Monday, April 6, 2026

ஆற்றவும் கற்றார் அறிவுடையார்

 

ஆற்றவும் கற்றார் அறிவுடையார்

முனைவர் புதியவன்

 

அறிவுடையவர்கள் யார் என்பதற்கு உங்கள் விடை என்ன?

மூளை உடையவர்கள் எல்லாம் அறிவுடையவர்கள் தானே ஐயா.

ஆடு மாடுகளுக்கு மூளை இருக்கிறது. அவைகளின் அறிவு தான் உங்கள் அறிவா! மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் வித்தியாசம் இல்லையா!

மாணவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

தாவரங்களுக்கு மூளை இல்லை. ஆனால், ஓரறிவு உயிரினமாக தொல்காப்பியர் தாத்தா விளக்குகிறார். இவர் அறிவியல் தத்துவத்தின் தொல் தமிழ் மேதை.

“ஒன்றறிவதுவே உற்றறிவதுவே…” தொல்காப்பிய பாடல் தெரியுந்தானே.

மாணவர்கள் அமைதியின் ஓவியங்களாக விழித்துக் கொண்டிருந்தார்கள்.

நான் ஓவியங்களைக் களைத்துக் கொண்டிருந்தேன். சிந்தனையில் அதிர்வுகளை எழுப்புவது என் நோக்கம்.

 நாம் அனைவரும் அறிவுடைய மனிதர்கள்தானே.

 ஆமாம் ஐயா! மாணவர்கள் மேலும் கீழுமாக தலையசைத்து உறுதி செய்தார்கள். மனிதர்களுக்கு எத்தனை அறிவு ஆறறிவு ஐயா. மகிழ்ச்சி!

 ஒவ்வொரு மாணவரையும் எழுப்பிக் கேட்டேன் 

 ஒன்றாம் அறிவு என்ன?

இரண்டாம் அறிவு என்ன?

ஆறாவது அறிவு வரை ஒவ்வொன்றாகக் கேட்டேன். 

 நின்றவர்கள் அமைதியும் புன்னகையுமாக அசைந்து கொண்டிருந்தார்கள் 

 தவறாக சொன்னாலும் பரவாயில்லை நினைப்பதை சொல்லுங்கள் என்று தூண்டினேன். சரியும் தவறுமாகக் கலந்து வந்தன பதில்கள். 

 பேசுவது, பார்ப்பது, சிரிப்பது, நடப்பது, படிப்பது, சுவைப்பது, நினைப்பது…

இப்படி பலவிதமான பதில்கள் குவிந்தன 

நான் வேறுவிதமாக உணர்த்த முயன்றேன்.

உங்களுக்கு மதிய உணவு இருக்கிறதா? என்றேன்.

அவரவர்கள் பதில் கூறினார்கள்.

உங்களுக்கு நூறு ரூபாய் இருக்கிறதா? என்றேன்.

அறுபது ரூபாய்தான்…

இல்லை ஐயா…

இருக்கிறது ஐயா… இப்படி பலவிதமான பதில்கள் வந்தன.

உங்களுக்கு அறிவு இருக்கிறதா? என்றேன்

சிலர் கோபத்தை மறைத்தபடி புன்னகைத்தார்கள்…

சிலர் அலட்சியமாக சிரித்தார்கள்…

சிலர் வெகுளியாக ஆம் என்றார்கள்…

சிலர் இல்லை என்றும், கொஞ்சம் இருக்கிறது என்றும் சமாளித்தார்கள்…

நான் விளக்கத் தொடங்கினேன்.

உங்களுக்கு அறிவு இருக்கிறதா? என்றதும் ஏன் தன்மான உணர்ச்சிகள் பலவிதமாக வெளிப்படுகிறது.

மனிதரிடம் இந்த கேள்வி தன்மான உணர்ச்சியை எழுப்பாவிட்டால் நாம் மனிதர்களாக உயரவில்லை என்றுதான் பொருள்.

அசைபோடும் ஆடு மாடு மந்தைகளிடம் இந்த கேள்வியை கேட்டால் அவைகளுக்கு தன்மான உணர்ச்சி வராது. ஐந்தறிவு இருக்கிறது என்றும் பதிலும் சொல்லாது.

மனிதரிடம் கேட்டால் தன்மான உணர்ச்சி வரவேண்டும். ஏனெனில், இது ஆறாம் அறிவை சவால் விடுகின்ற கேள்வி.

நமது ஆறாவது அறிவு என்பது செயல்களுக்கான சிந்தனைத்திறனைக் குறிக்கிறது.

செயல்தான் மனிதரின் அடையாளம்.

 “ஆறறிவதுவே அவற்றொடு மனனே..” என்றத் தொல்காப்பியப் பாடலைக் கூறி விளக்கத் தொடங்கியிருந்தேன். 

 உடலால் தொட்டு அறிவது ஒன்றாவது அறிவு

 நாவால் சுவைத்து அறிவது இரண்டாவது அறிவு

 மூக்கால் முகர்ந்து அறிவது மூன்றாவது அறிவு 

 கண்களால் பார்த்து அறிவது நான்காவது அறிவு

 காதுகளால் கேட்டு அறிவது ஐந்தாவது அறிவு 

 மனதில் இருந்து சிந்தித்து உண்மைகளை அறிவது ஆறாவது அறிவு 

 நாம் எல்லோரும் சிந்திக்கும் திறமை உடையவர்களா?

ஆம் எனில் நாம் மனிதர்கள்தான்.

இல்லையெனில் ஆடு மாடு போன்ற மந்தைகள்தான்.

“மாடுகளை மந்தைகளாகக் கருதாமல் தெய்வங்களாகக் கருதுவதுதானே நம் பண்பாடு ஐயா!” 

ஐயையோ! என்று திணறி போனேன்.

அந்த மாணவன் மேதையைப்போல் நின்று கொண்டிருந்தான்.

நான் பொறுத்தமான விளக்கம் கூறக்கடமைபட்டிருந்தேன்.

தெய்வங்களை இறைச்சி வியாபாரத்திற்காக ஏற்றுமதி செய்வதும் நம் பண்பாடுதான். தெய்வங்களை விற்று அதிக லாபம் பார்ப்பதும் நம் பண்பாடுதான் என்றேன்.

அவன் அதிர்ச்சி அடைந்தது போல விழித்தான்.

உணர்ச்சிவசப்படாதே தம்பி. அறிவார்ந்த முடிவுகளுக்கு பயன்படாது.

எப்போதும் நம்பிக்கைகளை வகுப்புகளுக்கு கொண்டு வரக்கூடாது. கருத்துகளைத் தான் கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் கருத்துரிமை என்ற ஜனநாயகமே செத்துவிடும். ஜனநாயக உரிமைகளை உயிரோடு பாதுகாப்பது நம் கடமை அல்லவா! 

 ஒரு மாணவி கேட்டார் “நம்பிக்கையும் கருத்தும் வேறுவேறுங்களா ஐயா“ 

 ஆம். கருத்து வேறு, நம்பிக்கை வேறு. 

 உதாரணத்திற்கு இரண்டு(2) 

 இரண்டு என்பது உண்மை சார்ந்த கருத்துகளாக இருப்பது வேறு,

உண்மைக்கு அப்பாற்பட்ட நம்பிக்கைகளாக இருப்பது வேறு. 

 2 என்பது 1+1 என்கிறேன் நான் .

2 என்பது 1/2 + 1/2 + 1/2 + 1/2 என்கிறீர்கள் நீங்கள் .

2 என்பது 1/4 + 1/2 + 3/4 + 1 என்கிறார் மற்றொருவர் .

 இவை அனைத்தும் இரண்டின் மதிப்பு பற்றிய பல்வேறு கருத்துக்கள். அனைத்து கருத்துகளுக்கும் சம உரிமை இருக்கிறது. எந்த கருத்து சரியானது என்பதை விவாதித்து முடிவு எடுக்க உரிமை உள்ளது.

வகுப்பு உட்பட பொது இடங்களில் இந்த கருத்துகளைக் கலந்துரையாடவும் விவாதிக்கவும் கருதுரிமை உண்டு என்பதுதான் ஜனநாயகம். நடைமுறை உண்மைகள் குறித்த பல்வேறு கருத்துகளுக்கும் இது பொருந்தும். ஆனால் நடைமுறை உண்மைகளுக்குத் தொடர்பு இல்லாத நம்பிக்கைகளுக்குப் பொருந்தாது.

2 என்பது பரமாத்மா + ஜீவாத்மா என்று எவராவது சொன்னால் அதை கருத்தாக ஏற்றுக் கொள்ள முடியாது. அது நடைமுறைக்கு அப்பாற்பட்ட அவரது மத நம்பிக்கை. இது போன்ற நம்பிக்கைகள் அவரவர்களது தனிப்பட்ட விவகாரங்கள். இவை கருத்துரிமையில் அடங்காது. அதனால்தான் ஜனநாயகம் குறித்த அரசியல் சாசனம் “மதசார்பற்ற ஜனநாயக குடியரசு“ என்பதாக வரையறை செய்துள்ளது.

மதச் சார்புடையது நிச்சயமாக ஜனநாயக குடியரசாக இருக்க முடியாது என்பதுதான் இதன் பொருள். ஏனெனில், உண்மைக்கு அப்பாற்பட்ட நம்பிக்கையானது உண்மைகள் நோக்கிய பல்வேறு கருத்துக்களின் வளர்ச்சியைத் தடை செய்துவிடும். 

 நாம் வகுப்பறையில் அமர்ந்திருக்கிறோம்.

நாளைய தலைவர்களை பிரசவிக்கின்ற கருப்பையில் உரையாடிக் கொண்டிருக்கிறோம். நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகின்ற அறிஞர்களை அடை காத்துக் கொண்டிருக்கிறோம். எனவே, கருத்துகளில் நம்பிக்கையைக் கலக்காமல் எச்சரிக்கையாக உரையாட பழகுவோம்.

 சிந்திக்கும் திறன் இல்லாவிட்டால் நாம் ஆடு மாடுகளைப் போன்ற வெறும் மந்தைகள் என்றேன். இது நம்பிக்கை அல்ல நம்மைப் பற்றிய விமர்சனத்தை முன்வைக்கின்ற கருத்து. விமர்சிக்கப்படாத வாழ்க்கை வாழவே தகுதியற்றது. நாம் நமது சிந்தனை முறையை விமர்சனப்படுத்த வேண்டும் அல்லவா!

 உங்கள் சிந்தனையில் இருந்து நீங்கள் கூறுங்கள் .

 மாடுகள் போன்ற விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் அடிப்படையான வேறுபாடுகள் என்ன?

 நம்ம சிரிப்போம் அதுகள் சிரிக்காது ஐயா ..

 நமக்கு ரெண்டு கால் அதுகளுக்கு நான்கு கால்கள் ஐயா ..

 நமக்கு கொம்பு இல்லை அதுகளுக்கு கொம்பு இருக்கு ஐயா ..

 நான் குறிக்கிட்டுப் பேசினேன் 

 நம்ம உடை உடுத்துவோம் அதுகள் உடுத்தாது ..

 நம்ம சமைத்து சாப்பிடுவோம் அதுகள்...

 இப்படியே சொல்லிட்டுப் போறதுதான் அடிப்படை வேறுபாடா!

 எல்லோரும் சிரித்து மகிழ்ந்தார்கள். நான் விளக்கத் தொடங்கினேன். 

 கதை சொல்லி தென்கச்சி கோ சுவாமிநாதன் இப்படி சொல்கிறார் .

 கால்களால் நடப்பவைகள் கால்நடைகள். மனதால் நடப்பவர்கள்தான் மனிதர்கள் 

 மனிதர்களைத் தவிர எல்லா உயிரினங்களும் இயற்கைக்கு ஏற்றபடி தம்மை மாற்றிக் கொள்கின்றன. மனிதர்கள் மட்டும்தான் தமக்கு ஏற்றபடி இயற்கையைத் திட்டமிட்டு மாற்றுகிறார்கள். இந்தத் திட்டமிட்ட மாற்றத்தைப் பிரபஞ்ச வரலாற்றிலேயே மனிதர்களால்தான் செய்ய முடிந்திருக்கின்றது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால் திட்டமிட்ட மாற்றங்களை நிகழ்த்துவதுதான் மனித இயற்கை. இயற்கையின் அங்கமாகிய மனிதர்கள் ஒன்றுகூடி சிந்தித்து உழைப்பில் ஈடுபடுவதால் இதனை சாதித்துள்ளார்கள். மனிதர்கள் ஒன்றுகூடி சிந்தித்து உழைக்கின்ற உயிரினமாக இல்லாவிட்டால் அழிந்து போன உயிரினமாக என்றோ முடிந்திருப்பார்கள். எண்ணங்களின் இயங்குதளமாகிய மனதை உண்மைகளை அறிவதற்காகவும் சமூகத் தேவைகளுக்கு ஏற்றபடி மாற்றங்களை நிகழ்த்துவதற்காகவும் சிந்தனை உழைப்பில் ஈடுபடுகிறார்கள். சிந்தனை உழைப்பின் விளைவாகக் கருத்துகளை உருவாக்குகிறார்கள்.

மனிதர்கள் சிந்தனை உழைப்பில் உருவாக்கிக் கொண்ட கருத்துக்களைப் பற்றிக்கொண்டு செயல்களில் ஈடுபடுகிறார்கள். மனம் என்பதே சிந்தனைகளுக்கு அடித்தளம். அதனால்தான் தொல்காப்பியர் ஆறறிவதுவே அவற்றோடு மனனே என்று மனதை குறிப்பிடுகிறார். அறிஞர் தென்கச்சி மனதால் நடப்பவர்களை மனிதர்கள் என்கிறார்.

 ஆறாவது அறிவாகிய மனது சிந்தனை உழைப்பிற்கான அடித்தளம். மனித மன உணர்வுகளில் இயற்கை, சமூகம், மனித உறவுகள் அனைத்தும் எண்ணங்களாகவும் பிம்பங்களாகவும் இயங்குகின்றன. இவற்றை மூலதனமாக எடுத்துக் கொண்டே சிந்தனை உழைப்பில் அறிவு செயல்பாடு நிகழ்கின்றது. அறிவு செயல்பாடு மூன்று நிலைகளில் அமைகிறது.

 தகவல் அறிவுகள் மழையாகப் பொழிந்து 

 துறை சார்ந்த அறிவுகளில் நதிகளாக ஓடி 

 சமூக அறிவெனும் பெருங்கடலில் கலக்க வேண்டும்...

 தகவல் அறிவு மட்டுமே ஆறாம் அறிவாக அமையாது.

 துறை சார்ந்த அறிவு தனித்து இயங்க முடியாது.

 சமூக அறிவாகிய பெருங்கடலில் பாய்ந்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே சிந்தனை திறனோடு செயல்பட முடியும்.

 ஒன்று கூடி வாழ்வதற்காக சிந்திக்கிறீர்களா?

 ஒன்று கூடி சிந்தித்து உழைக்க உதவியாக செயல்படுகிறீர்களா?

 மனித குலத்தை அரவணைத்து பாதுகாப்பதில் பங்காற்றுகிறீர்களா? ஆம் எனில்,

 நீங்கள் மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது நிச்சயம்.

 சரிதானா தலைவரே என்று ஒரு மாணவரை கேட்டேன்.

 அவர் சிரித்த முகத்துடன் பேசினார். நீங்கள் பேசுவது புரியுதுங்க ஐயா. ஆனால், முழுதாக இன்னும் விளங்கிக் கொள்ள முடியல.

 நான் மேலும் விளக்க முன் வந்தேன்.

 செயல்,

செயல் திறன்,

செய்து பார்க்கலாம்,

செயல் தகுதி

 இந்தச் சொற்களில் உங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கு உதவுகின்ற முதன்மையான சொல் எது?

 சிலர் செயல் என்றார்கள்..

 சிலர் செயல் திறன் என்றார்கள் ..

சிலர் செய்து பார்க்கலாம் என்றார்கள் ..

சிலர் செயல் தகுதி என்றார்கள் ..

எந்தப் பதிலும் இல்லாமலும் சிலர் இருந்தார்கள் ..

 நான் விளக்க முன் வந்தேன். 

 செயல் தகுதிதான் செயல் திறமைக்கும் செயலுக்கும் தொடக்கமாகும்.

செயல் என்பது சிறந்த சொல் என்பார் மாமேதை லெனின்.

மனித உலகம் செயல்களால் கட்டமைந்துள்ளது. உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் செயல்கள்தான். இந்த வகுப்பு, மேஜை, ஜன்னல் வெளியே மரங்கள் கட்டிடங்கள், தெருக்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் ஒன்று கூடி திட்டமிட்டு உழைத்து உருவாக்கப்பட்ட மனித செயல்கள்தான்.

 செயல்தான் மனிதர்களின் அடையாளம்.

 செயல் திறமை என்பது செயலில் ஈடுபடும் மனிதரின் தனித்திறன் சார்ந்தது.

நீங்கள் எல்லோரும் துணி தைக்கும் தொழிலாளர்களாக இருக்கிறீர்கள். 

 நீங்கள் ஒரு நாள் உழைத்து ஒரு சட்டையைத் தைக்கிறீர்கள் ..

 அவர் ஒரு நாள் உழைத்து பத்து சட்டைகளைத் தைக்கிறார் ..

 நான் ஒரு நாள் உழைத்து ஒரு சட்டையை மிகுந்த கலை நயத்துடன் தைக்கிறேன்..

 இவர் ஒரு நாள் உழைத்து பத்து சட்டைகளைக் கலைநயத்துடன் தைக்கிறார்..

 செயலும் நேரமும் ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நமது தையல் தொழில் திறமைகள் வெவ்வேறாக இருக்கின்றன.

 திறமை என்பது சமூகத் தேவையோடு இணைந்தது. சமூகத் தேவைக்கு தொடர்பு இல்லாத எந்த திறமையும் செயல் தகுதியில் சேராது. நம் கல்லூரியில் ஒரு மாணவர் பிடிவாதமாக முடி வளர்க்கிறார். முடி வளர்ப்பதை தன் லட்சியமாகவும் கூறுகிறாராம். அதிக முடி வளர்த்தவர் என்ற சாதனையை அடைய வேண்டுமாம். மூளையை வளர்க்கச் சொன்னால் முடியை வளர்த்துக் கொண்டிருக்கிறார். குரங்குக்கும் கரடிக்கும் கூட முடி வளர்கிறது.உலகில் எந்த உயிரினமும் முடியை வெட்டிக் கொள்வதில்லை. முடியை வெட்டிக் கொள்பவர்கள்தான் மனிதர்கள். வளர்த்துக் கொண்டே இருப்பவர்கள் மந்தைகள். அவர் திறமையை மந்தை போல் அதிக முடி வளர்ப்பதில்தான் காட்ட வேண்டுமா. அவர் அதிக முடி வளர்ப்பதற்கான சமூகத் தேவை ஏதேனும் இருக்கிறதா? சமூகத் தேவைக்கு பொருந்தாத நடவடிக்கையை ஒரு செயலாகவே கருத முடியாது.

இவரது செயலை சாதனையாகவும் அங்கீகரிக்க வேண்டுமா! அறிவுடைய சமூகம் இதை சாதனையாகக் கருதுமா?

 ஒரு பேருந்துக்கு ஓரச்சாய்ப்பான் (side stand) சிறப்பாக தயாரித்துள்ளேன். உலகில் எந்த பேருந்திலும் இல்லாதபடி சிறப்பாக தயாரித்துள்ளேன். இந்தப் பேருந்தைப் பாருங்கள்.

 யாராவது ஒரு திறமைசாலி இப்படி ஒரு பேருந்தைக் காட்டினால் நீங்கள் என்ன செய்வீர்கள்.

 நான்கு சக்கர பேருந்துக்கு எதற்கடா ஓரச்சாய்ப்பான் என்று கேள்வி கேட்டு புத்தி கூறுவீர்களா மாட்டீர்களா!

மூளையை வளர்ப்பதற்குப் பதிலாக முடியை விதவிதமாக வளர்ப்பது…

பேருந்துக்கு ஓரச்சாய்ப்பான் நிறுவுவது…

சூத்தை ஆட்டி ஓடுற சர்கஸ் கரடிபோல வண்டிய வேகமா அலறவிட்டு ஆட்டிஆட்டி ஓட்டுறது…

இவை மட்டுமல்ல, சமூக தேவைக்கு அவசியப்படாத எந்தச் செயலையும் சாதனையாகவோ, செயல் திறமையாகவோ, செயலாகவோ கருதவே முடியாது.

 செய்து பார்க்கலாம் என்பது உறுதியற்ற செயலாகும். விளைவுகளைத் தீர்மானிக்காமல் விளையாடிப் பார்ப்பதுபோல. செயல்பாட்டில் உறுதி இல்லாமல் மனம் போன போக்கில் முடிவெடுப்பதுபோல. இது தன்னம்பிக்கைக்கு வழி கொடுக்கலாம். ஆனால், சமூக நம்பிக்கைக்கு உத்திரவாதம் கொடுக்காது. 

 எனக்கு சட்டை தைக்க தெரியாது. நான் தைத்துப் பார்க்கலாம் என்று கருதுகிறேன். என்னிடம் இருக்கும் துணியை ஆர்வமுடன் தைத்துப் பார்க்கிறேன். அது நல்ல சட்டையாகவும் வரலாம். அலங்கோலமாகவும் மாறலாம். அரைகுறையாக நான் விட்டு விடலாம். இப்படித்தான் முடித்தாக வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இல்லை. நான் ஆர்வத்துடன் தொடர்ந்து முயன்றால் தன்னம்பிக்கையுடன் முன்னேற முடியும் அவ்வளவுதான். ஆனால், சமூக நம்பிக்கை சாத்தியப்படுமா? அதாவது என்னை நம்பி நீங்கள் உங்களது மதிப்புமிக்க துணியைக் கொடுத்து சட்டை தைத்துத் தரச் சொல்வீர்களா?

 சிரித்த முகம் மாறாமல் மாட்டேன் என்று தலையசைத்தார்கள்.

 உங்கள் வாழ்க்கையை முன்னேற்றுகின்ற முதன்மையான சொல் செயல் தகுதிதான். செயல் தகுதி என்பதுதான் செயலுக்குத் தொடக்கம். ஒரு செயலில் ஈடுபட தொடங்கும் முன்பு அந்தச் செயலின் சமூகத் தேவைகளையும் விளைவுகளையும் முழுதாக தீர்மானித்துத் தொடங்கி முடிப்பதுதான் செயல் தகுதியாகும். அதாவது, ஒரு செயலைத் தொடங்கும்போது அதன் விளைவையும் முடிவையும் தீர்மானித்துக் கொண்டு தொடங்கி முடிக்கின்ற விவசாயியை போன்றது செயல் தகுதி.

 ஒரு விவசாயி நெல்லை மண்ணில் விதைக்க முயலும் போதே அதன் விளைவுகளையும் பயன்களையும் தீர்மானித்துக் கொண்டு தொடங்குகிறார். இந்த நிலத்தில் எத்தனை மூட்டை நெல்மணிகள் அறுவடையாக வேண்டும். எத்தனை லட்சம் வயிறு பசியாற வேண்டும். என்ன விலை கை சேர வேண்டும். இவற்றைத் தீர்மானித்துக் கொண்டு விவசாயத்தில் ஈடுபடுகிறார். 

இந்த விளைவில் முடித்தாக வேண்டும் என்று முடிவைத் தீர்மானித்துக் கொண்டு செயலில் ஈடுபடுவதுதான் செயல் தகுதி.

 நீங்கள் அனைவரும் செயல் தகுதியோடு வாழ்கிறீர்களா? 

 ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது பத்து நண்பர்களிடமாவது அது பற்றி பேச வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு படியுங்கள்...

 பாடநூல்களைப் படிக்கும்போது எந்த பாடத்திலும் தோல்வியடையாமல் குறிப்பிட்ட சதவிகித மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு படியுங்கள்...

 திரைப்படங்கள் கலை இலக்கியங்களை அனுபவிக்கும்போது மாதம் ஒரு நாடகமாவது, ஒரு பாடலாவது, ஒரு ஓவியமாவது அல்லது இலக்கியக் கலை அறிவியல் படைப்புகளில் ஏதேனும் ஒரு புதிய படைப்புகளையாவது வழங்க வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொண்டு செயல்படுங்கள்...

