தமிழுக்குப் பேர் அழகா?அறிவா?
புதியவன் முனைவர் கே.சிவக்குமார்
SSM கலை மற்றும் அறிவியல்கல்லூரி, திண்டுக்கல்.
கொஞ்சிப் பேசும் செல்லக் குழந்தை.யார் அழைத்தாலும் வாஞ்சையுடன் செல்கிறது.மழலை மொழிப் பேசும் பருவத்தில் தத்துவம் பேசுகிறது, இலக்கியம் இசைக்கிறது, அரசியலில் அமர்கிறது, கணினியில் தவழ்கிறது, செயற்கை நுண்ணறிவிற்கு செல்லப்பிள்ளையாக வளர்கிறது. அடடா அதன் திறன்களை சான்றோர்களும் சாமானியர்களும் வியந்து வியந்து மகிழ்கிறார்கள். இதயத்தோடு அணைத்து உச்சி முகர்ந்து கொஞ்சுகிறார்கள்.அதன் கைகளுக்கு இடையில் விரல் வைத்து தோளுக்கு மேல் உயர்த்தி சிரித்து சிரித்து சுற்றுகிறார்கள்.சுற்றும் வேகத்தில் தலை சுற்றலுக்கு ஆளாகிறார்கள்.தலை சுற்றலுக்கு வியப்பு தரும் வேறொரு காரணம் இருக்கிறது.அது அந்தக் குழந்தையின் வயது.ஆம், அந்தக் குழந்தையின் வயது நாலாயிரத்திற்கும் மேலென்று அறிஞர்கள் விளக்கியிருக்கிறார்கள்.
மனிதர்கள் தாய் தலைமை சமுகத்தில் காடுகளில் பொருள் சேகரித்த காலத்திலேயே பிறந்துவிட்ட குழந்தை.தாய் தலைமையின் அரவணைப்பில் வளர்ந்துவிட்ட குழந்தை.அவர்களது அறிவிற்கும் உணர்விற்கும் உயிர் தந்த குழந்தை.மக்களின் கதைகளுக்கெல்லாம் அரசியான குழந்தை.இந்தக் குழந்தைதான் வேட்டை நாகரிகத்திலும் வீர மகளாய் அறிவு தந்தாள்.கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்திலும் மக்களை வாஞ்சையுடன் மேய்த்தாள்.விவசாய நாகரிகத்திலும் கலை அறிவியலை விளைவித்தாள்.வணிக நாகரிகத்திலும் அறம் பாட கற்றுத்தந்தாள்.வரலாறெல்லாம் உழைக்கும் மக்களை வாஞ்சையுடன் அரவணைத்து விரல் பிடித்து வழியமைத்தாள்.
காடு சார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகம் முதல் இன்றுவரை கதை சொல்லும் பாட்டிகளைப் பெற்றெடுத்தவள் இவள்தான்.சிந்து முதல் சங்க இலக்கியம்வரை பண்பாட்டைப் பெற்றெடுத்தவள் இவள்தான்.பாட்டுக்கு அவ்வை எனினும் அவ்வையைப் பெற்றெடுத்தவளே இவள்தான்.கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்தில் அறிவியல் இலக்கியம் பாடிய தொல்காப்பியரைப் பெற்றெடுத்தவள் இவள்தான்.விவசாய நாகரிகத்தில் உலகப் பொதுமுறை தந்த திருவள்ளுவரைப் பெற்றெடுத்தவள் இவள்தான்.யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடி, பேரன்பை உலகமயமாக்கிய கணியனைப் பெற்றெடுத்தவள் இவள்தான்.இப்படி பல்லாயிரம் ஆண்டுகள் பல தலைமுறைகளைப் பெற்றெடுத்துள்ள பெருமுது கிழவிதான் இவள்.இன்றும் சிறு குழந்தையின் தோற்றத்தில் பேரழகாய் நம்முடன் விளையாடுகிறாள்.நம் உணர்விற்கும் உயிருக்கும் இசையாகிறாள்.இந்தக் குழந்தையின் பெயர்தான் தமிழ்.
தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட நண்பர்களே.தமிழில் ஆழமாகவும் அகலமாகவும் அடர்த்தியாகவும் துல்லியமாகவும் சிந்திக்கும் திறனை இழக்காதவர்களாக நம்மால் வாழ முடிகின்றதா?குறிப்பானவற்றைத் துல்லியமாகவும், பொதுவானவற்றை விரிந்த நிலையிலும் சிந்திக்கின்ற சமூக அறிவின் இயங்கியல் கலையைப் பெற்றிருக்கின்றோமா?ஏனெனில், இந்தக் கலையே தகவலறிவு, துறை சார்ந்த அறிவு, சமூக அறிவு என்ற அறிவின் முப்பரிமாண நிலையை ஆளுமைப்படுத்துகிறது.ஒவ்வொரு மனிதரின் செயலூக்கம் மிக்க கருத்துநிலைபாட்டிற்கு வழிவகுக்கிறது.
தாய் மொழியில் உணரப்படுகின்ற எல்லாத் தகவல்களும் மீப்பெரும் சமூக அறிவில் செறிக்கப்பட்டு துறைசார்ந்த அறிவுகளாக உயர்த்தப்படுகின்றன. தாய்மொழியாக உணரப்படாத எத்தகையத் தகவல்களும் சிந்திக்க முடியாதத் தகவல் குவியலாகவும், சிந்தனைக் கலைக்கு பேரிடர் செய்யும் மீப்பெரும் கருத்துச் சுமையாகவும் வினையாற்றும் தன்மையுடையவை. அதாவது, ஆத்மார்த்தமான கலை என்ற நிலையிலிருந்து சிந்தனை முறையை அர்த்தமற்ற பெருஞ்சுமை என்ற நிலைக்கு வீழ்த்துபவை.
உணர்வுப்பூர்வமான அறிவைப் பெற்றிருந்தால் மட்டுமே பழுதின்றி சிந்திக்கும் சுயத்திறம் உள்ளவர்களாக திகழ முடியும்.அதனால்தான் தாய்மொழி வழியில் குழந்தைகளுக்கு கல்வி என்ற அறிவியல் பூர்வமான நடைமுறை உலகம் முழுதும் கடைபிடிக்கப்படுகின்றது.ஆனால், நாம் கடைபிடிக்கின்றோமா?
குழந்தைகளுக்கு அவர்களின் தாய்மொழியில் கல்வி வழங்காவிட்டால் அது குழந்தைகள் மீது சமூகம் நிகழ்த்துகின்ற பெருங்குற்றம்.தாய்மொழி அல்லாத பிற மொழியில் கல்வி வழங்குவது அவர்களின் கற்றல் திறனையும் சிந்திக்கும் கலையையும் சிதைக்கின்ற குற்றச் செயலாகும்.மேலும் இந்நடவடிக்கை குழந்தைகள் மீது தொடுக்கப்படுகின்ற அறிவு வன்முறையாகும்.அறிவு வன்முறைக்கு பலியாகும் குழந்தைகள் ஆத்மார்த்தமான சிந்தனை கலையை இழந்தவர்களாகவும், திறன் குன்றியவர்களாகவும் வளர்கிறார்கள்.சமூகத்தில் மேன்மையான மனிதவளமாக உயர்த்த முடியாதபடி சமூக அறிவின்மையின் அதலபாதாலத்தில் வீழ்த்தப்படுகிறார்கள்.
தமிழால் உணர்வு பெற்ற நம் குழந்தைகளை இத்தகைய அவல நிலைக்கு தள்ளிவிடுவது குப்பைத் தொட்டியில் குழந்தையை வீசிஎறிந்த தாய்க்கு ஒப்பாகும். தமிழ் வழியில் கல்வி பயில்வதை இழிவாகவும் சாத்தியமற்றதாகவும் கருதும் நிலை இருக்கின்றது.இந்த மனநிலையை நம்மிடம் ஏற்படுத்தும் அளவிற்கு ஆட்சியாளர்களை நாம் விட்டுவைத்தோம் என்பது கேடு.
