ஒரு வகுப்பறையில் ஆசிரியர் இல்லை.
மாணவர்களின் ஆரவாரம் அதிகம்தான். ஆசிரியர் இருக்கும் வகுப்பறையில் ஆரவாரம் இருப்பதில்லை.
ஆங்கிலம்தான் நர்த்தனம் ஆடும். மாணவர்களோ கண்ணிமை மூடாத உறக்கக் குதிரைகளில் பயணிக்கிறார்கள்.
திசையெங்கும் கனவுகள் இமயங்களாக விரிந்துள்ளன. உண்மை வாழ்வில் காலூன்றாமல் வெட்ட வெளியில்
மிதக்கின்றன.
மாணவர்களின்
மூளைகள் சிந்தனைகள் தூண்டப்படாத தகவல் குவியல்களால் மரத்துப் போய்விட்டன. மாணவர்களின்
உரையாடல்கள் ஆசிரியர் இல்லாதபோதே நிகழ்கின்றன. அந்த உரையாடல்களில்தான் சலசலக்கின்ற
நதி போல மகிழ்ச்சியின் இசையை உணர முடிகின்றது. அந்த உரையாடல்களில் இலக்கியம், கலை,
அறிவியல், தத்துவம், சிந்தனை
இருக்கின்றன என்பதற்கு குறைந்தபட்ச உத்திரவாதம்கூட கிடையாது. ஆனால், தாய்மொழியின் வழியாக
சுதந்திர உணர்வின் இயல்பை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்ற லயம் பரிபூரணமாக இருக்கின்றது.
தாய்மொழி
வழி கல்வித்திறன் இன்மையால் நிறைந்த மகிழ்ச்சியுடன் பயில்வதற்கான வாய்ப்புகள் மாணவர்களுக்கு
இல்லை. எழுத்து இல்லை, வாசிப்பு இல்லை, உரையாடல் இல்லை, சிந்தனை இல்லை, கருத்து இல்லை
மொத்தத்தில் வகுப்பு வகுப்பாகவே இல்லை. பாடத் திட்டங்களின் பரபரப்புகள் எல்லாம் தகவல்
குவியல்களின் சுமைகளாகவே அழுத்துகின்றன. மாறாக, அறிவின் வெளிச்சம் நோக்கி கற்பனை சிறகுகள்
விரிவதே இல்லை.
தாய்மொழியை
எழுத படிக்க தெரியாது. ஆனால், ஆங்கிலம் நன்றாகத் தெரியும். இப்படி ஒரு நம்பிக்கை பெருந்திரளான
மாணவர்களிடம் விளைவிக்கப்பட்டுள்ளது. இதனை மூடநம்பிக்கை என்றும் சொல்லலாம் அல்லது குருட்டு
நம்பிக்கை என்றும் சொல்லலாம். நீர் நன்னீராக இல்லாவிட்டால் பன்னீராக மணப்பது சாத்தியமில்லைதானே. சாக்கடை நீரில் பன்னீர் மணக்குமா?
நன்னீரை போன்றது தாய்மொழித்திறன். தாய்மொழித்திறன் இல்லாமல் எம் மொழியும் பன்னீராக
மணப்பது இல்லை.
இளந்தலைமுறை
மாணவர்கள் தமிழ் தெரியாது என்று சொல்வதற்கு வெட்கப்படுவதாக இல்லை. மனம் வருந்துவதும்
இல்லை. சொந்த வாழ்க்கை குறித்த மதிப்பீடும், அறிவும், வரலாறும், சவால்களும்,
லட்சியங்களும், சந்திக்க வேண்டிய மாற்றங்கள் அனைத்தும் குறித்த எந்த கண்ணோட்டமும் இல்லை.
இல்லைகளை எல்லைகளாகக் கொண்டிருக்கும் இந்த இளம் தலைமுறைகளே பெருந்திரளான மக்களின் வருங்காலம்
என்பது பேராபத்தான பேருண்மை.
உயர்
கல்வியின் வாசலுக்கு படிக்க வந்துள்ள இளந்தலைமுறைகளில் முதல் தலைமுறை மாணவர்கள் பெரும்பான்மை.
பழந்தமிழ் சான்றோர்களின் பன்னெடுங்கால வழிமுறைகள் இவர்கள் எனில் எத்தனை தலைமுறைகள்
படித்திருக்க வேண்டும்? ஏன் முதல் தலைமுறைகளாக படிக்க வந்தோம் என்ற கேள்வி நம்மை துளைத்ததுண்டா?
செம்மண்
நிலத்தின் நிறமும் ஈரம் மலர்ந்த மழைநீரும் ஒன்றிணைந்து செந்நீராக இணைவதைப் போல காதலர் நாம் இணைந்தோம்
என்கிறது குறுந்தொகை. காதலர்களின் தமிழுக்கு அக இலக்கியம் சான்று.
குழந்தை
இறந்தாலும் போர்க்களம் சென்று வீர மரணம் அடைதலை உயர்வாக போற்றும்படி இறந்த குழந்தைக்கும்
மார்பில் வாளால் வீரப்புண் சூடுவதைப் பண்பாடாகக் கூறுகிறது புறநானூறு. வீரர்களின் தமிழுக்கு புற இலக்கியம் சான்று.
அகத்திற்கும்
புறத்திற்கும் முகமாகத் திகழும் சங்க இலக்கியங்களின் பழங்கால பாடல்களின் காலம் எட்டாயிரம்
எனில் எண்பது தலைமுறைகளாவது படித்திருப்போம் அல்லவா!
எல்லா
சொல்லும் பொருள் குறித்தனவே. கடவுள் என்பதெல்லாம் மக்களின் கருப்பொருள் சார்ந்த நம்பிக்கை
மட்டுமே. முதல்பொருள் என்பது பரம்பொருள் அல்ல, நிலமெனும் பருப்பொருளின் பொழுதுகளே முதற்பொருள்
என்று அறிவியல் தத்துவத்தை உலகிற்கு போதித்த தொல்காப்பியம் அறிவியல் தமிழுக்குச் சான்று.
தொல்காப்பியர் காலம் ஏழாயிரம் எனில் எழுபது தலைமுறைகளாவது படித்திருப்போம் அல்லவா!