 ஒரு மாதத்திற்குள் என்பதுதான் கால எல்லை என்று கருதாதீர்கள்.

 ஒரு மணி நேரத்திற்குள் 

 ஒரு நாளுக்குள்

 ஒரு வாரத்திற்குள்

 ஒரு வருடத்திற்குள்

 என்பதெல்லாம் கால எல்லைகள்தான். எல்லைகளை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

 உங்கள் தனி திறன்களுக்கும், முயற்சிகளுக்கும், சமூகத் தேவைகளுக்கும் ஏற்றபடி உங்கள் செயல் தகுதிகள் அமைய வேண்டும்.

 கால அளவை இரண்டு வகையில் புரிந்து கொள்ளுங்கள்.

 ஒன்று, குறுகிய கால எல்லை .

 இரண்டு, நீண்ட கால எல்லை. 

 ஒரு வருடத்திற்குள் உட்பட்ட கால எல்லையைக் குறுகிய கால எல்லையாகக் கருதலாம். ஒரு வருடத்திற்கு மேற்பட்ட கால எல்லையை நீண்ட கால எல்லையாகக் கருதலாம்.

 நீண்ட கால எல்லையில் வாழ்நாள் இலக்குகளும் செயல் தகுதியாக அடங்கும். தன் வாழ்நாளிற்குள் தன்னையும், சக மனிதர்களையும், மனித குலம் முழுவதையும் முன்னேற்றுவதற்காக எத்தகைய காரியங்களைச் செய்து முடிக்கப் போகிறீர்கள் என்பதையும் தீர்மானித்துக் கொண்டு செயல்படுங்கள்…

 இந்தத் தகுதி மிக்க செயல்கள்தான் உங்களையும் உங்கள் உலகையும் அழகாக மாற்றும்.

 வகுப்பறையில் அழகு என்பது மாணவர்களின் அறிவு தான்.

 அழகு ஒருபோதும் பொருள்களில் இருப்பதில்லை. பார்ப்பவர்களின் கண்ணோட்டங்களில் வெளிப்படுவதுதான் அழகு. ஆனால், பரிபூரணமான பேரழகு உங்கள் உருவத்தில் குடி புகுந்து கொள்ள முடியும். நீங்கள் உங்கள் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் மனித குல மேன்மைக்கு உதவும்படி பேரன்பினாலும் பேரறிவினாலும் தகுதிப்படுத்திக் கொண்டால் முடியும்.

 மனித குலத்தின் இதயம் இசைப்பதைக் கேளுங்கள்...

 தலைமுறைகளின் அழகான உலகத்தை உங்கள் கனவுகளால் அரங்கேற்றத் துடிக்கிறது!

வெளிவந்த விவரம்

06 ஏப்ரல் 2026

 


http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/49325-arravum-karrar-arivutaiyar

 

 

Sunday, April 5, 2026

டப்பிங் - கன்னித்தீவு பொண்ணா - யுத்தம்செய் படப்பாடல்

 ராணித்தேனி நீதான் கல்லூரிக்கு வாம்மா 

 ஒன்றுபட்டு உலகம் போற்ற உயர்த்தி காட்டமா- இவன்
 கஞ்சா போட்ட வாய இடிச்சு திருத்தி காட்டமா 

 சட்டை டவுசர் போட்ட ஆடு மாடு போல 
 உரிமையா உன்ன உரசிட்டு போறான் 

 நீ நல்லுலக தேரு
 இவன் அந்தக் கால சரக்கு 
 மனித குலம் போற்றும் 
 ஒரு உத்தமனை ஏத்து ( ராணித்தேனி)

 நம்ம நாடு பாரு பல நோயில் பட்டு போச்சு 
 நட்பின் வீரம் காட்டு இது மக்கள் கேட்கும் வாக்கு

 பப்ஜி போதைக்குள்ள வீரம் காட்டாதே 

 படிச்சா புரியாத வாத்து கூட்டம் நீ
 பொறுப்பா பழகாத பொறுக்கி கூட்டம் நீ 
 கூட்டா நடந்தாலும் குரங்கு கூட்டம் நீ 
 மதிப்பா நடக்காத மந்தை கூட்டம் நீ

 உன் கெட்டத்தனம் செத்தா நான் ஆதித்தாயா வருவேன்  
 நீ மக்கள் துரோகியானா நான் கொற்றவையாய் நிற்பேன் 
( ராணித்தேனி)

 பசிச்சா சோறு தினம் ஊட்டி விட உழவு 
 தொழில்நுட்பம் நூறு தினம் நல்லுலகக் கனவு 

 லாபவெறி பேயிக்கிட்ட நாட்டை விற்காதே

 தடுக்கி விழ வைக்கும் தான்தோன்றி நீ 
 காட்சி போதையில செத்துப் போற நீ 
 ஒப்புக்கும் விளையாத வெட்டி வேலை நீ  
 திருத்தி வாழ்ந்தால்தான் மனித குலம் நீ

 நீ மண்ணின் மக்களோடு நின்று உண்மை வழி தேடு
 தாய்தலைமை பூமி பாடும் நல்லுலகப் பாட்டு 

 ராணிதேனி நீதான் கல்லூரிக்கு வாம்மா 
 ஒன்றுபட்டு உலகம் போற்ற உயர்த்தி காட்டமா -அவன்
 கஞ்சா போட்ட வாய உடச்சு திருத்தி காட்டமா 

 சட்டை டவுசர் போட்ட ஆடு மாடு போல 
 உரிமையா உன்ன உரசிட்டு போறான் 

 நீ நல்லுலக தேரு
 இவன் அந்தக் கால சரக்கு 
மனித குலம் போற்றும் 
 ஒரு உத்தமனை ஏத்து ( ராணித்தேனி)

Monday, March 16, 2026

ஏமரா மன்னர்கள்

 

ஏமரா மன்னர்கள்

முனைவர் புதியவன்

 

கல்லூரியில் மாணவர்கள் குறைவு. மந்தைகள்தான் அதிகம். வகுப்பில் பாதிக்கும் மேல் மந்தைகள். மனிதர்கள் என்று ஒப்புக்கொள்ள நான்கு மாணவர்கள் உண்டு. மாணவர்கள்தான் என்பதற்கு எட்டு மாணவர்கள் உண்டு. மற்ற பதினெட்டும் கால்நடை மந்தைகள்தான். 

       வகுப்பை நெருங்கும்போதே துப்பாக்கி வன்முறை சத்தங்கள் துளைத்துக் கொண்டிருக்கும். உள்ளே நுழைந்தால் ஆறு மாணவர்களாவது காட்சி போதை வன்முறையில் செத்துக் கொண்டிருப்பார்கள். பையன்களும் பெண்களும் தோள் மேல் கை போட்டு அமர்ந்திருப்பார்கள். உரசிக்கொண்டு சிரித்திருப்பார்கள். பொது இடங்களில் தொட்டு பேசுவது எங்களின் உரிமை என்பதற்காக உரசி பழகுவதை நடைமுறையாக மாற்றியுள்ளார்கள் .

உள்ளே நுழைந்து விட்டேன். என்னை அவர்கள் கவனித்துக் கொள்ளவில்லை. அவர்கள் உதட்டில் இருந்து துப்பிய போதை வஸ்துகள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. நான் கவனித்தேன். குரல் எழுப்பி வணக்கம் சொன்னேன். பத்து மாணவர்களைத் தவிர மற்றவர்கள் தங்கள் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளவில்லை. மெதுவாக சிரித்தபடி அலட்சியம் மாறாமல் வகுப்பறை ஒழுங்கிற்கு மாற முயல்கிறார்கள்.

நான் முதல் மூன்று நிமிட சிந்தனையைத் தொடங்கினேன். 

‘நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை’ 

 இதற்கு விளக்கம் சொல்லுங்கள் என்று கேட்டேன். பேச எழுந்த நல்ல மாணவர்களைப் பேச அனுமதிக்காமல் அமைதிப்படுத்தினேன். என் இலக்கு மந்தைகளை எழுப்புவதுதான். எருமை மேல் மழை பெய்தது போல கிடந்தார்கள்.

 காட்சி போதையில் செத்துக் கொண்டிருந்தவர்களை ஒவ்வொருவராக எழுப்பினேன். அவர்கள் பதில் பேசாமல் அலட்சியமாக எழுந்து நின்று சிரித்துக் கொண்டிருந்தார்கள். தொட்டு பேசும் உரிமைக்காக உரசி பேசும் கிளர்ச்சியாளர்களையும் ஒவ்வொருவராக எழுப்பினேன். அமைதியாக எழுந்து மட்டும் நின்றார்கள். பதிலைக் கேட்டால் பல்லைக் காட்டி சிரித்தார்கள். பல்கலைக்கழகம்போல மிடுக்காக இருக்கிறார்கள். மூளையை வளர்க்காமல் விதவிதமாக முடியை மட்டும் வளர்க்கிறார்கள். மாணவர் போர்வையில் ஆட்டு மந்தைகளாகத் திரிகிறார்கள். குரங்கு கூட்டம் போல சேட்டை செய்கிறார்கள். கருத்துகளற்ற மந்தைகளின் ஓசைகளில் கத்துகிறார்கள். மாணவர் தகுதிக்கு எந்த ஒரு கருத்தையும் பேசக்கூடத் தெரிவதில்லை. 

நான் விளக்கத் தொடங்கினேன் அமர்ந்திருக்கும் இந்த 12 மாணவர்கள் பொருட்டு உங்கள் எல்லோருக்கும் மாணவர் என்ற மரியாதை கிடைக்கிறதல்லவா. அந்த மரியாதைதான் மழை. அந்தப் பன்னிரு மாணவரும் நல்லவர்கள் எனில் எல்லோரும் யார்? உங்கள் எல்லாரையும் பற்றி துணைத் தலைவர் கேட்டார்கள்.

“மாணவர்களை சமாளிக்க முடிகிறதா?”

நான் உங்களைப் பெருமையாக பேசினேன்.

நல்ல ஆச்சரியமான மாணவர்களாக இருக்கிறார்களே என்றேன்.

       “இருக்க வாய்ப்பில்லையே” என்பது போல துணைத்தலைவர் வியந்தார்கள் நான் விளக்கத் தொடங்கியதும் ஆச்சரியத்தைக் கலைத்துக் கொண்டு சிரிப்பில் ஆழ்ந்தார்கள். அவர் சிரிப்பில் உயிரோசை அடிவயிற்றிலிருந்து இசைத்துக் கொண்டிருந்தது.

மாணவர்களின் கண்களில் ஒரே ஆச்சரியம். இந்த ஆள் நம்மைப் பற்றி என்ன சொல்லி இருப்பான் என்ற கேள்வி அவர்களுக்கு. கேள்விக்கு விளக்கம் சொல்வது என் தொழிலாயிற்றே. துறை தலைவரிடம் சொன்னதை அப்படியே சொன்னேன்.

1. ஆடு மாடு பன்றிகள் எல்லாம் வண்ண வண்ண உடை உடுத்தி அலங்காரம் செய்யுமா! 

2. உடுத்துன உடைகளோடு பொது இடத்தில் ஆம்பள பொம்பளையா உரசிக்கிட்டுத் திரியுமா! 

3. தான்தோன்றித்தனம், அலப்பறை, அலட்சியம், ஆரவாரம் அனைத்தையும் வகுப்பில் அமர்த்தபடி செய்து காட்டுமா! 

4. களத்துல சண்டை போட பயந்துட்டு, திறன் பேசிய எடுத்து வித்தை காட்டி  சாகுமா! 

5. உதட்டுல போதைய வைத்து, மூளைய அடகு வைத்து, பைத்தியம்போல திரியுமா! 

6. வயிறு கலக்குனா கக்கூஸ்லபோய் சாணி போடுமா! 

 நம்ம வகுப்புல இது எல்லாம் நடக்கிறது ஆச்சரியம் என்றேன்.

 வகுப்பின் சிரிப்பலைகள் அவமான கரையைக் கடந்து அடித்தன. வகுப்பிலிருந்த மந்தைகளுக்கு மண்டையில் சிறிது விளக்குகள் எரிந்தன. இவர் நம்மை அவமானப்படுத்துகிறார் என்பதுபோல கண்களில் சிலர் பொங்கினார்கள். கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஒன்று உயிர் வந்தது போல் கேள்வி கேட்டது. 

‘பொது இடத்தில் ஆம்பள பொம்பளையா உரசிட்டு திரிகிறோம் என்று எப்படி சார் நீங்க சொல்லலாம்!’

 நான் உணர்த்த தொடங்கினேன். 

 பொது இடங்கள் ஆணுக்கும் பொண்ணுக்கும் சமமாக இல்லையே. வேறுவேறு மாதிரி இருக்கின்றன. பெண்களுக்கு ஆபத்தாகவும் ஆண்களுக்கு சாதகமாகவும் இருக்கின்றன. பொது இடங்களில் பொது ஒழுங்கை காப்பாற்றுவதற்கும் மனித உறவுகளை உயர்த்துவதற்கும் உரிய நடத்தைகளுடன் நடந்து கொள்கிறீர்களா. அல்லது நட்பு என்ற போர்வையில் பாலிச்சைக்குப் பலியாகிறீர்களா! 

ஊர் மைதானங்களில் பெண்களுக்குச் சம உரிமை கிடைக்கல …

வீட்டு வேலைகளில் ஆண்களைச் சமநிலைக்கு உயர்த்தல …

வேலை வாய்ப்புகள் பெண்களுக்குச் சமநிலையாக மாறல…

கல்வித் திறமைகளில் சமநிலைக்கு ஆண்கள் இன்னும் முயலல… 

 

பெண்களும் குழந்தைகளும் வாழத் தகுதி இல்லாத உலகத்தில் வாழ்கிறீர்களே!

இந்த அவமானத்தில் உங்களுக்கு பங்கு இல்லையா… 

ஆண்களை ஒழுக்கக்கேடானவர்களாக வளர்த்திருப்பதன் விளைவால் அடைந்துள்ள அவமானம்! 

பெண்களை கண்ணியமிக்க வீரர்களாகவும் சமூக ஆளுமைகளாகவும் உயர்த்தாததன் விளைவால் அடைந்துள்ள அவமானம்! 

ஒழுக்கமுள்ள ஆண்களை உருவாக்க நீங்கள் என்ன முயற்சியில் ஈடுபடுகிறீர்கள்! 

வீரமிக்க அறிஞர்களாகப் பெண்களை உருவாக்க நீங்கள் என்ன முயற்சிகளில் ஈடுபடுகிறீர்கள்! 

 ஒழுக்கக் கேடான ஆண் சமூகத்தை உரசிக்கொண்டு ஒழுக்கமுள்ள தலைமுறையை எப்படி உருவாக்குவீர்கள்?

 சமூக ஒழுக்கமற்ற ஆண்களின் உரசல்கள் பாலிச்சை எல்லையில் நின்று விடும். 

 உரசல்களை அங்கீகரிக்கும் பெண்மையின் விளைவுகள் தலைமுறையைச் சுமப்பதில் பலியாகும். 

 தலைமுறைகளின் பாதுகாப்பான உலகம் பற்றியக் கனவுகளும் திட்டங்களுமே மனித உணர்ச்சிகளின் அடிப்படை 

வெறும் பாலிச்சை உரசல்களை மட்டுமே மனித உறவுகளாக அங்கீகரிக்க முடியாது! 

 பொது இடங்களில் உங்கள் நடத்தைகள் கண்ணியமிக்க உறவுகளாக இருக்கின்றனவா என்பதை பரிசோதியுங்கள்.

 ஆண்களின் முதுகுக்குப் பின்னால் அலங்காரப் பொருள்களாக வளராமல் தலைமுறையைப் பாதுகாக்கும் வீரர்களாகவும் அறிஞர்களாகவும் வளர்வதுதான் பெண்களுக்கு அழகு என்பதை உணர்த்துங்கள். 

அடாவடியாகவும் தற்குறிகளாகவும் வளராமல் சமூக அக்கறையும் பொறுப்பும் நிறைந்தவர்களாக வளர்வதுதான் ஆண்களுக்கு அழகு என்பதை உணர்த்துங்கள். 

ஒவ்வொரு வினாடியும் உலகின் மையங்களில் பாலுறவு வன்முறைகளும் படுகொலைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 

குழந்தைகள் பெண்கள் மீதான ஒழுக்கமும் பாதுகாப்பும் மரியாதையும்

 நிறைந்த நல்ல சமூகத்தை உருவாக்காமல் உங்கள் தலைமுறைகளுடன் நீங்கள் நிம்மதியாக வாழ முடியாது. 

 நட்பு என்ற போர்வைக்குள் உங்கள் நடத்தைகளின் உளவியல் பாலுறவு ஆர்வங்களாகவே வெளிப்படுகின்றன. 

 முதலில் பெண்கள் உங்களுக்குள் நெருக்கமும், இறுக்கவும், நேர்மையும், பாதுகாப்பும் நிறைந்த நட்பு சங்கிலிகளை உருவாக்க முயலுங்கள். 

 ஒழுக்கமற்ற ஆண்கள்கூட தங்களுக்குள் நட்பு சங்கலியை எவ்வளவு இறுக்கமாக பற்றி இருக்கிறார்கள் என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். 

உங்கள் நட்பு சங்கிலி அறுபடாத அளவிற்கு பாதுகாப்பாக இருங்கள். எதிர்பாலின நட்பு உங்கள் நட்பு சங்கிலியை துண்டிக்க முடியாத அளவிற்கு பலமாக இருங்கள். ஆண் பெண் நட்புறவில் உரிமைமிக்க நட்புறவை உருவாக்க முயலாதீர்கள். பாதுகாப்பான நல்லுலகை உருவாக்கும் வரை உரிமை மிக்க நட்புறவு என்பது வெறும் கற்பனையே என்பதை புரிந்து கொள்ள முயலுங்கள்.  ஆண்களும் பெண்களும் அறிவார்ந்த நண்பர்களாக நிலை பெற முயலுங்கள்.

 

 ‘அதுக்காக அவமானப்படுத்தி பேசலாமா சார்’ 

 

 நான் கைதட்டலுடன் அங்கீகரித்துப் பேசினேன்.

வேறு எப்படி பேச முடியும்? 

 மனுசனா பிறந்தா மானம், ரோசம், சூடு, சொரணை எல்லாம் இருக்கணும். அப்பதான் சுயமரியாதையோட வாழ்வதாக அர்த்தம். அவமானப்படுத்தலாமா என்று கேட்கும் நீங்கள் சுயமரியாதைக்கான தகுதியோடு வாழ்கிறீர்களா? சுயமரியாதைக்கு சமூக மரியாதை அடிப்படை. சமூக மரியாதைக்கு மனிதத்தகுதி அடிப்படை.  மனிதத் தகுதி என்பது திட்டமிடப்படாத மாற்றங்களுக்கு இடையில் திட்டமிட்ட மாற்றங்களுக்காக ஒன்றுகூடி சிந்தித்து உழைப்பதாகும். நீங்கள் மனிதத் தகுதியோடு இருக்கிறீர்களா? 

 

 என்ன சார் தகுதின்னு கேக்குறீங்க! 

 

 நம்ம வகுப்புல மாணவர்களுக்கான தகுதி உங்களுக்கு இருக்கா இல்லயா? 

 

 சலசலன்னு கத்துறீங்க. எல்லாருக்கும் புரியும்படி பேசச் சொன்னால் ஆடு மாடுகள்போல மந்தையாக நிக்கிறீங்க. 

திறன்பேசி குள்ள புதைஞ்சு சாகுறீங்க. சூழலை புரிந்து வாழும் சமூக அறிவு சுத்தமா இல்லவே இல்ல. 

 உங்கள் சொந்த வாழ்க்கை முதல் கல்வி, சமூகம், இலக்கு எதையும் உங்களால் புரிந்து கொள்ளவே முடியல 

 புரிதலும் பேச்சும்தான் மாணவர்களின் அடிப்படைத் தகுதி. அதற்கே லாயக்கற்றவர்களாக இருக்கிறீர்களே!

 பிறகு எப்படி கல்வித்திறன், சிந்திக்கும் திறன், கலைத்திறன், அறிவியல் திறன், கற்பனை திறன், முடிவு எடுக்கும் திறன், செயல்திறன் இன்னும் பலவிதமான பன்முகத் திறமைகளைப் பெற்று மாணவர்களாகத் தகுதி அடைவீர்கள்.

 

 எந்த வகுப்பிலாவது நீங்கள் ஆர்வத்துடன் கவனித்ததுண்டா!

 வாசிப்பு, உரையாடல், கலந்துரையாடல், விவாதம், எழுத்து, பரிமாற்றம் போன்ற கல்வி செயல்பாடுகளில் ஈடுபட்டதுண்டா நீங்கள்!

 புரிதல் திறன் மாணவர்களின் முதல் தகுதி. ஆசிரியர் அழகாக பேசினாரா என்பது இரண்டாவதுதான். ஆசிரியர் எப்படி பேசினார் என்பதை விட என்ன பேசினார் என்பதை புரிந்து கொள்ள என்றாவது முயற்சி செய்து உள்ளீர்களா? 

 

 உதட்டில் போதை வஸ்துவை ஒதுக்கியபடி மயங்கி சாகிறீர்கள். மேசை மேல் மூளையை புதைத்துத் தூங்குகிறீர்கள். திறன் பேசி காட்சிகளில் முடங்கி போகிறீர்கள். நீங்கள் எப்போதாவது மாணவர்களுக்கான தகுதிகளுடன் இருந்திருக்கிறீர்களா? 

 

‘சார், யாரு தப்பு செஞ்சாங்களோ அவங்கள பேசுங்க சார். எல்லோரையும் எப்படி சார் பொதுவாக பேசலாம்’ 

 

 அது எப்படி வாழை இலையில் விதவிதமா உணவு பரிமாறி ஓரமா மலத்தை வச்சா திண்ண முடியுமா! 

 

 உணவைப்போல உணர்வுபூர்வமானது வகுப்பறை. யாரோ தப்பு செய்வதாக பலிபோட்டுவிட்டு, நீ நழுவப்பார்க்கிறீயே இதுதான் ஒழுக்கமா! உன் நண்பர்கள் செய்கிற தப்புக்கு நீயும்தான் பொறுப்பு. வகுப்பறையின் மரியாதையையும் மனிதகுலத்தின் மரியாதையையும் எல்லோரும்தான் காப்பாற்ற வேண்டும். யாரோ ஒருத்தன் செய்யும் தவறால் வகுப்பின் முழு மரியாதையும் கெட்டுப் போகிறதே. உங்கள் எல்லோரின் மரியாதையையும் கெடுக்கும்படி நடந்து கொள்பவரை நீங்கள் எப்படி அனுமதிக்கிறீர்கள். உனக்கு ரோசம் வேணாமா!

 உன் நண்பர்கள் ஒழுக்கக்கேடாகத் திரிவதை நீ எப்படி அனுமதிக்க முடியும்? 

 அவர்களை ஒழுக்கப்படுத்துவது உங்கள் எல்லாருக்குமான கடமை. 

பெத்த பிள்ளையாய் இருந்தாலும் தோளுக்கு மேல் வளர்ந்துட்டா தோழர்கள். அதனால்,  அப்பன் ஆத்தாவாக இருந்தாலும் கண்டிக்க முடியாது. கண்டிக்கின்ற உரிமை நண்பர்களுக்கு மட்டும்தான் இருக்கு. நீ கண்டித்துப் பழகு. ஒழுக்கமா மரியாதையா இருக்கச் சொல்லு. அன்பா சொல்லிப் பாரு. சரி படலேன்னா நாலு அடி அடிச்சு மரியாதைய காப்பாத்திக்கும்படி நடந்துக்க சொல்லு. ஒத்து வரலைன்னா வகுப்பறை முழுவதும் அவரை புறக்கணித்து தனிமை படுத்துங்க. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கச் சொல்லி கோரிக்கை கொடுங்க.

 எல்லா ஒழுக்கக் கேட்டுக்கும் நீங்களே உறுதுணையாக இருந்துகிட்டு யாரோ தப்பு செய்வதற்கு நான் பொறுப்பாக முடியாது என்று எப்படி விலகி நிற்க முடியும் ? 

