அடிப்படைத் தமிழ் பாடத்திட்டம்
முனைவர் கே.சிவக்குமார்
SSM கலை அறிவியல்கல்லூரி,
திண்டுக்கல்.
நாங்கள் மாணவர்களாக இருந்தபோது எங்கள் ஆசிரியர்கள் தமிழ் விடைத்தாள் திருத்தக்
கை உடைந்ததாகச் சொல்வார்கள். எந்தக் கேள்விக்கும் விடையெழுதும் மாணவர்களின் திறனால்
இந்நிலைக்கு ஆளானார்கள். விடை தெரியாதக் கேள்விகளுக்கும் கூடுதலாக விடையெழுதும் மாணவர்களின்
திறத்தைச் சொல்லி மாளாது. கடைசி மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறாத மாணவனின் விடைத்தாளிலும்
பக்கங்கள் நிறைவாகவே இருக்கும். கற்பனைக்கும் கதைகளுக்கும் பஞ்சம் இருக்காது.
கம்ப ராமாயணத்தில் வேட்டியை மடித்துக்கட்டி ராவணனும் ராமனும் மல்லுக்கட்டி உருண்டார்கள்.
ராமனின் தோளில் சிராய்ப்புக் காயங்களால் இரத்தம் ஒழுகியதாக நான்கு பக்கத்திற்கு கதை
எழுதியிருக்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் கணவனை இழந்த கண்ணகி அரசவை வாசலில் மண்ணை தூற்றி
வீசியதால் பாண்டியன் கண் எரிச்சலில் கலங்கினான், கதறி அழுத கண்ணகி மூக்கைச் சிந்தி
முந்தானையால் துடைத்துக்கொண்டு கோபம் பொங்க கதறியதாக பக்க அளவில்லாமல் கதை எழுதியிருக்கிறார்கள்.
மண் வளத்தைக் காப்பது எப்படி என்ற வினாவிற்கு வெட்ட ஒன்றுக்கு ரெண்டுக்கு போகக்கூடாது,
போனால் மண் வளம் கெட்டுவிடும் என்று விரிவாக விவரித்து எழுதி முட்டை மதிப்பெண் பெற்று,
வகுப்பறை சிரிக்க வாசிக்கப்பட்டு மொட்டிக்கையில் அடிவாங்கி அழுத கதை நினைவிலிருக்கிறது.
தவறான கருத்தை எழுதி முட்டை மதிப்பெண் பெற்றவனின் விடைத்தாளின் நிலை என்ன? வகுப்பறையில்
படித்துக்காட்டி சிரிக்கும் அளவிற்கு வாசிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் பிரச்சனையின்றி
20 பக்கங்கள் நிறைந்திருந்தது. பெரும்பாலும் தமிழ்வழி தேர்வுகளில் கருத்துப்பிழைகளைக்
கடந்து மாணவர்களின் கற்பனைத்திறத்திற்கும் காட்சிக்கதை வசனங்களுக்கும் அல்லது ஒரு பக்கத்திற்கு
குறைந்தது ஒரு மதிப்பெண் என்று திரித்துபவரின் கரிசனத்திற்கும் என கணக்கிட்டால் தேர்வில் தோற்பது மிகக் கடினம்.
ஆனால், இந்தத் தலைமுறையின் நிலைமையோ பரிதாபமாக இருக்கின்றது.
உயர்கல்வி பயில்வதற்கான கல்லூரியில் பொதுத்தமிழில் 40 மாணவர்கள் உள்ள வகுப்பில்
30 மாணவர்கள் தேர்ச்சி பெற இயலவில்லை. அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கும் பக்கங்கள்
நிறைக்க சிந்தனை இல்லை. நிதானமாகவும் தேர்ச்சி பெற இயலாதவர்களாகவும் இருப்பவர்களுக்கு
பக்கங்களை நிறைத்தாவது மதிப்பெண் பெறுவதற்கு கற்பனை இல்லை. அறிவும் கற்பனையும் இருந்தாலும்
எழுத முடியாத சோம்பேறிகளாகவும் அலட்சியவாதிகளாகவும் இருக்கும் மாணவர்களும் ஏராளம்.
