உடலாற்றுப்படை
ஒரு மாணவர்
இடுப்பு வலித்து தொடர்ந்து பத்தாவது நாளாக விடுமுறையானார். அவரை வகுப்பறை நண்பர்கள்
'டேய் உடும்பு' என்பார்கள். உடும்பை போல கச்சிதமாகவும் தசைகளை இறுக்கமாகவும் வைத்திருப்பதால்
அந்தப் பெயராம். உடும்புக்கே இடுப்பு உடைந்தால் உலகம் என்னாவது என்று எல்லோரும் வருந்தினார்கள்.
இமயமலை மட்டும் சற்று மகிழ்ந்த முகநிறைவோடு இருந்தார். உடல் பெருத்து வீங்கி இருந்ததால்
இவரை இமயம் என்கிறார்களாம். பட்டப்பெயர் பண்பாடு கூடாது என்றாலும் இவர்கள் கேட்பதாக
இல்லை.
உணவு இடைவெளியில்
சிங்கப்போட்டி நிகழுமாம். சண்டை செய்கின்ற அசிங்க போட்டிக்கு தான் இப்படி பெயராம்.
உடும்பிடம் சண்டையிட்டுத் தொடர்ந்து சரிந்ததால் இமயத்திற்கு தற்போது பலி தீர்ந்த மகிழ்ச்சி.
உடும்பின் கதையை இமயம் சொன்னார். ஐயா உடற்பயிற்சி
செய்யத் தெரியாமல் தப்பும் தவறுமா செய்துட்டான். அதான் உடுப்புக்கு இடுப்பு போச்சுங்கய்யா.
இரண்டு மாடி வீடு. கீழிருந்து தண்ணீர் அடித்து மாடிப்படிக்கு ஏற்ற வேண்டும். மூன்று
நாளுக்கு ஒரு முறைதான் குடிநீர் வரும். பெரிய பானையில் தண்ணீரை நிறைத்து மாடிக்கு ஏற்றனும்.
குறைந்தது 10 பானையாவது தூக்கிவிடுவான் ஐயா.
நிரம்பிய பானையின்
விளிம்பை விரல் பிடிக்காமல் தூக்குவான். இரண்டு உள்ளங்கையின் சுண்டுவிரல் ஓரங்களைப்
பானையின் கழுத்தோடு நெருக்கிப் பிடித்துக்கொள்வான். அடிவயிற்றில் மூச்சை அடக்கிக்கொண்டு
பானையை நெஞ்சுவரை தூக்குவான். கால் முட்டியை மடக்காமல் இடுப்பைக் குனிந்து வளைத்துக்
கொண்டு பானையைத் தூக்குவான். கையிலும் மார்பிலும் தசை இறுக்கங்கள் எழுந்து நிற்கும்.
குதிங்கால் தரையில் படாமல் விரலை அழுத்திக்கொண்டு படிகளில் ஏறுவான். காண்போர் வியக்கும்படி
தண்ணீரை மாடிக்கு ஏற்றுவான். உடற்பயிற்சி அரங்கில் எடை பயிற்சி போதாது என்று தண்ணீரிலும்
பயிற்சி செய்வான் ஐயா.
எனக்கு புரியவில்லை தம்பி. நன்கு உடற்பயிற்சி செய்த
நண்பருக்கு இடுப்பு வலி ஏன் வந்தது என்றேன்.
கால் முட்டி
மடக்காமல் பானையைத் தூக்கினால் மொத்த எடையும் இடுப்பின் மைய எலும்பைத்தான் தாக்குமாம்
ஐயா. இப்படித்தான் உடும்பிற்கு இடுப்பு உடைந்தது.
உடும்பனின் பரிதாப நிலைக்கு மனம் கலங்கியது. சரியான
உடற்பயிற்சி ஆற்றலைத் தரும் என்பதல்ல செய்தி. தவறான உடற்பயிற்சி ஆபத்தைத் தரும் என்பது
தான் அன்றைய செய்தி.
சித்தர் இலக்கிய வகுப்பு என்பதை மறந்து போனேன். உடற்பயிற்சி
குறித்த உரையாடலாக வகுப்பை அமைத்துக் கொண்டேன்.
