நல்லுலகக் கனவுகளைச் சுமந்திருக்கும் பேரழகுப் பருவங்கள்.

நல்ல வளர்ப்புமுறை குழந்தைகளை நல்லுலகச் சிற்பிகளாகப் பிரசவித்து காட்டும்.

 

நல்லுலகச் சிற்பிகளால்தான் தாய்மை உணர்ச்சிகளோடு மனித குலத்தையும், 

குழந்தை பாசத்தோடு பெற்றோர்களையும்  பராமரித்து பாதுகாக்க முடியும். மாறாக,  குழந்தைகளைத் தன் சொத்துக்களைப்போலவோ அடிமைகளைப்போலவோ வளர்த்தால் விளைவு விபரீதந்தான்.

இருக்கும் வரை சொத்தா! செத்த பிறகு சொத்தா! என்று கணக்கு போட்டு நாள் குறித்து பெற்றோர்களுக்குக் கொள்ளி வைப்பார்கள். 

சமூகக் குற்றங்களைத் துணிச்சலாக மேற்கொள்வார்கள்.

நாம் இறந்த பிறகும் நம் குழந்தைகளின் நினைவுகளாக வாழ விரும்புவோம் அல்லவா! ஆனால், அவர்களது கேடுகளால் பின்னப்பட்ட உலக நிலைமைகளுக்கும், பொறுப்பற்ற துரோகங்களுக்கும், சமூகக் குற்றங்களுக்கும் நம்மைக் காரணங்களாக்கி நினைவுலகத்திலும் நிம்மதியற்ற  துயரங்களில் நம்மை ஆழ்த்தி விடுவார்கள்.

மீளமுடியாத குற்ற நெருப்பில் நாம் வேகாத கட்டைகளாக முனங்கிக்கொண்டே காலமும் கிடக்க வேண்டியதுதான்.

 

 எனவே குழந்தைகளை சொத்துகளாக வளர்க்காமல் நல்ல மனிதர்களாக உயர்த்த பாடுபடுங்கள்.

 

 நல்ல மனிதர்களாக உயர்கின்ற குழந்தைகளின் அளவுகோல்கள் ஐந்து.

1. நல்லுலகக் கனவு 

2. பன்முகத் திறமைகள் 

3. இலக்கியப் பண்பாடு 

4. முன்மாதிரிகள் பத்து

5. முன்மாதிரியாகத் திகழ்தல்

 

 1.நல்லுலகக்கனவு 

 நம் குழந்தைகள் சமூக மேன்மையின் தேவைகளை ஆழ்மனக்கனவுகளில் உணர்ந்திருக்க உதவ வேண்டும். சாதி வெறியற்ற உலகம், மதவெறியற்ற உலகம், பாலின ஒடுக்குமுறையற்ற உலகம், லாப வெறியற்ற உலகம், ஆதிக்க வெறியற்ற உலகம், போர் வெறியற்ற உலகம், போதை வெறியற்ற உலகம், மகிழ்ச்சியும் ஒழுக்கமும் நிம்மதியும் ஒற்றுமையும் நிறைந்த பேரழகான ஓர் நல்லுலகம்...

இப்படியாக வருங்கால உலகம் பற்றிய பண்பட்டக் கனவுகளை நம் குழந்தைகளின் ஆழ்மனக் கற்பனைகள்  பற்றிக் கொள்வதற்கு உதவ வேண்டும்.

 

2.பன்முகத் திறமைகள் 

 குழந்தைகள் தங்களது தனித்துவங்களையும் பன்முகத் திறமைகளையும் உணர்ந்து செயல்பட உதவ வேண்டும். அவர்களது செயல் திறன்களை அதிகரித்து செயல் தகுதியாக அரவணைக்கும் வாய்ப்புகளை  நாம் வழங்க வேண்டும்.

