சங்க இலக்கிய உணவுப் பண்பாடும்
சமகால உணவுப் புண்பாடும்
விசத்தை உண்டு செத்தால் தற்கொலை. உணவை உண்டு செத்தால் அதை என்னவென்பது?
இலாப வெறிபிடித்த நிறுவனங்களின் கடை உணவுகளைத் தின்றுவிட்டு கல்லறையில் படுத்துவிடும்
தலைமுறைகளாக நம்மில் பலரையும் காணமுடிகின்றது. ஒரு உணவு எப்படி உற்பத்தியாகிறது என்ற
கண்ணோட்டம் இன்றி உண்ணும் தலைமுறைகளாக மாறியிருக்கிறோம். ஒரு உணவு நம் உடலிலும் உறவிலும்
எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்ற கண்ணோட்டம் இன்றி உண்ணப்பழகிவிட்டோம்.
நம் முன்னோர்களது உணவு வரலாற்றிலிருந்து எந்தக் கண்ணோட்டத்தையும் கற்காதவர்களாக உண்ணுகின்ற தலைமுறைகளாக
தாழ்ந்துபோயுள்ளோம். நம் முன்னோர்களது உணவு முறையில் அவர்களது உழைப்பும் தொழில்நுட்ப
அறிவும் பங்கேற்காத ஓர் அந்நியமான உணவை உண்டு செறித்தார்கள் அல்லது செத்தார்கள் என்பதாக
வரலாற்றில் காண முடிகின்றதா? சங்க இலக்கியக்காலப் பண்டையத் தமிழர்களின் உணவு முறை அவரவர்
வாழ்ந்த நிலத்திற்கேற்ப வேறுபட்டு இருந்தன. உணவு உற்பத்திக்கான தொழில் நுட்பங்களால்
அவர்களது உணவு பண்பாட்டு எத்தகைய மாற்றங்களாகக் கட்டமைந்திருந்தது என்பதை நோக்க வேண்டும்.
நம் வரலாற்றின் முன்னோர்களாகிய சங்க இலக்கிய சான்றோர்களின் உணவுமுறை எவ்வாறு இருந்தது
என்பதை அறிய முயல்வதே இக்கட்டுரை.
உயிரினங்கள் வாழும் பிரபஞ்சம் என்பதே பூமியின் தனிச்சிறப்பாகும்.
உயிரினங்களின் இயக்கம் அதன் உணவியக்கம் சார்ந்ததாகும். எல்லா உயிரினங்களும் வெளியில்
இருந்து தனக்கான உணவுகளை உள் செலுத்துகின்றன. உண்ட உணவுகளைக் கழிவாக வெளி செலுத்துகின்றன.
தன்னைத் தானே சிதைவதாகவும் வளர்வதாகவும் வளர்சிதை மாற்றத்தில் ஈடுபடுத்தி வளர்ச்சியடைகின்றன.
இயல்பூக்கத்தின் அடிப்படையில் தன்னை நகல் செய்கின்ற இனப்பெருக்க நடவடிக்கையில் ஈடுபடுகின்றன.
இனத்தைப் பெருக்கிய காலத்திற்கு பிறகு இறந்து போகின்றன. உயிரினங்களின் இயல்பூக்க நடவடிக்கைகளில்
மிகவும் முதன்மையானது உணவை உட்கொள்கின்ற நடவடிக்கையாகும். உணவுகளின் இயக்கமே உயிரினங்களின்
இயக்கம் என்று சொல்வது மிகையற்ற எதார்த்தக் கூற்றாகவே கருத முடியும்.
இயல்பூக்கமுள்ள எந்த உயிரினங்களும் இயற்கையில்
போராடி பெற்ற உணவை திட்டமிட்டு பக்குவப்படுத்தி உண்ணுவதில்லை. அதாவது, தாவர உண்ணிகள்
சிலவகை தாவரங்களை வேறு பொருட்களுடன் இணைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் என்று
கருதி சாப்பிடுவதில்லை. இறைச்சியுண்ணிகள் கழுகு, வாத்து, பாம்பு, ஆமை, முதலை இவற்றின் முட்டைகளைச் சேகரித்து, நரி, முயல், குரங்கு, எலி
இவற்றின் இரத்தத்தை ஒன்றாகக் கலந்து அவற்றில் முட்டைகளைப் ஒவ்வொன்றாகப் பொத்து ஊற்றி,
எருமை அல்லது குதிரை இவற்றின் இறைச்சிகளில் சேர்த்து பிசைந்து உண்டால் சுவையாக சாப்பிடலாம்
என்பதுபோல கருதுவதில்லை. நன்கு காய வைத்தோ, அழுக வைத்தோ, நெருப்பில் இட்டோ அல்லது
நீரில் ஊற வைத்தோ ஏதேனும் ஒரு வகையில் பக்குவப்படுத்தி சாப்பிட்டால் நலம் என்று எந்த உயிரினமும் கருதுவதில்லை. இயற்கையில் போராடி
பெற்ற உணவை அப்படியே உட்கொள்வதே இயல்பூக்கமுள்ள எல்லா உயிரினங்களின் வழக்கமாக இருக்கின்றது.