மனித உடல் என்பது மற்ற உயிர்களின் உடலை விட தனித்துவம்
நிறைந்தது.
எல்லா உயிரினங்களும் வெளியில் இருந்து உணவை உள்ளே
எடுத்துக் கொள்கின்றன. உணவை செரித்தபின் கழிவாக வெளியே தள்ளுகின்றன.
மனித உடல்களுக்கும் இது பொருந்தும்தான். ஆனால், அதைவிட
சிந்திக்கத் தகுந்த தனிச்சிறப்புகள் ஏராளம் உண்டு.
எடுத்துக்கொண்ட உணவைச் செரித்ததும் மனிதர்கள் எப்படியெல்லாம்
வெளிப்படுத்துகிறார்கள் என்பதை கவனித்து பாருங்கள்.
உழைப்பாக வெளிப்படுத்துகிறார்கள்...
சிந்தனைகளாக
வெளிப்படுத்துகிறார்கள்...
கருத்துக்களாக வெளிப்படுத்துகிறார்கள்... கலைகளாக
வெளிப்படுத்துகிறார்கள்... அறிவியலாக வெளிப்படுத்துகிறார்கள்...
இலக்கியங்களாக
வெளிப்படுத்துகிறார்கள்...
உதவிகளாக வெளிப்படுத்துகிறார்கள்...
கடமைகளாக வெளிப்படுத்துகிறார்கள்...
அக்கறைகளாக வெளிப்படுத்துகிறார்கள்...
ஒற்றுமைகளாக
வெளிப்படுத்துகிறார்கள்...
இந்த வண்ணமயமான
பரிபூரணமான வெளிப்பாடுகளை வேறு உயிரினங்களிடம் காணவே இயலாது.
மனித உடல் என்பது வெறும் இயற்கையின் பிண்டம் அல்ல.
சமூக வரலாறுகளின்
எச்சம்...
மூத்த தலைமுறைகளின்
தியாகக் குருதிகளின்
குடுவை...
இயற்கையுடனும்
சமூகத்துடனும் போராடிவிட்ட உயிரின்
கடைசி மூச்சுக்
குமிழை
இசைக்க பிறந்த
இதயம்...
எல்லா உயிரினங்களும்
இயற்கை இட்ட கட்டளைக்கு தலையாட்டிப் பணிகின்றன. மனித உயிர்கள் மட்டுமே தமக்கு ஏற்றபடி
இயற்கைக்கு கட்டளையிடுகின்றன.
இயற்கையின்
எல்லா உயிரினங்களுக்கும் தான்தோன்றித்தன வாழ்க்கை.
மனித இயற்கைக்கு
மட்டுமே திட்டமிட்ட வாழ்க்கை.
இயற்கையானது மனிதர்களைத் திட்டமிட்டு படைக்கவில்லை.
ஆனால், மனிதர்கள்தான் இயற்கையைத் திட்டமிடுகிறார்கள்...
உழைக்கின்ற
மனிதர்கள் இயற்கையை வளங்களாக வளர்கிறார்கள்
சொத்தாதிக்க
மனிதர்கள் இயற்கையை லாபவெறியில் விற்கிறார்கள்
உழைக்கின்ற மனிதர்கள் இயற்கையைக் குழந்தையாகச் சுமக்கிறார்கள்
சொத்தாதிக்க மனிதர்கள் இயற்கையைப் போர்வெறியில் வெடிக்கிறார்கள்
உழைக்கின்ற மனிதர்கள் இயற்கையைத் தாய்மடியாக அணைக்கிறார்கள்
சொத்தாதிக்க மனிதர்கள் இயற்கையைக் காமவெறியால் சிதைக்கிறார்கள்
உழைக்கின்ற மனிதர்கள் இயற்கையைத் தெய்வமாகத் துதிக்கிறார்கள்
சொத்தாதிக்க
மனிதர்கள் இயற்கையைப் பணவெறியால் தொலைக்கிறார்கள்
இயற்கையின்
அங்கமான மனிதர்களின் முரண்பட்ட வெளிப்பாடுகள் இரண்டு துருவங்களாக எதிர்பட்டு தகதகத்து
இருக்கின்றன...
