பழங்குடிகளது
பண்பாட்டின்
தொன்மையும்
உண்மையும்
(இலக்கிய மானிடவியலின் சமூக விஞஞான
அணுகுமுறை)
-புதியவன்-
பழங்குடிகளது வாழ்வியலில் மனித வரலாற்றின்
குழந்தை பருவ நாகரிகங்களின் பெரும்பகுதியை அவதானிக்க முடிகின்றது. அதனாலேயே பழங்குடிகளுக்குப்
பழங்குடிகள் என்றப் பெயர் பொருத்தமானதாக அமைகின்றது. சமூகவிஞ்ஞானம் விளக்குகின்ற சமூக
உற்பத்திமுறையிலிருந்து மனித வரலாற்றுப் படிநிலையை விளங்கிக்கொள்ள முடிகின்றது. மனித
வரலாற்றுப் படிநிலைகளில் பழங்குடிகளது பண்பாட்டைப் பொருத்திப் பார்க்கின்றபோது அதன்
தொன்மையையும் உண்மையையும் விளங்கிக்கொள்ளலாம்.
இக்கட்டுரை
சோளகர் பழங்குடிகளை பற்றிய ஆய்வாக அமையவிருக்கிறது. சோளகர் பழங்குடிகளை சோளகர் தொட்டி
என்ற புதினத்திலிருந்து அணுகவிருப்பதால் இலக்கிய மானிடவியலின் சமூகவிஞ்ஞான அணுகுமுறையாக
இக்கட்டுரை அமையும். பழங்குடிகளது பண்பாட்டை உணர்வதற்கு அடிப்படையாக பண்பாடு என்பதன்
வரையறை விளக்கம் பெறும். சோளகர்களது பண்பாட்டு தகவல்களிலிருந்து அவர்களது தொன்மையும்
உண்மையும் அறியப்படும். இத்தகைய அறிதலிலிருந்து பழங்குடிகளது சமகால வாழ்வியலின் அசைவியக்கங்களை
மதிப்பிடுவதாக இக்கட்டுரை நிறைவு பெறும்.
மனித வரலாற்றுப்
படிநிலை (8) |
சமூக வடிவம் |
தாய்தலைமை
/ தந்தையதிகாரம் |
1.காடுசார்ந்த
பொருள் சேகரிப்பு நாகரிகம் |
1 ஆதிப் பொதுவுடைமை
சமூகம் |
தாய் தலைமை
சமூகம் |
2.வேட்டை
நாகரிகம் |
தாய் தலைமை
சமூகம் |
|
3.கால்நடை
மந்தை வளர்ப்பு நாகரிகம் |
2 ஆண்டான் அடிமை
சமூகம் |
தந்தை அதிகார
சமூகம் |
4.விவசாய
நாகரிகம் |
3 நிலப்பிரபுத்துவ
பண்ணை அடிமை சமூகம் |
தந்தை அதிகார
சமூகம் |
5.உற்பத்தி
மீதான வணிக நாகரிகம் |
தந்தை அதிகார
சமூகம் |
|
6.வணிக இலாபத்திற்காக
உற்பத்தி செய்தல் |
4 முதலாளித்துவ
சமூகம் |
தந்தை அதிகார
சமூகம் |
7.நிதி மூலதன
பிரிவு தோன்றி சமூக உற்பத்தி மீது ஆதிக்கம் செய்தல் |
தந்தை அதிகார
சமூகம் |
|
8.மக்கள்
தலைமையின் கீழ் சமூக உற்பத்தியைக் கட்டமைத்தல் |
5 சோசலிச சமூகம் |
ஏற்றத்தாழ்வுகள்
மதிப்பிழந்த சமூகம் |
சமூகப் பொருளுற்பத்தியை
அடிப்படையாகக் கொண்டு மனித வரலாற்றுப் படிநிலை விளக்கம் பெற்றுள்ளது. இவற்றில் பழங்குடிகளது
தொன்மையின் எல்லையாக முதல் மூன்று வரலாற்றுக் கட்டங்கள் இடம்பெறும். அதாவது, தந்தையதிகாரம்
தோன்றி நிலைத்த கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்தில் தொடங்கி, அதற்கு முந்தைய தாய்தலைமை
சமூகங்கள்வரை தொன்மையின் எல்லையாக வரையறுத்துக்கொள்ளலாம்.
பண்பாடு என்பது மனிதர்களால்
பண்படுத்தப்பட்ட அனைத்தையும் குறிக்கும். இவை அனைத்தும் சமூகப் பொருளுற்பத்தியை
அடித்தளமாகக் கொண்டு இயங்குவதாகும். சமூகப் பொருளுற்பத்தி என்பது சமூக உற்பத்தி முறையியல்
ஆகும். சமூக உற்பத்திமுறையியல் என்பது சமூக பண்பாட்டை முழுமையாகச் சுமந்திருக்கின்ற
அடித்தளமாகும். சமூகப் பண்பாடு என்பது சமூக வாழ்வியல், சமூக உள்ளத்தியல், சமூகக்
கருத்தியல், தனிமனிதக் கருத்துநிலைப்பாடு, தனிமனித உலகப்பார்வை, தத்துவ அடிப்படை ஆகிய
ஆறு சமூகளாவிய நிறுவனங்களின் முழுமையாகும். சமூக உற்பத்தி முறையியலும் சமூகப்
பண்பாட்டியலும் இணைந்ததே முழுதளாவிய சமூகம் ஆகும். (சிவக்குமார்,கே.2016:8)
சோளகர்களது
பண்பாட்டுத் தகவல்களைச் சமூக வாழ்வியலின் திருமணம், பூப்புச்சடங்கு, குடும்பம் என்பவற்றிலிருந்தும்,
சமூக உள்ளத்தியலின் ஆழ்மன பிரதிபலிப்பிலிருந்தும் பெற்று ஆராயலாம்.
திருமணம்
சோளகர் தொட்டி புதினத்தில் கெம்பம்மாள்,
கெஞ்சி, மாதி ஆகியவர்களின் வாழ்க்கையிலிருந்து ஒருத்திக்கு ஒருவன் என்ற குடும்ப அமைப்பு
பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன.
கெம்பம்மாளின்
கணவன் சிக்குமாதா மண்ணில் உழைத்து விவசாயம் செய்வதில் அக்கறையின்றி வேட்டையில் முழு
ஆர்வத்துடன் ஈடுபடுகின்றான். சிக்குமாதாவின் வேட்டை தொழிலை கெம்பம்மாள் தொடர்ந்து கண்டிக்கிறாள்.
என்றாவது ஒரு நாள் வேட்டையில் பலியாகி நீ என்னை பிரியப்போகிறாய் என்று எச்சரிக்கிறாள்.
அவளது எச்சரிக்கையையும் கண்டிப்பையும் சிக்குமாதா ஒருபோதும் பொருட்படுத்துபவனாக நடந்துகொள்ளவில்லை.
அவள் பயந்தபடியே அவன் யானையால் தாக்கப்பட்டு
உயிரிழக்கிறான். சோளகர் தொட்டியில் புகழ் மிக்க வேட்டைக்காரனாக வாழ்ந்து முடிந்தான்.
சிக்குமாதாவின் தந்தை கோல்காரன் தனது மருமகள் அவளது குழுந்தையுடன் தாய்வீடு சென்றுவிடுவாள்
என்று எதிர்பார்த்தான். கெம்பம்மாள் கணவனின் இறப்பிற்கு பிறகும் சோளகர் தொட்டியைவிட்டுச்
செல்லவில்லை. அவள் சிக்குமாதாவின் தம்பி கரியனுடன் வாழ்க்கையைத் தொடர விரும்புகிறாள்.
சோளகர் தொட்டியின் தலைவன் கொத்தல்லியும்
பிறரும் கரியனுக்கு கெம்பம்மாளை மணம் முடித்து வைக்க கருதியிருந்தார்கள். கரியனின்
தந்தை இவர்களது விருப்பத்தை வெறுத்து வேறு ஊரில் பெண் பார்க்க முயல்கிறான். ஆலார்,
பெள்ளர், சூரியர், ஓங்களூர், சௌக்கியர் ஆகிய ஐந்து குலத்தவர்களையும் அழைத்துக்கொண்டு
பெண் பார்க்கச் செல்லவிருப்பதை அறிந்துகொண்ட கெம்பம்மாள் மிகவும் வேதனையடைகிறாள். கொத்தல்லியிடம்
ஒரு படி இராகியைக் கொடுத்து நீதி வேண்டுகிறாள். ஊரார் முன்பு பஞ்சாயத்து நடைபெறுகிறது.
கொத்தல்லி கெம்பம்மாளை ஊரார் முன்பு
பிரச்சனையை முறையிடுமாறு சொல்கிறார். அவள் வெளிப்படையாகப் பேசுகிறாள். தான் விதவை நிலையில்
வாடுவதாகவும் தனக்கு வாழ வழிசெய்யவேண்டிய கோல்காரன் நீதி தவறுவதாகவும் முறையிடுகிறாள்.
தனக்கு இன்னும் உடலில் குழந்தை பெற்றுக்கொள்ள வலிமை இருப்பதாகவும் அத்தகைய வாழ்க்கை
தனக்கு தேவைப்படுவதாகவும் முறையிடுகிறாள்.
அவள் விதவையாக வாழ வேண்டிய அவசியம் இல்லை.
யாரையாவது திருமணம் செய்து கொண்டு வாழட்டும் என்று கோல்காரன் கூறுகிறான். நான்
எதற்காக யாருடனாவது வாழ வேண்டும் என்று கெம்பம்மாள் கோபப்படுகிறாள். கொத்தல்லி கெம்பம்மாளை
வெளிப்படையாக மனதில் நினைப்பதைப் பேசுமாறு வழியுறுத்துகிறார். அவள் கரியன் மீதான தனது
விருப்பத்தை வெளிப்படையாகக் கூறுகிறாள். கோல்காரன் அவளது விருப்பத்திற்கு எதிராக அவள்
மீது குற்றம் சுமத்துகிறான். அவள் தன் மகன் கரியனை படுக்கைக்கு அழைத்ததாகவும் அவன்
பயந்துகொண்டு என்னிடம் முறையிட்டதாகவும் குற்றம் சுமத்துகிறான்.
கெம்பம்மாள் கோபம் மேலிட பேசுகிறாள்.
நான் கரியனை படுக்கைக்கு அழைத்ததை மறுக்க வில்லை. ஆனால் நான் விரும்பியிருந்தால்
வேறு குலத்துக்காரனோடு படுத்திருக்க முடியும். ஆனால் குலத்திற்கு நேர்மையானவளாக வாழ்வதால்தான்
கரியனை அழைத்தேன். கரியன் எனக்கு கணவனாக வேண்டும் என்றாள். மேலும் அவன் தன் மகன் தம்மையாவை
தந்தையைப்போல அரவணைத்துக்கொள்வான் என்பதாக நம்பிக்கையைத் தெரிவிக்கிறாள். கோல்காரன்
இடையிட்டு இவளைவிட தன் மகன் ஏழு வயது இளையவன் என்று மறுக்கிறான். ஊரினர் சிரிக்கின்றார்கள்.
வயது பார்த்து திருமணம் செய்கின்ற வழக்கம் நமக்கு கிடையாதே என்பதாக அவர்களது சிரிப்பு
அமைந்திருந்தது.
கொத்தல்லி கரியனைநோக்கி உனக்கு உன் அண்ணியின்
மீது விருப்பம் இருக்கின்றதா, அவளுடன் சேர்ந்து வாழ விரும்புகிறாயா என்று கேட்கிறான்.
அவனும் அண்ணியின் மீது தனக்குள்ள விருப்பத்தை உறுதிசெய்கிறான். கொத்தல்லி இருவரது விருப்பத்தையும்
அங்கீகரித்து திருமணம் செய்துகொள்ள உறுதியளித்தான். தீர்ப்பு வழங்கிய மூன்றாம் நாளில்
இருவருக்கும் திருமணம் நிகழ்த்தப்பட்டு குடும்பமாக வாழத்தொடங்குகிறார்கள்.(பாலமுருகன்,ச.2013:
49-56)
கெஞ்சி
என்பவள் குட்டையூரில் பிறந்தவள். பெஜ்ஜிபாளையத்தில் வாழும் சித்தனுக்கு மனைவியாகிறாள்.
இவர்களுக்கு ஏழு வயதில் பெண் குழந்தையும் நாலு வயதில் ஆண் குழந்தையும் இருக்கின்றார்கள்.
சோளகணை ஊருக்கு முன்புள்ள விவசாய நிலத்தில் சித்தன் விவசாயம் செய்து வருகிறான். சோளகனையிலுள்ள
நஞ்சன் என்பவன் சித்தனுக்கு விவசாயத்தில் உதவி செய்யும் நண்பனாக வருகிறான். நஞ்சனுக்கு
கெஞ்சியிடம் பழக்கம் ஏற்பட்டுவிடுகின்றது. இருவரும் இணைந்து வாழ விரும்புகிறார்கள்.
கெஞ்சி ஊர் பஞ்சாயத்தைக்கூட்டி முறையிடுகிறாள். சித்தனுடன் வாழ விருப்பமில்லை என்பதையும்
நஞ்சனுடன் வாழ விரும்புகிறேன் என்பதையும் அறிவிக்கிறாள். பஞ்சாயத்தார் நீதி சொல்கிறார்கள்.
சித்தன் கொடுத்த பரிசப் பணம் ஆயிரத்தை கொடுத்துவிட்டு நஞ்சனுடன் வாழுமாறு வழியுறுத்துகிறார்கள்.
சித்தன் நஞ்சனிடம் ஆயிரம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு இரு பிள்ளைகளையும் அழைத்துச் செல்கிறான். கெஞ்சி
நஞ்சனுக்கு மனைவியாகி நான்கு மாத குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டிருக்கிறாள். (பாலமுருகன்,ச.2013:
82-83)
சிவண்ணாவிற்கு
சின்னதாயி என்ற மனைவி இருக்கிறாள். இவர்களுக்கு ரேசன் என்ற ஒரு ஆண்பிள்ளை இருக்கின்றான்.
சிவண்ணாவிற்கு நூறு ரூபாய் சம்பளத்திற்கு வனத்தின் தீக்கங்காணியாக வேலை கிடைக்கின்றது.
சோளகர் தொட்டியிலிருந்து பாலப்படுகை வரையிலான வனத்திற்கு அவன் பொறுப்பேற்றிருந்தான்.
பாலப்படுகையில் அவனது தாய்வழி உறவுக்காரி மாதி என்பவள் வாழ்கிறாள். அவள் ஜவணன் என்பவனுக்கு
மனைவியாகி பத்து வயது பெண் பிள்ளைக்குத் தாயாகியிருக்கிறாள். அவளது மகளுக்கு சித்தி
என்பது பெயர்.
ஜவணன் குடும்பத்தில் சிறிதும் பொறுப்பில்லாதவனாக
இருக்கின்றான். எந்த நேரமானாலும் வீட்டிற்கு வராமல் மரத்தடியில் கஞ்சா புகைத்துக்கொண்டு
உலகம் மறந்தவனாக வாழ்கிறான். மாதி அவனைப் பொருட்படுத்தாமல் வனத்திலிருந்து விறகு சேகரித்து
விற்று குடும்பத்தை நடத்துகிறாள். வனத்தின் தீக்கங்காணியாகிய சிவண்ணாவிற்கும் மாதிக்கும்
நட்பு ஏற்படுகின்றது.
மாதியின் விறகு சேகரிப்பிற்கு அவன் உதவுகிறான்.
சித்தியின் மீது அதிக பாசமுடையவனாக நடந்துகொள்கிறான். மாதி அவனது நேர்மையான அன்பிற்கு
பணிந்து அவனோடு இணைந்து வாழ விரும்புகிறாள். சிவண்ணாவும் மாதியுடன் இணைந்து வாழ விரும்புகிறான்.
மாதி தனது குடிசையில் உரிமையோடு வாழ சிவண்ணாவை அனுமதிக்கிறாள்.
சோளகர் தொட்டியினர் பாலப்படுகையிலிருந்து
வந்திருந்த ஈரம்மாவின் மூலமாக சிவண்ணா மாதியுடன் இணைந்து வாழ்ந்த செய்திகளை அறிந்துகொள்கிறார்கள்.
சின்னத்தாயி கோபத்துடன் மாமியார் ஜோகம்மாளுடன் சண்டையிட்டுக்கொண்டு மகன் ரேசனுடன்
தாய்வீடு சென்றுவிடுகிறாள்.
மாதியின் கணவன் பஞ்சாயத்தைக்கூட்டி முறையிடுகிறான்.
மாதி வேறொரு ஆணுடன் வாழ்கிறாள். அவளது நடத்தை பிடிக்கவில்லை. எனக்கு தாலியையும் பரிசப்பணத்தையும்
திருப்பிக்கொடுக்கும்படி கேட்கிறான். மாதி தனது தாலியை வெற்றிலையில் வைத்து பஞ்சாயத்தாரிடம்
ஒப்படைக்கிறாள். குடும்பத்தில் அக்கறையின்றி இருந்த ஜவனனை இத்தனைக் காலமாகப் பராமரித்ததற்காக
பரிசப்பணம் ஈடாகிவிட்டது என்று பரிசபணத்தைக் கொடுக்க மறுக்கிறாள். அவளது
பேச்சிலிருந்த நியாயத்தை பஞ்சாயத்தார் ஏற்கின்றனர். சிவண்ணாவை அழைத்து மாதியையும் அவளது
மகளையும் காப்பாற்றுவேன் என்பதாக மண்ணில் சத்தியம் செய்யச் சொல்கிறார்கள். சிவண்ணாவும்
முறையாகச் சத்தியம் செய்து இருவரையும் அழைத்துக்கொண்டு சோளகர் தொட்டிக்கு வருகிறான்.
கொத்தல்லியிடம் ஒரு படி இராகியைக் கொடுத்து
மாதியும் சித்தியும் தன்னுடன் குடும்பமாக வாழ அனுமதி கேட்கிறான். இவர்கள் என்னை நம்பி
வந்து விட்டார்கள். எனக்கும் இவர்களைவிட்டு வாழ முடியாது என்று முறையிடுகிறான். சின்னத்தாயிக்கு
என்ன பதில் சொல்வது என்று கொத்தல்லி வருந்துகிறான். அவள் மாதியுடன் இணைந்து வாழ சம்மதித்தால்
எனக்கு தடையில்லை என்று உறுதியளிக்கிறான். கொத்தல்லி உடன்படுகிறான். தொட்டியிலுள்ள
அனைவருக்கும் விருந்து வைத்துவிடுங்கள் என்ற நிபந்தனையுடன் அவர்களை வாழ அனுமதிக்கிறான்.
சோளகர் தொட்டியில் சிவண்ணாவின் மனைவி என்ற உரிமையுடன் மாதி வாழத்தொடங்குகிறாள். (பாலமுருகன்,ச.2013:
91-96)
கெம்பம்மாளின்
திருமண உறவு, கெஞ்சியின் திருமண உறவு, மாதியின் திருமண உறவு ஆகியவற்றின் வாயிலாக கீழ்வரும்
முடிவுகளை அறிய முடிகின்றது. சோளகர்களின் குடும்ப அமைப்பில் புதிதாக திருமணம் செய்துகொண்ட
ஆணும் பெண்ணும் கணவர் மனைவி என்ற உரிமையுடன் தனி வீடு அமைத்து வாழ்கிறார்கள். கணவர்
இறந்துவிட்ட சோளகப் பெண்கள் விருப்பத்துடன் மறுதிருமணம் செய்து கொள்கிறார்கள்.
விதவையான பெண்கள் தனது பிள்ளைகளுடன் தாய்வீடு திரும்பி விடுகிறார்கள். தாய்வீட்டிலிருந்துகொண்டு
மறுதிருமணம் செய்துகொள்கிறார்கள். அல்லது கணவனது சகோதரைத் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
சோளகர்கள் வயது பார்த்து திருமணம் செய்துகொள்வது இல்லை. பெரியவர்களால் குலம் பார்க்கப்பட்டு
திருமணம் செய்துகொள்கிறார்கள்.
ஆண்களும் பெண்களும் வெளிப்படையாக தங்களது
காதலை முறையிடுவதற்கு எந்தத் தடைகளும் இ்ல்லை. மனம் உடன்பட்டால் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
விருப்பம் இல்லாத கணவனை விட்டு புதியக் கணவனைத் தேர்ந்தெடுக்கின்ற உரிமை பெண்களுக்கு
இருக்கின்றது. பழைய கணவன் கொடுத்தப் பரிசப்பணத்தைப் புதிய காதலனிடமிருந்து
திருப்பிக் கொடுத்துவிட்டு புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். தன் மனைவி பழைய கணவருடன்
வாழ்ந்து பெற்றக் குழந்தையையும் தன் குழந்தையாக ஏற்று வாழ்கிறார்கள். பழைய கணவரிடமே
குழந்தையை விட்டுக்கொடுத்து வருவதும் நிகழ்கிறது. இந்த நிகழ்வுகள் பெரும்பாலும் பஞ்சாயத்தார்
கூடி நிறைவேற்றுவதாக அமைகின்றது. பஞ்சாயத்தார் முன்பு பெண்கள் தங்களது நியாயமான பாலுறவு
உரிமை பற்றிய கோரிக்கைகளைக்கூட வெளிப்படையாக பேசுகின்ற உரிமை நிலவுகின்றது. பெண்களின்
இத்தகையப் பண்பானது ஆணாதிக்கத்தின் முதிர்ச்சியடையாத தன்மையையும் பெண்ணடிமைத்தனத்தின்
இறுக்கமடையாத தன்மையையும் அறிவுறுத்துகின்றது. (சிவக்குமார்,கே.2016:176-177)
ஒருத்திக்கு
ஒருவன் என்ற ஒருதார மணமுறையானது பாலுறவு உரிமை வரலாற்றின் இறுதி வடிவமாக இருக்கின்றது.
காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகத்திலும், வேட்டை நாகரிகத்திலும் இத்தகைய மணமுறை
தோன்றவில்லை. தனிச்சொத்துடைமை தோன்றிய கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்தில்தான் இத்தகைய
மணமுறை தோன்றியுள்ளது. தந்தையதிகாரச் சமூகமும் இத்தகைய நாகரிக காலத்தில்தான் தோன்றியது
என்பது குறிப்பிடத்தக்கதாகும். கால்நடை மந்தை வளர்ப்புக் நாகரிகத்தில் தோன்றிய பாலுறவு
உரிமையானது இரு கூட்டங்களுக்கு இடையிலானதாகும். இதன் விளைவாக தாய்தலைமையிடமிருந்த சமூகச்
சொத்துடைமையைத் தந்தையதிகாரம் பறிக்கத் தொடங்கியது. சமூகச் சொத்துக்கள் தந்தையதிகாரத்தின்
தனிச்சொத்துக்களாக உருமாறின. தனிச்சொத்துடைமையின் விளைவாக அவசியப்பட்ட வாரிசுரிமையால்
தாய்தலைமைகள் ஆண்களின் பெண்ணடிமைகள் ஆயினர். பெண்கள் சொத்தாதிக்கமுடைய ஆண்களுக்குச்
சொத்தாக உருமாறினார்கள். பெண்ணை ஆணின் சொத்தாக உருமாற்றிய பண்பாடே திருமணம் என்பது
வரலாறு. இத்தகைய திருமணமே ஒருத்திக்கு ஒருவன் என்ற ஒருதார மணமுறை குடும்பத்தின் தொடக்கமாகும்.
இத்தகையத் தொடக்கம் பாலுறவு உரிமையின் வரலாற்றிலிருந்து பிரித்தறிய கூடாதது. (சிவக்குமார்,கே.2016:176-177)
பாலுறவு உரிமை வரைமுறையற்ற ஆரம்ப நிலையிலிருந்து பல மட்டங்களைக் கடந்து வந்துள்ளது. தாய்
சேய் பாலுறவு உரிமை தடை, சகோதர சகோதரிகளின் பாலுறவு உரிமை தடை, இருவேறு
கூட்டங்களுக்கு இடையில் வரைமுறையற்ற பாலுறவுஉரிமை. பல கணவர் முறை, பல மனைவியர் முறை,
குழு மணமுறை, இறுதியாக ஒரு பெண் ஒரு ஆணுடன் மட்டும் பாலுறவு உரிமையில் இணைந்து
வாழ்கின்ற ஒருத்திக்கு ஒருவன் மணமுறை ஆகும். ஆணின் சொத்தாதிக்க
நலனை அடிப்படையாகக் கொண்டு ஒருத்திக்கு ஒருவன் என்றத் திருமண வடிவிலான குடும்ப அமைப்பு
நிலைபெற்றுவிட்டது. எனினும், பழங்குடி மக்களது குடும்ப அமைப்புகளின் இயங்குதலில் ஒருத்திக்கு
ஒருவன் என்ற திருமண அடிப்படை இறுக்கமான வடிவத்தை எட்டவில்லை. ஒருதார மணமுறை அதிகாரப்பூர்வமான
குடும்ப அமைப்பாக நடைமுறையில் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும்கூட இறுக்கம் அடையாமல் நெகிழ்வுத்
தன்மையுடையதாகவே இருக்கின்றது. (சிவக்குமார்,கே.2016:176-177)
கணவனைவிட்டு விலகி வேறொரு ஆடவனை திருமணம்
செய்து கொள்கின்ற நடைமுறை வடிவானது ஒருதார மணமுறையின் இறுக்கமடையாதத் தன்மையை நிரூபிக்கின்றது.
இத்தகைய நீருபணத்தின் வழியாக திருமணம் என்ற தந்தையதிகாரச் பண்பாட்டிற்கு முந்தைய நிலையின்
அடையாளங்களைக் கண்டறிய முடிகின்றது. அதாவது, தாய்தலைமை சமூகம் மரணிப்பதற்கு
முந்தைய இறுதிக்கட்டத் தருணங்களின் குடும்ப வடிவங்களை பழங்குடிகளது பண்பாடுகளில்
மிச்சசொச்சங்களாகக் கண்டறிய முடிகின்றது.
இத்தகைய கண்டறிதல்கள் பெண்களை ஓர் ஆணுக்கு
சொத்தாக மாற்றுகின்ற தந்தையதிகாரத்தின் திருமணப் பண்பாடு உடைவதற்கான வரலாற்று சாத்தியங்கள்
உண்டு என்பதை உணரச் செய்கின்றது. இத்தகைய உணர்தலானது பெண்ணடிமைப் பண்பாட்டைப் போற்றும்
சமகாலத் திருமணங்களைப் புறக்கணிப்பதற்கும், பாலின சமத்துவத்தைப் போற்றும் சமூக மேன்மைக்கான
இணையேற்பு பண்பாட்டைச் சாத்தியப்படுத்துவதற்கும் அவசியமான சமூக உள்ளத்தியலின்
ஊன்றுகோலாக அமைகின்றது.
ஆழ்மனப் பிரதிபலிப்பு (வேட்டை, எங்குசீர்குட்டை
வழிபாடு, கிழங்கெடுத்தல்)
வேட்டை
சோளகர்கள் வனத்துறையினரின்
ஒடுக்குமுறையால் அரிதாகவே வேட்டையாடுகிறார்கள். தொட்டியின் அருகே இருக்கின்ற பாறைகுட்டையில்
தண்ணீர் குடிக்க வந்த மான்களில் ஒன்றை சோளகர் தொட்டியைச் சேர்ந்த மூன்று நாய்கள் தொட்டிக்கு
விரட்டிச் செல்கின்றன. தொட்டியில் உள்ள இந்த நாய்கள் வேட்டைக்கு வாய்ப்பு கிடைத்தால்
இரையைக் கவ்விக்கொண்டோ அல்லது விரட்டிக்கொண்டோ தொட்டியினரிடம் கொண்டு வந்து சேர்க்கின்றன.
சிவண்ணாவும் புட்டனும் மூன்று நாய்களின் உதவியோடு வேட்டையாடத் தயாராகிறார்கள். சிவண்ணா
ஒரு கையளவு கருங்கல்லை எடுத்து அந்த மானைக் குறிவைத்து வீழ்த்துகிறான். வேட்டையாடப்பட்ட
மானின் கறியைக் கூறுபோட்டு பங்கிடுகிறார்கள். முதல் பங்கை ஊரிலுள்ள விதவைப் பெண்ணுக்கு
ஒதுக்குகிறார்கள். இரண்டாவது பங்கை ஊரின் முக்கியமானவர்களாகிய கொத்தல்லி மற்றும்
கோல்காரனுக்கு ஒதுக்குகிறார்கள். மூன்றாவது பங்கை வேட்டையாடியவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.
இவர்கள் மற்றவர்களைவிட பங்கில் சற்று கூடுதலாக எடுத்துக்கொள்ளும் உரிமையுடையவர்கள்.
நான்காவது பங்கை ஊரில் மான்கறியை விரும்புபவர்களுக்கு பங்கிடுகிறார்கள். இறுதியாக வேட்டைக்கு
உதவுகின்ற நாய்களின் பங்கை கொடுத்துவிடுகிறார்கள். வேட்டையின் முதல் பங்கை விதவை பெண்ணுக்கு
கொடுப்பதற்கான வரலாற்றுக் காரணத்தைப் பிறகு விளக்கப்போகிறோம்.
எங்குசீர்குட்டை
வழிபாடு
சோளகர்கள்
தங்களது பூமியில் மழை பெய்ய வேண்டி எங்குசீர்குட்டை என்ற இயற்கை தெய்வத்தை வழிபடுகிறார்கள்.
