Sunday, January 25, 2026

நாடகம் - நெகிழி உலகம் -

 

நாடகம்

-    நெகிழி உலகம் -

 

முனைவர் புதியவன்

 

 காட்சி 1 

 மேடையின் மையத்தில் நெகிழியால் மூச்சு திணறுகிறாள் பூமித்தாய்

 மேடையின் எல்லை வட்டத்தில் பிற  நடிகர்கள் 

 

( டப்பிங் பாடல்_ கண்கள் ஒன்றாக கலந்ததா-

ஒவ்வொரு தனிநபராக பாடலைத் தொடங்க குழுவின் பாடலாக முடிவு பெற வேண்டும்.)

 நெகிழிப் பொருள் எங்கும் குவியுதா

 மலைப்பாம்பென உலகை விழுங்குதா 

 லாபம் இசை... சிலுசிலுத்தே...

 தாய் நிலமோ... பதைபதைத்தே....

 மண்ணை மலடாக்கி 

கடலை விஷமாக்கி 

உயிரை முடிக்கும் அழிவே

நெகிழிப் பொருள் எங்கும் குவியுதா

 மலைப்பாம்பென உலகை விழுங்குதா

 

காட்சி_2

தாய்_ மூச்சு... மூச்சு திணறுது.. செல்லப் பிள்ளைகளா மூச்சு திணறுது

 

மக்கள் _ பிளாஸ்டிக்ன்னு சொல்றோமே இந்த நெகிழி 

அடடடடா 

நெகிழி உற்பத்தி நமக்கு ரொம்ப வசதியா இருக்கு 

 

தாய்_ மூச்சு... மூச்சு திணறுது.. செல்லப் பிள்ளைகளா மூச்சு திணறுது

 

 மக்கள்_ நெகிழி உற்பத்தி பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது  

 

தாய்_ மூச்சு... மூச்சு திணறுது.. செல்லப் பிள்ளைகளா மூச்சு திணறுது

 

 மக்கள் 1_ கலர் கலரா பொருளை விக்க.. சாப்பாடு மடிக்க.. காபி குடிக்க எல்லாத்துக்கும் நெகிழ்வா இருக்குதப்பா நெகிழி 

 

 மக்கள் 2_ அட சாப்பாடுக்கு மட்டுமா, பஸ்ல வாந்தி வந்துட்டாலும் நெகிழிதான் A1

 

 தாய்_ மூச்சு... மூச்சு திணறுது.. செல்லப் பிள்ளைகளா மூச்சு திணறுது

 

 அரசியல்வாதி- நெகிழி வசதியாகதான் இருக்கு, ஆனால் 

(தாயைக்காட்டி அழுகிறார் )

 

 தொழிலதிபர்- நெகிழி பணமா கொட்டுதுதான், ஆனால் 

( தாயைக்காட்டி அழுகிறார்  )

 

 மக்கள் _ நெகிழி எல்லாத்துக்கும் A1தான், ஆனால் 

( தாயைக்காட்டி அழுகிறார்  )

 

 காட்சி_3

 மேடையில் நடிகர்கள் பின்னணி இசையுடன் மீன், ஆமை, குரங்கு, பறவையாக மாறித் திரிகிறார்கள் 

 

தாய் _ கடல் முழுதும் நெகிழி குப்பைகள்

 லாபவெறி மனிதர்கள் கடலை களவாடுகிறார்கள் 

 

 உயிரினங்கள் _ இந்தக் கடல் எங்களுக்கு உரிமை இல்லையா! 

 

தாய்_ மலைகள் முழுதும் நெகிழி குப்பைகள்

 லாபவெறி மனிதர்கள் மலையை களவாடுகிறார்கள் 

 

 உயிரினங்கள்_ இந்த மலை எங்களுக்கு உரிமை இல்லையா !

 

தாய்_ மண் முழுதும் நெகிழி குப்பைகள் 

 லாபவெறி மனிதர்கள் மண்ணை களவாடுகிறார்கள்

 

 உயிரினங்கள்_ இந்த மண் எங்களுக்கு உரிமை இல்லையா!

 

 காட்சி _4

 நெகிழியால் வாடும் தாயைச் சுற்றிலும் பின்னணி இசை உடன் நடிகர்கள் வேகமாக நடக்கிறார்கள். ஒவ்வொரு இசையின் முடிவிலும் திட்டமிடப்பட்ட  ஒருவர் வசனம் பேசுகிறார் 

 

 வசனம் 1_ நேத்து வரைக்கும் நெகிழி இல்லாமல் நிம்மதியாத்தான வாழ்ந்தோம் 

 இன்னைக்கு என்னவாம் நெகிழி  நெகிழின்னு நீட்டுறீங்க 

 

குழு_ அதானே நெகிழி  நெகிழின்னு நீட்டுறீங்க  

 

 வசனம் 2_ பாத்திரத்தில் சாப்பாடு எடுத்து சுடச்சுட இலையில சாப்பிட்டதுல யாருக்காவது புற்று நோய் வந்திருக்கா! 

 

 குழு_ யாருக்காவது புற்று நோய் வந்திருக்கா !

 

 வசனம் 3_ நெகிழி பொருள்களில் சுடச்சுட டீ காபி சாப்பாடுன்னு இப்ப  கணக்கில்லாமல் தின்னுறார்களே..

புற்றுநோயிலிருந்து புதுசு புதுசா நோய் வருதே..

மக்கள் எல்லாரும் சாகணுமா 

 

 குழு_ மக்கள் எல்லாரும் சாகணுமா

 

 வசனம்_4_ நெகிழித்தாள்கள் நிறைந்து விவசாய பூமி மலடாகி போச்சு 

 பூமி விளையுமா? 

 எப்படி தின்னுவ சோத்த! 

 

 குழு_ எப்படி தின்னுவ சோத்த!

 

 வசனம் 5_ நெகிழி உற்பத்தியாலயும்தான் இந்த பூமி வெப்பமயமாகி உருகி சாகுது

குழு_ ஆமாம், வெப்பமயமாகி உருகி சாகுது

 வசனம் 6_ நெகிழி உற்பத்தியாலயும்தான் இந்த பூமி பருவகாலங்கள் சிதறிப்போகி பரிதவிச்சு சாகுது

குழு_ ஆமாம், பருவகாலங்கள் சிதறிப்போகி பரிதவிச்சு சாகுது

வசனம் 7_ நெகிழி வசதியா இருந்தா, கோடி கோடியா பணம் தந்தா

பூமிக்கு கட்டிடலாமா பாடைய! 

