Friday, December 25, 2020

நாட்டுப்புறவியலா? நாட்டார் வழக்காற்றியலா?

 

நாட்டுப்புறவியலா? நாட்டார் வழக்காற்றியலா?

புதியவன்

 

நாடு + புறம் + இயல் = நாட்டுப்புறவியல் என்பது ‘நவீன நாகரீகத்திற்கு வெளியே’ என்பதாக விளக்கம் பெறுகின்றது. 

நாடு என்பது காட்டிற்கு முரணாகும். காடு என்பது மனித செயல்களால் பண்படுத்தப்படாத இயற்கை வெளி எனில் நாடு என்பது மனித செயல்களால் பண்படுத்தப்பட்ட செயற்கை வெளியாகும். 

புறம் என்பது வெளியே எனப் பொருள்படுவதால் நாட்டிற்கு வெளியிலுள்ள காடு நோக்கிய பண்பாட்டு வெளியைக் குறிக்கின்றது. 

இயல் என்பது இயங்குல் எனப் பொருள்படுவதால் காடு நோக்கிய பண்பாட்டு வெளியில் வாழும் மக்களின் இயல்புகள் குறித்த அறிவியலாகும்.

 

மனித செயல்களால் பண்பாடு தொடர்ந்து புதுப்பிக்கப்படுவதால் நாடு என்பதே நவீன நாகரீகத்தின் சின்னமாக தொடர்ந்து பொருள்படுகின்றது. நாட்டுப்புறம் என்பது நவீன நாகரீகத்தால் புதுப்பிக்கப்படாமல் காடு நோக்கி விரவிக்கிடக்கின்ற பண்பாடாக அறியப்படுகின்றது.

1.காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)

2.வேட்டை நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)

3.கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)

4.விவசாய நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)

5.உற்பத்தியின் மீதான வணிக நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)

6.வணிக இலாபத்திற்காக உற்பத்தி செய்தல் (தந்தை அதிகார சமூகம்)

7.நிதி மூலதனப் பிரிவு தோன்றி சமூகஉற்பத்தி மீது ஆதிக்கம்  செய்தல் (தந்தை அதிகார சமூகம்)

 8.மக்கள் தலைமையின் கீழ் சமூகஉற்பத்தியைக் கட்டமைத்தல் (ஏற்றத்தாழ்வு மதிப்பிழந்த சமூகம்)

மேற்கண்ட மனித வரலாற்று படிநிலையில் விளக்குவதென்றால் வணிக இலாபத்திற்காகவே உற்பத்தி செய்தல் என்ற ஆறாம் கட்ட நாகரித்திலிருந்துகொண்டு வணிக இலாபத்தின் பிரதிநிதிகளாகிய கல்வியாளர்கள் 5, 4, 3, 2, 1ம் கட்டங்களை நாகரிகத்திற்கு வெளியே என்று பொருள்படும்படி நாட்டுப்புறம் என்று  குறிப்பிடுகிறார்கள். அதாவது உற்பத்தி மீதான வணிகம், விவசாயம், கால்நடை மந்தை வளர்ப்பு, வேட்டை மற்றும் காடுசார்ந்த பொருள் சேகரிப்பு ஆகியவற்றின் பண்பாடுகளில் வாழும் மக்களை நாட்டுப்புறம் என்று குறிப்பிடுகிறார்கள்.

நாட்டுப்புறவியல் என்பது நவீன நாகரிக பண்பாட்டாளர்களால் நவீன நாகரீகத்திற்கு வெளியிலுள்ள பழமை பண்பாட்டாளர்களை அறிவதற்கான நடைமுறை அறிவியலாக கட்டமைந்திருக்கின்றது.

நாட்டுப்புறவியலுக்கு முரணாக நாட்டார் வழக்காற்றியல் என்ற சொல்லாடல் பயன்படுகின்றது. 

நாட்டார் + வழக்கு + ஆ(ற்)று + இயல் = நாட்டார் வழக்காற்றியல் என்ற சொல்லாடல் பழைய பண்பாட்டிற்கு உரிய மக்களை நாகரீகத்திற்கு வெளியில் இருப்பவர்கள் என்பதாக கீழ்படுத்தாமல் நாகரீகத்தின் முன்னோடிகள் அல்லது நாகரீகத்திற்கு உரியவர்கள் என்பதாக பொருள்படுத்துகின்றது. 

நாட்டார் என்பது நாட்டிற்கு உரியவர்கள் என்றும் நாகரிகத்திற்கு உரியவர்கள் என்றும் பொருள்படுகின்றது. 

வழக்கு என்பது வழக்கம் எனப் பொருள்படுவதால் மக்கள் எத்தகைய பண்பாட்டைப் பழகி வழக்கமாக்கினார்கள் என்பதாகப் விளக்கம் பெறுகின்றது. 

ஆறு என்பது வழி என பொருள்படுவதால் மக்களின் பண்பாட்டு வழக்கங்கள் எத்தகைய வரலாற்று வழியில் தகவமைந்தன என விளக்கம் பெறுகின்றது. 

ஆற்று என்பது செயலைச் செய்தல் எனப் பொருள்படுவதால் மக்களின் எத்தகைய செயல்பாடுகளால் பண்பாட்டு வழக்கங்கள் தகவமைந்தன என்பதாக விளக்கம்பெறுகின்றது. 

இயல் என்பது இயங்குல் எனப் பொருள்படுவதால் நாட்டார் மக்களின் சமூகப் பொருளாதார பண்பாட்டு அசைவியக்கங்களைப் பற்றிய அறிவியலாக விளக்கம் பெறுகின்றது.

       எனவே, மக்களின் பழைய பண்பாட்டை அணுகும்போது நவீன நாகரிகத்திற்கு வெளியே உள்ள மக்களின் பண்பாட்டை அணுகுதல் என்பதாக கருதுவது தவறாகும். மாறாக, நவீன நாகரிகத்தை உருவாக்கியவர்களின் அல்லது நவீன நாகரீகத்திற்கு உரிமையுடையவர்களின் அல்லது நவீன நாகரீகத்தின் முன்னோடிகளின் சமூகப் பொருளாதார பண்பாட்டு அசைவியக்கங்களை அணுகுதல் என்பதாகக் கருதுவதே சாலச்சிறந்ததாகும்.

      நிறைவாக, மக்களின் பழைய பண்பாடு குறித்த அறிவுத்துறையை நாட்டுப்புறவியல் என்று வழங்குவதைத் தவிர்த்து நாட்டார் வழக்காற்றியல் என்று வழங்குவதே அறிவுத்துறைகளின் மாண்பிற்கு பொருத்தமுடையதாகும்.


காணொளி கருத்தாடல்

 https://www.youtube.com/watch?v=a2IvjdmQwIk


 

 

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை