Wednesday, January 24, 2024

அதான் நீ

ந்தி சாய்ந்த
ஆற்றுப் பாலத்தின் கீழ்
நதி சலனமின்றி பயணித்திருந்தது

 

கரையோர மாடுகள்

சிறு மழையைப் பொருட்படுத்தாது

அசமந்தமாய் அமர்ந்திருந்தன

 

திசைகள் பறக்கும் வாகனங்களால்
தூரம் தெரியும் பாலங்கள்
காதலரின் உதட்டு புன்னகைபோல் அழகிட்டன

 

மக்களின் இருள் நிறைந்த வாழ்வை
விளக்குகளால் திரையிட்டு மறைத்தபடி

நகரம் வசீகரித்தது

 

சிறுவர்களின் விளையாட்டுக்களில்
நாட்டை விற்ற தலைவர்கள்
வசை சொற்களாகவும்
கேலி கிண்டல் ஏச்சுக்களாகவும்

பெயர் பெற்றுவிட்டார்கள்

மக்களின் ஒட்டுமொத்த செல்வங்களும்
சில கேடிகளின் கோடிகளாயின

மக்களோ தெருக்கோடியில் பிச்சையர் ஆகினர்

கண்ணுக்கு தெரியாமல் களவு போனது தேசம்

 

இணையதள விளையாட்டுகளில்

தேசத்தின் மன்னர்கள்

திறன் மிகு வீரர்களாய் சண்டையிட்டபோதும்

 

சினிமா நாயகர்களின் பாதங்களை

கொஞ்சி மகிழ்ந்தபோதும்

 

நாட்டிற்காக பந்தாடியவர்களை

கொண்டாடி ஆர்ப்பரித்தபோதும்

 

மது போதை உச்சம் ஏற

உளறித்தீர்த்தபோதும்

 

பல மணிநேரம் அலங்கார பிம்பங்களாக

கண்ணாடியில் மூழ்கி திளைத்தபோதும்

 

மதவிழா கூட்டங்களில்

பக்தி பெருக கண்கள் மூடி
தெய்வம் தொழுதபோதும்

 

சாமி காப்பாத்து என்று

குழந்தைகளைச் சொல்லச்சொல்லி

சாமியைக் காப்பாற்றிக் கொண்டிருந்தபோதும்

 

சாதி மத வெறியர்களின்
வதை படுகொலை காட்சிகளை
காண ஒண்ணாத் துயரங்களை
கடந்து சென்றபோதும்

கண்ணுக்கு தெரியாமல் களவு போனது தேசம்

 

எஜமானன் ஊதும் மகுடிபடி
நாட்டு தலைவன் படமெடுத்து ஆடுகிறான்

 

அடித்த வெயிலுக்கு தாங்காத சிறுமழை
வெக்கையை கிளப்பிற்று

அடித்த கொள்ளையில் மிஞ்சாத எம் நாடு
வெறுப்பை கிளப்பிற்று

 

அடி வயிற்றிலிருந்து எழுந்த

கெட்ட வார்த்தையை
அதான் நீ என்று
நாட்டுத் தலைவனை வசை பாடினேன்

அதானி அதானி என்று
நாடெங்கும் எதிரொலித்தது


https://makkalathikaram.com/arasiyal/adani-poet/

No comments:

Post a Comment

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை