கற்றல் கற்பித்தல் நடைமுறையில் காலத்தின் திசைவழி எது?
புதியவன் முனைவர் கே.சிவக்குமார்
SSM கலை மற்றும் அறிவியல்கல்லூரி, திண்டுக்கல்.
கற்றல் கற்பித்தல் என்ற நடைமுறையில் தமிழ் சமூகத்தின் சமகால தன்மை எத்தகையது? எத்தகைய சமூகத் தேவையின் அடிப்படையில் கல்வியியல் நடைமுறையை அணுக வேண்டியுள்ளது? கல்வியியல் இயக்கத்திற்கு அடிப்படை முரண்களாக எவற்றை மதிப்பிடுவது? கற்றல் கற்பித்தல் என்ற விஞ்ஞானப்பூர்வமான நடைமுறையில் கலைப்பூர்வமான வெளிப்பாடுகள் எத்தகைய அடித்தளங்களைப் பெற்றுள்ளன? கற்றல் திறனில் இயங்குகின்ற மொழிசார்ந்த கோட்பாடுகள் எத்தகையவை? கற்கும் மாணவர்களின் உணர்வு மண்டலத்தை அடிப்படையாகக் கருதாமல் ஆசிரியரின் கற்பித்தல் பணி சாத்தியப்படுமா? கற்றல் கற்பித்தலின் சவால்கள் எவை? நவீன கல்விமுறைக்கு சமூக எதார்த்தங்கள் கோரும் காலத்தின் திசைவழி எது? இவ்வினாக்களின் விடையங்களை அறிவியல் தத்துவ நெறியில் கண்டடைய முயல்வதாக இக்கட்டுரை அமைகின்றது
முரண்பாடுகளே இயக்கத்திற்கு அடிப்படை என்பது அறிவியல் தத்துவத்தின் அடிப்படை விதி. கல்வியின் இயக்கத்திற்கு முரண்பாடுகளாக கற்றலும் கற்பித்தலும் திகழ்கின்றன.
கற்றல் என்பது மாணவர்களை முதன்மைப் படுத்துவதாக அமைகிறது. கற்பித்தல் என்பது ஆசிரியர்களை முதன்மைப் படுத்துவதாக அமைகின்றது. ஏனெனில் ஓர் வகுப்பறையில் மாணவர்களே கற்றலுக்கு இலக்காகிறார்கள். ஆசிரியர்களே கற்பித்தலுக்கு இலக்காகிறார்கள். கல்வியியல் நடைமுறையில் கற்றல் கற்பித்தல் இரண்டும் முரண்களெனில் மாணவர்கள் ஆசிரியர்கள் உறவு எத்தகையது? இருவரையுமே அடிப்படை முரண்களாகத்தான் வரையறுக்க முடிகின்றது. ஆனால் முரண்கள் என்பதாலேயே எதிரெதிரே நிறுத்தி பகமை பாராட்டுவதாக விளங்கிக் கொள்ள அவசியமில்லை. ஏனெனில் அறிவியல் தத்துவ விதிகளில் முரண்கள் மூன்று வகைப்படுகின்றன. முதன்மை மற்றும் முதன்மையற்ற முரண்பாடுகள், நட்பு மற்றும் பகை முரண்பாடுகள், உள் மற்றும் வெளி முரண்பாடுகள். எனவே முரண்கள் என்பதனை கல்வி சார்ந்த இயக்கத்திற்கு அடிப்படை கூறுகள் என்பதாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
50 மாணவர்கள் அமைந்த ஒரு வகுப்பில் ஆசிரியர் ஒரு மணி நேரம் கற்பிக்கிறார் எனில் 50 மணி நேரத்திற்கு பொறுப்பாகிறார். 50 மாணவர்களின் ஒரு மணி நேரம் ஆசிரியரைப் பற்றிக் கொண்டு கற்றலுக்காக முதலிடப்படுகின்றது. ஆதலால் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் கற்பிக்கும் பணியை ஆசிரியர் செம்மையாகச் செய்ய வேண்டியது அவசியமாகின்றது. எனவே ஒரு மணி நேரம் கற்பிப்பதற்காகக் குறைந்தது ஒரு மணி நேரமாவது கற்றல் நடவடிக்கையில் ஈடுபடுகிறார். தனது பாடத்திட்டங்களைச் சமூகளாவிய நிலையில் புதுப்பித்துக் கொள்வதற்காக மறுவாசிப்பு முறையில் கற்கிறார். கற்றல் வழிமுறையைப் பின்பற்றாமல் ஆசிரியரால் செம்மையாக கற்பிக்க முடியாது. மேலும் கற்பித்தல் செயல்பாடானது ஆசிரியரின் அடிப்படை மற்றும் சிறப்பு பேச்சாற்றலால் கட்டமைகின்றது.