அறத்தமிழ்,
பொருட்தமிழ், இன்பத்தமிழுக்கு இரண்டடி கவிதைகளில் உலகை அளந்த திருக்குறள் சான்று. உலகப்
பொதுமறை தந்த திருவள்ளுவரின் காலம் ஐந்தாயிரம் எனில் ஐம்பது தலைமுறைகளாவது படித்திருப்போம்
அல்லவா!
பத்தாவது
தலைமுறையாக அறியப்பட்டாலாவது பெயரளவிற்கு மகிழ்ச்சி பிறக்கும். ஆனால் கல்வியை எட்டாத
கைநாட்டுத் தலைமுறைகளுக்கு பிறந்து முதல் தலைமுறையாக உயர்கல்விக்கு நுழைபவர்கள் என்ற
அடையாளம் எத்தனை பெரிய துயரம்!
நம்
மூத்த தலைமுறைகள் எப்படி படிக்காமல் போனார்கள். அதுவும் உயர்கல்வியை விடுங்கள், அடிப்படை
கல்விக்கு வழியற்ற எழுத்தறிவு இல்லாத கைநாட்டுகளாக எப்படி ஆளாகினார்கள்?
உலகத்
தமிழுக்கு கலங்கரை விளக்காகவும் சான்றோராகவும் திகழும் சங்கத் தமிழ் பாட்டிகளும் பாட்டன்களும்,
தொல்காப்பியரும், திருவள்ளுவரும் எப்படி தம் பிள்ளைகளைப் படிக்காதவர்களாக வளர்த்திருப்பார்கள்?
தம்மின் தம் மக்கள் அறிவுடையவர்கள் என்ற மகிழ்ச்சியை எட்டாத துயரத்திற்கு எப்படி ஆளானார்கள்?
தமிழ் சான்றோர்களை இத்தகைய பெருந்துயருக்குத் தள்ளிய வரலாற்று சதியின் கதைதான் என்ன?
அதுதான் இந்தியாவில் சாதிகளின்
சதி. இந்த சதித்தனமான கதையை மனித வரலாற்றுப் பின்னணியிலிருந்து அறிய முயல்வோம்.
தமிழ்ச் சான்றோர்களின் வாழ்க்கை குறிஞ்சி, முல்லை, மருதம்,
நெய்தல், பாலை என்று ஐந்திணைகளாக விளக்கம் பெறுகின்றன. சமூக விஞ்ஞான அடிப்படையில் மனித
வரலாற்றுப் படிநிலை எட்டு கட்டங்களாக விளக்கம் பெறுகின்றது.
1.காடுசார்ந்த
பொருள் சேகரிப்பு நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)
2.வேட்டை
நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)
3.கால்நடை
மந்தை வளர்ப்பு நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
4.விவசாய
நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
5.உற்பத்தியின்
மீதான வணிக நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
6.வணிக
இலாபத்திற்காக உற்பத்தி செய்தல் (தந்தை அதிகார சமூகம்)
7.நிதி
மூலதனப் பிரிவு தோன்றி சமூகஉற்பத்தி மீது ஆதிக்கம் செய்தல் (தந்தை அதிகார
சமூகம்)
8.மக்கள்
தலைமையின் கீழ் சமூகஉற்பத்தியைக் கட்டமைத்தல் (ஏற்றத்தாழ்வு மதிப்பிழந்த சமூகம்)
மனித வரலாற்று படிநிலையில் திணைகளை விளக்குவதெனில்,
குறிஞ்சி – காடு
சார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகம், வேட்டை நாகரிகம் (1,2, சமூகக் கட்டம்).
நெய்தல் –
வேட்டை நாகரிகத்திலிருந்து கடல் சார் பொருள் சேகரிப்பு நாகரிகமாகும்.(2 ம் சமூகக் கட்டம்)
முல்லை –
கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம் (3 ம் சமூகக் கட்டம்)
மருதம் –
விவசாய நாகரிகம் (4 ம் சமூகக் கட்டம்)
பாலை –
குறிஞ்சி, முல்லை, மருதத் திணைகளின் வறட்சி நிலை
சங்க இலக்கியங்களில் வெளிப்படும் வணிக வாழ்வியலும், வள்ளுவர்
உணர்த்தும் வாணிக வாழ்வியலும், காப்பியங்கள் காட்டும் வாணிக வாழ்வியலும், பிற நாட்டார்
குறிப்புகளும், தொல்லியல் சான்றுகளும் தொல் தமிழர் வாழ்வியல் உற்பத்தி மீதான வணிக நாகரிகத்தில்
செழித்திருந்தது என்பதை மறுக்க முடியாதபடி பறைசாற்றுகின்றன. தொல் தமிழர்களின் கடல்
வாணிகங்களும் துறைமுக நகரங்களும் இலக்கிய ஆவணங்களும் ஒப்பற்ற சான்றுகளாகவே திகழ்கின்றன.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனும் கணியன் பூங்குன்றனாரின்
சிந்தனையும்
“காணாது ஈத்த இப்பொருட்கு யானோர்
வாணிகப் பரிசிலன் அல்லேன்” எனும் பெருஞ்சித்திரனாரின் விமர்சனமும்
“தமவும் பிறவும் ஒப்ப நாடிக்
கொள்வதூஉம் மிகை கொள்ளாது
கொடுப்பதூஉம் குறைபடாது” எனும் பட்டினப்பாலை வரிகளும்
“பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம் கெழு முசிறி..” எனும் அகநானூறு 149ம் பாடல் வரிகளும்
“வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி
பிறவும் தம்போற் செயின்” எனும் 120ம் திருக்குறளும் வணிக
சமூகத்தின் வளர்ச்சியை விளக்குகின்றன.
காப்பியக் கதைகளில் சிலப்பதிகாரம் வணிக வர்க்கத்தின் நீதியைப்
பேசுகிறது. அரசனைவிட சொத்தாதிக்கம் உடைய வணிக பரம்பரையைச் சார்ந்த கோவலன் மாதவியை பெறுகின்ற
செல்வந்தனாக திகழ்கிறான். அரசியிடம் இல்லாத மாணிக்கப்பரல் சிலம்பை கண்ணகி அணிகிறாள்.
அரசனைவிட செல்வாக்கு பெற்ற வர்க்கமாக வணிக வர்க்கம் சிலப்பதிகாரத்தில் அறியப்படுகின்றது.
