பழங்குடிகளது பண்பாட்டில் பூப்புச் சடங்கு
; தொன்மையும் உண்மையும்
(இலக்கிய
மானிடவியலின் சமூக விஞ்ஞான அணுகுமுறை)
புதியவன் முனைவர் கே.சிவக்குமார்
பூப்புச் சடங்கு என்பது பூப்பெய்தல் விழா, புஷ்பவதி விழா, மஞ்சள் நீராட்டு விழா ஆகிய
சொல்லாடல்களாலும் அழைக்கப்படுகின்றது. பூப்பெய்தலின் சமகால நிலைமை என்ன?
பெண் பூப்பெய்துவிட்டால் பெண்ணின் தாயார் முதலில் அறிவதற்கு சமூகத் தடை உண்டு.
பூப்பெய்த பெண்ணிற்கு பாலில் கீரை விதைகளைக் கலந்து அருந்தச் செய்வார்கள். தண்ணீரில்
மஞ்சள், பச்சையிலை, வேப்பிலை கலந்து நீராட்டுவார்கள். தாய்மாமன்கள் சீர்வரிசையால்
சிறப்பு செய்கிறார்கள். பூப்பெய்து தீட்டானதால் தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் பலவிதமான
அலங்காரங்கள், வேடங்கள், புகைப்படங்கள், கொண்டாட்டங்கள். இறுதியாக ஐயரை அழைத்து தீட்டு
நீக்கும் சடங்குகளை நிகழ்த்தி நிறைவு செய்கிறார்கள்.
தென்னிந்தியாவில் சமகாலத்திலும் நடைமுறையிலிருக்கின்ற இத்தகைய பூப்புச் சடங்கானது
திருமணப் பண்பாட்டை கொண்டாடுவதாக அமைகின்றது. திருமணப் பண்பாடு என்பது தந்தையதிகாரச்
சமூகத்தைக் கொண்டாடுகின்ற பண்பாடாக வரலாற்றில் அறியப்படுகின்றது. எனவே, பூப்புச் சடங்கு என்பது தந்தையதிகாரப் பண்பாட்டின்
வெளிப்பாடாக அர்த்தப்படுகின்றது. அதாவது, எங்கள் வீட்டுப் பெண் திருமணத் தகுதியை அடைந்துவிட்டாள்.
தகுதியுடைய ஆண் வீட்டார் பெண் கேட்டு வரலாம் என அறிவிப்பதாக பூப்புச் சடங்கை விளக்குகிறார்கள்.
ஆனால், பூப்புச் சடங்கின் தொன்மையும் உண்மையும் தந்தையதிகாரப் பண்பாட்டிற்கு உரியதல்ல
என்ற உண்மை இக்கட்டுரையால் விளக்கம் பெறும்
.
பூப்புச் சடங்கு
குறித்த இக்கட்டுரை சோளகர் தொட்டி, வனம் ஆகிய புதினங்களில் பதிவாகியுள்ள பழங்குடிகளது
பூப்புச் சடங்கை முதன்மையாகக் கொண்டு அமைகின்றது. இலக்கிய அறிவியல் விளக்குகின்ற மனித
வரலாற்று படிநிலையில் பூப்புச்சடங்கின் பண்பாட்டு பின்னணி விளக்கம் பெறுகின்றது. மேலும்,
தென்னிந்தியாவில் சமகாலத்திலும் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற பூப்புச் சடங்கு குறித்த
மதிப்பீட்டிற்கு BBC ன் ஆவணப் படம் பயன்படுத்தப்படுகின்றது. பூப்புச் சடங்கின் தொன்மையிலிருந்தும்
உண்மையிலிருந்தும் சமூகத் தேவையின் மதிப்பீடுகளிலிருந்தும் இக்கட்டுரையின் முடிவுரை
நிறைவுபெறுகின்றது.