ஆனால், மனித இனத்தைத் தவிற. ஏனெனில் மனிதஇனமானது இயல்பூக்கத்திலிருந்து செயலூக்கத்திற்கு
முன்னேறியிருக்கின்றது. இயற்கையில் உழைத்து கூடி சிந்தித்து தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து
படிமலர்கின்ற தனித்துவத்தைப் பெற்றிருக்கின்றது.
உயிரினங்களின் வரலாற்றில் மனித இனமானது கூடி
ஓடுகின்ற மந்தை இனமாக அல்லாமல் அதனினும் உயர்ந்த மட்டத்தில் தகவமைந்துள்ளது. எல்லா
உயிரினங்களும் இயற்கையின் சூழலுக்கு ஏற்றபடி தம்மை இயல்பூக்கத்தால் மாற்றிக்கொண்டன.
மனித இனம் இயல்பூக்கத்தின் எல்லைவரை மந்தையாகவே திகழ்ந்தது. வரலாற்றின் பிந்தைய கட்டங்களில்
கூடி சிந்தித்து உழைக்கின்ற உயிரினமாக தகவமைந்தது. எப்போது சிந்தித்து உழைக்கின்ற உயிரினமாக
படிமலர்ந்ததோ அப்போதிருந்து இயற்கையில் செயலூக்கமுள்ள உயிரினமாக தகவமைந்தது. செயலுக்கமுள்ள
மனித இனம் இயற்கைக்கு ஏற்றபடி தம்மை மாற்றிக்கொள்வதைக் கடந்து தம் தேவைக்கேற்றபடி இயற்கையையும்
தம்மையும் பண்படுத்தும்படி திட்டமிட்டு மாற்றம் பெறத்தொடங்கியது. சிந்தித்து உழைத்துத்
திட்டமிட்டு மாற்றங்களைச் செய்யத் தொடங்கிய காலத்திலிருந்து மனித மூதாதையர்களிடமிருந்து
விடுபட்டு மனித சமூகமாக வரலாற்றைக் கண்டது. மனிதர்களின் சிந்தனையாலும் உழைப்பாலும்
தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளாலும் திட்டமிட்டு உருப்பெற்ற மாற்றங்களெல்லாம் மனித
சமூகத்தின் பண்பாடாக உருப்பெற்றன.
மனிதர்களால் பண்படுத்தப்பட்ட பண்பாட்டு நடவடிக்கைகளில்
உணவும் அடங்குகிறது. அதனால்தான் மனிதர்கள் இயற்கையிடம் போராடி பெற்ற உணவுகளை அப்படியே
உட்கொள்வதை கடந்து இயங்குகின்றார்கள். சில உணவுகளை வேறு சில உணவுப் பொருட்களுடன் இணைத்தோ,
கலந்தோ உண்கிறார்கள். எந்த உயிரினங்களாலும் எண்ணிப்பார்க்க முடியாதபடி தாவரங்களில்
இறைச்சியையோ, இறைச்சிகளில் தாவரத்தையோ கலந்து உண்கிறார்கள். நன்கு காய வைத்தோ, அழுக
வைத்தோ, நெருப்பில் இட்டோ அல்லது நீரில் ஊற வைத்தோ ஏதேனும் ஒரு வகையில் பக்குவப்படுத்தி
சாப்பிடுகிறார்கள். மனிதர்கள் கண்டறிந்த தொழில்நுட்பங்களால் உணவுப்பண்பாட்டை மீப்பெரும்
அளவில் உயர்த்தியிருக்கிறார்கள்.
காடு சார்ந்த பொருள் சேகரிப்பில் ஈடுபட்ட தொடக்க
கால மனிதர்களின் உணவுப் பண்பாட்டை சேகரிப்பிற்கான தொழில்நுட்பக் கருவிகள் தீர்மானித்தன.
வேட்டை நாகரிகத்தில் வாழ்ந்த மனிதர்களின் உணவுப்
பண்பாட்டை வேட்டை நாகரிகத்தின் தொழில்நுட்பக் கருவிகள் தீர்மானித்தன.
கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிக மனிதர்களின்
உணவுப் பண்பாட்டை மேய்ச்சல் நாகரிகத்தின் தொழில்நுட்பக்
கருவிகள் தீர்மானித்தன.
விவசாய நாகரிக மனிதர்களின் உணவுப் பண்பாட்டை
விவசாய நாகரிகத்தின் தொழில்நுட்பக் கருவிகள் தீர்மானித்தன.
வணிக நாகரிக மனிதர்களின் உணவுப் பண்பாட்டை வணிக
நாகரிகத்தின் தொழில்நுட்பக் கருவிகள் தீர்மானித்தன.
வணிக இலாபத்திற்காகவே உற்பத்தி செய்தலாகிய பிந்தைய
நவீன வரலாற்றுக் கட்டங்களிலும் அவற்றிற்கே உரிய தொழில்நுட்பக் கருவிகளால் உணவுப் பண்பாடு
தீர்மானிக்கப்பட்டு வந்திருக்கின்றன.
காடு சார்ந்த பொருள் சேகரிப்பு முதல் வணிக நாகரிகம்
வரையிலான மனித வரலாற்றுக் கட்டங்களை அறுபடாத தொடர்ச்சியாகக் கொண்டுள்ள சங்க இலக்கியத்தின்
வாயிலாக அம்மக்களின் உணவுப்பண்பாட்டையும் அதற்கு காரணமான தொழில்நுட்பங்களையும் அறிய
முடிகின்றது.
