“நான்” எனும் இளந்தலைமுறை
எனது
வகுப்புதான் ஒழுங்கீனத்திற்கு
முன்மாதிரி. மற்ற வகுப்புகள் ஒழுங்கு என்று அர்த்தம் இல்லை. அவைகள் 99 சதவீதம் எனில்
எம் மாணவர்கள் 100% எனலாம். பாட ஆசிரியர் வராத ஒரு தருணம் ஒரே சத்தம். சரியாக சொல்வதெனில்
கூண்டிற்குள் குரங்குகளை அடைத்தது போன்ற சூழல். முதல்வர் மூக்கை நுழைப்பதற்குள் நான்
முந்திக் கொண்டேன். இரண்டாம் ஆண்டு மாணவர்களெனில் வகுப்பை இரண்டாக்குவதுதான் கடமையா.
உக்கிரத்துடன் நுழைந்தேன். ஆசிரியர் வந்ததற்கான ஒரு சமிக்கையும் அவர்கள் வெளிப்படுத்தவில்லை.
நிர்வாக அதிகாரத்தின் முன்பு ஆசிரியர்கள் வெறும் பொம்மை. இந்த உண்மையை நன்கு உணர்ந்ததால்
வெறும் பொம்மையாகக் கருதி பொருட்படுத்தாமல் இருந்திருக்கலாம்.
பொம்மை
ஆசிரியர்களிடம் அறிஞர்கள் உருவாகுவதில்லை. அறிஞர்களான ஆசிரியர்களே தம் வகுப்பில் மகத்தான
தலைவர்களையும் அறிஞர்களையும் வளர்த்திருக்கிறார்கள். அடிமைகளும் பொம்மைகளும் தம் மாணவர்களை
மனிதர்களாகக்கூட உருவாக்குவதில்லை. எம் வகுப்பில் ஒருபோதும் பொம்மையாக இருப்பதை நான்
விரும்பியதில்லை. அந்த நாளும் அப்படித்தான் உருவெடுத்தது.
உள்ளே
பத்து நிமிடமாக நின்று கவனிக்கிறேன். யாரும் என்னை கவனிப்பதாக தெரியவில்லை. ஒரு சிலருக்கு
படிப்படியாக குரங்கு மலை ஏறியதும் மாணவராக உருமாறி அமைதியானார்கள். சிலர் மரியாதைக்காக
எழுந்து நின்றார்கள். பாதி வகுப்பு அமைதியானது. மற்றவர்கள் உற்சாகம் இழந்தார்கள். உற்சாகம்
இழந்ததால் வகுப்பும் அமைதியானது. அவர்களுக்கு பாட கல்வி முறை உற்சாகமாகவே இருப்பதில்லை.
அன்று
நான் வழக்கமான முறையில் அமைதிபடுத்தவில்லை. ஓங்கிய குரலெடுத்து உருட்டிப் பார்க்கவில்லை.
அவர்களிடம் பிரதிபலிக்கின்ற ஒழுக்கம் இன்மைகளை சுட்டிக்காட்டி ஒழுக்கம் குறித்த அறிவுரைகளை
ஆர்ப்பரித்துக் கொட்டவில்லை. பெற்றோருக்கும் சமூகத்திற்கும் உங்களுக்கும் நீங்களே துரோகம்
செய்கிறீர்கள் என்பதைச் சுட்டி காட்டவில்லை. நீங்கள் மாணவர்களே இல்லை! மாட்டு மந்தை
போல் திரிகின்றீர்கள்! எப்படி மனிதராகுவீர்கள்! என்று உணர்ச்சிவசப்படவில்லை. தான்தோன்றித்தனத்தில்
மூழ்கிவிட்டீர்கள் என்ற வழக்கமான உண்மையை நிர்வாணப்படுத்தவில்லை.
வகுப்பு
மற்றும் விடுதி மாணவர்கள் குறித்த ஆய்வை தொடங்கியதிலிருந்து என் போக்கை படிப்படியாக
மாற்றியுள்ளேன். எதையும் செய்யாமல் பரிதாபமாக நின்று கொண்டிருந்தேன். வழக்கமில்லாத
அமைதியுடன் மாணவர்கள் என்னை கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களது கண்கள் பலவித உணர்வுகளால்
மின்னின. பரிதாபம், ஏளனம், வியப்பு, வெறுப்பு, வெறுமை, ஆணவம், அடக்கம். பணிவு, அலட்சியம்,
இயலாமை எல்லாம் கலந்து கதம்பமாக வகுப்பறை அமைதி கொண்டிருந்தது.
தீப்பொறி
அளவிற்கு பேச்சை தொடங்கினேன். எல்லோரும் இன்னும் பத்து நிமிடங்கள் பேசுங்கள் என்றேன்.
அவர்கள் சருகுகளை போல் உடனே பற்றிக் கொண்டார்கள். சிரிப்பும் அரட்டையும் பேச்சும் சேட்டையும்
அமைதியை பலாத்காரம் செய்து கொண்டிருந்தன. சில வினாடிகளில் ஓங்கி குரலெடுத்து ஒன்று
சொன்னேன். பத்து நிமிடத்திற்கு பிறகு நான் அழைப்பவர் முன்னே வந்துவிட வேண்டும். பத்து
நிமிடங்கள் பேசிய அனுபவத்தை இரண்டு நிமிடத்திற்கு குறையாமல் முன் நின்று பேசிவிட வேண்டும்.
உங்கள் நட்பார்ந்த பேச்சு உங்கள் அறிவை, உணர்வை, வாழ்வை, கருத்தை எப்படியாக பண்படுத்துகிறது
என்பதை எல்லோருக்கும் உணர்த்த வேண்டும். அதற்காக நீங்கள் பேச வேண்டும். பேச்சை தொடரலாம்
என்று முடித்தேன்.
எரிந்த
சருகுகள் பல் இளித்தன. கண்ணுக்குத் தெரியாத எல்லைகளை உருவாக்கிக் கொண்டார்கள். நெருக்கமாக
அமர்ந்திருந்தாலும் தனி தனி தீவுகளாக அவதரித்தார்கள். யாரும் பேசுவதாக இல்லை. மூன்று
நிமிட பொறுமைக்கு பின் பேச சொல்லி நினைவு படுத்தினேன். அமைதி வகுப்பறையைப் பிடித்து
உலுக்கிக் கொண்டிருந்தது. அவர்களைப் பேச வைத்து அமைதியை விரட்டிவிட எத்தனித்தேன். ஆசிரியர்
இல்லாவிட்டால் பேசுவீர்கள்தானே என்று வெளிநடப்பு செய்தேன். இரண்டு நிமிடம் காதுகளால்
கவனித்தேன். சிறு சலசலப்பு எழுவது போல் எழுந்து அணைந்தது மீண்டும் சலசலப்பு எழுந்து
அணைந்தது. எழுவதும் அணைவதும் கடல் அலை போல சலசலத்தன. பத்து நிமிடம் கடந்து உள்ளே நுழைந்தேன்.
சலசலத்த
குரலை அடையாளம் கண்டு அழைத்தேன். முன்னே வருமாறு பலரையும் பலமுறை அழைத்து விட்டேன்.
யாரும் வருவதாக இல்லை. சில காலத்திற்கு முன்பு இறந்த கணவருடன் எரித்துக் கொல்லப்படும்
பெண்கள் உயிருக்காக கெஞ்சுவார்களே. உடன்கட்டையில் ஏற்றிவிடாதீர்கள் என்று பெண்கள் கெஞ்சுவார்களே.
அதுபோல கெஞ்சினார்கள். எல்லோர் முன்பும் நிறுத்தி விடாதீர்கள் என்று ஒவ்வொரு மாணவர்களின்
கண்களும் கெஞ்சின. நாங்கள் முன் நின்று பேச அஞ்சுபவர்கள் என்பதை அறிவிக்க அஞ்சினர்.
நாங்கள் ஓநாயை போல கூட்டமாக சேர்ந்து வஞ்சிக்க பழகியவர்கள். தனி ஒரு புலி போல கர்ஜிக்கத்
தெரியாதவர்கள். எங்களை வகுப்பில் தனி ஒருவனாக முன்னே நிறுத்தி விடாதீர்கள். கெஞ்சினவர்கள்
எல்லோரும் பரிதாபமாக நின்று கொண்டிருந்தார்கள்.
சரி யாரும் முன்வரத் தேவையில்லை . நீங்கள் இருக்கும்
இடத்திலிருந்து பேசலாம் என்று அறிவித்தேன். யாரேனும் இரண்டு நிமிடங்கள் பேசி விட்டால்
எல்லோரும் அமர்ந்து விடலாம். அதற்காகவாவது பேசுங்கள் என்றேன். சிறு சிறு முனுமுனுப்பும்
புன்னகைகளும் வெளிப்பட்டன. ஆனால், யாரும் பேசுவதாக இல்லை. சரி, பத்து நிமிடம் பேசியதை
விட்டு விடுங்கள். நான்கு மணி நேரம் காட்சி போதையில் மூழ்குகிறீர்களே. அந்த காட்சிகளில்
இருந்து உங்கள் சிந்தனையை வெளிப்படுத்தலாமே. எப்படியாவது மாணவர்களை தனித்து பேச வைத்துவிட
வேண்டும் என்று முயன்றேன். எல்லையை எவ்வளவு தளர்த்தினாலும் அவர்கள் பேசுவதாக இல்லை.
ஒரு கேள்வி கேட்டேன். எத்தனை மதிப்பெண் எடுத்தால்
தேர்ச்சி என்றேன். 35 மதிப்பெண் என்றனர் சிலர். ஏன் எல்லோரும் சொல்லவில்லை? 35 மதிப்பெண்தான்
தேர்ச்சி என்பது சரிதானா என்று கேட்டேன். யாரும் பதில் சொல்லவில்லை, சிலரை தவிர. சரிதான்
என்பவர்கள் கை உயர்த்துங்கள் என்றேன். வெகு சிலர் கை உயர்த்தினார்கள். சரியல்ல தவறு
என்பவர்கள் கையை உயர்த்துங்கள் என்றேன். யாரும் உயர்த்தவே இல்லை. தேர்ச்சியின் மதிப்பு
35 சதவீதமல்ல வேறு என்பவர்கள் கையை உயர்த்துங்கள் என்றேன். யாரும் கை உயர்த்தவே இல்லை.
எது சரி என்று எங்களுக்கு தெரியாது என்பவர்கள் கையை உயர்த்துங்கள் என்றேன். அதற்கும்
கையை உயர்த்தவே இல்லை. எந்த கருத்தும் இல்லாதவர்களாக இருப்பதற்கு வெட்கப்பட வேண்டும்
என்று சொல்லி முடித்தேன்.
வெட்க உணர்ச்சி யாருக்காவது உதித்திருக்குமா
என்று அறிய முயன்றேன். அதற்காக கேள்வியை கேட்டு உரையாடலைத் தொடர்ந்தேன். ஏன் 35 எடுத்தால்
தேர்ச்சி என்று தெரியுமா?
பள்ளிக்கூடத்தில்
இருந்து அதுதான் வழக்கம் ஐயா. நான் எதிர்பாராத ஒரு மாணவன் பதில் சொன்னான். சரியோ தவறோ
பதில் சொன்னதற்காக பேசியவர்களைப் பாராட்டுங்கள் என்றேன். வகுப்பறை சூழலைக் கைதட்டு
சப்தங்கள் மென்மையாக அலங்கரித்தன. நான் விளக்கினேன். ஒரு துறையில் பிழைப்பதற்கான
தகுதி பெற 35 சதவீதம் அறிந்திருந்தால் போதும் என்கிறது
அறிவியல். ஆனால், அந்தத் துறையில் சிந்திக்கவும் செயல்படவும் வெற்றியடையவும் 65 சதவீதமான
பன்முகத் திறமைகள் தேவை என்கிறது சமூக விஞ்ஞானம். பன்முகத் திறமைகள் இல்லாமல் 100%
மதிப்பெண் எடுத்திருந்தாலும் வாழ்க்கையில் வெற்றியடைவது சாத்தியமில்லை.
ஒரு
மாணவர் நான் நன்றாக கிரிக்கெட் விளையாடுவேன் என்றார். ஒரு மாணவர் நான் நன்றாக சமைப்பேன்
என்றார். இன்னும் ஒருவர் பப்ஜி விளையாடுவதை வியந்தார். நான் விளக்கினேன். மொழி கலை
அறிவியல் சார்ந்த திறன்களை பெற்றிருக்க வேண்டும் என்பதாக புரிந்து கொள்ளுங்கள் என்றேன்.
பன்முகத்
திறன்களில் அடிப்படை திறனும், சிறப்பு திறனும், முதன்மை திறனும் பேச்சுத் திறன் மட்டுமே.
பேச்சுத் திறனை தொடர்ந்து எழுத்துத்திறன், கற்பனை திறன், படைப்புத்திறன், மொழித்திறன், அறிவியல் திறன், கலைத்திறன், விளையாட்டுத் திறன், தலைமைத் திறன், வழிநடத்தும் திறன், இணைந்து செயல்படுகின்ற திறன், விதிமுறைகளை உருவாக்குகின்ற திறன், விதிமுறைகளை மாற்றுகின்ற திறன், கட்டுப்படும் திறன், கட்டுப்படுத்தும் திறன், புதியன உருவாக்கும் திறன், பழையன கலைகின்ற திறன், முடிவெடுக்கும் திறன், சிக்கலான சூழல்களை எதிர்கொள்ளும் திறன், சூழ்நிலைகளை மாற்றும் திறன், எதிர்கால இலக்குகளை தீர்மானிக்கும் திறன், அறிவியல் கண்ணோட்டத்திறன், மாற்றங்களை அவதானிக்கும் திறன், சமூகத் தேவைகளை தீர்மானிக்கும் திறன், நடைமுறை உண்மைகளை நிரூபிக்கின்ற திறன் என்பதாக பன்முகத்
திறன்களின் பட்டியலை நீட்டித்துக் கொண்டே
போகலாம்.
உங்களை
எண்ணிப் பாருங்கள். உங்களால் அடிப்படைத் திறனான பேச்சை இரண்டு நிமிடம் கூட முன் நின்று
பேச முடியவில்லையே. என்ன செய்யப் போகிறீர்கள்? ஏனெனில், உங்களுக்கு உங்களைப் பற்றியும், உலகம், வாழ்க்கை
எதைப் பற்றியும் சொந்தமான சிந்தனையோ கருத்தோ உதயமாகவே இல்லை.
நீங்கள்
மாணவர்களாக வந்து விட்டீர்கள். யாராக திரும்பிச் செல்ல போகிறீர்கள்? நல்ல மனிதராக,
அறிஞராக, கலைஞராக, கவிஞராக, சான்றோராக, கருத்தாளராக, பேச்சாளராக இப்படியாக மனித குலம் புகழும்படி திரும்பிச்
செல்ல வேண்டும் என்பதை நாங்கள் விரும்புகிறோம். இந்த உலகம் அப்படித்தான் உங்களை வரவேற்க
ஏங்குகிறது. ஆனால், நீங்கள் எண்ணிப் பார்க்கிறீர்களா?
நீங்கள் யார்? இந்த உலகில் நீங்கள் யாராக இருக்கிறீர்கள்?
உங்கள் தனித்துவத்தை முதன்மைப்படுத்தி பதில் சொல்லுங்கள்.
பெயரைச் சொன்னார்கள். ஊரைச் சொன்னார்கள். பெற்றோரின்
தொழிலைச் சொன்னார்கள். படிப்பை சொன்னார்கள். மதத்தை சொன்னார்கள். அனைத்தையும் நான்
மறுத்து விட்டேன். உங்கள் பதில் உங்களது தனித்துவத்தை முதன்மைப்படுத்த வேண்டும் என்று
உறுதியாகச் சொன்னேன். அவர்கள் புரியாமல் நின்றார்கள். பெற்றோர், உற்றோர், பணம், நம்பிக்கை,
அடையாளம் எவற்றையும் துணைக்கு இழுக்காமல் பதில்
சொல்ல வேண்டும். மொழி, கலை, அறிவியல் சார்ந்த
உங்கள் தனித்துவத்தை அறிவிக்கும்படி பதில் சொல்லுங்கள் என்றேன். அனைவரும் அமைதியாக
நின்றார்கள்.
நான்
பேச்சாளர், நான் கவிஞர், நான் இசைக்கலைஞர், நான் நடன கலைஞர், நான் ஆய்வாளர், நான் பாடகர், நான் நாடக நடிகர், நான் எழுத்தாளர் இப்படியாக உங்கள் தனித்துவங்களை
அறிவிப்பதாக பதில் அமைய வேண்டும். ஆனால், அதற்கு
நீங்கள் உங்கள் தனித்துவத்தை கண்டுபிடித்து இருக்க வேண்டும்.
உங்கள் யாருக்கும் உங்களுடைய தனித்துவமான திறன்
எது என்று தெரியவில்லை. மொழி, கலை, அறிவியல் திறன் எது என்பதை முதலில் அறிய வேண்டும்.