குண்டலகேசியில் கழுவேற்றி கொல்லப்படும் சூழலிலிருந்த கள்வனை
செல்வந்தரான வணிகன் காப்பாற்றுகிறான். தன் மகளின் விருப்பத்திற்காக அரசனிடம் பேரம்
பேசுகிறான். கள்வனின் எடைக்கு சமமாக தங்க நகைகளையும் 81 யானைகளையும் கொடுத்து மீட்கிறான்
என்ற தகவலை அறியும்போது சமகால நிதி மூலதன இலாபவெறி சூழலில் அதானியிடம் மோடி பணிவதைப்
போன்ற ஓர் சூழலை உணர முடிகின்றது. அந்தளவிற்கு தொல் தமிழர் வரலாற்றில் வணிகர்களின்
செல்வாக்கு செழித்திருந்ததை அறிய முடிகின்றது.
உற்பத்தி மீதான வணிக நாகரிகத்தின் இத்தகு செல்வாக்கை அவதானித்தால்
உலக வரலாற்றில் முதலாளித்துவத்தின் பிறப்பு தமிழகத்தில்தான் தொடங்கியிருக்க வேண்டும்.
ஐரோப்பிய வணிகர்களின் இலாபவெறி பயணங்கள்வரை வரலாறு காத்திருந்திருக்க அவசியம் இருந்திருக்காது.
அறிவியல் தொழில்நுட்ப உருவாக்கங்களுக்குத் தேவையான பிரமாண்டமான கற்பனைகளையெல்லாம் தமிழ்
இலக்கியங்கள் கட்டமைத்திருந்தன.
நிலம்
தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் என்று தொல்காப்பியத்தின் பிரபஞ்சக்
கண்ணோட்டம் முதல் வானில் பறக்கும் விமானத்திற்கு
அடித்தள கற்பனைகளை வழங்கிய சிலப்பதிகாரம்,
சீவக சிந்தாமணி போன்ற இலக்கியங்கள் வணிகர்களின் செல்வாக்கை இலாபவெறி முதலாளித்துவமாகப்
பரிணமித்திருக்க வேண்டும். தமிழர்களின் கல்வியும் தொழில்நுட்ப அறிவும் சமூகப் பொருளுற்பத்தியை
முதலாளித்துவமாக உருமாற்றியிருக்க முடியும். இத்தகைய உருமாற்றத்தைத் தமிழ்ச் சமூகத்தில்
தடுத்து உலக வரலாற்றில் முதலாளித்துவம் வளர ஐரோப்பியர்களின் வணிக பயணங்களுக்காக பல
நூற்றாண்டுகள்வரை காத்திருக்கும் நிலையை ஏற்படுத்தியது அசாத்தியமான வரலாறாகும். தமிழர்களின்
கல்வியைத் தடுத்து இத்தகைய அசாத்தியத்தைச்
சாத்தியப்படுத்தியது இந்தியாவில் சாதிகளின் சதிதான்.
இக்காலங்களில் தமிழர்களின் கல்வி சான்றாண்மைக்கு தடை இருந்ததை
அறியமுடிகின்றது. முதல் தடை பெண்கல்வியாகத்தான் விளக்கம் பெறுகின்றது. முல்லைத் திணையில்
கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம் சொத்தாதிக்கமாக உயிர் பெற்று தந்தையதிகாரமாக நிலை
பெற்றதும் தாய்தலைமை சமூகம் முடங்கியது. பெண்கள் சகமனித நிலையிலிருந்து ஆணின் சொத்தாக
உருமாற்றப்படுகிறாள். பாலுறவு உரிமைகளைக் கைவிட்டு உரிமையுடைய ஆணின் வருகைக்காக காத்திருக்கின்ற
உடைமை பொருளாகிறாள். காத்திருப்பதை கற்பதுதான் பெண்ணிற்கான கல்வியாகிறது. பெண் கற்பிற்கு
உரியவளாகிறாள்.
“கற்பு எனப்படுவது கரணமொடு புணர
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியை
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே” (தொல்.கற்.1)
கொடுக்கப்படும் பொருளாகவும் பெற்றுக்கொள்ளும் பொருளாகவும் பெண் உடைமைப் பொருள்
நிலைமைக்குத் தள்ளப்படுகிறாள். சகமனிதப் பண்பிலிருந்து படிப்படியாக இறக்கப்பட்ட அடிமைப்
பொருளுக்கு சிந்திக்கும் உரிமையும் கல்வி உரிமையும் மறுக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால்தான்
சங்க இலக்கியத்திற்குப் பிறகு பெண்பால் புலவர்கள் படிப்படியாக காணாமல் போய்விட்டார்கள்.
காப்பியங்களில் பெண்கள் புலமையோடும் அறிவுத்திறமுடனும் வாழ்ந்ததாக கதைகள் இருக்கின்றன.
ஆனால், அறிவுத்திறன் போற்றும் காப்பியங்களைப் பெண்கள் படைத்திருக்கவில்லை. சாதி சனாதன
நான்கு வர்ண அடுக்கு இறுக்கம் பெறும்வரை பெண்களின் அறிவு மீது மீப்பெரும் வன்முறை நிகழ்ந்ததாக
தெரியவில்லை. சாதி சனாதன நான்கு வர்ண அடுக்கு நிலை நம் பண்பாடாக நிலை பெற்ற காலத்தில்தான்
தமிழச் சமூகத்தின் கல்வி மீது மீப்பெரும் வன்முறைகள் நிகழ்ந்துள்ளன.
சங்க இலக்கியங்களில் சாதிய அடுக்கு நிலைகள் இல்லை. தொல்காப்பியத்தின் மரபியல்
உணர்த்தும் சாதி வர்ணப் அடுக்கு நிலைகள் இடைசெருகல் என்பது நிரூபிக்கப்பட்ட
உண்மை. அம்பேத்கர் விளக்கப்படி ஆரியத் தொல்குடிகளிடமிருந்து சாதிப்படிநிலை
பண்பாடாகக் கிளர்ந்தது என உணர முடிகின்றது. ஆனால் ஆரியர்கள் தொல்குடிகள் என்ற
கூற்று மட்டும் முரணாக அமைகின்றது.
சிந்து வெளி நாகரிகம் முதல் பொருந்தல்,
கொடுமணல், கீழடி அகழாய்வு மற்றும் மரபணு ஆய்வுவரை அனைத்தும் இந்திய வாழ்வியலில்
இடையில் நுழைந்தவர்களே ஆரியர்கள் என்பதை நிரூபித்திருக்கின்றன. ஆரியர்களின்
சமஸ்கிருதம் இந்திய தாய்மொழிகளில் இடம்பெறாத அந்நிய மொழியென்பதும் மற்றொரு
ஆதாரமாகும்.
ஆரியர்கள் கைபர் போலன்
கணவாய் வழியாக கால்நடைகளை மேய்த்து வந்தபோது தமிழர்தம் தாய்மடியான இயற்கை வளங்களை அழித்து
வேள்விகளை நிகழ்த்தினார்கள். காடுசார்ந்த பொருள் சேகரிப்பிலும் வேட்டையிலும் ஈடுபட்டு
வாழ்ந்த குறிஞ்சித்திணை மக்கள் ஆரியர்களின் வேள்வியை எதிர்த்து போரிட்டார்கள். ஏராளமான
பழங்குடி மன்னர்கள் ஆரியர்களின் பேரழிவு வன்முறைகளால் கொல்லப்பட்டார்கள்.
குறிஞ்சித்திணையின் எளிமையான
பழங்குடிகளைப் போல் அல்லாமல் கால்நடை மந்தைகளைப் பராமரித்து சொத்தாதிக்கம் செழித்திருந்த
முல்லைத்திணை மக்கள் ஆற்றலுடன் எதிர்த்தார்கள். ஓரிடம் நிலைத்து வாழ்கின்ற விவசாய நாகரிகத்தின்
மருதநில மக்களும் எதிர்த்தார்கள். ஒட்டுமொத்தமாக தமிழ்ச் சமூகம் ஆரியர்களை எதிர்த்து
போரிட்டு விரட்டியுள்ளது.
“ஆரியர் துவன்றிய பேரிசை
முள்ளூர்
பலர் உடன் கழித்த வாள்
மலையனது
ஒரு வேற்கு ஓடியாங்கு”
நற்.170
தலைவி மட்டுமல்ல எந்தப்
பெண்ணும் ஆடல் மங்கை விறலிக்கு ஈடுகொடுக்க முடியாது. மலையன் என்ற அரசனின் ஒரு வேலுக்கு
ஈடுகொடுக்க முடியாமல் ஆரியர்கள் சிதறி ஓடியதைப்போல விறலியின் பேரழகு முன்பு அனைத்துப்
பெண்களும் ஓடும் நிலையாகிவிடும். இப்பாடலில் விரட்டப்பட்ட ஆரியர்கள் உவமையாக இடம்பெறுகிறார்கள்.
“ஆரியர் கயிறு ஆடு பறையின்
கால் பொறக் கலங்கி..”
– குறு.7
ஆரியர்கள் தம் பிழைப்பிற்காக
கயிற்றில் ஏறி ஆடிப் பயில்கின்ற காட்டின் வழியே தலைவியும் தலைவனும் உடன்போகிறார்களே என்று கண்டவர் வருந்துகிறார்கள்.
இப்பாடலில் அரசர்களால் விரட்டப்பட்ட ஆரியர்கள் பிழைப்பிற்காக காடுகளில் வித்தை பயில்கின்ற நிலையை அறிய முடிகின்றது.
“தாரும் தானையும் பற்றி
ஆரியர்
பிடி பயின்று தரூஉம்
பெருங்களிறு போல”-அ.நா.336
அரசர்களிடம் தோல்வி கண்ட
ஆரியர்கள் பிழைக்க வழியின்றி யானைகளைப் புகழ்பட வளர்த்த தமிழ் மக்களிடம் யானை பராமரிப்பாளர்களாக
பிழைத்த வரலாறை அறிய முடிகின்றது. இப்படியாக ஏராளமான பதிவுகள் சங்க இலக்கியங்களில்
கிடைக்கின்றன.
சக்தியற்ற ஆரியர்கள் புத்தியைத் தீட்டிக்கொள்ள
கடமைப்பட்டார்கள். மோதல்களைத் தவிர்த்துக்கொண்டு தனியாக ஒதுங்கி வாழ்ந்தார்கள். தமிழ்ச் சமூகத்தில் நிலவிய சந்தைகளில் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு தமிழ் இனத்திற்கு அடிப்படையான திராவிடப் பண்பாட்டைக் கற்றார்கள்.
ஆரியர்களின் பொருள், உலகம், ஞானம் பற்றிய தேடல்களுக்கு சவாலாக இருந்த திராவிட
சமூகத்தைக் கற்றார்கள். அவர்கள் கற்றுணர்ந்தவரை நிலத்தை ஆள்பவனே அரசனாக இருந்தான்.
நிலப்பிரபுக்களது அதிகாரத்தில் அரசு இருந்தது. அதிகாரத்தில் பங்கேற்க செல்வாக்கு மிகுந்த வணிகர்கள் முயற்சி செய்துகொண்டு
இருந்தார்கள். இருவருக்கும் இடையில் அரசு திணறிக்கொண்டு இருந்தது. இந்த அரச திணறல்
என்ற பிரச்சனைகளுக்கு இடையில்தான் திராவிட சமூக மக்களின் வாழ்க்கை மூழ்கிக் கிடந்தது.
இழுபறிக்கு இடையில் திணறிக்கொண்டிருக்கும் அரசர்களுக்கு ஆட்சியை எப்படி
நிலைபடுத்துவது என்பதே பிரச்சனையாக இருந்தது. இந்தப் பிரச்சனைகளின் வழியாக திராவிட
சமூகத்தில் நீந்துவதற்கு ஆரியர்கள் துணிந்துவிட்டார்கள். இழுபறியில் இருந்த அரச
அதிகாரத்தை தமக்கு பணியவைக்க ஒரு கோட்பாட்டை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.
புரியாத சமஸ்கிருத மந்திரங்களால் நெருப்பை
வணங்கும் ஆரியர்களின் பண்பாட்டை திராவிடர்களும் விநோதமாகவே கவனித்து வந்தார்கள்.
ஆரியர்களைப் பற்றிய மந்திரவாதிக் கதைகளை நாளெல்லாம் பேசிக்கொண்டு வந்தார்கள். பல
தலைமுறைகளாக திராவிட ஆரிய சமரசம் நிகழ்ந்துகொண்டு இருந்தது. ஆரியர்களின்
வெற்றிக்காலம் நெருங்கத் தொடங்கியது. அவர்கள் திராவிட சமூகப் பாதையில்
தங்களுக்கான வழியை ஏற்படுத்தும் வித்தையைக் கண்டறிந்தார்கள். அதுதான்
வர்ணாசிரமப் படிநிலை என்கின்ற நான்கு வர்ணக் கோட்பாடு.
அவர்கள் கணக்குப்படி திராவிட மக்களை நான்காகப் பிரித்தார்கள். வேடிக்கை
என்னவென்றால் அந்த நான்கில் அவர்களும் இருக்கிறார்கள். பல தலைமுறைகளாக திராவிடப்
பண்பாட்டைக் கற்ற சிந்தனை உழைப்பினால் இந்த உரிமையை எடுத்துக்கொண்டார்கள். 1.அரசன், 2.வணிகன், 3.நிலஅடிமைகள் உள்ளடங்கிய பிற மக்கள். இந்த
மூன்று பிரிவிற்கும் தலைமையாக ஆரியர்கள் இருப்பதாகக் கோட்பாட்டை உருவாக்கினார்கள்.
தலைமை என்றால் அரசனின் ஆட்சிக்கு தலைமை என்ற பொருளில் உணர முடியாதவாறு
விளக்கினார்கள். உழைக்காமல் செல்வங்களை அனுபவிக்க வேண்டும் என்ற கொள்கையில்
தெளிவாக இருந்தார்கள். ஏனெனில், அவர்கள் அடைய வேண்டிய பொருளாதார
முன்னேற்றங்களை திராவிட சமூகம் கண்டு கரை தேர்ந்திருக்கிறது. இவற்றை நோகாமல்
அனுபவிப்பதற்கான முயற்சி மட்டுமே அவர்களுக்கு சவாலாக இருந்தது. திராவிடன்
கத்தியைத் தீட்டியபோது ஆரியன் புத்தியைத் தீட்டினான்! என்ற பழமொழி இத்தகைய சவாலை
இன்றும் நினைவுகொள்கின்றது. அவர்கள் பல்வேறு கூட்டு முயற்சியால் இந்தக் கோட்பாட்டை
மெருகேற்றினார்கள். அரசர்கள் ஏற்கும்படி இந்தக் கோட்பாட்டை உறுதிபடுத்தினார்கள்.
அவர்கள் நான்கு வர்ணக் கோட்பாட்டை கடவுளின்
பெயரால் விளக்கத் தொடங்கினார்கள். அவர்களின் விளக்கப்படி ஆரியர்கள் தங்களை
பிரம்மமாகிய கடவுளுக்கு உரியவர்கள் என்பதாக விளக்குகிறார்கள். பிரம்மம் என்றால்
கடவுள். கடவுள் உலகைப் படைத்துக் காக்கின்றார். உலகப் பொருட்கள் அனைத்தும் கடவுள்
தீர்மானித்தபடி இயங்குகின்றன. உலகை இயக்குகின்ற கடவுள் மந்திரங்களுக்குக்
கட்டுப்படுகிறார். மந்திரங்கள் சமஸ்கிருத வேதங்களுக்கு கட்டுப்படுகின்றன.
சமஸ்கிருத வேதங்கள் சமஸ்கிருத மொழி பேசும் எங்களுக்குக் கட்டுப்படுபவை. எனவே நாங்கள்
கடவுளின் மொழியால் கடவுளர்களுடன் உறவு கொண்டிருப்பவர்கள்.
கடவுளர்களை பிரம்மம் என்பதால் பிரம்மத்திற்கு
உரிய தங்களை பிராமணர்கள் என்று விளக்குகிறார்கள். வேள்வி செய்வதும், குலச் சடங்குகள் செய்வதும், ஆகம விதிப்படி கோயில் அமைப்பதும், தவம் செய்வதும், தானம் பெறுவதும், தர்மங்களைக் கற்றுக்கொடுப்பதும் பிராமணர்களின் கடமைகளாக கடவுளால்
தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று விளக்குகிறார்கள். பிராமணர்கள் தங்களது நான்கு வர்ண
படிநிலையில் உச்சத்திலுள்ள முதல் படியில் பாதுகாப்பாக அமர்ந்துகொள்கிறார்கள்.
பிராமணர்களுக்கு அடுத்த இரண்டாம் படியில்
அரசர்களை அமர்த்துகிறார்கள். அதிகாரத்திற்கும் பாதுகாப்பிற்கும் அரச படைகள்
பிராமணர்களுக்கு தேவைப்படுகின்றன. அரசன் என்பவன் நிலப்பிரபுக்களின் அதிகாரத்திற்கு
உட்பட்டவன். எனவே பிராமணர்களுக்கு நில வருவாய்கள் கைகூடும் நிலை இருக்கின்றன.
பிரம்மத்தின் கட்டளைப்படி வர்ணாசிரமக் கடமைகளை சமூகத்தில் பாதுகாப்பதும் நிலங்களை
ஆள்வதுமே அரசரின் கடமைகள் என்று விளக்குகிறார்கள். மனுதர்மம், மகாபாரதம்,
பகவத்கீதை, ராமாயணம் ஆகியன இக்கடமைகளை உணர்த்த எழுந்த இலக்கியங்களே. அரசர்களை
சத்திரியர்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.
அரசனுக்கு அடுத்த மூன்றாம் கட்டத்தில்
வணிகர்களை அமர்த்துகிறார்கள். பலவிதமான பொருள்களைப் பெற்றுக்கொள்வதற்கு வணிகர்கள்
பிராமணர்களுக்குத் தேவைப்படுகிறார்கள். அவர்கள் எல்லைக் கடந்து பயணித்து
பொருள்களைக் குவித்துக்கொண்டு வருபவர்களாக இருக்கிறார்கள். எனினும் நிலப்பிரபுக்களின்
அளவிற்கு அரச செல்வாக்கு எட்டாதவர்களாக இருக்கிறார்கள். எனவே பிராமணர்கள்
தம்மிலிருந்து மூன்றாம் படியில் வணிகர்களை வசதியாக அமர்த்திக்கொள்கிறார்கள்.
