Saturday, September 21, 2024

இலக்கியப் பெரியார்

 

இலக்கியப் பெரியார்

புதியவன் முனைவர் கே.சிவக்குமார்

SSM கலை அறிவியல்கல்லூரி, திண்டுக்கல்.

 

இலக்குடைய மனிதர்களுக்கெல்லாம் இலக்கியம் சொந்தம். அந்த இலக்காவது சமத்துவம், சுயமரியாதை, சமூகநீதி, பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, அறிவியல் தத்துவ வழியில் உண்மையைக் கண்டடைவதும் சமூக மேன்மைக்காக அயராது உழைப்பதும் என்பவைகளாக இருக்குமெனில் அத்தகைய இலக்காளர்களுக்கெல்லாம் தந்தை பெரியார் சொந்தம்.

இலக்கிய படைப்பாளர்கள் தமது தனித்துவத்தினால் வாசகர்களின் உணர்விலும் அறிவிலும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். விளைவாக வாசகர்கள் படைப்பாளர்களைக் கொண்டாடவோ, பாராட்டவோ, விமர்சிக்கவோ, தூற்றவோ செய்வார்கள். வாசகருக்கும் படைப்பாளருக்கும் இடையில் நிரப்பப்பட இயலாத இடைவெளி இயல்பாகவே தொடரும். ஆனால் இந்தியாவின் சாக்கிரடீஸ் என்று போற்றத்தக்க தந்தைபெரியாரின் இலக்கியமான அவரது எழுத்துக்கள் படிக்கும் வாசகர்களை தன்வயப்படுத்தி தந்தை பெரியாராகவே உருமாற்றுகின்றது.

வாசகரது அறிவுநிலையில் தான் தந்தை பெரியாரோடு கருத்தாடுகிறோம் என்ற நிலை கடந்து தனக்குள் முரண்பட்டுள்ள கருத்துக்களோடு தானே உரையாடுகிறோம் என்ற நிலைக்கு உருமாறுகிறார். தந்தை பெரியாரின் எழுத்துக்களைப் படிப்பவர்களுக்கு படைப்பாளர் வாசகர் என்ற இடைவெளி கரைந்து தன்னோடு தானே உரையாடும் வாசகர் அனுபவத்தை பெரியாரின் இலக்கிய வெளிப்பாட்டில் அனுபவிக்க முடிகின்றது.

“இலக்கியம் என்பது மனிதர்களது வாழ்வியல் கருத்தாக்கங்கள் குறித்த ஒரு மொழியின் பண்பட்ட வெளிப்பாடாகும்.” –(இலக்கிய அறிவியல்)

இலக்கியத்திற்கு மொழி முதன்மையாகின்றது. தமிழ் மொழியில் பகுத்தறிவு இலக்கியம் நல்கிய தந்தை பெரியாரின் தமிழ் மொழி குறித்த கருத்தாடல் இன்றியமையாததாகும்.

‘முன்னேற்றமடைந்த உலக பாஷை வரிசையில் தமிழும் ஒரு பாஷையாக இருக்க வேண்டுமானால் தமிழையும் மதத்தையும் பிரித்துவிட வேண்டும்.’ –(பெரியார் இன்றும் என்றும் 555பக்.)

தமிழர்களின் தமிழ் மொழியில் பிராமண அடிமைத்தனம், சாதி வர்ணக் கோட்பாடுகள், ஆணாதிக்க பெண்ணடிமைத்தனங்கள், சமத்துவத்திற்கும் பகுத்தறிவிற்கும் பொருத்தமற்ற கருத்தாடல்கள் போன்றன மலிந்து காணப்படுகின்றன. உலக மொழிகளின் அறிவியல் வேகத்திற்கு ஈடாகத் தமிழ் மொழி முன்னேறாமல் தடுமாறுவதைப் பெரியார் நன்கு உணர்ந்தார். எனவே, அத்தகைய தடுமாற்றத்திற்குக் காரணமாகத் திகழும் மதத்தைத் தமிழிலிருந்து பிரித்தாக வேண்டியது இன்றியமையாததாகக் கருதினார்.