இத்தகைய மாணவர்கள் செயல்திறன்களை முடக்கும் பப்ஜீ போன்ற செயலி விளையாட்டுக்களால் பெற்றெடுக்கப்பட்டவர்கள்
என்பது கூடுதல் சிறப்பு.
தாய்மொழித்திறன் இருக்கும்வரை மட்டுமே சிந்தனைத்திறன் இருக்க முடியும். தான்
பேசுகின்ற தாய்மொழியை எழுதவும் பேசவும் தெரியாத பரிதாப நிலையிலிருக்கின்ற இன்றைய தலைமுறையின்
நிலைமை மிகவும் பரிதாபத்திற்குரியதாகும். இவர்களைவிட பெரிதும் பரிதாபத்திற்குரிய நிலையில்
தமிழ்மொழி அல்லாடுகிறது. தொன்மைக்குத் தொன்மையாகக் கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்தின்
மொழியாகத் திகழ்வதோடல்லாமல் இளமைக்கு இளமையாக செயற்கை நுண்ணறிவு இணைய உலகிலும் உயிர்ப்புடன்
செயலாற்றும் மொழியாகத் தமிழ் மொழி திகழ்கிறது. ஆனால், தமிழ் வழி குழந்தைகளின் நிலையோ
என்னவாக இருக்கின்றது?
தாய்மொழி வழியில் கற்கும் உரிமையை தொலைத்து, அறிவியல் தத்துவக் கண்ணோட்டத்தை
மறந்து, துறைசார்ந்த ஆளுமையின் அடிப்படையை இழந்து, சமூகளாவிய நிலையில் செயல்த்திறன்
அற்றவர்களாகவும் சிந்தனைப் பண்பிழந்த குருடர்களாகவும் வெம்பிக்கிடக்கிறார்கள்.
மெட்ரிக்குலேசன் CBSE கல்விமுறையாலும் செயல் திறனை முடக்குகின்ற செயலிகளின்
கற்பனை பிம்ப விளையாட்டுக்களாலும் சிந்திக்கும் திறன் முடக்கப்பட்ட இன்றைய தலைமுறைகளின்
ஆரோக்கியத்திற்கு தாய்மொழி மருத்துவம் அவசியப்படுகின்றது. இந்த அவசியத்தை உணர்ந்து
உருவாக்கப்பட்ட எளிய தமிழ் பாடத்திட்டமே கீழ்வரும் அடிப்படைத் தமிழாகும். இப்பாடத்திட்டம்
வழக்கமான முறையிலிருந்து விலகி எளிமைப்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ளது. வெம்பிப்
போன மாணவர்கள் இதனால் பயனுற்று வளப்படுவார்கள் என்று கருதுகிறோம்.
தாய்மொழிக்கல்வியே எண்ணங்களைச் சுரப்பதற்கான கேணி, கருத்துக்களை வளப்படுத்தும் விளைநிலம், அறிவு வெளிப்பாட்டிற்கான
கருப்பை. இன்றைய தலைமுறைகளின் அறிவியல் அடிப்படையற்ற தாய்மொழி மறுப்பு வழி கல்விமுறையால்
மாணவர்களின் செயல்திறன் முடங்கியிருக்கின்றது. கற்கும் மாணவர்களின் எண்ணங்கள் வறண்ட
கேணியாச்சு, கருத்துக்கள் தரிசு நிலங்களாச்சு, அறிவுக் கருப்பை மலடாச்சு. மாணவர்களின்
வாழ்க்கைப்பாதையின் திருப்புமுனை கருதி இப்பாடத்திட்டம் உருவாக்கப்படுகின்றது.
எழுத்துக்கள் அறிமுகம்
எழுத்து – எழுப்பப்படும் ஓசையின் உருவக் குறியீடு
தமிழ் மொழியில் பேசப்படும் சொற்களில் தகவமைந்துள்ள அனைத்து ஓசைகளுக்கும் அடிப்படை
எழுத்துக்களாக உயிர் மற்றும் மெய் எழுத்துக்கள் அமைந்துள்ளன. எழுத்துக்களுக்கு நம்
முன்னோர்கள் வைத்துள்ள பெயரே தொன்மையான ஆவிநம்பிக்கையின் சுவாரசியத்தைக் கொண்டதாக அமைகின்றது.
ஆவி என்பது உயிர். உடலைவிட்டு பிரிந்து உயிர் தனித்தியங்கும் ஆற்றலுடையது. உயிர்
தனித்தியங்கும் அனுபவங்களே உறக்கத்தில் உணரப்படும் கனவுகளாகிறது. உயிர் மீண்டும் உடலைத்
தொற்றிக்கொண்டதும் உறக்கம் களைகின்றது. உடலை
இயக்கும் சக்தியாக உயிர் திகழ்கின்றது. உயிரின்றி உடல் தனித்து இயங்குவதில்லை. உடல்
என்பது மெய்.
உடலின்றி உயிர் தனித்து இயங்குவதுபோல தமிழ் மொழி எழுத்துக்களிலும் மெய்யின்றி
உயிர் ஓசை தனித்து இயங்குகின்றது.
உயிரின்றி உடல் தனித்து இயங்காததுபோல தமிழ் மொழி எழுத்துக்களில் உயிர் ஓசை சாயலின்றி
மெய் இசைப்பது இல்லை.
உடலோடு உயிர் ஒன்றி வாழ்வதுபோல தமிழ் மொழியில் மெய்யோடு உயிர் ஒன்றி உயிர்மெய்
எழுத்துக்களாக இயங்குகின்றன.
உயிர் எழுத்துக்கள் - 12
உள்ளிருந்து எழுப்பப்படும் காற்றானது உடலின் உள்ளுறுப்புகளால் தொட்டுத் தடைபடாமல்
ஓசையுடன் இசைப்பது உயிர் எழுத்துக்கள்.
குறில் – 1 ஓசை (கை நொடிக்கும்
கால அளவு)
நெடில் – 2 ஓசை
அளபெடை – 3க்குமேல் ஓசை
அ ஆ இ ஈ உ ஊ
எ ஏ ஐ ஒ ஓ ஔ
அ - அம்மா (ஓசை அளவு 1)
ஆ - ஆத்தா (ஓசை அளவு 2)
இ - இசை (ஓசை அளவு 1)
ஈ - ஈசல் (ஓசை அளவு 2)
உ - உதவி (ஓசை அளவு 1)
ஊ - ஊசி (ஓசை அளவு 2)
எ - எட்டு (ஓசை அளவு 1)
ஏ -ஏன்? (ஓசை அளவு 2)
ஐ - ஐந்து (ஓசை அளவு 2)
ஒ - ஒட்டகம் (ஓசை அளவு 1)
ஓ - ஓட்டம் (ஓசை அளவு 2)
ஔ - ஔவையார் (ஓசை அளவு 2)
ஆய்த எழுத்து –1
ஃ (அக் என்று இசைப்பது)
ஃ - எஃகு
அதாவது, அ என்ற உயிர் வரிசை முடிந்து க் என்ற மெய் வரிசை தொடங்குகிறது என்று
அறிவிக்கின்ற குறியீடாகும்.
மெய் எழுத்துக்கள் – 18
மெய் என்றால் எழுப்பப்படும் காற்றானது உடலின் உள்ளுறுப்பைத் தொட்டுத் தடைபடும்
இடங்களின் அழுத்தக் குறியீடு. தனித்த ஓசை கிடையாது. இ, உ என்ற உயிர் ஓசையின் சாயல்
பெற்று அழுத்தக் குறியீடு இசைக்கப்படும்.