நிலப்பிரபுத்துவ அரசுடன் முரண்பட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான
எண்ணங்கள் எழக்கூடாதவாறு பிரம்மத்தின் பெயரால் கட்டளையிடுகிறார்கள்.
வணிகத்தில் ஈடுபடுதலே வணிகர்களின் கடமையாக இருக்கின்றது. இவர்களை வைசியர்கள்
என்பதாக குறிப்பிடுகிறார்கள்.
பிராமணர்கள் தங்களது அதிகாரத்திற்கும்
சொத்தாதிக்கத்திற்கும் தேவைப்படாத, முக்கியமில்லாத நில அடிமைகள் கைவினைஞர்கள்
மற்றுமுள்ள பெரும் திரளான மக்களை நான்காம் படியிலேயே நிறுத்திக்கொள்கிறார்கள்.
இவர்களை சூத்திரர்கள் என்கிறார்கள். சூத்திரர்கள் எந்தப் பலன்களையும்
எதிர்பார்க்காமல் தங்களது குலத்தொழிலில் ஈடுபட வேண்டும். இதுவே பிரம்மத்தின்
கட்டளை என்று விளக்குகிறார்கள்.
எல்லா வர்ணங்களிலும் ஆண்களுக்கு பெண்கள்
அடிமைகளாக இருக்கக் கடமைப்பட்டவர்கள் என்று பெண்களை இழிவான நிலையில்
வைக்கிறார்கள். பெண்கள் உயர்வர்ண ஆண்களுக்கு மனைவியாகவோ வைப்பாட்டியாகவோ
விலை மாதுவாகவோ வாழலாம். ஆனால் தன் வர்ணத்திலிருந்து கீழுள்ள ஆண்களுடன் பாலுறவு
உரிமையில் ஈடுபடுதல் கூடாது. ஏனெனில் பெண்கள் தங்களது வர்ண ஆணுக்கும் மேல்வர்ண
ஆணுக்கும் அடிமையாக வாழக் கடமைப்பட்டவர்கள். ஆணுக்கு சொத்தாக மாறும் பெண்கள் அந்த
ஆணிற்கு நேர்மையானவர்களாக வாழ்ந்தால் மட்டுமே பிறக்கும் குழந்தைகளின் வர்ணம்
காக்கப்படும். எனவே சொத்துரிமை நிலையிலும் பாலுரிமை நிலையிலும் பெண்கள் அடிமைகளாக
வாழக் கடமைப்பட்டவர்கள் என்பதாக உணர்த்தப்படுகிறார்கள். நான்கு வர்ணக் கோட்பாட்டு
நிலையில் பெண்ணடிமைப் பண்பு இன்றியமையாததாகவே விளக்கப்படுகின்றது. ஒவ்வொரு
வர்ணத்தாரும் தனக்கு மேலுள்ள வர்ணத்தாரை பணிபவர்களாகவும் கீழுள்ள வர்ணத்தாரை கட்டுப்படுத்துபவர்களாகவும்
செயல்படுவது கடமையாக இருக்கின்றது.
பிரம்மமாகிய கடவுளால் உலகம் படைக்கப்பட்ட
காலத்திலிருந்தே இந்த நான்கு வர்ணப் படிநிலைகளும் அவற்றின் கடமைகளும்
படைக்கப்பட்டுவிட்டன என்பதாக விளக்குகிறார்கள். மனிதர்கள் பிரம்மத்தின்
கட்டளைப்படி பிறப்பால் தீர்மானிக்கப்பட்ட கட்டளைகளைச் செய்வதையே தர்மமாகக் கருதி
பிழைக்க வேண்டும். அத்தகைய பிழைப்பினால் மட்டுமே மரணமற்ற பெருவாழ்வை அல்லது
பிறவியற்ற பெருவாழ்வை அடைய முடியும் என்று விளக்குகிறார்கள். வர்ணக் கடமைகளைக்
கடைபிடிக்கத் தவறினால் உலக வாழ்வில் துன்பங்களே நிலைக்கும் என்பதை
வழியுறுத்துகிறார்கள். இத்தகைய சாரங்களை உள்ளடக்கியதாக வர்ணாசிரமக் கோட்பாடாகிய
நான்கு வர்ணக் கோட்பாட்டை ஆரியர்கள் படைத்திருக்கிறார்கள். இந்த நான்கு
வர்ணமே பின்னாளில் படிநிலையற்ற ஐந்நாம் நிலையை உருவாக்குகின்றது. இந்த நிலையிலுள்ள
மக்களைத்தான் பஞ்சமர்கள் என்று அழைக்கிறார்கள். இவர்கள் நான்கு வர்ண மக்களால்
ஒதுக்கப்பட்டு மிகவும் இழிவான வாழ்வில் உழல்பவர்கள். குறிப்பாக வர்ணம் கடந்த
பாலுறவின் விளைவாகப் பிறந்தவர்கள் என்று விளக்கப்படுகிறார்கள்.
இந்தக் கோட்பாட்டை ஒவ்வொரு அரசனிடமும் சென்று
கடவுளின் பெயரால் விளக்கினார்கள். அதாவது பிரம்மமாகிய கடவுள் தனது உடலிலிருந்து
மனிதர்களைப் பிறப்பித்ததாக ஒரு கதையைக் கட்டினார்கள். பிரம்மத்தின் தலையில்
பிறந்தவர்கள் பிராமனர்கள். தோள்களில் பிறந்தவர்கள் அரசர்களாகிய சத்திரியர்கள்.
தொடைகளில் பிறந்தவர்கள் வணிகர்களாகிய வைசியர்கள். கால்களில் பிறந்தவர்கள்
உழைக்கும் மக்களாகிய சூத்திரர்கள். பிரம்மத்தின் வேசிகளுக்கு பிறந்தவர்கள்
பஞ்சமர்கள். இந்தக் கதையைக் கேட்டு பல அரசர்கள் தாங்காது
சிரித்தார்கள். சில அரசர்கள் ஆரியர்களை விரட்டியடித்தார்கள்.
