பண்பாட்டு முதல் வாதம்
புதியவன் முனைவர் கே.சிவக்குமார்
SSM கலை மற்றும் அறிவியல்கல்லூரி, திண்டுக்கல்.
பண்பாடு குறித்த சிந்தனையை
அறிவியல் மொழியாகியத் தமிழ் இலக்கியங்களில் தேடினால் “பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்”
என்ற கவிதை கிடைக்கிறது. இது பழந்தமிழரின் கலித்தொகை பாடல். அறிவியல் தமிழின் இப்பழங்கவிதை
பண்பாடு குறித்த சமூகவிஞ்ஞான விளக்கத்தைப் பிரதிபலிக்கின்ற திறத்தை இக்கட்டுரை விளக்கும்.
மேலும் கலாச்சாரம் என்ற சொல் பண்பாடு என்ற சொல்லிற்கு இணையாகாது என்பதையும் விளக்கும்.
பண்பாடு
என்பது சமூகத்தின் மேற்கட்டுமானம் என்பதாக சமூகவிஞ்ஞானம் விளக்குகின்றது. அதாவது, அறிவியல்
தத்துவ விளக்கப்படி மார்க்சிய சமூகவிஞ்ஞானம் ஒரு வீட்டின் அமைப்பை உவமையாகக் கொண்டு
சமூகத்தின் இயங்கியலை விளக்குகின்றது. அதாவது, சமூகத்தை வீட்டின் அடித்தளம் என்றும்
வீட்டின் மேற்கட்டுமானம் என்றும் பகுத்து விளக்குகின்றது. வீட்டின் அடித்தளம் என்பது
சமூகப் பொருளுற்பத்தி முறையாகும். வீட்டின் மேற்கட்டுமானம் என்பது பண்பாடாகும். சமூகம்
குறித்த இத்தகைய பகுத்தறிவு கண்ணோட்டத்தில் பண்பாடு என்ற சொல்லமைப்பையும்
சொற்பொருளையும் விளங்கிக்கொள்ளும் முயற்சியைப் படிப்படியாக மேற்கொள்ளப் போகிறோம்.
“பண்பெனப்படுவது
பாடறிந்து ஒழுகுதல்” (கலி.133) பண்பு, பாடு என்ற இரு சொற்கள் தனித்தனியே இக்கவிதையில்
இணைகிறது.
பண்பு
என்பதற்கு செய்கை, வேலைப்பாடு என்பவையாக பொருள்படுகின்றது. இச்சொற்கள் மனிதர்களின்
விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்ட திட்டமிட்ட செயல்களின் வெளிப்பாடாக பண்பு பொருள்படுகின்றது.
அதாவது சமூகப் பொருளுற்பத்திக்கு ஏற்றபடி ஒழுக்கம் பெறுகின்ற பண்பாகும்.
பாடு
என்பதற்கு உழைப்பு, அனுபவம், தோன்றுதல், உண்டாதல், நிலைமை என்பவையாக பொருள்படுகின்றது.
இச்சொற்கள் திட்டமிட்ட செயல்களுக்கு அப்பாற்பட்ட மனித இயற்கையின் வெளிப்பாடாகின்றன.
மனித
விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டுள்ள சமூகத்தின் இயற்கையான உழைப்பும் அனுபவமும்
பொருள்படுகின்றன. போலி அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளை உணர்த்தும்படி தோன்றுதலும்
உண்டாதலும் பொருள்படுகின்றன. இயற்கை, மனிதர்கள், சமூகம், சிந்தனை, கருத்து, மொழி, கருவி,
உழைப்பு, உற்பத்தி, உறவுகள் இவைகளுக்கு இடையிலான அசைவியக்கங்களை உணர்த்தும்படி நிலைமைகள்
பொருள்படுகின்றன.
அறிவியல்
தத்துவ விளக்கப்படி மார்க்சிய சமூகவிஞ்ஞானம் விளக்குகின்ற சமூகத்தின் அடித்தளமாக பாடு
பொருள்படுகின்றது. அதாவது பாடு என்பது பண்பாடு என்ற சமூக மேல்கட்டுமானத்திற்கு அடித்தளமாக
விளங்குகின்ற சமூகப் பொருளுற்பத்திமுறைகள் ஆகும்.
உங்களை
வளர்க்க நான்பட்ட பாடு…
இப்பல்லாம்
குழாய திறந்தா தண்ணி கிடைக்குது. அந்த காலத்துல ஒரு குடம் தண்ணி தூக்கிவர நாங்கப்பட்ட
பாடு…
கல்வி,
வேலை, வருமானம், மரியாதை, உரிமைகள் பெற்று குறைந்தபட்ச நிம்மதியாவது பெற்று மகிழ்ச்சியுடன்
வாழ்கிறீர்கள் எனில் அதற்காக தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், காரல்மார்க்ஸ் போன்ற
பெருந்தலைவர்களும் எண்ணற்றத் தியாகிகளும் இந்த உலகில் எப்பாடுபட்டு போராடினார்கள்
என்ற வரலாறு தெரியுமா?...
மேற்கண்ட வசனங்களில் பாடு
என்ற சொல் உழைப்பின் சமூகப் பொருளுற்பத்தி நிலைமைகளை விளக்குகின்ற பொருளில் வருவதை
உணரலாம்.
பண்பாடு
என்ற சொல்லைப் பிரித்தால் பண் + பாடு என்பதாக பிரிந்திசைக்கும். பண் என்பதற்கு தகுதி,
தொண்டு என்பவையாக பொருள்படுகின்றது. இச்சொற்களுக்குச் சமூக மேல்கட்டுமானமாகிய பண்பாடு
குறித்து இலக்கிய அறிவியலின் சமூகவிஞ்ஞான விரித்துரைப்புகளிலிருந்து விளக்கம்
காண இயலும்.
இலக்கியம்
என்பது பண்பாட்டை பிரதிபலிப்பது மட்டுமல்ல, பண்பாட்டை உருவாக்குவதும் ஆகும்.
ஏனெனில் மொழி என்பது சமூக இயங்கியலின் முழுதளாவிய பிரதிபலிப்பாகும். எனவே, பண்பாடு
பற்றிய துல்லியமான புரிதல் இலக்கிய அறிஞர்களுக்கு இன்றியமையாததாகும். பண்பாடு என்பது பண்படுத்துதல் ஆகும்.
மனித
மூதாதையர்களிடம் இருந்து தோன்றிய மனிதர்கள் இயற்கையைத் திட்டமட்டு மாற்றத் தொடங்கினார்கள்.
இத்தகைய முயற்சியிலிருந்து மனித வரலாறு தொடங்குகிறது. மனித வரலாற்றுப் படிநிலைகள்
எட்டு கட்டங்களைக் கண்டுள்ளது.
1.காடுசார்ந்த பொருள் சேகரிப்பு
நாகரிகம்,
2.வேட்டை நாகரிகம்,
3.கால்நடை மந்தை வளர்ப்பு
நாகரிகம்,
4.விவசாய நாகரிகம்,
5.உற்பத்தி மீதான வணிக நாகரிகம்,
6.வணிக இலாபத்திற்காக உற்பத்தி
செய்தல்,
7.நிதி மூலதன பிரிவு தோன்றி
சமூக உற்பத்தி மீது ஆதிக்கம் செய்தல்,
8.மக்கள் தலைமையின் கீழ்
சமூக உற்பத்தியைக் கட்டமைத்தல்.
மேற்கண்ட
வரலாற்றுக் கட்டங்கள் அனைத்திலும் இயற்கையின் அங்கமாகிய மனித இனம் தன்னையும் தன்
சமூகத்தையும் பண்படுத்தும் முயற்சியே மனிதப் பண்பாடாகும். இத்தகையப் பண்படுத்தல்கள்
சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.
நிதிமூலதனப்பிரிவு
தோன்றி சமூக உற்பத்தியை ஆதிக்கம் செய்தல் என்ற இலாபவெறி வரலாற்றுக் கட்டத்தில் வாழும்
மனிதர்கள் உற்பத்தி முறையைத் தங்கள் விருப்பம்போல மாற்ற விரும்பினால் என்ன நிகழும்?
அவர்கள்
பழைமையான காடு சார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிக வாழ்க்கையை உருவாக்க முயலலாம். அல்லது
மக்கள் தலைமை சமூகத்தையோ அல்லது பொதுவுடைமை சமூகத்தையோ உருவாக்க முயலலாம். ஆனால், இத்தகைய
உருவாக்கங்கள் அனைத்தும் நாடகம், திரைப்படம், கலை இலக்கியம், அறிவியல் ஆய்விலக்கியம்,
பழைமை பற்றிய நினைவுகளையும் கற்பனைகளையும் பதிதல், வருங்காலம் பற்றிய விருப்பங்களையும்
கோரிக்கைகளையும் தெரிவித்தல், உரையாடுதல் என்பதாகவே அமையும்.