 

*மொழித்திறன் சார்ந்த திறமைகள் 

*கலைத்திறன் சார்ந்த திறமைகள் 

*அறிவியல் திறன் சார்ந்த திறமைகள்

* உடல் திறன் சார்ந்த திறமைகள்

* மனித உறவுகளின் அணுகுமுறை சார்ந்த திறமைகள்  

* முடிவெடுக்கும் திறமைகள்

* நெறிப்படுத்தும் திறமைகள்

* தலைமைப்பண்பின் திறமைகள் 

* போராட்டத் திறமைகள் 

* எதிர்கொள்ளும் திறமைகள்....

 இப்படியாக பன்முகத்திறமைகளில் சமூகமதிப்பும் தன்னம்பிக்கையும் பெற்றுயர்வதற்கு உதவ வேண்டும்.

 

3.இலக்கியப் பண்பாடு 

 நம் குழந்தைகளை இலக்கியப் பண்பாடு உடையவர்களாக உருவாக்க வேண்டும் . வாசிப்பு தியானம்... எழுத்து தியானம்... செவி தியானம்...  போன்ற தியான பயிற்சிகளின் வழியாக இலக்கியப் பண்பாட்டை அடையச் செய்ய வேண்டும். 

 இலக்கியங்கள் தான் ஒரு சமூகத்தையும் அதன் மனிதர்களையும் பண்படுத்துகின்றன. பண்பட்ட மொழியில் இலக்குகளை வெளிப்படுத்துவதும், இலக்குகளை பண்பட்ட முறையில் முன்னேறி அடைவதும் இலக்கியவழி செயல்பாடுகள் ஆகும். எனவே, நம் குழந்தைகள் நல்ல மனிதர்களாக பண்படுவதற்கு இலக்கியப்  பண்பாட்டில் ஈடுபடுத்த வேண்டியது அவசியம். சமூகம் தேவைகளை உணர்ந்து கலை இலக்கியங்களையும் அறிவியல் இலக்கியங்களையும் தியானித்துப் படித்துச் செயலாற்றுவதற்கான பயிற்சிகளை வழங்க வேண்டும். தன் வாழ்வை நெறிப்படுத்துகின்ற இலக்கியங்களாக குறைந்தது பத்து இலக்கியங்களையாவது நம் குழந்தைகள் பின்பற்ற வேண்டும்.

 

 

4.முன்மாதிரிகள் பத்து

நம் குழந்தைகள் செயல் தகுதி உடைய சமூக ஆளுமைகளாக புகழ் பெறுவது அவசியம். எனவே, தன் நிலையிலும் சமூகத் தேவைகளிலும் இலக்குகளுடைய மனிதராக செயல்படுகின்ற இயல்பைப் பெற்றிருக்க வேண்டும். இலக்குகள் நிறைந்த நம் குழந்தைகளின் ஆளுமை பண்பிற்கு முன்மாதிரிகள் அவசியம். எனவே, நம் குழந்தைகள் தங்களது முன்மாதிரிகளாகக் குறைந்தது பத்து மனிதர்களையாவது கண்டடைந்திருக்க வேண்டும். அவர்களை ஆழ்மனதில் பாடங்களாகப்  பற்றிக்கொண்டு சமூகச் செயல்பாடுகளில் முன்னேற வேண்டும். உள்ளூர் மனிதர்கள் முதல் உலகப்புகழ் பெற்றவர்கள்வரை முன்மாதிரிகளாக இடம் பெற்றிருக்கும்படி நெறிபடுத்த வேண்டும். அப்பா, அக்கா போன்ற இரத்த உறவு முன்மாதிரிகள் பத்தில் இருவராக இருக்கலாம். ஆனால், பரந்த உலக மனப்பான்மையில் இரத்த உறவு கடந்த  முன்மாதிரிகளைக் கண்டடையும் வகையில் நாம் நெறிப்படுத்த வேண்டும்.