 

குழு_பூமிக்கு கட்டிடலாமா பாடைய!

 

வசனம் 8 _ பாலூட்டும் ஆத்தாவ சதையை அறுத்துத் திம்பிகளா !

 

குழு _ சதையை அறுத்து திம்பிகளா!

 

வசனம் 9_ நீரும் காத்தும் நிலமும் கடலும் எல்லா உயிருக்கும் பொதுச்சொத்து 

 

குழு _ ஆமாம். எல்லா உயிருக்கும் பொதுச்சொத்து 

 

வசனம் 10 _ வசதிக்கும் பணத்துக்கும் பூமியை சுருட்டினால் 

 தலைமுறை முடிஞ்சிடும் அதை எண்ணு !

 

குழு _ தலைமுறை முடிஞ்சிடும் அதை எண்ணு !

 

 காட்சி 5

 

 (விடுதலை இசையுடன் மென்மையான நடனத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு தனிநபராக பாடலைத் தொடங்க குழுவின் பாடலாக முடிவு பெற வேண்டும்.)

 

(டப்பிங் பாடல் _ கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன்...சிஸ்யா சிஸ்யா மெட்டு)

 

மனிதா மனிதா 

உலகை ரசிடா ரசிடா

 இயற்கை பணிந்தது 

செயற்கையின் வலிமை எண்ணு...

 சுழலும் உலகில் 

 உயிர்கள் சமம்தான் நம்பு !  

 விட்டுத் தொலைச்சோம் நாம் 

விட்டுதொலைச்சோம்

 நெகிழி நோயை 

விட்டுத் தொலைச்சோம்  

விட்டுதொலைச்சோம்

 நெகிழி நோயை 

விட்டுத் தொலைச்சோம் டோய்!  

 

( பாடல் இறுதியில் நெகிழி விரலில் இருந்து விடுபட்டு பறக்க வேண்டும் )

 

Monday, January 19, 2026

பழந்தமிழர் உணவுப் பண்பாட்டின் படிநிலை

 

பழந்தமிழர் உணவுப் பண்பாட்டின் படிநிலை

 

 

முன்னுரை

       மனிதர்களின் உணவென்பது உடல் சார்ந்த இயங்கியலாக கருத இயலாது. மாறாக, சமூகவியல் சார்ந்த இயங்கியலாகவே காலந்தோறும் படிமலர்ந்திருக்கின்றது. குரங்கு இனத்திலிருந்து மனித இனமாகப் படிமலர்ந்து வாழத்தொடங்கிய தொல்குடி வாழ்வியலிலிருந்து உணவென்பது போர் நிலையிலிருந்து பண்பாட்டு நிலைக்கு உயர்ந்திருக்கின்றது. தொடக்ககால மனிதஇனம் சொத்துடைமை அறிந்திராத இயற்கை வழி தாய்தலைமை சமூகமாக இயங்கியது.  அக்காலம் தொட்டு நிகழும் உணவு சார்ந்த வரலாற்றை சங்க இலக்கிங்களின் வாயிலாக  அறிய முடிகின்றது.

 

தொழில்நுட்பத்திறன் எனும் மானுடசக்தி

       மனித வரலாற்றில் எந்தக் கருவிகளும் கண்டறிந்திராத காலத்தில் மனிதத்திறன் என்பது காடு சார்ந்த பொருட்களை சேகரித்து பகிர்ந்துண்ணுதல் என்பதாக மட்டுமே திகழ்ந்தது. இலை, புல், காய், கனி, கொட்டை, தேன், கிழங்கு, சிற்றுயிர்களான ஈசல், விலங்குகள் உண்டெஞ்சிய இறைச்சி, காட்டுத்தீயில் எரிந்து வெந்த இறைச்சி, கருவியின் பயன்பாடு குறித்த தற்காலிக அறிவுடன் கல்லடித்து உண்ணும் நீர்நிலை கிழிஞ்சல்கள் போன்றவைகள் தொடக்க கால உணவுகளாகத் திகழ்ந்துள்ளன.

மனிதத்திறன் என்பது தொழில்நுட்பத்திறன் சார்ந்தது. தொழில்நுட்பம் என்பது திட்டமிட்ட மாற்றங்களை உற்பத்தி செய்வதாகும். அதாவது, திட்டமிட்ட மாற்றங்களுக்காக பயன்படுத்தப்படும் மனித அனுபவம், புறநிலை எதார்த்தம் பற்றிய மனித அறிவு, இயற்கை வளங்கள் மற்றும் கருவிகள் ஆயுதங்கள் ஆகியவற்றின் உள்ளடக்கமாகும்.

உணவு உற்பத்தி என்பது கருவிகளைக் கையாளுகின்ற திட்டமிட்ட உழைப்பாக உருப்பெற்றப் பின்பு உணவிற்காக இயற்கையோடு போரிடுதல் என்ற நிலையிலிருந்து உணவைப் பண்படுத்துதல் என்ற முதல்கட்ட நிலைக்கு உண்ணும் நிலை உயர்ந்தது. மனிதர்களின் உணவு தொழில்நுட்ப நிலையிலிருந்து பண்பாட்டு நிலைக்கு உயர்தல் என்பது பாய்ச்சல் வகை மாற்றமாகும்.

தொழில்நுட்பத்தினால் விளைந்த பண்பாடு

பண்பாடு என்பது மனிதர்களால் திட்டமிட்டு பண்படுத்தப்பட்டவைகள் அனைத்தையும் உள்ளடக்குவதாகும். அல்லது சமூகப் பொருளுற்பத்தி அல்லாத அனைத்தையும் பண்பாடு என்பதாக சமூகவிஞ்ஞானம் விளக்குகின்றது.

 

குறிஞ்சித்திணை உணவுப் பண்பாடு

சேகரிப்புக் கருவிகள், வேட்டைக் கருவிகள், சிறிய அளவிளான கால்நடை வளர்ப்பு, சிறிய அளவிலான வன்புல விவசாயம் போன்றன மனிதர்களின் உணவு முறையை பாதீடு என்ற பகிர்ந்துண்ணும் பண்பாட்டு நிலைக்கு உயர்த்தியிருந்தன. மனித இன உணவுகளின் வரலாறானது தொடக்க நிலையிலிருந்து தொழில்நுட்பத் திறனுக்கேற்ப முதல்கட்ட பண்பாட்டு நிலைக்கு உயர்ந்திருப்பதை சங்க இலக்கியத்தின் குறிஞ்சித்திணை பாடல்களால் அறிய முடிகின்றது.

 

முல்லைத்திணை உணவுப் பண்பாடு

       உணவு வரலாற்றின் இரண்டாம் கட்டத்தில் எருமை, பசு, ஆடு, காளை போன்ற கால்நடைகளை மந்தைகளாக வளர்க்கும் முறை முதன்மை பெறுகின்றது. வேட்டையாடுதல், காடு சார்ந்த பொருள் சேகரிப்பு, வன்புல விவசாயம் ஆகியன முதன்மையற்றதாகின்றன. கால்நடைகளால் பெறப்படும் இறைச்சி, பால், தயிர், வெண்ணெய், நெய் போன்ற உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதும், எஞ்சிய இறைச்சியை உப்புக்கண்டம் செய்வதும், பண்டமாற்றில்  ஈடுபட்டு வேண்டியவர்களுக்குப் பொருட்களைக் கொடுத்து அதற்கீடாக உப்பு, நெல், பொன் போன்ற பிற பொருட்களைப் பெறுகின்ற தொழில்நுட்ப  நிலைமைகளுக்கேற்ப உணவுப்பண்பாட்டில் மாற்றம் நிகழ்ந்திருப்பதை முல்லைத்திணை பாடல்களால் அறிய முடிகின்றது.

மருதத்திணை உணவுப் பண்பாடு

உணவு வரலாற்றின் மூன்றாம் கட்டத்தில் வேளாண்மை தொழில் முதன்மை பெறுகின்றது. கால்நடை வளர்ப்பு சார்ந்த பொருளாதாரமும், சந்தைபடு பண்டங்கள் என்ற புதிய பொருளாதாரமும் துணை பொருளாதார நிலையை அடைகின்றன. வேளாண்மை சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப உணவுப் பண்பாடு ஆக்கம் பெற்றிருப்பதை மருதத்திணை பாடல்களால் அறிய முடிகின்றது. செந்நெல் சோறு, வெண்ணெல், அவல், மாங்கனி பிசைந்த புளிக்குழம்பு, வயலில் விளைந்த வள்ளை கீரை, வயல் நண்டு, வயல் நீரில் ஆரல் மற்றும் வாளை மீன், ஆமை பிற இறைச்சிகள், அவரை, பீர்க்கங்காய், தேன் கலந்த பால், களி சோறு, கள், வெல்லப்பாகு, கருப்பஞ்சாறு மேலும் அவித்த பொரித்த அறுசுவை உணவுகள் மருத நில மக்களின் உணவுப் பண்பாடாக அமைந்துள்ளன.

நெய்தல் திணை உணவுப் பண்பாடு

கடல் சார்ந்த உணவு பண்பாட்டை நெய்தல் திணை பாடல்களில் அறிய முடிகின்றது. கடலில் மீன் பிடித்தல், மீன்களை காயவைத்து கருவாடு செய்தல், மீன் எண்ணெய் செய்தல், உப்பு விளைவித்தல், சங்கு பவளம் முத்துக் குளித்தல், பண்டமாற்று மற்றும் கடல் வணிகத்தில் ஈடுபடுதல் போன்ற தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப உணவுப் பண்பாடு ஆக்கம் பெற்றிருப்பதை அறிய முடிகின்றது.

பாலைத்திணை உணவுப் பண்பாடு

பொருளாதார வளங்கள் குன்றி வறட்சியில் ஊடாடும் மக்கள் வழிப்பறி செய்தல், கொள்ளையிடுதல், கொலை செய்து பொருள்களைக் கவர்தல், ஆநிரைகளைக் கவர்தல், வேட்டையாடுதல், எறும்பு புற்றழித்து மூங்கிலரிசி சேகரித்தல் போன்ற தொழில்நுட்ப நிலைமைகளுக்கேற்ப போதாமைகளின் துயர்களுக்கேற்ற உணவு பண்பாட்டை பாலைத்திணை  பாடல்களில் அறிய முடிகின்றது.

உணவுப் பண்பாட்டின் சாரம்

மனித வரலாற்றில் இறைச்சி உண்ணுதல் என்பது நெருப்பையும் வேட்டை கருவிகளையும் கண்டடைவதற்கு முன்பே தொடங்கிவிட்டது. குறிப்பாக காடுசார்ந்த பொருள் சேகரிப்பு வாழ்க்கையில் விலங்குகள் உண்டெஞ்சிய இறைச்சியை உண்ணும் வழக்கம் உண்டு. சமைக்காத பச்சைக்கறியை உண்ணும் வழக்கத்தை சங்க இலக்கியம் பச்சூண் உணவாக பதிவு செய்துள்ளது.

சங்கத் தமிழ் இலக்கியங்கள் வழியாக அறியலாகும் மனிதர்கள் இறைச்சி அல்லாத தாவர உணவுகளையும் அதனினும் மிகுதியாக இறைச்சி உணவுகளையும் பலவகையான மது வகைகளையும் பருகுநீர் வகைகளையும் உணவுப் பண்பாட்டில் கொண்டிருந்தமையை அறிய முடிகின்றது. மேலும், உணவை பகிர்ந்துண்டு வாழும் வழக்கத்தையும், இல்லாதவர்களுக்கு கொடுத்துண்டு வாழும் வழக்கத்தையும் கொண்டிருந்தார்கள்.

              இயற்கையாக அமைந்த நிலப்பாகுபாடுகளில் ஆங்காங்கு கிடைக்கப்பெற்ற பொருள்களையும் தங்கள் முயற்சியால் தட்பவெட்ப நிலைக்கேற்ப உற்பத்தி செய்த பொருள்களையும் கொண்டு பண்டைத்தமிழர்கள் தங்கள் உணவு வகைகளைத் தயாரித்துக் கொண்டனர் என்பதற்குச் சங்க இலக்கியத்தில் பல சான்றுகள் உள்ளன. உணவுப் பொருள்களை நல்ல முறையில் பக்குவம் செய்து சுவையேற்றி உண்டும் மகிழ்ந்திருக்கிறார்கள். இத்தகைய உணவு வகைகளில் சில பின்வருமாறு.

இறைச்சியிட்ட பாலுடை அடிசில்

கொழுத்த ஆட்டின் மாமிசத்தில் கொழுப்பு ஒட்டிக்கொண்டிருக்கும். அதனை வேகவைத்துக் கையிலெடுத்தால் கைவிரல்களுக்கிடையில் அது நெய்போல ஒழுகும். பசுவின் நெய்யை மிகுதியாக இட்டுக் குழைத்து ஆக்கிய சோற்றுடன் இந்த ஒழுகும் நிணமும் கலந்திருந்தால் எப்படியிருக்கும்? இது ஒரு வகை அடிசில். இந்த அடிசிலை விருந்தினருக்கு இட்டு, அவர்கள் உண்ட பின் மிஞ்சிய மீதத்தை நாம் உண்போம் என்று குறிஞ்சிப்பாட்டுத் தலைவன் தலைவியிடம் கூறுகிறான்.

பைம் நிணம் ஒழுகிய நெய்ம் மலி அடிசில்
வசை இல் வான் திணை புரையோர் கடும்பொடு
விருந்துண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னோடு உண்டலும் புரைவது – குறி 204 – 207

திற்றி

மென்று தின்னக்கூடிய தசை திற்றி எனப்படுகிறது. எனவே வேகவைத்த இளம் தசையே திற்றி எனலாம். ஊருக்கு வெளியில் வெகுதொலைவில் மாடுமேய்ப்பவர்கள் இரவில் தங்குவதற்குப் பாதுகாப்பு அரண்களை ஏற்படுத்திக்கொண்டு மாடுகளைக் கிடைபோட்டிருப்பர். அப்போது வில்லேந்திய கள்வர்கள் அவர்களைக் கொன்று, ஆநிரைகளைக் கவர்ந்து, அவற்றைத் தமக்குள் பங்கிட்டுக்கொண்டு, அவற்றுள் நல்ல கன்றை அடித்துப் பாறை முடுக்கில் சுட்டுச் சாப்பிடுவர் என்பதை அகநானூறு குறிப்பிடுகிறது.

இரவுக் குறும்பு அலற நூறி நிரை பகுத்து
இரும் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும்
கொலைவில் ஆடவர் – அகம் 97:4-6

புழுக்கல்

புழுங்கல் என்பதே புழுக்கல் எனப்படுகிறது. புழுங்கல் என்பது பண்படுத்துதலின் குறியீடு. அரிசியை பச்சையரிசி புழுங்கல் அரிசி என்கிறோம். பச்சை அரிசி என்பது பண்படுத்தப்படாதது. நெல்லை உடைத்தெடுத்த அரிசி. புழுங்கல் அரிசி என்பது அவித்து பண்படுத்தப்பட்ட அரிசியாகும். அவித்து பண்டுத்தப்படும் உணவே புழுக்கல் ஆகும்.

மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல் – நற் 83/5
உவலை கண்ணியர் ஊன் புழுக்கு அயரும் – அகம் 159/10

போன்ற அடிகள் மாமிசப் புழுக்கலைக் குறிக்கின்றன.

மைப்பு அற புழுக்கின் நெய் கனி வெண் சோறு – அகம் 136/1
குடவர் புழுக்கிய பொங்கு அவிழ் புன்கம் – அகம் 393/16

ஆகிய அடிகள் தாவரப் புழுக்கலைக் குறிக்கும்

மிதவை

பசுமீன் நொடுத்த வெண்ணெல் மாஅத்
தயிர்மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே – அகம் 340:14,15

வெண்ணெல் மாவைச் சமைத்துக் களியாக்கி, அதனுடன் தயிர் சேர்த்துப் பிசைந்து கூழாக்கி உண்டிருக்கிறார்கள். புளித்த நீரில் உருண்டைகளாக களி உருண்டைகளை மிதக்க வைத்து பசித்தபோது கரைத்து குடிப்பதும் வழக்கம்.

முடிவுரை

பழந்தமிழரின் உணவுப் பண்பாடானது பகுத்துண்ணுதல், கலந்துண்ணுதல், சமைக்காது உண்ணுதல், நெருப்பில் சுட்டு உண்ணுதல், கலயங்களில் சேமித்து உண்ணுதல், உணவிற்கான மூலப்பொருட்களை உற்பத்தி செய்து உண்ணுதல், பண்டமாற்றில் ஈடுபட்டு பொருளீட்டி உண்ணுதல் இவ்வாறாக உணவை ஈட்டுதல் தொடர்பான அனுபவத் தொகுப்பாலும், அறிவு முதிர்ச்சியாலும், கருவிகளையும் ஆயுதங்களையும் கையாளும் ஆளுமையாளும்  திறன் மிக்க தொழில்நுட்பச் செயல்களாலும் பழந்தமிழரின் உணவுப் பண்பாடு கட்டமைந்துள்ளதை அறியலாம்.

 வெளிவந்த விவரம்

தமிழரின் உணவுத்திருவிழாவின் நூல் வெளியீடு

அனுக்கிரகா சமூகஅறிவியல் கல்லூரி

10.10.2025


Sunday, January 11, 2026

எது பண்பாட்டு விழா?

 

எது பண்பாட்டு விழா?

முனைவர் புதியவன்

 

பண்பாட்டு விழா நடத்த மாணவர்கள் என்னிடம் விருப்பம் தெரிவித்தார்கள். எனக்கும் மாணவர்களின் விருப்பத்தில் உடன்பாடு இருந்தது. பண்பாட்டு விழாக்கள் கல்லூரி மாணவர்களின் பன்முகத் திறன்களுக்கு வாய்ப்பாக அமையும். எனவே பண்பாட்டு விழாவிற்கான நிகழ்ச்சி திட்டங்களை வடிவமைத்தேன். 25 நிகழ்ச்சிகள் உள்ளடங்கிய திட்டம் அது.

 

1. குழு நாடகம் 

2. மௌன நாடகம் 

3. தனிநடிப்பு 

4. குழு பாடல் 

5. தனிப்பாடல்  

6. குழு இசை

7. தனி இசை 

8. குழு நடனம் 

9. தனி நடனம்

10. கவியரங்கம்

11. பட்டிமன்றம்

12. மேடைப்பேச்சு 

13. ஓவிய மன்றம்

14. குறும்பட அரங்கம்

15. புகைப்படக் காட்சியகம் 

16. நகைச்சுவை மன்றம் 

17. கதை அரங்கம் 

18. விடுகதை அரங்கம் 

19. பழமொழி புதுமொழி அரங்கம்

20. இது உங்கள் மேடை

21. விளையாட்டு அரங்கம் 

22. மாயாஜாலம் 

23. கருத்துக் கோலங்கள் 

24. புத்தக உரையாடல் 

25. மனதை கவர்ந்த சமூக ஊடக காட்சிகள் 

 

 மாணவர்களைப் பெருந்திரளாகப் பங்கேற்க வாழ்த்தி கீழ்க்கண்டவாறு அறிவித்திருந்தேன்.

 மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மாணவர்களின் கவனத்திற்கு..

1. மனித குல மேன்மைக்கும் சமூக ஒழுக்கத்திற்கும் பங்கேற்கும் விதமாக திறன்களை வெளிப்படுத்தவும் 

2. உங்கள் சொந்தப் படைப்புகளையும் ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் வெளிப்படுத்தவும் 

3. சினிமாத்தனங்களை அப்படியே பயன்படுத்துவதைப் பெரும்பாலும் தவிர்த்து விடவும் 

4. பின்வரும் தலைப்புகளை மையக் கருத்துகளாகப் பயன்படுத்தவும் 

_மனித குலத்தின் மீதான பேரன்பும் பொறுப்புணர்வும்_

_போதைப்பொருள்கள் மற்றும் காட்சிபோதை வன்முறைகளைத் தடுத்தல்_

_ சமத்துவமும் சமூக நீதியும் _

_ பகுத்தறிவைப் பரப்புவோம் _

_ நாட்டுப்பற்று _

 

 சுற்றறிக்கையாக இத்திட்டத்தை மாணவர்களிடம் வழங்கி இருந்தேன். பொங்கல் நிகழ்ச்சிகளோடு பண்பாட்டு விழாவை இணைத்து நடத்தலாம் என்பதாகவும் தெரிவித்திருந்தேன். 

 பங்கேற்கும் மாணவர்களின் பெயர் பட்டியலுடன்  நிகழ்ச்சி திட்டமும் என் பார்வைக்குக் கிடைத்தது. பட்டியலைக் கண்டதும் அதிர்ந்து போனேன்.

 

 குழு நிகழ்வில் 15 குழுவும், தனிநபர் நிகழ்வில் ஏழு நபரும் பங்கேற்றுள்ளார்கள். ஆக மொத்தம் 22. இவற்றில் இரண்டு மட்டுமே சுற்றறிக்கையின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு இருந்தது.

 

 _மனித குலத்தின் மீதான அன்பு_ என்ற தலைப்பில் ஒரு குழுவின் மௌன நாடகம் குறிக்கப்பட்டிருந்தது.

 

ஒரு நபர் பாடலில் ஜெய் பீம் படத்திலிருந்து தலைகோதும் இளங்காற்று பாடல் குறிக்கப்பட்டிருந்தது.

 

 பட்டியலில் உள்ள மற்ற இருபதும் என்னவென்றால், 14 குழு நடனம், 4 தனி நடனம், 2 பாடல்கள். இவை அனைத்தும் சுற்றறிக்கை விதிகளுக்கு உட்படாததாகவும் ஏற்க தகுதியற்றதாகவும் இருந்தன.

 

* கழுகு திரைப்படத்திலிருந்து ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் என்ற பாடல்

* பருத்திவீரன் திரைப்படத்திலிருந்து ஊரோரம் புளியமரம் என்ற பாடல்

* சிலம்பாட்டம் திரைப்படத்திலிருந்து வேர் இஸ் த பார்ட்டி என்ற பாடல் 

* நாடோடிகள் திரைப்படத்திலிருந்து ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா என்ற பாடல் 

* எதிர்நீச்சல் திரைப்படத்திலிருந்து சத்தியமா நீ எனக்கு தேவையே இல்லை என்ற பாடல் 

* லியோ திரைப்படத்திலிருந்து நான் ரெடி தான் வரவா என்ற பாடல்

 இவைகள் மாணவர்களின் பண்பாட்டு விழா என்ற பெயரில் குறிப்பிடப்பட்டிருக்கும் பாடல்களில் சில.. 

 

 மேலும், திட்டங்களில் பங்கேற்காமல் கைவிடப்பட்டுள்ளவை பல. பட்டிமன்றம் உட்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட  திட்டங்களில் எந்த மாணவர்களும் பங்கேற்கவில்லை. கைவிடப்பட்டுள்ள இத்தகைய திட்டங்கள் மாணவர்களின் பன்முகத் திறமைகளுக்கு மிகவும் அவசியமானவைகளாகும்.

 பன்முகத் திறமைகளுடன் பங்கேற்பதற்கான எந்த சிந்தனை தகுதிகளும் இல்லாத நிலையில் மாணவர்கள் இருப்பது என்னை மிகவும் வருந்தும் நிலைக்கு ஆழ்த்தியது.

 

 பொதுவாகவே மாணவர்களின் பண்பாட்டு கண்ணோட்டங்கள் பண்பற்றதாகவே இருப்பதை என்னால் உணர முடிந்தது.

 

 கல்விச் சுற்றுலா முதல் எந்த சுற்றுலாக்களிலும் இத்தகைய சீரழிவான சினிமா ஆபாச படல்களால் பேருந்து நடனங்கள் ததும்புகின்றன.

 

 பொது நிகழ்ச்சிகள் முதல் புத்தாண்டு கொண்டாட்டங்களிலும் இவைகளே நீடிக்கின்றன.