மனித உடல்களின்
தனித்துவங்கள் ஏதேனும் ஒரு துருவத்தின் உயிராக வெளிப்படும்...
சொத்தாதிக்கத்
துருவத்தின் உயிராக வெடித்தால் அவமானம்
உழைக்கின்ற
மனிதத்தின் இதயமாக இசைத்தால் தன்மானம்
இலாப வெறியின்
போரிசையாக வெடித்தால் அவமானம்
உழைக்கின்ற
மனிதத்தின்
சமூக விடுதலையாக
இசைத்தால் தன்மானம்
மனித உடல் என்பது
இயற்கையின் பிண்டமல்ல...
சமூக மரியாதையின்
ஒளிக்கீற்று!சுயமரியாதையின் இசைக்கீற்று!
உழைக்கும் மக்களது
இலக்கின் தாகத்தை...
உழைக்கும் மக்களது
வலியின் ஏக்கத்தை...
உழைக்கும் மக்களது
மகிழ்ச்சியின் ஊக்கத்தை...
உயிராய் சுமைப்பதே
நம் கூடு
தன்மானம் காக்கப்
போராடு!
போராட்டத்தின்
உருவமாக
திகழ வேண்டும்
நம் உடல்...
தன்மானத்தின்
சுடராக
திகழ வேண்டும்
நம் உடல்...
சமூகத் தேவையின்
பரிபூரண வெளிப்பாடாக
நம் உடல் பண்பட
வேண்டும்!
சமூகத் தேவைக்கு பயனின்றி
சமூக அறிவின்
தெளிவின்றி
உடலை வீணாக்குபவர்கள்
மனிதர்கள் அல்ல
மனித உருவில்
திரிகின்ற மந்தைகள்...
உடலை பண்படுத்துதல்
என்பது உணவையும் உழைப்பையும் பண்படுத்துதல் ஆகும்.
உழைப்பிற்கு
ஏற்ப உணவும்
உணவிற்கு ஏற்ப
உழைப்பும்
சமச்சீராக இல்லாவிட்டால்
மனித உடலின்
தனித்துவங்கள் கெட்டுவிடும்.
நல்ல மனிதர்கள்
உழைக்காமல் உண்பதற்கு வெட்கப்பட வேண்டும்.
உழைப்பின் வழியாகத்தான்
மனித உடல்கள் சமூகத்தின் பரிபூரண வெளிப்பாடுகளை நிகழ்த்துகின்றன. எனவே, உழைப்பிற்கு
ஏற்றபடி உடலைப் பண்படுத்துவது இன்றியமையாதக் கடமையாகும்.
உடலை முறையான
பயிற்சியின் மூலமாகப் பண்படுத்துவதற்கு உடற்பயிற்சி திட்டங்கள் அவசியமாகும்
சுவர் இருந்தால்தான்
சித்திரம் என்பதுபோல் உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மற்ற எல்லாம் சாத்தியம்.
உடற்பயிற்சி
என்றதும் உடலை அழகாக வைத்துக்கொள்வதற்காக என்று கருதுகிறீர்கள். அல்லது, உடலை வீரமாக
வைத்துக் கொள்வதற்காக என்று கருதுகிறீர்கள். அழகு குறித்தும் வீரம் குறித்தும் நீங்கள்
வெளிப்படுத்தும் கருத்து என்ன தெரியுமா?
ஆடு மாடு மேய்த்த
நமது பண்டைய காலத்திலிருந்து நீங்கள் இன்னும் வளரவே இல்லை என்பதை நிரூபிக்கின்ற கருத்தாக
உங்கள் செயல்கள் அமைந்திருக்கின்றன.
உடல் மீதான
அழகை வெளிப்படுத்துதல் என்பதன் நோக்கம் என்ன? தனது பாலுறவு உரிமைக்காக எதிர்பாலினத்தை
கவர்கின்ற வெளிப்பாடாக ஆதிகாலத்திலிருந்தே கட்டமைந்திருக்கிறது.