தமிழகத்தின்
கர்நாடக எல்லைப்புற மலை கிராமத்தில் வாழும் சோளகர் பழங்குடிகளைப் பற்றிய புதினம் சோளகர்
தொட்டி ஆகும். இப்புதினத்தை ச.பாலமுருகன் படைத்துள்ளார். இவர் ஈரோடு மாவட்டம்
பவானியில் பிறந்தவர். பவானி அரசுப் பள்ளியில் படித்தார். கோவை சட்டக் கல்லூரியில் படித்தபோது
இலக்கியங்கள் படிக்கும் வாய்ப்புகளைப் பெற்றார். 1993 ல் வழக்கறிஞராகத் தொழில் செய்யத்
தொடங்கினார். பி.யூ.சி.எல். என்னும் மனித உரிமை அமைப்பின் மாநில செயலாளர் பொறுப்பில்
செயல்படுகிறார்.
வனம் என்பது
கோயம்புத்தூரில் வெள்ளியங்கிரி மலையில் வாழும் இருளர்களைப் பற்றிய புதினம் ஆகும்.
இப்புதினத்தின் ஆசிரியர் ஆட்டனத்தி ஆவார். இவரது இயற்பெயர் திரு ஆ. தண்டபாணி ஆகும்.
கோவை மாவட்டத்தைச் சார்ந்தவர். வனத்துறையில் வனச்சரகர் அலுவலராக முப்பத்து நான்கு ஆண்டுகள்
பணியாற்றி பணி நிறைவு கண்டுள்ளார். அரசு தீட்டிய காடு வளர்ப்புத் திட்டம், வனத்தில்
தாவரங்கள் விலங்குகள் பாதுகாப்பு நெறிமுறைகள், பழங்குடிகளுக்கு குடியிருப்பு ஏற்பாடுகள்
செய்தல், விளை பொருட்களை முறைபடுத்தி அரசு வருவாயில் சேர்த்தல் போன்ற செயல்முறைகளில்
பங்காற்றியுள்ளார். தீராநதி போன்ற சிற்றிதழ்களில் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன.
சோளகர்
தொட்டி. வனம் ஆகிய புதினங்களில் பழங்குடிகளது பூப்புச் சடங்குகள் பற்றி அறிய முடிகின்றது.
சோளகர்
தொட்டியில் ஒரு பெண் பூப்பெய்துவிட்டால் அவளைக் குளிக்கச் செய்து கொட்டகையில் அமரச்
செய்கிறார்கள். பெண்ணுக்குச் சடங்கு செய்வதற்காகக் கானாம்புல் வேய்ந்த குடிசையை அமைக்கிறார்கள்.
இந்தக் குடிசை பெரும்பாலும் தாயின் சகோதரனால் அமைக்கப்படுகின்றது. நான்கு நாள்வரை அந்தக்
குடிசையிலேயே தங்க வைக்கப்படுகிறாள். ஐந்தாம் நாளில் குளிக்கச் செய்கிறார்கள்.
புத்தாடை அணிய வைத்துப் பாடல்களுடன் அவளை வீட்டிற்கு அழைத்துவருகிறார்கள். பசுவின்
சாணத்தில் ஒரு துளியை அவளது நாவிலிட்டு வீட்டினுள் அழைக்கப்படுகிறாள். கானாம்புல் குடிசை
எரியூட்டப்படுகின்றது. பெண்ணைப் பெற்றவர்கள் தொட்டி மக்களுக்கு விருந்து படைக்கிறார்கள்.
(பாலமுருகன்,ச.2013: 116-117).
தாணிக்கண்டி இருளர் சமூகத்தில் யாரேனும் பூப்பெய்துவிட்டால்
வீட்டுத்திண்ணையில் குடிசை கட்டுகிறார்கள். பச்சை மூங்கில்களை வெட்டிப் படலாக்கித்
தடுப்புச்சுவர் போன்று அமைக்கிறார்கள். மூங்கில் படலில் தென்னை மட்டைகளைப் பொருத்தி
குடிசை அமைக்கிறார்கள். இந்தக் குடிசை ஒரு சிறிய வீடு போல அமைக்கப்படுகின்றது. அந்தக்
குடிசையில் பூப்பெய்தவளை முக்காலியில் அமர வைக்கிறார்கள். அந்தப் பெண்ணைக் குளிப்பாட்டி
புத்தாடை அணிவிக்கிறார்கள். அந்தக் குடிசையில் தனியாக எட்டு நாட்கள்வரை தங்க வைக்கப்படுகிறாள்.