 

5.முன்மாதிரியாகத் திகழ்தல்

 நம் குழந்தைகள் தங்களது ஆற்றலும் பேரன்பும் நிறைந்த செயல்களால் புகழ் பெற்றிருக்க வேண்டும். சமூகத் தேவையில் தவிர்க்க முடியாதவர்களாகத் தங்களை நிரூபித்து வாழ வேண்டும். அதற்காகக் குறைந்த பட்சம் பத்து மனிதர்களுக்காவது தங்களை முன்மாதிரிகளாக நிரூபித்திருக்க வேண்டும். தங்களை முன்மாதிரிகளாகக் கருதக்கூடிய பத்து நபர்களையாவது கண்டறிந்து செயல்பட வேண்டும். அவர்களுக்கும் மனிதகுலம் முழுமைக்கும் மேன்மையான செயல்வீரர்களாக வாழ்வதுதான் நல்ல மனிதர்களுக்கு அழகு. 

நம் குழந்தைகள் பேரழகானவர்கள். நாளையத் தலைமுறைகளுக்கும் முன்மாதிரிகளாகத் திகழ்வார்கள்.

காலமும் தலைமுறைகளும் கடந்து இசைக்கும் மனிதகுலத்தின் இசைத்தூண்களாக நீடித்திருப்பார்கள்.

காலத்தின் நீண்ட சுழற்சியில் மனிதகுலத்தின் அறுபடாத தொடர்ச்சியை இயற்கை இசைத்துக்கொண்டே இருக்கும்.

 

 இந்த ஐந்து நிலைகளும் நல்ல மனிதர்களாக உயர்கின்ற குழந்தைகளின் அளவுகோல்கள் மட்டுமல்ல. நல்லுலகத்தை எட்டிப்பிடிக்கும் மனித விருப்பங்களின் அளவுகோல். இயற்கை அழைத்துக் கொள்ளும்வரை ஆகச் சிறந்த மனிதராக வாழ்ந்து முடிவதற்கான அளவுகோல். 

 

 வாழ்க்கை என்பது ஆகச் சிறந்த கல்வி. தன் வாழ்க்கை நெறிகளைப் பின்தொடரும் தலைமுறைகளை உருவாக்காவிட்டால் வாழ்ந்ததில் ஒரு பயனும் இல்லை என்கிறது இரண்டாம் திருக்குறள்.

 கற்றதனால் ஆய பயனென்கொள் வாலறிலன் 

 நற்றாள் தொழாஅர் எனின்

வாழ்ந்ததினால் ஆக வேண்டிய பயன் எதுவென்றால் தம் வாழ்வின் முடிவை அறிந்து, அங்கிருந்து போற்றித் தொடர்கின்ற தலைமுறைகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பதாகக் குறள் அர்த்தப்படுகின்றது.

 

 சுயநல வெறியின் அறிவு 

 தன் கொள்ளியைத் தானே ஏற்றும்...

 

 சமூக அக்கறையின் அறிவு

 நல்லுலகக் கூட்டில் தன்னுயிரையும் கூட்டிச் சேர்க்கும்!

 

நம் குழந்தைகளுக்கு நல்லுலகக் கனவைத் தாய்ப்பாலுடன் ஊட்டுங்கள்...

நம் தலைமுறைகளுக்குக் காலத்தை உணர்த்துங்கள்...

நேற்றைய மரணங்களைக் கடந்து இன்றைய மனிதகுலம் நாளையும் சுழலும்... மகிழ்ச்சியின் சுழற்சியில் இசைபாடும்!

மனிதகுலக்  கனவுகள் நனவுலகில் நடனமிடுவதைக் காலம் பார்க்கத்தான் போகிறது!

 

 

 

No comments:

Post a Comment

கற்றதனால் ஆய பயன்

  கற்றதனால் ஆய பயன்   முனைவர் புதியவன்    அப்பாவிடம் எங்க அம்மா சொல்வாங்க. ஏங்க இவனுக்கு பரோட்டா கடைக்காரர் மகளை ப் பார்த்து கட்டிக் ...

அதிகம் பார்க்கப்பட்டவை