மனிதகுலம் அழகின்
இலக்கணத்தை இயற்கையான மிருக நிலையிலிருந்து
பல்வேறு பண்பட்ட நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. இன்றைய மனிதகுலத்தின் மேன்மையிலிருந்து
அழகைப் புரிந்துகொள்ள முடிகின்றதா?
அழகு என்பது
இயற்கையை நேசிப்பது, மனித முகங்களை மனதார நேசிப்பது, மனிதர்களோடு மகிழ்ச்சியாக உழைப்பது,
மனிதகுலம் நேசிக்கும் முகமாக தன்னுருவத்தை சிந்தனைகளாலும் செயல்களாலும் பண்படுத்திக்கொள்வது,
ஒப்பற்ற பேரன்பினால் உலகத்தை வசீகரிப்பது, மனிதகுலத்தின் வசீகரிப்பில் இணையும் காதலருடன்
உயிர் கலப்பது, உலகத்திற்கு ஆபத்தெனில் தாய்ப்பறவையின் சீற்றத்துடன் எதிர்கொள்வது,
ஒற்றுமையின் பெரும் உழைப்பால் தலைமுறைகளின் நல்லுலகிற்கு வழி சமைப்பது, உயிர் போகும்
நிலை எனினும் புன்னகையுடன் விடைபெறுவது, இத்தகைய பேரழகாக மனிதகுல வளர்ச்சியில் அழகு
பரிணமித்திருக்கிறது. ஆனால் மனிதகுலத்தின் தேவைக்கேற்றபடி நீங்கள் பரிணமிக்கவில்லை.
மிருக வாழ்க்கையில்
வெளிப்படுவதைப்போல எதிர்பாலினத் தேடல் என்ற அளவிலேயே உடலின் அழகியலை முடித்துக்கொள்கிறீர்கள்.
உடலின் ஆன்மாவாகிய எண்ணங்களையும் சிந்தனைகளையும் சமூகளாவிய செயல்பாடுகளையும் அழகுபடுத்தாதவரை
உடலின் பரிபூரண அழகை உங்களால் எட்ட முடியாது. இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாத நீங்கள் இலாபவெறி பேய்களின் அழகுசாதனப் பொருட்களில்
பலியாகிறீர்கள்.
முகப்பூச்சு
சாயங்கள், உதட்டுச்சாயங்கள், பொலிவாகக் காட்டும் ஆடம்பர ஆபரணங்கள், தொப்பை குறைக்கும்
வஸ்துக்கள், உடலை கட்டுக்கோப்பாகவும் கவர்ச்சியாகவும் மாற்றும் வஸ்துக்கள், போன்றவற்றை
பயன்படுத்துவதில் ஈக்களைப்போல மொய்க்கிறீர்கள். உணவையும் உழைப்பையும் சமச்சீராக்கிக்
கொண்டாலே அடிப்டை அழகினைப் பெற்றுவிடலாம். ஆனால், உடல் உழைப்பை அலட்சியமாகக் கருதும்
நீங்கள் இலாபவெறி பேய்களிடம் அழகிற்காகப் பிச்சையெடுக்கும் நிலைக்கு தாழ்ந்திருக்கிறீர்களே.
இந்த அவலத்தை உங்களால் உணர முடிகிறதா?
கட்டுக்கோப்பான
உடல் என்பது அழகிற்காக மட்டுமல்ல வீரத்திற்காக என்றும் கருதுகிறீர்கள். மனிதகுலத்தின் முன்னேற்றமானது வீரம்
என்பதை பேரன்பின் வெளிப்பாடாக நிரூபிக்கிறது.
“அறத்திற்கே
அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும்
அஃதே துணை” என்ற 76ம் திருக்குறளும் மனிதகுல ஒழுக்கங்களுக்கும் வீரத்திற்கும் அன்பே
பிறப்பிடமாகிறது என்பதை உணர்த்துகிறது.
வீரம் குறித்த
உங்கள் கண்ணோட்டத்தில் பேரன்பு வெளிப்படுகிறதா? இலாபவெறி பேய்களிடமிருந்து உலகை மீட்பதற்கு
உங்கள் வீரம் பயன்படுமா? உங்கள் தற்காப்புத் திறன்கள் மனிதகுலத்தைப் பாதுகாக்கின்ற
பேரன்பாக வெளிப்படாவிட்டால் வீரம் வெறும் வீண் விவகாரங்கள்தானே.
விவகாரங்கள்
செய்யும் உங்கள் வீரர்களைப் பாருங்கள். சகமனிதர்களை மதிக்காத அகந்தைகளாகத் திரிகிறார்கள்.
சுயநலவெறி போதையும் அலட்சியமும் நிறைந்த பார்வைகளால் திமிராகப் பார்க்கிறார்கள். சமூகப்
பொறுப்பின்றி மந்தைகளாகத் திரிகிறார்கள். சமூக ஒழுக்கங்களின்றி குரங்குக் கூட்டம்போல
பொதுவெளியில் அர்த்தமின்றி கத்துகிறார்கள். எளியவர்கள் மீது ஓநாய்கள்போல பாய்கிறார்கள்.
இலாபவெறி பேய்களின் வளர்ப்பு பிராணிகள்போல வாலாட்டுகிறார்கள். சிந்தனைத்திறனையும் செயல்திறனையும்
பறிகொடுத்து இலாபவெறியின் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து போகிறார்கள். சுயநலவெறி, சாதிவெறி, மதவெறி, இனவெறி, போதைவெறி,
தான்தோன்றித்தனம், தன்னகங்காரம், அலட்சியம், அகந்தை அனைத்தும் கலந்த சாக்கடையாக துர்நாற்றமெடுக்கிறார்கள்.
பேரன்பிற்குரிய வீரர்களாக இவர்களை எங்கேயாவது காண முடிகிறதா?
குரங்குகள்
போல கூச்சலிடுவது, வீரமிக்க காளைகள்போல் சண்டையிடுவது, குற்ற உணர்ச்சியின்றி வன்முறையில்
ஈடுபடுவது என்பதெல்லாம் வீரத்தின் அளவுகோளாகப் பழங்காலத்தில் திகழ்ந்தது. அது ஆடுமாடு
மேய்த்துத் திரிந்த மேய்ச்சல் காலத்தின் வீரம். இன்றைய நாகரிக காலத்தில் வீரத்தின்
அளவுகோள் வேறுவிதமாகப் பண்பட்டுள்ளது. இலாபவெறிப் பேய்களிடமிருந்து உலகை மீட்டெடுத்து
நம் தலைமுறைகளுக்கு நல்லுலகாகப் பரிசளிப்பதிலுள்ள ஆகப்பெரிய சவால்களை எதிர்கொள்வதுதான்
தற்காலத்தில் பண்பட்டுள்ள வீரத்தின் அளவுகோளாகும்.
ஆகப்பெரிய சவால்களை
எதிர்கொள்கின்ற துணிச்சலை உங்கள் சுயரூபம் பெற்றுள்ளதா?
பலவீனங்களும்
குறைபாடுகளும் நிறைந்த உங்கள் சுயரூபத்தை நேருக்குநேராக எதிர்கொள்ளும் துணிச்சல் உங்களுக்கு
இருக்கின்றதா?
பலவீனங்களைக்
களைந்து குறைபாடுகளைத் திருத்திக்கொள்கின்ற துணிச்சல் உங்களுக்கு இருக்கின்றதா?
மனிதகுல மேன்மைக்கு
கடமையாற்றும் துணிச்சல் இருக்கின்றதா?
இல்லையெனில்
ஆகப்பெரிய கோழை நீங்கள்தான்.
வீரம் என்பது
தெளிந்த அறிவினால் கிட்டும் உள்ளத் துணிச்சலில் வெளிப்படுவதாகும். மாறாக, நீங்கள் கருதுவதுபோல்
தசைகளின் இருக்கங்களில் இருப்பதல்ல.