உங்களது உடல் திறன், மனத் திறன், அறிவுத்திறன் பற்றி நீங்களே தெரிந்து கொள்ள வேண்டும்.
உங்கள் தனித்துவங்கள் இவற்றில்தான் இருக்கின்றன. முதலில் உங்கள் தனித்துவத்தை கண்டறிய
முயலுங்கள். உங்கள் தனித்துவங்களில் நின்று உலகையும், வாழ்வையும், பாடத்தையும், உங்களையும் சிந்திக்க பழகுங்கள். உங்கள் உழைப்பில்
உங்கள் தனித்துவங்களை வெளிப்படுத்துவதை இயல்பாக்குங்கள். உங்கள் இயல்பை தான்தோன்றித்தனம்
என்ற பள்ளத்தாக்கு படுகொலை செய்யாதீர்கள். திட்டமிட்ட வாழ்கை முறையில் வளப்படுத்த முயலுங்கள்.
உங்கள் வாழ்க்கையின் போக்கை சரியான திசைக்கு மாற்றித்தான் பாருங்களேன்.
மாணவர்கள் சற்று சலசலத்துப் பேசினார்கள். இவளுடன்
இருக்கும்வரை அவளும் மாறமாட்டாள், என்னையும் மாறவிடமாட்டாள் என்று சிரிக்கிறார்கள்.
இவன்
அப்பா 5 மணி அலாரத்தை காதின் அருகில் வைத்து விடுவார். இவன் அலாரத்தை அணைத்துவிட்டு
ஏழு மணிக்கு எழுந்து தாமதமாக வருவான்.
இவனும்
நல்லவன் இல்லை ஐயா என்னுடன் பப்ஜி விளையாடிவிட்டு தினமும் தாமதமாக தூங்குகிறான்.
இப்படியாக
குறை சொல்லி சலசலத்து பேசி சிரித்து கொண்டிருந்தார்கள்.
நான் உணர்த்த முயன்றேன். இந்த உலகில் எல்லாமே
மாற்றங்கள்தான். நீங்களும் நானும் மாற்றங்களுக்கு இடையில் தான் உரையாடுகிறோம். நேற்று
இருந்த நீங்கள் இன்று இல்லை. இன்று இருப்பது போலவே நாளை இருக்கப் போவதில்லை. பூமியும்
அப்படித்தான். நம் வாழ்க்கையும் அப்படித்தான்.
இந்த
உலகம் வாழ தகுதியற்றதாக மாறிவிட்டது. உணவும் நீரும் விஷமாகிவிட்டன. கல்வியும் மருத்துவமும்
தொழிலாகி விட்டன. சுற்றுச்சூழலும் காற்றும் குப்பையாகிவிட்டன. லாபவெறி போரில் மக்களும்
இயற்கையும் அனைத்துமாக அழிகின்றன. உயிரினம் வாழ தகுதி இல்லாத மண்டலமாக பூமி மாறி இருக்கிறது.
மனித சமூகத்தில் உள்ள லாபவெறி பேய்களால் பூமி பந்தாடப்படுகின்றது.
ஒரு
சதவீத பணக்காரர்கள் இயற்கையிடமிருந்தும் எளிமையான உழைக்கும் மக்களிடம் இருந்தும் பூமியை
சொத்தாக பறித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் 99 சதவீத மக்கள் வாழ்வதற்கு மண்ணில்லாமல்
திணறிக் கொண்டிருக்கிறார்கள். இயற்கையோ பேரழிவின் அபாயத்தில் இருக்கின்றது. இத்தகைய
நிலைமைகள்தான் பூமி கண்டடைந்துள்ள மாற்றத்தின் எதார்த்தங்கள். இந்த கொடிய மாற்றங்களுக்குள்தான்
நம் வாழ்க்கையும் மாற்றங்களின் மாற்றங்களாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
இந்த
பூமி என்னவாக மாறும்? நம் வாழ்க்கை என்னவாக மாறும்? நாம் ஒவ்வொருவரும் என்னவாக மாறுவோம்?
உலகை திட்டமிட்டு மாற்றப் பழகிய மனிதர்களைத் தவிர வேறு எந்த உயிரினமும் இந்த கேள்விகளை
முன்வைக்க வாய்ப்பே இல்லை. இயற்கையை திட்டமிட்டு மாற்றி அமைத்த மனிதர்களுக்குத்தான்
இப்படிப்பட்ட வரலாறும் வாய்ப்பும் இருக்கிறது. மனித குல வரலாற்றில் உருவெடுத்துள்ள
லாபவெறி நோயினால்தான் இந்த நிலைக்கு உலகம் ஆளாகியுள்ளது. எனவே இந்த கேள்வியை சிந்தனைத்
திறனில் முன்னெடுப்பதும், செயல்களால் விடை சொல்வதும் மனித குலத்திற்கு மட்டுமே உரிய
அறிவார்ந்த கடமை ஆகும்.
பேரறிவின்
பரிபூரணமான வெளிப்பாடு இயற்கையான மனிதகுலத்திடம் பேரன்பாக மட்டுமே வெளிப்படுகிறது.
அதனால்தான் வள்ளுவர் பிறர்களது துயரத்தை தன் துயரமாக உணர்ந்து செயல்படுவதையே அறிவு
என்கிறார்.
“அறிவினான்
ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல்
போற்றாக் கடை”-குறள் 315
மனிதகுல
வரலாற்றில் மகத்தான பேரறிஞர்கள் சான்றாகவும் திகழ்கிறார்கள்.
அறம் பாடிய ஔவைார், புத்தர், அம்பேத்கர், தந்தைபெரியார்,
காரல்மார்க்ஸ், ஜென்னிமார்க்ஸ், எங்கல்ஸ், பகத்சிங் போன்ற அனைத்து பேரறிஞர்களும் மனிதகுலத்தின்
மீதான இதயங்கனிந்த பேரன்பாளர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். நீங்கள் அறிஞர்களா என்பதை
சிந்தித்துப் பாருங்கள். வாழ்வின் மாற்றங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு
உங்கள் விடை என்னவாக இருக்கின்றது?
இரண்டு
வகை விடைகளுக்குதான் வழி இருக்கின்றது.
1.பேரன்புடைய
மனித குலத்தின் முயற்சியால் லாப வெறி பேய்களிடமிருந்து பூமி தப்பிப் பிழைக்குமா? நம்
குழந்தைகள் இயற்கையுடன் இணைந்து நிம்மதியாக வாழ்வதற்கான நல்லுலகம் பிறக்குமா?
2.
லாப வெறியின் கொடும் பசிக்கு பூமி ரத்தம் சிந்தி
பலியாகுமா?
இந்த
இரண்டு எதார்த்தமான கேள்விகளுக்கு இடையில்தான் நாம் மனித வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இரண்டு வகை கேள்விகளில் உங்கள் பதில் என்ன? அந்த
பதிலிலிருந்து நீங்கள் யாராக இருக்கப் போகிறீர்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
பூமிக்கு
இது வாழ்வா சாவா பிரச்சினை. பிரச்சனையின் எதார்த்தங்களை உணராதவர்களாக நாம் சுயநல போதையில்
தடுமாறிக்கொண்டு இருக்கிறோம். கண்ணாடித் தொட்டி உடைபடப் போவதை அறியாமல் சிறுசிறு கற்களுக்கும்
செடிகளுக்கும் இடையில் மறைந்து தப்பி பிழைப்பதாக மீன்கள் கற்பனை செய்வதைப்போல சுயநல
வெறியில் சாதுரியமாக பிழைத்து விடலாம் என்று கற்பனை செய்கிறோம்.
நாம் ஆட்டு மந்தைகள் அல்ல. சிந்திக்கும் திறன்
உள்ள மனிதர்கள் என்று நம்பினால் நம்மீதான மாற்றம் குறித்து முடிவெடுத்தாக வேண்டும்.
நமது
மாற்றமானது தாய்மொழித் திறனை கைவிட்டு சிந்தனை திறனை இழப்பதும், காட்சி போதை மற்றும்
போதை வஸ்துகளுக்கு பலியாகி செயல் திறனை இழப்பதும், சமூக உணர்வை அறுத்துக் கொண்டு சுயநல
வெறியில் பலியாவதும், சக மனித பொறுப்பின்றி தான்தோன்றித்தனத்தில் மூழ்குவதும் என்பதாக
அமைந்தால் நம் ஒவ்வொருவரின் உணர்வும் உழைப்பும் பூமி படுகொலை செய்யப்படுவதற்கு உதவுவதாக
முடிந்துவிடும்
நமது மாற்றமானது தாய்மொழித் திறனும், சிந்தனை
திறனும், செயல் திறனும், மனித குலத்தின் மீதான பேரன்பும், சமூகத் தேவை குறித்த கண்ணோட்டமும்,
சக மனித பொறுப்புணர்வும் என்பதாக அமைந்தால் நம்மால் பூமியை உயிரினங்கள் வாழ தகுதியுள்ள
நல்லுலகமாக மீட்க முடியும்.
நீங்கள் உங்களை சமூக மரியாதைக்குரிய மனிதர்களாக
மாற்றியாக வேண்டும். உங்கள் அன்றாட வாழ்வை திட்டமிட்டு வாழப் பழகுங்கள். நீங்கள் நிலத்தில்
மட்டும் வாழ்பவரல்ல. நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். ஒவ்வொரு நொடியிலும் இளமையின்
மரணத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். முதுமையின் பிரசவத்தை கருத்தரித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
ஒவ்வொரு நொடியும் உங்கள் வயதின் பயணமாகும். வயதின் பாதங்களுக்குப் பின்னோக்கி பயணிக்க
பாதைகளே கிடையாது. இளமையின் மரணத்திற்கு அழுவதோ
முதுமையின் தொடக்கத்திற்கு அதிர்வதோ அவசியமற்றது. பழைமைகளைப் படித்துக்கொள்வதும் புதுமைகளை
எட்டிப்பிடிப்பதும் மனித வாழ்வின் அவசியமாகும். ஏனெனில் இந்த எதார்த்தங்கள் நாம் இயற்கையுடன்
கைகுழுக்கி சிரித்து மகிழ்கின்ற தருணங்களாகவே நிகழ்கின்றன. எனவே உங்கள் நேரங்களைத்
திட்டமிட்டுப் பழகுங்கள்.
நீங்கள் தூங்கி எழுந்ததும் அன்றைய புதிய நாள்
உதயமாகின்றது. இரவில் தூக்கம் தழுவினால் அந்த நாள் நிறைவடைகிறது. ஒவ்வொரு நாளும் புதிதாகப்
பிறக்கப்போகிறீர்கள் என்பதை எண்ணி மகிழுங்கள். உங்கள் ஓர் ஆண்டிற்கான நேரத்திட்ட நோட்டை
உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். தூக்கம் தழுவுவதற்குள் நாளைய திட்டங்களை தயாரிக்க வேண்டும்.
நேற்றைய திட்டங்களில் பழகாமல் எப்படி புதிதாக நாளைய திட்டத்தை உருவாக்குவது என்று தயக்கம்
வர வேண்டும். எனவே நேற்றைய நிகழ்வுகளைத் திட்டங்கள்போல் மதிப்பிடுங்கள்.
நேற்று எத்தனை மணிக்கு தூங்கி எழுந்தீர்கள்?
காலை 6 என்பதாக வைத்துக்கொள்வோம்.
இரவு
எத்தனை மணிக்கு தூங்கச் சென்றீர்கள். இரவு 11 என்பதாக வைத்துக்கொள்வோம்.
இப்போது
நேரத்திட்ட நோட்டில் காலை 6 முதல் இரவு 11 வரையுள்ள நேரங்களை ஒரு மணி நேர திட்ட அளவுகளாகப்
பிரித்துக்கொள்ளுங்கள். அதாவது
காலை 6-7
/
7-8 / 8-9 /
9-10 / 10-11 / 11-12 /
மதியம் 12-01 /
01-02 / 02-03 / 03-04 /
மாலை 04-05 / 05-06 / 06-07 / 07-08
இரவு 08-09 / 09-10 /
10-11
ஒவ்வொரு மணி நேரத்திற்கும் வேலைத்திட்ட குறிப்பு எழுத இடம்
விட்டுக்கொள்ளுங்கள். அந்த இடத்தில் நேற்றைய பொழுதுகளில் என்னென்ன வேலைகளைத் திட்டமிட்டோ
அல்லது திட்டமின்றியோ செய்தீர்கள் என்பதை குறிப்பெடுங்கள். புதிய முயற்சி என்பதால்
நேற்றைய குறிப்பை எழுதவோ அல்லது நாளைய திட்டங்களைக் குறிக்கவோ முப்பது நிமிடங்கள் ஆகலாம்.
பொறுமையை அவசியம் பழகுங்கள்.
நீங்கள் நேற்றைய நிகழ்வுகளைக் குறிப்பெடுத்து முடித்துவிட்டீர்களா?
அவற்றிலிருந்து நாளைய வேலைத்திட்டத்தைப் பழக முயலுங்கள். நேற்றைய குறிப்பில் பல் துளக்கியது,
உடை உடுத்தியது, சாப்பிட்டது, நண்பர்களுடன் அரட்டை, தொலைபேசியில் மூழ்கியது இப்படியான
குறிப்புகளை தவிர்க்கவும். நீங்கள் வழக்கமான வேலைகளையும் பொத்தாம்பொதுவான வேலைகளையும்
திட்டமில்லாமலே செய்வீர்கள். அதனைப் படிப்படியாக நாளைய வேலைத்திட்டங்களிலிருந்து அகற்ற முயலுங்கள். துல்லியமான
வேலைகளுக்கு நேரம் குறியுங்கள்.
உங்கள் நேரத்திட்டங்கள் மதிப்பான வேலைத்திட்டங்களாக அமைய
சில ஆலோசனைகள்.
*உங்களை நீங்களே ஆச்சரியமாகவோ, வியப்பாகவோ, பெருமையாகவோ, புதுமையாகவோ
கருதும்படியான பயன்படத் தகுந்த ஒரு வேலையை தினந்தோறும் திட்டமிடுங்கள். விடுபடக்கூடாத
வேலைகளை உங்கள் திட்டங்களில் உறுதி செய்யுங்கள்.
*விடுபடக் கூடாத
திட்டங்களின் பட்டியல்
1.உடற் பயிற்சி – சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பதுபோல் உடல் ஆரோக்யம்
இருந்தால்தான் மற்ற எல்லாம் சாத்தியம்.
உடற்பயிற்சி என்றதும் உடலை அழகாக வைத்துக்கொள்வதற்காக என்று கருதுகிறீர்கள்.
அல்லது, உடலை வீரமாக வைத்துக் கொள்வதற்காக என்று கருதுகிறீர்கள். அழகு குறித்தும் வீரம்
குறித்தும் நீங்கள் வெளிப்படுத்தும் கருத்து என்ன தெரியுமா?
ஆடு மாடு மேய்த்த நமது பண்டைய காலத்திலிருந்து நீங்கள் இன்னும் வளரவே இல்லை
என்பதை நிரூபிக்கின்ற கருத்தாக உங்கள் செயல்கள் அமைந்திருக்கின்றன.
உடல் மீதான அழகை வெளிப்படுத்துதல் என்பதன் நோக்கம் என்ன? தனது பாலுறவு உரிமைக்காக
எதிர்பாலினத்தை கவர்கின்ற வெளிப்பாடாக ஆதிகாலத்திலிருந்தே கட்டமைந்திருக்கிறது.
மனிதகுலம் அழகின் இலக்கணத்தை இயற்கையான மிருக நிலையிலிருந்து பல்வேறு பண்பட்ட நிலைக்கு உயர்த்தியிருக்கிறது.
இன்றைய மனிதகுலத்தின் மேன்மையிலிருந்து அழகைப் புரிந்துகொள்ள முடிகின்றதா?
அழகு என்பது இயற்கையை நேசிப்பது, மனித முகங்களை மனதார நேசிப்பது, மனிதர்களோடு
மகிழ்ச்சியாக உழைப்பது, மனிதகுலம் நேசிக்கும் முகமாக தன்னுருவத்தை சிந்தனைகளாலும் செயல்களாலும்
பண்படுத்திக்கொள்வது, ஒப்பற்ற பேரன்பினால் உலகத்தை வசீகரிப்பது, மனிதகுலத்தின் வசீகரிப்பில்
இணையும் காதலருடன் உயிர் கலப்பது, உலகத்திற்கு ஆபத்தெனில் தாய்ப்பறவையின் சீற்றத்துடன்
எதிர்கொள்வது, ஒற்றுமையின் பெரும் உழைப்பால் தலைமுறைகளின் நல்லுலகிற்கு வழி சமைப்பது,
உயிர் போகும் நிலை எனினும் புன்னகையுடன் விடைபெறுவது, இத்தகைய பேரழகாக மனிதகுல வளர்ச்சியில்
அழகு பரிணமித்திருக்கிறது. ஆனால் மனிதகுலத்தின் தேவைக்கேற்றபடி நீங்கள் பரிணமிக்கவில்லை.
மிருக வாழ்க்கையில் வெளிப்படுவதைப்போல எதிர்பாலினத் தேடல் என்ற அளவிலேயே உடலின்
அழகியலை முடித்துக்கொள்கிறீர்கள். உடலின் ஆன்மாவாகிய எண்ணங்களையும் சிந்தனைகளையும்
சமூகளாவிய செயல்பாடுகளையும் அழகுபடுத்தாதவரை உடலின் பரிபூரண அழகை உங்களால் எட்ட முடியாது.
இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாத நீங்கள் இலாபவெறி
பேய்களின் அழகுசாதனப் பொருட்களில் பலியாகிறீர்கள்.
முகப்பூச்சு சாயங்கள், உதட்டுச்சாயங்கள், பொலிவாகக் காட்டும் ஆடம்பர ஆபரணங்கள்,
தொப்பை குறைக்கும் வஸ்துக்கள், உடலை கட்டுக்கோப்பாகவும் கவர்ச்சியாகவும் மாற்றும் வஸ்துக்கள்,
போன்றவற்றை பயன்படுத்துவதில் ஈக்களைப்போல மொய்க்கிறீர்கள். உணவையும் உழைப்பையும் சமச்சீராக்கிக்
கொண்டாலே அடிப்டை அழகினைப் பெற்றுவிடலாம். ஆனால், உடல் உழைப்பை அலட்சியமாகக் கருதும்
நீங்கள் இலாபவெறி பேய்களிடம் அழகிற்காகப் பிச்சையெடுக்கும் நிலைக்கு தாழ்ந்திருக்கிறீர்களே.
இந்த அவலத்தை உங்களால் உணர முடிகிறதா?
கட்டுக்கோப்பான உடல் என்பது அழகிற்காக மட்டுமல்ல வீரத்திற்காக என்றும் கருதுகிறீர்கள். மனிதகுலத்தின் முன்னேற்றமானது வீரம்
என்பதை பேரன்பின் வெளிப்பாடாக நிரூபிக்கிறது.
“அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை” என்ற 76ம் திருக்குறளும் மனிதகுல ஒழுக்கங்களுக்கும்
வீரத்திற்கும் அன்பே பிறப்பிடமாகிறது என்பதை உணர்த்துகிறது.
வீரம் குறித்த உங்கள் கண்ணோட்டத்தில் பேரன்பு வெளிப்படுகிறதா? இலாபவெறி பேய்களிடமிருந்து
உலகை மீட்பதற்கு உங்கள் வீரம் பயன்படுமா? உங்கள் தற்காப்புத் திறன்கள் மனிதகுலத்தை
பாதுகாக்கின்ற பேரன்பாக வெளிப்படாவிட்டால் வீரம் வெறும் வீண் விவகாரங்கள்தானே.
விவகாரங்கள் செய்யும் உங்கள் வீரர்களைப் பாருங்கள். சகமனிதர்களை மதிக்காத அகந்தைகளாகத்
திரிகிறார்கள். சுயநலவெறி போதையும் அலட்சியமும் நிறைந்த பார்வைகளால் திமிராகப் பார்க்கிறார்கள்.
சமூகப் பொறுப்பின்றி மந்தைகளாகத் திரிகிறார்கள். சமூக ஒழுக்கங்களின்றி குரங்குக் கூட்டம்போல
பொதுவெளியில் அர்த்தமின்றி கத்துகிறார்கள். எளியவர்கள் மீது ஓநாய்கள்போல பாய்கிறார்கள்.
இலாபவெறி பேய்களின் வளர்ப்பு பிராணிகள்போல வாலாட்டுகிறார்கள். சிந்தனைத்திறனையும் செயல்திறனையும்
பறிகொடுத்து இலாபவெறியின் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து போகிறார்கள். சுயநலவெறி, சாதிவெறி, மதவெறி, இனவெறி, போதைவெறி,
தான்தோன்றித்தனம், தன்னகங்காரம், அலட்சியம், அகந்தை அனைத்தும் கலந்த சாக்கடையாக துர்நாற்றமெடுக்கிறார்கள்.
பேரன்பிற்குரிய வீரர்களாக இவர்களை எங்கேயாவது காண முடிகிறதா?
குரங்குகள் போல கூச்சலிடுவது, வீரமிக்க காளைகள்போல் சண்டையிடுவது, குற்ற உணர்ச்சியின்றி
வன்முறையில் ஈடுபடுவது என்பதெல்லாம் வீரத்தின் அளவுகோளாகப் பழங்காலத்தில் திகழ்ந்தது.
அது ஆடுமாடு மேய்த்துத் திரிந்த மேய்ச்சல் காலத்தின் வீரம். இன்றைய நாகரிக காலத்தில்
வீரத்தின் அளவுகோள் வேறுவிதமாகப் பண்பட்டுள்ளது. இலாபவெறிப் பேய்களிடமிருந்து உலகை
மீட்டெடுத்து நம் தலைமுறைகளுக்கு நல்லுலகாகப் பரிசளிப்பதிலுள்ள ஆகப்பெரிய சவால்களை
எதிர்கொள்வதுதான் தற்காலத்தில் பண்பட்டுள்ள வீரத்தின் அளவுகோளாகும்.
ஆகப்பெரிய சவால்களை எதிர்கொள்கின்ற துணிச்சலை உங்கள் சுயரூபம் பெற்றுள்ளதா?
பலவீனங்களும் குறைபாடுகளும் நிறைந்த உங்கள் சுயரூபத்தை நேருக்குநேராக எதிர்கொள்ளும்
துணிச்சல் உங்களுக்கு இருக்கின்றதா?
பலவீனங்களைக் களைந்து குறைபாடுகளைத் திருத்திக்கொள்கின்ற துணிச்சல் உங்களுக்கு
இருக்கின்றதா?
மனிதகுல மேன்மைக்கு கடமையாற்றும் துணிச்சல் இருக்கின்றதா?
இல்லையெனில் ஆகப்பெரிய கோழை நீங்கள்தான்.
வீரம் என்பது தெளிந்த அறிவினால் கிட்டும் உள்ளத் துணிச்சலில் வெளிப்படுவதாகும்.
மாறாக, நீங்கள் கருதுவதுபோல் தசைகளின் இருக்கங்களில் இருப்பதல்ல.
அறிவின் உயர்ந்த வெளிப்பாடே பேரன்பாகிறது. அதனால்தான் பேரறிவாளர்கள் அனைவரும்
மனிதகுலத்தின் மேன்மையில் பேரன்பு கொண்டிருந்தார்கள். புத்தர், மார்க்ஸ், ஜென்னி, அம்பேத்கர்,
பெரியார் போன்றவர்கள் அனைவரும் உதாரணமாவர்.
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை” என்ற 322ம் திருக்குறளும் அறிவின் ஆகப்பெரியது
பேரன்பே என்பதை உணர்த்துகின்றது.
உடற்பயிற்சி என்பது உடலை வேகமாகவும் தசைத்திறனாகவும் வைத்திருத்தல் என்றளவில்
மட்டும் புரிந்துகொள்வது தவறு என்பதை உணர்ந்திருப்பீர்கள்தானே. உடற்பயிற்சியால் உங்களுக்கு
விளைவது என்னென்ன என்பதை உணர்கிறீர்கள்தானே?
உங்கள் உடலின் வழியாகத்தான் நீங்கள் சிந்தனைத்திறன் மிக்க அறிஞராக செயலாற்ற
முடியும்.
உங்கள் உடலின் வழியாகத்தான் அறிவினால் கனிந்த பேரன்பை இயற்கையால் கனிந்த மனிதகுலத்திடம்
வெளிப்படுத்த முடியும்.
உங்கள் உடலின் வழியாகத்தான் இலாபவெறி பேய்களிடமிருந்து உலகை மீட்கின்ற வீரம்
செறிந்த போர்களில் வினையாற்ற முடியும்.
உங்கள் உடலின் வழியாக அறிவும் அன்பும் வீரமும் உலகிற்கு மாலையாகச் சூடப்படுகிறது
எனில் நீங்கள் பேரழகாக உணரப்படுவதை யாரால் தடுக்க முடியும்! ஏனெனில், அழகு என்பது பொருளில்
வெளிப்படுவது அல்ல. மனிதகுலத்தின் அறிவால் உணரப்படுவது.
மனிதகுலத்தின் மேன்மை உங்கள் பேரழகை உணர்ந்து மகிழும்படி உடலைத் தகுதிபடுத்திக்
கொள்ளுங்கள்.
மூச்சுப் பயிற்சி, தசைப் பயிற்சி, மனப் பயிற்சி, குரல் பயிற்சி, சிந்தனைப் பயிற்சி, பேச்சுப் பயிற்சி, செயல் பயிற்சி,
கலை பயிற்சி, அறிவியல் பயிற்சி அனைத்திற்கும் அடித்தளமாக உடலின் ஆரோக்கியம் திகழ்கிறது.
எனவே, நோயின்றி உடலை ஆரோக்கியமாகப் பராமரிப்பதற்காக நாள்தோறும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்காக
நேரத்தைத் திட்டமிடுங்கள்.
2.விளையாட்டு - இயற்கைக்கும்,
உடலுக்கும், மனதிற்கும், அறிவிற்கும், சகமனித அறத்திற்கும், உறவிற்கும், உணர்விற்கும், செயலுக்கும் அத்தனைக்கும் ஒருங்கிணைவு
குறையாதபடி திறனை வழங்கக்கூடிய அனைத்து விளையாட்டுகளிலும் ஈடுபடும் பண்பாட்டை உறுதிபடத்
திட்டமிடுங்கள்.
விளையாட்டு என்பது வினையாற்று எனப் பொருள்படும். ஏனெனில்
விளையாட்டுதான் குழந்தைப் பருவத்திலிருந்து வினையாற்றப் பக்குவப்படுத்துகிறது. விளையாட்டுதான்
வாழ்க்கைக்குத் தேவையான விதிகளையும் பக்குவங்களையும் பழக்கப்படுத்துகின்றது. உடல் மற்றும்
செயல் திறன்களை வெளிப்படுத்தவும், முடிவெடுக்கவும், விதிமுறைகளுக்கு கட்டுப்படவும்,
ஒழுக்கத்தைக் கடைபிடிக்கவும், மனித உறவுகளை மேன்மைப்படுத்தவும், புதிய சவால்களை எதிர்கொள்ளவும்
அத்தனைக்கும் மனிதர்களைத் தகுதிப்படுத்துவது விளையாட்டுகளே.
இன்று நமது விளையாட்டுக்கள் துரோகம் நிறைந்த சமூகக்கேடுகளாக
இருக்கின்றன. விளையாடுவதற்கு தகுதியற்றதாகவும் வாழ்வில் வினையாற்றுவதற்கு சிறிதும்
தொடர்பற்றதாகவும் திகழ்கின்றன. இவற்றின் முழுமையைப் பரிபூரணமாக உணர்ந்தால் அறிவற்ற
சில பேதைத்தனங்களாகவும், பிணத்தில் பணம் பார்க்கும் இலாபவெறி கொலைகளாகவும், வாழ்க்கையை
முடக்கும் காட்சி போதைகளாகவும் திகழகின்றன. இவற்றை விளையாட்டு என்ற பெயரில் விளையாடுவது
மனிதகுல முன்னேற்றத்திற்கே எதிரானதாகும்.
PUBG, FREE FIRE MAX, CALL OF DUTY போன்ற நவீன போர்முறைகளான
வன்முறைகள். CLASH OF GLANCE என்ற பழைய போர் முறைகளான வன்முறைகள். இவை இளந்தலைமுறைகள்
விரும்பி பலியாகின்ற காட்சிபோதைகளாகும். குட்கா, சாராயம், கஞ்சா, புகை போன்ற போதை வஸ்துகளுக்கும்
மேலான காட்சிபோதைகளே இவைகள். எல்லா போதைகளும் வன்முறையும் குற்றங்களையும் இயல்பாக்கும்
தூண்டுதல்களே. காட்சி போதைகளின் அடிநாதமே வன்முறைகளையும் குற்றச்செயல்களையும் சமூகக்
குற்றமாக உணராதபடி இயல்பாக்குவதே. இளந்தலைமுறைகளின் ஆழ்மன சமூக உணர்வோட்டத்தில் மனிதகுலத்திற்கு
எதிரான கட்டமைப்பை இலாபவெறி பேய்களுக்குச் சாதகமாக நடைமுறைப்படுத்துதே காட்சி போதைகளின்
நோக்கங்களாகும்.
சமூகத் தேவையின் அடிப்படையிலான சிந்தனைத் திறன்களையும் செயல்
திறன்களையும் இளந்தலைமுறைகளின் ஆழ்மனதிலிருந்து துண்டித்து சோலியை முடிப்பதே அனைத்து
போதைகளின் நடைமுறை திட்டங்களாகும். எனவே விளையாட்டு என்ற பெயரில் உலவுகின்ற விசமத்தனமான
காட்சி போதைகளிலிருந்து விடுபடுவதை விளையாட்டுத் திட்டங்களில் உறுதியாக இணைத்துக்கொள்ளுங்கள்.
3.படித்தல் – பாடத்திட்டங்களில் தேர்ச்சி பெறுவதற்காகவும் அவற்றை சிந்திக்கப்
பழகுவதற்காகவும் திட்டமிடுங்கள். பிறருக்கு ஆசிரியரைப்போல சொல்லித்தரும் கற்பனை உணர்ச்சியுடனும்
நாடக உணர்ச்சியுடனும் படிக்கவும். 35 சதவிகித தேர்ச்சிக்கு உறுதியாவதுடன் 65 சதவிகித
பன்முகத் திறன்களுக்கு அடிப்படையான கலை மற்றும் அறிவியல் இலக்கியங்களையும் படிக்கத்
திட்டமிடுங்கள்.
4.மொழித்திறன் - தாய்மொழித் திறனில்
புலமையை வளர்த்துக்கொள்ள உழைக்கவும். தாய்மொழியில் கலந்துரையாடவும், விவாதிக்கவும்,
எழுதவும், வாசிக்கவும், ஆற்றலுடன் பேசவும் இயல்பாகும்படி பழகுங்கள். கலை இலக்கியம்,
அறிவியல் இலக்கியம் அனைத்தையும் பயிற்சி செய்யுங்கள். தாய்மொழித் திறனின்றி வேறெந்த
மொழியிலும் வேறெந்த துறையிலும் ஆளுமை பெற இயலாது என்பது மொழியியல் உண்மை. எனவே தாய்மொழித்
திறனை முதன்மையாகத் தொடர்ந்து விருப்பமொழியோ அல்லது நிர்பந்த மொழியோ தேவைக்கு ஏற்றபடி
பயிற்சி செய்யத் திட்டமிடுங்கள்.
5.கலைத்திறன் – நீங்கள் எந்த கலையில் தனித்துவமாக இருக்கிறீர்கள். கதை,
கவிதை, பாட்டு, இசை, ஓவியம், நாடகம் இன்னும் பலவிதமான கலைகள் இருக்கின்றன. உங்களது
ஆர்வமும் திறனும் எந்தக் கலைகளில் இருக்கின்றது என்பதை கண்டறிந்து உழைக்கப் பழகுங்கள்.
மனித குலத்தின் அறிவியல் பூர்வமான சேவைகள் அனைத்தும் கலைகளின் வழியாகவே நிகழ்கின்றன. உங்கள் அறிவின் உச்சத்திற்கு
கலை எனும் சிறகு இன்றியமையாததாகும்.
6.அறிவியல் திறன் – நாள்தோறும் அறிவியல் உண்மைகளை உணர முயல்வதற்காக உழைத்துப்
பழகுங்கள். அறிவியல்களில் உயர்ந்த வடிவம் அரசியல் என்கிறது சமூகவிஞ்ஞானம். எனவே, இயற்பியல்
முதல் அரசியல் வரை அனைத்தும் அறிந்துகொள்ளும்படி உழைத்துப் பழகுங்கள்.
7.உதவி செய்யுங்கள் – நீங்கள் சார்ந்திருக்கும் குடும்பத்திற்கும் மனிதகுலத்திற்கும்
உதவுவதற்காக நாளொன்றுக்கு ஒரு மணி நேரமாவது ஒதுக்குங்கள். மனப்பூர்வமான உழைப்பை உதவி
மனப்பான்மையிலிருந்தும் சமூக அக்கறையிலிருந்துமே பழக முடியும். உதவி மனப்பான்மையோடு
உழைக்காமல் உண்பதற்கு வெட்கப்பட முயலுங்கள்.
8.காட்சி ஊடக தொடர்பை மதிப்பாய்வு செய்யுங்கள் – நீங்கள் காட்சி ஊடகங்களில் மூழ்கிய அனுபவங்கள் எத்தனை
நேரம் என்பதை மதிப்பிடுங்கள். அதனால் உங்களது கருத்தாளுமைக்கும், அறிவுத் திறனுக்கும்,
உள்ளம் பண்படுதலுக்கும் எத்தகைய உதவிகள் நிகழ்ந்துள்ளன என்பதை விளக்கிப் பழகுங்கள்.
நீங்கள் செலவழித்த நேரத்தைவிட நீங்கள் பண்பட்ட ஆழம் அதிகமாக இல்லாவி்ட்டால் காட்சிபோதை
என்ற பேராபத்திற்குள் பயணித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று பொருள்.
9.நேரத்திட்ட மதிப்பாய்வு
ஒவ்வொரு நாளும் தூங்குவதற்கு முன்பு வேலைத்திட்டத்தை மதிப்பீடு
செய்து நாளையத் திட்டத்தை உறுதி செய்துவிட்டு தூங்குங்கள். மதிப்பீட்டில் பொறுமையாகவும்
நேர்மையாகவும் இருக்கப் பழகுங்கள். நிறைவேற்றிய திட்டத்தை மகிழ்ச்சிக் குறியீடு செய்யுங்கள்.
நிறைவேற்றத் தவறிய திட்டங்களைப் பரிசீலனை செய்து மனதளவில் கற்றுக்கொண்டு நிறைவேற்றும்
தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். நேரத்திட்டத்திற்குத் தேவையான பொறுமை நாளடைவில் பழகிவிடும்
என்பது மட்டுமல்ல. பொறுமை அவசியப்படாத அளவிற்கு வேகம் உயிர்பெற்றுவிடும் என்பதை உறுதியாக
நம்பலாம்.
*உங்கள் நேரத்திட்டத்தை நடைமுறை படுத்துகின்ற வழிமுறைகள்
நீங்கள்
தனிமனிதராக இருப்பதைத் தவிர்க்கப் பழகுங்கள். நல்ல நண்பர்களுடன் இணைந்து வாழுங்கள்.
சரியான நண்பரை உருவாக்கிக்கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் தன்னை மூன்று நண்பர்கள் அடங்கிய
குழுவில் ஒருவராகப் பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள். எப்போதும் வாழ்க்கையின் இலக்குகளுக்கு
தனது நண்பர் குழுவின் வழிகாட்டுதலை துணையாகக் கொண்டு பயணிக்கின்ற பண்பாட்டை வளர்த்துக்
கொள்ளுங்கள். இப்பொழுது உங்களிடம் பூரித்துக்கொண்டிருப்பதெல்லாம் நட்பே இல்லை. அவிழ்த்துவிட்டால்
சிதறி பறக்கின்ற கூண்டு பறவைகள். அவ்வளவுதான் உங்கள் நட்பு.
நட்பிற்கு
இலக்கணமாக வள்ளுவரின் கவிதைகளைப் படித்துப்பாருங்கள். மார்க்ஸ் எங்கல்ஸ் வரலாற்று கதையைக்
கேட்டுப்பாருங்கள். நட்பின் வரையறைகளை நான் சுட்டிக்காட்டுகின்றேன்.
சரிகளை
உணர்த்துவதும், தவறுகளைக் களைவதும், நடத்தை முறைகளை ஒழுங்குபடுத்துவதும், வாழ்க்கைமுறைகளில்
உதவுவதும், இலக்குகளை நெறிப்படுத்துவதும், சான்றோராக உயர்த்துவதும் நண்பர்களின் இயல்பாகும்.
இந்த இயல்பிற்குள் எல்லையற்ற மகிழ்ச்சியையும், இன்பத்தையும், உறவுகளையும், அரவணைப்பையும்,
நினைவுகளையும், பிரிக்க முடியாத பிணைப்புகளையும் நாடி நரம்பு மண்டலங்களாக உயிர் கொண்டிருப்பது
நட்பு. உங்களது நட்பு அனுபவங்களை உரசிப் பாருங்கள். இத்தகைய விளைச்சல்களா? அல்லது வெறும்
களைகளா? நட்பு என்ற பெயரில் வேறு எதையோ செய்கிறீர்கள் என்பது என் மதிப்பீடு.
உங்களைப்பற்றிய
என் முடிவுகளை சொல்கிறேன். இல்லை என்று மறுப்பவர்கள் இருந்தால் சொல்லுங்கள். நான் விடுதியிலும்
பல வகுப்புகளிலும் ஆராய்ந்து புரிந்துகொண்ட உண்மைகளை, அவர்கள் மறுக்காமல் ஒப்புக்கொண்ட
உண்மைகளை உங்களிடம் சொல்கிறேன். நீங்கள் மறுப்பதென்றால் தெரியப்படுத்துங்கள்.
இயல்பாகவே
நீங்கள் நண்பர்களாக வாழ தகுதியற்றவர்களாக இருக்கிறீர்கள். இன்னும் சரியாக சொல்வதென்றால்
உங்கள் உலகத்தில் உங்கள் ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. உங்கள் உள்ளத்தில்
நீங்கள் சகமனிதர்களே இல்லாத அனாதைகளாக நடமாடிக் கொண்டிருக்கிறீர்கள். மனித உறவுகள் அனைத்தும்
உங்களது நான் என்ற அகந்தைக்கு விளையாட்டு பொம்மைகள். மனித உறவின் மதிப்பென்பது உங்கள்
உலகில் அவ்வளவுதான்.
நான்
என்பது உங்கள் தாழ்வு மனப்பான்மையின் முகமூடி என்பது உங்களுக்குத் தெரியுமா?
நான்
என்பது உங்கள் தன்னகங்காரத்தின் தீப்பொறி என்பது உங்களுக்குத் தெரியுமா?
உங்களது
மூத்த தலைமுறைகளிடம் இருக்கின்ற நான் என்ற உணர்வும், உங்களிடம் இருக்கின்ற நான் என்ற
உணர்வும் அடிப்படையிலேயே நேரெதிரானவை என்பது உங்களுக்குத் தெரியுமா?
அவர்களது
நான் என்பது நாங்கள் என்ற கூட்டத்தின் உள்ளடக்கமாக திகழ்ந்தது. உங்களது நான் வெறுமையின்
அடையாளமாகவே முடிகின்றது.
மூத்த தலைமுறைகள் சக மனிதர்களுடன் முரண்பட்டாலும்
மனித உறவுகளை மறுப்பவர்கள் இல்லை. எப்படிப்பட்ட மனிதர்களாக இருந்தாலும் அவர்களிடம்
கற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடையவர்கள் மூத்த தலைமுறைகள். அவர்களின் நான்
என்ற உணர்விற்கு எல்லா மனிதர்களுமே அனுபவமாகவும் அறிவாகவும் திகழ்ந்தார்கள். ஆனால்,
உங்களிடமுள்ள நான் என்ற அகந்தை மனிதர்களிடம் கற்க முடியும் என்ற நம்பிக்கையை துண்டித்துக்
கொண்டுள்ளது. யாரும் எங்களுக்கு எதுவும் கற்றுத்தர தேவையில்லை. நாங்கள் சரியாகவே இருக்கிறோம்.
எங்களை நாங்களே வழிநடத்திக் கொள்வோம். எல்லாம் எங்களுக்கு தெரியும்.
உங்களது
நான் என்ற அகந்தை தன்னகங்கார மமதையில் கட்டமைந்துள்ளது. அதனால்தான் மற்ற மனிதர்களின்
அறிவும் அனுபவமும் அக்கறையும் உங்களுக்கு அலட்சியமாகவும் நகைப்புக்குரியதாகவும் வெளிப்படுகிறது.
அப்படி வெளிப்படுத்தாவிட்டால் உங்களது நான் ஒன்றும் இல்லாததாக உடைந்துபோகும். அப்படி
ஓர் உடைவு நிகழக்கூடாது என்ற மீப்பெரும் அச்சத்துடனே நீங்கள் நடமாடுகிறீர்கள். நான்
என்ற அகந்தையை பாதுகாக்க முயல்கிறீர்கள். அது உடையும் நிலை வந்துவிட்டால் எத்தகைய வன்முறையிலும்
ஈடுபட துணிகிறீர்கள். உங்கள் பேரச்சம் தன்னகங்காரப் பாம்பாக படம் எடுத்தாட தொடங்குகிறது.
உங்கள் மீது அக்கறை கொண்டுள்ளவர்களின் அன்பைக்கூட
ஆழ அகல உணர முடியாதவர்களாகவே இருக்கிறீர்கள். யாராக இருந்தால் என்ன? எல்லோரும் உங்கள்
ஆழ்மனதிற்கு வெறும் விளையாட்டு பொம்மைகள்தானே.
சிந்தனைக்கு தகுதி இல்லாத உங்கள் நான் எனும்
அகந்தை
செயல் திறனுக்கு தகுதி இல்லாத உங்கள் நான் எனும்
அகந்தை
கருத்தாளுமைக்கு தகுதி இல்லாத உங்கள் நான் எனும்
அகந்தை
சமூகத் தேவைகளைப் பொருட்படுத்தாத உங்கள் நான்
எனும் அகந்தை
சக
மனித உறவுகளைப் பொருட்படுத்தாத உங்கள் நான் எனும் அகந்தை
தாய்மொழித்
திறன் இழப்பாலும் காட்சி போதை விஷத்தாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது
நான்
என்ற உங்களது அகந்தையை கட்டமைத்த பரம்பொருள் யார் தெரியுமா?
உலகையே
ஏப்பம்விடத் துடிக்கின்ற லாப வெறி பேய்களே அப்பரம்பொருள்!
உலகம் பறிபோவதைப் பற்றி உங்களுக்கு ஏது கவலை!
உலகை
கொன்றால் என்ன, உயிர்களைக் கொன்றால் என்ன,
நேசித்து வாழும் மனிதர்களைக் கொன்றால் என்ன, உங்களால் உணர முடியவாப் போகிறது?
லாபவெறி பேய்களுக்கு உணர்வுகளை அடகு வைக்கத்
துணிந்தவர்கள்தானே நீங்கள்!
எல்லா வன்முறைகளையும் விளையாட்டுகளாகவே உணர கற்றுக்
கொண்டவர்கள்தானே நீங்கள்! ஆனால் இப்படியே உங்களால் இருந்து விட முடியுமா?
உண்ணும்
உணவில் உங்கள் உயிர் துளிர்க்காதா?
போர்வெறியில்
செத்து முடியும் அப்பாவி குழந்தைகளின் கதறல்கள் உங்கள் ரத்தத்தில் ஒலிக்காமல் இருக்குமா?
உங்களின்
தாயாகவும் சகோதரிகளாகவும் அவர்களை ஒத்தவர்களாகவும் திகழ்கின்ற பெண்களின் மீதான வன்முறைகளும்
கதறல்ளும் உங்கள் இதயத்தின் ஆழத்தில் அதிராமல் அடங்குமா?
பாலுக்கு
ஏங்கி இறந்த குழந்தைகளும்
வேலைக்கு
ஏங்கி மடிந்த இளைஞர்களும்
வானம்
ஒன்றே வீடு
வேறு
கதி ஏது என்று வெம்பி சாகின்ற ஏழைகளும்
உங்களை
உரிமையோடு கேட்க மாட்டார்களா
எங்கள்
பிணத்தில் உயிர்வாழும் பிண்டமே
மனித
உறவை அறுப்பது நியாயமா?
உங்கள்
உறக்கத்தின் ஆழக் கனவில் இடைமறித்து கேட்பார்கள்தானே!
மனிதகுலத்தின்
மீது பேரன்பும் சமூக அக்கறையும் உள்ள ஒரு மனிதராக இருந்து கொண்டு உங்களை அணுகினால்
மிகப்பெரும் கோபத்திற்கு ஆட்படும் நிலை வருகிறது. ஆனால் மூத்த தலைமுறை என்ற பொறுப்பில்
நின்று அணுகும் போது உங்கள் தான்தோன்றித்தனங்களுக்கு ஆட்பட்டுள்ள நிலைமைகள் மீது மிகப்பெரும்
அளவில் பரிதாபமே எழுகிறது.
நீங்கள்
இந்த பூமியை காப்பாற்றுவது இருக்கட்டும்.
இந்த
பூமியை நல்லுலகமாக மீட்டு நிம்மதியாக வாழ்வீர்களா என்பது இருக்கட்டும்.
உங்களிடமிருந்து
உங்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்வீர்களா என்பதுதான் மிகுந்த கவலையாக உருவெடுக்கிறது.
உங்களது இந்த பரிதாப நிலையை என்னவென்று விளக்குவது.
இந்த நிமிடம்வரை நாங்கள் முயல்வதெல்லாம் உங்களிடமிருந்து
உங்களை மீட்பதற்காகத்தான்.
உள்சரக்கில்லாத
உங்கள் நான் என்பது தன்னகங்காரமாகவும் தாழ்வு மனப்பான்மையாகவும் உருவெடுத்துள்ளதே
அதனை ஒழித்துக்கட்டுங்கள்.
சமூகத்
தேவைகளுக்கும் மனித உறவுகளுக்கும் மேலாக எந்த அகந்தையும் தேவையில்லை என்பதை புரிந்து
கொள்ளுங்கள்.
மனித
முகங்களை பார்த்து மகிழுங்கள்.
நாள்தோறும் மனித உறவுகளை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
எல்லா
சூழல்களிலும் மனித உறவுகளை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
அதிகாரம்
அடக்கம் எதுவும் தேவையில்லை. ஏனெனில், இவை சக மனித உணர்வுக்கு மிகவும் கீழானவை.
தூங்கி எழுந்ததிலிருந்து மீண்டும் தூங்கும்வரை
மனித உறவுகளைப் புதுப்பித்துக்கொண்டே இருங்கள்.
பார்த்து
பழகியவர்களை, பார்க்கப் புதியவர்களை, யார்யாராக இருந்தாலும் மனித உறவை புதுப்பித்துக்
கொள்கின்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுங்கள்.
வணக்கம் சொல்லுங்கள், கைகளை அசையுங்கள், புன்னகை
செய்யுங்கள், தலைசாய்த்து வணங்குங்கள், உள்ளங்கைகளை உயர்த்தி காட்டுங்கள், இருகரம்
குவித்து செய்கை காட்டுங்கள், ஒருவருக்கொருவர் கை கொடுத்து மகிழுங்கள், ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நபரிடமும் அதிகபட்சம் வாய்ப்புள்ளவரை எண்ண முடியாத அளவிற்கு மனித உறவை புதுப்பித்துக்
கொள்கின்ற நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள்.
உங்கள் அருகில் அமர்ந்திருக்கும் வழக்கமான நண்பராக
இருக்கலாம்..
கடைசி பெஞ்சில் அல்லது முதல் பெஞ்சில் அல்லது
உங்களிடமிருந்து விலகி அமர்ந்திருக்கின்ற நபர்களா இருக்கலாம்…
உங்களுக்காக
கழிப்பறைகளைத் தூய்மை செய்யக்கூடிய அல்லது வளாகங்களைத் தூய்மை செய்யக்கூடிய தூய்மை
சகோதரர்களாக இருக்கலாம்…
வழியில்
இதற்கு முன்பு கண்டறியாத புதிய மனிதராக இருக்கலாம்…
ஒரு
குழந்தையாக இருக்கலாம்…
ஒரு
செடியாகவோ, வண்ணத்துப்பூச்சியாகவோ மலராகவோ இருக்கலாம்...
உதவியைத்
தேடி வந்தவராக இருக்கலாம்…
தோட்டவேலைக்காரராக
இருக்கலாம்…
உணவு
பரிமாறுபவர்களாக இருக்கலாம்…
உங்கள் குடும்பத்தில் அம்மாவாகவோ, அப்பாவாகவோ,
அண்ணனாகவோ, தம்பியாகவோ, அக்காவோ, தங்கையாகவோ, யார் யாராகவோ இருக்கலாம்… அனைவரிடமும்
மனித உறவுகளைப் புதுப்பித்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
அவர்களது
எதிர்வினை எதுவானாலும் சரி. எதிர்வினைகளை எதிர்பார்க்காமல் உங்கள் கடமையாகச் செய்யுங்கள்.
அந்த
கடமையில்தான் நான் என்ற அகந்தை உடைக்கின்ற மந்திரம் இருக்கின்றது.
அந்தக்
கடமையில் தான் நம்மில் உணரப்படும் நான் என்பது மேன்மையான மனித உறவுகளில் பொதிந்திருக்கிறது
என்ற மெய்ஞானம் இருக்கின்றது.
மனித
உறவுகளில் அடர்த்தியான உறவு நட்புறவு மட்டுமே.
உங்கள்
நட்புறவுங்களுடன் இணைந்து உங்கள் நேரத் திட்டத்தை சாதித்து காட்டுங்கள். நல்லுலகை எட்டிப்
பிடித்து நிம்மதியாக வாழ பழகுங்கள்.
உங்கள்
மூத்தத் தலைமுறைகள் வெறும் புலம்பல்களாக முடிந்துவிடுவார்கள் என்பதாக எங்களை எண்ணாதீர்கள்.
உங்கள் பிள்ளைகளின் கண்களாக உங்களைச்
சுற்றிக்கொண்டே இருப்போம். நாங்கள் உங்கள் குழந்தைகளின் கண்களால் உங்களைப் பொறுப்பான
பெற்றோர்களாகவும் நல்லுலகத்தின் சிற்பிகளாகவும் காண்பதையே விரும்புகிறோம்.
வெளிவந்த விவரம்
கீற்று இணையதளம்
14.04.2025