காடு சார்ந்த பொருள் சேகரிப்பு மற்றும் வேட்டை நாகரிகத்தின்
உணவுப் பண்பாட்டை மலையும் மலை சார்ந்த
வாழ்வியலைப் பிரதிபலிக்கின்ற குறிஞ்சித்திணை பாடல்களில் அறியலாம்.
கால்நடை
மந்தை வளர்ப்பு நாகரிகத்தின் உணவுப் பண்பாட்டை காடும் காடு சார்ந்த வாழ்வியலைப் பிரதிபலிக்கின்ற
முல்லைத்திணை பாடல்களில் அறியலாம்.
விவசாயம் மற்றும் வணிக நாகரிகத்தின் உணவுப்
பண்பாட்டை வயலும் வயல் சார்ந்த வாழ்வியலைப் பிரதிபலிக்கின்ற மருதத்திணை பாடல்களில்
அறியலாம்.
கடலும்
கடல் சார்ந்த வாழ்வியலை பிரதிபலிக்கின்ற நெய்தல்திணை மற்றும் மணலும் மணல் சார்ந்த வாழ்வியலைப்
பிரதிபலிக்கின்ற பாலைத்திணை உட்பட ஐந்திணைப் பாடல்களின் வாயிலாக வெளிப்படுகின்ற சமூகப்
பண்பாட்டு அசைவியக்கங்களின் வாயிலாக உணவுப் பண்பாட்டின் அசைவியக்கங்களையும் அவற்றிற்கு
அடிப்படையாகிய தொழில்நுட்பப் பயன்பாட்டையும் அறியலாம்.
சங்கத் தமிழ் இலக்கியங்கள் வழியாக அறியலாகும்
மனிதர்கள் இறைச்சி அல்லாத தாவர உணவுகளையும் அதனினும் மிகுதியாக இறைச்சி உணவுகளையும்
பலவகையான மது வகைகளையும் பருகுநீர் வகைகளையும் உணவுப் பண்பாட்டில் கொண்டிருந்தமையை
அறிய முடிகின்றது. மேலும், உணவை பகிர்ந்துண்டு வாழும் வழக்கத்தையும், இல்லாதவர்களுக்கு
கொடுத்துண்டு வாழும் வழக்கத்தையும் கொண்டிருந்தார்கள்.
இயற்கையாக
அமைந்த நிலப்பாகுபாடுகளில் ஆங்காங்கு கிடைக்கப்பெற்ற பொருள்களையும் தங்கள் முயற்சியால்
தட்பவெட்ப நிலைக்கேற்ப உற்பத்தி செய்த பொருள்களையும் கொண்டு பண்டைத்தமிழர்கள் தங்கள்
உணவு வகைகளைத் தயாரித்துக் கொண்டனர் என்பதற்குச் சங்க இலக்கியத்தில் பல சான்றுகள் உள்ளன.
உணவுப் பொருள்களை நல்ல முறையில் பக்குவம் செய்து சுவையேற்றி உண்டும் மகிழ்ந்திருக்கிறார்கள்.
இத்தகைய உணவு வகைகள் வருமாறு.
மரக்கறி உணவு
சங்ககால தமிழர்கள் காய், கிழங்கு, கீரை, பருப்பு போன்ற தாவரங்களிலிருந்து
கிடைக்கக் கூடிய உணவுப்பொருள்களை உண்டு வாழ்ந்திருக்கின்றனர் என்ற செய்தியைச் சங்க
இலக்கியங்கள் தருகின்றன. பண்டைத் தமிழர்கள் நண்டுக் கறியுடன் பீர்க்கங்காயை இணைத்து
உண்டுள்ளனர் என்ற செய்தியை சிறுபாணாற்றுப்படை கூறுகிறது. பொதுவாக மரக்கறி உணவோடு இறைச்சி
உணவைச் சேர்த்து உண்ணும் வழக்கம் இல்லை. ஆனால் மருத நிலத்து மக்கள் பீர்க்கங்காயோடு
நண்டுக்கறியையும் இணைத்து உண்ட செய்தி புதுமையானதாகும். இப்புதிய உணவுப் பழக்கம் பற்றி
சிறுபாணாற்றுப்படையின் பின்வரும் பாடலடி குறிப்பிடுகிறது.
கவைத்தா ளலவன் கலவையொரு பெறுகுவீர் (சிறுபாண 195)
இதற்கு கவைத்த காலினையுடைய நண்டும்,
பீர்க்கங்காயும் கலந்த கலப்புடனே பெறுகுவீர் என்று நச்சினார்க்கினியர் உரை வகுத்துள்ளார்.
இதன் மூலம் பண்டைத் தமிழர் நண்டுக்கறியுடன் பீர்க்கங்காயையும் சேர்த்து உண்டுள்ளனர்
என்ற செய்தியைத் தெரிந்து கொள்ள முடிகிறது. பீர்க்கங்காயையும் நண்டையும் கலந்து செய்யும்
சமையற் குறிப்பினை நச்சினார்க்கினியர் உரையின் வாயிலாகவே அறிய முடிகின்றது. மேலும்
மாதுளங்காய், மாங்காய், வெள்ளரிக்காய் போன்ற பல காய்களையும் உண்டுள்ள செய்தி சங்க இலக்கியங்களில்
இடம்பெற்றுள்ளது.
இறைச்சி உணவு
கொழுத்த ஊன் துண்டங்களைத் தீயிலிட்டுச் சுட்டு அவற்றுடன் தினைச் சோற்றைச்
சொரிந்து பாணர்கள் உண்டனர்.
”செந்தீ அணங்கிய கொழுநிணக் கொழுங்குறை மென் நினைப்
புன்கம்
உதிர்ந்த மண்டையொரு ………………. பருக்கும் ……………….. ”
(அகம் 237.9.13)
புதுக்கலத்தன்ன செவ்வாய்ச் சிற்றில்
புனையிரும் கதுப்பின் நின் மனையோள் அயரப்
பாலுடை அடிசில் தொடீஇய ஒருநாள்
மாவண் தோன்றல்! வந்தனை சென்மோ! – அகம் 394/9-12
இன்றைக்குச் சில குடும்பங்களில்
திருமணம் நடந்து முதலிரவன்று, மணமகள் வெள்ளித்தட்டில் மணமகனுக்குப் பால்ச்சோறு எடுத்துச்
செல்வது வழக்கமாக இருக்கிறது. அன்றைக்கும் குழைவாக ஆக்கிய சோற்றில் பாலூற்றிப் பிசைந்து
மணமகள் மணமகனுக்குத் தருவது பழக்கமாயிருந்தது போலும்!
இறைச்சியிட்ட பாலுடை அடிசில்
கொழுத்த ஆட்டின் மாமிசத்தில்
கொழுப்பு ஒட்டிக்கொண்டிருக்கும். அதனை வேகவைத்துக் கையிலெடுத்தால் கைவிரல்களுக்கிடையில்
அது நெய்போல ஒழுகும். பசுவின் நெய்யை மிகுதியாக இட்டுக் குழைத்து ஆக்கிய சோற்றுடன்
இந்த ஒழுகும் நிணமும் கலந்திருந்தால் எப்படியிருக்கும்? இது ஒரு வகை அடிசில். இந்த
அடிசிலை விருந்தினருக்கு இட்டு, அவர்கள் உண்ட பின் மிஞ்சிய மீதத்தை நாம் உண்போம் என்று
குறிஞ்சிப்பாட்டுத் தலைவன் தலைவியிடம் கூறுகிறான்.
பைம் நிணம்
ஒழுகிய நெய்ம் மலி அடிசில்
வசை இல் வான் திணை புரையோர் கடும்பொடு
விருந்துண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னோடு உண்டலும் புரைவது – குறி 204 – 207
ஊன் துவை அடிசில்
இன்றைக்கு ஊனோடு சேர்ந்த
சோற்றைப் பிரியாணி என்கிறோம். அது உதிரி உதிரியாகக் கூட இருக்கும். இதனை ஊன்சோறு எனலாம்.
அப்படி இல்லாமல் வெகுவாக ஊனுடன் குழைத்து ஆக்கப்படுவது ஊன் அடிசில். இருப்பினும் இங்கே
குழைவாக என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல, நம் புலவர்கள் இதனை ஊன் துவை அடிசில்
என்றார்கள். நன்றாக மசிப்பதுதானே துவையல், துவை என்பதற்கு மிதித்து உழக்கு, குழை என்பது
பொருள். சோறும் கறியும் வேறுவேறாகத் தெரியக்கூடாதாம், பதிற்றுப்பத்து கூறுவதைப் பாருங்கள்.
சோறு வேறு என்னா
ஊன் துவை அடிசில்
ஓடா பீடர் உள்_வழி இறுத்து – பதி 45/13,14
போரில் வெற்றியை ஈட்டித்தந்த
மறவருக்கு வெற்றிவேந்தன் அளித்த விருந்தின் ஒரு பகுதி இது! இது ஊன் துவை அடிசில்.
அயினி
அயில் என்பதன் பொருள்
விருப்பத்துடன் வேண்டுமளவு உண்ணுதல் என்று முன்பு பார்த்தோம். அதனை அடியாகக் கொண்ட
பெயற்சொல்லே அயினி. குதிரைக்கு மிகவும் பிடித்த உணவு கொள்ளு. ஆனால் அது கடற்கரை ஊரில்
எவ்வாறு கிடைக்கும் அங்கு உப்பை விற்று மாற்றாகக் கொண்டுவந்த நெல்தான் இருக்கும். அதனைக்
குற்றி அவலாக்கி, அயினியாக வயிறார உண்ணத் தன் தலைவனின் குதிரைகளுக்குத் தருவேன் என்கிறாள்
நெய்தல் தலைவி.
உமணர் தந்த
உப்புநொடை நெல்லின்
அயினி மா இன்று அருந்த – நற்றிணை 254/6,7
குறை
உருவத்தில் பெரிய ஒன்றை
இரண்டு மூன்று பாகங்களாக வெட்டிக் குறைத்தால், கிடைப்பது குறை. இச்சொல் புலால் உணவுக்கே
உரியதாகச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. கசாப்புக் கடைகளில் முழு உருவமாகத் தோலுரித்துத்
தொங்கவிடப்பட்டிருப்பதினின்றும் ஒரு பெரும் பகுதியைத் துண்டமாக்கிக் கீழே இறக்குவர்.