மேற்கண்டவை
அனைத்தும் அவர்களது பண்படுத்தலுக்கான பண்பாட்டு முயற்சிகளாக மட்டுமே அமையும். மாறாக,
தமது வாழ்க்கையை நடைமுறை எதார்த்தத்தில் ஒரு காடு சார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிக
வாழ்வில் செலுத்துதலோ அல்லது மக்கள் தலைமை சமூகத்தில் அல்லது பொதுவுடைமை சமூகத்தில்
நிறுவுதலோ சாத்தியமில்லை. ஏனெனில் சமூகத்தின் நடைமுறை என்பது மனித விருப்பு வெறுப்புகளுக்கு
அப்பாற்பட்டுள்ள சமூகப் பொருளுற்பத்தி முறையினால் தீர்மானிக்கப்படுகின்றது. எனவேதான்
சமூகவிஞ்ஞானத்தின் விளக்கம் கீழ்கண்டவாறு அமைகின்றது.
சமூகப்
பண்பாடு என்பது சமூக உற்பத்தி முறைகளை அடித்தளமாகக் கொண்டு தீர்மானிக்கப்பட்டுள்ள மேற்கட்டுமானம்
ஆகும். இத்தகைய மேற்கட்டுமானமாக ஏழு பண்பாட்டு கூறுகள் வினையாற்றுகின்றன.
1.சமூக வாழ்வியல்,
2.சமூக உள்ளத்தியல்,
3.தனிமனித உள்ளத்தியல்,
4.சமூகக் கருத்தியல்,
5.தனிமனித கருத்துநிலைப்பாடு,
6.தனிமனித உலகப்பார்வை,
7.தத்துவ அடிப்படை
மேற்கண்ட ஏழு கூறுகளின்
ஒருங்கிணைந்த சமூக இயக்கமே பண்பாடாகும்.
சமூகப்
பண்பாட்டிலுள்ள ஏழு கூறுகளும் அடித்தளமாகிய சமூகப் பொருளுற்பத்தி முறைகளை மேம்படுத்தவோ
அல்லது தேங்கச்செய்து புண்படுத்தவோ தொடர்ந்து முயல்கின்றன. இத்தகைய முயற்சிகள் மாற்றத்தை
நிர்பந்திக்கின்ற அழுத்தங்களே அல்லாமல் தீர்மானிக்கின்ற சக்திகள் அல்ல. புரட்சிகரமான
அரசியல் சூழலைத் தவிற மற்றெந்தச் சூழலிலும் பண்பாடானது சமூகப் பொருளுற்பத்தி முறைகளைத்
தீர்மானிப்பதில்லை. மாறாக, எப்பொழுதும் சமூகப் பொருளுற்பத்தி முறைகளால்தான் பண்பாட்டின்
அனைத்து கூறுகளும் தீர்மானிக்கப்படுகின்றன.
அதனால்தான்
வீட்டின் அடித்தளம், வீட்டின் மேல்கட்டுமானம் என்ற சமூகக் கட்டமைப்பிற்கான உவமை இவ்வாறு
விளக்கம் பெறுகின்றது. சமூகப் பொருளுற்பத்தி முறைகள் வீட்டின் அடித்தளமாகவும் முழுதளாவிய
பண்பாடு வீட்டின் மேல்கட்டுமானமாகவும் விளங்குகின்றன. (இலக்கிய அறிவியல்)
பண்
+ பாடு என்பதாக பிரிந்திசைக்கும் பண்பாட்டில் பண் என்ற சொல் தகுதி, தொண்டு என்பவையாக
பொருள்படுகின்றது. இலக்கிய அறிவியலின் முன்கண்ட விளக்கநிலையிலிருந்து கவனித்தால் சமூகவிஞ்ஞானத்தின்
பரிபூரண வெளிப்பாடாக இச்சொல்லாடல் அமைந்து வியப்பூட்டுவதை உணரலாம்.
பண்பாடு
என்ற சொல் சமூக விஞ்ஞானக் கட்டமைப்பை விளக்கும்படி பண் என்பது மேல்கட்டுமானத்தின் குறியீடாகவும்
பாடு என்பது அடித்தளத்தின் குறியீடாகவும் அமைந்திருக்கின்றது.
பாடு
என்ற சமூகப் பொருளுற்பத்தியின் மீது பண் என்ற மேல்கட்டுமானத்தின் தகுதி என்ன? அடித்தளமாகிய
சமூகப் பொருளுற்பத்தி முறைகளை சமூக முன்னேற்றம் நோக்கி மேம்படுத்தும் தகுதியுடன் வினையாற்றுகின்றதா?
அல்லது சமூகப் பொருளுற்பத்தி முறைகளைச் சமூகத் தேக்கநிலையில் புண்படுத்தி பண்பாட்டுத்
தகுதியை இழக்கின்றதா? இவ்வாறாக தகுதி என்பதன் முரண் இயக்கத்தை விளக்குகின்றது.
பாடு
என்ற சமூகப் பொருளுற்பத்தியின் மீது பண் என்ற மேல்கட்டுமானத்தின் தொண்டு என்ன? அடித்தளமாகிய
சமூகப் பொருளுற்பத்தி முறைகளை சமூக முன்னேற்றம் நோக்கி மேம்படுத்துவதற்கான தொண்டில்
ஈடுபடுகின்றதா? அல்லது சமூகப் பொருளுற்பத்தி முறைகளைத் தேங்கச்செய்து புண்படுத்தலுக்கான
தொண்டில் ஈடுபடுகின்றதா? இவ்வாறாக தொண்டு என்பதன் முரண் இயக்கத்தை விளக்குகின்றது.
“பண்பெனப்படுவது
பாடறிந்து ஒழுகுதல்” (கலி.133)
பண்பெனப்படுவது பாடு என்ற
சமூகப்பொருளுற்பத்தி முறைக்கு ஏற்றபடி ஒழுங்கமைந்திருக்கின்ற பண்பாடே மேற்கட்டுமானம்
என்பதாக இக்கவிதையில் வெளிச்சம் பெறுகின்றது. மார்க்சிய அறிவியல் தத்துவம் விளக்குகின்ற
பண்பாடு குறித்த சமூகவிஞ்ஞான விளக்கத்தை அறிவியல் தமிழின் பழங்காலக் கவிதை வியக்கத்தக்க
நிலையில் உட்பொதிந்துள்ளது. இது தமிழரின் அறிவு மரபிற்கு ஆகச்சிறந்த சான்றாகும்.
பண்பாடு
என்ற சொல்லிற்கு இணையாக கலாச்சாரம் என்ற சொல்லைப் பயன்படுத்துவது ஆகப்பெரிய
குறையாகும். ஏனெனில் பண்பாடு என்பதற்கு சமூகவிஞ்ஞானம் விளக்குகின்ற வரையறையைப் பண்பாடு
என்ற சொல்லின் அமைப்பொழுங்கே பரிபூரணமாக விளக்குகின்றது. இதற்கு நிகராக
கலாச்சாரம் என்ற சொல் விளங்குவதாக இல்லை.
கலாச்சாரம்
என்ற சொல்லை பிரித்தால் கல் + ஆச்சாரம் என்று பிரிந்திசைக்கும். கல் என்பதற்கு கற்றல்
என்று விளக்கம். ஆச்சாரம் என்பதற்கு இந்து சமயத்தில் கடைப்பிடிக்கப்படும் நல்ல பழங்கவழக்கங்களைக்
குறிப்பதாக விளக்கப்படுகின்றது.
இந்து
மதம் என்பதே பிற மதங்களை வெறுத்து ஒதுக்குவதிலிருந்து தன் வரையறையை அடையாளப்படுத்துகின்ற
கெட்ட வழக்கத்தின் வெளிப்பாடாகும். பிறப்பிலேயே உயர்வு தாழ்வை கற்பிக்கின்ற சாதி சனாதனச்
சாக்கடைகள் நாற்றமெடுக்கின்ற மதமாகும். அறிவியல் கண்ணோட்டத்திற்கும் மனிதகுல முன்னேற்றத்திற்கும்
எதிரான நடைமுறை வன்முறையாகும். மனிதர்களாகப் பிறந்தவர்களைப் ஐம்புலன்களால் உணரமுடியாத
சாதி என்ற கற்பிதத்தை உண்மை என்று நம்புகின்ற உளவியல் நோய்க்கு ஆட்படுத்தி, சகமனிதர்களை
சாதி வெறியர்களாகவும் புனிதம் தீட்டு என்ற அவமானத்திற்கு உரியவர்களாகவும் உருமாற்றுகின்ற
மதமாகும். இத்தகைய ஒழுக்கக்கேடான இந்து மதத்தில் நல்ல பழக்கவழக்கங்கள் இருந்தால் என்ன!
இல்லாவிட்டால் என்ன! இந்து என்பதே அடிப்படையில் பண்பற்ற வாழ்வின் குறியீடாகும்.
கல்
+ ஆச்சாரம் = கலாச்சாரம் என்பது பண்பற்ற இந்து பழக்கவழக்கங்களைக் கற்றல்
என்பதாகப் பொருள்படுவதால் இது அடிப்படையிலேயே பண்பாட்டிற்கு விரோதமான சொல்லாகும். பண்பாடு
என்ற சொல்லிற்கு துளியளவும் பொருந்த முடியாத எதிர்நிலையைப் பெற்றிருப்பதாகும். ஆனால்
பல முற்போக்கு அமைப்புகளே கலாச்சாரம் என்ற சொல்லை பண்பாட்டிற்கு இணை சொல்லாகக் கருதிக்கொண்டு
பயன்படுத்துகின்றன என்பது வருத்தத்திற்கு உரிய நடைமுறையாகும்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலை இலக்கிய சமூகவிஞ்ஞான
அரசியல் ஏடாக புதிய கலாச்சாரம் வெளிவருவதை தமிழ்நாடு நன்கு அறியும். மக்களின் கலை சார்ந்த
வெளிப்பாடுகளின் புரட்சிகர செயல்பாட்டை பிரதிபலிக்கின்ற சொல்லாடலாகவே புதிய கலாச்சாரத்தை
அர்த்தப்படுத்துகிறார்கள். சமூக மேன்மைக்கான புரட்சிகர இயக்க முயற்சி என்றளவில் ஏற்கத்தகுந்த
விதிவிலக்காகக் கருதலாம்.
கூகுல்
வாத்தியாரிடம் விளக்கம் கேட்டால் பண்பாடு என்பதன் ஆங்கில மொழிபெயர்ப்பு Culture என்றாகிறது.
Culture என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பு கலாச்சாரம் என்றாகிறது. கலாச்சாரம் என்பதன் ஆங்கில
மொழிபெயர்ப்பும் Culture என்றாகிறது. என்ன வாத்தியாரே பிதற்றுகிறாய் என்றால்
பதில் இல்லை.
கலாச்சாரம்
என்பது களையப்பட வேண்டிய களை
பண்பாடு
மட்டுமே வளர்க்கப்பட வேண்டிய பயிர்
நாம்
பாடுபட்டு உழைப்பதே நாட்டு மக்களை நல்வழிக்கு உயர்த்தவும், கண் முன் நிற்கும் உலகப்
பேரழிவிலிருந்து உயிர்மண்டலத்தைக் காக்கவும். ஆம்! பண்பாடு என்பதே நாடறிந்து ஒழுகுதலாகும்.
ஒரே நாடு ஒரே போடு என்ற புண்படுத்தும் பாசிசத்திற்கு எதிராக பன்முகத்தின் ஒற்றுமையே
நம் பண்பாடென்று நாடெங்கும் பாட்டிசைப்போம்.
துணை
செய்தவை
1.தமிழில்
இலக்கியவரலாறு – கார்த்திகேசு சிவத்தம்பி. NCBH
2.இலக்கியஅறிவியல்.புதியவன்.https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5444:2019-10-24-12-39-00&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82
3.மார்க்சியமும்மொழியியலும்.
வி.ஐ.லெனின்,
ஜோ.ஸ்டாலின்.2017.புதுமை பதிப்பகம்.
4.மனித
சாரம் – ஜார்ஜ் தாம்சன். நியூ செஞ்சூரி புக் ஹவுஸ்
5.தமிழுக்குப்
பேர் அழகா?அறிவா? - https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/47311-2024-10-17-06-41-56
6.கற்றல் கற்பித்தல் நடைமுறையில் காலத்தின் திசைவழி எது? https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/47418-2024-11-10-15-10-19
7.பின் நவீனத்துவம் ஓர் அறிவியல் தத்துவமா?
https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/47574-2024-12-11-04-02-33
8.LIFCO தமிழ் அகராதி
புதுப்பித்தலுக்கு முன்பு வெளிவந்த விவரம்
11 ஜனவரி 2025
உங்கள் நூலக இணையப் பக்கம் கீற்று
https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/47698-2025-01-11-06-58-28