அடிவாங்குவதில் இருந்து தப்பிப்பதற்காகவே சில
தருணங்களில் தந்திரமாக நடித்தார்கள். அரசர்களே தலைமையானவர்கள் பிராமணர்கள்
அரசர்களுக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதுபோல பாசாங்கு செய்தார்கள். ஆரிய சூழ்ச்சி
வெற்றியடைந்த பின்னாட்களில் தங்களை அவமதித்த இத்தகைய அரசர்களை பழிவாங்க
முயற்சித்து புராணக்கதைகளில் இழிவாக சித்தரித்தார்கள். திரிசங்கு, அரிச்சந்திரன்
போன்றோர் இவர்களால் சித்தரிக்கப்பட்ட அரசர்களே. ஆனால் கிருஷ்ணன், ராமனைப் போன்ற
பெரும்பாலான அரசர்கள் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டார்கள்.
திணறிக்கொண்டிருந்த அரசர்களுக்கு பிராமணர்கள்
விளக்கிய பிரம்மத்தின் கட்டளைகள் மிக வசதியாக இருந்தன. படிநிலைக் கோட்பாட்டின்
அடிப்படையில் அரசர்கள் பிறப்பால் அரசாள்வதையே கடமையாகப் பெற்றிருக்கிறார்கள்.
மக்கள் பிறப்பால் அடிமைகளாக வாழ்வதையே கடமையாகப் பெற்றிருக்கிறார்கள்.
வணிகர்களுக்கு வணிகமே கடமை என்ற படிநிலைக் கோட்பாட்டின் அதிகாரச் சூழ்ச்சிகளை
உணர்ந்து அரசர்கள் செயல்படுத்தினார்கள்.
கடவுளின் பெயரால் பிராமணர்களை அரசர்கள்
பணிந்து ஏற்றுக்கொள்வதால் இரண்டுவிதமான நன்மைகள் தென்பட்டன. ஒன்று,
பிராமணர்களுக்கு அரசன் பணிவதைப்போல அரசனுக்கு மக்களும், மேல்வர்ணத்தாருக்கு கீழ்வர்ணத்தாரும் பணிவது இயல்பாகிவிடுகின்றது. இரண்டு,
நிலப்பிரபுக்களின் சத்திரிய வர்ணம் வணிகர்களை அதிகாரத்திற்கு எழாதவாறு
கட்டுப்படுத்துவதைப்போல கீழ்வர்ணத்தார் எழுச்சி பெறாதவாறு மேல்வர்ணத்தார்
கட்டுப்படுத்துவதும் இயல்பாகிவிடுகின்றது. இத்தகைய இயல்புகள் அரசாட்சியை
கொந்தளிப்பான சூழல்கள் ஏற்படாதவாறு பாதுகாக்கின்றன என்பதையும் உணர்ந்தார்கள்.
திணறிக்கொண்டிருந்த அரசர்களுக்கு ஆரியர்களின் வர்ணாசிரமக் கோட்பாடு என்பது ஒரு
வரப்பிரசாதமாகவே அமைந்தது.
அரசர்களின் முதுகுக்குப் பின்னால்
ஆரியர்களின் ராஜ்ஜியம் தொடங்கியது. சமஸ்கிருத மொழிக்குரிய ஆரியர்களைத்தவிர வேறு
யாரையும் வர்ணாசிரமக் கோட்பாட்டை நிறுவுவதற்கு அரசர்கள் பயன்படுத்தவே முடியாது.
இதற்காகத்தான் ஆரியர்கள் அன்றாட உரையாடல் மொழியிலிருந்து சமஸ்கிருதத்தைத்
தவிர்த்தார்கள். திராவிட சமுதாயம் முழுமைக்கும் தொழில் இரகசிய ஒருமை மொழியாக
சமஸ்கிருதத்தைக் கட்டமைத்தார்கள். இதில் ஆரிய பிராமணர்களின் ஒற்றுமை என்றும்
வியப்பிற்குரியதே.
ஆரியக் கோட்பாட்டை அரச மதமாக
ஏற்றுக்கொண்ட அரசர்கள் பிராமணர்களுக்கு கோயில்களையும் குடியிருப்புகளையும் உருவாக்கிக் கொடுத்தார்கள். அனைத்து
சலுகைகளையும் வழங்கினார்கள். நாடெங்கும் வேள்விகள் செய்து பிராமணியத்தைப் பரப்புவதற்குத் தகுந்த பாதுகாப்பை வழங்கினார்கள். பிரம்மதானம், தேவதானம், சதுர்வேதிமங்கலம் போன்ற முறையில் நிலங்களும் செல்வங்களும் பிராமணர்களுக்கு சொத்துக்களாக பெருகின.
பிராமணர்கள் எந்த உழைப்பிலும் ஈடுபடாமல்
செல்வங்களை அனுபவிக்கக் கற்றுக்கொண்டார்கள். கடவுளின் பெயரால் எண்ணற்ற யாகங்களை
நடத்தினார்கள். வர்ணாசிரமக் கோட்பாட்டை நாடெங்கும் பரப்பினார்கள். ஒவ்வொரு
வர்ணத்திலும் உள்ள பல்வேறு மக்கள் பிரிவினரும் தொழில் பிரிவினரும் பல்வேறு சாதிப்
படிநிலைகளாக விரிவு பெற்றார்கள்.
நாடெங்கும் படிநிலை சாதிகள் பிறப்பால் தீர்மானிக்கப்பட்ட தொழிலை மேற்கொள்வதற்காகவே பிறந்தன. சாதிகள் நான்கு
வர்ண அடுக்கின் மடங்குகளாக விரிவடைந்தன. நான்கு வர்ண சாதிய அடுக்குகள்
நிலை பெற்ற காலத்தில் வேதங்களே பெருங்கல்வியாக அறியப்படுகின்றது.
“ஒரு சூத்திரன் வேத மந்தரங்களை காதால் கேட்க நேர்ந்திடின்
அவன் காதுகளில் உருக்கிய உலோகத்தினை ஊற்ற வேண்டும்.
அவன் வேத மந்திரங்களை ஓதினால் அவன் நாக்குகளை வெட்ட வேண்டும்.
அவன் சில வேதங்களை மனப்பாடம் செய்திருந்தானேயானால் அவனை கோடாரியால்
வெட்ட வேண்டும்”
– (கவுதம தர்ம சூத்திரம் 2/3/4)
அறிவிற்கு தகுதியில்லாத சமஸ்கிருத வேத மந்திரங்களை பெருந்திரளான
திராவிட சூத்திரர்களாகிய தமிழர்கள் படிக்க முயன்றதற்காகவே மீப்பெரும் வன்முறைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள்
என்பதற்கு மேற்கண்ட வேத சட்டமே சான்று. அறிவியல் தமிழ்ச் சான்றோர்களின் பெயரன் பெயர்த்திகளாகிய
முந்தைய தலைமுறைகள் பேரறிவின் தாகத்தை எப்படி வெளிப்படுத்தியிருப்பார்கள்!