அதுவே குறை. அதில் கொழுப்பும் சேர்ந்திருந்தால் அது கொழுங்குறை.
வரு விசை தவிர்த்த கடமான் கொழும் குறை
– மலை 175
கானவன் எய்த முளவு_மான் கொழும் குறை – நற் 85/8
எஃகு போழ்ந்து அறுத்த வால் நிண கொழும் குறை – பதி 12/16
ஊனத்து அழித்த வால் நிண கொழும் குறை – பதி 21/10
துடி கண் கொழும் குறை நொடுத்து உண்டு ஆடி – அகம் 196/3
அரி நிற கொழும் குறை வௌவினர் மாந்தி – அகம் 236/3
செம் தீ அணங்கிய செழு நிண கொழும் குறை – அகம் 237/9
இந்தக் குறை எனப்படும் துண்டுகளை அப்படியே நெய்யில் பொரித்தோ, தீயில்
வாட்டியோ, பெரிய சட்டிகளில் வேகவைத்தோ உண்பர். வேகவைத்த குறையும் குறைதான். இதைச் செய்வதற்குக்
கைப்பக்குவம் தேவை.
இந்தக் குறை என்பது ஆடு
,மான், காட்டுப்பன்றி போன்ற பலவித விலங்குகளின் உடலிலிருந்தும் பெறப்படுவது மட்டுமல்ல,
சுறா போன்ற பெரிய மீனுக்கும் பொருந்தும்.
மோட்டு
இரு வராஅல் கோட்டுமீன் கொழும் குறை – புறம் 399/5,6
என்கிறது ஒரு புறப்பாடல்.கோட்டுமீன்
என்பது சுறா. கோடு என்பது கொம்பு. கொம்புள்ள மீன் கோட்டுமீன்.
கூழ்
களி கிண்டும்போது நீர்
அதிகமாய்ச் சேர்த்தால் அது கூழ் ஆகிவிடும். கம்பு, வரகு போன்ற சில தானியங்களின் மாவில்
களி செய்வார்கள். உணவின் தேவை அதிகமாகவும் மாவு குறைவாகவும் இருந்தால் நீரை அதிகம்
சேர்ப்பார்கள். களிக்கு பதிலாக கூழ் கிடைத்துவிடும். கூழ்தான் அதிகமாகச் செய்வர். கூழ்
என்பது ஏழ்மை நிலையிலுள்ளவர்களின் உணவாகவே பெரும்பாலும் இருந்துள்ளது.
வல் வாய் கணிச்சி
கூழ் ஆர் கோவலர் – அகம் 21/22
ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில் – அகம் 113/
கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த – அகம் 194/13
என்ற அடிகளில் கூழ் என்பது
முல்லைநில எளிய மக்களான இடையர், கோவலர் ஆகியோருக்கும், மருதநில எளிய மக்களான உழவர்
ஆகியோருக்கும் உணவாக இருந்ததைப் பற்றி அறிகிறோம். கூழ் என்பதற்குப் பொதுவாக உணவு என்ற
பொருளும் இருந்திருக்கிறது.
கூழ் உடை நன்
மனை குழுவின இருக்கும் – நற் 367/5
கூழ் உடை தந்தை இடன் உடை வரைப்பின் – அகம் 145/17
என்ற அடிகளில், உணவு அல்லது உணவுப்பொருள்களான தானியம் போன்றவற்றைக்
கூழ் என்ற சொல் குறிப்பதைக் காணலாம்.
சாறு அயர்ந்து
அன்ன மிடாஅச் சொன்றி – குறி 201
அடங்காச் சொன்றி அம் பல் யாணர் – நற் 281/5
வரை கோள் அறியாச் சொன்றி – குறு 233/6
ஆகிய இடங்களில் குறிப்பிடப்படும் சொன்றியும் பானைகளில் சமைத்துக் கொட்டும்
அரிசிச்சோற்றையே குறிக்கிறது.
சோறு
விடக்கு உடை பெரும் சோறு உள்ளுவன இருப்ப – நற் 281/6
வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு – அகம் 107/9
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெம் சோறு – அகம் 394/5
ஆம்பல் அகல் இலை அமலை வெம் சோறு – அகம்
196/5
பெரும் சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள் – அகம் 275/9
ஆகிய அடிகளில் காணப்படும்
சோறு என்பது அரிசிச் சோற்றுடன் ஏதோ ஒரு பொருளைச் சேர்த்துப் பிசைந்து உண்ணும் உணவைக்
குறிப்பதைக் காணலாம். இதைத்தவிர, பொதுவாக நாம் உண்ணும் சாப்பாடு எனப்படும் உணவும் சோறு
எனப்படுகிறது.
தடி
ஓர் உணவுப்பொருளாகத் தடி
என்ற சொல்லுக்குத் தசை என்று பொருள். ஒரு தடித்த மாமிசத்துண்டு என்றும் பொருள் கொள்ளலாம்.