மழை தெய்வமாகிய எங்குசீர் குட்டையை நினைத்து வனத்திலுள்ள தாண்ரி மரத்தில் வழிபாட்டை
நிகழ்த்துகிறார்கள். மழை பொய்த்துப் போகின்ற சூழ்நிலையில் பெண்கள் மட்டுமே இணைந்து
நிதழ்த்துகின்ற பூஜையாக அமைந்திருக்கின்றது. பூஜைக்குரிய நாளை கொத்தல்லியும் கோல்காரனும்
குறிப்பிடுகிறார்கள். அந்த நாளில் வீட்டை சாணி கொண்டு சுத்தம் செய்கிறார்கள். தொட்டிப்
பெண்கள் அனைவரும் வீட்டிலுள்ள தானியங்களில் உணவு செய்து மூங்கில் நுடைகளிலும் முறங்களிலும்
எடுத்துக்கொண்டு வனத்திற்குச் செல்கிறார்கள். தொட்டி ஆண்கள் அனைவரும் மணிராசன் கோயிலில்
நின்று பெண்களை வழியனுப்புகிறார்கள். வனத்திலுள்ள உயரமான தாண்ரி மரத்தினைச் சுற்றிலும்
உணவை வைத்துக் கொள்கிறார்கள். மரங்களடர்ந்த வனத்தில் தங்களது ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக
நிற்கிறார்கள். வானத்தைப் பார்த்து எங்குசீர்குட்டை என்ற மழை தெய்வத்தை நினைத்து “மழை
பொழி தாயே மழை பொழி” என்று கூட்டமாக வேண்டுகிறார்கள். வட்டமாக கும்மியடித்து ஆடுகிறார்கள்.
ஒருவர் மாறி ஒருவர் பாடுகிறார்கள். மழை இல்லாததால் தங்களுக்கு நேர்ந்துள்ள துயரங்களைச்
சொல்லி அழுகிறார்கள். எடுத்துவந்த உணவை மதிய நேரத்தில் உண்டு முடிக்கிறார்கள்.
உணவிற்குப் பிறகு மீண்டும் ஆட்டத்தைத் தொடர்கிறார்கள். மாலை நேரம் இருட்டத் தொடங்கியதும்
மூங்கில் கூடைகளையும் முறத்தையும் அங்கேயே வீசிவிட்டு உடைகளை அணிந்து கொண்டு தொட்டிக்குத்
திரும்பிச் செல்கிறார்கள். ஆண்களை வனத்திற்குள் அனுமதிக்காமல் பெண்கள் மட்டும் ஒன்றிணைந்து
நிர்வாண நிலையிலிருந்து மழை தெய்வத்தை அழைப்பதற்கான வரலாற்றுக் காரணத்தை பிறகு விளக்கப்போகிறோம்.
கிழங்கெடுத்தல்
சோளகர்களது
பூமியில் மழை பெய்யாமல் விவசாயம் பாதித்து வீடுகளில் சேகரித்து வைத்திருந்த தானியங்களும்
முடிவழையப் போகின்றன. விவசாயத்திற்கும் வழியின்றி வேட்டைக்கும் வழியின்றி துயரடைகின்ற
தருணங்களில் பெண்கள் மட்டும் காடுகளுக்குச் சென்று கிழங்கு தேடுகிறார்கள். கொத்துக்
கருவி, கடப்பாரை போன்ற கருவிகளைப் பயன்படுத்தி கிழங்குகளைத் தோண்டிச் சேகரித்து வருகின்றார்கள்.
காடுகளுக்குச் சென்று கிழங்கு சேகரிப்பதற்கு ஆண்களல்லாமல் பெண்கள் ஏன் செல்கிறார்கள்
என்பதற்கான வரலாற்றுக் காரணத்தைப் பிறகு விளக்கப்போகிறோம்.
வரலாற்றுக் காரணம்
மனித வரலாற்றுப் படிநிலையின் எட்டு கட்டங்களில்
உற்பத்திக் கருவிகள் வளர்ச்சியடையாத காலக்கட்டத்தில் காடுசார்ந்த பொருட்களைச் சேகரித்தலே
முதன்மைத் தொழிலாக அமைந்திருந்தது. வேட்டையாடுதல் என்பது இரண்டாம் கட்டமாகவே திகழ்ந்தது.
கால்நடை மந்தை வளர்ப்பும் விவசாயமும் ஆரம்ப நிலையிலேயே இருந்தன.
குழந்தைகளையும் கூட்டத்தையும் குழுவின்
தாயார் வழிநடத்திய தாய்தலைமைச் சமூகத்தில் காடுசார்ந்து சேகரிக்கப்பட்ட பொருட்களைப்
பெண்களே தலைமையேற்று கூட்டத்திற்கு பகிர்ந்தளித்துப் பராமரித்தார்கள். வளர்ச்சியடைந்த
வேட்டை நாகரிகத்திலும் தாய்தலைமை சமூகத்தின் இத்தகையப் பண்பாடு பாதித்ததில்லை.
கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்தில் தந்தையதிகார சமூகம் தோன்றும் காலம்வரையிலும் இந்த
நிலையே நிலைத்திருக்கின்றது. கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்தின் சொத்தாதிக்கத்தாலும்,
பாலுறவு உரிமையில் நிகழ்ந்த இரு குழுக்களுக்கு இடையிலான உறவு முறையாலும், பெண் கருவுறுவதில்
ஆண்களின் பாலுறவு நடத்தையே காரணம் என்ற கண்டுபிடிப்பினாலும் தந்தையதிகாரச் சமூகம் தோன்றி
தாய்தலைமை சமூகத்தை உடைத்து நிலைபெற்றது.
இயற்கையின்
அங்கமாகிய பெண் படிப்படியாக செயற்கையின் அங்கமாகிய சொத்ததிகார ஆண்களுக்குச் சொத்தாக
மாறினாள். இன்றையத் தொன்மையானப் பழங்குடிச் சமூக வாழ்விலும் வேட்டையாடுதலுக்கும் மந்தை
வளர்ப்பிற்கும் விவசாயத்திற்கும் வழியில்லாத சூழலில் காடுகளில் சென்று கிழங்குகளைச்
சேகரிப்பதற்குப் பெண்கள்தான் செல்கிறார்கள். இந்த நடவடிக்கையின் மூலமாகச் சோளகர்கள்
தங்களது ஆழ்மன உணர்நிலையில் காடுசார்ந்த பொருட்களைச் சேகரிக்கின்ற தாய்தலைமைச் சமூகத்துப்
பெண்களை நினைவுகொள்வதாகச் செயல்படுகிறா்கள். ஆழ்மன உணர்நிலை என்பது சிக்மன் ஃபிராய்டு
விளக்குகின்ற நனவிலி மனத்தைக் குறிப்பதாகும். உணர்நிலை அறிவு என்பது சிக்மன் ஃபிராய்டு
விளக்குகின்ற நனவு மனத்தைக் குறிப்பதாகும். சோளகர்களது இத்தகைய நடவடிக்கையானது
கடந்தகாலத் தாய்தலைமை சமூகத்தின் காடு சார்ந்த பொருள் சேகரிப்புக் கடமையின் எச்சமாகத்
திகழ்கின்றது.
வேட்டையாடிய
இரையைப் பங்கிடும்போது முதல் பங்கை சோளகர்கள் தங்கள் ஊரிலுள்ள விதவை பெண்ணுக்கு ஒதுக்குகிறார்கள்.
தாய் தலைமை சமூகத்தில் வேட்டையாடிய இறைச்சி முழுமையும் தாயின் தலைமைக்கு உட்பட்டு பகிர்ந்துகொள்ளப்பட்டது.