 

‘மத்தவங்க சுதந்திரத்துல தலையிடக்கூடாதுல சார்‘

 

 தலையிடக்கூடாதுதான். ஆனால், நண்பர்கள் மத்தவங்களா? அவர்கள் செய்கிற பொறுக்கித்தனங்களுக்குப் பேரு சுதந்திரமா? 

 

 உன் நண்பர்களைப் பற்றி சொல்லு நீ யாருன்னு நான் சொல்றேன்னு ஒரு வாசகம் உண்டு. நீரின் உயரம்தான் தாமரையின் உயரம். உன் நண்பர்களின் மரியாதைதான் உன்னுடைய மரியாதை. உன்னுடைய மரியாதையைக் காப்பாற்ற வேண்டுமா உன் நண்பர்களை மரியாதைக்குரியவர்களாக மாற்று. 

 

 சுதந்திரம் என்பது பொறுக்கித்தனமோ, தான்தோன்றித்தனமோ கிடையாது. சுதந்திரம் என்பது சுயக்கட்டுப்பாடு. சுயக்கட்டுப்பாடு என்பது சமூகக் கட்டுப்பாடுகளின் அங்கம். சமூகக் கட்டுப்பாடுகளை ஒழுங்கமைக்கின்ற பண்புதான் சுதந்திரம். சமூகப் பொறுப்பும் அக்கறையும் அறிவும் இல்லாதவர்கள் எப்படி சுதந்திரமாக வாழ முடியும்! 

 மற்றவர்களுடன் தலையிடாமல் மனிதராக வாழ முடியுமா?

 

யார் மற்றவர்கள்? உங்களை சுற்றியுள்ள மற்றவர்கள் எல்லோரும் உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மனித உறவுகள்தான். சக மனித உறவுகளை மறுத்துவிட்டு எப்படி ஒற்றுமையோடு வாழ முடியும்! 

 

மனிதர்களோடு ஒற்றுமையைப் பழகாமல் திறன் பேசி வன்முறை விளையாட்டுகளில் செத்து தொலைகிறீர்களே!

காட்சி போதை வன்முறைகளில் செயல் திறனை கொலை செய்கிறீர்களே! ஆனால், வீர சாகசத்தை முடித்தவர்கள்போல ஆரவாரம் செய்கிறீர்கள். 

மக்களின் துயரங்களைப் போக்க, மனித குலத்தை முன்னேற்ற, ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ, உங்கள் வீரம் என்றாவது பயன்பட்டது உண்டா! 

சாதி வெறியர்கள் ஆணவப் படுகொலைகள் செய்த போது அவர்களை தடுத்து சண்டையிட்டு உங்கள் வீரத்தின் முன்னால் மண்டியிட வைத்தது உண்டா! 

சமூக குற்றவாளிகள் உங்களுக்கு அஞ்சும்படி வீரத்தை நிரூபித்ததுண்டா! 

       உங்களுக்குச் சோறு போடும் விவசாயிகளும், சேவை செய்யும் தொழிலாளர்களும், நீங்கள் மூச்சு விடுவதற்காக உலகை சுழற்றிக் கொண்டிருக்கும் ஏழை எளிய உழைக்கும் மக்களும் அதிகாரத்தின் இரக்கமற்ற வன்முறைகளை எதிர்த்து சாகிறார்களே…

 உங்கள் வீரத்திலிருந்து அன்பைப் பிரசவித்து அவர்களின் வாழ்விற்கு நம்பிக்கையை பரிசளித்ததுண்டா!

உங்கள் அறிவான வீரம் அநீதியின் அடிவயிற்றில் உயிர்பயத்தைத் தூண்டியது உண்டா! 

 சாதிவெறி, மதவெறி, இனவெறி, லாபவெறி, போரவெறி எல்லாம் மனித குலத்தை வேட்டையாடுகின்ற ஓநாய்கள். 

 இந்த ஓநாய்கள் கால் இடுக்கில் வால் குலைந்து அஞ்சிச் சாகும்படி உங்கள் வீரத்தை மனிதகுல பேரன்பின் பேராயுதமாக என்று நிலைநாட்டப் போகிறீர்கள்? 

திறன்பேசி பிம்பபோதையில் செத்து விளையாடும் மனநோயாளிகளாகத் திரிவதில் இருந்து தப்பித்து வெளியே வாருங்கள். 

அன்றுதான் உங்கள் வீரத்தின் முன்பு சமூக அநீதிகள் மண்டியிட்டு சாகும்!

மனித குலத்தின் முன்னேற்றம் உங்கள் வீரத்தை ஒப்புக் கொள்ளும் !

 மனிதர்களை மற்றவர்களாக கருதாதீர்கள். மனித உறவுகளில் பாசமிக்க வீரர்களாகத் தலையிடுங்கள். உங்கள் நண்பர்களைச் சரியான மனிதர்களாக உருமாற்றப் போராடுங்கள். 

 

இயற்கைக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொண்ட மிருகங்கள் உயிரின வரலாற்றில் அழிந்த கதைகள் உள்ளன. ஆனால், தங்களுக்கு ஏற்றபடி இயற்கையை மாற்றத் தொடங்கியதால்தான் மனிதர்கள் தலைமுறை கடந்து இன்றும் வாழ்கிறார்கள். தன்னையும், தன் சகமனிதர்களையும், சமூகத்தையும், இயற்கையையும் திட்டமிட்ட மாற்றங்களுக்கு ஆட்படச் செய்வதுதான் மனித இயற்கை. நீங்கள் மனிதர்கள்தானே! உங்களையும் உங்கள் நண்பர்களையும் மாற்ற முயலுங்கள். 

உங்கள் தகுதிக்கும் பொறுப்புக்கும் எது சமூக ஒழுக்கமோ மரியாதையோ அதை உருவாக்க முயலுங்கள். தனித்தனித் தீவுகளாகவும் தற்குறிகளாகவும் திரிவதை மாற்றுங்கள். மனித குலத்தை உயர்த்துகின்ற உறுதியான கருத்துக்களைச் செயல்படுத்த முயலுங்கள். சிந்தனை திறனும் செயல் திறனும் இல்லாமல் நடைபிணமாக வாழ்வதற்கு வெட்கப்படுங்கள்.

தற்குறிகளும் பொறுக்கிகளும் வெட்கமின்றி சுதந்திரமாகத் திரிகிறார்கள். சரியானவற்றைச் செயல்படுத்த உங்களுக்கு ஏன் வெட்கம். சுதந்திரமான மனநிலயுடன் தயக்கம் இன்றி செயல்படுங்கள். நீங்கள் எதை செய்தாலும் முடியப்போவது இரண்டில் ஒன்றுதான். ஒன்று, மனித குலத்திற்கு கொள்ளி வைக்கப் போகிறீர்கள். இரண்டு, மனிதகுலத்தை லாப வெறியிலிருந்து காப்பாற்றி தலைமுறைகளுக்கு நல்லுலகமாக பரிசளிக்கப் போகிறீர்கள். நீங்கள் பேரன்பாளர்கள். பரிசளிப்பதற்காகப் பாடுபடுங்கள். 

நண்பர்களை மனிதர்களாக திருத்தினால் உலகையே பரிசளிக்கலாம். மாணவர்களாக அமர்ந்து உள்ளீர்கள். மனித குலத்திற்குத் தலைவர்களாக எழுந்து செல்லுங்கள்!

       இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும்  (குறள்-448)

 உங்களை இடித்துரைக்கும் இடத்தில் உள்ள அமைச்சர்கள் நாங்கள்.

மன்னர்கள் நீங்கள்தான்.

வகுப்பை முடித்துவிட்டு புன்னகையுடன் விடைபெற்றேன். எனக்கு ஆச்சரியம். வழக்கத்திற்கு மாறாக எல்லோரும் எழுந்து நின்று விடைகொடுத்தார்கள். மனித குலமே விழித்து எழுந்தது போல இதயத்தில் உணர்ந்தேன்.

 

 

Sunday, January 25, 2026

நாடகம் - நெகிழி உலகம் -

 

நாடகம்

-    நெகிழி உலகம் -

 

முனைவர் புதியவன்

 

 காட்சி 1 

 மேடையின் மையத்தில் நெகிழியால் மூச்சு திணறுகிறாள் பூமித்தாய்

 மேடையின் எல்லை வட்டத்தில் பிற  நடிகர்கள் 

 

( டப்பிங் பாடல்_ கண்கள் ஒன்றாக கலந்ததா-

ஒவ்வொரு தனிநபராக பாடலைத் தொடங்க குழுவின் பாடலாக முடிவு பெற வேண்டும்.)