மீன்களிலேயே வரால் மீன்
மிகவும் பருமனானது. நீண்டு, உருண்டு திரண்டு இருக்கும். வாளை மீன் நீண்டு இருக்கும்.
இவற்றின் நடுப்பகுதியை மட்டும் தணித்து எடுத்தால் அதுவே மீன் தடி.
சிறுதாழ் செறித்த
மெல் விரல் சேப்ப
வாளை ஈர்ந்தடி வல்லிதின் வகைஇ – நற்றிணை 120 4,5
விரைந்து வாய்
வழுக்கிய கொழும் கண் ஊன் தடி – அகம் 193/9
மாமிசத்தையும் பெரும்பெரும்
துண்டங்களாக நறுக்கினால் அவையும் தடி எனப்படும்.
திற்றி
மென்று தின்னக்கூடிய தசை
திற்றி எனப்படுகிறது. எனவே வேகவைத்த இளம் தசையே திற்றி எனலாம். ஊருக்கு வெளியில் வெகுதொலைவில்
மாடுமேய்ப்பவர்கள் இரவில் தங்குவதற்குப் பாதுகாப்பு அரண்களை ஏற்படுத்திக்கொண்டு மாடுகளைக்
கிடைபோட்டிருப்பர். அப்போது வில்லேந்திய கள்வர்கள் அவர்களைக் கொன்று, ஆநிரைகளைக் கவர்ந்து,
அவற்றைத் தமக்குள் பங்கிட்டுக்கொண்டு, அவற்றுள் நல்ல கன்றை அடித்துப் பாறை முடுக்கில்
சுட்டுச் சாப்பிடுவர் என்பதை அகநானூறு குறிப்பிடுகிறது.
இரவுக் குறும்பு
அலற நூறி நிரை பகுத்து
இரும் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும்
கொலைவில் ஆடவர் – அகம் 97:4-6
புழுக்கல்
புழுங்கல் என்பதே புழுக்கல் எனப்படுகிறது. புழுங்கல் என்பது பண்படுத்துதலின்
குறியீடு. அரிசியை பச்சையரிசி புழுங்கல் அரிசி என்கிறோம். பச்சை அரிசி என்பது பண்படுத்தப்படாதது.
நெல்லை உடைத்தெடுத்த அரிசி. புழுங்கல் அரிசி என்பது அவித்து பண்படுத்தப்பட்ட அரிசியாகும்.
அவித்து பண்டுத்தப்படும் உணவே புழுக்கல் ஆகும்.
மை ஊன் தெரிந்த
நெய் வெண் புழுக்கல் – நற் 83/5
உவலை கண்ணியர் ஊன் புழுக்கு அயரும் – அகம் 159/10
போன்ற அடிகள் மாமிசப்
புழுக்கலைக் குறிக்கின்றன.
மைப்பு அற புழுக்கின்
நெய் கனி வெண் சோறு – அகம் 136/1
குடவர் புழுக்கிய பொங்கு அவிழ் புன்கம் – அகம் 393/16
ஆகிய அடிகள் தாவரப் புழுக்கலைக்
குறிக்கும்
பொம்மல்
ஒரு தட்டில் மிகுந்த அளவு
சோற்றைக் குவித்து வைத்தால் அது பொம்மல் பெரும் சோறு எனப்படுகிறது.
புகர்வை
அரிசி பொம்மல் பெரும் சோறு – நற் 60/5
என்று
நற்றிணை கூறுகிறது.
மிதவை
பசுமீன் நொடுத்த
வெண்ணெல் மாஅத்
தயிர்மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே – அகம் 340:14,15
வெண்ணெல் மாவைச் சமைத்துக்
களியாக்கி, அதனுடன் தயிர் சேர்த்துப் பிசைந்து கூழாக்கி உண்டிருக்கிறார்கள். புளித்த
நீரில் உருண்டைகளாக களி உருண்டைகளை மிதக்க வைத்து பசித்தபோது கரைத்து குடிப்பதும் வழக்கம்.
சங்க
இலக்கியங்களின் வழியாக அக்கால மக்களின் உணவியலை முழுமையாக நோக்கினால் இரண்டு நிலைகளில்
அறிந்துகொள்ள முடிகின்றது.