தந்தையதிகாரச் சமூகத்தில் விதவைப் பெண்ணுக்கு ஒரு குறிப்பிட்ட பங்கு ஒதுக்கப்படுகின்றது.
கணவரை இழந்த பெண்ணை விதவை என்கிறார்கள். கணவர் என்பது தந்தை அதிகாரச் சமூகத்தின் அடையாளம்
ஆகும். தாய் தலைமைச் சமூகத்தில் சொத்துடைமை உற்பத்திமுறை வலிமையடையும்வரை ஆண் பாலினத்தை
முதன்மைப்படுத்துகின்ற கணவன் மற்றும் தந்தை ஆகிய உறவுமுறையோ கருத்துக்களோ தோன்றியிருக்கவில்லை.
சோளகர்கள் தங்களது வேட்டையின் முதல் பங்கை ஒரு விதவைப் பெண்ணுக்கு ஒதுக்குகின்ற வழக்கமானது
தாய்தலைமைச் சமூகத்தின் மீது ஆண்களின் ஆழ்மன உணர்நிலையிலுள்ள மரியாதையின் எச்சமாகும்.
கணவரை இழந்த பெண்ணைக் கணவர் என்ற தந்தையதிகார உறவு தோற்றம் பெறாத தாய்தலைமை சமூகத்தின்
பெண்ணுக்குப் பதிலீடாகக் கருதுகிறார்கள்.
சோளகர்
தொட்டியில் மழை தெய்வத்தை வழிபடுவதற்காக ஆண்கள் தொட்டியிலிருந்துகொண்டு பெண்களைக் காட்டிற்கு
வழியனுப்புகிறார்கள். காட்டிற்குச் சென்ற பெண்கள் மழை தெய்வமாகிய எங்குசீர் குட்டையை
வழிபடுகிறார்கள். செயற்கையின் அடையாளமாகிய அனைத்து உடைகளையும் களைந்து, இயற்கையின்
அடையாளமாகிய நிர்வாண நிலையிலிருந்து வழிபடுகிறார்கள். செயற்கையின் அடையாளமாகிய ஊர்
பகுதியை நீங்கி, இயற்கையின் அடையாளமாகிய வனத்திற்குள் சென்று வழிபடுகிறார்கள். சொத்தாதிக்கத்தின்
அடையாளமாகவும் தந்தையதிகாரத்தின் பிரதிநிதிகளாகவும் திகழ்கின்ற ஊர் ஆடவர்களைப் பிரிந்து,
தாய்தலைமையின் பிரதிநிதிகளாக வந்து வழிபடுகிறார்கள். காடு சார்ந்த பொருள் சேகரிப்பின்
அடையாளங்களாகிய கூடை முறங்களைச் சொத்தாதிக்கப் பண்பாட்டிற்கு உடைமையாக எடுத்துச் செல்லாமல்
வனத்திலேயே வீசிவிட்டுச் செல்கிறார்கள். இத்தகைய நடவடிக்கைகள் மூலமாக சோளகர்கள் தங்களது
ஆழ்மன உணர்நிலையில் தாய்தலைமைச் சமூகப் பெண்களுக்கு பதிலீடாக தங்களை உருமாற்றிக் கொள்வதாகக்
கருதுகிறார்கள். அதாவது, தாய் தலைமை சமூகத்தின் தொடக்க வழிபாடாகிய இயற்கை வழிபாட்டை
நிகழ்த்திய பெண் பூசாரிகளுக்கு பதிலீடாகத் தங்களை உருமாற்றிக் கொள்கிறார்கள்.
ஆழ்
மன உணர்நிலை என்பது சமூக உள்ளத்தியல் பற்றிய அறிவியலாகும். சமூக உள்ளத்தியல்
என்பது சமூக வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு கட்டமைவதாகும். சமூக வாழ்வியல் என்பது
சமூக வரலாற்றியலிலிருந்து பிரிக்க முடியாததாகும். இத்தகைய சமூகவிஞ்ஞான விளக்கத்தின்
அடிப்படையில் தந்தையதிகார சமூகத்தில் வாழும் மனிதர்களது ஆழ்மன உணர்நிலையானது இத்தகைய
பதிலீடுகள் மூலமாக தாய்தலைமை சமூகத்தை நினைவுகொள்கின்றன என்ற முடிவை எட்ட முடிகின்றது.
தந்தையதிகாரத்தால் வீழ்த்தப்பட இயலாத தாய் தலைமை சமூகத்தின் மீதான சமூக மரியாதையானது, மனிதர்களது
ஆழ்மனதில் இன்றும் பேணப்படுவதென்பது ஆச்சரியப்படத்தக்க உண்மையாகும். பழங்குடிகளது
பண்பாட்டில் மட்டுமல்ல, நவீன சொத்தாதிக்க சமூகத்தினரின் ஆழ்மனதிலும் தாய்தலைமையின்
சமூக மரியாதை பேணப்படுகின்றது. அதனால்தான் கடல், காடு, காற்று, வானம், மலை, நிலம்,
இயற்கை அனைத்தும் தாயாக கொண்டாடப்படுகின்றன. அவற்றை தந்தையாக கொண்டாடும் தந்தையதிகாரப்
பண்பாடு இன்றும் கட்டமைய இயலவில்லை என்பதே சான்றாகும்.
பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம் போன்ற தந்தையதிகாரப் பண்பாட்டை உடைக்க தாய்தலைமையின்
நினைவும் மரியாதையும் உந்துதலாக அமையும். சமூக மேன்மை போற்றும் பாலின சமத்துவத்தை அடைவதற்கு
கலங்கரையாகத் திகழும். மனித ஆழ்மன உணர்நிலையில் வெளிப்படுகின்ற இத்தகைய தாய்தலைமை
மீதான நினைவுகளும் மரியாதைகளும் சமூக மேன்மைக்கு ஓர் உந்துவிசையாக அமைகின்றது.
பூப்புச்சடங்கு
சோளகர் தொட்டியில்
ஒரு பெண் பூப்பெய்துவிட்டால் அவளைக் குளிக்கச் செய்து கொட்டகையில் அமரச் செய்கிறார்கள்.
பெண்ணுக்குச் சடங்கு செய்வதற்காகக் கானாம்புல் வேய்ந்த குடிசையை அமைக்கிறார்கள். இந்தக்
குடிசை பெரும்பாலும் தாயின் சகோதரனால் அமைக்கப்படுகின்றது. நான்கு நாள்வரை அந்தக் குடிசையிலேயே
தங்க வைக்கப்படுகிறாள். ஐந்தாம் நாளில் குளிக்கச் செய்கிறார்கள். புத்தாடை அணிய
வைத்துப் பாடல்களுடன் அவளை வீட்டிற்கு அழைத்துவருகிறார்கள். பசுவின் சாணத்தில் ஒரு
துளியை அவளது நாவிலிட்டு வீட்டினுள் அழைக்கப்படுகிறாள். கானாம்புல் குடிசை எரியூட்டப்படுகின்றது.
பெண்ணைப் பெற்றவர்கள் தொட்டி மக்களுக்கு விருந்து படைக்கிறார்கள். (பாலமுருகன்,ச.2013:
116-117).
பழங்குடிச்
சமூகத்தில் பூப்புச் சடங்கின் பொதுத்தன்மையை இரண்டு நிலையில் அறிய முயலலாம். ஒன்றாம்
நிலையில் முதன்முதலாக பூப்பெய்தும் பெண்ணைத் தனித்துவப்படுத்தி கூடி கொண்டாடுகிறார்கள்.
இரண்டாம் நிலையில் மூன்று தன்மைகள் அடங்குகின்றன.