(எ.கா) க் – ஓசை கிடையாது, வெறும்
அழுத்தம் மட்டுமே. ஓசையுடன் இசைப்பதெனில் இக்உ
முன்னொட்டில் இ அல்லது பின்னொட்டில் உ அல்லது இரண்டும் சேர்த்து
உயிர் ஓசையின் சாயலுடன் மட்டுமே மெய்யெழுத்துக்கள் இசைக்கப்படுகின்றன.
க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ழ் வ் ல் ள் ற் ன்
தமிழ் மொழியின் 18 மெய் ஓசைகள் உடலின் உள்ளுறுப்புக்களில்
நெஞ்சு, மூக்கு, தொண்டை என மூன்று இடங்களுக்குள் அழுத்தம் பெற்று இசைக்கின்றன. இசைக்கப்படும்
தமிழ் மெய் ஓசைகள் உள்ளுறுப்பில் அழுத்தம் பெறுகின்ற இடத்தின் அடிப்படையில் மூன்று
வகையாகப் பிரிகின்றன.
வல்லின மெய் - நெஞ்சில் அழுத்தம் பெறும் ஓசைகள்
க் - மக்கள்
ச் - பேச்சு
ட் - சட்டம்
த் - முத்தம்
ப் - கப்பம்
ற் - கற்பனை
மெல்லின மெய் - மூக்கில் அழுத்தம் பெறும் ஓசைகள்
ங் - சங்கம்
ஞ் - பஞ்சம்
ண் - பெண்ணுரிமை
ந் - மந்தை
ம் - வீரம்
ன் - மாவீரன்
இடையின மெய் – நெஞ்சிற்கும் மூக்கிற்கும் இடையிலுள்ள தொண்டைப் பகுதியில் அழுத்தம் பெறும்
ஓசைகள்
ய் - மேய்ச்சல்
ர் - பார்த்தல்
ழ் - வாழ்க்கை
வ் - அவ்வளவு
ல் - நெல்
ள் - கேள்வி
உயிர்மெய் எழுத்துக்கள் – 216
வல்லினம், மெல்லினம், இடையினம் என்ற மூன்று வகையிலும் ஒவ்வொரு
மெய்யும் உயிர் எழுத்துக்களுடன் கலந்து இசைப்பதால் உயிர்மெய் எழுத்துக்கள் உருவாகின்றன.
அதாவது, ஒவ்வொரு மெய்யும் பன்னிரு உயிர்களில் ஏதேனும் ஒன்றை உயிராகப் பெற்று உயிர்
மெய் எழுத்தாக இசைக்கும்.
வல்லின மெய் அ உயிர் பெறுதல்
க்அ – க – கலை
ச்அ – ச – சமையல்
ட்அ – ட – பாடம்
த்அ – த – காதல்
ப்அ – ப – விற்பனை
ற்அ – ற – அறம்
மெல்லின மெய் அ உயிர் பெறுதல்
ங்அ – ங – அங்ஙனம்
ஞ்அ – ஞ – ஞண்டு
ண்அ – ண – பணம்
ந்அ – ந – நன்றி
ம்அ – ம – மனம்
ன்அ – ன - கனவு
இடையின மெய் அ உயிர் பெறுதல்
ய்அ – ய – மயக்கம்
ர்அ – ர – புரட்சி
ழ்அ – ழ – பழக்கம்
வ்அ – வ – வணக்கம்
ல்அ – ல – கலக்கம்
ள்அ – ள - விளக்கம்
வல்லின மெய் ஆ உயிர் பெறுதல்
க் ஆ – கா – காய்கறி
ச் ஆ – சா– சாவி
ட் ஆ – டா – அண்டா
த் ஆ – தா – கொடுத்தார்
ப் ஆ – பா – பாட்டு
ற் ஆ – றா – குற்றாளம்
மெல்லின மெய் ஆ உயிர் பெறுதல்
ங் ஆ – ஙா – …..
ஞ் ஆ – ஞா – ஞாயிறு
ண் ஆ – ணா – உண்ணாவிரதம்
ந் ஆ – நா – நாங்கள்
ம் ஆ – மா – இட்லி மாவு
ன் ஆ – னா - முன்னாடி
இடையின மெய் ஆ உயிர் பெறுதல்
ய் ஆ – யா – கொய்யாக்காய்
ர் ஆ – ரா – ராத்திரி
ழ் ஆ – ழா – திருவிழா
வ் ஆ – வா – வேலைவாய்ப்பு
ல் ஆ – லா – கில்லாடி
ள் ஆ – ளா - வெள்ளாவி
வல்லின மெய் இ உயிர் பெறுதல்
க் இ – கி -கிண்டல்
ச் இ – சி -சிறுசு
ட் இ – டி - கட்டில்
த் இ – தி - குதிரை
ப் இ – பி - தம்பி
ற் இ – றி - அறிகுறி
மெல்லின மெய் இ உயிர் பெறுதல்
ங் இ – ஙி - ….
ஞ் இ – ஞி - ….
ண் இ – ணி - மணி
ந் இ – நி - நிமிடம்
ம் இ – மி - மிளகு
ன் இ – னி - தனிமை
இடையின மெய் இ உயிர் பெறுதல்
ய் இ – யி - மயில்
ர் இ – ரி - உரிமை
ழ் இ – ழி - குழி
வ் இ – வி - குருவி
ல் இ – லி - பல்லி
ள் இ – ளி - பள்ளி
வல்லின மெய் ஈ உயிர் பெறுதல்
க் ஈ – கீ - கீரை
ச் ஈ – சீ - சீப்பு
ட் ஈ – டீ – ஒரு டீ கொடுங்க
த் ஈ – தீ – தீய எண்ணங்களைத் தவிர்க்கவும்
ப் ஈ – பீ – பீட்ரூட் பொரியல்
ற் ஈ – றீ - …
மெல்லின மெய் ஈ உயிர் பெறுதல்
ங் ஈ – ஙீ - …
ஞ் ஈ – ஞீ - …
ண் ஈ – ணீ - தண்ணீர்
ந் ஈ – நீ - நீராவி
ம் ஈ – மீ – அவன் மீது கல் விழுந்தது
ன் ஈ – னீ - பன்னீர்
இடையின மெய் ஈ உயிர் பெறுதல்
ய் ஈ – யீ – புவியீர்ப்புச்
சக்தி
ர் ஈ – ரீ - …
ழ் ஈ – ழீ - …
வ் ஈ – வீ - வீடு
ல் ஈ – லீ – நேற்று லீவு
ள் ஈ – ளீ - …
வல்லின மெய் உ உயிர் பெறுதல்
க் உ – கு - குரங்கு
ச் உ – சு - சுமை
ட் உ – டு - கொடுமை
த் உ – து - துணிச்சல்
ப் உ – பு - புளிப்பு
ற் உ – று - காற்று
மெல்லின மெய் உ உயிர் பெறுதல்
ங் உ – ஙு - …
ஞ் உ – ஞு -…
ண் உ – ணு - மண்ணுரிமை
ந் உ – நு - நுண்ணுயிர்
ம் உ – மு - முயற்சி
ன் உ – னு - உன்னுடைய
இடையின மெய் உ உயிர் பெறுதல்
ய் உ – யு – உண்மையும் பொய்யும்
ர் உ – ரு - பருப்பொருள்
ழ் உ – ழு - முழுமை
வ் உ – வு - வாழ்வு
ல் உ – லு - நல்லுலகம்
ள் உ – ளு - தள்ளுமுள்ளு
வல்லின மெய் ஊ உயிர் பெறுதல்
க் ஊ – கூ - கூட்டம்
ச் ஊ – சூ - சூழ்நிலை
ட் ஊ – டூ - அட்டூழியம்
த் ஊ – தூ – தூய்மைத் தொழிலாளர்கள்
ப் ஊ – பூ - பூட்டு
ற் ஊ – றூ - …
மெல்லின மெய் ஊ உயிர் பெறுதல்
ங் ஊ – ஙூ - …
ஞ் ஊ – ஞூ - …
ண் ஊ – ணூ - …
ந் ஊ – நூ - நூல்
ம் ஊ – மூ - மூடு
ன் ஊ – னூ - குன்னூர்
இடையின மெய் உ உயிர் பெறுதல்
ய் ஊ – யூ - யூதர்கள்
ர் ஊ – ரூ - போரூர்
ழ் ஊ – ழூ - …
வ் ஊ – வூ - ஓய்வூதியம்
ல் ஊ – லூ - பலூன்
ள் ஊ – ளூ - தெள்ளூர்
வல்லின மெய் எ உயிர் பெறுதல்
க் எ – கெ - உனக்கென்ன
ச் எ – செ - செருப்பு
ட் எ – டெ – காடென்ன மேடென்ன
த் எ – தெ - தெள்ளத்தெளிவு
ப் எ – பெ - பெயர்
ற் எ – றெ – நாற்றெடுத்து நடு
மெல்லின மெய் எ உயிர் பெறுதல்
ங் எ – ஙெ - …
ஞ் எ – ஞெ - …
ண் எ – ணெ - எண்ணெய்
ந் எ – நெ - நெய்
ம் எ – மெ - மெல்லிசை
ன் எ – னெ – முன்னெடுத்துச் செல்
இடையின மெய் எ உயிர் பெறுதல்
ய் எ – யெ – கேள்விக்கு விடையென்ன
ர் எ – ரெ - பெயரெழுது
ழ் எ – ழெ – தமிழெங்கள் தாய்மொழி
வ் எ – வெ - வெற்றி
ல் எ – லெ – கல்லெடுத்து எறிந்தான்
ள் எ – ளெ – மாட்டைக் கோளெடுத்து
அடித்தான்
வல்லின மெய் ஏ உயிர் பெறுதல்
க் ஏ – கே - கேளுங்கள்
ச் ஏ – சே - சேட்டை
ட் ஏ – டே – டேய் இங்க வா
த் ஏ – தே - கொடுத்தேன்
ப் ஏ – பே - பேச்சுத்திறன்
ற் ஏ – றே – நேற்றே வரச்சொன்னேன்
மெல்லின மெய் ஏ உயிர் பெறுதல்
ங் ஏ – ஙே - …
ஞ் ஏ – ஞே - …
ண் ஏ – ணே – வாங்க அண்ணே
ந் ஏ – நே - மனிதநேயம்
ம் ஏ – மே - மேல்
ன் ஏ – னே - வீட்டுக்குள்ளே
இடையின மெய் ஏ உயிர் பெறுதல்
ய் ஏ – யே – நாயே பேயே
ர் ஏ – ரே – நேரே பார்
ழ் ஏ – ழே - …
வ் ஏ – வே - வேகம்
ல் ஏ – லே – கல்லேதும் கிடைக்கவில்லை
ள் ஏ – ளே - நாளேடு
வல்லின மெய் ஐ உயிர் பெறுதல்
க் ஐ – கை – நாகை மாவட்டம்
ச் ஐ – சை - ஆசை
ட் ஐ – டை – மாட்டை ஓட்டிவா
த் ஐ – தை – உன் தனித்துவத்தைக் கண்டறி
ப் ஐ – பை – உழைப்பை விரும்பு
ற் ஐ – றை - பாறை
மெல்லின மெய் ஐ உயிர் பெறுதல்
ங் ஐ – ஙை - …
ஞ் ஐ – ஞை - …
ண் ஐ – ணை – பெண்ணையும் ஆணையும் சரிசமமாக உணர்
