Tuesday, December 9, 2025

முன்வினை பலன் பாடைகட்டும்

 

முன்வினை பலன் பாடைகட்டும்

முனைவர் புதியவன்

 

திருப்பதி தேவஸ்தானத்திற்கு முந்தியடிக்கின்றோம். மலை அணில்களுக்கு பழங்களை கையில் கொடுத்த மகிழ்ச்சி. பெருத்த அணில்கள் தடிமனான வால்களில் வசீகரித்தன. மனம் கவரும் சிவப்பு கண்களால் அச்சமின்றி நெருங்கின. கை நீட்டிய பழங்களை லாவகமாக எடுத்துக் கொரித்தன. 

       வண்ணத்துப்பூச்சி விட்டுச் சென்ற வண்ணங்களைப் போல மகிழ்ச்சி ஒட்டிக் கொண்டது. நீங்காத மகிழ்ச்சியுடன் தரிசனத்துக்கு முந்தினோம். நிறைந்த கூட்டம் வரிசையாகச் சென்றது. 

 “வெங்கட்ரமணா கோவிந்தா பாண்டுரங்கா கோவிந்தா“ 

 பக்தர்களின் முழக்கம் உற்சாகத்துடன் முழங்கின. 

 நேசப்பறவை காகம் சில மரங்களில் மாறி மாறி பறப்பதைப் போல முழக்கங்கள் பறந்தன.

 குழு விட்டு குழு மாறிய முழக்கங்கள் முழங்குபவருக்கு இளைப்பாற வசதி தந்தன. முழங்குபவர் மாறி மாறி முழக்கமிட பக்தர்கள் பின்பாட்டு பாடினர். புதிதாக இரண்டு குழுவின் முழக்கங்கள் மட்டும் திசை மாறின.

காகம் கழுகானது போல் நெஞ்சுக்குள் பதற்றம் பெருகியது. ஆனால் மக்கள் கழுதைகளைப் போல பின்பாட்டு பாடினர்.

'ஜெய் ஸ்ரீ ராம் வெங்கடா ரமணா

பாரத் மாதா கி ஜே பாண்டுரங்கா '

 மக்களில் சிலர் சஞ்சலப்பட்டாலும்  பின்பாட்டுகள் அதிர்ந்ததால் திணறிப் போனோம்.

 

ஒரு விடுமுறை நாள். மதிய நேரம். சாப்பாட்டுக்கு அமர்ந்தேன். அதிர்ந்து போனேன். உணவைச் சுற்றி நீர் தெளித்தச் செல்லக் குழந்தை  சமஸ்கிருதத்தில் உளறுகிறது. மனைவியிடம் கேட்டால் பெருமையாக சொல்கிறார். அந்த டியூஷனில் இலவசமாகச் சுலோகம் கற்றுத் தருகிறார்களாம்.

 

ஒரு ஞாயிறு மாலை. மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் விடுமுறை கூட்டம். வண்ண விளக்குகளால் ஒப்பனை செய்து கொண்டது மைய மண்டபம். குளத்து நீரில் முகம் பார்த்தபடி மண்டபம் நாணிச் சிரித்துக் கொண்டிருந்தது.  குளத்தை சுற்றிலும் நடமாடும் கடைகளும் இராட்டினங்களும் வலை மீன்களைப் போல மக்களை அள்ளின. 

 கூட்ட நெரிசல்களுக்கு இடையில் இறைவனின் அலங்காரப் பல்லக்கைச் சுமந்தபடி  பஜனை கூட்டம் பவனி வந்தது. அது ஹரே ராம ஹரே கிருஷ்ணா பஜனை கோஸ்டி. மக்கள் மொய்த்துக் கொண்டிருந்தார்கள். பக்தி பரவசத்தால் அல்ல. நெய்ப் பொங்கல் பிரசாதத்திற்காக. 

 வெள்ளை நிற உடையில் சந்தன கோலத்துடன் ஒருவர் நெறிப்படுத்துகிறார். அவர் கையில் இருந்துதான் பிரசாதம் பக்தர்களுக்குக் கைமாறுகிறது.

 பிரசாதம் பெறுபவரின் கண்ணைப் பார்த்துச் சொல்லச் சொல்கிறார். 

" ஜெய் ஸ்ரீ ராம்னு சொல்லு

ஜெய் ஸ்ரீ ராம்னு சொல்லு "

 நெய்ப்பொங்கல்  பக்தர்களோ  சஞ்சலம் இன்றி சொல்கிறார்கள்.

ஜெய் ஸ்ரீ ராம்!

ஜெய் ஸ்ரீ ராம்!

 பின்பாட்டு பாடப்பாட மக்கள் கரங்களில் தவழ்ந்தது  நெய்ப் பொங்கல்.

     இன்று திருப்பரங்குன்றம் முருகனிடம் வந்து நிற்கிறார்கள். அவர்களுக்குப் பாசிசப் படுகொலை திட்டங்களுக்கு உதவ கடவுள்களுக்குப் பஞ்சம் இல்லை. 175க்கும் மேற்பட்ட இஸ்லாமிய வழிபாட்டுத்தளங்களை குறிவைத்து வினையாற்றி வருகிறார்கள் என்பது வெளிப்படையாகிவிட்டது.

ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி. வைகைக் கரையில் நடந்து கொண்டிருந்தேன். ஊரறிந்த ஒரு பெண்கள் பள்ளிக்கூடம். சமஸ்கிருத ஸ்லோகங்களுடன் ஜெய்ஸ்ரீராம் முழங்க பள்ளியில் சிறுவர்களுடன் பயிற்சி நடத்துகிறார்கள்.

 

கோயில்கள், யோகா பயிற்சி, உடற்பயிற்சி, பரதம், கணிதம், மாலை நேர வகுப்புகள், வாழ்க வளமுடன், பிரஜா பிதா பிரம்மகுமாரிகள்  என்று பல்வேறு பண்பாட்டு வடிவங்களில் காவி வைரஸ் பரவி இருக்கிறது. மக்களின் அன்றாட பண்பாட்டு நடவடிக்கைகளாக காவி பாசிசத்தின் செயல் திட்டங்கள் நடைமுறையில் வினையாற்றுகின்றன.

 

மத நம்பிக்கையில் திரண்டிருக்கும் மக்களுக்கு இவர்களது சதி ரூபம் புரியப்படவே இல்லை. மதப் போர்வைக்குள் நிகழ்ந்திருக்கும் மதவெறி வன்முறைகளும், மக்கள் படுகொலைகளும், மனித குலத்தைச் சூறையாடி செறிக்கும் லாபவெறி காவி பாசிச கனவுகளும் சாமானிய மக்கள் திரளின் எண்ணங்களில் எச்சரிக்கை உணர்வுகளைத் துளி அளவும் தூண்டவில்லை. இதுதான் கார்ப்பரேட் காவி பாசிசத்தின் முன்னேற்றம். 

 

ஆம்! காவி பாசிசம் முன்னேறுகிறது.

       சிவப்பு நீலம் கருப்பு கூட்டியக்கக் கொண்டாட்டங்களைக் கடந்து காவி பாசிசம் முன்னேறுகிறது.

       அணையாது புகைகின்ற சாதியச் சனாதனத்தின் உதவியாலும், சூழ்ச்சி மிக்க சாணக்கியத் தத்துவத்தாலும் காவி பாசிசம் முன்னேறுகிறது.

       அகண்ட பாரத பாடையைக் கட்டுதல் நோக்கி காவி பாசிசம் முன்னேறுகிறது.

உடன்கட்டையில் எரித்துக் கொல்லப்படவிருக்கும் உழைக்கும் தேவதையை நினைத்தாலே நெஞ்சமெல்லாம் பதறுகிறது.

       அபாயத்தின் விளிம்பில் இருக்கிறது நாடு.

       நம் சமூகப் பொருள் உற்பத்திகளால் மக்களிடம் கட்டமைந்துள்ள பண்பாட்டு முழுமையிலும் விரிந்து பரந்து  காவி பாசிசம்  வினையாற்றுகிறது.

       நம் எதிர்வினைகள் எல்லாம் மறுவினையாக மட்டுமே இருக்கிறது.

 

       மக்களையும் அவர்களின் சொத்துக்களையும் உரிமைகளையும் தீராப்பசியுடன் வேட்டையாடும் லாப வெறி பேய்களை மக்கள் சிந்தித்து விடாதபடி வினையாற்றுகிறது.

மக்களின் கழுத்திலும் வீதிகளிலும் பதட்டங்களையே மாலைகளாகவும் தோரணங்களாகவும் அணிவித்து வினையாற்றுகிறது.

       அரசியலமைப்புச் சட்டத்தின் படி கருத்துகள் இணைந்து ஜனநாயகம் இருக்கலாம். ஆனால், மதச்சார்பு என்ற  நம்பிக்கைகள் இணைந்து ஜனநாயகம் இருக்க முடியாது. அதனால்தான் இந்தியக் குடியரசின் வரையறையில் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்திய மக்களின் இதயத் துடிப்பாகிய  ஜனநாயகத்தின் எல்லா உறுப்புகளிலும் உயிர்க்கொல்லி நோயாக பரவி நின்று காவி பாசிசம்  வினையாற்றுகிறது.

       மக்களின் அன்றாட வாழ்வு முதல் பண்பாட்டு அடர்த்திவரை நாடித்துடிப்பு அறிந்து வினையாற்றுகிறது.

அதிகாரத் தூண்கள் முதல் நிறம் மாறும் ஆட்சிவரை தெளிந்த சூழ்ச்சிகளுடன் வினையாற்றுகிறது.

எதிர்வினை நிகழ்த்த கடமைப்பட்டுள்ள களங்களின் எல்லைகள் அறிந்து வினையாற்றுகிறது.

எல்லைகளில் முடிவாகும் வெற்றி தோல்விகளைத் தனதாக்கிக் கொண்டு வினையாற்றுகிறது.

காவி பாசிசத்தின் வரலாறு என்பது எதிர்த்தவர்களையும் தனதாக்கிச் செறித்த வரலாறுதான்.

மலைப்பாம்பு என ஆறத் தழுவிக் கொண்டு எதிர்த்தவர்களின் வெற்றிகளையும் விழுங்கி செறித்து விடும்.

பெரியார் மண்ணில் சாத்தியமாகாது என்ற கதைகளைக் கடந்து வினையாற்றுகிறது காவி பாசிசம்.

சுயமரியாதையும் சமூக நீதியும் சனாதனத்தின் இடுப்பை முறித்த பெரியாரின் கைத்தடிதான். ஆனால் பெரியாரின் தடியை முறிக்கும் மூர்க்கத்துடன் பாசிசம் வினையாற்றுகிறது. 

தலையில் தடியால் அடித்து வீரியன் பாம்பை வீழ்த்தலாம். ஆனால் மலைப்பாம்பு வீரியின் வகையல்ல.

காவி பாசிச மலைப்பாம்பின் தலையாக நிறம் மாறும் ஆட்சி வினையாற்றுகிறது. நமது மறு வினை முழுவதும் காவி பாசிசத்தின் ஆபாச ஆட்சிக்கு மட்டுமே வினையாற்றுவதாக முடிகிறது.  

பண்பாட்டு அடர்த்தியை பருத்த உடம்பிற்குள் வளைத்துப் போட்டிருக்கிறதே. எப்படி மறுவினை ஆற்றுவது?

 மக்களின் பண்பாட்டிற்குள் கீழிறங்கி வினையாற்றுகிறது காவி பாசிசம்.

நம்மால் வினையாற்ற முடிகிறதா?

முடியவில்லை எனில் நமது எல்லா வெற்றிகளையும் காவி பாசிசம் செறித்து விடும். இது அபாயகரமான உண்மை.

தேர்தல் அரசியலில் மட்டுமல்ல. பண்பாட்டு இயல்புகளிலிருந்து அரசியல் நடைமுறை வரை மனித குலத்தின் காவலர்கள் வினையாற்ற வேண்டும்.

மார்க்சியம் பெரியாரியம் அம்பேத்கரியம் மக்களின் கூட்டியக்கங்கள் ஒருங்கிணைந்த நட்பு சக்தியாக வினையாற்ற வேண்டும். நாம் நேரடியாகவும் சாத்தியமான தொடர்பாளர்களைக் களம் மாற்றியும் வினையாற்ற வேண்டும்.

கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்தும் திட்டத்திற்கு வழியமைக்க வேண்டும்.

அவர்களுக்கு மறுவினை என்பதாகத் தொடராமல் அவர்களால் எதிர்பார்க்க முடியாத முன்வினைகளைத் தொடங்கியாக வேண்டும்.

மூளை இல்லாதவர்கள் நூற்றாண்டுகளாகச் சிந்தித்து செய்பவற்றை நாம் செய்தாக வேண்டும்.

தாமதமாகத் தொடங்கினாலும் மனித குலத்தின் மீதான பேரன்பும், அறிவியல் பூர்வமான அரசியல் கண்ணோட்டமும் இருக்கின்ற நம்மால் அவர்களால் எதிர்பார்க்க முடியாத பேரிடியையும், வரலாற்றின் மீண்டெழவே முடியாத தீர்வுகளையும் பரிசாக வழங்க முடியும்.        

பண்பாட்டு முன்வினைகளை எல்லா முனைகளிலும் சூழ்ந்து பாசிச மலைப்பாம்பின் உயிர் கிழிக்க முடியும். 

 

இலட்சம் தீபம் ஏற்றும் விழா, மலையேறும் புனித யாத்திரைகள் போன்ற அனைத்திலும் பாசிச எதிர்ப்பு நோக்கத்துடன் ஊடாடுதல் வேண்டும்.

மதவெறிக்கு எதிராக மனித நேய நடைமுறைகளை முதன்மைப்படுத்தும் இயல்புகளை முன்னிறுத்த வேண்டும்.

வீட்டு வாசல் கோலங்களைக் கருத்தாளுதல் முதல் முகமதியர், கிறிஸ்தவர், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டவர், பலவீனமானவர் ஆகியோர்களின் குடியிருப்புகளுக்குச் சென்று இனிப்பு வழங்குதல், பன்முகத் தன்மைகளில் கொண்டாட்டங்களை முன்னெடுத்தல் போன்ற மனிதநேய உறவு மேம்பாட்டுக்கானப் புதிய புதிய பண்பாட்டு நடவடிக்கைகளை செயலுத்தி முறையில் மக்களுக்கு இணக்கமான முறையில் செயல்படுத்த வேண்டும்.

மத நல்லிணக்கம், சாதி ஒழிப்பு, சமூக விஞ்ஞான இயக்கங்கள், ஜனநாயக சக்திகள் போன்ற மனித குல பாதுகாவலர்கள் தலைமையிலும் கண்காணிப்பிலும்  பரவலான முன்வினைகளைச் செயல்படுத்த வேண்டும். 

கண்காணிப்புகளைத் தவறினால் நம் கரங்களால் நமக்கே கொல்லி வைத்து விடுவார்கள். மிகவும் ஆபத்தானவர்கள்.

இனிப்புகளில் விஷம் தடவுதல் முதல் முன்வினைகளை முளையிலேயே கிள்ளுதல்வரை எல்லா சாதுர்யங்களையும்காவிப் பாசிசம் கையாளத் துடிக்கும். 

கார்ப்பரேட் காவி பாசிசத்தை அரசியல் மறுவினைகளாலும் கருத்து பிரச்சாரங்களாலும் மட்டுமே வீழ்த்த முடியாது என்பதை ஜனநாயக சக்திகள் உணர்ந்தாக வேண்டும். 

மக்களின் பண்பாட்டு அடர்த்தியைத் தன்மயப்படுத்துதலும் மனித குலத்தை நேசிக்கச் செய்கின்ற உள்வினைகளை பன்முகத்தன்மைகளில் எழுப்புதலும், பகுத்தறிவு நோக்கி இளம் தலைமுறைகளை உயர்த்துதலும், தேசம் முழுவதும் ஜனநாயக் கூட்டரசை நிறுவுதலும் மட்டுமே கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு சாவு மணி எழுப்பும். சங்கே முழங்கு!

 

முன்வினை பலன் பாடைகட்டும்

  முன்வினை பலன் பாடைகட்டும் முனைவர் புதியவன்   திருப்பதி தேவஸ்தானத்திற்கு முந்தியடிக்கின்றோம். மலை அணில்களுக்கு பழங்களை கையில் கொடுத்த...

அதிகம் பார்க்கப்பட்டவை