Wednesday, November 24, 2021

சவக்குழி

 

சவக்குழி 

புதியவன்


இலாப வெறி தன் தூரிகையில் வரைந்த ஓவியம்

நாம்  சுயநலப் புழுவாய் நெளிகின்றோம்

 

எத்தனை விதமான வண்ணங்கள்

எண்ண முடியாத ஜாலங்கள்

கண்கள் கூசும் வெளிச்சங்கள்

எச்சில் ஊறும் விருப்பங்கள்

மூக்கைத் துளைக்கும் வாசங்கள்

முடிவே இல்லாத் தொடக்கங்கள்

பொய்யாய் பந்த பாசங்கள்

தொலைந்தன மனித உறவுகள்

கண்ணியமற்ற வாழ்க்கைக்கும்

கவர்ச்சிமிக்க ஆடைகள்

 

இலாப வெறி தன் தூரிகையில் வரைந்த ஓவியம்

அதில் சுயநலப் புழுவாய் நெளிந்து சாவதே

ஒவ்வொரு மனிதரின் பாத்திரம்

 

இயற்கை சமூகம் இரண்டுடனும்

மனிதருக்கு இருக்கின்ற

இடைப்பட்ட உறவென்பது

பிழைப்பு நுகர்வு மரணம்

என்ற மும்முனை உறவுதான் என்பது

நவீன முதலாளியத்தின் இலாபவெறி

நமக்கு நிர்பந்தித்திருக்கும் நிலைப்பாடு

இது மனிதகுலம் கண்டுள்ள

ஆகப்பெரிய அறியாமை

இலாபவெறியால் நாம்  சுமந்த

ஆகப்பெரிய இழிநிலை

 

பிழைப்பிற்கான முயற்சிகளில்

நாம் வாழ்வதற்கே மறந்துபோனோம்

 

பிழைப்பு நுகர்வு மரணம்

என்ற மும்முனை சுழற்சியில்

வாழ்ந்தோமோ இல்லையோ!

இழந்ததும் தொலைத்ததும் ஏராளம்…

 

நாம் நாங்கள் என்ற ஒற்றுமையைத் தொலைத்து

நான் எனக்கு என்ற அகந்தையில் விழுந்தோம்

எல்லோருக்குமான அறிவைத் தொலைத்தோம்

மேன்மையான உழைப்பைத் தொலைத்தோம்

உயர்வதற்கானப் பண்பாட்டைத் தொலைத்தோம்

அரசதிகாரத்திற்கு குனிந்து குனிந்தே

தலைமைத்துவத்தைத் தொலைத்தோம்

நம் தலைமுறைகளின் நல்லுலகம் பற்றிய கனவுகளைத் தொலைத்தோம்

 

இலாப வெறியின் வேகத்தில்

சுயநல வெறியின் மயக்கத்தில்

நாம் பிழைத்தது துளிதான்

தொலைத்தவை கடல்தான்

 

No comments:

Post a Comment

உடலாற்றுப்படை

உடலாற்றுப்படை   ஒரு மாணவர் இடுப்பு வலித்து தொடர்ந்து பத்தாவது நாளாக விடுமுறையானார். அவரை வகுப்பறை நண்பர்கள் 'டேய் உடும்பு' என்பா...

அதிகம் பார்க்கப்பட்டவை