கற்பித்தல் என்பது விளக்கப்படுத்துவது, விவரித்து உரைப்பது, சிந்தனைகளைத் தூண்டுவது, கேள்விகளை விளைவிப்பது, விடைகளைத் தேட செய்வது, கற்பனைகளையும் கருத்துக்களையும் இணைப்பது, பல்வேறு கருத்துக்களைக் கலந்துரையாடுவது, எது சரி என்று விவாதிப்பது, மனதையும் அறிவையும் ஆளுமைப்படுத்துவது, செயல்பாட்டுத் திறன்களை முறைப்படுத்துவது இவை யாவற்றையும் உள்ளடக்குவதாக கற்பித்தல் செயல்பாடு கட்டமைகின்றது. கற்பித்தலைச் செம்மையாக நிகழ்த்துவதற்காகக் கற்றலில் ஈடுபடுவது ஆசிரியர்களுக்கு இன்றியமையாத கடமையெனில் மாணவர்களின் கற்றல் நடவடிக்கை எத்தகைய கடமைக்கு உரியது?
ஆசிரியர் கற்பித்தலுக்காகக் கற்றலில் ஈடுபடுவதைப்போல மாணவர்கள் கற்றலுக்காகத் தங்களுக்குள் கற்பித்துக் கொள்கின்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டியது இன்றியமையாத கடமையாகின்றது. தாங்கள் கற்றுக்கொண்ட பாடங்களை உரையாடலாக உருமாற்றும்போது மட்டுமே தகவல்கள் சிந்தனைகளாக விரிவடைகின்றன. தகவலறிவு, துறைசார்ந்த அறிவு, சமூக அறிவு என்பதாக அறிவின் முப்பரிமாண நிலையில் சிந்தனையாளர்களாக மாணவர்கள் உருவாகாவிட்டால் கல்வியியல் நடைமுறை தோல்வி அடைந்ததாக அர்த்தப்படும்.
கல்விப் பாரம்பரியத்தில் வகுப்பறை இரு வகைப்படுகின்றது.
1. ஆசிரியர் மைய வகுப்பறை
2. மாணவர் மைய வகுப்பறை
மாணவர்கள் சிந்தனையாளர்களாக உருவாகுவதற்கு அவர்கள் கற்கும் நிலையில் இருந்து அறிவார்ந்த உரையாடலில் உணர்வுப்பூர்வமாக ஈடுபடுவது அடிப்படையாகின்றது.
தான் கற்றுக் கொண்ட அனுபவத்தை விவரித்து பேசுவது, கேள்விகளை எழுப்புவது, விடைகளை விளக்கப்படுத்துவது, அடர்த்தியான கற்பனைகளுக்கும் துல்லியமான கருத்து நிலைகளுக்கும் ஆட்படுவது, ஒரு பொருள் குறித்த பல்வேறு கருத்துகளைக் கலந்துரையாடுவது, சரியான கருத்துக்களை விவாதித்து உணர்வது, சிந்தனையிலிருந்து எழுதிப் பார்த்து சொந்த அறிவை மதிப்பீடு செய்வது, எழுதப்பட்ட பிறர் கருத்துக்களைப் படித்து புரிந்து உரையாடுவது, தான் கற்கின்ற துறையில் கலை இலக்கிய மற்றும் அறிவியல் இலக்கிய நிபுணராக உயர்வடைவது, துறை சார்ந்த புதுமைகளைத் தேடுவதும், கண்டடைவதும், உருவாக்குவதும் மாணவர்களைச் சிந்தனையாளர்களாக வெளிப்படுத்தும் எதார்த்தங்களாகும். இந்த எதார்த்தங்களை மாணவர்கள் எட்டுவதற்கு ஆசிரியர் மைய வகுப்பறை உதவிகரமாக இல்லை. மாறாக, மாணவர் மைய வகுப்பறையே உதவிகரமாக இருக்கின்றது.
ஆசிரியர் மைய வகுப்பறை என்பது மாணவர்களை இரண்டாம் பட்சமாக வரையறுத்து ஆசிரியர்களை முதன்மைப்படுத்தும் வேலைமுறையாகும். மாணவர்களின் கற்றல் திறன்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளும் பிற சவால்களும் பின்னுக்குத் தள்ளப்படுவதாகும். மாறாக, குறிப்பிட்ட பாடத்திட்டத்தை எத்தகைய காலம் வரைக்கும் விளக்கி முடிக்கலாம் என்று ஆசிரியரை முறைப்படுத்துவதாகும். இந்த நடைமுறையைப் பாரம்பரியமாகக் கையாளுகின்ற கல்வி முறையில் மாணவர் மைய வகுப்பறையை நடைமுறைப்படுத்துவது அவசியம் எனினும் சவால்களை ஆராயாமல் சாத்தியப்படுத்துவது இயலாது.
சவால்1 -ஆசிரியரின் தன்முனைப்பு
சவால் 2- ஆசிரியர்களின் பரஸ்பர அனுபவ பகிர்வும் கூடுதல் அவகாசமும்
சவால்3 - கற்றல் திறனை முடக்கும் தாய்மொழி மறுப்பு
சவால்4 –செயல்திறனை முடக்கும் காட்சிபோதை
சவால்5-மாணவர்களின் தனித்திறன்களைப் பாடத்திட்டங்களில் அங்கீகரித்தல்
ஆசிரியரின் தன்முனைப்பு
ஆசிரியரின் தன்முனைப்பு என்பது ஆசிரியர் தன்னை கல்விச் சூழலின் மையமாகக் கருதுவது. இது ஆசிரியர் குறித்த பாரம்பரிய உணர்விலேயே உளவியலாகக் கட்டமைந்துள்ளது. தன்னை மையமாகக் கருதும் உளவியலை உதறித் தள்ளும் மனத்துணிவை ஆசிரியர்கள் ஏற்றாக வேண்டும்.
ஆசிரியர் தனது பாடத்திட்டங்களை மாணவர்களின் கற்றல் திறமையிலுள்ள பலம் பலவீனங்களை ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும். மாணவர்களைக் கற்றலில் ஆர்வத்துடன் ஈடுபடுத்துவதற்கான பன்முகத்தன்மையான வழிமுறைகளைக் கண்டறிந்து கையாள வேண்டும். இந்த முயற்சியில் ஆசிரியர் என்பவர் ஆளுமையாளராகவும் துறை சார்ந்த அறிஞராகவும் இருப்பது மட்டும் போதாது. மாறாக, அவர் படைப்புத்திறன் மிகுந்த கலைஞராக தம்மை வெளிப்படுத்த முன் வர வேண்டும். ஏனெனில் பாடத்திட்டங்களை மாணவர்களின் மனம் கவரும் வகையில் கிளறச் செய்து ஆழ்மன உணர்வு முதல் அறிவு நிலை வரை சிந்தனை திறன்களைத் தூண்ட முடியும்.
ஆசிரியர்களின் பரஸ்பர அனுபவ பகிர்வும் கூடுதல் அவகாசமும்
படைப்பாளுமையுடன் பாடத்திட்டங்களைக் கற்பிக்கின்ற புதிய முயற்சிகளை அனுபவங்களாக ஆசிரியர்கள் சேகரித்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் மைய வகுப்பறையில் பயிற்சிகள் இல்லாத ஆசிரியர்களுக்கு இத்தகைய அனுபவ சேகரிப்பு வழிகாட்டிகளாக பயன்படும். மாணவர் மைய வகுப்பறையைக் கையாள்வதற்கான பயிற்சிகளை ஆசிரியர்கள் தனித்தனியாக மேற்கொள்வதைக் காட்டிலும் தங்களுக்குள் கூட்டு முயற்சிகளில் ஈடுபடுவது மேலும் பயன் தரும். ஆசிரியர்கள் தங்களுக்குள் பாரபட்சம் கருதாமல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவர்களாகச் சுதந்திரமான மனநிலையிலும் மகிழ்ச்சியான சூழலிலும் திறந்த மனநிலையிலும் அனுபவ சேகரிப்புகளைக் கலந்துரையாடி புதியப்புதிய உத்திகளைக் கண்டடைய வேண்டும். இத்தகைய முயற்சியின் வழியாக மாணவர் மைய கற்பித்தல் முறையில் ஒவ்வொரு ஆசிரியரும் தகுதியை உயர்த்திக்கொள்ள வேண்டும்.