எட்டு நாட்களுக்குப் பிறகு தீட்டு நீக்கப்பட்டதாகக் கருதி வீட்டில் சேர்த்துக் கொள்கிறார்கள்.
இறுதியாகத் தீட்டுக் குடிசையை எரித்துவிடுகிறார்கள். (ஆட்டனத்தி. 2010: 56-57).
இரண்டு
பழங்குடிச் சமூகத்திலும் பூப்புச் சடங்கின் பொதுத்தன்மையை இரண்டு நிலையில் அறிய முயலலாம்.
ஒன்றாம் நிலையில் முதன்முதலாக பூப்பெய்தும் பெண்ணைத் தனித்துவப்படுத்தி கூடி கொண்டாடுகிறார்கள்.
இரண்டாம் நிலையில் மூன்று தன்மைகள் அடங்குகின்றன.
1.தாய்மாமன்
பங்கேற்பு
2.தீட்டு எனும்
கருத்தாக்கம்
3.பூப்பெய்த
பெண் அமர்த்தப்பட்ட குடிசையை எரித்தல்
மேலும், சமகாலத்தில்
பெண்ணின் பூப்பெய்தலை பெண்ணின் தாயார் முதலில் அறிவதற்கான சமூகத்தடையையும் இணைத்து
கருதலாம்.
இந்த இரண்டு
நிலையில் முதல் நிலையானது தாய் தலைமை சமூகத்தின் பண்பாட்டை பிரதிபலிக்கின்றது. இரண்டாம்
நிலையின் தன்மைகள் தந்தையதிகாரச் சமூகத்தின் பண்பாட்டை பிரதிபலிக்கின்றது.
இந்த
இரண்டு நிலைகளையும் மனித வரலாற்றுப் படிநிலையின் வரைபடத்துடன் அறிய முயல்வோம்.
மனித வரலாற்றுப் படிநிலை (8) |
சமூக வடிவம் |
தாய்தலைமை / தந்தையதிகாரம் |
பூப்புச் சடங்கின்
பண்பாடு |
1.காடுசார்ந்த பொருள்
சேகரிப்பு நாகரிகம் |
ஆதிப் பொதுவுடைமை சமூகம் |
தாய் தலைமை சமூகம் |
தாய் தலைமை பண்பாடு |
2.வேட்டை நாகரிகம் |
ஆதிப் பொதுவுடைமை சமூகம் |
தாய் தலைமை சமூகம் |
தாய் தலைமை பண்பாடு |
3.கால்நடை மந்தை
வளர்ப்பு நாகரிகம் |
ஆண்டான் அடிமை சமூகம் |
தந்தை அதிகார சமூகம் |
தந்தையதிகாரப் பண்பேற்றம் |
4.விவசாய நாகரிகம் |
நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை
சமூகம் |
தந்தை அதிகார சமூகம் |
தந்தையதிகாரப் பண்பேற்றம் |
5.உற்பத்தி மீதான
வணிக நாகரிகம் |
நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை
சமூகம் |
தந்தை அதிகார சமூகம் |
தந்தையதிகாரப் பண்பேற்றம் |
6.வணிக இலாபத்திற்காக
உற்பத்தி செய்தல் |
முதலாளித்துவ சமூகம் |
தந்தை அதிகார சமூகம் |
தந்தையதிகாரப் பண்பாடு |
7.நிதி மூலதன பிரிவு
தோன்றி சமூக உற்பத்தி மீது ஆதிக்கம் செய்தல் |
முதலாளித்துவ சமூகம் |
தந்தை அதிகார சமூகம் |
தந்தையதிகாரப் பண்பாடு |
8. மக்கள் தலைமையின்
கீழ் சமூக உற்பத்தியைக் கட்டமைத்தல் |
சோசலிச சமூகம் |
ஏற்றத்தாழ்வுகள் மதிப்பிழந்த
சமூகம் |
அவசியமற்ற சடங்காக கருத
இடமுண்டு |
(புதியவன்.நவ
3,2019)
முதல்
நிலையானது மனித வரலாற்றுப் படிநிலையில் காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகத்திலும்,
வேட்டை நாகரிகத்திலும் தாய்மை கொண்டாடப்பட்டதன் வெளிப்பாட்டை பிரதிபலிக்கின்றது. மனித
சமூகம் தோன்றி வளர்ந்த வரலாற்றுப் படிநிலையில் தாய்தலைமை சமூகமானது முதல் இரண்டு கட்டம்வரைதான்
நீடித்தது. மூன்றாம் கட்டத்தில் தந்தையதிகாரச் சமூகத்தின் தோற்றத்தால் தாய்தலைமை நீடிக்க
இயலவில்லை. எனினும், இப்பூப்பெய்தல் விழாவில் தாய்தலைமை சமூகப் பண்பாட்டின் எச்சத்தை
உணர முடிகின்றது.
சகமனிதர்களைப்
பெற்றுக்கொடுப்பவள் பெண்.
பெண் பூப்பெய்துகிறாள்,
பிறகு தாயாகிறாள்.
பூப்பெய்தாத
எந்தப் பெண்ணும் தாயாகுவதில்லை.
பூ என்பது பெண்ணின்
பிறப்புறுப்பு.
பெய்தல் என்பது
ரத்தம் சிந்துதல்.
பெண் பிறப்புறுப்பு
முதலில் ரத்தம் சிந்துதலே பூப்பெய்தல் ஆனது.
(புதியவன்.28அக்.2019)
இவளால் மக்கள்
பெருகுவர் என்று
இனப்பெருக்கத்
தெய்வம் அறிவித்ததாம்!
இனப்பெறுக்கத்
தெய்வத்தின் அறிவிப்பு மொழியே
ரத்தம் சிந்துதல்.
ரத்தம் சிந்துகின்ற
பெண்ணினம் தெய்வமாகப் போற்றப்பட்டாள்.
(புதியவன்.7அக்.2019)
பூப்பெய்துவிட்ட
பெண் பிள்ளைகளை
இனப்பெருக்கத்
தெய்வமாகக் கொண்டாடினர்
வயிற்றில் கருவுற்ற
தாய்மார்களைத்
தாய்த்தெய்வமாகக்
கொண்டாடினர்
பூப்பெய்தல்
சடங்கு விழாவும்
வளைகாப்பு சடங்கு
விழாவும்
இங்கிருந்துதான்
தொடங்கின.
நவீனத் தமிழகத்தில்
இன்றும் தொடர்கின்ற இவ்விழாக்கள்
தந்தையதிகாரப்
பண்பிற்கு உருமாறியுள்ளன. எனினும்,
திராவிட சமூகத்தின்
தொன்மைக்கும்
தாய்தலைமையின்
எஞ்சிய பண்பிற்கும்
இவ்விழாக்களை
அடையாளமாகவும் உணரலாம்.
சமகாலத்திலும் பூப்பெய்த பெண்ணிற்கு கீரை விதைகளை பாலில் கலந்து கொடுப்பது
எத்தகைய விளக்கத்தை வெளிப்படுகின்றது எனில், கீரைகள் வளமையாக விளைச்சலாகி பெருகுவதுபோல
வளமையாக குழந்தைகளைப் பெற்றுத்தர வேண்டும் என்ற தாய்தலைமையின் கருத்தாடலை வெளிப்படுத்துகின்றது.
இரண்டாம்
நிலையானது மனித வரலாற்றுப் படிநிலையின் மூன்றாம் கட்டத்தில் தோன்றிய, கால்நடை மந்தை
வளர்ப்பு நாகரிகத்தின் தந்தையதிகாரச் சமூகப் பண்பாட்டை பிரதிபலிக்கின்றது. அதாவது,
பூப்பெய்தல் விழா என்ற தாய்தலைமை சமூகத்தின் பண்பாட்டை தன்வயப்படுத்தி வந்திருக்கின்றது.
கால்நடை
மந்தை வளர்ப்பு நாகரிகத்தில் தோன்றிய தந்தையதிகாரச் சமூகம் தொடர்ந்து நீடித்து வருகின்றது.