1.இயற்கையிலிருந்து பெற்ற உணவை அப்படியே உட்கொள்வது
2. கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பக்
கருவிகளைப் பயன்படுத்தி உணவைப் பண்படுத்தி உட்கொள்வது
இயற்கையிலிருந்து பெற்ற உணவை அப்படியே உட்கொள்வது
அக்கால மக்கள் தங்களது இயற்கை சூழல்களில் உணவாக
கிடைத்தவற்றை அப்படியே உட்கொண்டுள்ளார்கள். இயற்கை சூழல்களிலுள்ள பொருள்களில் எவையெல்லாம்
உட்கொள்ளத்தக்கவை உட்கொள்ளத் தகாதவை என்ற அறிவானது மனித
முன்னோர்களிடமிருந்து அறியப்பட்ட அறிவாகும். தொடக்ககால குறிஞ்சித்திணை மனிதர்கள் இயற்கை
தாவரங்களிலிருந்து கிடைத்த கீரைகள், காய்கள், கனிகள், ஈசல் போன்ற பூச்சிகள், விலங்குகளால்
அடித்துண்ணப்பட்டு எஞ்சிய இறைச்சிகள் ஆகியவற்றை அப்படியே உட்கொண்டார்கள். தொடக்க கால
மனிதர்கள் தொழில்நுட்பக் கருவிகளைக் கண்டறியாதவர்களாகத் திகழ்ந்தார்கள். வேட்டைக் கருவிகளைக்
கண்டடையும்வரை மனிதர்கள் வேட்டைத் தொழில் சார்ந்தவர்களாக இல்லை. தழையாடைகள் பின்னுதல்
போன்று பின்னுகின்ற தொழில்நுட்பங்களை கைக்கொண்டு தழைப்பின்னல் பை, முறம், குடுவை போன்ற
சேகரிப்புக் கருவிகளைப் பயன்படுத்தியிக்க வாய்ப்பிருக்கின்றது. ஆனால், தொல்லியல் நிபுணர்களுக்கு
கிடைக்கத்தக்க காலத்தால் அழியா தன்மையைக் கொண்டிருக்கவில்லை. சங்க இலக்கியங்களிலும்
பதிவாகவில்லை. மண்பானைகள் செய்யும் தொழில்நுட்பத்தைக் கண்டடையும்வரை மண்டையோடுகள்,
சுரக்குடுவை போன்றவற்றை சேகரிப்புக் கருவிகளாகப் பயன்படுத்தியிருக்க வாய்ப்பிருக்கின்றது. சங்க இலக்கியங்களில் தொடக்ககால மனிதர்களின் உணவு
பண்பாட்டியலை பிரதிபலிக்கின்ற பாடல்கள் சில மட்டுமே கிடைக்கின்றன. சுரக்குடுவையில்
உணவை சேகரித்துச் செல்லும் மனிதர்களை அறிய முடிகின்றது. புலி அடித்து உண்ட மான் கறியில்
எஞ்சியவற்றை வழிபோக்கர்கள் உண்டு சென்றுள்ளார்கள் என்பதை அறிய முடிகின்றது. மாங்காய்,
வெள்ளரிக்காய், பலாப்பழம், வாழைப்பழம், மாம்பழம், ஆசனிப்பழம், களாம்பழம், காரைப்பழம்,
துடரிப்பழம், நாவற்பழம், நெல்லிக்கனி போன்ற காய் கனி வகைகளை உண்டு வாழ்ந்திருப்பதை
அறிய முடிகின்றது. அத்திப்பழம், இலுப்பைப்பழம், குமிழும் பழம், கொன்றைப் பழம், நாவற்பழம் போன்றவை
நற்றிணையில் அதிகமாக கிடைக்கும் பழங்களாகும்.
இளநீர்,
சுனைநீர், அருவிநீர் ஆகியவற்றை அருந்திய செய்தியை அறிய முடிகின்றது.
கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பக்
கருவிகளைப் பயன்படுத்தி உணவைப் பண்படுத்தி உட்கொள்வது
நெருப்பை உருவாக்கும் முறையைக் கண்டறிவதற்கு
முன்புவரை சூரிய வெப்பத்தால்
சூடேறிக் கிடக்கும் பாறைகளில் உணவைப் பதப்படுத்தி உண்ணலாம் என்ற தொழில் நுட்பத்தைக்
கண்டறிந்த மனிதர்கள் பச்சூண் என்ற பச்சைக் கறியை சூடேறிய பாறைகளில் இட்டு பதப்படுத்தி
உண்டிருக்கிறார்கள். தொல்பழங்காலத்தில் சங்ககால மக்கள் இரும்புக் கருவிகள் கண்டுபிடிக்கப்படாத
நிலையில் கற்கருவிகள் கொண்டே வேட்டையாடினர் என்பதை தொல்லியல் சான்றுகள் நிரூபித்துள்ளன.
வேட்டைத் தொழில் கற்கருவிகளிலிருந்து இரும்புக் கருவி நோக்கி வளர்ச்சியடைந்ததன் விளைவாக
விருந்தினரை உபசரித்தல், பசித்தோருக்கு உணவளித்தல் என்பதாக உணவுப் பண்பாடு மேன்மையடைந்திருக்கின்றது.
எஞ்சிய இறைச்சியை காய வைத்தல் என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உப்புக்கண்டம் செய்திருக்கிறார்கள்.
நெய்தல் நில மக்கள் படகில் கடலுக்குச் சென்று வலையிடுதல் என்ற தொழில் கருவி உதவியுடன்
மீன்களை வேட்டையாடுகின்றனர். மீன்களை காய வைத்தல் என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில்
கருவாடு செய்திருக்கிறார்கள். கடல் நீரை வெயிலுக்கு ஆட்படுத்தி உப்பு விளைவித்திருக்கிறார்கள்.
சூழாயுதம் போன்ற
தோண்டு கருவிகளை கண்டடைவதற்கு முன்பு பன்றிகள் கிளர்ந்து எஞ்சிய கிழங்குகளையேப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
நெருப்பைக் கொண்டு தேனெடுக்கக் கற்பதற்கு முன்புவரை கரடிகள் உண்டெஞ்சிய தேனையே உண்ணப்
பயன்படுத்தியிருப்பார்கள். தொழில்நுட்பக் கருவிகளின் உதவியால் சேர்த்தல் தொழில்நுட்பத்தைப்
பயன்படுத்தி மண்ணிற்கடியில் பெற்ற கிழங்குடன் மலையுச்சியில் பெற்ற தேனை சேர்த்து உண்கிறார்கள்.