பாடத்திட்டம் என்பது ஆசிரியர்கள் வகுப்பறையில் சொல்லி செல்வதற்கான காலமுறை அல்ல. மாறாக, மாணவர்களின் சிந்தனை மட்டத்தை உயர்த்துவதற்கான வழிமுறை. இந்தப் பேருண்மைகளை ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வித் துறைகள் வரை சமூகளாவிய நிலையில் உணர்ந்து ஆசிரியர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும். பாடத்திட்டங்களில் சில பகுதிகளையாவது கூடுதல் அவகாசங்களுடன் குறுகிய காலக்கெடு இல்லாமல் ஆசிரியர்கள் நடத்துவதற்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும்.
கற்பித்தலின் மாபெரும் கலைஞராகவும் சமூகளாவிய அறிஞராகவும் திகழ்கின்ற ஒப்பற்ற ஆசிரியரானாலும் தீர்க்கமான சவால் ஒன்றுண்டு. கற்றல் திறனற்ற மாணவர்களைச் சிந்தனையாளர்களாக வளர்த்தெடுப்பது சாத்தியக் குறைபாடே. ஏனெனில் தாய்மொழி மரபும் சிந்தனைத் திறனும் கற்றலின் பெருஞ்சுவராகும். சமகால மாணவர்களின் தகவமைப்போ கற்றல் திறனுக்கு முரணாக அமைந்துள்ளது. சுவர் இன்றி சித்திரம் ஏது? எனவே ஆசிரியரின் திறன்மிகு அறிவு வண்ண கலவைகளால் கற்றலை சாத்தியமாக்குவது சவால் ஆகிறது.
கற்றல் திறனை முடக்கும் தாய்மொழி மறுப்பு
மாணவர்கள் தன் தாயின் வயிற்றில் 5 மாத குழந்தையாக இருந்தது முதல் அவர்களது உணர்வு மண்டலம் தாய்மொழி வழியாக தகவமைந்துள்ளது. சமூக இயற்கையின் அடிப்படையில் அவர்கள் புரிந்து கொள்வதும் உணர்வுகளை வெளிப்படுத்துவதும் தாய்மொழி வழியாகவே. தாய்மொழி என்பது ஒரு சமூகத்தின் இயற்கையான உணர்வு மண்டலமாகக் கட்டமைந்துள்ளது. ஒரு சமூகம் அரசியல் மாற்றங்களைச் சந்தித்ததும் பயன்பாட்டிலுள்ள தாய்மொழியை அகற்றிவிட்டு வேறொரு மொழியைச் செயற்கையாக மக்களின் உணர்வு மண்டலங்களில் பதிவேற்றம் செய்ய முடியாது. ஏனெனில், தாய்மொழி என்பது வெறும் பண்பாடல்ல. சமூக உற்பத்திமுறையியல், சமூக வாழ்வியல், சமூக உள்ளத்தியல், தனிமனித உள்ளத்தியல், சமூகக் கருத்தியல், தனிமனிதக் கருத்துநிலைப்பாடு, தனிமனித உலகப்பார்வை, தத்துவ அடிப்படை இவற்றை முழுமையாக உணர்வு மண்டலத்தில் பிரதிபலிக்கின்ற சமூக முழுமையின் வெளிப்பாடாகும். ஆனால், உணர்வு மண்டலத்தின் அடிப்படையாகத் திகழ்கின்ற தாய்மொழி வழியில் கற்றல் என்பதே நம் சமூகத்தில் சவாலாக அமைந்துள்ளது.
தாய்மொழி வழிக்கல்வியை அலட்சியப்படுத்தும் சமூக அரசியல் பண்பாட்டுச் சூழல் காரணமாகவும், தாய்மொழி வழியற்ற கல்வி முறை அனைத்தும் குழந்தைகள் மீதான அறிவு வன்முறை என்ற சமூகப் புரிதலற்ற குடும்பப் பண்பாட்டின் காரணமாகவும், தனது உணர்வு மண்டலத்தின் சமூக இயற்கையாக கட்டமைந்துள்ள தாய் மொழியை எழுதவும் படிக்கவும் தகுதிப்படுத்துகின்ற அடிப்படை கல்வியைப் பெற முடியாத மாணவர் சமூகத்தின் அறிவுக் குறைபாடும் சிந்திக்கும் திறன் இழந்த வீரியமற்ற நிலைக்கு காரணங்களாகின்றன. தாய்மொழியில் ஆளுமை இல்லாவிட்டால் சிந்தனைத்திறனும் கற்றல் திறனும் பறிபோகும் என்பது மொழியியல் விஞ்ஞானம். சிந்தனைத்திறம் இல்லாவிட்டால் பயன்பாட்டு மொழியோ, விருப்ப மொழியோ, தேர்வு மொழியோ. நிர்பந்த மொழியோ எவற்றிலும் கருத்தாளுமை வெளிப்பட முடியாது. மொழித்திறன் வெளிப்படுவதற்கும் சாத்தியமில்லை. தாய்மொழித் திறனல்லாத எல்லா முயற்சிகளும் கற்றல் குறைபாடுகள் நிறைந்த குறைபிரசவங்களே.
செயல்திறனை முடக்கும் காட்சிபோதை
மாணவர்களும் தங்களைச் செயல் திறன் உடையவர்களாக வருங்காலம் உணரும்படி உயர்த்திக் கொள்ள முயல்வதில்லை. செயல் ஆளுமைக்கு அடித்தளமாகக் கல்வி சார்ந்த கருத்துகளை ஆழ்மனப் பற்றுதலுக்கு ஆட்படுத்தும் திறனை இழந்திருக்கிறார்கள். மேலும் சீரழிவு பண்பாட்டின் நவீன வடிவங்களான “பப்ஜி கேம்ஸ்” போன்ற ஆண்ட்ராய்டு செயலியின் காட்சி போதை வடிவிலான வன்முறை விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்கள். தனியாகவோ அல்லது குழுவாகவோ சேர்ந்து இணைய உதவியுடன் இத்தகைய விளையாட்டுகளில் ஆழ்மனதை பறிகொடுக்கிறார்கள்.
சமூகப் பொறுப்பற்றவர்களாகவும், வன்முறை உணர்வாளர்களாகவும், நிகழ்வுகள் மீதான அலட்சிய பண்பாளர்களாகவும், செயல் திறன் இழந்தவர்களாகவும், ஆழ்மனச் சோம்பேறிகளாகவும் பலவீனப்படுகிறார்கள். இத்தகைய காட்சி போதை மற்றும் வன்முறை விளையாட்டுகளில் தான் பெற்ற சாதனைகளை எல்லாம் தம் செயல் திறனுக்கு சான்றாதாரங்களாக நம்பி தன்னகங்கார மனநிலைக்கு ஆட்படுகிறார்கள். ஆனால், அருகில் இருக்கும் கடைக்குப்போக கூட வண்டியைத் தேடுகிறார்கள். அவர்களிடம் இயல்பாக வெளிப்படக் கூடாத வெறுமை, வெறுப்பு, அலட்சியப் பார்வை, சகிப்பின்மை, ஒழுக்கமீறல், தான்தோன்றித்தனம் போன்ற பண்புகள் இயல்பானவைகள் ஆகிவிட்டன.
குடி போதைக்கு அடிமைப்பட்டவர்கூட போதை நீங்கியதும் செயல் திறனுக்கு ஆட்படுகிறார். குடி போதை நீங்கியதும் செயல் திறனை மீண்டும் பெறுவது சிக்கலாக இல்லை. ஆனால், காட்சி போதைக்கு ஆட்படுபவர்களால் செயல் திறனுக்கு மீண்டும் திரும்புவது சாத்தியம் இல்லாமல் போகிறது. உடல் திறன், அறிவு திறன், மனத்திறம் மூன்றும் காட்சி போதையால் சமாதி அடைகின்றன. கற்கும் மாணவர்களின் பண்படும் மனநிலையை பாதுகாக்க மது உட்பட எல்லா போதை வஸ்துகளில் இருந்தும் பாதுகாக்க முயல்கிறோம். இந்த முயற்சியே கல்வி நிறுவனங்களுக்கு சமூகளாவிய வெற்றியை இன்னும் பெற்றுத் தரவில்லை. காட்சி போதையோ மேலும் சவாலாக உருவெடுத்துள்ளது. இந்தக் காட்சி போதையை எப்படி எதிர்கொள்வது?
சமூகளாவிய திட்டங்களும் நடைமுறைகளும் இல்லாமல் மாணவர்களை கற்றல் பண்புடையவர்களாக பண்படுத்த முடியாது. இந்தச் சவாலான சூழல்களில் செயல் திறம் இழந்த தலைமுறைகளாக மாணவர்கள் உருவெடுத்துள்ளார்கள்.