தாய் வயிற்றில் ஐந்து மாத குழந்தையாக உருப்பெற்றதிலிருந்து தமிழ் மொழியில் உணர்வேற்றப்பட்டு வளர்கிறது குழந்தை.தன் நரம்பு மண்டலமெங்கும் உணர்வேற்றப்பட்ட தமிழ் மொழியிலேயே குழந்தையின் புரிதலும் பேச்சும் இயற்கையாக நிகழ்கின்றது. எனவே, நம் குழந்தைகள் இயற்கையாகப் புரிந்துகொண்டு பேசுகின்ற தாய்மொழியாகிய தமிழ் மொழியை எழுதுவதற்கும் படிப்பதற்கும் கற்பதே மகிழ்ச்சியான அறிவியல் வழிப்பட்ட ஆரம்பக்கல்வியாக அமையும். இந்த மகிழ்ச்சியே உயர்கல்வியான ஆராய்ச்சி கல்விவரை குழந்தைகள் உயர்வதற்கு வழிவகுக்கும்.தாய் மொழி வழியில் குழந்தைகள் பெறுகின்ற அறிவு முதிர்ச்சியே தான் விரும்புகின்ற பிறமொழிகளின் அறிவு நிலைகளைக் கற்பதற்கும் வழிவகுக்கும்.ஒரு குழந்தை தாய்மொழியின் வழியாக கற்று மகிழ்ந்தால் மட்டுமே எந்தத் துறைகளிலும் எந்த மொழிகளிலும் ஆளுமையுடன் தன்னை நிரூபிக்க முடியும்.இத்தகைய நிரூபணத்தைப் பெறுவதற்கு தாய்மொழியில் கற்று மகிழ்வதே அடிப்படை. தாய்மொழியில் கற்று மகிழ்ந்த குழந்தைகள் மட்டுமே விருப்பமொழியாக எத்தனை மொழியையும் உரிய முறையில் குறுகிய கால பயிற்சிகள் மூலமாக பேசவும் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொள்ள முடியும்.
தனது அறிவுத் தொடர்ச்சிக்கு உதவாத பிறமொழி கல்வியால் அதாவது, தாய்மொழி அல்லாத ஆரம்பக்கல்வியால் இயற்கையாக ஊற்றெடுக்கின்ற கற்றல் திறனும் மகிழ்ச்சியும் சிதைக்கப்படுகின்றது. குழந்தைகளுக்கு அவர்களது மொழியை எழுதவும் படிக்கவும் சிந்திக்கவும் வாய்ப்பின்றி உரிமையிழந்த அகதியாக முடங்கிப் போகிறார்கள்.குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான கற்றல் நடைமுறையை வழங்காமல் பெற்றோர்கள் கடமை தவறுகிறார்கள்.கற்றல் நடவடிக்கையில் மகிழ்ச்சி இல்லாவிட்டால் மனதில் சுதந்திரம் இருக்காது.சுதந்திரம் இல்லாவிட்டால் அறிவு அழுத்தமாகிவிடும்.அழுத்தமான மனதில் நெகிழ்ச்சி இருக்காது.கற்பனை சுரக்காது.உணர்விற்கும் அறிவிற்கும் செயலுக்கும் உறவிற்கும் இருக்கக்கூடாத மீப்பெரும் இடைவெளி இயல்பாகிவிடும். தாய்மொழி வழியிலான கற்றல் செயல்பாட்டில் நிகழ வேண்டிய கற்றல், சிந்தித்தல், செயல்படுதல் மேம்பட்டநிலையில் மேலும் கற்றல், சிந்தித்தல், செயல்படுதல் என்ற சுழல்வட்ட ஏற்ற நிகழ்வானது முற்றிலும் சிதைவடைகின்றது. மாறாக, அயல் மொழி வழியிலான கற்றல் செயல்பாட்டில் கற்றலாவது நினைவில் மறவாதிருத்தல், ஒப்புவித்தல், எழுதிமுடித்தல் என்ற தேக்கநிலைக்கு குழந்தைகளை ஆட்படுத்துகிறது.இந்த நடைமுறையால் குழந்தைகள் மனித நிலைக்கு உயராமல் மந்தைநிலைக்கு வீழ்த்தப்படுகிறார்கள்.