1.தாய்மாமன்
பங்கேற்பு
2.தீட்டு எனும்
கருத்தாக்கம்
3.பூப்பெய்த
பெண் அமர்த்தப்பட்ட குடிசையை எரித்தல்
இந்த இரண்டு
நிலையில் முதல் நிலையானது தாய் தலைமை சமூகத்தின் பண்பாட்டை பிரதிபலிக்கின்றது. இரண்டாம்
நிலையின் தன்மைகள் தந்தையதிகாரச் சமூகத்தின் பண்பாட்டை பிரதிபலிக்கின்றது.
முதல் நிலையானது
மனித வரலாற்றுப் படிநிலையில் காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகத்திலும், வேட்டை
நாகரிகத்திலும் தாய்மை கொண்டாடப்பட்டதன் வெளிப்பாட்டை பிரதிபலிக்கின்றது. மனித சமூகம்
தோன்றி வளர்ந்த வரலாற்றுப் படிநிலையில் தாய்தலைமை சமூகமானது முதல் இரண்டு கட்டம்வரைதான்
நீடித்தது. மூன்றாம் கட்டத்தில் தந்தையதிகாரச் சமூகத்தின் தோற்றத்தால் தாய்தலைமை நீடிக்க
இயலவில்லை. எனினும், இப்பூப்பெய்தல் விழாவில் தாய்தலைமை சமூகப் பண்பாட்டின் எச்சத்தை
உணர முடிகின்றது. பூப்பெய்தல் விழா, புஷ்பவதி விழா, மஞ்சள் நீராட்டு விழா ஆகிய
சொல்லாடல்களும் பூப்புச்சடங்கினை சுட்டும் சொல்லாடல்களாக அமைகின்றன.
சகமனிதர்களைப்
பெற்றுக்கொடுப்பவள் பெண்.
பெண் பூப்பெய்துகிறாள்,
பிறகு தாயாகிறாள்.
பூப்பெய்தாத
எந்தப் பெண்ணும் தாயாகுவதில்லை.
பூ என்பது பெண்ணின்
பிறப்புறுப்பு.
பெய்தல் என்பது
ரத்தம் சிந்துதல்.
பெண் பிறப்புறுப்பு
முதலில் ரத்தம் சிந்துதலே பூப்பெய்தல் ஆனது.
(தேவிபிரசாத்சட்டோபாத்யாயா,2010:367-368)
இவளால் மக்கள்
பெருகுவர் என்று
இனப்பெருக்கத்
தெய்வம் அறிவித்ததாம்!
இனப்பெறுக்கத்
தெய்வத்தின் அறிவிப்பு மொழியே
ரத்தம் சிந்துதல்.
ரத்தம் சிந்துகின்ற
பெண்ணினம் தெய்வமாகப் போற்றப்பட்டாள்.
(புதியவன்.7அக்.2019)
பூப்பெய்துவிட்ட
பெண் பிள்ளைகளை
இனப்பெருக்கத்
தெய்வமாகக் கொண்டாடினர்
வயிற்றில் கருவுற்ற
தாய்மார்களைத்
தாய்த்தெய்வமாகக்
கொண்டாடினர்
பூப்பெய்தல்
சடங்கு விழாவும்
வளைகாப்பு சடங்கு
விழாவும்
இங்கிருந்துதான்
தொடங்கின.
நவீனத் தமிழகத்தில்
இன்றும் தொடர்கின்ற இவ்விழாக்கள்
தந்தையதிகாரப்
பண்பிற்கு உருமாறியுள்ளன. எனினும்,
திராவிட சமூகத்தின்
தொன்மைக்கும்
தாய்தலைமையின்
எஞ்சிய பண்பிற்கும்
இவ்விழாக்களை
அடையாளமாகவும் உணரலாம்.
இரண்டாம்
நிலையானது மனித வரலாற்றுப் படிநிலையின் மூன்றாம் கட்டத்தில் தோன்றிய, கால்நடை மந்தை
வளர்ப்பு நாகரிகத்தின் தந்தையதிகாரச் சமூகப் பண்பாட்டை பிரதிபலிக்கின்றது. அதாவது,
பூப்பெய்தல் விழா என்ற தாய்தலைமை சமூகத்தின் பண்பாட்டை தன்வயப்படுத்தி வந்திருக்கின்றது.
கால்நடை
மந்தை வளர்ப்பு நாகரிகத்தில் தோன்றிய தந்தையதிகாரச் சமூகம் தொடர்ந்து நீடித்து வருகின்றது.
விவசாய நாகரிகம், உற்பத்தி மீதான வணிக நாகரிகம், வணிக இலாபத்திற்காகவே உற்பத்தி செய்தல்,
நிதி மூலதனப் பிரிவு தோன்றி சமூக உற்பத்தி மீது ஆதிக்கம் செய்தல் ஆகிய வரலாற்றுக் கட்டம்வரை
நீடித்துக்கொண்டு இருக்கின்றது. அதாவது, மனித வரலாற்றுப்படிநிலையில் 3ம் கட்டத்திலிருந்து
7ம் கட்டம்வரை நீடித்துக்கொண்டு இருக்கின்றது. மக்கள் தலைமையின் கீழ் சமூக உற்பத்தியைக்
கட்டமைத்தல் என்ற எட்டாம் கட்டத்தில்தான் தந்தையதிகார சமூகம் வீழ்ச்சியுறத் தொடங்கும்
என்பதாக சமூக விஞ்ஞானம் விளக்குகின்றது. (புதியவன், அக்.24,2019)
தந்தையதிகார
சமூகத்தின் நீண்ட வரலாற்றுக் கட்டங்களில் இன்றும் தொடர்கின்ற பூப்பெய்தல்
சடங்கானது, தந்தையதிகாரத்தின் பல்வேறு பண்பேற்றங்களை அடைந்திருக்கும் என்பது
உறுதி. நிலப்பிரபுத்துவ பண்பாடு பெண்களைச் சொத்தாக மறைத்து வைத்திருந்தாலும், முதலாளித்துவ
சமூகமோ பெண்களை நுகர்வுப் பொருளாக்கி திறந்தும் வைத்துவிட்டது. முதலாளித்துவ பண்பாடு
ஆதிக்கம் செலுத்துகின்ற சமகாலத்தில் பூப்புச் சடங்கு முற்றிலுமாக தந்தையதிகாரப் பண்பாடாக
மாறியுள்ளது. எனினும், மனித சமூகத்தின் தொன்மை பண்பாட்டைப் பாதுகாக்கின்ற
பழங்குடிகளது வாழ்வியலில் இத்தகைய பண்பேற்றச் சிக்கல்கள் பெரிதும் இருப்பதில்லை.
பழங்குடிகளது
பூப்புச் சடங்கில் தந்தையதிகாரச் சமூகத்தின் வன்மத்தை வெளிப்படையாக அறிய முடிகின்றது.
பூப்பெய்த பெண்ணைக் கொண்டாடுதல் என்பது தாய்தலைமை சமூகத்தின் எச்சமாக இருப்பினும் தாய்மாமனால்
குடிசை அமைக்கப்படுவது என்பது தந்தையதிகாரச் சமூகத்தின் பண்பேற்றமாக அறிய முடிகின்றது.
பூப்பெய்தப் பெண்ணின் மீது தீட்டு என்ற கருத்தாக்கத்தைச் சுமத்தி அசுத்தப்படுத்தும்போதும்,
அவளை அமர்த்திக் கொண்டாடப்பட்ட குடிசையை எரியூட்டும்போதும் தாய்தலைமைச் சமூகத்தை அடையாளமின்றி
அழிக்கின்ற ஆணாதிக்கச் சமூகத்தின் வன்மத்தை அறிய முடிகின்றது.