இலக்கியம் கலை அறிவியல் தத்துவம் அனைத்திலும் தங்களது ஆற்றலை
எவ்வாறெல்லாம் வெளிப்படுத்தியிருப்பார்கள்! நம் முன்னோர்களின் ஆற்றல் சார்ந்த இத்தகைய
வெளிப்பாடுகளை நான்கு வர்ண சனாதனவாதிகள் எத்தனைக் கொடிய வன்முறைகளால் ஒழித்துக் கட்டியிருப்பார்கள்
என்பதை மேற்கண்ட சூத்திரம் காட்சிபடுத்துகின்றது!
பெண்களை உயிருடன் உடன்கட்டை ஏற்றி ரசிக்கின்ற சனாதனவாதிகளுக்கு
வன்முறைகள் மிக எளிதாகவே திகழ்கின்றன.
மிக எளிதாக எத்தனை கோடி தமிழர்களின் காதுகளில் ஈயத்ததை ஊற்றி
கொலை செய்திருப்பார்கள்..
மிக எளதாக எத்தனை கோடி தமிழர்களின் நாக்குகள் சனாதனவாதிகளால்
வெட்டப்பட்டிருக்கும்..
கேள்விகளை மேலெழுப்பியதற்காகவும், விளக்கங்களை முன்வைத்ததற்காகவும்,
கலந்துரையாடல் விவாதங்களில் ஈடுபட்டதற்காகவும் எத்தனை கோடி திராவிடப் பிணங்கள் கேட்பாரற்று
புதைந்திருக்கும்!
அறிவு சார்ந்த கருத்தியல்களை ஆழ்மனதில் பற்றியதற்காக எத்தனை
கோடி திராவிடத் தலைகளைச் சனாதன கோடாரிகள் கொய்திருக்கும்.
அத்தனை கோடி தமிழ் பிள்ளைகளுக்காக சங்கத் தமிழ் பாட்டிகள்
உள்ளங்கை எடுத்து, உடலெல்லாம் தடவி, நெஞ்சில் அடித்துக்கொண்டு விம்மி விம்மி அழுதிருப்பார்கள்.
பாட்டி பாட்டன்களின் பேரழுகை குறிஞ்சி மலையெங்கும் எதிரொலித்திருக்கும்.
தொல்காப்பியத் தாத்தன் தம் கொலையுண்ட பிள்ளைகளின் கண்களை
முத்தமிட்டு, இதயம் வெடித்து எழும் போரிசையை புல்லாங்குழலால் இசைத்திருப்பான். முல்லைத்
திணை காடுகள் பற்றி எரியும்படி புல்லாங்குழல் இசை வெகுண்டிருக்கும்.
சனாதன வேள்வியில் எரிந்த தலைமுறைகளைத் தாத்தன் திருவள்ளுவன்
கண்டு வெடித்திருப்பான். வெடித்த உணர்ச்சிகளைப் பறையிசை முழங்கி கோபம் அதிர துள்ளிதுள்ளி
ஆடிருப்பான்.
சனாதன சாதி வெறியால் மிக எளிதாக தமிழ்ச் சான்றோர்களின் தலைமுறை
கல்விக்கு இடுகாட்டுத்தீ இடப்பட்டது.
சிந்திக்கும் மூளையிலிருந்தும்
பேசும் நாவிலிருந்தும்
எழுதும் விரலிலிருந்தும்
கல்வியறிவு உருவி எடுக்கப்பட்டு
தலைமுறைகள் கடந்துவிட்டன…
உயிர் துறந்த சான்றோர்கள் தமிழ்ச் சான்றோரின் பேரறிவை எப்பாடுபட்டாவது
தமிழ் வழி தலைமுறைகளுக்கு கடத்தியாக வேண்டுமென பஞ்சபூதமாய் உருவெடுத்திருந்தனர். ஜோதிபாய்
பூலே, சரஸ்வதிபாய் பூலே, அயோத்திதாசர் பண்டிதர், சட்டமேதை அம்பேத்கர், அண்ணல் அம்பேத்கர்,
தந்தே பெரியார் போன்ற தியாகத் தலைவர்கள் இந்திய ஆன்மாவாய் ஒளி கொடுத்தனர்.
கோடி மக்களின் இன்னுயிர் தியாகத்தில் கல்வி மீண்டும் நம்
உயிர் சேர்ந்தது. சனாதன சாதி வெறி பேயர்கள் அஞ்சும்படியான பெரும் பூதமாய் எழுந்தார்
நம் பெரியார். சமூக நீதி வாளெடுத்து கல்விக்கு
மீண்டும் உயிர் கொடுத்தார். முதல் தலைமுறை படிக்க வழியமைத்தார்.
மாணவர்களின் இன்றைய கல்வி விதிதான்
நாட்டு மக்களின் நாளைய தலைவிதி!
துணை செய்தவை
1. சுப்பிரமணியன்,ச.வே.
2016(1998). தொல்காப்பியம் தெளிவுரை. சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
2. பூரணச்சந்திரன்,க.2018.
சான்றோர் தமிழ். மதுரை: பிறழ் வெளியீடு.
3. சிவக்குமார்,கே.2016. தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப்
புதினங்கள்: இனவரைவியல் நோக்கு. முனைவர் பட்ட ஆய்வேடு. புதுச்சேரி : புதுச்சேரி மொழியியல்
பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்.
https://pazhaiyavan.blogspot.com/p/phd.html
4. சிவக்குமார்,கே. மார்ச் 2014. ஆக்கமும்பெண்ணாலே.
புதிய கோடாங்கி. பக்.36-38.
5.சங்க இலக்கியப் பாடல்கள் - vaiyan.blogspot.com
6.இந்தியாவில் சாதிகளின்
சதி
'பதிவுகள்'
- பன்னாட்டு இணைய இதழ்! | ISSN 1481 –
2991
7.தொல்காப்பியர்
யார்?
வெளிவந்த விவரம்
கீற்று இணைய இதழ்
11 மார்ச் 2025
https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/47924-2025-03-11-07-27-23