குழந்தைகளின் எதிர்காலம் குறித்த மரியாதையும், நல்லுலகம் குறித்த தியாக உணர்வும் பெற்றோர்களிடம் இருந்தால் குழந்தைகளை வீழ்த்துவார்களா?குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்று தன் தோளில் உயர்த்தி கொண்டாடுகின்ற சமூகத்தால் இத்தகைய துரோகத்தை செய்ய இயலுமா?எனவே, குழந்தைகளின் தாய்மொழி வழியிலான கல்வி உரிமைகளை பாதுகாத்து வழங்குவது மனிதகுல சமூகத்தின் தவிர்க்கக்கூடாத கடமையாகும்
தாய்மொழி வழிக் கல்வியில் உரிய முறையில் படித்தல், புதுமைகளைப் படைத்தல், உண்மைகளைக் கண்டுபிடித்தல் என்பதாக சிந்தனைப்பூர்வமான கற்றல் நடவடிக்கை நிகழ்கின்றது. அதனால்தான் தாய்மொழி வழிக் கல்வியானது நடைமுறையிலிருந்த காலம்வரை தமிழ்நாட்டில் தலைசிறந்த அறிஞர்களும் தலைவர்களும் அதிகாரிகளும் கண்டுபிடிப்பாளர்களும் உலகம் அறியும்படி உயர்ந்திருந்தார்கள்.ஒரு சோறு பதமெனில் நிலவு மனிதன் மயில்சாமி அண்ணாத்துரை.ஆனால், தேக்கநிலைக்கு ஆட்படுத்தும் தாய்மொழிவழியற்ற கல்வியானது சிந்திக்க இயலாத மந்த புத்தியுடைய தலைமுறைகளை உருவாக்கிவிட்டது.அதனால்தான் தாய்மொழிவழிக் கல்வி அறுந்துபோன காலத்தில் அயல்மொழி வழிக்கல்வியால் ஆளுமையுள்ள மனிதர்களை நம்நாடு பெற்றெடுக்க இயலவில்லை.எனவே, மனிதர்களாக உயர்த்தப்பட வேண்டிய நம் குழந்தைகளை வெறும் மந்தைகளாக உருமாற்றிய குற்றவாளிகள் நாம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பன்முகத்தன்மையான பண்பாட்டை காதல், வீரம், பொருள், அறம் என்றவாழ்வியல் கவிதையாகப் பாடுகின்ற சங்க இலக்கியங்களைப் பெற்றுள்ள நாம்…
கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்திலேயே தொல்காப்பியம் என்ற அறிவியல் கலை இலக்கியத்தைப் பேரிலக்கியமாகத் பெற்றுள்ள நாம்…
விவசாய நாகரிகத்திலேயே உலகப் பொதுமறையாகப் புகழப்படும் திருக்குறளைப் பெற்றுள்ள நாம்…
கலை மற்றும் அறிவியல் தமிழைப் பாரம்பரியமாகப் பெற்றுள்ள வரலாற்றிற்குச் சொந்தக்காரர்களாகிய நாம்…
உலகில் ஆங்கிலத்திற்கு அடுத்ததாக கணினியில் அதிகம் பயன்படுத்தப்படும்மொழி தமிழென்று சிகரம் உயர்ந்துள்ள நாம்..
இளமைக்கு இளமையாகவும்
முதுமைக்கு முதுமையாகவும்
பேரழகின் பேரறிவாகவும் திகழ்கின்ற
தமிழ்மொழியின் குழந்தைகளாகிய நாம்…
தாழ்ந்து இழிந்தமைக்கு யார் காரணம்?
ஆரிய பார்ப்பனர்களின் சூழ்ச்சி, ஆங்கிலேயர்களின் காலணிய அடிமைநிலை, சுயராஜ்யத்தில் பார்ப்பனிய சூழ்ச்சி, கார்ப்பரேட் காவி பாசிச அரசியல் சூழல் என்று எத்தனை அரசியல் பின்னணிகளைக் கைகாட்டினாலும் ஒன்றை மட்டும் மறுக்க முடியாது.
நாம்தான் அரசியல் தெளிவற்று நம் குழந்தைகளின் அறிவை பலி கொடுத்தவர்கள் என்ற உண்மையை மறுக்க முடியாதல்லவா.எனவே, நாம் குற்றவாளிகள்தான்.
நமது குற்றத்தின் விளைவு என்ன தெரியுமா?
நம் குழந்தைகள் கண்ணிருந்தும் குருடர்களாக நாடெங்கும் திரிகின்றார்கள்.
காதுகளிருந்தும் செவிடர்களாக வகுப்பறைகளில் மேய்க்கப்படுகிறார்கள்.
வாயிருந்து ஊமைகளாக பிதற்றிக்கொண்டு ஓடுகிறார்கள்.