 நெகிழிப் பொருள் எங்கும் குவியுதா

 மலைப்பாம்பென உலகை விழுங்குதா 

 லாபம் இசை... சிலுசிலுத்தே...

 தாய் நிலமோ... பதைபதைத்தே....

 மண்ணை மலடாக்கி 

கடலை விஷமாக்கி 

உயிரை முடிக்கும் அழிவே

நெகிழிப் பொருள் எங்கும் குவியுதா

 மலைப்பாம்பென உலகை விழுங்குதா

 

காட்சி_2

தாய்_ மூச்சு... மூச்சு திணறுது.. செல்லப் பிள்ளைகளா மூச்சு திணறுது

 

மக்கள் _ பிளாஸ்டிக்ன்னு சொல்றோமே இந்த நெகிழி 

அடடடடா 

நெகிழி உற்பத்தி நமக்கு ரொம்ப வசதியா இருக்கு 

 

தாய்_ மூச்சு... மூச்சு திணறுது.. செல்லப் பிள்ளைகளா மூச்சு திணறுது

 

 மக்கள்_ நெகிழி உற்பத்தி பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது  

 

தாய்_ மூச்சு... மூச்சு திணறுது.. செல்லப் பிள்ளைகளா மூச்சு திணறுது

 

 மக்கள் 1_ கலர் கலரா பொருளை விக்க.. சாப்பாடு மடிக்க.. காபி குடிக்க எல்லாத்துக்கும் நெகிழ்வா இருக்குதப்பா நெகிழி 

 

 மக்கள் 2_ அட சாப்பாடுக்கு மட்டுமா, பஸ்ல வாந்தி வந்துட்டாலும் நெகிழிதான் A1

 

 தாய்_ மூச்சு... மூச்சு திணறுது.. செல்லப் பிள்ளைகளா மூச்சு திணறுது

 

 அரசியல்வாதி- நெகிழி வசதியாகதான் இருக்கு, ஆனால் 

(தாயைக்காட்டி அழுகிறார் )

 

 தொழிலதிபர்- நெகிழி பணமா கொட்டுதுதான், ஆனால் 

( தாயைக்காட்டி அழுகிறார்  )

 

 மக்கள் _ நெகிழி எல்லாத்துக்கும் A1தான், ஆனால் 

( தாயைக்காட்டி அழுகிறார்  )

 

 காட்சி_3

 மேடையில் நடிகர்கள் பின்னணி இசையுடன் மீன், ஆமை, குரங்கு, பறவையாக மாறித் திரிகிறார்கள் 

 

தாய் _ கடல் முழுதும் நெகிழி குப்பைகள்

 லாபவெறி மனிதர்கள் கடலை களவாடுகிறார்கள் 

 

 உயிரினங்கள் _ இந்தக் கடல் எங்களுக்கு உரிமை இல்லையா! 

 

தாய்_ மலைகள் முழுதும் நெகிழி குப்பைகள்

 லாபவெறி மனிதர்கள் மலையை களவாடுகிறார்கள் 

 

 உயிரினங்கள்_ இந்த மலை எங்களுக்கு உரிமை இல்லையா !

 

தாய்_ மண் முழுதும் நெகிழி குப்பைகள் 

 லாபவெறி மனிதர்கள் மண்ணை களவாடுகிறார்கள்

 

 உயிரினங்கள்_ இந்த மண் எங்களுக்கு உரிமை இல்லையா!

 

 காட்சி _4

 நெகிழியால் வாடும் தாயைச் சுற்றிலும் பின்னணி இசை உடன் நடிகர்கள் வேகமாக நடக்கிறார்கள். ஒவ்வொரு இசையின் முடிவிலும் திட்டமிடப்பட்ட  ஒருவர் வசனம் பேசுகிறார் 

 

 வசனம் 1_ நேத்து வரைக்கும் நெகிழி இல்லாமல் நிம்மதியாத்தான வாழ்ந்தோம் 

 இன்னைக்கு என்னவாம் நெகிழி  நெகிழின்னு நீட்டுறீங்க 

 

குழு_ அதானே நெகிழி  நெகிழின்னு நீட்டுறீங்க  

 

 வசனம் 2_ பாத்திரத்தில் சாப்பாடு எடுத்து சுடச்சுட இலையில சாப்பிட்டதுல யாருக்காவது புற்று நோய் வந்திருக்கா! 

 

 குழு_ யாருக்காவது புற்று நோய் வந்திருக்கா !

 

 வசனம் 3_ நெகிழி பொருள்களில் சுடச்சுட டீ காபி சாப்பாடுன்னு இப்ப  கணக்கில்லாமல் தின்னுறார்களே..

புற்றுநோயிலிருந்து புதுசு புதுசா நோய் வருதே..

மக்கள் எல்லாரும் சாகணுமா 

 

 குழு_ மக்கள் எல்லாரும் சாகணுமா

 

 வசனம்_4_ நெகிழித்தாள்கள் நிறைந்து விவசாய பூமி மலடாகி போச்சு 

 பூமி விளையுமா? 

 எப்படி தின்னுவ சோத்த! 

 

 குழு_ எப்படி தின்னுவ சோத்த!

 

 வசனம் 5_ நெகிழி உற்பத்தியாலயும்தான் இந்த பூமி வெப்பமயமாகி உருகி சாகுது

குழு_ ஆமாம், வெப்பமயமாகி உருகி சாகுது

 வசனம் 6_ நெகிழி உற்பத்தியாலயும்தான் இந்த பூமி பருவகாலங்கள் சிதறிப்போகி பரிதவிச்சு சாகுது

குழு_ ஆமாம், பருவகாலங்கள் சிதறிப்போகி பரிதவிச்சு சாகுது

வசனம் 7_ நெகிழி வசதியா இருந்தா, கோடி கோடியா பணம் தந்தா

பூமிக்கு கட்டிடலாமா பாடைய! 

 

குழு_பூமிக்கு கட்டிடலாமா பாடைய!

 

வசனம் 8 _ பாலூட்டும் ஆத்தாவ சதையை அறுத்துத் திம்பிகளா !

 

குழு _ சதையை அறுத்து திம்பிகளா!

 

வசனம் 9_ நீரும் காத்தும் நிலமும் கடலும் எல்லா உயிருக்கும் பொதுச்சொத்து 

 

குழு _ ஆமாம். எல்லா உயிருக்கும் பொதுச்சொத்து 

 

வசனம் 10 _ வசதிக்கும் பணத்துக்கும் பூமியை சுருட்டினால் 

 தலைமுறை முடிஞ்சிடும் அதை எண்ணு !

 

குழு _ தலைமுறை முடிஞ்சிடும் அதை எண்ணு !

 

 காட்சி 5

 

 (விடுதலை இசையுடன் மென்மையான நடனத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு தனிநபராக பாடலைத் தொடங்க குழுவின் பாடலாக முடிவு பெற வேண்டும்.)

 

(டப்பிங் பாடல் _ கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன்...சிஸ்யா சிஸ்யா மெட்டு)

 

மனிதா மனிதா 

உலகை ரசிடா ரசிடா

 இயற்கை பணிந்தது 

செயற்கையின் வலிமை எண்ணு...

 சுழலும் உலகில் 

 உயிர்கள் சமம்தான் நம்பு !  

 விட்டுத் தொலைச்சோம் நாம் 

விட்டுதொலைச்சோம்

 நெகிழி நோயை 

விட்டுத் தொலைச்சோம்  

விட்டுதொலைச்சோம்

 நெகிழி நோயை 

விட்டுத் தொலைச்சோம் டோய்!  

 

( பாடல் இறுதியில் நெகிழி விரலில் இருந்து விடுபட்டு பறக்க வேண்டும் )

 

ஆற்றவும் கற்றார் அறிவுடையார்

  ஆற்றவும் கற்றார் அறிவுடையார் முனைவர் புதியவன்   அறிவுடையவர்கள் யார் என்பதற்கு உங்கள் விடை என்ன? மூளை உடையவர்கள் எல்லாம் அறிவுடைய...

அதிகம் பார்க்கப்பட்டவை