விவசாய நாகரிகம், உற்பத்தி மீதான வணிக நாகரிகம், வணிக இலாபத்திற்காகவே உற்பத்தி செய்தல்,
நிதி மூலதனப் பிரிவு தோன்றி சமூக உற்பத்தி மீது ஆதிக்கம் செய்தல் ஆகிய வரலாற்றுக் கட்டம்வரை
நீடித்துக்கொண்டு இருக்கின்றது. அதாவது, மனித வரலாற்றுப்படிநிலையில் 3ம் கட்டத்திலிருந்து
7ம் கட்டம்வரை நீடித்துக்கொண்டு இருக்கின்றது. மக்கள் தலைமையின் கீழ் சமூக உற்பத்தியைக்
கட்டமைத்தல் என்ற எட்டாம் கட்டத்தில்தான் தந்தையதிகார சமூகம் வீழ்ச்சியுறத் தொடங்கும்
என்பதாக சமூக விஞ்ஞானம் விளக்குகின்றது. (புதியவன், அக்.24,2019)
தந்தையதிகார
சமூகத்தின் நீண்ட வரலாற்றுக் கட்டங்களில் இன்றும் தொடர்கின்ற பூப்பெய்தல்
சடங்கானது, தந்தையதிகாரத்தின் பல்வேறு பண்பேற்றங்களை அடைந்திருக்கும் என்பது
உறுதி. நிலப்பிரபுத்துவ பண்பாடு பெண்களைச் சொத்தாக மறைத்து வைத்திருந்தாலும், முதலாளித்துவ
சமூகமோ பெண்களை நுகர்வுப் பொருளாக்கி திறந்தும் வைத்துவிட்டது. முதலாளித்துவ பண்பாடு
ஆதிக்கம் செலுத்துகின்ற சமகாலத்தில் பூப்புச் சடங்கு முற்றிலுமாக தந்தையதிகாரப் பண்பாடாக
மாறியுள்ளது. எனினும், மனித சமூகத்தின் தொன்மை பண்பாட்டைப் பாதுகாக்கின்ற
பழங்குடிகளது வாழ்வியலில் இத்தகைய பண்பேற்றச் சிக்கல்கள் பெரிதும் இருப்பதில்லை.
பழங்குடிகளது
பூப்புச் சடங்கில் தந்தையதிகாரச் சமூகத்தின் வன்மத்தை வெளிப்படையாக அறிய முடிகின்றது.
பூப்பெய்த பெண்ணைக் கொண்டாடுதல் என்பது தாய்தலைமை சமூகத்தின் எச்சமாக இருப்பினும் தாய்மாமனால்
குடிசை அமைக்கப்படுவதை தந்தையதிகாரச் சமூகத்தின் பண்பேற்றமாக அறிய முடிகின்றது. பூப்பெய்தப்
பெண்ணின் மீது தீட்டு என்ற கருத்தாக்கத்தைச் சுமத்தி அசுத்தப்படுத்தும்போதும், அவளை
அமர்த்திக் கொண்டாடப்பட்ட குடிசையை எரியூட்டும்போதும் தாய்தலைமைச் சமூகத்தை அடையாளமின்றி
அழிக்கின்ற ஆணாதிக்கச் சமூகத்தின் வன்மத்தை அறிய முடிகின்றது.
இத்துடன்
சமகாலத்தில் பெண்ணின் பூப்பெய்தலை பெண்ணின் தாயார் முதலில் அறிவதற்கான சமூகத்தடையையும்
இணைத்து சிந்திப்பது அவசியமாகின்றது. குழந்தைகளைப் பெற்றுத்தரும் தகுதியடைந்த பூப்பெய்த
பெண் தாய்க்கு உரிமையுடையவள் அல்ல. மாறாக, சொத்தாக அவளை ஏற்கப்போகும் ஓர் ஆணுக்கு உரிமையுடையவள்
என்ற கருத்தாக்கத்தின் நடைமுறையாக அர்த்தப்படுகின்றது. தாய்தலைமையிடமிருந்து பெறப்படும்
குழந்தைகளின் மீதான தாயுரிமை முற்றிலும் அறுத்தெரியப்பட்ட காலத்தின் நடைமுறை சாட்சியாக
இதனை அறிய முடிகின்றது. மேலும், தந்தையின் பெயர் வழியிலான குழந்தைகளின் வாரிசுரிமை
நடைமுறை நிரூபணமாகத் திகழ்கின்றது.