தாய்மொழியில் நன்கு படிக்கும் வாய்ப்பை கொடுக்காததாலும், அயல்மொழி வழியில் படித்தாக வேண்டிய நிலைமைக்கு ஆளாக்கியதாலும், கற்றல் திறனில் குறைபாடுகளுடன் பெருந்திரளான மாணவர்கள் மந்தையாக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் படித்து முடித்தப் பாடங்களைப் பற்றி அவர்களிடம் பேசினாலோ ஆராய்ந்தாலோ அத்தகைய பாடம் குறித்த சமூகளாவிய சிந்தனையற்றவர்களாக இருக்கிறார்கள் என்ற எதார்த்தத்தை அறிய முடிகின்றது.
அவர்களது பாட நூல்களில் சில வார்த்தைகளைச் சுட்டிக்காட்டி வாசிக்கச்சொன்னால் வாசிக்கத் தெரியவில்லை.தவறாக வாசிக்கிறார்கள்.சரியாக வாசித்தாலும் சரியான பொருள் புரிதலுடன் விளக்கத் தெரியவில்லை.மொழியைச் சரியாக கையாண்டு அவர்களால் எழுத முடிவதில்லை.
ஆங்கிலம் விரும்பிப் படிக்கும் மாணவர்களிடம் சோதித்துப் பார்த்திருக்கின்றேன்.
எண்களைத் தமிழில் சொல்லுகையில்
1 - ஒன்று
2 -இரண்டு…
10 -பத்து.
பத்துக்கு பிறகு வரும் எண்களை
11 - பதினொன்று
12-பன்னிரண்டு என்றுதான் சொல்கின்றோம். அதாவது பிரித்தால்
பத்து + ஒன்று = பதினொன்று
பத்து + இரண்டு = பன்னிரண்டு
என்று பொருள்படும். ஆனால் ஆங்கிலத்தில்
1 - One - ஒன்று
2 – Two … இரண்டு…
10 - Ten. பத்து
பிறகு தமிழில் வழங்கப்படுவதற்கு இணையாக
11 - Ten one - பதினொன்று
12 -Ten two - பன்னிரண்டு என்று சொல்லாமல்
11 - Eleven
12 - Twelve என்று சொல்கிறீர்கள். பிறகு உடனடி திருப்புமுனையாக
13 - Thirteen முதல் 19 - Nineteen வரையிலும் teen பாட்டு பாடுகிறீர்கள்.
பிறகு 20 – இருபது -Twentyல் நின்று தமிழில் வழங்கப்படுவதற்கு இணையாக
21 – இருபத்தொன்று - Twenty one
22 – இருபத்திரண்டு - Twenty two… என்று நீட்டிச்செல்கிறீர்களே என்ன காரணம் என்று விளக்க முடியுமா? என்று அவர்களின் ஆங்கில சிந்தனையை ஆராய்ந்தேன்.
என் கேள்விக்கு ஒருவர்கூட விடையளிக்கவில்லை.ஒரு மாணவி வகுப்பறையில் ஆசிரியரிடம் கேட்டாராம்.இதுமாதிரியான மொக்கை கேள்விக்கெல்லாம் விடை கிடையாதென்று சொல்லிவிட்டாராம்.ஒரு மொக்கை கேள்விக்குக்கூட பதில் சொல்லத் தெரியாத யோக்கியதையில்தான் வகுப்பறை இருக்கிறது என்பதுதான் எதார்த்தம்.
தமிழை விரும்பிப் படிக்கும் மாணவர்கள் வினவிய கேள்வியை ஆங்கிலவழி மாணவர்களிடம் சோதித்தேன்.
எண்களைத் தமிழில் வரிசைபட சொல்லுகையில் பத்துக்கு முன்பாகவே ஒன்பது என்று பத்து ஒரு சாயலாகக் குறிப்பிடப்படுகின்றதே ஏன்?
நூறுக்கு முன்பாகவே தொண்ணூறு என்று நூறு ஒரு சாயலாகக் குறிப்பிடப்படுகின்றதே ஏன்?
ஆயிரத்திற்கு முன்பாகவே தொள்ளாயிரம் என்று ஆயிரம் ஒரு சாயலாகக் குறிப்பிடப்படுகின்றதே ஏன்?
இவ்வாறாக எனது ஏன் ஏன் என்ற பாட்டிற்கு தெரியவில்லை என்று முடித்துக்கொண்டார்களே அல்லாமல் தவறான பதிலைகூட முன்வைக்க யாரும் முன்வரவில்லை.