தமிழ் மக்களிடம் சுயமரியாதையையும் பகுத்தறிவையும் வளர்க்கும் இலக்கியங்கள் தமிழ் மொழியில் இருக்கின்றனவா என்று தேடிய பெரியாருக்குக் கிடைத்ததெல்லாம் மக்களை உயர்த்துவதற்கு உதவாத குப்பைகளே. ஆரிய ஆதிக்கம், திராவிட அடிமைநிலை, சுயமரியதையின்மை, வர்ண சாதி பேதங்கள், பார்ப்பன மேலாதிக்க மூடத்தனங்களைக் கொண்டாடுவது இவ்வாறு சமூக நீதிக்கு எதிரான இந்து மத புராண மடத்தனங்களே இலக்கியங்களாக குவிந்திருக்கின்றன என்றுணர்ந்தார். சிலப்பதிகாரம், ராமாயணம், பாரதம், பெரியபுராணம்,  திவ்யப்பிரபந்தம் அனைத்தும் இத்தகைய இலக்கியங்களே. நாகரிகமற்ற மட்டமான கருத்துக்களை மக்களிடம் நிலைப்படுத்தவே இத்தகைய இலக்கியங்கள் வினையாற்றுகின்றன. வளரும் அறிவியலுக்கும் பகுத்தறிவிற்கும் மனிதகுல முன்னேற்றத்திற்கும் உதவுகின்ற இலக்கியங்கள் தமிழில் இருப்பதாகவே தெரியவில்லை. அதனால்தான் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று வசைபாடினார்.

‘அறிவை ஒழுக்கத்தை வளர்க்கும் இலக்கியமே தேவை. ஆகவே, இனிமேல்தான் நமக்கான இலக்கியம் தோன்ற வேண்டும். அதில் இந்துமதம், ஆதிக்கம், ஆரியம் ஆகிய மூன்றும் இருக்கக்கூடாது’–(பெரியார் இன்றும் என்றும் 532பக்.) என்ற உறுதிப்பாட்டுடன் வினையாற்றினார்.

மொழியின் பண்பட்ட வெளிப்பாடாக இலக்கியம் அமைகின்றதென்றால் அத்தகைய இலக்கியங்கள் மக்களின் அறிவையும் உணர்வையும் ஒழுக்கத்தையும் பண்படுத்துவதில் வினையாற்ற வேண்டும். அறிவும் உணர்வும் மேன்மையடைவதற்கு உதவாமலும் ஒழுக்கத்தை வளர்க்காமலும் எதிர்வினையாற்றும் இலக்கியங்கள் சமூகத்தேவையற்றதாகும். எனவே, இனிமேல்தான் நமக்கான இலக்கியம் தோன்ற வேண்டும் என்கிறார்.

தமிழ் இலக்கியங்களில் அறிவியல் தத்துவ வெளிப்பாடாகவும், மனித சமூக மேன்மைக்கு உதவும் தன்மையிலும், மக்களின் வாழ்வியல் எதார்த்தத்தை பிரதிபலிக்கின்ற நிலையிலும் இலக்கியங்களே கிடையாதா என்று தேடிய தந்தைபெரியாருக்கு உதவ வேண்டிய தமிழாசிரியர்கள் கடமையாற்றும் தகுதியின்றி இருந்துள்ளார்கள்.

“வள்ளுவர், அவ்வை, கபிலர் போன்றவர்கள் நீதிநூல், நீதி மஞ்சுரி, கொன்றை வேந்தன், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சதகம், நாலடி முதலிய பல நீதியைப் பற்றியும் ஒழுக்கம் பற்றியும் கூறப்பட்டுள்ள இலக்கியங்கள் பலவற்றைப் பாடியிருக்கிறார்கள். 60, 70 ஆண்டுகளுக்கு முன் நான் திண்ணை பள்ளிகளில் படிக்கும்பொழுது இவையே தலைசிறந்து விளங்கின. இப்போது அவை குப்பைமேட்டிற்கு போகச் செய்யப்பட்டுவிட்டன. அந்த இடங்களைப் புராணங்கள், இதிகாசங்கள் கைப்பற்றிவிட்டன. மக்களுக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஒழுக்கம் இன்று ஏன் இல்லை என்றால் ஒழுக்கத்தைப் போதிக்கும் இலக்கிய நூல் எங்கே இருக்கிறது.” –(பெரியார் இன்றும் என்றும் 532பக்.)

உலகப் பொதுமறையாகப் போற்றப்படுகின்ற திருக்குறள் குறித்து பெரியாருக்கு அறிமுகமும் விளக்கங்களும் வழங்குவதற்குகூட அன்றைய தமிழாசிரியர்கள் தகுதியாக இல்லை.

‘தமிழ் பண்டிதர்களுக்கு உள்ள படிப்பே முட்டாளாவதற்கு முதல் தர மருந்து போன்றது. புராணங்களைத் தவிர அவர்களுக்கு வேறு படிப்பே கிடையாது. வேதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம் என்பன போன்றவற்றைத் தவிர இலக்கணம், இலக்கியம் என்று சிலவும் கூட்டி இவைகளை உருப்போட்டு பரீட்சை கொடுத்தவர்களாவார்கள்.’ –(பெரியார் இன்றும் என்றும் 559பக்.)