சோளகர்
பழங்குடிகளது பூப்பெய்தல் சடங்கில் தாய்தலைமையின் கொண்டாட்டத்தையும் தந்தை அதிகாரத்தின்
வன்மத்தையும் இணை நிலையாக அறிய முடிகின்றது.
முடிவுரை
பழங்குடிகளது
பண்பாட்டின் தொன்மையையும் உண்மையையும் உணர்தல் என்பது அவர்களின் சமகால வாழ்வுரிமைகளையும்
வருங்கால சமூகமேன்மைகளையும் பாதுகாத்தலாகிய சமூகக் கடமையுடன் தொடர்புடையதாகும். பழங்குடிகளது
வாழ்வுரிமைகளைப் பாதுகாத்தல் என்பது இயற்கை, மனித இனம் முழுவதையும் பாதுகாப்பதற்கு
இணையானதாகும். இயற்கையின் அங்கமாக மனிதஇனம் பரிணமித்த குழந்தைப்பருவத்தின் அடையாளங்களாக
வாழும் பழங்குடிகளைப் பாதுகாத்தல் என்பது வயது முதிர்ந்த பெற்றோர்களைப்
பிள்ளைகள் பாதுகாத்தல் என்ற மனித நடத்தைக்கு ஒப்பானதாகும். அனைத்து நாகரிக மனிதர்களும்
பழங்குடி வாழ்க்கையால் பிரசவிக்கப்பட்டவர்களே. ஆனால், நிதிமூலதனப் பிரிவு தோன்றி சமூக
உற்பத்தியை ஆதிக்கம் செய்தலாகிய இன்றைய வரலாற்றுக் கட்டம் பழங்குடிகளது வாழ்வியலுக்கு
பெருந்துயரமான கட்டமாகும்.
பழங்குடிகளது
வாழ்விடங்களாகிய காடுகளும் மலைகளும் இயற்கை வளங்களும் நிதிமூலதனத்தின் இலாப வெறிக்கு
இரையாக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020, சாகர் மாலா. பாரத் மாலா,
மனிதர்களற்ற காடு, புலிகள் சரணாலயம், வனம் பணமாதல் போன்ற இலாப வெறி செயல்திட்டங்களால்
வாழ்வியல் துயரங்களுக்கு பழங்குடிகள் ஆளாகிறார்கள்.
இயற்கையின்
பகைமுரணுக்கு இலக்காதல், சொந்த மண்ணில் அகதிகளாகவும் அடிமைகளாகவும் துன்புறுதல், பேரழிவின்
எதார்த்தங்களில் வாழ்வைத் துறத்தல் ஆகிய நிலைமைகளுக்கு பழங்குடிகள் தள்ளப்படுகிறார்கள்.
இத்தகைய நிலைமைகளிலிருந்து பழங்குடிகளைப் பாதுகாப்பதும் பழங்குடிகள் தங்களைத் தற்காத்துக்கொள்வதும்
சமகாலத்தின் சமூகத் தேவையாக இருக்கின்றது. அதற்காக நிதிமூலதனப் பிரிவிடமிருந்து தப்பித்து
தொன்மையான வாழ்வியலுக்குத் திரும்ப வரலாறு அனுமதிக்காது. காடுகளிலும் மலைகளிலும் வாழ
விரும்புவது பழங்குடிகளது உரிமையாகவும் விருப்பமாகவும் இருப்பதில் தவறில்லை. ஆனால்,
நிதிமூலதனப்பிரிவின் இலாபவெறி அனுமதிக்காது என்பது வரலாற்று எதார்த்தமாகும். ஏனெனில்,
நிதிமூலதனப்பிரிவு தனது கொள்கையளவிலேயே உலக மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் தன்மையற்றதாகும்.
மனித சமூகத்தை
நிதி மூலதனப்பிரிவிலிருந்து மக்கள் தலைமையின்கீழ் சமூக உற்பத்தியைக் கட்டமைத்தல் என்ற
வரலாற்றுக் கட்டம் நோக்கி உயர்த்துவதற்கான வரலாற்றுக் கடமைகளில் பங்கேற்க முயன்றால்
மட்டுமே பழங்குடிகளது வாழ்வுரிமைகள் சமூகப் பாதுகாப்பை எட்டும் என்பது திண்ணம்.
துணை நூல்கள்
1. பாலமுருகன், ச.
2013. சோளகர் தொட்டி. பொள்ளாச்சி : எதிர் வெளியீடு.
2. சிவக்குமார்,கே.2016. தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப்
புதினங்கள்: இனவரைவியல் நோக்கு. முனைவர் பட்ட ஆய்வேடு. புதுச்சேரி : புதுச்சேரி மொழியியல்
பண்பாட்டு ஆராய்ச்சி
3. சிவக்குமார்,கே.
ஆகஸ்ட் 2016. பழங்குடிகளது ஆழ்மன உணர்நிலையில் தாய்தலைமை சமூகத்தின் எச்சம். உங்கள்
நூலகம். பக்.81-85. http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-aug16/31423-2016-09-10-06-55-46
4. தேவிபிரசாத் சட்டோ பாத்யாயா (தமிழாக்கம் எஸ்.தோதாத்ரி).
2010. உலகாயதம். சென்னை : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
5. பக்தவத்சல
பாரதி. 2003(1990). பண்பாட்டு மானிடவியல். சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.
6. 33. பக்தவத்சல
பாரதி. 2005. மானிடவியல் கோட்பாடுகள். புதுச்சேரி: வல்லினம் பதிப்பகம்.
7. 34. பக்தவத்சல
பாரதி. 2014. இலக்கிய மானிடவியல். புத்தாநத்தம்: அடையாளம் பதிப்பகம்.
8. 35. பக்தவத்சல
பாரதி. 2002. தமிழர் மானிடவியல். சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.
9. 36. பக்தவத்சல
பாரதி. 2013 (2007). தமிழகப் பழங்குடிகள். புத்தாநத்தம்: அடையாளம் பதிப்பகம்.
10. புதியவன்.
நவ.3,2019. புராதனம் முதல் பொதுவுடைமைவரை. 'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ். https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5473:2019-11-03-14-08-15&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82
11. புதியவன். அக்.24, 2019. இலக்கிய அறிவியல். 'பதிவுகள்'
- பன்னாட்டு இணைய இதழ். https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5444:2019-10-24-12-39-00&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82
https://puthiyavansiva.blogspot.com/2016/06/all.html
12. புதியவன். அக்.28, 2019. காதல் வரலாறு. 'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்.
13. புதியவன். அக்.7, 2019. கடவுள் வரலாறு. 'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்.
https://puthiyavansiva.blogspot.com/2019/07/blog-post.html
14. புதியவன். அக்.5, 2019. 'சோளகர் தொட்டி' : திருமணங்கள் உணர்த்தும் பண்பாட்டின் எச்சம். 'பதிவுகள்'
- பன்னாட்டு இணைய இதழ்.
15. பூப்படைதல்
விழா தேவையா? கேள்வியெழுப்பும் பெண்கள். BBC செய்தியின் ஆவணப்படம். https://youtu.be/DWq7EsxM_LE
16. அருந்ததிராய்.
பிப்.2,2010. இந்தியாவின் இதயத்தின் மீதான போர். https://www.vinavu.com/2010/02/02/the-heart-of-india-is-under-attack/
17. நந்தன். மே.29,2020. சுற்றுச்
சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020. https://www.vinavu.com/2020/05/29/environment-impact-assessment-2020-draft/
No comments:
Post a Comment