அறிவின் உயர்ந்த
வெளிப்பாடே பேரன்பாகிறது. அதனால்தான் பேரறிவாளர்கள் அனைவரும் மனிதகுலத்தின் மேன்மையில்
பேரன்பு கொண்டிருந்தார்கள். புத்தர், மார்க்ஸ், ஜென்னி, அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள்
அனைவரும் உதாரணமாவர்.
“பகுத்துண்டு
பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள்
எல்லாந் தலை” என்ற 322ம் திருக்குறளும் அறிவின் ஆகப்பெரியது பேரன்பே என்பதை உணர்த்துகின்றது.
உடற்பயிற்சி
என்பது உடலை வேகமாகவும் தசைத்திறனாகவும் வைத்திருத்தல் என்றளவில் மட்டும் புரிந்துகொள்வது
தவறு என்பதை உணர்ந்திருப்பீர்கள்தானே. உடற்பயிற்சியால் உங்களுக்கு விளைவது என்னென்ன
என்பதை உணர்கிறீர்கள்தானே?
உங்கள் உடலின்
வழியாகத்தான் நீங்கள் சிந்தனைத்திறன் மிக்க அறிஞராக செயலாற்ற முடியும்.
உங்கள் உடலின்
வழியாகத்தான் அறிவினால் கனிந்த பேரன்பை இயற்கையால் கனிந்த மனிதகுலத்திடம் வெளிப்படுத்த
முடியும்.
உங்கள் உடலின்
வழியாகத்தான் இலாபவெறி பேய்களிடமிருந்து உலகை மீட்கின்ற வீரம் செறிந்த போர்களில் வினையாற்ற
முடியும்.
உங்கள் உடலின்
வழியாக அறிவும் அன்பும் வீரமும் உலகிற்கு மாலையாகச் சூடப்படுகிறது எனில் நீங்கள் பேரழகாக
உணரப்படுவதை யாரால் தடுக்க முடியும்! ஏனெனில், அழகு என்பது பொருளில் வெளிப்படுவது அல்ல.
மனிதகுலத்தின் அறிவால் உணரப்படுவது.
மனிதகுலத்தின்
மேன்மை உங்கள் பேரழகை உணர்ந்து மகிழும்படி உடலைத் தகுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
மூச்சுப் பயிற்சி,
தசைப் பயிற்சி, மனப் பயிற்சி, குரல் பயிற்சி,
சிந்தனைப் பயிற்சி, பேச்சுப் பயிற்சி, செயல் பயிற்சி, கலை பயிற்சி, அறிவியல்
பயிற்சி அனைத்திற்கும் அடித்தளமாக உடலின் ஆரோக்கியம் திகழ்கிறது. எனவே, நோயின்றி உடலை
ஆரோக்கியமாகப் பராமரிப்பதற்காக நாள்தோறும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்காக நேரத்தைத்
திட்டமிடுங்கள்.
மாணவர்களின்
கண்கள் அகல திறந்திருந்தன. அவர்களது சினிமாத்தனங்களால் செதுங்கியிருந்த கருத்துகளின்
அடித்தளங்கள் ஆட்டம் காணத்தொடங்கி இருந்தன.
வீரம், அழகு
குறித்த பழங்கண்ணோட்டத்தில் இருந்து விடைபெற மனமின்றி வருத்தத்துடன் நெகிழ்ந்து இருந்தார்கள்.
வகுப்பு நிறைவுறும்
நேரம் வந்ததை உணர்ந்தேன்.
சித்தர் இலக்கிய
வகுப்பின் பாடத்திட்டத்தை முடித்தாக வேண்டும் அல்லவா.
திருமூலரின்
பாடலோடு முடித்தேன். உடற்பயிற்சி குறித்த இத்தகைய சிந்தனைகளைத்தான் திருமூலரின் பாடலும்
உணர்த்துகின்றன.
"உடம்பார்
அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ்
சேரவு மாட்டார்
உடம்பபை வளர்க்கும்
உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன்
உயிர்வளர்த் தேனே.”
வெளிவந்த விவரம்
கீற்று இணைய இதழ்
25.06.2025
https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/48304-2025-06-25-06-45-01
No comments:
Post a Comment