நெருப்பில் சுட்ட மான் இறைச்சியுடன் தேனை சேர்த்து உண்கிறார்கள். நண்டுக் கறியுடன்
பீர்க்கங்காயை சேர்த்து சாப்பிட்டிருக்கிறார்கள்.
நெருப்பின் உதவியுடன்
வேக வைத்தல், நீராவியில் அவித்தல், உலக்கையால் இடித்தல், கற்கருவிகளால் உடைத்தல், பொடித்தல்,
அரைத்தல், நையச் செய்தல், பாலை புளிக்கச் செய்தல், தயிர், மோர், வெண்ணெய், நெய் எடுத்தல்,
எண்ணெய்யில் தாளித்தல், ஊற வைத்தல், நீருக்குள் இட்டு கெடாமல் பாதுகாத்தல் போன்ற பலவிதமான
தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியதன் வாயிலாக உணவுப் பொருட்களைப் பலவிதமான பண்பாட்டு
அசைவியக்கங்களுக்கு ஆட்படுத்தி உணவுகளை உட்கொண்டவர்களாக சங்க இலக்கிய மக்கள் திகழ்ந்துள்ளார்கள்
என்பதை அறிய முடிகின்றது.
முடிவுரை
சங்க இலக்கியக்கால
மக்களது உணவுப் பண்பாட்டை முழுதளாவிய நிலையில் நோக்கும்போது காடுசார்ந்த உணவு சேகரிப்பு
வாழ்வியலின் தொடக்கத்திலிருந்து உணவுப் பொருட்களைப் பலவிதமான தொழில்நுட்ப பயன்பாடுகளுக்கு
உட்படுத்தி உயர்நிலைக்கு ஆட்பட்டுள்ள உணவு பண்பாட்டை அடைந்தவர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள்.
நமது சங்க இலக்கியக்கால முன்னோர்களின் உணவு
முறைகளிலிருந்து இன்றையத் தலைமுறைகளை நோக்கும்போது பெரும் அவலமாகவே உணர முடிகின்றது.
நமது உணவுமுறை பண்பாட்டு நிலையிலிருந்து இன்னும் மேம்பட்டதாக அமையாமல் புண்பாட்டு நிலையாகத்
தாழ்ந்திருப்பது வருந்தத்தக்க உண்மையாகும்.
உணவு உற்பத்தியின் இன்றை
எதார்த்தமானது அக்கறையுள்ள மனித உறவுகளிடமிருந்து அபகரிக்கப்பட்டுள்ளது. இலாபவெறி நிறுவனங்களால்
உற்பத்தி செய்யப்பட்டு தான்தோன்றித்தன நுகர்வுவெறியின் வயிற்றில் கொட்டப்படுகின்றது.
உணவுமுறை என்பது மனித உறவுகளின் சமூகஉணர்வு என்ற நிலைமாறி பலவித ருசிகளுக்கான வணிக
உறவாக மாறியிருக்கிறது. எதை சாப்பிடுகிறோம்? எத்தகைய தொழில்நுட்ப பயன்பாட்டால் சாப்பிடுகிறோம்?
எத்தகைய பலக்கட்ட படிநிலைகளில் தயாரிக்கப்பட்ட உணவைச் சாப்பிடுகிறோம்? பலக்கட்ட படிநிலை
மாற்றங்களில் எத்தகைய வேதிமாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்ட உணவைச் சாப்பிடுகிறோம்? உடலின்
இயக்கத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் தன்மையிலான உணவைச் சாப்பிடுகிறோம்?
இத்தகைய எந்தக் கேள்விகளுக்கும்
இடமின்றி தெளிவின்றி இன்றைய தலைமுறைகள் ஆட்பட்டிருக்கும் உணவுமுறையின் சமூகநிலை மிக
ஆபத்தானதாக அமைந்திருக்கிறது. அதாவது, சமூகமேன்மைக்கும் மனித உறவின் ஆரோக்கியத்திற்கும்
இசைவான உணவுப்பண்பாட்டை இழந்திருக்கிறோம். நமது உணவுத்தேவைகளை இலாபவெறியின் பிடிகளுக்கு
பறிகொடுத்திருக்கிறோம். இலாபவெறி நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலுள்ள உணவுமுறையானது நாம்
விழிப்படைவதற்கான அவசியங்களைக் கொண்டுள்ளன. நாம் விழிப்படையாவிட்டால் இலாபவெறி நிறுவனங்கள்
நமக்கும் நம் வழியாக வாழ்ந்துவரும் சங்ககால முன்னோர்களுக்கும் சங்கு ஊதி காரியம் முடித்துவிடும்.
இலாபவெறி உதிர்க்கும் வாய்க்கரிசியும் பாலும் நமது மூடிய உதடுகளை நனைக்கின்ற கணத்தக்
காலம் வெகுதூரம் இல்லை.
No comments:
Post a Comment