சோளகர்
மற்றும் இருளர் பழங்குடிகளது பூப்பெய்தல் சடங்கில் தாய்தலைமையின் கொண்டாட்டத்தையும்
தந்தை அதிகாரத்தின் வன்மத்தையும் இணை நிலையாக அறிய முடிகின்றது. இந்த இணைநிலையிலிருந்து
சமகாலத்தில் தொடர்கின்ற இத்தகைய பூப்பெய்தல் விழாவை எவ்வாறு மதிப்பிடுவது? இதற்கு உறுதுணையாகப்
பூப்படைதல் குறித்த BBC ன் ஆவணப்படத்திலிருந்து
ஒரு மதிப்பீட்டிற்கு வர முயல்வோம்.
பூப்படைதல்
விழா தேவையா? கேள்வியெழுப்பும் பெண்கள் என்ற தலைப்பிலான BBC செய்தியின் ஆவணப்படமானது விசாகப்பட்டினத்தில்
உள்ள ஆந்திரப் பல்கலைக்கழக மாணவிகளிடம் புஸ்பவதி விழா குறித்து நிகழ்த்தப்பட்ட
பேட்டியாகும். இந்த நிகழ்வில் பெரும்பாலான இளம் பெண்கள் இவ்விழா அவசியமற்றது என்பதாக
உணர்கிறார்கள். ஆனால், அனைத்து பெண்களாலும் இவ்விழாவிற்கான தங்கள் நிலைபாட்டை சொல்ல
முடியாது என்று பேராசிரியர் டாக்டர் அய்யகாரி சித்த ரத்னம் விளக்குகிறார்.
இந்த ஆவணப்படத்தின் முடிவானது, ‘இந்த சடங்கிற்கு எதிரான இளம் பெண்களின் வாதம் முழுமையாக
ஏற்கப்படுவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம்’ என்பதாக நிறைவடைகின்றது.
சமகாலத்தில்
இவ்விழாவானது தந்ததையதிகாரப் பண்பாட்டின் முழுமையாகவே அறியப்படுகின்றது. ஒரு பெண் திருமணப்
பெண்ணாகும் தகுதியை அடைந்துவிட்டாள் என்பதை அறிவிப்பதற்கான விழாவாக விளக்கம் பெறுகின்றது.
அதாவது, ஒரு ஆணிற்கு சொத்தாகும் தகுதியை அடைந்துவிட்டாள் என அறிவிப்பதாகும்.
பெண்
நிலையிலிருந்து இவ்விழாவை கருதும்போது பெண்ணைக் கொண்டாடுதல் என்ற தாய்தலைமைப் பண்பு
மகிழ்ச்சியளிப்பதாக அமைகின்றது. எனினும், தீட்டாதல், சொத்தாதல் போன்ற தந்தையதிகாரப்
பண்புகள் இவ்விழா மீதான எதிர்நிலை வாதத்தையே மேலோங்கச் செய்கின்றது. மேலும், பாலினச்
சமத்துவத்தை நோக்கி முன்னேறுதல் என்ற சமூக மேன்மை முயற்சிக்கு, பெண்மையின் இயற்கையாகிய
பூப்பெய்தலைக் கொண்டாடுவது அவசியமற்றதாகவும் கருதலாம்.
நிறைவாக,
பூப்பெய்தல் விழா குறித்து BBC ஆவணப்படத்தில் கூறியதுபோல, ‘இந்த சடங்கிற்கு எதிரான
இளம் பெண்களின் வாதம் முழுமையாக ஏற்கப்படுவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம்’தான். அப்படி ஏற்கப்படுவதற்கான
ஆண்டு எதுவென்று துல்லியமாக கருத முயன்றால் இப்படி கருதலாம். பெண்ணடிமைச் சமூகம் முழுமையாக
உருத்திரண்டு, ஆணாதிக்கச் சமூகத்தை முட்டி வீழ்த்தவும், மக்கள் தலைமை சமூகத்தை
எட்டிப் பிடிக்கவும் முயல்வதற்குரிய ஓர் ஆண்டில்தான் இளம்பெண்களின் வாதம்
முழுமையாக ஏற்கப்படும்.