மாணவர்களின் தனித் திறன்களைப் பாடத்திட்டங்களில் அங்கீகரித்தல்
நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் உலகமாகிய சமகால சமூகத்தில் அவரவர் மொழியிலேயே அவரவர்கள் தகவல் பரிமாற்ற உலகில் இயங்க முடியும் என்ற எதார்த்தத்தை எட்டியுள்ளோம். அவரவர் தாய்மொழியில் மொழிபெயர்த்து தெரிவிக்கவும், பிறரது தாய் மொழிகளில் மொழிபெயர்த்து உணர்த்திடவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் ஆற்றலுடன் செயல்பட்டு வளர்கின்றன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மனித யுகத்தில் அறிவை பகிர்வதற்கும், உணர்வை வெளிப்படுத்துவதற்கும் மொழி ஒரு தடையே இல்லை. உலகமே இந்த எதார்த்தம் நோக்கி மாறி வருகிறது. எனவே, மாணவர்களின் தாய்மொழியில் பாடத்திட்டங்களைக் கற்றிட சமூகத்தடை இருக்க அவசியமில்லை.
பாடத்திட்டங்களை கற்பிக்கும் பன்முகத்தன்மையான ஆசிரியரின் வழிமுறையானது மாணவர்களின் சிந்தனை மண்டலத்தை உயிர் பெறச் செய்ய வேண்டும். கற்றல் இலக்கில் சுதந்திர மனநிலையுடன் இயங்கும் வாய்ப்புகளை மாணவர்களுக்கு வழங்குவதாக கற்பிக்கும் அணுகுமுறையை அமைத்துக் கொள்ள வேண்டும். கற்றலில் சுதந்திர மனநிலை இருந்தால் மட்டுமே பாடத்திட்டங்கள் சிந்தனைகளாக வளர்ச்சி பெற முடியும். ஆனால் சுதந்திர மனநிலை இருக்க வேண்டுமெனில் மாணவருக்கு தன்னைப் பற்றிய சுய மதிப்பீடு தனிச்சிறப்பானதாக இருக்க வேண்டும். அத்தகைய தனிச்சிறப்பு அவரவரது கலைப்பூர்வமான ஆற்றலில் இருக்கின்றது.
தனிச்சிறப்பு என்பது தன்னகங்காரத்திற்கும் தாழ்வு மனப்பான்மைக்கும் இடைப்பட்ட செயலூக்கமாகும். ஆசிரியரின் கற்பித்தல் அணுகு முறையானது மாணவர்களுக்கு அவர்களது தனித்துவங்களை கண்டறிந்து உணர்த்துவதாகவும் வளப்படுத்தும் வாய்ப்புகளாகவும் அமைய வேண்டியது அவசியம். பேச்சு, எழுத்து, நாடகம், ஓவியம் போன்ற பன்முகத்தன்மையான கலைச் செயல்களில் ஏதேனும் ஒன்றிலாவது மாணவரின் ஆர்வத்தை எழுச்சி பெற செய்யும்படி உதவ வேண்டும்.
பாடத்திட்டங்களைக் கலைச்செயல்பாடுகளாக வெளிப்படுத்தும் வாய்ப்புகளை மாணவர்களுக்கு இலக்காக்கும்போது பாடத்திட்டங்கள் மாணவர்களின் சிந்தனைகளாகவும் படைப்புச் செயல்பாடுகளாகவும் உருப்பெறுவதை கண்டு ஆசிரியர்கள் நெகிழ்ச்சி அடைய முடியும். தன்னை ஒரு கலைஞராக உணர்வதிலிருந்து தனித்திறன்களை அங்கீகரிக்கின்ற களமாக வகுப்பறைகள் அமைந்துள்ளன என்ற நம்பிக்கை வரையிலும் கற்றல் மீதான மாணவர்களின் பேரார்வத்தை அவர்களின் ஆழ்மன உணர்விலிருந்தே கண்டடைய முடியும்.