ந் ஐ – நை – நைலான் துணி
ம் ஐ – மை - வறுமை
ன் ஐ – னை - பூனை
இடையின மெய் ஐ உயிர் பெறுதல்
ய் ஐ – யை – துணியைத் துவை
ர் ஐ – ரை – மதுரைக்குப் போறேன்
ழ் ஐ – ழை – மழைப் பெய்கிறது
வ் ஐ – வை – உணவை வீணாக்காதே
ல் ஐ – லை – அறிவியல் கலை இலக்கியம்
ள் ஐ – ளை – விளைவுகளை முன்னறிந்து
முடிவெடு
வல்லின மெய் ஒ உயிர் பெறுதல்
க் ஒ – கொ - கொசுத்தொல்லை
ச் ஒ – சொ – உன் சொல்லை நீ மதி
ட் ஒ – டொ – பாட்டொன்று கேட்டேன்
த் ஒ – தொ - தொழிற்சாலை
ப் ஒ – பொ – பொறுப்பாக நடந்துகொள்
ற் ஒ – றொ – வேறொருவருக்கு உதவட்டும்
மெல்லின மெய் ஒ உயிர் பெறுதல்
ங் ஒ – ஙொ - …
ஞ் ஒ – ஞொ - …
ண் ஒ – ணொ – பெண்ணொருவர் வந்தார்
ந் ஒ – நொ – ஒவ்வொரு நொடியும் முக்கியம்
ம் ஒ – மொ – தாய்மொழித் திறனே சிந்தனைத் திறன்
ன் ஒ – னொ – இன்னொருவர் வந்தார்
இடையின மெய் ஒ உயிர் பெறுதல்
ய் ஒ – யொ – பாயொன்று வாங்கு
ர் ஒ – ரொ – இரண்டு ரொட்டி சாப்பிட்டேன்
ழ் ஒ – ழொ – தமிழொரு செம்மொழி
வ் ஒ – வொ – ஒவ்வொரு தோல்வியும்
பாடம்
ல் ஒ – லொ – கல்லொன்று எடு
ள் ஒ – ளொ – முள்ளொன்று குத்தியது
வல்லின மெய் ஓ உயிர் பெறுதல்
க் ஓ – கோ – கோடை விடுமுறை
ச் ஓ – சோ – சோறு போடுங்க
ட் ஓ – டோ – ஒரு பாட்டோடு நிகழ்ச்சி முடியுது
த் ஓ – தோ – பத்தோடு பதினொன்றா இருக்காதே
ப் ஓ – போ – போய்ட்டு வரேன்
ற் ஓ – றோ – காற்றோடு பறந்துவிடாமல் கட்டிவை
மெல்லின மெய் ஓ உயிர் பெறுதல்
ங் ஓ – ஙோ - …
ஞ் ஓ – ஞோ - ஞோஞா
ண் ஓ – யோ – ஒரு யோசனை சொல்லவா
ந் ஓ – நோ – உன் நோக்கம் என்ன?
ம் ஓ – மோ – மோசமான வேலை
ன் ஓ – னோ – உன்னோடு வரட்டுமா?
இடையின மெய் ஓ உயிர் பெறுதல்
ய் ஓ – யோ – நோயோடு போராடினார்
ர் ஓ – ரோ – உயிரோடு இல்லை
ழ் ஓ – ழோ – தமிழோடு வாழ்கின்றோம்
வ் ஓ – வோ – பூவோடு நாரும் கொண்டுவாங்க
ல் ஓ – லோ – உலோகக் கருவிகள்
ள் ஓ – ளோ – அவளோடு பள்ளிக்குப்
போனேன்
வல்லின மெய் ஔ உயிர் பெறுதல்
க் ஔ – கௌ – கௌதாரிப் பறவை
ச் ஔ – சௌ – சௌக்கியமா இருக்கீகளா பெரியவரே?
ட் ஔ – டௌ - …
த் ஔ – தௌ - …
ப் ஔ – பௌ - …
ற் ஔ – றௌ - …
மெல்லின மெய் ஔ உயிர் பெறுதல்
ங் ஔ – ஙௌ - …
ஞ் ஔ – ஞௌ - …
ண் ஔ – ணௌ - …
ந் ஔ – நௌ -…
ம் ஔ – மௌ - மௌனம்
ன் ஔ – னௌ - …
இடையின மெய் ஔ உயிர் பெறுதல்
ய் ஔ – யௌ - யௌவனம்
ர் ஔ – ரௌ - ரௌத்திரம்
ழ் ஔ – ழௌ - …
வ் ஔ – வௌ - வௌவால்
ல் ஔ – லௌ - லௌகிகம்
ள் ஔ – ளௌ - …
ஐ, ஔ ஓசையளவு இரண்டிலிருந்து குறைதல்
ஐ - ஐயா - அய்யா
ஐ என்ற உயிருக்குப்
பதிலாக உயிரோசை அ தொடர்ந்து இடையின மெய்
ய் இணைத்து அய் என்று இசைத்தால் ஓசையளவு இரண்டிலிருந்து குறைவாக இசைக்கும்.
க்ஐ - கையில வாங்கினேன்
– கய்யில வாங்கினேன்
ஐ என்ற உயிருக்குப்
பதிலாக உயிரோசை அ பெற்ற உயிர்மெய்யுடன்
இடையின மெய் ய் இணைந்து இசைத்தாலும் ஓசையளவு
இரண்டிலிருந்து குறைவாக இசைக்கும்.
ஔ - ஔவையார் அவ்வையார்
ஔ என்ற உயிருக்குப்
பதிலாக உயிரோசை அ தொடர்ந்து இடையின மெய்
வ் இணைந்து அவ் என்று இசைத்தால் ஓசையளவு இரண்டிலிருந்து குறைவாக இசைக்கும்.
க் ஔ – கௌதாரி பறந்தது
– கவ்தாரி பறந்தது
ஔ என்ற உயிருக்குப்
பதிலாக உயிரோசை அ பெற்ற உயிர்மெய்யுடன்
இடையின மெய் வ் இணைந்து இசைத்தாலும் ஓசையளவு
இரண்டிலிருந்து குறைவாக இசைக்கும்.
தமிழ் மொழியிலுள்ள உயிர் மற்றும் மெய் என்ற அடிப்படை ஓசைகளின் அடிப்படையில்
சொற்களில் பயன்படாத ஓசைகளையும் தமிழ் நெடுங்கணக்கு பெற்றுள்ளது. அவ்வோசைகளுக்கு சொற்கள்
கிடைக்காததால் விடுபாடுடன் இருப்பதைக் மேலே கண்டுள்ளோம். எழுப்பப்படும் எல்லா ஓசைகளின்
உருவக்குறியீடுகளாகிய எழுத்துக்களை எழுதியும் உச்சரித்தும் பழக்கப்படுத்த வேண்டும்.
உயிர் மெய் எழுத்துக்களை பயிற்சியின் தொடக்கத்தில் விரிந்த நிலையில் உச்சரித்துப் பழக வேண்டும். அதாவது க என்ற எழுத்தை க் அ க என்று உச்சரித்துப் பழக வேண்டும். எல்லா எழுத்துக்களையும் சுட்டியதும்
உடனடியாக இசைத்துப் பழக வேண்டும். பித்தானை அழுத்தியதும் காற்றாடி சுழல்வதைப்போல, மின்சாரம்
பட்டதும் விளக்கு எரிவதைப்போல எழுத்தைச் சுட்டியதும் உச்சரித்துப் பழக வேண்டும். எழுத்துக்களை
வேகமாக வாசித்துப் புரிந்துகொள்வதும், சிந்திப்பதை வேகமாக புரியும்படி எழுதுவதும் தாய்மொழித்
திறனில் அடிப்படையானது. தாய்மொழித்திறன் இருந்தால் மட்டுமே துறைசார்ந்த வல்லுநராகவும்,
பிற மொழி பயன்பாட்டில் வல்லவராகவும் வளர முடியும். ஏனெனில், தாய்மொழித் திறன் இருக்கும்வரை
மட்டுமே சிந்தனைத்திறன் இருக்க முடியும்.
No comments:
Post a Comment