பண்டிதர்கள் விளக்காத நிலையில் திருக்குறளையும் நல்ல இலக்கியமாக ஏற்கத்தகாததாகவே பெரியார் கருதியுள்ளார். சாதி வர்ணாசிரம மநுசாஸ்திரத்திற்கு முரண்படாதவாறு திருக்குறளுக்கு பரிமேலழகர் ஆற்றியுள்ள உரையின் அடிப்படையில் பகுத்தறிவிற்கு உதவாத இலக்கியம் என்று திருக்குறளை எதிர்த்துள்ளார் தந்தைபெரியார். பிறகு திருக்குறள் குறித்து அறிவாளிகள் வழங்கிய விளக்கங்களுக்குப் பிறகே பெரியாரின் கருத்து சற்று மாறியது. தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழியல்ல, அறிவியல் மொழியே என்பதற்கு நம்பிக்கையாக தந்தை பெரியாருக்குத் திருக்குறள் திகழ்ந்தது. திருக்குறளை நல்ல தமிழ் இலக்கியமாக விமர்சனக் கண்ணோட்டத்துடன் ஏற்றுக்கொண்டார்.

‘வள்ளுவரின் குறளை பகுத்தறிவிற்கு ஏற்றதல்ல என்று கண்டித்துவந்தேன். பின்னர் அறிவாளிகளோடு பழகியபோது பரிமேலழகரின் வார்த்தைகள் அனைத்தும் வள்ளுவரின் வார்த்தைகளல்ல என்பதையும், குறளின் மேன்மைப்பற்றியும் அவர்கள் எடுத்துக்கூறினார்கள். அறிவாளிகள் என்றால் பண்டிதர்கள் அல்ல. பொது அறிவுள்ள திராவிட உணர்வுள்ள மக்கள்தான் அத்தகைய அறிவாளிகள். அதிலிருந்துதான் நான் குறளைப் பற்றிப் பேசுகிறேன்.’ –(பெரியார் இன்றும் என்றும் 532,533பக்.)

திருக்குறளுக்கு முந்தைய தொல்காப்பிய இலக்கண நூலானது தமிழ் அறிவியல் மொழி என்பதற்கு ஆகப்பெரிய சான்றாகும்.  கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்திலேயே இயங்கியல் பொருள் முதல் வாதம் என்ற அறிவியல் தத்துவ கண்ணோட்டத்தின் அடிப்படையில் ஏராளமான செய்திகளைக் கொண்ட அறிவியல் கலை இலக்கியமாகத்  தொல்காப்பியம் திகழ்கின்றது. ஆனால், இத்தகைய தொல்காப்பியத்தின் பெருமையை அறிந்துணர்ந்து பெரியாருக்கு விளக்கப்படும் நிலையில் தமிழ்ச்சான்றோர்கள் இல்லை.

ஆறறிவு உயிரினம் மனித இனம் என்று வரையறுத்த இலக்கியம். மொழியின் பிறப்பியலை விளக்கிய இலக்கியம். முதற்பொருள் என்பது பரம்பொருள் அல்ல, நிலமும் பொழுதும் என விளக்கிய இலக்கியம். கடவுள் என்பது நிலம் சார்ந்த வாழ்வியலின் கருத்தாக வெளிப்படும் வெவ்வேறு கருப்பொருள்களென விளக்கிய இலக்கியம். எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று பொருள்முதல் வாதத்தை அறிவித்த இலக்கியம். இவ்வாறாக கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்திலேயே அறிவியல் இலக்கியமாகத் தோன்றியது தொல்காப்பிய இலக்கண நூல். ஆனால் தொல்காப்பியம் என்ற இலக்கண இலக்கியமானது தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழியல்ல, தலைசிறந்த தொல்நாகரிகத்தின் அறிவியல் மொழி என்பதை பெரியாருக்கு உணர்த்த இயலாத அளவிற்கு ஆரியத்திரிபு தொல்காப்பிய நூற்பாக்களில் இடை செருகல்களாக நிறைந்திருக்கின்றன.

தொல்காப்பியத்தில் இடம் பெற்றிருக்கும் நான்கு வர்ணப் படிநிலை குறித்த இடைச்செருகல் பகுதியைத் தவிர்த்து முழுதளாவிய நிலையில் நோக்கினால், தொல்காப்பியத்தின் தொன்மை மனித வரலாற்று படிநிலையில் மூன்றாம் கட்டச் சமூகத்தில் இருக்கின்றது. இத்தகைய முடிவிலிருந்து தொல்காப்பியர் யார் என்பதை விளக்க முடிகின்றதா? கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்தில் நிலவிய செங்கோலாட்சியின் முதிர்ச்சியடைந்த பருவத்தின் பிரதிநிதியாக நின்று, வளர்ந்துகொண்டிருந்த விவசாய நாகரிகத்தை அவதானித்துப் பாடிக்கொண்டிருந்த தொன்மையானப் பாட்டன். நமது மொழியின் அறிவியலாகிய இலக்கணத்தை கலை இலக்கிய பாடலாக உணரத்தக்க வகையில் கவிதையாக வடித்த தொன்மையானக் கலைஞன். தமிழ் மக்களை மூன்றாம் கட்ட நாகரிகத்திலேயே அறிவியல் இலக்கியத்திற்கு உரிமையாளர்களாக்கி பெருமைப்படச் செய்துள்ள தொன்மையானத் தமிழன். நான்கு வர்ண சாதிப்படிநிலைக் கொள்கைகளைத் தீட்டிய ஆரியப் பார்ப்பனர்களுக்கு சவாலாகத் திகழ்ந்த திராவிடர்களின் கொள்ளுத்தாத்தன் தொல்காப்பியன்.”(தொல்காப்பியர் யார்?)

மேற்கண்டவாறு தொல்காப்பியம் போன்ற அறிவியல் தமிழை கண்டுணர முடியாதவாறு பார்ப்பன சனாதனத்தின் இலக்கிய ஆக்கிரமிப்பு தமிழ் மொழியைச் சூழ்ந்திருக்கின்றது. இச்சூழலை எதிர்த்து பண்பாட்டு நிலையில் களமாடிய தந்தை பெரியாருக்கு சுயமரியாதை மற்றும் பகுத்தறிவு நோக்கி மனிதகுலத்தை உயர்த்த பயன்படும் நல்ல இலக்கியங்கள் தமிழில் இல்லை என்றே முடிவெடுக்கும் நிலை சூழ்ந்திருந்தது.

 ‘அறிவு, ஒழுக்கம், விஞ்ஞானம், ஆராய்ச்சி என்றால் அவை நம் நாட்டில் நாத்திகம், மதவெறுப்பு என்றாக்கப்பட்டுவிட்டது. அதனாலேயே நம்நாட்டில் நல்ல பயன்படும் இலக்கியங்கள் இல்லை’ –(பெரியார் இன்றும் என்றும் 532பக்.)

மக்களை பார்ப்பன அடிமைத்தளையிலிருந்து விடுவித்து சமத்துவம், சுயமரியாதை, பகுத்தறிவு, பொதுவுடைமை நோக்கி உயர்த்துவது மனிதகுலத்திற்கு ஆற்ற வேண்டிய பெருங்கடமை என்பதாகவே உணர்ந்து, தந்தை பெரியார் வாழ்நாள் முழுதும் செயல்பட்டார். தன் வாழ்நாள் கடமையின் செயல்பாடாகவே தனது இலக்கிய ஆக்கங்களை வெளிப்படுத்தினார்.

‘நாட்டில் இலக்கியங்கள் இருந்தால் அது நாகரிகத்திற்கு, அறிவு வளர்ச்சிக்கு, புரட்சிக்கு, முற்போக்கு மாறுதலுக்கு உதவிட வேண்டும்.’ –(பெரியார் இன்றும் என்றும் 531பக்.)

அத்தகைய இலக்கியங்கள் தமிழில் இருக்கின்றது எனில், பெரியாரின் இதயம் போல் இசைக்கும் திராவிட இலக்கியங்களும் பெரியாரின் எழுத்துக்களுமே ஆகும்.

துணை செய்தவை

1.   பெரியார் இன்றும் என்றும் – 2017.கோயம்புத்தூர். விடியல்பதிப்பகம்

2.   இலக்கிய அறிவியல் 

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5444:2019-10-24-12-39-00&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82

3.   தொல்காப்பியர் யார்?

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 – 2991

https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5539:2019-12-07-14-29-43&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82

 

 வெளிவந்த விவரம்

ஆற்றல் சார் ஆளுமைகள்

(கட்டுரை தொகுப்பு நூல்) பக்-96-101

பெரியார் உயராய்வு மையம்

பாரதிதாசன் பதிப்பகம்

வசந்தா பதிப்பம் (2024)





 

No comments:

Post a Comment

கற்றல் கற்பித்தல் நடைமுறையில் காலத்தின் திசைவழி எது?

    கற்றல் கற்பித்தல் நடைமுறையில் காலத்தின் திசைவழி எது?   புதியவன் முனைவர் கே.சிவக்குமார் SSM கலை மற்றும் அறிவியல்கல்லூரி, திண்டுக்...

அதிகம் பார்க்கப்பட்டவை