சமூக விஞ்ஞான விதிப்படி கலை அறிவியலுக்குச் சேவை செய்ய வேண்டும். அறிவியல் கலையை வழிநடத்த வேண்டும். மாணவர் மைய வகுப்பறைகள் கற்றல் கற்பித்தல் நடைமுறையாக சாத்தியப்படுத்தப்பட்டால், தலைமுறைகளுக்கு கலங்கரை விளக்காக கலை அறிவியல் திகழும். பாடத்திட்டமாகிய அறிவியல் மாணவர்களின் கலைச் செயல்பாடுகளாக வெளிப்படுவதும், மாணவரின் கலைச்செயல்பாடுகள் பாடத்திட்டமாகிய அறிவியலுக்கு சேவை செய்வதும் சாத்தியப்படுவது நிதர்சனம்.
ஆற்றல்மிக்க சிந்தனைவாளர்களாகிய மாணவர்கள் கண்டுபிடிப்பாளர்களாகவும், துறை சார்ந்த நிபுணர்களாகவும், உலகம் போற்றும் அறிஞர்களாகவும், தலைமுறை காக்கும் தலைவர்களாகவும் உலகை உயர்த்துவார்கள். ஆசிரியர் மாணவர் உறவு என்பது நாட்டின் வளர்ச்சிக்கும் பெருமைக்குமான உறவு. நாட்டின் வளர்ச்சிக்கு உயர்வினையாற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மாணவர் மைய வகுப்பறைகளை கட்டமைப்பதை இலக்காக பின்பற்ற வேண்டும். ஏனெனில், மாணவர் மைய வகுப்புகளே நவீன உலகின் திசைவழி.
இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்பது மட்டுமல்ல நாட்டின் தலைவிதிகளும் அவர்கள்தான். அடிப்படைக் கல்வி முதல் உயர் கல்வித்துறைகள் வரை நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கக்கூடிய பொறுப்பான மாற்றங்களைச் செய்தாக வேண்டும். அத்தகைய செயல்கள் அனைத்தும் மாணவர் மைய வகுப்புகளாகத்தான் வரலாற்றில் விளக்கம் பெற முடியும்
துணை செய்தவை
1.கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை.மக்கள் திரை.https://www.youtube.com/watch?v=bwJTVYd9MKE&pp=ygUf4K6u4K6V4K-N4K6V4K6z4K-NIOCupOCuv-CusOCviA%3D%3D
2.இண்டர்நேசனல் பள்ளியிலிருந்து அரசு பள்ளிக்கு மாறப்போகும் பெற்றோர்கள்.மக்கள் திரை.https://www.youtube.com/watch?v=4WT0VdPzbUA&pp=ygUf4K6u4K6V4K-N4K6V4K6z4K-NIOCupOCuv-CusOCviA%3D%3D
3.அரசு பள்ளியில் குழந்தைகளைச் சேர்த்த IT பெற்றோர்கள்.மக்கள் திரை.https://www.youtube.com/watch?v=lPY78breLnI&pp=ygUf4K6u4K6V4K-N4K6V4K6z4K-NIOCupOCuv-CusOCviA%3D%3D
4.வேலம்மாள் தொடங்கி அரசு பள்ளி வரை – வங்கி அதிகாரியின் குழந்தைகள்.மக்கள் திரை.https://www.youtube.com/watch?v=iIzXtQZgd_k&pp=ygUf4K6u4K6V4K-N4K6V4K6z4K-NIOCupOCuv-CusOCviA%3D%3D
5.அரசு பள்ளியின் நிர்வாகம் சட்டப்படி பெற்றோர்கள் கையில்தான் உள்ளது.மக்கள் திரை.
https://www.youtube.com/watch?v=HGXmhSg9FG0&pp=ygUf4K6u4K6V4K-N4K6V4K6z4K-NIOCupOCuv-CusOCviA%3D%3D
7.தமிழ்வழிப் பள்ளி தேடிய ஓர் அப்பாவின் அனுபவம். நலங்கிள்ளி. 2019. சென்னை. ஈரோடை வெளியீடு.
8.காலந்தோறும் தமிழ். ஆழிசெந்தில்நாதன்.
9.மாணவர்களது அவையின் முரண்பாடுகளும் கவனிப்பாரது பொறுப்புணர்வும். புதியவன். செப்.2012. காக்கைச் சிறகினிலே.
10.மார்க்சியமும் மொழியியலும். வி.ஐ.லெனின், ஜோ.ஸ்டாலின். புதுமைப்பதிப்பகம்.2017.புதுமை பதிப்பகம்.
11.தமிழுக்குப் பேர் அழகா? அறிவா? - https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/47311-2024-10-17-06-41-56
வெளிவந்த விவரம்
நவம்பர் 11, 2024
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/47418-2024-11-10-15-10-19