பிறகு என்னை விளக்கச் சொன்னவர்களிடம் என் கருதுகோளை விளக்கினேன். பத்து, நூறு, ஆயிரம் இவற்றிற்கு முன்பாக வரும் பத்து, நூறு, ஆயிரத்தில் தொடு என்ற சொல் இணைந்திசைப்பதை அறிய முடிகின்றது.
பத்து என்ற எண்ணிற்கு முந்தைய எண்ணின் தமிழ்ப் பெயர் ஒன்பது.ஒன்பது என்ற பெயரின் விளக்கம் பத்தைத் தொடப் போகிறோம் என்பதை அறிவிப்பதாக அமைந்துள்ளது.
9 - தொடு பத்து – 10 - பத்து
9 - தொண் பத்து – 10 - பத்து
9 - ஒண் பத்து – 10 - பத்து
9 - ஒன்பது – 10 - பத்து
நூறு என்ற எண்ணிற்கு முந்தி இசைக்கும் நூறின் தமிழ்ப் பெயர் தொண்ணூறு.தொண்ணூறு என்ற பெயரின் விளக்கம் நூறைத் தொடப் போகிறோம் என்பதை அறிவிப்பதாக அமைந்துள்ளது.
90 - தொடு நூறு – 100 - நூறு
90 - தொட் நூறு – 100 - நூறு
90 - தொள் நூறு – 100 - நூறு
90 - தொண் நூறு – 100 - நூறு
90 - தொண்ணூறு – 100 - நூறு
ஆயிரம் என்ற எண்ணிற்கு முந்தி இசைக்கும் ஆயிரத்தின் தமிழ்ப் பெயர் தொள்ளாயிரம்.தொள்ளாயிரம் என்ற பெயரின் விளக்கம் ஆயிரத்தைத் தொடப் போகிறோம் என்பதை அறிவிப்பதாக அமைந்துள்ளது.
900 - தொடு ஆயிரம் – 1000 - ஆயிரம்
900 - தொட் ஆயிரம் – 1000 - ஆயிரம்
900 - தொள் ஆயிரம் – 1000 - ஆயிரம்
900 - தொள்ளாயிரம் –1000 - ஆயிரம்
எனது விடை சரியோ தவறோ ஆராய்வதற்கான சிந்தனையாக தாய்மொழியில் வெளிப்படுவது சாத்தியமாகின்றது.ஆனால், தாய்மொழி வழி கல்வியை இழந்த மாணவர்களிடமிருந்து வெளிப்படுவதற்கான சிந்தனைத் திறன்கள் முற்றிலும் தவறியுள்ளது என்பது மட்டும் உறுதியாகின்றது.
பயிற்றுமொழியும் புரியவில்லை.தாய்மொழியிலும் அறிவில்லை.மனப்பாடம் செய்வது ஒரு திறன்.ஆனால், சிந்திக்கும் திறனோ சமூக அறிவோ இல்லாமல் மனப்பாடம் மட்டுமே செய்து வாந்தி எடுப்பதை எப்படி திறனாக கருத முடியும்.கணிப்பொறியில் பொருத்தப்படும் நினைவட்டை போல சில காலம் வாழ்வதை எப்படி கல்வித் திறனாக மதிக்க முடியும்.
எப்படி மதிப்பெண் பெற்றோம், எப்படி மதிப்பெண் இழந்தோம், நாம் எடுக்கும் மதிப்பெண்ணுக்கு என்னதான் மதிப்பு, எதுவும் புரியவில்லை.
பெற்ற கல்வியால் நமக்கு அறிவும் தனித்துவமும் வளர்ந்திருக்கிறதா?
தனக்கு எதைப்பற்றி தெரியும்?எதைப்பற்றி தெரியாது?எவற்றை தெரிந்துகொள்ள வேண்டும்?ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?எத்தகைய சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்?வாழ்வின் கடந்தகாலம் எத்தகையது?வருங்காலம் எத்தகையதாக இருக்க வாய்ப்பிருக்கின்றது?எதுவும் தெரியாது.