துணை செய்தவை
1. ஆட்டனத்தி. 2010. வனம். சென்னை : நியூ செஞ்சுரி
புக் ஹவுஸ்.
2. சிவக்குமார்,கே.2016. தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப்
புதினங்கள்: இனவரைவியல் நோக்கு. முனைவர் பட்ட ஆய்வேடு. புதுச்சேரி : புதுச்சேரி மொழியியல்
பண்பாட்டு ஆராய்ச்சி
https://pazhaiyavan.blogspot.com/p/phd.html
3. சிவக்குமார்,கே.
ஆகஸ்ட் 2016. பழங்குடிகளது ஆழ்மன உணர்நிலையில் தாய்தலைமை சமூகத்தின் எச்சம். உங்கள்
நூலகம். பக்.81-85. http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-aug16/31423-2016-09-10-06-55-46
https://pazhaiyavan.blogspot.com/2020/07/blog-post_80.html
4. தேவிபிரசாத்
சட்டோ பாத்யாயா (தமிழாக்கம்
எஸ்.தோதாத்ரி). 2010. உலகாயதம். சென்னை : நியூ செஞ்சுரி
புக் ஹவுஸ்.
5. பக்தவத்சல
பாரதி. 2003(1990). பண்பாட்டு மானிடவியல். சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.
6. 33. பக்தவத்சல
பாரதி. 2005. மானிடவியல் கோட்பாடுகள். புதுச்சேரி: வல்லினம் பதிப்பகம்.
7. 34. பக்தவத்சல
பாரதி. 2014. இலக்கிய மானிடவியல். புத்தாநத்தம்: அடையாளம் பதிப்பகம்.
8. 35. பக்தவத்சல
பாரதி. 2002. தமிழர் மானிடவியல். சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.
9. 36. பக்தவத்சல
பாரதி. 2013 (2007). தமிழகப் பழங்குடிகள். புத்தாநத்தம்: அடையாளம் பதிப்பகம்.
10. புதியவன்.
நவ.3,2019. புராதனம் முதல் பொதுவுடைமைவரை. 'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ். https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5473:2019-11-03-14-08-15&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82
https://pazhaiyavan.blogspot.com/2020/05/blog-post_27.html
11. புதியவன். அக்.24, 2019. இலக்கிய
அறிவியல். 'பதிவுகள்'
- பன்னாட்டு இணைய இதழ். https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5444:2019-10-24-12-39-00&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82
https://puthiyavansiva.blogspot.com/2016/06/all.html
https://pazhaiyavan.blogspot.com/p/blog-page_80.html
12. புதியவன். அக்.28, 2019. காதல் வரலாறு. 'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்.
https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5456:2019-10-28-14-28-50&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82
https://pazhaiyavan.blogspot.com/2020/05/blog-post_41.html
13. புதியவன். அக்.7, 2019. கடவுள் வரலாறு. 'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்.
https://pazhaiyavan.blogspot.com/2020/05/blog-post_35.html
https://puthiyavansiva.blogspot.com/2019/07/blog-post.html
14. புதியவன். அக்.5, 2019. 'சோளகர் தொட்டி' : திருமணங்கள் உணர்த்தும் பண்பாட்டின்
எச்சம். 'பதிவுகள்'
- பன்னாட்டு இணைய இதழ்.
https://pazhaiyavan.blogspot.com/2020/05/blog-post_21.html
15. பூப்படைதல்
விழா தேவையா? கேள்வியெழுப்பும் பெண்கள். BBC செய்தியின் ஆவணப்படம். https://youtu.be/DWq7EsxM_LE
16.
மனித வரலாற்றுப் படிநிலை அட்டணை
https://pazhaiyavan.blogspot.com/2020/05/8-1-1.html
No comments:
Post a Comment