 

 உள்ளூர் பேருந்துகளில் இத்தகைய இசைகள் இல்லாத பயணங்களே இல்லை.

 

 ஆபாச இசை குத்தாட்டங்களில் குழந்தைகள் முதல் முதியோர் வரை சங்கமித்திருக்கிறார்கள்.

 

 பண்பற்ற சீரழிவுகளே பண்பாட்டின் எதார்த்தங்களாக நிலை பெற்று இருக்கின்றன.

 

 வெறுப்பு பேச்சுகளுக்கும் பாலியல் சீண்டல்களுக்கும் வன்முறை நோக்கங்களுக்கும் எளிதாக பற்றிக்கொள்ளும் சருகுகளாகவே சமூகம் அபாயப்பட்டு இருக்கின்றது.

 இந்த நிலையில் மாணவர்களை மட்டும் குறை சொல்வதில் நியாயம் இல்லை என்பதாகவே உணர்கிறேன்.

 

 மேலும் என் சக ஆசிரியரிடமும் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டேன். அவரோ எனக்கு அறிவுரை வழங்கினார். இத்தகைய விதிமுறைகள் மாணவர்களுக்குப் பயன்படாது. அவர்கள் விருப்பப்படி சுதந்திரமாக ஒரு நாள் ஆடித்திரியப் போகிறார்கள். அதை தடுப்பது சரியல்ல என்கிறார். அதாவது விதிமுறைகள் இன்றி தற்குறிகளாகவோ தான்தோன்றித்தனமாகவோ ஆடிப் பாடுவதை அங்கீகரிக்கச் சொல்கிறார்.

 அவர் சொல்வது போல அங்கீகரித்து விட்டால் அது எப்படி பண்பாட்டு விழாவாக கருத முடியும்?

 சீரழிவான சமூகத்தை மேலும் சீரழிக்க தூண்டுவது எப்படி பண்பாடாகும்?

 அது பண்பாடு அல்ல புண்பாடாகவே கருத முடியும்!

 

 எது பண்பாட்டு விழா? என்ற கேள்வியுடன் மாணவர் தலைவர்களைச் சந்தித்தேன். அவர்கள் எந்த விவாதங்களும் இன்றி பட்டியல் விவரங்களை அங்கீகரிக்க விரும்புகிறார்கள். வெளிப்படையாகக் கெஞ்சாமல் ஒரு போக்காகக் கெஞ்சுகிறார்கள். அவர்கள் விவாதிப்பதற்கான கருத்தியல் திறன் அற்றவர்களாகவே திகழ்கிறார்கள். லாபவெறிக்கும் பாசிச ஆட்சிக்கும் வசதியான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக இத்தகைய இளம் தலைமுறைகள் போதை மற்றும் நுகர்வு வெறிமுதல் காட்சி போதை வன்முறைகளின் வழியாகக் கருத்தியல் திறன் அற்றவர்களாகக் காயடிக்கப்பட்டுள்ளார்கள். 

 பாசிசக் கொள்ளியில் பற்றி கொள்வதற்கும் லாபவெறிப் போர்களில் பலியாவதற்கும் பதமான நிலையில் பதப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் மீண்டு எழாதவரை...

 இடித்துரைத்தாவது இவர்களைப் பண்படுத்தாதவரை...

 மனித குலத்தின் மீதான எந்த அடக்குமுறைகளும் முற்றுப்பெற முடியாது!

 

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானுங் கெடும் 

( குறள்-448)

 மன்னவரை இடித்துரைக்க  வேண்டிய அமைச்சர் குழுக்களாக ஆசிரியர்களும்

 மன்னர்களாக இளம் தலைமுறைகளும் இருக்கிறார்கள் என்பதே காலத்தின் நிதர்சனம்.

 

 என் நெஞ்சில் உரைத்த உண்மைகளோடு மாணவர்களின் கண்களைப் பார்த்து கலந்துரையாடலை தொடங்கினேன்.

பண்பாட்டு விழா எதற்கு கொண்டாட வேண்டும்? நீங்கள் புரிந்து கொண்டிருப்பதை எனக்கு விளக்குங்கள் என்றேன்.

 சற்று அமைதிக்குப் பிறகு ஒரு மாணவர் கூறினார். 

தொடர்ந்து படிப்பு, மன அழுத்தம், வேலை நெருக்கடிகள் இவற்றிலிருந்து சற்று நிதானம் அடைவதற்கான திட்டந்தான் ஐயா. 

 அவரை ஒரு பார்வை பார்த்தேன். என் பார்வையின் பொருளை அனைவரும் உணர்ந்து இருந்தார்கள்.

அந்த மாணவர் சொல்வதுபோல அத்தனை நெருக்கடியான வாழ்க்கை சூழலுக்கு மாணவர்கள் ஆட்படவில்லை. அந்த அளவிற்கு பொறுப்பான மாணவர்களும் அல்ல. அவர்களது பெற்றோர்களின் உழைப்புகளிலும் களைப்புகளிலும் ஒரு பங்குகூட இவர்களது உழைப்பு அடங்காது என்பது அவர்களுக்கே தெரியும். 

 

 இன்னொரு மாணவர் சொன்னார். மாணவர்களின் திறமைகளுக்கான வாய்ப்புகள் ஐயா. 

நான் அவரிடம் கேட்டேன். 

 எது திறமை? ஆபாச பாடல்களுக்கும் சினிமாத்தனங்களுக்கும் பலியாவதுதான் திறமையா?

 

 வெளிப்படையான பதிலின்றி முனங்கினார்கள். ஏன் முனங்குகிறீர்கள்? சத்தமாக பேசுங்கள் என்றேன். உடனே அமைதியாகி விட்டார்கள். 

 

 பேருந்துக்கு மிக அழகான (side stand) பக்கநிறுத்தம் அமைப்பது திறமையாகுமா? 

 சிரித்தபடி பதில் சொல்கிறார் மாணவர். பேருந்துக்கு எதுக்கு ஐயா பக்கநிறுத்தும்?

 

 அவரது பதிலைப் பற்றிக் கொண்டு நான் உணர்த்த முயன்றேன். பயன்பாடு அற்ற ஒரு செயலை திறமையாக கருதுவதில்லை . ஏளனமாக கருதி சிரிக்கிறோம். எல்லா திறமைகளும் அப்படித்தான்.

சமூகத் தேவையைக் கருதாத எந்த முயற்சிகளும் திறமையாகாது. அவைகளும் ஏளனமாகக் கருதும்படியான அவச் செயல்களே ஆகும்.

 

 பண்பாடு என்பதை எப்படி விளங்கிக் கொள்கிறீர்கள் என்றேன். மாணவர்கள் பலவிதமாகப் பதில்களைத் தந்தார்கள்.

 ஒரு மாணவர் கல்ச்சுரல் (cultural) என்று மொழி பெயர்த்தார். மற்றவர்கள்

 பொங்கல் வைப்பது, வேட்டி கட்டுவது, சேலை கட்டுவது, இட்லி சாப்பிடுவது, ஜல்லிக்கட்டு, பாதுகாக்க வேண்டிய பாரம்பரியம், தமிழ் மொழி  என்பதாக குறிப்பிட்டார்கள்..

 

 நான் விளக்கத் தொடங்கினேன்.

“பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்” (கலி.133) என்று சங்கஇலக்கியம் உணர்த்துகிறது. பாடு என்பது உழைப்பு ஆகும். உழைப்பின் தேவைக்கேற்ப மனித உறவுகளை ஒழுங்கமைப்பதே பண்பாடு என்பதாக அர்த்தப்படும்.

மனிதர்களால் பண்படுத்தப்படுவது அனைத்தும் பண்பாடுதான். பண்பாடு என்பது பாரம்பரியமானது என்பதற்காகவே பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை.

பாதுகாக்கப்பட வேண்டிய பண்பாடுகளும் உள்ளன.

ஒழிக்கப்பட வேண்டிய பண்பாடுகளும் உள்ளன.

 சேர்ந்து உழைத்தல், பகிர்ந்து உண்ணுதல், ஒற்றுமையாகப் பழகுதல் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டிய பண்பாடுகளில் அடங்கும்.

 ஆணதிகாரம், பெண்ணடிமைத்தனம், சாதிவெறி, மதவெறி, இனவெறி போன்றவை ஒழிக்கப்பட வேண்டிய பண்பாடுகளில் அடங்கும். 

 

 சமூக விஞ்ஞான விளக்கப்படி சமூகப் பொருளுற்பத்தி அல்லாத அனைத்தும் பண்பாடாக விளக்கம் பெறும்.

1. சமூக வாழ்வியல் 

2. சமூக உள்ளத்தியல் 

3. தனிமனித உள்ளத்தியல் 

4. சமூக கருத்தியல் 

5. தனிமனித கருத்து நிலைப்பாடு 

6. தனிமனித உலக பார்வை 

7. தத்துவ அடிப்படை 

 ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்ததே பண்பாடாகும்.

 தமிழ்மொழி என்பது சமூகப் பொருள் உற்பத்திக்கும் பண்பாட்டிற்கும் முழுதளாவிய நிலையில் வினையாற்றுவதாகும்.

 

 ஒரு சினிமா பாட்டிற்கு ஆடுவது என்பதே பண்பாட்டு விழா ஆகிவிடாது. விழா என்பது கலைகளால் கொண்டாடப்படுவது. அறிவார்ந்த கருத்துகளை ஆழ்மன உணர்வுவரை    பற்றிக்கொள்ளச் செய்வது. மனிதகுலத்தில் வெளிப்படும் எல்லா குற்றங்களும் ஆழ்மன உணர்வுகளால் பற்றப்பட்டுள்ள தவறான கருத்துக்களின் வெளிப்பாடாகும். மனித குலத்தைக் குற்றங்களிலிருந்தும் கொடுமைகளில் இருந்தும் பேரழிவிலிருந்தும் பாதுகாக்கவே பண்பாட்டு விழாக்கள் அவசியப்படுகின்றன. மனித குலத்தின் ஆழ்மனதில் சரியான கருத்துக்களை விதைப்பதன் மூலமாக பண்பட்ட செயல்களால் புத்துயிர் பெற முடியும்.  நல்லுலகின் புதிய சிறகுகளாக மகிழ்ச்சியும் நிம்மதியும் சிறகடிக்க வண்ணமயமான உலகம் சுழன்று எழும். 

 

 மனித குலத்தில் இத்தகைய பண்பட்ட வாழ்வியலைப் படைக்கவே மாணவர்களின் பண்பாட்டு விழாக்கள் அவசியப்படுகின்றன. உங்கள் பண்பாட்டு விழாக்கள் புண்பட்ட சமூகத்திற்கு மருந்திட வேண்டும். பண்பற்ற சமூகத்தைப் பண்படுத்த வேண்டும்.

 

 நமது பண்பாட்டின் நிலைமை வாழ தகுதியற்றதாக அறியப்பட்டிருக்கிறது.

 பெண்களும் குழந்தைகளும் வாழத் தகுதி இல்லாத நாடாக அவமானப்பட்டு இருக்கிறது.

 போதை வெறி முதல் காட்சிபோதை வன்முறைகள்வரை நாம் பலியாகி இருக்கிறோம்.

 சமூக அக்கறையற்ற சுயநல வெறி புண்பாட்டில் ஆழ்த்தப்பட்டிருக்கிறோம். 

 மனிதர்களாக அல்லாமல் கருத்தியல்களற்ற மந்தை கூட்டங்களாக மாற்றப்பட்டிருக்கிறோம்.

 இத்தகைய அபாயகரமான வாழ்க்கை சூழலில் இருந்து மீள்வதற்குத் தூண்டுவதே பண்பாட்டு விழாவாக அமையும். 

மீளத் தூண்டாதவை எத்தனை மகிழ்ச்சிகள் நிறைந்தவை எனினும் புண்பாட்டு நிலைமையாகவும் பண்பாட்டு வீழ்ச்சியாகவுமே கருத முடியும்.

 

 பண்பாட்டு விழா குறித்த எனது விளக்கங்களை மறுப்பவர்கள் பேசலாம். மாணவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். அந்த அமைதியில் அலட்சியங்கள் வெளிப்படவில்லை. ஒரு உணர்வுபூர்வமான ஒப்புதலை தெரிவிப்பதாக அமைந்த அமைதியாகத் திகழ்ந்தது.

 

துடுக்காக பேசும் ஒரு மாணவர் கூறினார். 

 பங்கேற்க முடியாது என்று விலகிச் செல்ல மாணவர்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. அது எங்களது இயலாமையின் காரணமாக இருக்கலாம் ஐயா. ஆனால் உங்கள் விளக்கத்தை ஒரு சதவீதம் கூட யாராலும் மறுக்க முடியாதுங்க ஐயா.

 

 நான் உறுதியாகச் சொன்னேன். ஒப்புக்கொண்ட மாணவர்கள் பண்பாட்டு விழாக்களில் முழு முயற்சியுடன் ஈடுபட வேண்டும். சமூகத்தின் முன்மாதிரியான நிகழ்ச்சிகளை வழங்குவதில் மாணவர்கள் முன் நிற்க வேண்டும். விலகிச் செல்வது நம் பலவீனத்தை நியாயப்படுத்துவதாக அமைந்துவிடும் என்றேன்.

 

 சினிமாத்தனங்களைக் கடந்து மாணவர்கள் பங்கேற்பது கடினம் ஐயா  என்றார் ஒரு மாணவர்.

 

நான் நெறிப்படுத்தினேன். சினிமா பாடல்களையும் காட்சிகளையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அவற்றில் உங்களது புதிய சிந்தனைகளையும் கருத்துக்களையும் புகுத்துங்கள். சமூகப் பொறுப்புள்ள புதிய முயற்சிகளுக்கு சினிமாத்தனங்களைப் பயன்படுத்துவது தவறு இல்லை. உதாரணத்திற்கு உங்களுக்குப் பிடித்த பாடல்களை டப்பிங் பாடல்களாக மாற்ற முடியும் என்று உணர்த்தினேன். 

 டப்பிங் பாடல் எப்படி எழுதுவது என்று ஒரு மாணவர் கேட்டார். நான் பாடும் இந்தப் பாடலை எந்த சினிமா பாடல் என்று கண்டுபிடியுங்கள் என்றேன்.

 

படிப்பு என்ன வேலை என்ன

          லாபம் என்ன நட்டம் என்ன

          பிழைப்புக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நாமல்ல

பாசம் வைக்க பாடம் கற்க

          மக்கள் உண்டு வாழ வைக்க

          அவரைப்போல உறவுக்காரர் யாரும் இங்கில்ல

 உண்மை வெல்ல நாமே

          உசுரக்கூடத் தானே

         நம் மக்கள் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவோம்

 

        நம் மக்கள் போட்ட சோறு

          நிதமும் தின்னோம் பாரு

        நாட்டைக் கூட தாயைப் போல எண்ணுவோம்

 

       சோர்வு விட்டு மடமை விட்டு

       சொர்க்கம் ஒன்று மண்ணில் கட்டு

      நல்லுலகம் மலரச் செய்வோம் நாம்தான்!

 

 பாடலை கண்டுபிடித்துவிட்டார்கள் என்பது புரிந்தது. எல்லோரும் ஒத்த குரலில் முழங்கினார்கள். காட்டுக்குயிலு மனசுக்குள்ளே என்ற பாடல்.

 ரஜினி நடித்த தளபதி பட பாடல். அவர்கள் உற்சாகத்தில் தன்னம்பிக்கையைக் கண்டேன். கைதட்டல்களும் புன்னகைகளுமாக திகழ்ந்தார்கள்.

நான் சில வார்த்தைகளை உதிர்த்தேன். உங்களால் முடியும். சினிமாத்தனங்களில் இருந்தே உங்களைப் புதுப்பித்துக்கொள்ள முடியும்.

 நீங்களே பாடல் எழுதுங்கள், இசை இசைத்து நடனமாடுங்கள், திரைப்படக் காட்சிகளைப் புதுமைப்படுத்தி நாடகங்களை உருவாக்குங்கள்.

 சிந்தனை உழைப்பில் ஈடுபடுகின்ற மாணவர்கள் நீங்கள்...

 நாளைய சமூகத்தின் இன்றைய தலைவிதி நீங்கள் ...

 உங்களால் புதுமைகளை படைக்க இயலாவிட்டால்

வேறு யாரால் முடியும் !

 

பண்பாட்டு விழாக்கள் என்பவை வீண் கொண்டாட்டங்கள் அல்ல.

கொண்டாட்டங்கள் என்பவை

வினையாற்ற பலப்படுத்தும் விளையாட்டாக வேண்டும்...

முன்னேற்றங்களைச் சொல்வதற்கு பாதையாக வேண்டும்...

பிரச்சனைகளை வெல்வதற்கு கல்வியாக வேண்டும்...

கண்டபடி நுகர்வுகளும் போதை ஆட்டம் செலவுகளும்

கொண்டாட்டம் என நினைத்தால்

அவை வீழ்த்தும் வீழ்த்தும் நம்மை கொண்டுபோய் வீழ்த்தும்!

 

பண்பாட்டு விழாக்கள் நம்மை வீழ்த்துவதாக அமைவதை தடுத்தாள வேண்டும்.

 நமது பண்பாட்டு விழாக்கள் சகமனிதர்களையும் சமூகளாவிய உலகையும் பண்படுத்த வேண்டும்.

 

 

நீ சகமக்களின் சிறு துளி

நம் குடும்பம் ஒரு குட்டிச் சமூகம்

மானிட சமூகம் நம் மொத்த உருவம்

இதுதான் மனிதசாரம். எனவே,

மனிதப் பெருங்கடலின் சிறுதுளிகள்தான் நாம் ஒவ்வொருவரும். உங்களைப் பண்படுத்துகின்ற புதுமையின் எழுச்சிதான் பண்பாட்டுவிழாவின் தாகம். 

 

நாடகம் - நெகிழி உலகம் -

  நாடகம் -     நெகிழி உலகம்  -   முனைவர் புதியவன்    காட்சி 1   மேடையின் மையத்தில் நெகிழியால் மூச்சு திணறு கிறாள் பூமித்தாய் ...

அதிகம் பார்க்கப்பட்டவை