தன் அறிவின் மீதும் தன்னம்பிக்கை இல்லை.அறியாமையை ஒப்புக்கொள்ளும் துணிச்சலும் இல்லை.தெரியாதவற்றையும் தெரிந்ததுபோலவே நடித்தாக வேண்டிய நிர்பந்தத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம்.வெற்றியடைந்ததாக நம்பும் யாவற்றிலும் தோல்வி பற்றிய அச்சத்துடனே புதைந்துகொண்டிருக்கிறோம்.தாம் புதைந்து போதலை பெற்றோரின் விருப்பத்திற்காகவும் கௌரவத்திற்காகவும் தாங்கள் ஆற்ற வேண்டிய தியாக நடவடிக்கைகளாகவும் கருதிக்கொள்கிறோம்.
தமது இயலாமையை பலவீனப்படுதலை வெளிப்படையாக பெற்றோர்களிடம் வெளிப்படுத்தவும் முடியவில்லை.தங்களைச் சகமனிதர்களாக கருதாமல் வெறும் சொத்துக்களாகக் கருதும் பெற்றோர்களிடம் தெரியப்படுத்துவதால் எந்த பிரயோசனமும் இல்லை என்பதும் காரணமாக இருக்கலாம்.
தெளிந்த அறிவு, உறுதியானப் பேச்சு, தன்னம்பிக்கை மிக்க செயல் இவற்றை இழந்து, இந்தத் தலைமுறை குழந்தைகள் பலவீனப்பட்டு முடங்கியுள்ளார்கள் என்பதே கல்விச்சூழல் கண்டுள்ள காலத்தின் நிதர்சனம். குழந்தைகளுக்குத் தெரியாத மொழியில் எந்த அறிவைக் கொடுத்தாலும் சுவைக்க முடியாத கனியாகவோ, செறிக்க முடியாத உணவாகவோ, தொண்டையில் சிக்கிய முள்ளாகவோ, அறியாமையின் மீப்பெரும் நோயாகவோ வினையாற்றும் என்ற சாதாரண உண்மையை உணராமல் நாமாற்றிய அயல்மொழிக் கல்வியின் விளைவுகளை மேலும் விளக்குவதற்கு அவசியம் இல்லையென்று கருதுகின்றேன். இந்தத் தருணத்திலிருந்தாவது குழந்தைகளின் தாய்மொழி வழி கல்வி உரிமைக்கு வழியமைப்போம்.தமிழ் பேசும் நம் குழந்தைகளுக்கு தமிழ் வழியாகக் கற்பிப்போம்.
தமிழ் மொழியில் எழுத்தறிவாகிய கல்வியறிவே இந்த உலகிற்கு முதல் கடவுள் என்கிறது திருக்குறளின் முதல் பாடல்.தாத்தன் வள்ளுவன் வழியில் வந்தவர்கள் நாம். நம் குழந்தைகளுக்குப் பேசத் தெரிந்த தமிழ் வார்த்தைகளில் இருந்தே அடிப்படை எழுத்துக்களாகிய உயிர் எழுத்துக்களையும் மெய் எழுத்துக்களையும் கற்றுக் கொடுப்போம். ஆய்த எழுத்து ஃ (அக்) என்பது உயிரெழுத்துக்களாகிய அகர வரிசை முடிந்து க் என்ற மெய் வரிசையின் தொடக்கம் என்று காரணம் விளக்குவோம்.மெய்யும் உயிரும் இணைந்து இசைக்கும் உயிர் மெய் எழுத்துக்களை சொற்களோடு இணைத்தறியும் வழியில் பயிற்சி வழங்குவோம்.
க் அ க – க - களி, அகம்
க் ஆ கா - கா – காளை, அக்கா
இந்த வழிமுறையில் உயிர் மெய் எழுத்துக்களை பயிற்றுவிப்போம்.
சொற்களில் இல்லா ஓசைகளையும் அடிப்படை ஓசைகளின்கணக்கியல் முறை நின்றுதமிழ் எழுத்துக்களாக உருப்பெற்றிருப்பதை உணரச் செய்வோம். உதாரணமாக
ங் – ஓ – ஙோ
ற் – ஔ -றௌ
போன்ற ஓசைகள் நடைமுறை தமிழ்ச் சொற்களில் இசை பெறாத ஓசைகளாக இடம்பெற்றிருக்கின்றன.சொற்களற்று ஒலிக்கும் எழுத்துக்களை எளிதாக புரிந்துகொள்ள வழியமைப்போம்.
கலை மற்றும் அறிவியல் இலக்கியங்களை படிப்பவர்களாகவும் படைப்பவர்களாகவும் உருமாற்றுவோம்.இன்றைய மாணவர்கள் நாளைய கலைஞர்களாக, அறிஞர்களாக, கருத்தாளர்களாக, தலைவர்களாக சமூகளாவிய நிலையில் உயர்ந்திசைக்க வழியமைப்போம்.எந்தத் துறையிலும் இலக்குடைய மனிதர்களாக வெற்றியடைய வாழ்த்துரைப்போம்.
துணை செய்தவை
1.தமிழில் இலக்கிய வரலாறு.கார்த்திகேசு சிவத்தம்பி.ஜுன் 2000 (1988).சென்னை. நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
2.கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை.மக்கள் திரை.https://www.youtube.com/watch?v=bwJTVYd9MKE&pp=ygUf4K6u4K6V4K-N4K6V4K6z4K-NIOCupOCuv-CusOCviA%3D%3D
3.இண்டர்நேசனல் பள்ளியிலிருந்து அரசு பள்ளிக்கு மாறப்போகும் பெற்றோர்கள்.மக்கள் திரை.https://www.youtube.com/watch?v=4WT0VdPzbUA&pp=ygUf4K6u4K6V4K-N4K6V4K6z4K-NIOCupOCuv-CusOCviA%3D%3D
4.அரசு பள்ளியில் குழந்தைகளைச் சேர்த்த IT பெற்றோர்கள்.மக்கள் திரை.https://www.youtube.com/watch?v=lPY78breLnI&pp=ygUf4K6u4K6V4K-N4K6V4K6z4K-NIOCupOCuv-CusOCviA%3D%3D
5.வேலம்மாள் தொடங்கி அரசு பள்ளி வரை – வங்கி அதிகாரியின் குழந்தைகள்.மக்கள் திரை.https://www.youtube.com/watch?v=iIzXtQZgd_k&pp=ygUf4K6u4K6V4K-N4K6V4K6z4K-NIOCupOCuv-CusOCviA%3D%3D
6.அரசு பள்ளியின் நிர்வாகம் சட்டப்படி பெற்றோர்கள் கையில்தான் உள்ளது.மக்கள் திரை.https://www.youtube.com/watch?v=HGXmhSg9FG0&pp=ygUf4K6u4K6V4K-N4K6V4K6z4K-NIOCupOCuv-CusOCviA%3D%3D
7.தமிழ்வழிப் பள்ளி தேடிய ஓர் அப்பாவின் அனுபவம்.நலங்கிள்ளி. 2019. சென்னை. ஈரோடை வெளியீடு.
8.காலந்தோறும் தமிழ்.ஆழிசெந்தில்நாதன்.https://www.youtube.com/watch?v=XJlO6acuPJc&pp=ygVj4K6G4K604K6_IOCumuCvhuCuqOCvjeCupOCuv-CusuCvjeCuqOCuvuCupOCuqeCvjSDgrpXgrr7grrLgrqjgr43grqTgr4vgrrHgr4Hgrq7gr40g4K6k4K6u4K6_4K604K-N
9.சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்.ஆர்.பாலகிருஷ்ணன். 2016. சென்னை. பாரதி புத்தகாலயம்.
11. சங்க இலக்கியம் இன்னும் முழுவதுமாக வாசிக்கப்படாத கீழடி. ஆர்.பாலகிருஷ்ணன்.https://www.youtube.com/watch?v=uCk3SebZEBo&pp=ygVA4K6G4K6w4K-NLuCuquCuvuCusuCuleCuv-CusOCvgeCut-CvjeCuo-CuqeCvjSDgrpAu4K6PLuCujuCuuOCvjQ%3D%3D
12.தொல்காப்பியர் யார்.புதியவன்.https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5539:2019-12-07-14-29-43&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82
13.திருக்குறளின் அறிவும் பொருளும்.சுப.வீரபாண்டியன்.https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://www.youtube.com/watch%3Fv%3DGVgoGA7kLns&ved=2ahUKEwiL2oWZ2peHAxUm4DgGHVlKAqMQwqsBegQIERAG&usg=AOvVaw06wbNx9NtrqEGEQd_sXDCW
14.கைக்கிளையும் பெருந்திணையும் போர்த்திணை ஆவதேன்?
https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/47264-2024-10-09-08-17-27
15.இலக்கிய அறிவியல்.புதியவன்.
வெளியிடப்பட்டது: 17 அக்டோபர் 2024
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/47311-2024-10-17-06-41-56